Thursday, October 24, 2024

அரகலயவும் வர்க்கப் போராட்டமும் முன்னிலை சோசலிசக் கட்சி உதயமானபோதே தனக்கான வெகுஜன அமைப்பு வேலைத்திட்டமாக மக்கள் போராட்ட செயற்திட்ட வேலைப்பாணி ஒன்றை முன்வைத்திருந்தது. அந்த மக்கள் ‘போராட்ட (அரகலய)’ அலை பேரிரைச்சலுடன் வெளிப்பட்ட களம் காலிமுகத்திடல் ‘மக்கள் போராட்டம்’. அவர்களது முன்னெடுப்பை அரசியல் தெளிவுடன் செயற்படுத்தி முன்னேறி இருப்பின் சிறந்த மார்க்சிய அமைப்பு ஒன்று உதயமாக வாய்ப்பிருந்தது. அவக்கேடாக இவர்களது வேலைப்பாணியை இவர்கள் வெளியேறிய தாயமைப்பான ஜேவிபி கையேற்று ‘தேசிய மக்கள் சக்தி’ எனும் வெகுஜன அமைப்பாக கட்டியெழுப்பிவிட்டிருந்தது; அதன் வேகமான வளர்ச்சி அரகலயவைக் காலிமுகத் திடலில் அரங்கேற்றி அரைவேக்காட்டு அவியலுக்குள் தள்ளி உள்ளது! சரி, தாயமைப்பான ஜேவிபி மக்கள் சக்தியை உருப்படியாக கட்டியெழுப்பும் வெகுஜன மார்க்கத்தைச் செயலுருப்படுத்துகிறதா? அவர்களது வேலைத்திட்டங்களும் மிகச் சிறப்பாக வடிவப்படுத்தப்பட்டவை. முற்போக்கு ஜனநாயக சக்திகள் பலர் இணைந்து (ஜேவிபி மீது கடும் விமரிசனங்களை உடையவர்களும் ஒன்றுபட்ட வகையில்) அந்தச் செயற்திட்டங்கள் வடிவப்படுத்தப்பட்டன! இதன் வாயிலாக இலங்கை சிவப்பு மயப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்த மேலாதிக்க சக்திகள் அவசர அவசரமாக களமாட இடமேற்படுத்தும் உத்தியைக் கையாள்கின்றனர்; அதனை உச்சி வெளியேறித் தொடர்ந்து மக்கள் மத்தியில் நிதானமாக இயங்கும் பக்குவம் மேற்படி இரு தரப்பாரிடமும் இல்லை. உடனே கிடைத்த களத்தில் வீரப்பிரதாபம் காட்ட முனையும் சிறு முதலாளித்துவ இளம்பருவக் கோளாறுக்கு ஆட்பட்டு விடுகின்றனர். பாட்டாளி வர்க்க நோக்கு நிலை உடன் சமூகத்தைப் பகுத்தாராயும் மார்க்சியக் கண்ணோட்டம் இவர்களிடம் வந்தமையவில்லை! வர்க்கப் பகுப்பாய்வு அவசியமே அல்லாது இப்போது அரங்காடும் அரசியல் செல்நெறி வர்க்கப் போராட்ட வகைப்பட்டது அல்ல என்ற தெளிவு மிகமிக அவசியம். திணை அரசியல் கண்ணோட்டத்தில் (புதிய வடிவிலான சிந்தனை முறைமையுடன்) இன்றைய மாற்றப் போக்குகளை அணுகுவது அவசியம். ‘அரகலய’ பிரபல்யப்பட்டது ஒருவகையில் நல்ல விடயம். சிங்களத் தேசியத்துடன் தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களும் அனைத்துச் சிறுபான்மை இனத்தவர்களும் ஒன்றிணைந்து ‘அரகலய சக்தி’ என ஆகியுள்ளது வரவேற்கத்தக்க அம்சம்! அனைத்து இனங்களது சமத்துவத்தை வென்றெடுப்பதுடன் இலங்கைத் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கும் இது அத்தியாவசியமான ஒன்று! அதேவேளை மீண்டும் சிங்களத் தேசியவாதச் சகதியே ‘இலங்கைத் தேசியம்’ என்ற ரோகணயிஸத்துக்குள் மூழ்கிவிடாது இருப்பதும் மிகமிக அவசியம்! ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ எனபதுபோல ஆகிவிடாமல் கடந்தகாலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு இரு தரப்பினரும் முன்னேறுவர் என நம்புவோம்! மட்டுமன்றி, ஏதோ பெரிய மக்கள் போராட்ட வெற்றியைக் கண்டிருக்கிறோம் என்ற முற்றிலும் தவறான கண்ணோட்டத்தைக் களைந்தெறிய அவசியமான சுயவிமரிசன அரசியல் தெளிவுக்கும் வர வேண்டும். இன்றைய (14.8.2022) ‘தினக்குரல்’ கோகர்ணன் பக்கத்துக்கு உரிய பத்தி இந்தக் கற்றலுக்கான அடிப்படைகளை வழங்குவதாக உள்ளது:

No comments:

Post a Comment