Friday, December 6, 2013

பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .

Photo: பேராசிரியர் கைலாசபதி  31வது நினைவு  ஆண்டு . 
(5-4-1933 -- 6-12-1982 )
 எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற  மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.
அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.
அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர்.ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.
இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.
சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!
பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .
(5-4-1933 -- 6-12-1982 )

எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.
அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.
அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர். ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.
இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.
சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!

Monday, August 12, 2013

அனுபவப் பகிர்வு !

மீண்டும் நீண்டகாலம் உரையாடலில் ஈடுபடாதமை குறித்த வருத்தம் தெரிவிப்போடு, பேசுவதற்கு நிறையவேயுள்ள நிலையில் இந்தப் பதிவு. ஜூலை மாதம் கனடா-அமெரிக்கா பயணம் முடித்துத் திரும்பிய அனுபவப் பகிர்வை பதிவிட எண்ணியிருந்தும் இயலவில்லை. உடன் மட்டக்களப்பு சென்று மாமாங்கத்தில் இடம்பெற்ற கூத்துகளைக் கண்டதோடு, கிழக்குப் பல்கலைக் கழக கருத்தாடல் ஒன்றிலும், நண்பர் ஜெயசங்கரின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டேன்; அதுகுறித்தும் நிறையப் பேச வேண்டும். முன்னதாக இவற்றைப் பொதுமைப்படுத்தி எனக்குள் எழும் உணர்வுபற்றி.
மட்டக்களப்பில் எமது பாரம்பரியக் கூத்துக்கலையை எவ்வாறு கையாள்வது என்ற விவாதம் வலுவடைந்து வருகிறது. பல்கலைக் கழக நாடகத்துறை ஜெயசங்கர் தலைமையில் கிராமங்கள் தோறும் சென்று, அவற்றை பாதுகாத்துக் கையேற்று மீளுருவாக்கி ஏனைய பகுதிகளுக்கு எடுத்து வர, பேராசிரியர் மௌனகுரு அவற்றை ஆய்வுகூட மயப்படுத்துகையை மேற்கொள்கிறார். பின்னதை என்னால் பார்க்க இயலவில்லை. அவர்களது விவாதம் குறித்து முழுமையாக பதிவிடுவதாயின் அந்தத் தரப்பையும் அறிவது அவசியம்; அவர் பின்னர் வருமாறு அழைத்தார்.
இப்போதும் கூத்துகள் குறித்து இங்கு பேச்சில்லை(பின்னால் விரிவாக உரையாடுவோம்-அதற்கான அவசியம் உள்ளது). இருதரப்பும் வெளியே இருந்து நிதி உதவுவது வாயிலாக கூத்தினை நவீன உலகுக்கு எடுத்துவருகின்றன. இந்த வெளி நிதி என்கிற வடிவத்தில் எமது புலம் பெயர் தமிழர்(பு.பெ.த.) எவ்வகையில் உதவலாம் என்பதே இங்கு பேசித் தீர்க்கவேண்டிய விவகாரம். அது ஒரு அமர்வில் முடிவு காணவியலாத சங்கதி எனினும் இன்று தொடங்க ஏற்றதாக அமைகின்றது. அதற்கான உடனடிக் காரணம், யூலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்புத் தொடர்பில் நண்பர் ஒருவர் கூறிய கருத்தாகும். அது அரச சார்பில் நடப்பதாக கூறியோர் கருத்தையும், நிராகரிக்கவேண்டும் என்ற குரலையும் தன்னால் ஏற்கவியலவில்லை என்றார் அவர். பிரதானமாக முப்பது வருடங்கள் பேசவியலாது இருந்த சமாச்சாரங்கள் பேசப்படவேண்டும் என்பதாலேயே தான் கலந்து கொண்டதாக கூறினார்.
இருதரப்புசார்பையும் கடந்த நிலையில் தனது அவதானம் அந்தச் சந்திப்பு அரச சார்பு நிகழ்வாக இல்லை என்பதே. ஏற்பாட்டாளர்களில் ஒருதரப்பிடம் அவ்வாறான ஒரு நிலைப்பாடு இருந்திருந்தாலும்கூட அதற்கு இடமளிக்கப்படவில்லை. சுதந்திரமாக தமிழ்த் தேசியப்பிரச்சனை உட்பட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருட்களாக அமைய இயலுமாயிற்று. குறிப்பாக குடும்ப ஆதிக்கம் என்பதற்கு இடமிருக்கவில்லை. அப்படி சில தலையீடுகள் முளைவிடும்போதே சபை அதை நிராகரித்து இயல்பான ஓட்டத்தை உத்தரவாதப்படுத்தத் தடையிருக்கவில்லை.
மிகப்பிரதான அம்சம், மலையகம்-முஸ்லிம்கள்-சிங்களத்தரப்பு என்பன சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தத்தமது காத்திரமான கருத்துகளை வெளியிட இயலுமாக இருந்தது என்பதுதான் என அந்த நண்பர் வலியுறுத்தியிருந்தார். யாழ்ப்பாண மையவாதத்தைத் தகர்த்துக்கொண்டு, அனைத்துத் தேசிய இனங்களது உரிமைகளைச் சமத்துவ நிலையில் அணுக ஏற்ற களமாக அமைந்தமை கவனிப்புக்குரியது.
இன்னொரு விடயமும் வலியுறுத்தப்பட்டது; பு.பெ.த.சமூகம் எமது விவகாரங்களில் தலையிடாதிருப்பது அவசியம் என்பதே அது. புலப்பெயர்வில் வளமான வாழ்வைப் பெறும் ஒருதரப்பு இன்னமும் இங்கே பிச்சைக்காரன் புண்போல பிரச்சனையை வைத்துக்கொள்ள முயல்வதற்கு எதிரான குரலே அது. மற்றப்படி, பிரச்சனைத் தீர்வுக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்ற தேடலோடு இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களை அவமானப்படுத்துவது அவரது நோக்கமில்லை. தலையீட்டை நிறுத்திக்கொண்டு எமது உரையாடலுக்கு இடமளிக்கப்பட்டது எனத் திருப்தி தெரிவிப்பதில் இந்த வேறுபடுத்தலைக் காண இயலும். இது முக்கியத்துவமுள்ளது.
பு.பெ.த.வின் இலக்கியச் சந்திப்பு மேற்கில் சுதந்திரமாக நடந்துவந்த ஒன்று. அதனை இங்கே கொண்டுவரும்போது தவிர்க்கவியலாத கேள்விகள் எழுந்தன. புலம்பெயர்ந்த எமது சந்திப்பை ஏன் புலத்திலேயே நிகழ்த்தவேண்டும்? தவிர, இங்கு இயல்பான வாழ்வு சாத்தியம் எனக் காட்டும் முயற்சியா இது? இவற்றுக்கான பதில்கள் இங்கே கிடைத்துள்ளன. இங்கே எமது உரிமைகளை வென்றெடுக்க ஒவ்வொரு தரப்பும் முயன்றவாறே இயல்பான வாழ்வில் இருந்துகொண்டுதான் உள்ளோம். புலப்பெயர்வாளர் ஏன் இங்கே சந்திக்க வேண்டும் என்பதற்கும் இதிலே பதில் உள்ளது. நாம் எமக்கான வாழ்வைக் கட்டமைப்பதற்கு குறுக்கீடு விழைக்காமல் எம்மை விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இந்தச் சந்திப்பு உதவுகிறது. எமது வாழ்க்கைப் போராட்டத்துக்கு இடையூறின்றி உதவ இயன்றதை அவர்கள் செய்ய இயலுமே அன்றி, நாம் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்த முடிவுகளையும் எம்மீது திணிக்க முயலக்கூடாது.
கனடா தென்னையில் இந்த மாட்டை ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி எழலாம். அங்கே இப்போது ஒரு சிறுபான்மைச் சமூகமாக தம்மை நிலைநிறுத்திப் பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுள்ள பு.பெ.த. சமூகம் இங்குள்ள தொப்பூழ்கொடி உறவுகளுக்கு என்ன செய்யலாம் என்ற கேள்விகளோடு உள்ளது. "தாய் வீடு" இதழுக்கு வழங்கிய செவ்வியில், உங்கள் உதவியில் 10 வீதம் மட்டுமே உங்கள் விருப்பத்தீர்வுக்கு வந்தடைகிறது, பெரும்பகுதி கனடா பெருச்சாளிகளுக்கும் இங்குள்ள பெருச்சாளிகளுக்குமே போய்ச் சேர்கிறது என்றேன். சரியான வழியில் 20 வீதத்தை இங்கு அனுப்பிக்கொண்டு, மீதத்தை அங்கே கனடாத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு விருத்திக்கு அவசியமான பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்றேன். அதுதான் கோயில் கொண்டாட்டங்களும், சினிமா நாயக-நாயகி ஆட்டங்களும் அங்கே களைகட்டுகிறதே என்கிறீர்களா; அதுதான் பிரச்சனை. எங்களை இன்னும் மோசமாக பண்பாட்டு ஆக்கிரமிப்பில் சுரண்டும் கூட்டத்தின் எடுபிடிகளாய் இருந்தவாறு இங்கு குட்டையைக் குழப்பும் கபடகாரச் சினிமா-கோயில் பண்பாட்டு மோகங்களிலிருந்து மீண்டு சரியான பண்பாட்டைக் கட்டமைக்கும் தேவைக்கு அங்கேயும் பெரும்பகுதி பொருளாதாரம் வேண்டியுள்ளது. மிகக் கடும் உழைப்பு வாயிலாகவே தமக்கான வளமான வாழ்வை அவர்கள் வென்றிருக்கிறார்கள். அதனை அவமாவதற்கு இடமளிக்காத புதிய பண்பாட்டைக் கட்டமைக்க அவர்களது உழைப்பின் ஒருபகுதி செலவிடப்பட இயலும்.
இதை அங்கே நான் சொன்னது சரிதானா என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டிருந்தது. சரிதான் என்பதை மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் உணர்த்திநின்றன. கிராமங்களில் கூத்து மக்களால் அவர்களுக்கான இயல்பான வாழ்வின் தேவையின் வெளிப்பாடு; 'வெளியே' இருந்து செல்லும் நிதிக்கு ஒரு வரையறை உள்ளது. அவ்வாறே பு.பெ.த. சமூகம் 20 வீதப் பங்களிப்பின் ஒருபகுதியாக 41வது இலக்கியச் சந்திப்பை யாழ்மண்ணில் ஆரோக்கியமாக நடத்திச் சென்றிருக்கிறார்கள்(புலப்பெயர்வில் புதுவாழ்வு கண்ட முதன்மைக் களத்துக்கு சென்றதன் காரணமாக என்னால் இதில் கலந்துகொள்ள இயலாமல் போனது வருத்தமே). இன்னும் நாலைந்து சந்திப்புகளை உங்களது தேசங்களில் நடத்தியபின் மீண்டும் இங்கே வாருங்கள். வடக்கில் சந்தித்தோம், இனி கிழக்கு-மலையகம்-தெற்கு-மேற்கு என இலங்கை மண்ணின் தமிழ் பேசும் பல்வேறு களங்களிலுமிருந்து உரையாட அவசியமுள்ளது. நானும் உங்கள் மண்ணில்(கனடாவில்) கற்றுக்கொண்டதைப் பதிவிடுவேன். தொடர்வோம்.

சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம்.

சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம்.  -ந.இரவீந்திரன்

 உலகச் சமூகம் தமிழினத்தேசியத்துக்கு விமோசனம் பெற்றுத்தரும்வகையில் அரசியல் முன்னெடுப்பை தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ளும் சூழல். புலம்பெயர் ஈழத்தேசியச் சிந்தனையாளர்களில் ஒருபிரிவினர் இந்தத் தலைமைகள் வடக்கையும் இழக்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சாட்டுவதற்கு உள்ளூர் செயற்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்காதிருப்பது காரணம் எனக் காட்டுவதை விட்டு, உள்ளூர் வேலையில் சாதிச்சங்க முன்னெடுப்பில் துணைபோவதனைக் காரணமாகக் காட்டுகின்றனர். இங்கு(தளத்தில்) என்ன செய்யப்பட வேண்டும், புலம்பெயர் அக்கறையாளர்கள் என்ன செய்வதால் தமிழ் மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும் என்ற தேடலுக்கு உரிய சரியான கருத்தியல் தேடலை மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளமையை இந்தப் பின்னணி எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய கருத்தியல் குறித்த ஒரு தேடலாக இந்தக் கட்டுரை அமைகிறது. 'உலகச்சமூகம்' என்பதே இன்றைய பிரதான பேசுபொருள்களாக இருந்தபோதிலும் சர்வதேசவாதம் என்பதை முன்னிறுத்தியமை இந்தக் கருத்தியலுக்கான அடிப்படை நோக்கு சார்ந்தாகும்.
எண்பதுகளின் பின் ஊடகங்கள் வாயிலாக பெரிதும் பேசப்பட்டு ஏற்புடைமையாக்கப்பட்டது 'உலக சமூகம்' என்ற கருத்தியல். முன்னதாக 'சர்வதேச' உணர்வு என்பது கவனிப்புக்குரியதாக இருந்த கருத்தியல். அதனைத் தலைகீழ் மாற்றத்துக்குரியதாக்கிய உலகமயமாதலின் கையூட்டில்தான் ஊடகங்கள் உலகசமூகம் பற்றிப் பேசின. அனைத்து தேசங்களது சுயாதிபத்தியத்தை மதித்து சமநோக்குடன் அணுகும் சர்வதேசவாதம் பட்டாளிவர்க்க சிந்தனைமுறைக்குரியது. சோசலிசமுகாம் இன்னமும் ஏதோவொரு வகையில் செயற்பட்ட சூழலில் சர்வதேச உணர்வு அடிப்படையில் பிற நாடுகளில் தலையிடாது, சமத்துவ உறவுகொள்ளல் பற்றி பாட்டாளிவர்க்க சர்வதேசவாதம் எண்பதாம் ஆண்டுகள்வரை பேசுபொருளாக இருந்தது. தேசிய இனப்பிரச்சனையில் சோசலிச நாட்டம் அப்போது இனத்தேசியங்களிடையே முனைப்படைந்திருந்தது. மாறாக, உலகமயமாதல் உலகநாடுகளை ஒரு கிராமம்போல ஆக்கியதால் உருவாகும் 'உலகச்சமூகம்' என்ற முறைமையைப் பேசியவாறு பிறநாடுகளினுள் தமது விருப்புகளை திணிக்க உலகமுதலாளித்துவம் முனைந்தது. இவ்வகையில் பல்தேசமூலதன ஊடுருவலைச் சாத்தியமாக்கும் அரசியல் மாற்றத் தலையீடுகள் உடையதாக உலகச் சமநிலை மாற்றப்பட்டது. அமரிக்க மேலாதிக்கத் தலைமையில் பல்தேசக் கம்பனிகள் அனைத்து நாடுகளையும் தமது சுரண்டலுக்கான வேட்டைக்காடாக்கின. அதற்கு உதவும்வகையிலும் ஆயுதவியாபாரத்தைப் பெருக்குவதற்காகவும் தேசங்களின் உள்விவகாரங்களையும், அயல்நாடுகளது பிரச்சனைகளையும் யுத்தசம்காரம் செய்யவைக்க ஏற்றதான வாய்ப்பையேற்படுத்தும் கருத்தியல் மாற்றம் இதன்போது ஏற்பட்டது என்பது கவனிப்புக்குரியது. இதன்பேறாக, தேசிய இனப்பிரச்சனை சோசலிச நாட்டங்கொள்வதைவிடவும் அமரிக்க மேலாதிக்கவாதத்துக்கு உதவுவது என்பதாய் மாற்றம்பெற்றது. அந்தவகையறா உலகசமூகம் பற்றியதாயில்லாமல், மக்கள் விடுதலை நலன்சார்ந்த சர்வதேசவாதம் குறித்தே இங்கு பேசுவோம்.
உலகளாவிய பிரச்சனைகளிலிருந்து எமது உள்ளூர்ப் போராட்டம் விலகியதாயில்லை. நாம் ஜெனீவாவுக்கு போவது தவிர்க்கவியலாதது; அங்கு முன்னெடுக்கும் அரசியல் எத்தகைய பெறுபேறைத் தருகிறது? அனேகமாக இப்போது தமிழ்த்தலைமைகளுக்கு வெளிநாட்டுக் காவடியெடுப்புக்கு அரசு தரப்பு இரகசிய வாய்ப்புக் கொடுக்க அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் இவர்கள் நின்றபோது இங்கே மின்சாரக் கட்டண உயர்வுக்கான அவசியம், பஸ்க்கட்டணம் உயர்த்தப்பட வேண்டியிருத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டது. முன்னர் இதுபோலுள்ளதில் பத்துவிழுக்காடு உயர்வு பற்றிப் பேசினாலேயே கிளர்ந்தெழும் சிங்கள மக்கள் மௌனம் காத்தார்கள். புலிகளை அழித்த அரசுக்கு சோதனையேற்படுத்தி, மீண்டும் புலியைப் புலம்பெயர் நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்வதற்கான ஆபத்தை ஜெனீவாவூடாக மேற்கொள்ளும் சூழலில் விலையேற்றத்தை சகிக்க வேண்டியதுதான் என அவர்கள் கருதினார்கள். மரம் அமைதியாயிருக்க இடமளிக்காமல் கட்சிகள் தமது ஆட்சிபெறலுக்கான புயலாக்குவதற்கு விலையேற்றங்களை எடுப்பது காரணமாக இந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான். இருக்கவேயிருக்கிறது கொமன்வெல்த் மாநாடு. இதுசார்ந்து தமிழ்த் தலைவர்களை அந்த இரகசியக் கரங்கள் அனுப்பலாம். இருதரப்பு மக்கள் விரோத இனவாதத் தலைமைகள் தமக்குள் கூட்டமைத்து மக்களுக்கு விரோதமாக எப்போதும் இவ்வகையிலேயே இயங்கிவந்துள்ளனர்.
இதனைக் கண்டுகொள்ளாமல் சாதிச்சங்கம் தோன்றுவதில் உள்ள இரகசிய உறவையே துப்பறிந்து கண்டுகொள்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்கு தூய இலட்சியம் இருக்கும் நிலையில் இந்தமாதிரியான விலையேற்றம் மாதிரியான சில்லறை விவகாரங்களில் மினைக்கெடலாமா? இந்த விவகாரங்களுக்காக போராடவேண்டியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் வறுமையிலுள்ள மக்கள் இன-மத-சாதி பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் மட்டுமே அவர்களது குறி முழுவதும். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிச்சங்கங்களில் அணிதிரட்டப்பட்டு அரசுக்கு துணைபோவதாக அக்கறைப்படுகிறவர்கள் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளின் நிறைவுக்கு ஏதாவது செய்யத் தயாரா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். அதெல்லாம் ஈழம் வந்தபின் பார்ப்போம் என்று நிலாக்காட்டுவதில் வித்தகர்கள் இவர்கள். 'சிங்கள' அரசு ஜெனீவாவைக் காட்டி சிங்கள மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போலவே இவர்களது 'தமிழ்' ஆட்சியும் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.
இப்படிச் சொல்வதால் ஒடுக்கப்பட்ட மக்கள் சிங்களப் பேரினவாத அரசுக்கு சாதகமாக இயங்குவதோடு, தமிழினத்தேசியத்துக்கு விரோதமாக செயற்பட வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிரச்சனைகள் உள்ளமையைத் தமிழினத்தேசியர்கள் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றே கோருகிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை இனிமேல் 'தலித்மக்கள்' என்று அழைக்கவேண்டும் என்பதற்கு எதிர்ப்புக்குரல் கொடுப்பது முதல் அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் நிராகரித்தும் எதிர்த்தும் கண்டுகொள்ளாதிருந்தும் வருகிற ஆதிக்க சாதிநலன் பேணுவோர், தலித் மக்கள் சாதியாக அணி திரள்வதைக் கண்டிக்க அருகதையற்றவர்களாவர் (ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைக் கட்டுரையில் இனித் தலித்மக்கள் என்றே சுட்டுவோம்). சாதிய இழிவுபடுத்தல்களுக்கு முடிவுகட்ட உருப்படியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் தமிழ்த்தேசியம் என்றவுடனே எல்லோரும் ஒன்றுபட்டிருப்பதான பொய்த்தோற்றத்தை ஏற்படுத்திவிட இயலாது. தமிழினத் தேசியத்துக்கு விரோதம் கொள்ளாமலே இலங்கை அரசுடன் தமது கோரிக்கைகள் நலங்கள் ஆகியவற்றுக்காக தொடர்பாடும் உரிமை தலித் மக்களுக்கு உண்டு. தமிழினத் தேசியம் அதனை அங்கீகரித்து, அவர்களது கோரிக்ககளைத் தாமும் அரவணைத்து செல்வதுசார்ந்த உரையாடல்களை அவர்களோடு மேற்கொள்ள வேண்டும்; அதைவிடுத்து ஆண்ட பரம்பரை அகம்பாவத்துடன் 'துரோகி' முத்திரை குத்தக் கிளம்பக்கூடாது.
அதெப்படி தலித் மக்களுக்கு அவ்வாறான தனித்துவ அடையாளத்தைக் கொடுக்க இயலும்? அவர்களும் தமிழ் மக்களுக்குள் அடங்குகிறவர்கள் தானே எனக் கேட்பதை உணர இயலுகிறது; ஆயினும், அவர்கள் தம்மைச் சமத்துவமாக நடத்த வேண்டும், கோயிலினுள் சென்று வழிபட வேண்டும் என்கிற எந்தவொரு கோரிக்கைக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடாத்தியே ஒவ்வொன்றாகப் பெற்றெடுத்து வருகிறார்கள். இன்று சாதிய இழிவுகள் பல ஒழிக்கப்பட்டுள்ளது என்றால், ஆயுதம் ஏந்திப் போராடிய அறுபதாம் ஆண்டுகளின் வரலாறுவரை சென்றே அவை சாதிக்கப்பட்டன. இன்றும் அவர்கள் 'அந்தப்பக்கம்' என்றே உயர்சாதியினரால் சுட்டப்படும் அடையாளம் முதல் பல்வேறு வேறுபாடுகளுக்குள் ஆட்படுத்தப்பட்டே வைக்கப்பட்டுள்ளனர். "அவையவையை வைக்கிற இடத்திலை வைக்கவேணும்" என்ற புகழ்பூத்த வாசகம் அடிப்படையில் சாதி உணர்வு சார்ந்தது என்பதையும், அது இன்னமும் ஒழிந்து போய்விடவில்லை என்பதையும் அறிவோம். சாதியொழிப்பு என்று சாதிச்சங்கம் சேர்வதால்தான் சாதி நீடிக்கிறது என்பவர்கள் உருப்படியாக சாதிகளிடையே புனிதம்-தீட்டு சார்ந்த கருத்தியல் இருப்பு முழுமைக்கும் எதிராகக் காத்திரமான பண்பாட்டு இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு தமிழ்த் தேசியம் செய்யும் பட்சத்தில் எவரும் சாதிச்சங்கத்தில் சேரப்போவதில்லையே.
இவ்வகையில் தலித் மக்களுக்கான தனித்துவக் கோரிக்கைகள் என்பவை இன்று நேற்று ஏற்பட்டனவல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் வட்டமேசை மாநாடு நடந்தபோது அம்பேத்கர் தலித்மக்களின் பிரதிநிதியாகக் குரல் கொடுப்பதை எதிர்த்த காந்தி, தலித்மக்களுக்கும் தானே பிரதிநிதி என்று வீம்புக்கு நின்றார். அம்பேத்கரது இரட்டை வாக்குரிமைக் கோரிக்கை அங்கே வெற்றிபெற்றது. தனக்கு தீராத அவமானத்தைத் தேடிய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி நடாத்தி, அம்பேத்கரின் அக்கோரிக்கையைக் கைவிடச் செய்யவேண்டியிருந்தது. ஆயினும் அனைத்துத் தலித் மக்களின் தலைவர் அம்பேத்கர் என்ற உண்மை வலியுறுத்தப்படுவதைக் காந்தியால் இல்லாதாக்க இயலவில்லை.
இரட்டைவாக்குரிமை அனுமதிக்கப்பட்டால் சாதியேற்றத்தாழ்வுகள் ஒழிந்துபோயிருக்கும் என்றில்லை என்றபோதிலும், தலித் மக்கள் இன்னும் வலிமையாகப் போராட வேண்டும் எனும் உண்மையைக் காந்தியின் நிலைப்பாடு முதல் இன்றைய ஆதிக்க சாதித் தேசியர்கள் வரை உணர்த்துவர் என்பதற்கான வரலாற்று உண்மையாகப் பதிவாகியுள்ளது. தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்தைத் தலைமைதாங்கிய காந்தியே இத்தகைய வரலாற்றுத்தவறை இழைத்தார் எனில், நாகரிகப் போலி வேச வெள்ளாள ஆதிக்கத் தமிழ்த் தேசியம் பேசுவோர் தலித்துகளுக்கு எதிராக எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொள்வர் என்பதைச் சொல்லத்தேவையில்லை. என்ன இருந்தாலும் காந்தி 'ஹரிஜனம்' என்ற மகுடம் சூட்டி, ஆலயப் பிரவேசப் போராட்டங்களை நடாத்தி, சாதியாதிக்க சக்திகளுக்கு தீராத தலையிடியை ஏற்படுத்தி, தலித் மக்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட வாய்ப்பளித்தவர்.
அன்றைய வரலாற்றுச் செல்நெறியின் பிரதான போக்காக ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுவது உடனடி அவசியப் பணி என்கிற வகையில் காந்தியின் தலைமையில் தலித் மக்களில் பெரும்பான்மையினர் நாற்பதுகளில் அணிதிரண்டபோது அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியையும் பொய்யாக்கிய நிலையில் அம்பேத்கர் மிகப்பெரும் தலித் தலைவர் ஆவது தொடரும் வரலாற்றுத் தேவையாக ஆனது. இது கவனிப்புக்குரிய வரலாற்றுப் படிப்பினை. தேசியம் தலித் கோரிக்கைகளை உள்வாங்கும்போது எதிர்த் தேசியம் இடைநிறுத்தப்பட இயலும்; அவ்வகையில் தலித்தேசியக் கோரிக்கை உள்ளிட்ட பிராமணல்லாத ஏனைய சாதித் தேசியங்களது கோரிக்கைகளையும் கையேற்ற காந்தி-நேரு ஆகியோரின் தாராளவாத அரைப் பிராமணியத் தேசியம் தலைமையேற்று இந்திய சுதந்திரத்தை சாத்தியமாக்க இயலுமாயிற்று.
பிராமணர் எனும் சமூக வர்க்கம் இந்தியா முழுமைக்குமான ஒரே சமூக சக்தி என்கிறவகையில் இவ்வகையிலான இந்தியத் தேசியம் (நாட்டுத் தேசியம்) நிதர்சனமானபோது தமிழ்நாட்டுக்கான (அன்றைய நிலையில் திராவிட நாடு என முன்வைக்கப்பட்டு, நடைமுறையூடாக தமிழினத் தேசியத்துக்கான) கோரிக்கை வரலாற்றுத் தேவையாக எழுச்சிகொண்டது. பிராமணிய எதிர்ப்பாக முனைப்படைந்த இந்த அணி தமிழ் ஆதிக்க சாதிகளது நலன் பேணுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும் தலித்தேசியக் குரல்களையும் இடைச் சாதிகளது குரல்களையும் முன்னெடுப்பவர்களாகக் காட்டிக்கொண்ட வகையில் பரந்த ஐக்கியமுன்னணியைக் கட்டியெழுப்பினர். அறுபதுகளின் பிற்கூறில் ஆட்சிய வென்றெடுத்து தொடர்ச்சியாக ஆட்சியாளர்களாக விளங்கியபோது எண்பதுகளில் இடைச் சாதியினர் அதிகாரத்தை வெற்றிகொள்ளும் வகையில் தி.மு.க. பிளவுற்றது. இடைச்சாதியினர் ஆதிக்கம் தலித்துகளுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்திய நிலையில், அம்பேத்கர் நூற்றாண்டும் வந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தலித் இயக்கம் தமிழகத்தில் எழுச்சி கொண்டது.
இலங்கையில் ஆங்கிலமயப்பட்ட கொவியா-வெள்ளாளக் கூட்டு ஆட்சிப்பங்கேற்ற நிலையில் ஏகாதிபத்தியம் சாதிய முரணையன்றி இன முரணைப் பிரித்தாளும் நோக்கத்துக்கான முரணாக வடிவமைத்த அரசியல் அரங்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் முரண் முனைப்படையலாயிற்று. சாதிவாதம் மேலாதிக்க சக்திக்குரியதாகாத நிலையில் சாதிமுரண் கூர்மையாக இருந்த யாழ்ப்பாணத்தில் முற்போக்கு செயற்பாட்டாளர்களான அனைத்து சாதியினரும் சாதியத்துக்கு எதிரான கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர். இந்த அவசியப்பணியில் தலித் அணிக்கான அமைப்பின் அவசியம் உணரப்பட்டு 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' கட்டியெழுப்பப்பட்டது. அது தொடங்கிய நாற்பதுகளிலிருந்து கொம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்கள் அங்கு செயற்பட ஆற்றுப்படுத்தியிருந்தது. அந்தவகையில் வெறும் சாதிவாத அமைப்பாக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான வலுவான அமைப்பாக அதனால் பங்களிக்க முடிந்தது. ஐம்பதுகளில்ருந்து, கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எம்.சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கிய போது வர்க்கப்பார்வையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டது. சிற்சில சாதியப் பிளவுகள் வெளிப்பட்டபோதிலும் பிரதான போக்கு தலித் தேசியம் எதிர்த்தேசியமாகப் பிளவுறாமல் சாதியெதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது.
அறுபதுகளில் இன்னும் கூர்மையான போராட்டங்களைச் சாதியத்துக்கு எதிராக முன்னெடுக்க ஏற்றதாக வரலாறு வளர்ச்சியுற்றநிலையில் அனைத்து சாதியினரும் அணிதிரண்ட அமைப்பான 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' தோற்றம்பெற்றது. இவ்வாறு தலித் தேசியம் முழு இலங்கைத் தேசியத்தின் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை இயக்கப்படுத்தியபோது, அதனுடன் ஐக்கியப்பட்டு தனது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியிருக்க வேண்டிய தமிழ்த்தேசியம் எதிர்ப்பு நிலையை எடுத்துக்கொண்டது. அவ்வாறு பிளவுபடுத்திய தமிழ்த் தேசியம் பிரிவினையை முன்வைத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் இன்றும் அதே வரலாற்றுத் தவறுகளை மேற்கொள்ள முற்படுகிறார்கள். இன்றைய நிலையில் சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளோடும் ஐக்கியப்பட்டு தமிழ்த்தேசியம் தனது சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டும். சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை; அதற்காக சிங்கள மக்கள் எல்லோருமே எதிரிகளல்ல. தம்மையும் வஞ்சிக்கும் பேரினவாதிகளுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட ஏற்றதாக தமிழ்த்தேசியத்தின் நடைமுறை அமையவேண்டும்.
மாறாக மேலாதிக்க சக்திகளுக்கு ஊடுருவலுக்கான வாய்ப்பாகப் பிரிவினைக் கோரிக்கையோடு சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்போமாயின் மேலும் அழிவுகளைச் சந்திப்போம். இதுவரையான தவறான அரசியல் மற்றும் யுத்தங்கள் கிழக்கை தமிழர்கள் பெரும்பான்மை எனும் இடத்திலிருந்து கைவிடுவதற்கு வழிகோலியது. இதனால் சிங்களத் தேசியம் வென்றதான மாயை சிங்கள மக்களைப் பேரினவாத சக்திகளுக்கு உடன்பட்டுப்போக வழியேற்படுத்தியபோதிலும், வளர்ந்துவரும் சமூக-பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகாரம்செலுத்தும் பேரினவாதக்கும்பலுடன் சிங்கள மக்கள் முரண்படுவதிலிருந்து தடுக்கும்வகையில் நீண்டகாலம் உதவப்போவதில்லை. முப்பதுவருட யுத்தசன்னதத்தை வளர்த்த இந்தியா (இதற்காக அர்ப்பணிப்போடு போராடிய சக்திகளின் பங்களிப்பு அந்த இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கான இரையாகும் வகையில்) பயன்படுத்திக்கொண்ட பின்னர் பதினாறுக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக இலங்கையை இந்தியா அடிமைகொண்டுள்ளது. ஆக, இலங்கையினுள் சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களை அடக்கி மேலாதிக்கம் செய்யும் அதேகாலத்தில் இந்திய மேலாதிக்கத்தால் முழு நாடும் ஆட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு சிங்களத் தேசிய முற்போக்கு சக்திகள் செயற்படுவதற்கு முன்வரவேண்டும். தமிழ்த் தேசியம் தலித்தேசிய நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு அதன் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் மதித்தவாறு செயற்படுகிற அதேவேளை, இலங்கைத் தேசியத்தின் நிதர்சனத்தை ஏற்றவாறு பிரிந்து செல்வதல்லாத சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். இவை குறித்து இரட்டைத் தேசியம் குறித்த பல கட்டுரைகளிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உணர்வுடன் மக்கள் விடுதலை எனும் இலக்கு சார்ந்ததாக இலங்கைத் தேசியம் அனைத்து தேசிய இனங்களையும் சமத்துவமாக நடாத்துவதுபோன்றே சாதிய ஒடுக்குமுறையின் அனைத்துவடிவங்களையும் தகர்க்கும் இலட்சியத்தோடு தமிழினத் தேசியத்தின் சுயநிர்ணயப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கைத் தேசியத்தினின்றும் வேறுபடுத்தித் தனிநாடாக ஆக்கும் எத்தனம் மேலாதிக்க சக்திகளுக்கு உதவுவதாகிவிடும் என்பதான அதே பொருளில், தமிழினத் தேசியத்தைப் பலவீனப்படுத்தாதவகையில் தலித் தேசியக் கோரிக்கைகளும் செயற்பாடுகளும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்துவோம். சிங்கள முற்போக்கு சக்திகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும்போது பிரிவினைவாதம் வலுப்படுவது போலவே, இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் தலித் தேசியத்தை நிராகரிக்கும்போது தலித்தியவாதம்(சாதிவாதம்) மேலோங்க வழியேற்படுத்துகிறார்கள் (ஆதிக்க சாதிக்கான 'ஆத்மீகப்' போலி முகமூடி அணிந்த சாதிவாதம் எப்படி முகங்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தலித் விடுதலையாளர்கள் அறிவர்; ஆயினும் இந்த முற்போக்காளராய் முன்வந்து 'சாதிபேதம் இல்லாதொழிந்த பின்னும் நீங்கள் ஏன் சாதிபற்றிப் பேசுகிறீர்கள்' என்கிற நட்புசக்திகளிடமிருந்து காக்கத்தான் எந்தக்கடவுளும் முன்வருகிறார்களில்லை). இரட்டைத் தேசியக் கோட்பாடு எமக்கான செயற்பாட்டுக் கருத்தியல் என்கிறவகையில் இப்பிரச்சனை குறித்து விளக்கம்பெற உதவ இயலும்.
இந்தக்கட்டுரையின் பேசுபொருளுக்கு அமைவாக இரட்டைத் தேசியக் கோட்பாடு தொடர்பான ஐந்து அம்சங்களைச் சுருக்கமாக முன்வைப்பது அவசியமாயுள்ளது. அவை:

  -சமூக வர்க்க ஆதிக்கமும் கருத்தியலும்-
ஐரோப்பாவில் போல வர்க்கப்பிளவுற்ற சமூக அமைப்பல்ல எம்முடையது. விவசாய வாய்ப்புப் பெற்ற மருதத் திணைக்குரிய இனமரபுக்குழுக்கள் ஆதிக்க சாதியான வெள்ளாளராக தம்மை ஆக்கி வெல்லப்பட்ட இனமரபுக்குழுக்களை இடைச்சாதிகளாயும் தலித்துக்களாயும் ஆக்கிக்கொண்ட சமூகமுறைமை எமக்கானது. இதற்கு ஏற்புடையவர்களாக்க வலுவான கருத்தியல் அவசியம் என்கிறவகையில் பிராமணர் என்கிற சாதி அவசியப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேலாதிக்கம்பெற்ற சாதியென வெள்ளாளர், நாயர், நாயுடு  (இலங்கையில் கொவியா) என வெவ்வேறு சாதிகள் இருந்தபோதிலும் கருத்தியலுக்கான சாதியான பிராமணர் முழு இந்தியாவுக்குமானவர்களாக இருக்க முடிந்தது (இலங்கையில் ஆட்சியாளர்களுடன் பிராமணர் இருந்தபோதிலும் ஒரு சமூக சக்தியாக ஆதிக்கம் பெற இயலவில்லை; பௌத்தத்துக்கு நேரடியாக பிராமணர் பங்களிப்பு இருந்ததைக் கடந்து பௌத்த இலக்கியங்கள் வாயிலாக சாதிவாழ்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது). சாதி ஏற்றத் தாழ்வுடன் ஆதிக்கசாதியின் உடைமையாளர்கள் பிறரைச் சுரண்ட ஏற்ற கருத்தியலை முன்வைக்கும் பிராமணியம், அமைப்பு மாற்றங்களுக்கு ஏற்றதாக மாறுபடும் கருத்தியல்களையும் காலந்தோறும் வடிவமைத்து வந்துள்ளது.

2. சமூகமாற்றத்துக்கு பண்பாட்டுப்புரட்சி-
கருத்தியல் வாயிலாக  மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்கிற  சமூக வர்க்கமான ஆளும் சாதியை வீழ்த்திப் புதிய உற்பத்திமுறைக்கான மற்றொரு சாதி ஆதிக்கத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் கருத்தியல் மாற்றத்தை முன்னதாக ஏற்படுத்த வேண்டும். மூவேந்தர் ஆட்சி சாத்தியப்பட்ட வீரயுக உடமையாளர்களான கிழார்கள் தமது ஆதிக்கத்தோடு பிராமண ஆதிக்கத்துக்கும் வழியேற்படுத்தினர். பிராமணியத்தை வீழ்த்தி வைசியர்களைப் புனிதர்களாய்க் காட்டிய பௌத்த சமண எழுச்சி அறநெறிக்காலத்தை சாத்தியமாக்கியது. பக்திப்பேரியக்கம் வெள்ளாளரைப் புனிதப்படுத்தும் கருத்தியலுடன் பிராமணியத்தை வளர்த்து பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்து நிலப்பிரபுத்துவ அமைப்பு வெற்றிகொள்ளப்பட்டது. முதலாளித்துவ மாற்றியமைத்தலிலும் காந்தியின் ஆன்மீக வடிவம் பெற்ற போராட்ட முறைகள் முதல் தமித்தேசியத்துக்கான தி.மு.க.வின் பண்பாட்டு இயக்கங்கள் வரையானவை கவனங்கொள்ளப்பட வேண்டியன.

3. ஏகாதிபத்தியம் - ஒடுக்கப்பட்ட தேசம்:
நவீன முதலாளித்துவ வரலாறு இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய அமைப்பை நிதர்சனமாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோசலிசம் வென்றெடுக்கப்படலாம் என மார்க்ஸ் நம்பியதைப் புதிய அமைப்பு முறை வளர்த்தெடுத்து சிந்திக்குமாறு கோரியது. ஒடுக்கப்பட்ட தேசங்களை ஐக்கியப்படுத்திய ருஸ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அப்பால் ஏனையவை அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தேசங்களின் புரட்சி வாயிலாகவே சோசலிசம் கட்டியெழுப்பப்பட்ட நிதர்சனத்தைக் கவனம்கொள்ள வேண்டும். சமூக வர்க்கமாக ஒடுக்கி சுரண்டலை மேற்கொண்டு சமூக மாற்றங்களைக் கண்டுவந்த எமது அனுபவங்களிலிருந்து இதற்கான கோட்பாட்டு உருவாக்கம் சாத்தியமாக இயலும். இரட்டைத் தேசியக் கோட்பாட்டின் விரிவாக்கம் இதற்குரியது எனக் காணலாம். இதுகுறித்துப் பின்னால் பார்க்கலாம். ஒருவிடயம் மட்டும் இங்கு வலியுறுத்த அவசியமுள்ளது. ஏகாதிபத்தியம் என்பது மூலதனத்தை ஏற்றுமதி செய்து ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சுரண்டுவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்கிய ஆதிக்க சாதிகள் பிராமணியம் என்கிற பண்பாட்டு ஏகாதிபத்தியமாகும் வரலாறு எம்மத்தியில் முன்னரே நடந்தேறியது. தேசிய வாழ்முறை இன்றைய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கான அரசியல் வடிவம் என்றபோதிலும் சாதிமுறையில் வெளிப்பட்ட இந்தப்பண்பு சாதிகளை முந்திய வடிவத்துக்குரிய தேசியமாகக் கொள்ள இயலும் என்பதை மறுக்க இயலாது. வேறுவார்த்தைகளில், சாதிகள் ஒவ்வொன்றும் ஒருவகையில் தேசம் போன்ற அமைப்பை நவீன வரலாற்றில் வடிவம் பெற இடமுள்ளதாக கூறலாம். இந்தச் சாதித் தேசம் பௌதிகவடிவிலான நிலத் தொடர்பு உடையதல்ல என்றபோதிலும், சாதியமனம் எனும் அரூபமான 'நிலத்' தொடர்பைக்கொண்டுள்ளது.

4. புதிய பண்பாடு-
ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும்போது ஆதிக்க சாதிகள் தலைமையேற்கும் நிலையில் தலித் கோரிக்கை (அம்பேத்கர்) அல்லது பிராந்திய ஆளும் சாதித் தேசியம் (பெரியார்) என்பன முறையே வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும்  எதிர்த் தேசியமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. அம்பேத்காரியம், பெரியாரியம் என்பன அத்தகைய எதிர்த்தேசியங்களாகும். பாட்டாளி வர்க்க நோக்கில் முன்னெடுக்கப்படும் மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் புதியபண்பாடு எனும் வடிவம் கொள்ளும். ஆதிக்கசாதித்தேசியம் மரபு சார்ந்த பண்பாட்டியத்தை முன்னெடுக்கும்போது பிராமணிய எதிர்ப்புடையன எதிர்ப்பண்பாட்டியத்தை முன்னிறுத்தின. இது மரபுப் பண்பாட்டை முழுமையாக நிராகரிக்கும் நிலைப்பாடு. ஆதிக்க எதிர்ப்பு இதன் அடிப்படையாக இருந்தபோதிலும் பிற மேலாதிக்கத்துக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பாக சொந்த வேர்களைத் தகர்க்கும் தவறு இதன்பால் உண்டு. புதிய பண்பாட்டியம் ஆதிக்க எதிர்ப்பில் எதிர்ப்பண்பாட்டியக் கூறை உள்வாங்கும் அதேவேளை, அவசியமான மக்கள் பங்கேற்பு சர்ந்த மரபுப்பண்பாட்டின் ஏற்புடையவற்றைக் கையேற்கும். அனைத்துவகை மேலாதிக்கங்களையும் முறியடித்து முழுமையான விடுதலையைச் சாத்தியமாக்குவது புதியபண்பாட்டியம்.

5. மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்-
தேசவிடுதலையூடாக சோசலிசத்தை வென்றெடுக்கிற வரலாற்றுக்கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை மாஒ சேதுங் சிந்தனை மக்கள் ஜனநாயக சவாதிகாரம் என விருத்தி செய்து பிரயோகித்தது. ஆயினும் தொடர்ந்த வரலாற்றுப்போக்கின் நெருக்கடியில் ஒருபின்வாங்கல் நேர்ந்துள்ளது. இதனை தேசியவிடுதலை வாயிலாக சோசலிசத்தை வெற்றிகொள்ளல் எனும் புதிய மார்க்சியக் கட்டத்துக்குரிய கோட்பாட்டு நிலையில் மீளக் கட்டமைப்பது அவசியமாகும்.
ஆக, மேலாதிக்கம் ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கு எதிராக நாட்டுத்தேசியம் சோசலிசத்தை வென்றெடுக்கும் இலக்கோடு மக்களை அணிதிரட்ட வாய்ப்புண்டு. அதற்கான கருத்தியல் அடிப்படையில் எமக்கான கோட்பாட்டை வகுக்கவேண்டும். அதன்போது ஒவ்வொரு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் கவனம்கொள்ளப்பட வேண்டும். இந்த இனத்தேசியங்களின் மத்தியில் பண்பாட்டு ஏகாதிபத்தியத்துக்கு ஆட்பட்ட சாதித் தேசியங்களது சுயநிர்ணயம் அதற்குரிய வடிவத்தில் அங்கீகரிக்கப்படுவது அவசியம்.
2013-நன்றி குவர்னிக்கா

Tuesday, January 29, 2013

















இறுதி யுத்தம்… முள்ளிவாய்க்கால்… முள்வேலி முகாம்



யோ.கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு” ஒரு எனும் சிறுகதைத் தொகுதி குறித்து விமர்சனக் கருத்துரை ஒன்றை முன்வைக்க முயலும்போது அவருடனான உரையாடல் தருணங்கள் இடைவெட்டுவதைத் தவிர்க்க இயலாதோ என்று சந்தேகம் எழுகிறது. படைப்பு ஒன்றை, ஆசிரியர் பற்றிய முன்னனுமானங்கள் ஏதுமின்றி அணுகுவது அவசியம் என்பது பெரும்பாலும் சரியானதுதான். இந்தப் பதிவைக் கூடியவரை ஆசிரியரைக் கடந்து சிறுகதைகளை மட்டுமே முன்னிறுத்தி அலசுவதற்கு முயல்வேன். பிரதி வெளிப்படுத்தும் ஆசிரியர் அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்கலாம்.
தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக மற்றும் தார்மீக அடித்தளத்தை பலப்படுத்துவதோடு, தமிழர்களின் மீட்சிக்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தைத் துரிதப்படுத்த யோ.கர்ணன் போன்றவர்களது முழுமையான யுத்தசாட்சியமே விஞ்ஞானபூர்வமானதாகவும், அனைத்துலக கவர்ச்சிமிக்கதாகவும் அமையும் எனக்கூறும் நிலாந்தன் இவ்வாறு கூறியிருந்தார்: “கர்ணன் நாலாங்கட்ட ஈழப்போரின் யுத்த சாட்சிகளில் ஒருவர். நாலாங்கட்ட ஈழப்போர் உயிருள்ள வெளிச்சாட்சிகள் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. சக்திமிக்க அரசுகளின் சற்றலைற் கமராக்களைத் தவிர வேறெந்த வெளிச்சாட்சிகளும் அங்கீகரிக்கவில்லை. மற்றவையெல்லாம் யுத்தகளத்தில் நின்ற உட்சாட்சிகளே. இதில் ஒரு தரப்பு வெற்றிக்களிப்பினால் தன்னிலை மறந்து தனது செயல்களைத் தானே தனது கைபேசி கமராக்களால் பதிந்து வைத்திருக்கிறது. மற்றத்தரப்பு தியாகிகளும், கைதிகளும், அகதிகளும் ஆகியது. இவர்களின் மத்தியிலிருந்தே கர்ணன் உருவாகினார். பெரும்போக்காகவுள்ள யுத்தசாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால், ஒரு முழுமையான யுத்தசாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்.”
மேற்படி நிலாந்தனின் குறிப்பு நூலின் பின்னட்டையில் இடம்பெற்றுள்ளது. வடலி வெளியீடான இந்நூல் ஆசிரியர்-படைப்பாக்கம் குறித்து இத்தகவலை மட்டுமே தந்துள்ளது. மற்றும்படி நேரடியாகவே சிறுகதைகளுக்குள் பிரவேசிக்க ஏற்றதாகவே நூல் உள்ளது. என்வரையில், கர்ணனைச் சந்திப்பதற்கு முன்னரே அவரது சிறுகதைகளை அவ்வப்போது வெளியான சஞ்சிகைகளில் படித்தபோது, கள அனுபவங்களோடு எழுதப்பட்டது குறித்த தகவலையும் இணைத்து வாசித்திருக்கிறேன். வெளிச்சாட்சிகள் இறுதி யுத்தத்தில் இடம்பெற அனுமதிக்கப்படாதது பேரினவாத ஆட்சியாளர் கைங்கரியம் என்றால், கள அனுபவங்கள் மக்கள் நலநாட்டத்தோடு வெளிவர ஏற்ற சாட்சிகள் இல்லாது ஆக்கப்பட்டது, தலைமையேற்ற சக்தியின் பாசிச நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. தமிழ்த் தேசியம் என்பதாக ஆதிக்கவாத நோக்கு மட்டுமே பேசுபொருளாக உள்ள ஈழத் தமிழ்ச் சூழலில் மக்கள் விடுதலை உணர்வோடு இணைந்த தேசிய இனத்துக்கான சுயநிர்ணயக் கோரிக்கையைக் கேட்பது அருந்தல். அத்தகைய மிகக் குறைவாயே உள்ள குரலில் ஒன்றாக கர்ணனின் இந்தச் ‘சாட்சியம்’ அமைந்துள்ளது.
கள அனுபவங்கள் என்ற பேரில் வலதுசாரிப் பிற்போக்கு நிலைப்பட்ட பதிவுகள் வெளிப்படும் தமிழ்ப் பாசிசம் ஆளும்போது அதற்குத் துதிபாடி பேரினவாதம் மேலாண்மை பெற்ற நிலையில் புலிகளை வரிக்குவரி தாக்கும் அனுபவமீட்புகளும் வந்தபடிதான். வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்றில்லாமல் உண்மையான விடுதலை நாட்டத்தோடு போராட்டத்தில் இணைந்து, திசை கெட்டழியும் போக்கில் செயற்பாடுகள் தறிகெட்டுப்போவதைக் கண்டு ஆதங்கப்பட்டு, வீழ்ச்சியை மறுமதிப்பீடு செய்ய முனையும் மனப்பாங்கு கைவரப்பெற்ற படைப்புள்ளம் ஒன்றே சரியான ஆக்கங்களை வெளிப்படுத்த இயலும்.
இந்தச் சமகாலத்தில் இத்தகைய ஆரோக்கியமான விமர்சன நிலைப்பட்ட வேறொரு சிறுகதைத் தொகுதி மற்றும் நாவல் என இரு படைப்பாளிகளைப் படிக்க முடிந்துள்ளது. அவைகுறித்து பேசுமுன்னர் கர்ணன் பற்றிப் பேச அவசியம் உள்ளது. மிக நெருக்கமான அனுபவ எல்லையைத் தொட்டமையும் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் தனது கருத்தியலை விருத்தி செய்யும் போக்கில் முன்னேறுவதையும் இவரிடம் அதிகமாக காண இயலுமாயுள்ளமையால் இவரது “சேகுவேரா இருந்த வீடு” எனும் சிறுகதைத் தொகுப்புக் குறித்து சில வார்த்தைகள். இந்தத் தலைப்புக் கதை ‘தோழர்களை’ போராளிகளாக தமிழ்த் தேசிய வரலாறு பெற்றிருந்த இருபத்தேழு வருடங்களுக்கு முந்திய வாழ்க்கை பெற்றுவந்த மாற்றங்களைக் கூறுவது. தம்பி சேகுவேரா என்ற பேரோடு இயக்கமானதால் இழந்த வீட்டை இறுதிவரை மீட்கமுடியாத அண்ணனின் குடும்பம் படும் பாடுகள் அந்தக்கதை. சீதனமாக அந்த வீட்டைப் பெறவேண்டியவள் காணாமல் போவது எமது வரலாற்றின் குறியீடுமாகும்.
அந்தக் கதையை அடுத்து இடம்பெறும் “ஐயனின் எஸ்.எல்.ஆர்.” தோழர்களில் ஒரு பிரிவு அரசு சார்பு இயக்கமாக சமாதான காலத்தில் யாழ் மண்ணில் இருந்த சூழலுக்குரியது. முன்னர் புலிப் போராளியைக் காதலித்து, இதே இயக்கத்தால் கைதுசெய்து ‘வைத்திருக்கப்பட்டு’ விடுதலையான பின் வெளிநாடு சென்று 15 ஆண்டுகளின் பின், இந்தச் சமாதான காலத்தில் ஊர்வந்த பெண், ‘தோழர்’ போராளியோடு உரையாடுவது உச்சக் கட்டம். அந்தத் தோழர் தனது தலைமை திருமணமே செய்யாது மக்களுக்காக வாழ்வது பற்றிப் பேசும்போது அவள் சொல்வாள், நான் மட்டும் அப்போது அபோஸன் செய்யாதுபோனால் உன் தலைவரின் வாரிசு என் வயிற்றில் வளர்ந்திருக்கும் என்று. கால ஓட்டத்தில் போராட்டப் போக்கு மாற்றங்களின் நிதர்சனத்தை உள்ளவாறே சொல்லிச் செல்வதற்கு அப்பால், அரசியலற்று எரிந்த கட்சி – எரியாத கட்சி என்கிற மனப்பாங்கில் புலிகளால் விரட்டப்பட்டு அரசோடு இணைய நிர்ப்பந்திக்கப்பட்ட இயக்கத்தை ‘ஒட்டுக்குழு’ என அடையாளப்படுத்த முற்படுகிறவர்களிலிருந்து வேறுபடுகிற அதேவேளை, அவர்களின் புனிதப்படுத்தல் முயற்சியையும் இவ்வகையில் அம்பலப்படுத்துகிறார் இக்கதைசொல்லி.
அதேவேளை போராட்டத்தின் அனைத்தையுமே புனிதப்படுத்தும் தூய தமிழீழத் தேசியர்களின் மாயக்கற்பனைகளையும் தகர்த்து யதார்த்த இருப்பை உள்ளது உள்ளபடி, இரத்தமும் சதையுமாகக் காட்டுகிறார். சேறும் சகதியும், வேர்வையும் வெறுப்புகளும், வாழத்துடிக்கும் அவதிகளும் மரண ஓலங்களும், இலட்சிய உந்துதலும் காட்டிக்கொடுப்புகளும் என அனைத்துப் பக்கங்களையும் உண்மை மனிதர்களின் முகங்கள் வாயிலாகவே காட்டிச் செல்கிறது “சேகுவேரா இருந்த வீடு”. மேற்குறித்த இரு கதைகளையும் அடுத்ததும், இறுதிக்கதையுமான “இரண்டாவது தலைவர்” எனும் சிறுகதை இது தொடர்பில் கவனிப்புக்குரியது. இயக்கத்தில் இரண்டாவது தலைவர் யார் என நச்சரித்த இளம் போராளி, அரசியல் ‘மாஸ்ட்டரால்’ கடுமையாக எச்சரிக்கப்படுவான். அவன் கடற்போராளியாகி உயர்நிலை அடைந்தபோதும் இரண்டாம் தலைவர் பற்றிய கேள்விகளோடுதான் தாய்லாந்து ஆயுதக்கொள்வனவுக்குச் சென்ற காலத்தில் சர்வதேசத்தொடர்பில் இயங்கும் கே.பி. என்ற இரண்டாம் தலைவரைச் சந்திக்கிறான். எல்லாம் முடிந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்திலிருந்து வெளியேறிய நாளில் வந்து வாழ்த்துத் தெரிவித்த அடையாளம் மறந்த அதே இரண்டாம் தலைவரை அறியும்போது அவன் மட்டுமன்றி வாசக உள்ளங்களும் அதிர்ச்சிக்குள்ளாகும்.
ஆதிக்கவாத தமிழ்த் தேசியத்தின் இன்னொரு முகம் இது. கே.பி. என்கிற தனியாளின் ‘துரோகம்’, அல்லது அதை அம்பலப்படுத்த அவசியமற்ற காலப்பொருத்தமற்ற கதைசொல்லியின் முயற்சி என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், அரசியலற்ற வெறும் யுத்த சன்னதத்தின் அவல முடிவு இது என்பதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு விருப்பமற்று, நாம் விரும்பாத விடயம் உண்மையேயாயினும் நாம் கவனங்கொள்ளப்போவதில்லை என்கிற எமது பொதுப்புத்தி பட்டும் தெளியாத மனப்பாங்கைக் காட்டுவது. ஈழப்போராட்டம் முழுமையிலுமே இத்தகைய தீக்கோழி மனோபாவம் எம்மிடம் செயற்பட்டதன் பேறு இன்றைய அவல முடிவுக்குக் காரணம் என்பதை உணர்வது அவசியம். இந்த மனக்கோளாறுடன் கர்ணனின் கதைகளைப் படிப்பவர்கள் அசூசைக்குள்ளாவது தவிர்க்க இயலாததே. உண்மையைக் காண அச்சமற்று, கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்துக்கான மார்க்கத்தைக் கண்டறிய முயல்கிறவர்களுக்கு இக்கதைத் தொகுதி மிகப் பெரும் பொக்கிசமாய்த் தெரியும். சிறிய நிலப்பரப்பில் சிக்குண்டு கொடுக்குப்பிடிக்குளிருந்து மீழத்துடித்த இறுதிக்கணத்தில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் தவிப்புகளும், மனிதம் பேண முயலும் கணங்களும், இலட்சியப்பற்றும் எனப் பல்வேறு தருணங்கள் இங்கு பேசுபொருளாகியுள்ளன.
“திரும்பி வந்தவன்” என்கிற முதல் கதை, இயக்கத்துக்குப் போய், இறுதிக்கட்டத்தையும் கண்டு புனர்வாழ்வுபெற்றுத்திரும்பிய போராளிக்கு திருமணப் பேச்சின் சலனம் தனது ஆண்மைச் சாத்தியத்தைப் பயிற்சிபெற வழிப்படுத்துவதைக் கூறுகிறது. வவுனியாவில் அதன்பொருட்டுவந்த பாலியல் தொழிலாளிப் பெண், தனது தாயை அத்தொழில் காரணமாக இயக்கப் போராளியாக இருந்தபோது அவன் மரணதண்டனைக்குள்ளாக்கியதைக் கூறி, விட்டுவிடுபடி கேட்டுக்கொண்டதில் அதிர்ச்சிக்குள்ளாவதைக் காட்டும். மூன்றாவது கதை, “திரும்பி வந்தவள்”. ஆணாதிக்க சமூகத்தில் அந்தப் போராளிக்கு இருந்த வாய்ப்புக்கு நேர்மாறாக அமைந்துள்ளது திரும்பி வந்தவளின் கதை. அவளைக் காதலித்தவன், லண்டனில் புலிக்கொடி ஏந்திச் சர்வதேசங்களுக்கு எல்லாம் காட்டும் போராட்டத்தை முன்னணியில் நின்று நிகழ்த்தியபோதிலும், இயக்கத்திலும் இராணுவ முகாமிலும் இருந்தவளைத் திருமணம் செய்ய முன்வராததைக் கண்ணீரோடு ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதைக் காட்டும். அவளது கண்ணீர், லண்டன் போராட்டத்தின் பத்திரிகைப் படத்திலுள்ள புலிக்கொடியைக் கரைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பேப்பருடனுள்ள அவளது உணர்வுகளை முழுதாகப் புரிந்து கொள்ளும் சிறுவன் பார்வையில் நகரும் கதை, அண்ணன் அவளை ஏற்க மறுக்கும் நிதர்சனம் குறித்த விளக்கம் முழுமை பெறாத தவிப்பைக் காட்டுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் ஒடுக்குமுறையின் அடிப்படை தொடர்வதைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருகதைகளும் அமைந்துள்ளன.
“தமிழ்க் கதை” அகதிமுகாம் அவலத்தை மட்டுமல்லாமல், இனக் குரோதத்துக்கு அப்பாலான தந்தையாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் பதிலடியைக் காட்டும்; தாயின் மரணம், தெரியாத சிறுமியின் மரணம் என்ற கொடூரங்களோடு இருப்பிடம் திரும்புகிறவனை “அரிசி” கிழையும் அக்காவின் இருப்பு நாட்டம் வாழ்க்கைக்கு அழைப்பதாக அமையும். “கதைகதையாம் காரணமாம்” விசாரணையாளரிடம் பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்படும் போராளியைக் காட்டும். “வேதாளத்திற்குச் சொன்ன கதை” அத்தகைய விசாரணையில் புதைக்கப்பட்ட இயக்கப் பணத்தைப் பங்குபோடக் கேட்கும் தேசபக்த விசாரணையாளனைக் காட்டுவது. “சீட்டாட்டம்” அரசியலற்ற இயக்க வங்குரோத்தைப் பொதுமகன் பார்வையில் காட்டும். “சோசலிசம்” அதை இன்னொரு வடிவில் பேசும். “பாவமன்னிப்பு” சகபோராளிகளைக் காக்கத் தன்னை அர்ப்பணித்த உயர் பண்பாளனைக் காட்டும். “பாலையடிச் சித்தர்” வாய்ச் சவடால் வீரரின் சரணடைவையும், போராளியின் நிதர்சனத்துக்கு திரும்பும் நிர்ப்பந்தங்களையும் பேசும்.
பதின்மூன்று கதைகளில் இரண்டு தவிர்ந்து ஏனையவை இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும் முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள்ளான மாட்டுப்படலையுமே பேசுகின்றன. போராளியாக இருந்து இவற்றுக்குள் உள்வாங்கப்படுவதைக் காட்டுவது சொந்த அனுபவ எல்லைக்குட்படுவதால் இயல்பாயமைவதாய் விளங்கத்தக்கது. மாறாக, போராளிகளை மக்கள் முகங்கொண்டவாறும், மக்கள் இறுதியுத்த தருணங்களை அனுபவித்த வகைமையும் இயல்புகுன்றாமல் சித்திரிக்கப்பட்டமை விதந்துரைக்கத்தக்க வகையில் வடிக்கப்பட்டுள்ளது. அதீத இலட்சியம் பேசியவர், இயக்கத்துக்கு ஆள் பிடித்தவர் எல்லாம் எந்தக் கூச்சநாச்சமுமின்றி சரணடையப் போவதைக் கண்டு அதிர்வுக்குள்ளாகும் போராளிகளின் செத்துப்போகாத போர்க்குணம் ஆங்காங்கே பதிவாகியுள்ளது. “இப்ப இவர் சாவதால் என்ன ஆகிவிடப் போகிறது” எனக் கணவன் உயிரைக் காக்க போராளியிடம் இரந்து நிற்கும் மனைவி, மரணப் பிடிக்குள் தவித்து ‘காப்பாற்றுங்கோ’ என்ற பெண் குரலில் தன் வாழ்வையும் தொடர நிர்ப்பந்திக்கப்படும் போராளி, தவிர்க்க இயலாமல் போர்க்குணம்மிக்கவரும் “விரும்பாமலே இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்டோம்” என விசாரணையில் ஒப்பிப்பது என்ற தருணங்கள் உயிர்ப்போடு வடிக்கப்பட்டுள்ளன. வறட்டுத்தனமான தந்தையை வஞ்சிக்கும் வகையில் இயக்கமெனக் கணவன் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெண் சிங்களப் படையினரோடு உறவாடுவது வெறும் அதிர்ச்சிப் பாத்திரம் மட்டுமல்ல, அவதிவாழ்வின் இன்னொரு மறுபாதி.
எரிந்த கட்சி – எரியாத கட்சி (போலியான மக்கள் ஆதரவைப் பெற புலிப் புகழ் பாடுவது, வஞ்சிக்கப்பட்டோமே என்ற கோபத்தில் புலி எதிர்ப்பை மட்டும் பேசுவது) என்ற ஏதாயினும் ஓர் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது, வரலாற்றுச் செல்நெறியின் மிகப்பிரதான கணத்துக்கான பல்வேறு தருணங்களைக் கர்ணன் அற்புதமாகக் கலைத்துவப் படுத்தியுள்ளார். இவை சிறுகதைகள் என்ற போதிலும், பல்வேறு பாத்திரங்கள், வேறுபட்ட குணாம்சங்கள், எதிர்-எதிர் நலன் என்பன பேசு பொருளாக அமைகையில், குறித்த களமும் காலமும் காட்டப்படும் வகையில் நாவலுக்குரிய வாசிப்பு அனுபவத்துக்கு நெருங்கிவர வாய்ப்பைத் தருகிறது. இருப்பினும் நாவல் ஒன்றில் இவை ஒருங்கமைக்கப் படும்போது விரிந்த அனுபவச் செழுமையும் தேடலும் தெளிவும் சாத்தியமாகும். கர்ணனின் கருத்தியல் தெளிவைக் காணும்போது அவரால் அத்தகைய நாவல் ஒன்றைத் தர இயலும் என்றே தோன்றுகிறது. தருவார் என்றே நம்புவோம். அதற்கான புறச் சூழலை எமது பண்பாட்டு நகர்வு ஏற்படுத்துமா, குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் குறுகிய மனப்பாங்கால் எதிர்நிலையை ஏற்படுத்துவோமா என்ற கேள்வியும் எழாமலில்லை. எமது பங்குக்கு குறுங்குழு வாதங்களைத் தகர்த்துப் புதிய பண்பாட்டுத் தளத்தை வலுப்படுத்த இச்சவாலை முகங்கொடுக்க ஏற்ற களமாகவும் ஆக்கிக் கொள்ளலாமல்லவா? ஆக்குவோம்!
ந.இரவீந்திரன்
எதுவரை -இதழ் 08

Wednesday, January 2, 2013

கலந்துரையாடல் -இனி அவன்


கடந்த முழுமதி(போயா) தினமான 27.12.2012 இல் கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் காலை பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமா மூன்று திரைப்படங்கள் இயக்கியிருக்கிறார். இது எனது சந்திரன் (This is My Moon - 2001), இந்த வழியால் வாருங்கள் ( Come Along This Way - 2002) மற்றும் இனி அவன் ( Him, Here After - 2012) போன்றன..அசோக்க ஹந்தகம இயக்கத்தில் வெளியாகியிருந்த "இனி அவன்" தமிழ்த் திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கான அமர்வு அது. ச.சிவகுருநாதன், அனோமா இராஜகருணா (சினிமா நெறியாளர்) ஆகியோர் ஏற்பாட்டாளர்கள். நிகழ்ச்சி தமிழிலும் சிங்களத்திலும் உரைமாற்றம் செய்யப்படும் எனக்குறிப்பிட்டவாறே கணிசமாக இரு மொழியினரும் கலந்துகொண்டனர்(இந்நிகழ்வுக்குரிய கனதியில்). சமகாலத் தமிழின் கணிப்புக்குரிய மூத்த திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் தலைமையில் மிக ஆரோக்கியமாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக அசோக்க ஹந்தகம இத்திரைப்படத்தை எடுத்த சூழலை விளக்கினார். சிங்களத்தில் ஏற்கனவே தான் முன்னெடுத்த சினிமா-நாடக-தொலைக்காட்சித்தொடர் என்பன வாயிலாக எதிர்னோக்கிய கண்டன விமர்சனங்களைக் கூறினார். இலங்கை சிங்களவர்களுக்கு பௌத்தத்தைப் பாதுகாக்க புத்தரால் பணிக்கப்பட்ட புண்ணியபூமி என்ற ஐதீகத்தைப் பாலூட்டும் பருவம் முதல் ஊட்டி, சமகால அரசியல் முன்னெடுப்புகளினூடே ஏனைய இனத்தவர்களால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என வளர்க்கப்பட்டு வருகிறவர்களிடம், மாற்று உரையாடலை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளக்கூடிய இடர்ப்பாடே இது. இது பல்லின-பல்கலாசார நாடு என்பதை உணர்த்த முற்படுகிறவர்களே ஓரங்கட்டப்படுகையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயம் பற்றிப்பேச முனைவது தற்கொலைக்கு சமன் என்பதைச் சொல்லத்தேவையில்லை. அதன்பேறாக காத்திரமான முறையில் சுயநிர்ணயம் குறித்த உரையாடல் அங்கு இன்னமும் சாத்தியமற்றுள்ளது. அதனை ஏற்படுத்துவதற்கு முன் தேவையாக ஏனைய சிறு தேசிய இனங்களோடு உரையாடுவது அவசியமே.
எம்மிடம் உள்ள இனவாதம் அங்குள்ள இனவாதிகளை வலுப்படுத்தி, சிங்கள மக்களுக்கு நிதர்சன நிலையை விளக்க எந்த முயற்சியையும் எடுக்க இயலாத நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் தமிழர் மத்தியிலுள்ள இன்றைய சமூகப் பிரச்சனைகளில் எமக்குள்ளேயான ஏமாற்றும் சுரண்டலும் கபடங்களும் இனங்காட்டப்பட்டு, அவை மோதித் தகர்க்கப்படுவது ஊடாகவே ஏனைய அரசியல் நகர்வை நாட இயலும் என உணர்த்த முற்படுவதாக இந்தப் படைப்பாக்கம் அமைந்துள்ளது. முன்னாள் போராளி இயல்பு வாழ்வை அவாவியபோதிலும், அயல்சமூகமும் சமூகவிரோத சக்திகளும் அதற்கு இடம்தராத நெருக்கடி பேசுபொருள். அவனது முன்னாள் காதலி இயக்கத்துக்கு உள்வாங்கப்படாதிருக்க படுகிளவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்; அவசர மணாளன் ஒருநாள் உறவில் பிள்ளையைக் கையில் கொடுத்துவிட்டு மரணித்ததால், இப்போது அவனால் ஏற்கக்கூடிய நிலையில். அவனைத் தனது கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தமுனையும் சமூகவிரோதக் கனவான், பாதிப்புகள் பலவற்றைக் கண்ட பெண், போராட்டத்தை வைத்து வெளிநாட்டு வாழ்க்கைச் சுகபோகங்களையும் கண்டு இங்குள்ள வாய்ப்புகளையும் பெற முயலும் பச்சோந்தியாயுள்ள முன்னாள்போரளியின் பழைய சகபாடி என்போர் கதையின் ஏனைய பிரதான பாத்திரங்கள்.
நாயகனின் மனைவியாகிய பெண் இயல்பு வாழ்வுக்கு மாறுவதில் பெரிதாக எந்தப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கவில்லை; கொடுமைகளுக்காளான மற்றப் பெண் இன்னமும் வறுமையோடு. அவளது கணவனின் செக்குறுட்டி வேலைதான் இவனுக்கு கைமாறியது. அதனாலே தன் வாழ்வுக்கு இவன் பதில் சொல்ல வேண்டும் என இவனை நெருக்க, இவனோடு சமூக விரோதக் கும்பலின் அனைத்துவகைச் சுரண்டலுக்கும் உள்ளாகிறாள். மேற்படி கருத்தாடலில், இப்பெண்ணைக் காட்டுவது வாயிலாக தமிழ்ப் பெண்களெல்லாம் சோரம்போய் வாழ முற்படுபவர்கள் எனக் காட்ட முற்படுகிறீர்களா எனக் கேட்கப்பட்டமை ஆச்சரியமாக இருந்தது. வகைமாதிரிப் பாத்திரங்களில் உள்ள அளவில் இது காட்டப்பட்டதில் எந்தத் தப்புமில்லை.
அவ்வாறே முன்னாள் போராளியான நாயகன் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியூடாக, சிங்களப் பேரினவாத சக்திகள் முன்னிறுத்தும் மீண்டும் புலி அச்சுறுத்தல் வரலாம் என்பதை நியாயப்படுத்த முயல்கிறீர்களா என்றெழுப்பப்பட்ட கேள்வியும் நியாயமானதாய்ப்படவில்லை. கூடியவரை இயல்பு வாழ்வை அவாவி, அதற்கு சொந்தச் சமூகமே தடையாகும்போது அந்தத் துப்பாக்கியைத் தன் சொந்தத் தேவைக்காக எடுக்க முற்படுவது மட்டுமே காட்டப்பட்டது. சமூக விரோத நடத்தைக்கு உள்ளாக்கப்படுகையிலும் அதனை அவன் நினைவுகொள்ளவில்லை. வேறு எந்த அரசியல் உரையாடல்களும் பேசப்படவில்லை. தமிழ் மக்கள் இந்த அரசியல் பிரச்சனையை முற்றாகக் கைவிட்டு இயல்பு வாழ்வை முழு அளவில் விரும்புகையில் எதிர்நோக்கும் பிரச்சனையே பேசப்படுகிறது. ஒருவகையில் இனப்பிரச்சனையின் இருப்புக்கான அடிப்படையைச் சிங்கள முற்போக்கு சக்திகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள் என்ற குறைபாடுதான் இங்கே வெளிப்படுகிறதே அல்லாமல், மீண்டும் ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதம் எழலாம் என்ற எந்த அடையாளமும் காட்சிப்பட்டிருக்கவில்லை.
தமிழ் முற்போக்கு சக்திகளும் இப்பிரச்சனைகளைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடு அணுகுவதையே இது காட்டியுள்ளது. நாம் எம்மத்தியிலான பிற்போக்கு வலதுசாரி பாசிச இனவாதிகளிடமிருந்து தமிழ்மக்களை மீட்டு, சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதுகுறித்த முழுமையான புரிதல் கொள்ளாதபோதிலும் அதனைப் புரிந்துகொண்டு அதனைச் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய சிங்கள முற்போக்கு சக்திகள் மேற்கிளம்பிவருகின்றமையை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் தமிழ்-முஸ்லிம்-சிங்கள கருத்தியலாளர்கள் கொண்டிருந்தபோதும், ஆரோக்கியமான கருத்தாடலில் பொதுநோக்கில் ஒன்றுபடக் களம் உள்ளது என்பதை இந்தக்கருத்தாடல் எடுத்துக்காட்டியிருந்தது. தலைமையேற்ற கே.எஸ்.சிவகுமாரன் இதுகுறித்து நியாயமான பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். அவரும் ஏற்பாட்டளரான சிவகுருநாதனும் இதன்பொருட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்கள். நடிகர்கள் : இத்திரைப்படத்தில் இலங்கை நடிகர்களான நிரஞ்சனி சண்முகராஜா, ராஜ கணேசன், மால்கம் மசோடோ, போனிபாஸ் தைரியநாதன், தங்கேஸ்வரி தைரியநாதன், சுபாஷின் பாலசுப்ரமணியம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இயக்கம் - திரைக்கதை : அசோகா ஹந்தகமா. ஒளிப்பதிவு : சன்னா தேசப்ரியா இசை : கபிலா பூகாலராச்சி.
இந்தப் புதிய வருடம் இனவாதங்களைக் கடந்து தீர்வை எட்ட முயலும் சக்திகளுக்கான களத்தைத் திறந்துவைத்துள்ளது என்பதற்கு கட்டியம் கூறிய நிகழ்வாக இதனைக் கருதலாம். புதிய தொடக்கமாக, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புத்தூக்கத்துடன் இந்தக் களத்தில், புதிய வருடத்தில் முன்னேறுவோம்.
                                                                                                                                                                            

*** படைப்பு தன்னளவில் எதை வெளிப்பட்டுத்துகிறது என்பதே முக்கியத்துவமுடையது; அதை எந்த நோக்கத்துக்காக வெளிப்படுத்த முயன்றார் படைப்பாளி என்பதைவிடவும். அவரது நோக்கத்தை மீறி தவறான வெளிப்பாட்டுக்கு இடமுண்டு. இதனை அக்கருத்தாடலின் போது எனது கருத்தாகக் கூறியிருந்தேன். எத்தனை அழிவுகளையும் கடந்து எம்முன் உள்ள சவால்களை முகம்கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்ற கருப்பொருள், தெரியப்பட்ட திரைக்கதையின் தவறுகளால் பார்வையாளரிடம் வெற்றிபெற இயலாது போகும் என்பதற்கு "இனி அவன்" எடுத்துக்காட்டாகியுள்ளது. அந்தத் தவறை மீறித் தமிழ்த் தேசியவாத உணர்வு ஏற்படுத்தும்(அல்லது சிங்களப் பார்வையில் தவறாக சித்திரிக்கப் படுகிறது என்ற புரிதலில்) விமர்சனமாக முன்வைக்கப்பட்ட இரு கருத்து நிலைகள் (ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்பன குறித்தவை) பொருத்தமற்றன என்பதை மேலே குறிப்பிட்டேன். இலங்கையில் தமிழ்-முஸ்லிம்-சிங்கள இனவாத சக்திகள் சம அளவான தவறுகளை விதைத்து முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தியுள்ளோம். அழிவும் மூன்று (சம்பந்தமற்றிருந்த மலையக மற்றும் சிறுபான்மை) இனங்கள் அனைத்துக்கும் சம அளவில் ஏற்பட்டுள்ளன. தவறுக்கு ஒரு இனத்தை மட்டும் குற்றம் கூற முடியாதது போன்றே, பாதிப்பும் எமக்கு மட்டுமே அதிகம் என்றும் எந்த இனத்தவரும் சொல்லிவிட இயலாது. இனவாதத்தைக் கடத்தல் தொடர்பிலான படைப்பாக்கத்தில் ஒரே வடிவம் பொருத்தமற்றது. இதுகுறித்து அன்றைய கருத்தாடலில் நான் கூறிய கருத்து சரியாக வெளிப்படாமல் போயுள்ளது. அங்கே பின்னர் வெளிப்பட்ட கருத்திலிருந்தும், இங்கே ரஞ்சகுமார் கருத்தும் இதனை உணர்த்துகிறது. சிங்கள இனவாதத்தை எதிர்க்கையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயத்தை வலியுறுத்தத் தவறியிருந்தாலும் குற்றம்காண இடமிராது. அதுவே தமிழ் இனவாதத்தை அம்பலப்படுத்துகையில், பேரினவாதத்தால் ஒடுக்கப்படுவதைக் கவனம் கொள்ளாமல் தனித்துத் தமிழ் இனவாதத் தவறை மட்டும் சித்திரித்தால் பாரதூரமான தவறேற்பட இடமுண்டு. இதுவே "இனி அவனில்" ஏற்பட்டது. இதனைச் சிங்களப் படைப்பாளி என்றில்லாமல் தமிழ்ப் படைப்பாளி செய்திருப்பினும் குறைபாடக இனங்காணப்பட்டிருக்கும். இதுவே முஸ்லிம்கள் குறித்துப் பேசும்போது அவர்கள் இரு பேரினவாதங்களால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற பின்னணி இல்லாது காட்டின் மிகப்பெரும் தவறாகும் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். புள்ளி ஒன்றாக இருப்பினும் வந்தடையும் திசைகள் வேறாக உள்ளதைக் கவனம்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்த வருகிறேன். அன்று மட்டுமில்லாமல், இங்கே நீங்கள் உற்சாகமாக வெளிப்படுத்தும் உணர்வுநிலையும் இனவாதங்கள் கடந்து விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேற எம்மத்தியில் ஆர்வம் வலுத்துவருவதைக் காட்டுகிறது. புதிய தளத்தில் சந்திப்போம்.

*** இன்றைய பொதுப்போக்கில் வெற்றிபெற்ற பேரினவாதம் தனது ஆதிக்க மேலாண்மையை அனைத்துத் தளங்களிலும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே. ஆயினும் அதனை ஏற்கமறுத்து, அதற்கெதிராக தனது படைப்புகளை வெளிப்படுத்தும் அசோக்க ஹந்தகம தமிழில் பேசிய (கமரா வாயிலாக காட்டிய) காட்சிப்படிமங்களில் இருந்த தவறுக்கு அப்பால்போய், அனைத்தையும் பேரினவாத நோக்கு என வாசிப்பது தவறல்லவா? அன்றைய கருத்துப்பரிமாறலில் இந்தக் குறைபாட்டுடனான பார்வை வெளிப்பாடு இருந்தபோதிலும், உணர்ச்சிவசப்பட்ட இனவாத வக்கிரம் இருக்கவில்லை. அதற்கான அடிப்படைக் காரணமே, ஹந்தகம பேரினவாதத்துக்கு எதிராக உள்ள படைப்பாளி என்பதுதான். அவர்மீதான சந்தேகம்(படைப்பாக்கம் பற்றிய எதிர் விமர்சனம்) எல்லை கடந்து போகவில்லை என்றவகையில், அந்தப்பொருளே அதிகம் பேசப்பட்டாலும், இனவாதம் கடந்த உரையாடல் களம் அது என்பது முதன்மை பெறுகிறது. Ranjakumar Somapala S ரஞ்சகுமார், ஏனைய பேரினவாதிகளோடு ஹந்தகமவை ஒரே வரிசையில் வைக்கும்படி உங்களைத் தூண்டும் விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டுள்ளீர்கள்; என்வரையில் இத்திரைப்படத்தில் சில விமர்சனங்கள் இருந்தபோதிலும் நிராகரிக்கக்கூடாதது என்பதற்காகவே இப்பதிவுகள். ஏதோ ஒருவடிவில் ஏதோ ஒருவடிவில் நீங்களே படத்தைப் பார்த்தால் என் கருத்தை ஏற்பீர்கள்.