Wednesday, January 2, 2013

கலந்துரையாடல் -இனி அவன்


கடந்த முழுமதி(போயா) தினமான 27.12.2012 இல் கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் காலை பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமா மூன்று திரைப்படங்கள் இயக்கியிருக்கிறார். இது எனது சந்திரன் (This is My Moon - 2001), இந்த வழியால் வாருங்கள் ( Come Along This Way - 2002) மற்றும் இனி அவன் ( Him, Here After - 2012) போன்றன..அசோக்க ஹந்தகம இயக்கத்தில் வெளியாகியிருந்த "இனி அவன்" தமிழ்த் திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கான அமர்வு அது. ச.சிவகுருநாதன், அனோமா இராஜகருணா (சினிமா நெறியாளர்) ஆகியோர் ஏற்பாட்டாளர்கள். நிகழ்ச்சி தமிழிலும் சிங்களத்திலும் உரைமாற்றம் செய்யப்படும் எனக்குறிப்பிட்டவாறே கணிசமாக இரு மொழியினரும் கலந்துகொண்டனர்(இந்நிகழ்வுக்குரிய கனதியில்). சமகாலத் தமிழின் கணிப்புக்குரிய மூத்த திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் தலைமையில் மிக ஆரோக்கியமாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக அசோக்க ஹந்தகம இத்திரைப்படத்தை எடுத்த சூழலை விளக்கினார். சிங்களத்தில் ஏற்கனவே தான் முன்னெடுத்த சினிமா-நாடக-தொலைக்காட்சித்தொடர் என்பன வாயிலாக எதிர்னோக்கிய கண்டன விமர்சனங்களைக் கூறினார். இலங்கை சிங்களவர்களுக்கு பௌத்தத்தைப் பாதுகாக்க புத்தரால் பணிக்கப்பட்ட புண்ணியபூமி என்ற ஐதீகத்தைப் பாலூட்டும் பருவம் முதல் ஊட்டி, சமகால அரசியல் முன்னெடுப்புகளினூடே ஏனைய இனத்தவர்களால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என வளர்க்கப்பட்டு வருகிறவர்களிடம், மாற்று உரையாடலை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளக்கூடிய இடர்ப்பாடே இது. இது பல்லின-பல்கலாசார நாடு என்பதை உணர்த்த முற்படுகிறவர்களே ஓரங்கட்டப்படுகையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயம் பற்றிப்பேச முனைவது தற்கொலைக்கு சமன் என்பதைச் சொல்லத்தேவையில்லை. அதன்பேறாக காத்திரமான முறையில் சுயநிர்ணயம் குறித்த உரையாடல் அங்கு இன்னமும் சாத்தியமற்றுள்ளது. அதனை ஏற்படுத்துவதற்கு முன் தேவையாக ஏனைய சிறு தேசிய இனங்களோடு உரையாடுவது அவசியமே.
எம்மிடம் உள்ள இனவாதம் அங்குள்ள இனவாதிகளை வலுப்படுத்தி, சிங்கள மக்களுக்கு நிதர்சன நிலையை விளக்க எந்த முயற்சியையும் எடுக்க இயலாத நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் தமிழர் மத்தியிலுள்ள இன்றைய சமூகப் பிரச்சனைகளில் எமக்குள்ளேயான ஏமாற்றும் சுரண்டலும் கபடங்களும் இனங்காட்டப்பட்டு, அவை மோதித் தகர்க்கப்படுவது ஊடாகவே ஏனைய அரசியல் நகர்வை நாட இயலும் என உணர்த்த முற்படுவதாக இந்தப் படைப்பாக்கம் அமைந்துள்ளது. முன்னாள் போராளி இயல்பு வாழ்வை அவாவியபோதிலும், அயல்சமூகமும் சமூகவிரோத சக்திகளும் அதற்கு இடம்தராத நெருக்கடி பேசுபொருள். அவனது முன்னாள் காதலி இயக்கத்துக்கு உள்வாங்கப்படாதிருக்க படுகிளவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்; அவசர மணாளன் ஒருநாள் உறவில் பிள்ளையைக் கையில் கொடுத்துவிட்டு மரணித்ததால், இப்போது அவனால் ஏற்கக்கூடிய நிலையில். அவனைத் தனது கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தமுனையும் சமூகவிரோதக் கனவான், பாதிப்புகள் பலவற்றைக் கண்ட பெண், போராட்டத்தை வைத்து வெளிநாட்டு வாழ்க்கைச் சுகபோகங்களையும் கண்டு இங்குள்ள வாய்ப்புகளையும் பெற முயலும் பச்சோந்தியாயுள்ள முன்னாள்போரளியின் பழைய சகபாடி என்போர் கதையின் ஏனைய பிரதான பாத்திரங்கள்.
நாயகனின் மனைவியாகிய பெண் இயல்பு வாழ்வுக்கு மாறுவதில் பெரிதாக எந்தப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கவில்லை; கொடுமைகளுக்காளான மற்றப் பெண் இன்னமும் வறுமையோடு. அவளது கணவனின் செக்குறுட்டி வேலைதான் இவனுக்கு கைமாறியது. அதனாலே தன் வாழ்வுக்கு இவன் பதில் சொல்ல வேண்டும் என இவனை நெருக்க, இவனோடு சமூக விரோதக் கும்பலின் அனைத்துவகைச் சுரண்டலுக்கும் உள்ளாகிறாள். மேற்படி கருத்தாடலில், இப்பெண்ணைக் காட்டுவது வாயிலாக தமிழ்ப் பெண்களெல்லாம் சோரம்போய் வாழ முற்படுபவர்கள் எனக் காட்ட முற்படுகிறீர்களா எனக் கேட்கப்பட்டமை ஆச்சரியமாக இருந்தது. வகைமாதிரிப் பாத்திரங்களில் உள்ள அளவில் இது காட்டப்பட்டதில் எந்தத் தப்புமில்லை.
அவ்வாறே முன்னாள் போராளியான நாயகன் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியூடாக, சிங்களப் பேரினவாத சக்திகள் முன்னிறுத்தும் மீண்டும் புலி அச்சுறுத்தல் வரலாம் என்பதை நியாயப்படுத்த முயல்கிறீர்களா என்றெழுப்பப்பட்ட கேள்வியும் நியாயமானதாய்ப்படவில்லை. கூடியவரை இயல்பு வாழ்வை அவாவி, அதற்கு சொந்தச் சமூகமே தடையாகும்போது அந்தத் துப்பாக்கியைத் தன் சொந்தத் தேவைக்காக எடுக்க முற்படுவது மட்டுமே காட்டப்பட்டது. சமூக விரோத நடத்தைக்கு உள்ளாக்கப்படுகையிலும் அதனை அவன் நினைவுகொள்ளவில்லை. வேறு எந்த அரசியல் உரையாடல்களும் பேசப்படவில்லை. தமிழ் மக்கள் இந்த அரசியல் பிரச்சனையை முற்றாகக் கைவிட்டு இயல்பு வாழ்வை முழு அளவில் விரும்புகையில் எதிர்நோக்கும் பிரச்சனையே பேசப்படுகிறது. ஒருவகையில் இனப்பிரச்சனையின் இருப்புக்கான அடிப்படையைச் சிங்கள முற்போக்கு சக்திகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள் என்ற குறைபாடுதான் இங்கே வெளிப்படுகிறதே அல்லாமல், மீண்டும் ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதம் எழலாம் என்ற எந்த அடையாளமும் காட்சிப்பட்டிருக்கவில்லை.
தமிழ் முற்போக்கு சக்திகளும் இப்பிரச்சனைகளைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடு அணுகுவதையே இது காட்டியுள்ளது. நாம் எம்மத்தியிலான பிற்போக்கு வலதுசாரி பாசிச இனவாதிகளிடமிருந்து தமிழ்மக்களை மீட்டு, சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதுகுறித்த முழுமையான புரிதல் கொள்ளாதபோதிலும் அதனைப் புரிந்துகொண்டு அதனைச் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய சிங்கள முற்போக்கு சக்திகள் மேற்கிளம்பிவருகின்றமையை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் தமிழ்-முஸ்லிம்-சிங்கள கருத்தியலாளர்கள் கொண்டிருந்தபோதும், ஆரோக்கியமான கருத்தாடலில் பொதுநோக்கில் ஒன்றுபடக் களம் உள்ளது என்பதை இந்தக்கருத்தாடல் எடுத்துக்காட்டியிருந்தது. தலைமையேற்ற கே.எஸ்.சிவகுமாரன் இதுகுறித்து நியாயமான பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். அவரும் ஏற்பாட்டளரான சிவகுருநாதனும் இதன்பொருட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்கள். நடிகர்கள் : இத்திரைப்படத்தில் இலங்கை நடிகர்களான நிரஞ்சனி சண்முகராஜா, ராஜ கணேசன், மால்கம் மசோடோ, போனிபாஸ் தைரியநாதன், தங்கேஸ்வரி தைரியநாதன், சுபாஷின் பாலசுப்ரமணியம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இயக்கம் - திரைக்கதை : அசோகா ஹந்தகமா. ஒளிப்பதிவு : சன்னா தேசப்ரியா இசை : கபிலா பூகாலராச்சி.
இந்தப் புதிய வருடம் இனவாதங்களைக் கடந்து தீர்வை எட்ட முயலும் சக்திகளுக்கான களத்தைத் திறந்துவைத்துள்ளது என்பதற்கு கட்டியம் கூறிய நிகழ்வாக இதனைக் கருதலாம். புதிய தொடக்கமாக, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புத்தூக்கத்துடன் இந்தக் களத்தில், புதிய வருடத்தில் முன்னேறுவோம்.
                                                                                                                                                                            

*** படைப்பு தன்னளவில் எதை வெளிப்பட்டுத்துகிறது என்பதே முக்கியத்துவமுடையது; அதை எந்த நோக்கத்துக்காக வெளிப்படுத்த முயன்றார் படைப்பாளி என்பதைவிடவும். அவரது நோக்கத்தை மீறி தவறான வெளிப்பாட்டுக்கு இடமுண்டு. இதனை அக்கருத்தாடலின் போது எனது கருத்தாகக் கூறியிருந்தேன். எத்தனை அழிவுகளையும் கடந்து எம்முன் உள்ள சவால்களை முகம்கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்ற கருப்பொருள், தெரியப்பட்ட திரைக்கதையின் தவறுகளால் பார்வையாளரிடம் வெற்றிபெற இயலாது போகும் என்பதற்கு "இனி அவன்" எடுத்துக்காட்டாகியுள்ளது. அந்தத் தவறை மீறித் தமிழ்த் தேசியவாத உணர்வு ஏற்படுத்தும்(அல்லது சிங்களப் பார்வையில் தவறாக சித்திரிக்கப் படுகிறது என்ற புரிதலில்) விமர்சனமாக முன்வைக்கப்பட்ட இரு கருத்து நிலைகள் (ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்பன குறித்தவை) பொருத்தமற்றன என்பதை மேலே குறிப்பிட்டேன். இலங்கையில் தமிழ்-முஸ்லிம்-சிங்கள இனவாத சக்திகள் சம அளவான தவறுகளை விதைத்து முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தியுள்ளோம். அழிவும் மூன்று (சம்பந்தமற்றிருந்த மலையக மற்றும் சிறுபான்மை) இனங்கள் அனைத்துக்கும் சம அளவில் ஏற்பட்டுள்ளன. தவறுக்கு ஒரு இனத்தை மட்டும் குற்றம் கூற முடியாதது போன்றே, பாதிப்பும் எமக்கு மட்டுமே அதிகம் என்றும் எந்த இனத்தவரும் சொல்லிவிட இயலாது. இனவாதத்தைக் கடத்தல் தொடர்பிலான படைப்பாக்கத்தில் ஒரே வடிவம் பொருத்தமற்றது. இதுகுறித்து அன்றைய கருத்தாடலில் நான் கூறிய கருத்து சரியாக வெளிப்படாமல் போயுள்ளது. அங்கே பின்னர் வெளிப்பட்ட கருத்திலிருந்தும், இங்கே ரஞ்சகுமார் கருத்தும் இதனை உணர்த்துகிறது. சிங்கள இனவாதத்தை எதிர்க்கையில், ஏனைய இனங்களுக்கான சுயநிர்ணயத்தை வலியுறுத்தத் தவறியிருந்தாலும் குற்றம்காண இடமிராது. அதுவே தமிழ் இனவாதத்தை அம்பலப்படுத்துகையில், பேரினவாதத்தால் ஒடுக்கப்படுவதைக் கவனம் கொள்ளாமல் தனித்துத் தமிழ் இனவாதத் தவறை மட்டும் சித்திரித்தால் பாரதூரமான தவறேற்பட இடமுண்டு. இதுவே "இனி அவனில்" ஏற்பட்டது. இதனைச் சிங்களப் படைப்பாளி என்றில்லாமல் தமிழ்ப் படைப்பாளி செய்திருப்பினும் குறைபாடக இனங்காணப்பட்டிருக்கும். இதுவே முஸ்லிம்கள் குறித்துப் பேசும்போது அவர்கள் இரு பேரினவாதங்களால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற பின்னணி இல்லாது காட்டின் மிகப்பெரும் தவறாகும் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். புள்ளி ஒன்றாக இருப்பினும் வந்தடையும் திசைகள் வேறாக உள்ளதைக் கவனம்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்த வருகிறேன். அன்று மட்டுமில்லாமல், இங்கே நீங்கள் உற்சாகமாக வெளிப்படுத்தும் உணர்வுநிலையும் இனவாதங்கள் கடந்து விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேற எம்மத்தியில் ஆர்வம் வலுத்துவருவதைக் காட்டுகிறது. புதிய தளத்தில் சந்திப்போம்.

*** இன்றைய பொதுப்போக்கில் வெற்றிபெற்ற பேரினவாதம் தனது ஆதிக்க மேலாண்மையை அனைத்துத் தளங்களிலும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே. ஆயினும் அதனை ஏற்கமறுத்து, அதற்கெதிராக தனது படைப்புகளை வெளிப்படுத்தும் அசோக்க ஹந்தகம தமிழில் பேசிய (கமரா வாயிலாக காட்டிய) காட்சிப்படிமங்களில் இருந்த தவறுக்கு அப்பால்போய், அனைத்தையும் பேரினவாத நோக்கு என வாசிப்பது தவறல்லவா? அன்றைய கருத்துப்பரிமாறலில் இந்தக் குறைபாட்டுடனான பார்வை வெளிப்பாடு இருந்தபோதிலும், உணர்ச்சிவசப்பட்ட இனவாத வக்கிரம் இருக்கவில்லை. அதற்கான அடிப்படைக் காரணமே, ஹந்தகம பேரினவாதத்துக்கு எதிராக உள்ள படைப்பாளி என்பதுதான். அவர்மீதான சந்தேகம்(படைப்பாக்கம் பற்றிய எதிர் விமர்சனம்) எல்லை கடந்து போகவில்லை என்றவகையில், அந்தப்பொருளே அதிகம் பேசப்பட்டாலும், இனவாதம் கடந்த உரையாடல் களம் அது என்பது முதன்மை பெறுகிறது. Ranjakumar Somapala S ரஞ்சகுமார், ஏனைய பேரினவாதிகளோடு ஹந்தகமவை ஒரே வரிசையில் வைக்கும்படி உங்களைத் தூண்டும் விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டுள்ளீர்கள்; என்வரையில் இத்திரைப்படத்தில் சில விமர்சனங்கள் இருந்தபோதிலும் நிராகரிக்கக்கூடாதது என்பதற்காகவே இப்பதிவுகள். ஏதோ ஒருவடிவில் ஏதோ ஒருவடிவில் நீங்களே படத்தைப் பார்த்தால் என் கருத்தை ஏற்பீர்கள்.

No comments:

Post a Comment