Tuesday, October 22, 2024
மேலாதிக்க ஒடுக்குமுறைகளைத்
தகர்த்து
விடுதலைத் தேசியங்களது
சமத்துவத்தை
வெற்றிகொள்ளும் புது வரலாறு
படைப்போம்!
தேசியங்களின் தாற்பரியத்தை முற்போக்கு+பிற்போக்கு என வரையறுப்பதில் உள்ள தவறு பற்றிப் பேசி இருந்தோம்.
சுரண்டலின் அவசியத்துடன் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் ஒரு வர்க்கத்துக்கான அரசு நிலைபேறாக நீடிக்க உதவும் கருத்தியலும் நடைமுறைகளும் சார்ந்தவை பிற்போக்கானவை; அதனை முறியடிக்க உதவும் கருத்தியலும் நடைமுறையும் சார்ந்தவை முற்போக்கானவை!
தேசியம் என வரும்போது ஒடுக்கும் தேசத்தின் அனைத்து வர்க்கங்களுமே சுரண்டப்படுகிற தேசங்களால் அபகரிக்கப்படுவனவற்றில் இருந்து ஏதோ சில ஆதாயங்களைப் பெறுவன; ஒடுக்கப்படும் தேசங்களின் சுரண்டும் வர்க்கமுங்கூட இழப்பைச் சந்திக்கிறது!
ஐநூறு வருடங்களின் முன்னர் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் என எம்மீது ஒடுக்குமுறையை மேற்கொண்டு கொள்ளையடித்த ஐரோப்பியரது மூலதன விருத்தியானது அங்கே வீறுடன் வர்க்க அரசியலை வளர்த்திருந்தது; முற்போக்கான வர்க்க அரசியல் அங்கே திசைமுகம்பெற இயலுமாயிற்று!
பிரான்சியப் புரட்சி (1789) வரை முதலாளி வர்க்கம் முற்போக்கு அரசியல் சக்தியாக இயங்கியது; பின்னர் பாட்டாளி வர்க்கம் அந்த முற்போக்குப் பாத்திரத்தைக் கையேற்று இருந்தது!
ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்ட எம்மவரது நாட்டார் பாடல்களில் அவர்களது ஒட்டச் சுரண்டும் கொள்ளையை “என்ன பிடிக்கிறாய் அந்தோனி, எலி பிடிக்கிறன் கிஞ்சோனி” என்று கிண்டல்தான் பண்ண முடிந்தது.
முல்லைத்தீவில் முஸ்லிம் வணிகர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே பாக்கு வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட மோதலைக் குறிக்கும் “பாக்குச் சண்டை” என்ற நாட்டார் பாடல் வழக்கில் இருந்ததை அறிய இயலுமாக உள்ளது!
இன்றும் ஏகாதிபத்தியத் தேசங்கள் மேலாதிக்க வாய்ப்புடன் எம்மைச் சுரண்டுவதற்கு ஏற்ற பூகோள அரசியல் வாய்ப்புடையன!
பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்திய மேலாதிக்கச் சாதிகளது கைகளில் அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றி வழங்கிய அரசியல் முறைமை இன்று இந்தியாவை ஏகாதிபத்திய மேலாதிக்கக் கூட்டுக்குள் நகர்த்தும் செயலொழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகோலி இருக்கிறது.
விடுதலைத் தேசிய எழுச்சிக்காக மகத்தான தியாகப் போராட்டங்களை நடாத்திய, இன்னமும் பூரண விடுதலைக்கென அர்ப்பணிப்புடன் போராடும் பலவேறு சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தை ஏகாதிபத்திய அபகரிப்பாளர் என ஆகும் அபகீர்த்தியிலிருந்து தடுக்க இயலவில்லை.
விடுதலைக்காகப் போராடும் சக்திகள் விடுதலைத் தேசியச் சிந்தனையை வந்தடைய இடந்தராத இடர்ப்பாடுகளை எங்களிடம் இருந்து அபகரித்துக் கொழுக்கும் இந்தியப் பெரு முதலாளித்துவக் கும்பலால் சுவற விடப்படுகிற எலும்புத் துண்டுகள் ஏற்படுத்தியபடி. அதிதீவிர தலித்தியவாத, வர்க்கவாத, வெறுப்பரசியல் பிளவாக்கங்கள் ‘புரட்சிகர முழக்கங்களாக’ பல்கிப் பெருகியபடி; இவற்றின் வாயிலாக விடுதலைச் சக்திகள் ஒன்றுபட இடந்தராத தடைகளை மேலாதிக்கவாத ஊடகப் பரப்புரைகள் வளர்த்தபடி!
