Tuesday, October 22, 2024
மேலாதிக்க ஒடுக்குமுறைகளைத்
தகர்த்தெறியும்
விடுதலைத் தேசிய
முன்னெடுப்புக்குரிய
மார்க்சியம் தேவை
மீண்டும் ஊடகப் புரட்சி அலை மேலெழுந்து உண்மையான ஆபத்து எதுவெனச் சிந்திக்க இடந்தராத மயக்க நிலை வலுப்பட்டு வருகிறது!
இன்றைய பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகள் உயர்ந்த கட்டத்தை எட்டி உள்ளது என்பதை எவரும் மறுத்துவிட இயலாது. ‘உயர்ந்த’ கட்டமே அல்லாது உச்சக்கட்டம் அல்ல!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை இந்த அரசாங்கத்தைக் கொண்டே நடாத்த வேண்டி உள்ளது; ஊடகப் புரட்சி அலை அதற்கான செயலொழுங்கை இன்றைய அரசாங்கத்தை வைத்து தொடக்கி வைப்பதற்கானதுதான்!
அதனைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க ஏற்ற ‘நல்லாட்சி’ ஒன்றை எதிர்காலத்தில் ஜனநாயக முறைப்படி மக்களே தேர்ந்தெடுக்க ஏற்ற அளவில் ‘சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குப் பணியமாட்டோம்’ எனச் சொன்ன இவர்களே அந்த ‘நல்ல காரியத்தைத்’ தொடக்கி வைப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்பதனை ஊடகப் புரட்சி எழுச்சி நிர்வாகிகள் நன்கு அறிவர்!
இன்னும் உச்ச அளவில் இந்தப் பணிய மறுத்த ‘வீரர்களின்’ கோழைத்தனங்கள் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரே இவர்கள் ஆட்சியைவிட்டு விரட்டப்படுவர்!
‘ஆர்ப்பாட்டம், வன்முறைகள் வேண்டாம் - ஜனநாயக முறைப்படி புனிதமான பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாப் பிரேரணை அரங்கேறும், அந்த வழிமுறை ஊடாக குடும்ப ஆட்சி தொடர்பான அனைவரையும் கூண்டோடு வழக்காடு மன்றத்தில் நிறுத்துவோம்’ என எதிர்கால நல்லாட்சிக்காரப் புனிதர்கள் சொல்ல ஏற்ற செயலொழுங்குகள் தொடங்கிவிட்டன!
அந்தப் புனித-தர்மிஷ்டர்கள் வந்து சர்வதேச நாணய நிதியம் ஏற்கவைத்துள்ளபடி மக்களுக்கான நிவாரணங்கள் வெட்டப்படும்போது எவர் எதிர்ப்பர்? இன்றைய ஆட்சியாளர்கள் தானே இதனைத் தொடக்கி வைத்தனர்; தவிரக் கோர்ட்டுப்படி ஏறி மற்றொரு ஜனநாயகப் புனிதக் கடமையைத் தொடர வேண்டுமே (இவர்களும் அவர்களும் மாறிமாறி வழக்காடும் நாடகங்களை அரங்கேற்றிய போதிலும் மக்கள் பணம் மீள்வதுமில்லை, எந்தவொருவரும் தண்டிக்கப்படுவதும் இல்லை).
இவற்றை மக்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை. இத்தனை கொடூரங்கள் அடிநிலை மக்களையே அதிகம் பாதித்து உள்ளன. பெற்றோல், எரிவாயு, அங்கர், மின்தடைப் பாதிப்புக்கு உள்ளான ஊடகப் புரட்சியலைச் சக்தியைவிட அந்த அடிநிலை மக்களே அதிகமும் போராட வேண்டியவர்கள்!
அந்த, உழைக்கும் மக்களது போராட்டக் களம் இன்னமும் முன்னரங்குக்கு வரவில்லை. அதனை ஏற்படுத்த வல்ல கோட்பாட்டு தெளிவுடனான மார்க்சிய நிலைப்பாடு எவரிடமும் இல்லை.
இலவசக் கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்பன அகற்றப்பட்டு விவசாய, எரிபொருள் நிவாரணங்கள் மறுக்கப்படும் எதிர்கால நல்லாட்சிக்கான ஊடகப் புரட்சி அலை மேலெழுந்திருப்பதை அம்பலப்படுத்த எந்த அரசியலணி முன்வந்தது?
‘மக்கள் போராட்டம்’ என்ற ஊடகப் புரட்சியின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும் அரசியல் தெளிவு இன்றைய ‘மார்க்சியக் கட்சிகளிடம்’ ஏன் இல்லாமல் போனது?
மக்களின் வாலைப் பிடித்துப் பாராளுமன்ற ஜனநாயக முறைப்படி அரியணை ஏறிச் சோசலிசத்தை வென்றெடுத்துவிட இயலுமா?
ஊடகப் புரட்சிப் பரப்புரை அலை உங்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்கானது அல்ல!
இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சிபீடம் ஏறிய இவர்களை முன்னைய நல்லாட்சிக்கு பாடம்படிப்பிக்க நினைத்து அவ்வாறு ஆளவிட்ட மக்கள், மீண்டும் நல்லாட்சி ஏற்படும் கனவுகளுடன் இல்லை; அதன் காரணமாகவே அவர்கள் பங்கெடுக்கும் உண்மையான புரட்சிக் களம் தொலைவில் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டி உள்ளது.
குடும்ப ஆட்சி நடாத்தியதன் காரணத்தால் அந்நியரிடம் நாட்டைக் காவுகொடுத்துள்ள இன்றைய ஆட்சியாளரது அரசியல் தவறுகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதைவிட ஆபத்தான அரசியல் மாற்றத்துக்கான செயலொழுங்குகள் அரங்கேறி வருவதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
மாறிய சூழலில் இன்னும் மோசமாக மக்கள் நலன்கள் கருவறுக்கப்பட்டு உழைக்கும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும்போது இன்றைய ஜனநாயக நடைமுறைகளல்ல, இராணுவ சர்வாதிகார ஒடுக்குமுறை முன்னுக்கு வரும் என்ற அரசியல் தெளிவை முன்வைக்க வேண்டும்!
ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளைத் தகர்த்துப் பூரண சுதந்திரத்தையும் இறைமையையும் வென்றெடுக்க ஏற்ற விடுதலைத் தேசியச் சிந்தனையை மார்க்சியத்தால் வழங்க இயலும்; மாஓ சேதுங் சிந்தனை அதற்கான முதல் அடியெடுத்து வைப்பை வழங்கியது. விடுதலைத் திணை அரசியல் அதற்கான பூரணப்பட்ட வடிவத்தை ஏற்படுத்தித் தரும்!
வரலாறு கற்றுத்தரும் வடிவில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்துப் பிரயோகிப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment