Tuesday, October 22, 2024

சமூக மாற்றச் செல்நெறியில் விவசாய-வணிக சக்திகள் இடையே இடம்பெற்ற மேலாதிக்க நாட்டத்துக்கான மோதல்களின் பங்குப்பாத்திரம் இது வரலாற்று இயங்கியலில் மற்றொரு பக்கம்; மட்டுமன்றி இவ்வகைப்பட்ட வரலாற்று இயக்கமே இன்று மேலெழுந்து வந்துள்ளது! அரை நூற்றாண்டின் முன்னர் - எழுபதாம் ஆண்டுகள் வரை - வர்க்கப் போராட்ட அரசியல் இயங்குமுறை சமூக மாற்றத்தின் அடிப்படையாக இருந்தது. இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக உலகின் மேலாதிக்க சக்தியாக ஐரோப்பா மேற்கிளம்பிய வரலாற்றுப் போக்கினூடாக முகிழ்த்த சமூக விஞ்ஞான நோக்கு நிலை வர்க்கப் போராட்டம் வாயிலாக இடம்பெற்ற வரலாற்றியலை வெளிப்படுத்தியது. எண்பதாம் ஆண்டுகளில் முனைப்படைந்த அடையாள அரசியல் வர்க்க அரசியலை வலுவிழக்கச் செய்து வருகிறது. முழுச் சமூக சக்திகள் இன, மத, நிறபேத, பாலின ஒடுக்குதல்களுக்கு எதிராக அடையாள அரசியலைக் கையேற்ற பொழுது மார்க்சியர்கள் பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆட்பட்டனர். அதனை முற்றாக எதிர்த்து, வர்க்கப் புரட்சி எதிர்காலத்தில் மேற்கிளம்பி வரும் என்ற நம்பிக்கையுடன் ஒரு தரப்பினர்! அடையாள அரசியலுக்கான களத்தை அவர்களோடு ஒன்றிணைந்து போராடி ஒடுக்கும் ஏகாதிபத்திய, பேரினவாத, நிறவாத, ஆணாதிக்க சக்திகளின் அக்களம் சார்ந்த சதியை முறியடித்துப் பின்னர் மேலெழுகிற வர்க்கப் புரட்சியைத் தலைமை ஏற்கும் கனவுடன் இன்னொரு தரப்பினர். ஒடுக்கப்படும் முழுச் சமூக சக்திகள் விடுதலைத் தேசியச் சிந்தனையைக் கையேற்று, மார்க்சியர் தலைமையேற்கும் மாற்று வழி ஒன்றை முன்னெடுப்பது குறித்து இங்கு பேசி வருகிறோம். இப்பேசு பொருளை இரு தள வடிவங்களில் நூலாக்குவது சார்ந்து கூட்டுப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் தோழர்கள் நம்பிக்கை ஊட்டும் சக்திகள்! ஏற்கனவே இயங்கி வரும் மார்க்சிய அணிகள் வர்க்கப் போராட்டத்தை மட்டும் கவனங்கொண்டவர்களாக உள்ளனரே; திணை அரசியல் எனும் மாறுபட்ட (முழுச் சமூக சக்திகள் இடையில் இடம்பெறும் ஆதிக்க அரசியல் போட்டிக்கான) வரலாற்று இயங்குமுறை தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தமையை எடுத்துக்காட்டி நாங்கள் பேசி வந்த பொழுதிலும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் கண்டுகொள்ளாது இருக்கிறார்களே என்ற ஆதங்கம் விடுதலைத் தேசியச் சிந்தனை முறையை ஏற்ற தோழர்களிடம்! கட்சி ஊழியர்களிடம் மட்டும் புதிய சிந்தனையை வரித்துக்கொள்ள இயலாத தடை இருக்கவில்லை. கல்விப்புல மேதைமைமிக்கோரும் தடுமாற்றங்களுடன்! “இந்தியத் த த்துவங்களும் தமிழின் தடங்களும்” என்ற (2016 இல் என்.சி.பி.எச். வெளியிட்ட)நூலை இப்போதான் படித்து முடித்தேன். கல்விப்புலத்தில் மெய்யியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய ந. முத்துமோகன் இந்த நூலின் ஆசிரியர். எம்மனைவராலும் மதிக்கப்படும் தலைசிறந்த மார்க்சிய மெய்யியலாளரான அவர் எமது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நூலை ஆக்கித் தந்துள்ளார்! குறிப்பாகத் தனிவகையில் - விசேடித்த பண்புடன் - தமிழியல் சிந்தனைக்கான வரலாற்று இயக்கம் எவ்வகையில் வளர்ச்சி பெற்று வந்தது என்பதனை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டி உள்ளார். சங்ககாலச் சிந்தனையின் மெய்யியல் தளம் முதற்தடவை செப்பமுறத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை இந்நூலின் மகத்தான பங்களிப்பு! அந்தத் தளத்தில் உறுதியாக இருந்தபடி திருக்குறள், சைவ சித்தாந்தம், வள்ளலார், அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் என்ற இயக்க வடிவப்பட்ட சிந்தனைப் போக்குகள் வெளிப்படும் களமாகத் தமிழியல் செயலாற்றி வந்தமையைச் சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ளார்! இந்தியச் சிந்தனை முறைமையை எடுத்துக் காட்டும்போது இடறல் ஏற்பட்டுவிடுகிறது. சங்ககாலத் தளத்தைத் தெளிவுற அடையாளங்கண்ட பலமான அத்திவாரம் போல் இந்திய மெய்யியல் தளத்தின் அடிப்படையை இனங்காண இயலவில்லை. நாடோடிகளாக வந்த ஆரியர் - அவர்களால் வென்றடக்கப்பட்ட வளமிகு பூர்வீகச் சிந்தனை முறை எனும் எதிரீடு அடிப்படையாக கொள்ளப்பட்டமை பெரும் பலவீனமாய் ஆகியுள்ளது. பிராமண மதமாக இயங்கி வேதாந்தச் சிந்தனை விருத்தியை ஏற்படுத்திய பிராமணர்கள் ரிக் வேத ஆரியரும் பூர்வீக (குறிப்பாகச் சிந்துவெளிப் பண்பாட்டுக்கு உரியோராக இருந்த திராவிடப்) பூசகரும் இணைந்து உருவானவர்கள் என்ற (டி.டி. கோசாம்பி போன்ற மார்க்சிய ஆய்வறிஞர்களால் காட்டப்பட்ட) உண்மையைக் கூடக் கவனங்கொள்ளவில்லை இந்நூல். பிராமணச் சிந்தனையில் வரலாற்று நெடுக எப்போதும் பிற்போக்குத்தான் இருந்தது; எந்தவொரு முற்போக்கு அம்சமும் கிடையாது. அத்வைதம் என ஒருமைப்படுத்தி ஒற்றைப்படைத் தன்மை மேலோங்க வழிவகுத்த பிராமணியத்துக்கு மாறான பன்மைத்துவத்தை, அறிவுத்தேடலை வலியுறுத்திய சிராமண (ஆசீவக, சமண, பௌத்தப் பள்ளிகளது) சிந்தனை முறையே எப்போதும் முற்போக்காக இருந்ததென இந்த நூல் வலியுறுத்துகிறது; இதனை வைதிக மரபால் வீழ்த்த முடியாமல் இருந்து பௌத்தமோ சமணமோ நீடித்து இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்! நீடித்து இருந்தால் மட்டும் யப்பானிலும் இலங்கையிலும் யுத்த சன்னத்தராய் ராணுவ வெறியர்கள் வழிபட வரும்போது தடுக்க முடியாமல் இருந்த யப்பான்/சிங்களப் புத்தரைப் போலன்றித் தமிழ் புத்தர் இப்போதும் ‘முற்போக்காளராய்’ இருந்திருப்பாரா? வரலாற்றுப் பொருள்முதல் வாத நோக்கின்றி வெறுமனையே ஒருமை-பன்மைத்துவ அடிப்படை சார்ந்த மெய்யியல் அணுகுமுறையை வைத்து முற்போக்கு/ பிற்போக்குக் கணிப்பை மேற்கொள்ள இயலாது.
அத்வைத த த்துவத்தை முன்னிறுத்தி நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்திய ஆதி சங்கர ர் வரலாற்றின் அவசியப்பட்ட முற்போக்கு வகிபாகத்தை வகித்தவர்; நாலாம்-ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சமணமும் பௌத்தமும் பிற்போக்கான வரலாற்றுக் கட்டத்தை வந்தடைந்தமையாலேயே அன்று தோல்வியைத் தழுவிப் பின்னடைந்தன. வணிகத்துக்கு உரிய முதலாளித்துவ எழுச்சி முற்போக்குப் பாத்திரம் வகித்த போது சிராமணச் சிந்தனை கையேற்கப்படும் வரலாறு மேலெழுகிறது; அயோத்திதாசரில் இந்த வெளிப்பாட்டைப் பார்க்கிறோம். நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட வேண்டிய இன்றைய கட்டத்துச் சங்கராச்சாரிகள் பிற்போக்காளர்களே! அதற்காகப் பிராமணர்கள் அனைவருமே பிற்போக்காளரும் அல்ல, எதிரிகளும் அல்ல; மட்டுமன்றி அத்வைதங்கூட முற்போக்கான விடுதலைத் தேசியச் சிந்தனை மெய்யியல் ஆக இயலுமாயிற்று என்பதும் கவனிப்புக்கு உரியது! சங்கர ருக்கு வேறுபட்ட உத்தாலகரது அத்வைத மெய்யியல் வகைப்பட்ட பாரதியின் ஒருமை வாதம் சமூகத் தளத்தின் பன்மைத்துவத்தையும் அறிவுத் தேடலையும் முன்னிறுத்திய ஒன்று! தமிழின் விசேடித்த பண்பை எடுத்துக் காட்டி இருந்த இந்த நூல் திணை அரசியல் செல்நெறி சார்ந்து இயங்கிய தமிழியலின் அடித்தளத்தைக் கண்டு கொள்ளவில்லை. அதன்பேறாகவே முழுமை சார்ந்த தளத்தில் பலவீனப்பட்டு தவறான நோக்கினை வெளிப்படுத்த வேண்டி வந்துள்ளது. தனி நூலாக விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை பற்றி எழுதியாக வேண்டும் என்ற அவசியத்தை உணர்கிறேன். அதன் தேவையைத் தோழர்கள் வலியுறுத்தி வந்திருந்தனர். எழுதுவதற்கான தொடக்க வேலைகளைக் கையேற்றுவிட்டேன்!

No comments:

Post a Comment