Thursday, October 24, 2024

சொல்லிப் பயனில்லை செயலில் இறங்க வழியுமில்லை செய்ய வேண்டியது என்ன? ‘சொல்லி வேலையில்லை!’ என்பது இலங்கைப் பேச்சு வழக்கில் அடிபடும் சொலவடை ஒன்று. சிங்கள மக்களிடம் இருந்து வந்தது. விடயம் ஒன்றை விதந்து உரைக்கும் ஆச்சரியத் தொனிக்கு உரியது! இங்கு இன்னொரு வகைப் பயன்பாடு. நேற்று உரையாடிய செயற்பாட்டாளரான ஒரு தோழர் ஏற்கனவே நாங்கள் கடந்து செல்லும் ஆபத்தான சூழல் பற்றி இடித்துரைத்து வந்தாலும் அரசியலாளர்கள் நாட்டைப் படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடுகளைத் தானே தொடர்நதும் செய்கிறார்கள் என அந்தத் தோழர் ஆதங்கம் தெரிவித்தார். சொல்லிப் பயனில்லை. அரங்காடும் அரசியல் அமைப்புகள் எல்லாம் விரும்பியோ விரும்பாமலோ ஏகாதிபத்திய வலைக்குள் விழும் கைங்கரியங்களையே முன்னெடுக்கின்றனர். வாக்குப் பெறும் அரசியல் முனைப்பில் மக்களைக் கவரும் உத்திகளான போராட்டங்களை முன்னெடுத்து ‘ஓயாத அலையாக’ எதையாவது செய்ய முனைகிறார்கள்; சரியான கோட்பாடு, விடுதலைத் தேசிய நாட்டம், வெகுஜன மார்க்கம், மக்களிடம் செல்ல ஏற்ற கடுமையான வேலைப்பாணி என்பன இல்லாமல், எதிரி கட்டமைத்த (ஊடகப் பிரசார வலைப் பின்னலுக்கு உரிய) களத்தில் செயற்பட்டு மேலாதிக்க சக்திகளுக்கு உதவும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் செய்து வருகின்றனர். உலகமயமாதலில் மூழ்கத் தொடங்கிய எண்பதாம் ஆண்டுகளில் இருந்து அனைத்துத் தேசியவாத சக்திகளும் மேலாதிக்க மனோபாவத்துடன் இயங்க ஆற்றுப்படுத்தப்பட்டன. மோசமாக ஒடுக்கப்படும் தலித் மக்கள் மத்தியிலான தலித்தியவாத செயற்பாடுகளே மேலாதிக்க நாட்டமுள்ள கருத்தியலை வெளிப்படுத்தும்போது ‘ஆண்ட பரம்பரைக்’ கதைகள் பேசும் இனத் தேசியங்களின் மேலாதிக்க உணர்வைக் கண்டு ஆச்சரியப்பட எதுவும் இல்லை! எழுபதாம் ஆண்டுகள் வரை இதே மக்கள் விடுதலைத் தேசிய அரசியல் களங்களில் வீரியமிக்க பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பதை மறந்துவிட இயலாது! எண்பதாம் ஆண்டுகளில் இருந்து அரச பயங்கர வாதமும் விடுதலையின் பேரில் ஆயுதமேந்திய அமைப்புகளும் மக்களுக்கான அரசியல் செயற்பாட்டாளர்களைக் கொன்றொழித்தனர்; தப்பியோர் வெளியேறவும் மௌனிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டு மக்கள் அரசியல் களம் வெற்றிடம் ஆக்கப்பட்டுள்ளது! அரசியல் நேர்மையற்ற ‘முன்னாள் சமூகப் போராளிகள்’ கபடத்தனங்களுடன்! விடுதலைத் தேசிய, திணை அரசியல் செயலொழுங்கு முறைமைக்கான புதிய அணி மேலெழ இயலாது இருப்பது ஏன்?
மேலாதிக்கவாத ஒடுக்குவோரது அரங்காடலுக்குக் கட்டுப்பட்டுத் தொடர்ந்தும் மௌனம் காப்பது சரியானதா? மேலாதிக்கச் சக்தியின் கரம் இன்று ஓங்கி இருந்தாலும் கூட ஒவ்வொரு இனத் தேசியங்களதும் இலங்கைத் தேசத்தினதும் சுயநிர்ணய உரிமை குறித்த அரசியல் விழிப்புணர்வை மக்கள் இடையே வலுப்படுத்துவதன் வாயிலாகவே எதிர்கொள்ளும் ஆபத்தின் கனதியை மட்டுப்படுத்த வகை செய்தவர்களாவோம்! சுயநிர்ணய உரிமை குறித்த ஆழ்ந்த கற்றல் இன்று மிகமிக அவசியமான ஒன்று! மேலாதிக்கத் திணை (ஏகாதிபத்திய) ஒடுக்கு முறைக்குள் ஆட்பட்டவாறு உள்ள நாம், எமக்கான சுயநிர்ணய உரிமையின் வடிவப்படுத்தலை மேற்கொள்ள ஏற்றதான உரையாடலை மேற்கொள்வோம்! விடுதலைத் திணை அரசியல் பற்றிய கற்றலுக்கு முன்னுரிமை கொடுப்போம்! (மேற்படி விடயங்கள் தொடர்பான நூல்கள்:)

No comments:

Post a Comment