Tuesday, October 22, 2024
விடுதலைத் திணை அரசியல்
எனும் மார்க்சியப்
பரிமாணம்
தமிழர் வாழ்வியல் வெளிப்படுத்திய கொடை எனப் பேசி வந்திருக்கிறோம்; தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைத்த திணை அரசியல் செல்நெறியை முழுமையாகத் தனியொரு நூலாக எழுதும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
இன்று பேசப்படும் மார்க்சியத்தால் மக்கள் இயக்கங்களுக்குத் தலைமை தாங்க இயலாத நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது; அர்ப்பணிப்புடன் மார்க்சியர்கள் களமாடிய போதிலும் ஓரடி கூட முன்னேற இயலாது இடர்ப்பட நேர்கிறது. மட்டுமல்லாமல் பின்னடைவுகள் மலிந்தபடி.
இந்த நிலைக்கு மார்க்சியச் செயற்பாட்டாளர்களது தனிப்பட்ட தவறுகளே காரணமெனத் தவறாக விளக்கங்கொள்கிற சில தோழர்கள் மதவாத, சாதிவாத, இனவாத அடையாள அரசியல்களுக்கு எண்ணை ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்துத்துவம், பௌத்த-சிங்கள அடிப்படை வாதம் என்பவற்றுக்கு எதிராக இங்கே அடையாள அரசியல் எழுச்சி பெறுவது தவிர்க்க இயலாதவொன்று என அவர்கள் கருதுகின்றனர். மேலைத்தேசங்கள் அடையாளப் பாதுகாப்பைப் பார்ப்பதைப்போல நாங்கள் பார்க்க இயலாது என்கின்றனர்.
ஒடுக்கப்படும் மக்களது அடிப்படை வாழ்வாதாரங்கள், உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவதை விடுத்து,
அத்தகைய மக்கள் போராட்டங்கள் உருவாக இடந்தராமல் இனவாத, மதவாத, சாதிவாதப் போராட்டங்கள் வாயிலாகத் திசை திருப்பவே இந்த அடையாள அரசியல்.
பௌத்த-சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அவசியம் ஈழத்தமிழருக்கு இருந்தது; அதனை அடையாள அரசியல் ஒழுங்கில் முன்னெடுத்துக் கண்ட அவல முடிவில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டாமா?
ஒவ்வொரு தனிப்பட்ட அடையாள மீட்புக்காகவும் மக்களை மோதவிட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா?
மக்கள் விடுதலைக்கான ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான களங்களைக் கண்டறிய வேண்டாமா?
மேலாதிக்க சக்திகள் தமக்கு வாய்ப்பான களத்துக்கு மக்கள் சக்தியை இழுத்து அர்த்தமற்ற மோதல்களைத் தூண்டும் கபடத்துக்குப் பலியாக வேண்டுமா?
ஒன்றுபட்ட போராட்டம் வாயிலாக ஒடுக்கப்படும் மக்கள் சக்தி மார்க்சியப் பிரயோகத்தை மேற்கொள்ளும் வடிவமாக மேலெழுந்து வருவதே விடுதலைத் திணை அரசியல்; தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றின் ஊடாக மட்டுமே இது வெளிப்பட்டு வந்தது.
கிரேக்க-ரோம் அடிமைப் புரட்சிகள்,
பிரான்சியப் புரட்சி,
ருஷ்ய ஒக்ரோபர் புரட்சி -
என்பன வர்க்க அரசியலுக்கான மார்க்சிய-லெனினிஸத்தைத் தந்தன.
தேசிய விடுதலையூடாக சோசலிசத்தை வென்றெடுக்க ஏற்ற மார்க்கமாக மாஓ சேதுங் சிந்தனை வந்தது.
ஆயினும்,
தேசிய-சாதி-மத வடிவங்களில் மேற்கொள்ளப்படுகிற ஒடுக்குமுறைகளை முறியடிக்கும் வகையில் முன்னெடுக்கத்தக்க மார்க்கம் வர்க்க அரசியலில் இருந்து வேறுபட்டது என்ற புரிதல் எட்டப்படவில்லை.
அதன்காரணமாகவே இன்றைய மார்க்சியம் மக்களுக்கு வழிகாட்ட இயலாத நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
முழுச் சமூக சக்தியாக ஒடுக்குமுறையை மேற்கொண்ட (மருத திணை மேலாதிக்க அரசுருவாக்கத்தை மேற்கொண்ட) தமிழகமே விடுதலைத் தேசியச் சோசலிசத்தை வெற்றிகொள்ள ஏற்றதான கோட்பாட்டைத் தந்துள்ளது.
இதனைத் தனி நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு எழுத த்தொடங்கும் நிலையில் தயாரித்த அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. அதனைப் பரிசீலித்துக் கருத்துரைப்பதன் வாயிலாக இந்த எழுத்து இயக்கத்தைக் கூட்டுச் செயற்பாடாக ஆக்கும் பொறுப்பு உங்கள் முன்னால்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment