Thursday, October 24, 2024

மலையகத் தேசிய மக்களின் வாழ்வியலை மிகுந்த கலை நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் அற்புதமான நாவல் மு.சி. கந்தையாவின் “குறு நதிக் கரையில்”. கண்டிச் சீமையில், தமது தேவைக்கெனக் கடத்தி வந்து வாழ வைக்கப்பட்ட தென்னிந்திய மக்களைப் பற்றிய எத்தகைய கரிசனையும் இன்றிக் கைவிட்டுச் சென்ற பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அயோக்கியத்தனமான சுதந்திரக் கையளிப்புச் செயற்பாட்டுக்கு உரிய 1948 இன் முன் பின்னாகப் பிறந்த மாந்தர்களின் கதைகளைப் பேசும் நாவல் ‘குறு நதிக் கரையில்’! புதிய ‘விடுதலைக்கான’ வாழ்வியலை மேற்கொள்ள வேண்டிய இலங்கை ஆட்சியாளர்களது மேலாதிக்கக் கொடூரமும் ஏகாதிபத்திய அயோக்கியத்தனத்தை மிஞ்சுவதாகவே தொடர்ந்தது! போதாக்குறைக்கு ஈழப் போராட்டமும் தன் பங்குக்குக்கு மலையக மக்களின் வாழ்வை வாட்டி வதைத்தது! இத்தனை நெருக்கீடுகளையும் படைப்பாக்கும்போது படிப்பதற்கு மனம் வராத சோகப்பிழிவு மேலோங்காமல் இருக்குமா? அத்தகைய கவலைக்கிடமான நிகழ்வுகளைக் காட்டாமல் ஒரு படைப்புக் கடந்து சென்றுவிட இயலாது. இத்தனை கொடூரங்களுக்குள்ளும் மலையகத் தொழிலாளர்களது வாழ்வியல் இனிமைகளைத் தமக்குள்ளான உரையாடல்கள் - ஊடாட்டங்கள் வாயிலாக செழிப்பூட்டி வளர்த்தெடுத்து முன்னேறியபடி தான் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்! இந்த வாழ்வியல் அச்சு அசலாக அப்படியே வெளிப்பட்டுக் காட்டப்பட்ட படைப்பு ‘குறு நதிக் கரையில்’! அண்மைக்கால மலையகப் படைப்புகளில் மேலெழுந்துள்ள தொழிலாளர் பற்றிய அவ நம்பிக்கைத் தொனிக்கு மாறாக அந்த உழைக்கும் மக்களது உருக்கு உறுதிமிக்க வலிமைச் சக்திக்கான அதீத பலத்தை மிகச் சிறப்பாக இந்த நாவல் வெளிக்கொணர்ந்துள்ளது. குறிப்பாக மலையகத்தை விட்டுத் தொலைத்து மாற்றுத் தொழில்களைத் தேடுவதே முன்னேற்றம் என்று காட்ட முற்படும் அண்மைக்காலப் படைப்பு நோக்கில் இருந்து விலகி அந்த மக்களுக்கான வாழ்வியல் அடிப்படைகளை வென்றெடுக்கும் மார்க்கம் மிகக் கச்சிதமாக இந்த நாவலில் காட்டப்பட்டுள்ளது; அந்த மக்களின் வாரிசுகளாக இருந்தவாறு மத்தியதர வாழ்வுக்கு வளர்ந்தோரிடையே மண்ணை நேசித்துப் போராட்டத்தில் பங்கேற்கும் நாலாம் தலைமுறையினர் நம்பிக்கை நட்சத்திரங்களாக இப்படைப்பில் வெளிப்பட்டு நிற்கின்றனர்! பேரினவாத ஒடுக்குமுறையின் அதீதங்களை வெளிப்படுத்துகிற போது சிங்கள மக்களின் உன்னதமான பக்கங்களைப் போதிய அளவு காட்டுவதற்கு அனேகமான படைப்புகள் முற்படுவதில்லை; தவிர்க்கவியலாத இடத்தில் சிற்சில அம்சங்களைக் காட்டுவதுண்டு. இந்த நாவல் பேரினவாத அட்டூழியங்களை அணுவளவும் குறைத்துக் காட்டவில்லை; அதேவேளை உழைக்கும் மக்களதும் ஜனநாயக சக்திகளதும் சமூக மாற்ற அக்கறையாளர்களதும் ஒன்றுகூடலுக்கான போராட்டக் களத்தில் சிங்கள மக்களது முன் முயற்சிக்கான அக்கறை எந்தளவில் - எவ்வகையில் வெளிப்படுமோ அந்த விடயங்கள் நாவலின் மையப் பேசுபொருள் என்பது அழுத்தி வலியுறுத்த அவசியமாயுள்ளது!
அவ்வாறு ஒன்றுபட்டு மார்க்சியர்களாகப் பலரும் இயங்கிய கட்சிச் செயற்பாட்டாளராக இளமைக் காலத்தில் மலையகத்தில் வாழ்ந்து ‘தாயகத்துக்குத்’ துரத்தப்பட்டவர் மு.சி. கந்தையா! இந்த மண்ணின் வீரியங்களும் துயரங்களும் மட்டுமன்றி மீளக் குடியேறும் மண்ணிலும் காடழித்துக் கோப்பி, தேயிலைச் செடிகளைப் பயிரிட்டு வாழ்வைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வையும் அனுபவித்தவர். அந்தவகையில் மலையக வாழ்வியலின் பன்மைப் பரிமாணங்களை உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்தும் வாய்ப்பை முழுமையாகப் பெற்றிருந்தவர்! அவர் இந்தப் படைப்பைத் தராது போயிருப்பின் எத்தகைய பெரிய இழப்பாக அமைந்திருக்கும்? நாவலின் நிறைவு மிகுந்த நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது; நடந்தேற இயலாத கனவியல் நம்பிக்கையூட்டல் அல்ல அது! அத்தகைய ஒன்றுபட்ட வாழ்வியலை வென்றெடுக்கச் சபதம் ஏற்போம்! மலையகப் படைப்புலகத்துக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ‘குறு நதிக் கரையில்’ நாவலின் வரவு அமைந்திருப்பதனை எவராலும் மறுத்துரைக்க இயலாது!

No comments:

Post a Comment