இந்திய ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்டுச் சுரண்டப்படுவதைக் கண்டுகொள்ள இடந்தராத பரப்புரைகளை எமது ஊடகங்கள் கனகச்சிதமாகச் செய்கின்றன.
இந்திய மேலாதிக்கத்தைத் தகர்ப்பதற்கு அனைத்துத் தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை வந்தடைய இடந்தராமல் பௌத்த சிங்களப் பேரினவாத நச்சு, சிங்கள ஊடகங்களால் ஊட்டப்பட்டபடி!
தமிழ்த் தேசியம் ஜி.ஜி. பொன்னம்பலம்-செல்வநாயகம் காலம் முதல் இன்றுவரை மேலாதிக்கத் தேசிய அபிலாசைகளுடன் ஏகாதிபத்திய நாடுகளின் ஐந்தாம்படை இயங்கு தளமாகவே செயற்பட்டு வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் அவசியம் இல்லை.
இங்கே எமக்கான தீர்வின் வடிவங்கள், அவற்றை வென்றெடுக்க ஏற்ற செயல்திட்டங்கள் என்பவற்றைத் தேடுவதைவிட ஜெனீவாத் திருவிழாவுக்குக் காவடி தூக்குவதிலும் அமெரிக்க வல்லூறின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்பதிலும் தானே தமிழ்த் தேசியத்தின் அக்கறை இருந்துவருகிறது!
மார்க்சிய வழிப்படுத்தல் ஏகாதிபத்தியத்தை முறியடித்து விடுதலைத் தேசிய எழுச்சிக்கு வழிகோல வேண்டும்!
ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு ஏகாதிபத்தியம் மற்றும் பௌத்த சிங்கள மேலாதிக்கங்களைத் தோற்கடிக்கும் வகையில் வலுவான ஐக்கியத்தை வென்றெடுக்க வேண்டும்!
மேலாதிக்க/ஏகாதிபத்தியச் சுரண்டல்களை அங்கீகரித்தபடி இயங்கும் ஆட்சியாளர்கள் பௌத்த சிங்களப் பேரினவாதப் பட்டுப்பீதாம்பரம் போர்த்திய மயக்கு நிலையில் வைத்துச் சிங்கள மக்களையும் ஒடுக்கிச் சுரண்டுகின்றனர்; அவர்களது ஏமாற்றுப் பசப்புகளைத் தாண்டி அரசுக்கு எதிராகச் சிங்கள மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்; அவர்களோடான ஐக்கியத்தை வலுப்படுத்துவோம்!
அமெரிக்க-இந்திய மேலாதிக்கங்களைத் தகர்க்கும் போராட்டத்தில் அந்த நாடுகளின் உள்ளே தமது வாழ்வாதாரத்துக்காகப் போராடும் உழைக்கும் மக்களுடன் ஒன்றுபடுவது அவசியம்!
மேலாதிக்க சக்திகளுக்குச் செங்கம்பளம் விரிக்கும் பழைமைவாதப் பண்பாட்டு அம்சங்களை (ஒடுக்குமுறைக்கான மரபுவாதங்களை) எதிர்ப்போம்!
வெறுப்பரசியலை வளர்க்கும் எதிர்ப் பண்பாட்டியத்தைக் கைவிட்டு விடுதலைச் சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தும் புதிய பண்பாட்டு அணுகு முறையை வளர்த்தெடுப்போம்!
புதிய வாழ்வு!
புதிய பண்பாடு!
விடுதலைத் தேசங்கள் அனைத்தும் மேலாதிக்கச் சுரண்டலைத் தகர்த்துச் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தும்,
புதிய பார்வை!
மாறாநிலை -
வறட்டுவாதங்கள்
முறியடிக்கப்பட்ட,
மார்க்சிஸம்-லெனினிசம்-மாஓ சேதுங் சிந்தனையைக்
கையேற்றுப்
பாதுகாத்து
வளர்த்தெடுத்துப்
பிரயோக நெறியாக்குவோம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment