சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம். -ந.இரவீந்திரன்
உலகச் சமூகம் தமிழினத்தேசியத்துக்கு விமோசனம் பெற்றுத்தரும்வகையில் அரசியல் முன்னெடுப்பை தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ளும் சூழல். புலம்பெயர் ஈழத்தேசியச் சிந்தனையாளர்களில் ஒருபிரிவினர் இந்தத் தலைமைகள் வடக்கையும் இழக்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சாட்டுவதற்கு உள்ளூர் செயற்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்காதிருப்பது காரணம் எனக் காட்டுவதை விட்டு, உள்ளூர் வேலையில் சாதிச்சங்க முன்னெடுப்பில் துணைபோவதனைக் காரணமாகக் காட்டுகின்றனர். இங்கு(தளத்தில்) என்ன செய்யப்பட வேண்டும், புலம்பெயர் அக்கறையாளர்கள் என்ன செய்வதால் தமிழ் மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும் என்ற தேடலுக்கு உரிய சரியான கருத்தியல் தேடலை மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளமையை இந்தப் பின்னணி எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய கருத்தியல் குறித்த ஒரு தேடலாக இந்தக் கட்டுரை அமைகிறது. 'உலகச்சமூகம்' என்பதே இன்றைய பிரதான பேசுபொருள்களாக இருந்தபோதிலும் சர்வதேசவாதம் என்பதை முன்னிறுத்தியமை இந்தக் கருத்தியலுக்கான அடிப்படை நோக்கு சார்ந்தாகும்.
எண்பதுகளின் பின் ஊடகங்கள் வாயிலாக பெரிதும் பேசப்பட்டு ஏற்புடைமையாக்கப்பட்டது 'உலக சமூகம்' என்ற கருத்தியல். முன்னதாக 'சர்வதேச' உணர்வு என்பது கவனிப்புக்குரியதாக இருந்த கருத்தியல். அதனைத் தலைகீழ் மாற்றத்துக்குரியதாக்கிய உலகமயமாதலின் கையூட்டில்தான் ஊடகங்கள் உலகசமூகம் பற்றிப் பேசின. அனைத்து தேசங்களது சுயாதிபத்தியத்தை மதித்து சமநோக்குடன் அணுகும் சர்வதேசவாதம் பட்டாளிவர்க்க சிந்தனைமுறைக்குரியது. சோசலிசமுகாம் இன்னமும் ஏதோவொரு வகையில் செயற்பட்ட சூழலில் சர்வதேச உணர்வு அடிப்படையில் பிற நாடுகளில் தலையிடாது, சமத்துவ உறவுகொள்ளல் பற்றி பாட்டாளிவர்க்க சர்வதேசவாதம் எண்பதாம் ஆண்டுகள்வரை பேசுபொருளாக இருந்தது. தேசிய இனப்பிரச்சனையில் சோசலிச நாட்டம் அப்போது இனத்தேசியங்களிடையே முனைப்படைந்திருந்தது. மாறாக, உலகமயமாதல் உலகநாடுகளை ஒரு கிராமம்போல ஆக்கியதால் உருவாகும் 'உலகச்சமூகம்' என்ற முறைமையைப் பேசியவாறு பிறநாடுகளினுள் தமது விருப்புகளை திணிக்க உலகமுதலாளித்துவம் முனைந்தது. இவ்வகையில் பல்தேசமூலதன ஊடுருவலைச் சாத்தியமாக்கும் அரசியல் மாற்றத் தலையீடுகள் உடையதாக உலகச் சமநிலை மாற்றப்பட்டது. அமரிக்க மேலாதிக்கத் தலைமையில் பல்தேசக் கம்பனிகள் அனைத்து நாடுகளையும் தமது சுரண்டலுக்கான வேட்டைக்காடாக்கின. அதற்கு உதவும்வகையிலும் ஆயுதவியாபாரத்தைப் பெருக்குவதற்காகவும் தேசங்களின் உள்விவகாரங்களையும், அயல்நாடுகளது பிரச்சனைகளையும் யுத்தசம்காரம் செய்யவைக்க ஏற்றதான வாய்ப்பையேற்படுத்தும் கருத்தியல் மாற்றம் இதன்போது ஏற்பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன்பேறாக, தேசிய இனப்பிரச்சனை சோசலிச நாட்டங்கொள்வதைவிடவும் அமரிக்க மேலாதிக்கவாதத்துக்கு உதவுவது என்பதாய் மாற்றம்பெற்றது. அந்தவகையறா உலகசமூகம் பற்றியதாயில்லாமல், மக்கள் விடுதலை நலன்சார்ந்த சர்வதேசவாதம் குறித்தே இங்கு பேசுவோம்.
உலகளாவிய பிரச்சனைகளிலிருந்து எமது உள்ளூர்ப் போராட்டம் விலகியதாயில்லை. நாம் ஜெனீவாவுக்கு போவது தவிர்க்கவியலாதது; அங்கு முன்னெடுக்கும் அரசியல் எத்தகைய பெறுபேறைத் தருகிறது? அனேகமாக இப்போது தமிழ்த்தலைமைகளுக்கு வெளிநாட்டுக் காவடியெடுப்புக்கு அரசு தரப்பு இரகசிய வாய்ப்புக் கொடுக்க அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் இவர்கள் நின்றபோது இங்கே மின்சாரக் கட்டண உயர்வுக்கான அவசியம், பஸ்க்கட்டணம் உயர்த்தப்பட வேண்டியிருத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டது. முன்னர் இதுபோலுள்ளதில் பத்துவிழுக்காடு உயர்வு பற்றிப் பேசினாலேயே கிளர்ந்தெழும் சிங்கள மக்கள் மௌனம் காத்தார்கள். புலிகளை அழித்த அரசுக்கு சோதனையேற்படுத்தி, மீண்டும் புலியைப் புலம்பெயர் நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்வதற்கான ஆபத்தை ஜெனீவாவூடாக மேற்கொள்ளும் சூழலில் விலையேற்றத்தை சகிக்க வேண்டியதுதான் என அவர்கள் கருதினார்கள். மரம் அமைதியாயிருக்க இடமளிக்காமல் கட்சிகள் தமது ஆட்சிபெறலுக்கான புயலாக்குவதற்கு விலையேற்றங்களை எடுப்பது காரணமாக இந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான். இருக்கவேயிருக்கிறது கொமன்வெல்த் மாநாடு. இதுசார்ந்து தமிழ்த் தலைவர்களை அந்த இரகசியக் கரங்கள் அனுப்பலாம். இருதரப்பு மக்கள் விரோத இனவாதத் தலைமைகள் தமக்குள் கூட்டமைத்து மக்களுக்கு விரோதமாக எப்போதும் இவ்வகையிலேயே இயங்கிவந்துள்ளனர்.
இதனைக் கண்டுகொள்ளாமல் சாதிச்சங்கம் தோன்றுவதில் உள்ள இரகசிய உறவையே துப்பறிந்து கண்டுகொள்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்கு தூய இலட்சியம் இருக்கும் நிலையில் இந்தமாதிரியான விலையேற்றம் மாதிரியான சில்லறை விவகாரங்களில் மினைக்கெடலாமா? இந்த விவகாரங்களுக்காக போராடவேண்டியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் வறுமையிலுள்ள மக்கள் இன-மத-சாதி பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் மட்டுமே அவர்களது குறி முழுவதும். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிச்சங்கங்களில் அணிதிரட்டப்பட்டு அரசுக்கு துணைபோவதாக அக்கறைப்படுகிறவர்கள் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளின் நிறைவுக்கு ஏதாவது செய்யத் தயாரா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். அதெல்லாம் ஈழம் வந்தபின் பார்ப்போம் என்று நிலாக்காட்டுவதில் வித்தகர்கள் இவர்கள். 'சிங்கள' அரசு ஜெனீவாவைக் காட்டி சிங்கள மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போலவே இவர்களது 'தமிழ்' ஆட்சியும் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.
இப்படிச் சொல்வதால் ஒடுக்கப்பட்ட மக்கள் சிங்களப் பேரினவாத அரசுக்கு சாதகமாக இயங்குவதோடு, தமிழினத்தேசியத்துக்கு விரோதமாக செயற்பட வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிரச்சனைகள் உள்ளமையைத் தமிழினத்தேசியர்கள் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றே கோருகிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை இனிமேல் 'தலித்மக்கள்' என்று அழைக்கவேண்டும் என்பதற்கு எதிர்ப்புக்குரல் கொடுப்பது முதல் அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் நிராகரித்தும் எதிர்த்தும் கண்டுகொள்ளாதிருந்தும் வருகிற ஆதிக்க சாதிநலன் பேணுவோர், தலித் மக்கள் சாதியாக அணி திரள்வதைக் கண்டிக்க அருகதையற்றவர்களாவர் (ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைக் கட்டுரையில் இனித் தலித்மக்கள் என்றே சுட்டுவோம்). சாதிய இழிவுபடுத்தல்களுக்கு முடிவுகட்ட உருப்படியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் தமிழ்த்தேசியம் என்றவுடனே எல்லோரும் ஒன்றுபட்டிருப்பதான பொய்த்தோற்றத்தை ஏற்படுத்திவிட இயலாது. தமிழினத் தேசியத்துக்கு விரோதம் கொள்ளாமலே இலங்கை அரசுடன் தமது கோரிக்கைகள் நலங்கள் ஆகியவற்றுக்காக தொடர்பாடும் உரிமை தலித் மக்களுக்கு உண்டு. தமிழினத் தேசியம் அதனை அங்கீகரித்து, அவர்களது கோரிக்ககளைத் தாமும் அரவணைத்து செல்வதுசார்ந்த உரையாடல்களை அவர்களோடு மேற்கொள்ள வேண்டும்; அதைவிடுத்து ஆண்ட பரம்பரை அகம்பாவத்துடன் 'துரோகி' முத்திரை குத்தக் கிளம்பக்கூடாது.
அதெப்படி தலித் மக்களுக்கு அவ்வாறான தனித்துவ அடையாளத்தைக் கொடுக்க இயலும்? அவர்களும் தமிழ் மக்களுக்குள் அடங்குகிறவர்கள் தானே எனக் கேட்பதை உணர இயலுகிறது; ஆயினும், அவர்கள் தம்மைச் சமத்துவமாக நடத்த வேண்டும், கோயிலினுள் சென்று வழிபட வேண்டும் என்கிற எந்தவொரு கோரிக்கைக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடாத்தியே ஒவ்வொன்றாகப் பெற்றெடுத்து வருகிறார்கள். இன்று சாதிய இழிவுகள் பல ஒழிக்கப்பட்டுள்ளது என்றால், ஆயுதம் ஏந்திப் போராடிய அறுபதாம் ஆண்டுகளின் வரலாறுவரை சென்றே அவை சாதிக்கப்பட்டன. இன்றும் அவர்கள் 'அந்தப்பக்கம்' என்றே உயர்சாதியினரால் சுட்டப்படும் அடையாளம் முதல் பல்வேறு வேறுபாடுகளுக்குள் ஆட்படுத்தப்பட்டே வைக்கப்பட்டுள்ளனர். "அவையவையை வைக்கிற இடத்திலை வைக்கவேணும்" என்ற புகழ்பூத்த வாசகம் அடிப்படையில் சாதி உணர்வு சார்ந்தது என்பதையும், அது இன்னமும் ஒழிந்து போய்விடவில்லை என்பதையும் அறிவோம். சாதியொழிப்பு என்று சாதிச்சங்கம் சேர்வதால்தான் சாதி நீடிக்கிறது என்பவர்கள் உருப்படியாக சாதிகளிடையே புனிதம்-தீட்டு சார்ந்த கருத்தியல் இருப்பு முழுமைக்கும் எதிராகக் காத்திரமான பண்பாட்டு இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு தமிழ்த் தேசியம் செய்யும் பட்சத்தில் எவரும் சாதிச்சங்கத்தில் சேரப்போவதில்லையே.
இவ்வகையில் தலித் மக்களுக்கான தனித்துவக் கோரிக்கைகள் என்பவை இன்று நேற்று ஏற்பட்டனவல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் வட்டமேசை மாநாடு நடந்தபோது அம்பேத்கர் தலித்மக்களின் பிரதிநிதியாகக் குரல் கொடுப்பதை எதிர்த்த காந்தி, தலித்மக்களுக்கும் தானே பிரதிநிதி என்று வீம்புக்கு நின்றார். அம்பேத்கரது இரட்டை வாக்குரிமைக் கோரிக்கை அங்கே வெற்றிபெற்றது. தனக்கு தீராத அவமானத்தைத் தேடிய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி நடாத்தி, அம்பேத்கரின் அக்கோரிக்கையைக் கைவிடச் செய்யவேண்டியிருந்தது. ஆயினும் அனைத்துத் தலித் மக்களின் தலைவர் அம்பேத்கர் என்ற உண்மை வலியுறுத்தப்படுவதைக் காந்தியால் இல்லாதாக்க இயலவில்லை.
இரட்டைவாக்குரிமை அனுமதிக்கப்பட்டால் சாதியேற்றத்தாழ்வுகள் ஒழிந்துபோயிருக்கும் என்றில்லை என்றபோதிலும், தலித் மக்கள் இன்னும் வலிமையாகப் போராட வேண்டும் எனும் உண்மையைக் காந்தியின் நிலைப்பாடு முதல் இன்றைய ஆதிக்க சாதித் தேசியர்கள் வரை உணர்த்துவர் என்பதற்கான வரலாற்று உண்மையாகப் பதிவாகியுள்ளது. தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்தைத் தலைமைதாங்கிய காந்தியே இத்தகைய வரலாற்றுத்தவறை இழைத்தார் எனில், நாகரிகப் போலி வேச வெள்ளாள ஆதிக்கத் தமிழ்த் தேசியம் பேசுவோர் தலித்துகளுக்கு எதிராக எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொள்வர் என்பதைச் சொல்லத்தேவையில்லை. என்ன இருந்தாலும் காந்தி 'ஹரிஜனம்' என்ற மகுடம் சூட்டி, ஆலயப் பிரவேசப் போராட்டங்களை நடாத்தி, சாதியாதிக்க சக்திகளுக்கு தீராத தலையிடியை ஏற்படுத்தி, தலித் மக்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட வாய்ப்பளித்தவர்.
அன்றைய வரலாற்றுச் செல்நெறியின் பிரதான போக்காக ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுவது உடனடி அவசியப் பணி என்கிற வகையில் காந்தியின் தலைமையில் தலித் மக்களில் பெரும்பான்மையினர் நாற்பதுகளில் அணிதிரண்டபோது அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியையும் பொய்யாக்கிய நிலையில் அம்பேத்கர் மிகப்பெரும் தலித் தலைவர் ஆவது தொடரும் வரலாற்றுத் தேவையாக ஆனது. இது கவனிப்புக்குரிய வரலாற்றுப் படிப்பினை. தேசியம் தலித் கோரிக்கைகளை உள்வாங்கும்போது எதிர்த் தேசியம் இடைநிறுத்தப்பட இயலும்; அவ்வகையில் தலித்தேசியக் கோரிக்கை உள்ளிட்ட பிராமணல்லாத ஏனைய சாதித் தேசியங்களது கோரிக்கைகளையும் கையேற்ற காந்தி-நேரு ஆகியோரின் தாராளவாத அரைப் பிராமணியத் தேசியம் தலைமையேற்று இந்திய சுதந்திரத்தை சாத்தியமாக்க இயலுமாயிற்று.
பிராமணர் எனும் சமூக வர்க்கம் இந்தியா முழுமைக்குமான ஒரே சமூக சக்தி என்கிறவகையில் இவ்வகையிலான இந்தியத் தேசியம் (நாட்டுத் தேசியம்) நிதர்சனமானபோது தமிழ்நாட்டுக்கான (அன்றைய நிலையில் திராவிட நாடு என முன்வைக்கப்பட்டு, நடைமுறையூடாக தமிழினத் தேசியத்துக்கான) கோரிக்கை வரலாற்றுத் தேவையாக எழுச்சிகொண்டது. பிராமணிய எதிர்ப்பாக முனைப்படைந்த இந்த அணி தமிழ் ஆதிக்க சாதிகளது நலன் பேணுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும் தலித்தேசியக் குரல்களையும் இடைச் சாதிகளது குரல்களையும் முன்னெடுப்பவர்களாகக் காட்டிக்கொண்ட வகையில் பரந்த ஐக்கியமுன்னணியைக் கட்டியெழுப்பினர். அறுபதுகளின் பிற்கூறில் ஆட்சிய வென்றெடுத்து தொடர்ச்சியாக ஆட்சியாளர்களாக விளங்கியபோது எண்பதுகளில் இடைச் சாதியினர் அதிகாரத்தை வெற்றிகொள்ளும் வகையில் தி.மு.க. பிளவுற்றது. இடைச்சாதியினர் ஆதிக்கம் தலித்துகளுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்திய நிலையில், அம்பேத்கர் நூற்றாண்டும் வந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தலித் இயக்கம் தமிழகத்தில் எழுச்சி கொண்டது.
இலங்கையில் ஆங்கிலமயப்பட்ட கொவியா-வெள்ளாளக் கூட்டு ஆட்சிப்பங்கேற்ற நிலையில் ஏகாதிபத்தியம் சாதிய முரணையன்றி இன முரணைப் பிரித்தாளும் நோக்கத்துக்கான முரணாக வடிவமைத்த அரசியல் அரங்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் முரண் முனைப்படையலாயிற்று. சாதிவாதம் மேலாதிக்க சக்திக்குரியதாகாத நிலையில் சாதிமுரண் கூர்மையாக இருந்த யாழ்ப்பாணத்தில் முற்போக்கு செயற்பாட்டாளர்களான அனைத்து சாதியினரும் சாதியத்துக்கு எதிரான கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர். இந்த அவசியப்பணியில் தலித் அணிக்கான அமைப்பின் அவசியம் உணரப்பட்டு 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' கட்டியெழுப்பப்பட்டது. அது தொடங்கிய நாற்பதுகளிலிருந்து கொம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்கள் அங்கு செயற்பட ஆற்றுப்படுத்தியிருந்தது. அந்தவகையில் வெறும் சாதிவாத அமைப்பாக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான வலுவான அமைப்பாக அதனால் பங்களிக்க முடிந்தது. ஐம்பதுகளில்ருந்து, கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எம்.சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கிய போது வர்க்கப்பார்வையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டது. சிற்சில சாதியப் பிளவுகள் வெளிப்பட்டபோதிலும் பிரதான போக்கு தலித் தேசியம் எதிர்த்தேசியமாகப் பிளவுறாமல் சாதியெதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது.
அறுபதுகளில் இன்னும் கூர்மையான போராட்டங்களைச் சாதியத்துக்கு எதிராக முன்னெடுக்க ஏற்றதாக வரலாறு வளர்ச்சியுற்றநிலையில் அனைத்து சாதியினரும் அணிதிரண்ட அமைப்பான 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' தோற்றம்பெற்றது. இவ்வாறு தலித் தேசியம் முழு இலங்கைத் தேசியத்தின் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை இயக்கப்படுத்தியபோது, அதனுடன் ஐக்கியப்பட்டு தனது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியிருக்க வேண்டிய தமிழ்த்தேசியம் எதிர்ப்பு நிலையை எடுத்துக்கொண்டது. அவ்வாறு பிளவுபடுத்திய தமிழ்த் தேசியம் பிரிவினையை முன்வைத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் இன்றும் அதே வரலாற்றுத் தவறுகளை மேற்கொள்ள முற்படுகிறார்கள். இன்றைய நிலையில் சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளோடும் ஐக்கியப்பட்டு தமிழ்த்தேசியம் தனது சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டும். சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை; அதற்காக சிங்கள மக்கள் எல்லோருமே எதிரிகளல்ல. தம்மையும் வஞ்சிக்கும் பேரினவாதிகளுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட ஏற்றதாக தமிழ்த்தேசியத்தின் நடைமுறை அமையவேண்டும்.
மாறாக மேலாதிக்க சக்திகளுக்கு ஊடுருவலுக்கான வாய்ப்பாகப் பிரிவினைக் கோரிக்கையோடு சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்போமாயின் மேலும் அழிவுகளைச் சந்திப்போம். இதுவரையான தவறான அரசியல் மற்றும் யுத்தங்கள் கிழக்கை தமிழர்கள் பெரும்பான்மை எனும் இடத்திலிருந்து கைவிடுவதற்கு வழிகோலியது. இதனால் சிங்களத் தேசியம் வென்றதான மாயை சிங்கள மக்களைப் பேரினவாத சக்திகளுக்கு உடன்பட்டுப்போக வழியேற்படுத்தியபோதிலும், வளர்ந்துவரும் சமூக-பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகாரம்செலுத்தும் பேரினவாதக்கும்பலுடன் சிங்கள மக்கள் முரண்படுவதிலிருந்து தடுக்கும்வகையில் நீண்டகாலம் உதவப்போவதில்லை. முப்பதுவருட யுத்தசன்னதத்தை வளர்த்த இந்தியா (இதற்காக அர்ப்பணிப்போடு போராடிய சக்திகளின் பங்களிப்பு அந்த இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கான இரையாகும் வகையில்) பயன்படுத்திக்கொண்ட பின்னர் பதினாறுக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக இலங்கையை இந்தியா அடிமைகொண்டுள்ளது. ஆக, இலங்கையினுள் சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களை அடக்கி மேலாதிக்கம் செய்யும் அதேகாலத்தில் இந்திய மேலாதிக்கத்தால் முழு நாடும் ஆட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு சிங்களத் தேசிய முற்போக்கு சக்திகள் செயற்படுவதற்கு முன்வரவேண்டும். தமிழ்த் தேசியம் தலித்தேசிய நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு அதன் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் மதித்தவாறு செயற்படுகிற அதேவேளை, இலங்கைத் தேசியத்தின் நிதர்சனத்தை ஏற்றவாறு பிரிந்து செல்வதல்லாத சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். இவை குறித்து இரட்டைத் தேசியம் குறித்த பல கட்டுரைகளிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உணர்வுடன் மக்கள் விடுதலை எனும் இலக்கு சார்ந்ததாக இலங்கைத் தேசியம் அனைத்து தேசிய இனங்களையும் சமத்துவமாக நடாத்துவதுபோன்றே சாதிய ஒடுக்குமுறையின் அனைத்துவடிவங்களையும் தகர்க்கும் இலட்சியத்தோடு தமிழினத் தேசியத்தின் சுயநிர்ணயப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கைத் தேசியத்தினின்றும் வேறுபடுத்தித் தனிநாடாக ஆக்கும் எத்தனம் மேலாதிக்க சக்திகளுக்கு உதவுவதாகிவிடும் என்பதான அதே பொருளில், தமிழினத் தேசியத்தைப் பலவீனப்படுத்தாதவகையில் தலித் தேசியக் கோரிக்கைகளும் செயற்பாடுகளும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்துவோம். சிங்கள முற்போக்கு சக்திகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும்போது பிரிவினைவாதம் வலுப்படுவது போலவே, இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் தலித் தேசியத்தை நிராகரிக்கும்போது தலித்தியவாதம்(சாதிவாதம்) மேலோங்க வழியேற்படுத்துகிறார்கள் (ஆதிக்க சாதிக்கான 'ஆத்மீகப்' போலி முகமூடி அணிந்த சாதிவாதம் எப்படி முகங்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தலித் விடுதலையாளர்கள் அறிவர்; ஆயினும் இந்த முற்போக்காளராய் முன்வந்து 'சாதிபேதம் இல்லாதொழிந்த பின்னும் நீங்கள் ஏன் சாதிபற்றிப் பேசுகிறீர்கள்' என்கிற நட்புசக்திகளிடமிருந்து காக்கத்தான் எந்தக்கடவுளும் முன்வருகிறார்களில்லை). இரட்டைத் தேசியக் கோட்பாடு எமக்கான செயற்பாட்டுக் கருத்தியல் என்கிறவகையில் இப்பிரச்சனை குறித்து விளக்கம்பெற உதவ இயலும்.
இந்தக்கட்டுரையின் பேசுபொருளுக்கு அமைவாக இரட்டைத் தேசியக் கோட்பாடு தொடர்பான ஐந்து அம்சங்களைச் சுருக்கமாக முன்வைப்பது அவசியமாயுள்ளது. அவை:
1 -சமூக வர்க்க ஆதிக்கமும் கருத்தியலும்-
ஐரோப்பாவில் போல வர்க்கப்பிளவுற்ற சமூக அமைப்பல்ல எம்முடையது. விவசாய வாய்ப்புப் பெற்ற மருதத் திணைக்குரிய இனமரபுக்குழுக்கள் ஆதிக்க சாதியான வெள்ளாளராக தம்மை ஆக்கி வெல்லப்பட்ட இனமரபுக்குழுக்களை இடைச்சாதிகளாயும் தலித்துக்களாயும் ஆக்கிக்கொண்ட சமூகமுறைமை எமக்கானது. இதற்கு ஏற்புடையவர்களாக்க வலுவான கருத்தியல் அவசியம் என்கிறவகையில் பிராமணர் என்கிற சாதி அவசியப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேலாதிக்கம்பெற்ற சாதியென வெள்ளாளர், நாயர், நாயுடு (இலங்கையில் கொவியா) என வெவ்வேறு சாதிகள் இருந்தபோதிலும் கருத்தியலுக்கான சாதியான பிராமணர் முழு இந்தியாவுக்குமானவர்களாக இருக்க முடிந்தது (இலங்கையில் ஆட்சியாளர்களுடன் பிராமணர் இருந்தபோதிலும் ஒரு சமூக சக்தியாக ஆதிக்கம் பெற இயலவில்லை; பௌத்தத்துக்கு நேரடியாக பிராமணர் பங்களிப்பு இருந்ததைக் கடந்து பௌத்த இலக்கியங்கள் வாயிலாக சாதிவாழ்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது). சாதி ஏற்றத் தாழ்வுடன் ஆதிக்கசாதியின் உடைமையாளர்கள் பிறரைச் சுரண்ட ஏற்ற கருத்தியலை முன்வைக்கும் பிராமணியம், அமைப்பு மாற்றங்களுக்கு ஏற்றதாக மாறுபடும் கருத்தியல்களையும் காலந்தோறும் வடிவமைத்து வந்துள்ளது.
2. சமூகமாற்றத்துக்கு பண்பாட்டுப்புரட்சி-
கருத்தியல் வாயிலாக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்கிற சமூக வர்க்கமான ஆளும் சாதியை வீழ்த்திப் புதிய உற்பத்திமுறைக்கான மற்றொரு சாதி ஆதிக்கத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் கருத்தியல் மாற்றத்தை முன்னதாக ஏற்படுத்த வேண்டும். மூவேந்தர் ஆட்சி சாத்தியப்பட்ட வீரயுக உடமையாளர்களான கிழார்கள் தமது ஆதிக்கத்தோடு பிராமண ஆதிக்கத்துக்கும் வழியேற்படுத்தினர். பிராமணியத்தை வீழ்த்தி வைசியர்களைப் புனிதர்களாய்க் காட்டிய பௌத்த சமண எழுச்சி அறநெறிக்காலத்தை சாத்தியமாக்கியது. பக்திப்பேரியக்கம் வெள்ளாளரைப் புனிதப்படுத்தும் கருத்தியலுடன் பிராமணியத்தை வளர்த்து பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்து நிலப்பிரபுத்துவ அமைப்பு வெற்றிகொள்ளப்பட்டது. முதலாளித்துவ மாற்றியமைத்தலிலும் காந்தியின் ஆன்மீக வடிவம் பெற்ற போராட்ட முறைகள் முதல் தமித்தேசியத்துக்கான தி.மு.க.வின் பண்பாட்டு இயக்கங்கள் வரையானவை கவனங்கொள்ளப்பட வேண்டியன.
3. ஏகாதிபத்தியம் - ஒடுக்கப்பட்ட தேசம்:
நவீன முதலாளித்துவ வரலாறு இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய அமைப்பை நிதர்சனமாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோசலிசம் வென்றெடுக்கப்படலாம் என மார்க்ஸ் நம்பியதைப் புதிய அமைப்பு முறை வளர்த்தெடுத்து சிந்திக்குமாறு கோரியது. ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய ருஸ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அப்பால் ஏனையவை அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தேசங்களின் புரட்சி வாயிலாகவே சோசலிசம் கட்டியெழுப்பப்பட்ட நிதர்சனத்தைக் கவனம்கொள்ள வேண்டும். சமூக வர்க்கமாக ஒடுக்கி சுரண்டலை மேற்கொண்டு சமூக மாற்றங்களைக் கண்டுவந்த எமது அனுபவங்களிலிருந்து இதற்கான கோட்பாட்டு உருவாக்கம் சாத்தியமாக இயலும். இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் விரிவாக்கம் இதற்குரியது எனக் காணலாம். இதுகுறித்துப் பின்னால் பார்க்கலாம். ஒருவிடயம் மட்டும் இங்கு வலியுறுத்த அவசியமுள்ளது. ஏகாதிபத்தியம் என்பது மூலதனத்தை ஏற்றுமதி செய்து ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சுரண்டுவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்கிய ஆதிக்க சாதிகள் பிராமணியம் என்கிற பண்பாட்டு ஏகாதிபத்தியமாகும் வரலாறு எம்மத்தியில் முன்னரே நடந்தேறியது. தேசிய வாழ்முறை இன்றைய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கான அரசியல் வடிவம் என்றபோதிலும் சாதிமுறையில் வெளிப்பட்ட இந்தப்பண்பு சாதிகளை முந்திய வடிவத்துக்குரிய தேசியமாகக் கொள்ள இயலும் என்பதை மறுக்க இயலாது. வேறுவார்த்தைகளில், சாதிகள் ஒவ்வொன்றும் ஒருவகையில் தேசம் போன்ற அமைப்பை நவீன வரலாற்றில் வடிவம் பெற இடமுள்ளதாக கூறலாம். இந்தச் சாதித் தேசம் பௌதிகவடிவிலான நிலத் தொடர்பு உடையதல்ல என்றபோதிலும், சாதியமனம் எனும் அரூபமான 'நிலத்' தொடர்பைக்கொண்டுள்ளது.
4. புதிய பண்பாடு-
ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும்போது ஆதிக்க சாதிகள் தலைமையேற்கும் நிலையில் தலித் கோரிக்கை (அம்பேத்கர்) அல்லது பிராந்திய ஆளும் சாதித் தேசியம் (பெரியார்) என்பன முறையே வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் எதிர்த் தேசியமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. அம்பேத்காரியம், பெரியாரியம் என்பன அத்தகைய எதிர்த்தேசியங்களாகும். பாட்டாளி வர்க்க நோக்கில் முன்னெடுக்கப்படும் மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் புதியபண்பாடு எனும் வடிவம் கொள்ளும். ஆதிக்கசாதித்தேசியம் மரபு சார்ந்த பண்பாட்டியத்தை முன்னெடுக்கும்போது பிராமணிய எதிர்ப்புடையன எதிர்ப்பண்பாட்டியத்தை முன்னிறுத்தின. இது மரபுப் பண்பாட்டை முழுமையாக நிராகரிக்கும் நிலைப்பாடு. ஆதிக்க எதிர்ப்பு இதன் அடிப்படையாக இருந்தபோதிலும் பிற மேலாதிக்கத்துக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பாக சொந்த வேர்களைத் தகர்க்கும் தவறு இதன்பால் உண்டு. புதிய பண்பாட்டியம் ஆதிக்க எதிர்ப்பில் எதிர்ப்பண்பாட்டியக் கூறை உள்வாங்கும் அதேவேளை, அவசியமான மக்கள் பங்கேற்பு சர்ந்த மரபுப்பண்பாட்டின் ஏற்புடையவற்றைக் கையேற்கும். அனைத்துவகை மேலாதிக்கங்களையும் முறியடித்து முழுமையான விடுதலையைச் சாத்தியமாக்குவது புதியபண்பாட்டியம்.
5. மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்-
தேசவிடுதலையூடாக சோசலிசத்தை வென்றெடுக்கிற வரலாற்றுக்கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை மாஒ சேதுங் சிந்தனை மக்கள் ஜனநாயக சவாதிகாரம் என விருத்தி செய்து பிரயோகித்தது. ஆயினும் தொடர்ந்த வரலாற்றுப்போக்கின் நெருக்கடியில் ஒருபின்வாங்கல் நேர்ந்துள்ளது. இதனை தேசியவிடுதலை வாயிலாக சோசலிசத்தை வெற்றிகொள்ளல் எனும் புதிய மார்க்சியக் கட்டத்துக்குரிய கோட்பாட்டு நிலையில் மீளக் கட்டமைப்பது அவசியமாகும்.
ஆக, மேலாதிக்கம் ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கு எதிராக நாட்டுத்தேசியம் சோசலிசத்தை வென்றெடுக்கும் இலக்கோடு மக்களை அணிதிரட்ட வாய்ப்புண்டு. அதற்கான கருத்தியல் அடிப்படையில் எமக்கான கோட்பாட்டை வகுக்கவேண்டும். அதன்போது ஒவ்வொரு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் கவனம்கொள்ளப்பட வேண்டும். இந்த இனத்தேசியங்களின் மத்தியில் பண்பாட்டு ஏகாதிபத்தியத்துக்கு ஆட்பட்ட சாதித் தேசியங்களது சுயநிர்ணயம் அதற்குரிய வடிவத்தில் அங்கீகரிக்கப்படுவது அவசியம்.
2013-நன்றி குவர்னிக்கா