Tuesday, October 15, 2024
கே. டானியல்
இறுதியாக எழுதிய
“சாநிழல்” நாவல் பற்றிய
அறிமுக உரை இணுவில்
மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு
மண்டபத்தில் இடம்பெற்ற போது
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி மாதந்தோறும் இடம்பெற்று வருகின்ற ‘புத்தகப் பண்பாட்டு அரங்கம்’ மூன்று தினங்களாக இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவேறி வருகிறது; இன்று இறுதித்தினப் புத்தகக் கண்காட்சி!
நேற்றைய புத்தக அறிமுக நிகழ்வில் டானியலின் ‘சாநிழல்’ நாவலை அறிமுகம் செய்து பேசியிருந்தேன். நூல் பற்றி விரிவான பதிவு பின்னர்.
இதே பொருளில் ஒரு சிறுகதையை 1962 இல் டானியல் எழுதி ‘ஈழநாடு’ இதழில் வெளிவந்ததுண்டு; அதனை நாவலாக விரிவுபடுத்தி 1986 இல் எழுதப்பட்ட போதிலும் இப்போதுதான் நூலுருப்பெற்றுள்ளது. அதன் வெளியீட்டு நிகழ்வுக்காக வருகை தந்த அ. மார்க்ஸ் கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்துக்கு வருகை தந்தது பற்றி ஏற்கனவே பேசியுள்ளேன்.
அ. மார்க்ஸ் வீட்டில் தங்கியிருந்து வைத்தியத் தேவைகளை மேற்கொண்ட நிலையில் தான் இந்த நாவலை டானியல் எழுதியுள்ளார்.
வெளிவந்துள்ள நூலில் 1962 இல் ‘ஈழநாடு’ பிரசுரித்த சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. ஒரு வைத்தியராக, தன்னுடன் பணிபுரியும் அடிநிலை ஊழியரான சுடலை என்கிற தோட்டியைப் பிற ஆதிக்க சாதிக் கனவான்கள் போலல்லாது மனிதத்துவத்துடன் அணுகும் உயர்ந்த உள்ளம் கொண்ட பாத்திரம் இறுதியாகத் தனது முகத்தில் ‘சாநிழல்’ படர்வதாக உணரும் நிலை சிறுகதையில்!
நாவலில் அதே உணர்வுகள் வெளிப்பட்ட போதிலும் தன்னிடம் சாநிழல் படிவதாக டொக்ரர் உணர்வதாக இல்லை; சாதிய வாழ்வியல் சார்ந்த வேறு சாநிழல்கள் நாவலில்!
“பஞ்சமர்” நாவலை 1974 இல் எழுதிய பின்னர் தான் அந்த நாவலின் களமான சாதிய வாழ்நிலைகளைப் படைப்புகளுக்கான பேசுபொருள் என ஆக்கிக்கொண்டார் டானியல்; முன்னதாகச் சிறுகதைகளில் வர்க்கச் சுரண்டலை முகங்கொள்ளும் வாழ்வியலே பேசப்பட்டன. மூன்று சிறுகதைகள் சாதி முரணை வெளிப்படுத்தின என்றாலும் அங்கேயும் வர்க்க முரண் முனைப்பாக வெளிப்படக் காணலாம்!
நாவல்களில் சாதிவாதச் சரிவுக்கு ஆளாகிறார் என்ற விமரிசனம் டானியலின் மீது (ஒவ்வொரு நாவல் வெளிவந்த சந்தர்ப்பங்களிலும்) தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் இறுதியாக எழுதிய “கானல்” நாவலை சாதியச் சழக்குகளுக்கு இடமற்ற வகையில், மார்க்சிய நோக்குடன் (வர்க்கப் பார்வையில்) படைத்தளித்திருந்தார். அதற்கும் பின்னராக - இறப்புக்கு முன்னர் நிறைவாக எழுதிய - இந்தப் படைப்பிலும் சாதிவாதம் அண்டாத வகையில் கதையை நகர்த்திச் சென்றுள்ளார்.
பிராமணியம் வளர்த்துள்ள மூட நம்பிக்கைகளை நிராகரிப்பதற்கு பெரியாரியம் அவசியமில்லை; பிராமண எதிர்ப்பு அரசியலாக அன்றிச் சாதிபேதங்களைத் தகர்க்கும் போராட்டத்துக்கு மார்க்சியம் வழிகாட்ட வல்லது என்பதனைப் பாத்திர வாயிலாக வெளிப்படுத்துவதனை அவதானிக்கலாம்.
டொமினிக் ஜீவா (நாவலில் காட்டப்பட்ட ‘ஜீவா வாயிலாக சாதியத் தகர்ப்புக் கருத்தியலைப் பெற்றோம்’ என்ற அம்சத்தில் அந்த ஜீவாவைத் தனது பெயருடன் நிரந்தரமாக இணைத்துக் கொண்டவர்), என்.கே. ரகுநாதன் போன்றோர் ப. ஜீவனந்தத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு மார்க்சியத்தை வரிப்பதற்கு முன்னர் திராவிடரியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்; அவர்கள் அளவுக்குக்கூட டானியலிடம் திராவிடர் இயக்கச் சாய்வு இல்லாமல் மார்க்சிய நாட்டமே டானியலிடம் மேலோங்கிய வகையில் அவரது வாழ்வியல் அமைந்திருந்தது. இதுபற்றி நாலு முன்னோடிப் படைப்பாளுமைகளை முன்னிறுத்தி எழுதிய “முற்போக்கு இலக்கிய எழுச்சி” எனும் நூலில் விரிவாக எழுதி உள்ளேன்!
இன்னும் இவை பற்றிய தேடலை விரிவாக்கும் அவசியம் உள்ளது!!
இந்த நூலினை டானியலின் இளைய மகன் வசந்தன் (ஷாம் மாஸ்டர்) இடையறாத தேடலில் கண்டு பிடித்து ‘புனைவகம்’ வாயிலாக வெளியிட்டுள்ளார். பிரதியைப் பாதுகாத்துச் சேர்ப்பித்த கதையை அசுரநாதன் இந்நூலில் வெளிப்படுத்தி உள்ளார். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களது அணிந்துரை, அ. மார்க்ஸ் அவர்களது முன்னுரை என்பனவும் பல உண்மைகளை வெளிப்படுத்துவன!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment