Tuesday, October 15, 2024
இன்னொரு
தடத்திலும்
வரலாற்றியக்கம்
மார்க்ஸ் தனியே வர்க்கங்களிடையேயான போராட்டத்தையே பார்த்தார், தேசிய இனப் பிரச்சினையில் கவனங்குவித்து அதன் எதிர்கால எழுச்சி குறித்துக் கவனங்குவிக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறான ஒன்றென்பதை மார்க்சியச் செயற்பாட்டாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி உள்ளனர்!
இந்தியா பற்றி மார்க்ஸ், அயர்லாந்துப் பிரச்சினையில் அவரது கண்ணோட்டம் என்பன குறித்து பலரும் எழுதி உள்ளனர். பிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்கும் பொழுது இந்தியாவும் அயர்லாந்தும் விடுதலை பெற்றுவிட இயலுமென ஆரம்பத்தில் கருதிய மார்க்ஸ் ஒடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலை பெறாதவரை பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு விடுதலை கிட்டப்போவதில்லை என்ற கருத்துக்கு இறுதிக்கட்டத்தில் வந்து சேர்ந்தார் எனக்காட்டும் ஆய்வுகளும் வெளிப்பட்டுள்ளன!
இனத்தேசிய, சாதியப் பிரச்சினைகளை அணுகுவதற்கு மார்க்சின் முன்மாதிரியை வெளிப்படுத்தும் வகையில் வர்க்க இயக்கத்துக்கு அப்பால் முழுச்சமூக சக்தியாக இயங்கும் வரலாற்றுப் போக்குகளை மார்க்ஸ் எவ்வாறெல்லாம் காட்டியுள்ளார் என்பதை எடுத்துரைக்கும் நூலொன்றை மார்க்சியரான முத்துமோகன் எழுதி உள்ளார்.
அந்நூல் படிக்கக் கிடைக்கவில்லை. அதனைச் சிலாகித்து எஸ்.வி. ராஜதுரை எழுதிய விரிவான விமரிசனக் கட்டுரை ஒன்றை (‘தீராந தி’ இல் என்பதாக ஞாபகம்) இரண்டொரு வருடங்களுக்கு முன்னர் படித்துள்ளேன். சமூக இயக்கப் போக்கை ஒற்றைப்படைத் தன்மையாக அன்றி அனைத்துப் பரிமாணங்களையும் மார்க்ஸ் கவனமெடுத்துள்ளார் எனக் காட்டி உள்ளதை எஸ்.வி.ஆர். விஸ்தாரமாக பேசிச் செல்கிறார்.
கூடவே ஒரு விடயத்தை அவர் வலியுறுத்துவார்; மார்க்ஸ் அவ்வாறு அந்தப் பக்கம் குறித்தும் கரிசனம் காட்டவில்லை எனில் தொடரும் மார்க்சியர்கள் அதனைப் பார்க்காது இருந்துவிட வேண்டுமா? இன்றைய உலகுக்கு அவசியமான பாதையை எல்லாம் மார்க்சே வகுத்துக் காட்டியிருக்க வேண்டுமென எதிர்பார்க்க இத்தகைய நோக்கு நிலை வழிவகுக்கலாம் அல்லவா என்பதுபோல எஸ்.வி.ஆர். கேள்வியெழுப்பியதாகவும் நினைவுண்டு!
மார்க்ஸ் மறைந்து ஓரிரு தசாப்தங்களில் வேறுபட்ட ருஷ்யப் புரட்சிக்கான பாதையை வகுக்க வேண்டியிருந்த பொழுது ‘மார்க்ஸ் எவ்வாறு சிந்தித்து எத்தகைய முடிவை வந்தடைவாரோ அதனைக் கண்டறிய அவரது நூல்களைக் கற்று, அதன்வழி அவரோடு உரையாடி, எமக்கான பாதையை நாமே தேடிக் கண்டடைவோம்’ எனக் கூறியிருந்தார் அல்லவா?
மார்க்ஸ், லெனின், மாஓ சேதுங் உட்படப் பல மார்க்சிய வழிகாட்டிகள் வர்க்கத்துக்கு அப்பால் முழுச் சமூக சக்தியின் இயக்கம் இன்றைய உலகில் செயற்பட்டபடி உள்ளதைக் கவனங்கொண்டுள்ளனர். ஐம்பதாம் ஆண்டுகளின் கடைக்கூறில் சர்வதேச கொம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒன்றுபட்ட மாநாட்டு அறிக்கை மிகச்சிறந்த வழிகாட்டலை இதுதொடர்பில் வழங்கியுள்ளது.
குறிப்பாக இந்தியச் சாதிச் சமூகத்தில் சாதியும் வர்க்கமும் நெடுக்கும் குறுக்குமாக ஊடறுப்பதாக அவ்வறிக்கை பேசியிருந்தது. வர்க்கப் போராட்டமே பிரதானம், சாதி முறையும் இங்கே உள்ளது என்ற இந்திய மார்க்சியர் கருத்தை மாற்றுவதற்கு இந்தக் ‘குறுக்கும் நெடுக்கும்’ உள்ள சமூக சக்திகள் பற்றிய பார்வை உதவ வில்லை.
உண்மையில் சாதியும் வர்க்கமும் சமாந்தரமாக இயங்குகிற வெவ்வேறு இருவகை வரலாற்றியக்கச் சமூக சக்திகள் என்பதைக் கண்டு காட்டியிருக்க வேண்டும். அப்போது அது சாத்தியப்பட்டு இருக்கவில்லை என்பதாலுமே வரலாற்றுக் கடமையைக் கையேற்க இயலாதவர்களாக எமது முன்னோடிகள் தவறிழைக்க நேர்ந்தது!
இப்போதும் இதைக் காணத்தவறுவது மாபெரும் குற்றமாக எதிர்காலத்தால் சுட்டப்பட இடமேற்படுத்துமென உணர வேண்டாமா? மார்க்சிய ஆசான்கள் இவ்வாறு சொல்லவில்லை என இத்திசையில் சிந்திக்க மறுத்தால் மதவாத த்துக்கும் மார்க்சியத்துக்கும் வேறுபாடு ஏதுமில்லையா?
மார்க்சியம் மாற்றத்தை மறுக்கும் மதமல்ல!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment