Monday, November 26, 2012



தோழர் மணியம் 





நவம்பர் 27 இல் பதிவாகும் ஒக்டோபர் 21

 முந்திய சந்திப்பில் ஒக்டோபர் 21 எழுச்சி குறித்த பதிவொன்று பேசுபொருளாயிருந்தது. வேறு பல வேலைகளின் காரணமாக இடையில் எமது உரையாடல் தடைப்பட்டிருந்தது. மீண்டும் முக்கியத்துவம்பெறும் திகதியொன்றில் இந்தச் சந்திப்பு. தமக்கு ஊட்டமளிக்கும் எதிர் இனவாதம் ஒன்றை அவாவும் இனவாத சக்திகளுக்கு இந்த நாள் வேறு பொருள்தரும். மக்கள் விரோதமாக முனைப்படைந்த அந்த 'கார்த்திகைக் கொடுங்கனவு' வரலாற்று ஏட்டிலிருந்து விரைவில் மறக்கப்பட்டதாகிவிடும்(தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய பல்வேறு அமைப்புகளின் போராளிகளோடு விடுதலைப் புலிகள் அமைப்பில் போராடியவர்களும் ஒட்டுமொத்தமாக மாவீரர்களாக நினைவுகூரப்பட வேண்டும்; அது பாசிச வழிப்படுத்திய ஒரு பிற்போக்குத் தலைவரின் பிறந்த நாளாக இருக்கப்போவதில்லை). மாறாக, மக்கள் விடுதலையை நேசிக்கும் பொதுவுடமைவாதிகளுக்கு இந்தத்தினம் புரட்சிகர உணர்வை புத்தாக்கம் செய்யத் தூண்டுவதாக இருக்கும். ஒக்டோபர் 21 எழுச்சியை நினைக்கும் போதெல்லாம் கிளர்ச்சியூட்டும் முக்கியத்துவம்மிக்க ஆளுமையான கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களது இதயத் துடிப்பு அடங்கிய நாள் 1989 இன் நொவெம்பர் 27 ஆகும்.
சண் ,மணியம் 
இங்கு அவரோடான ஊடாட்டத்தில் இன்றைய சூழலில் மேற்கிளம்பும் நினைவலைகளைப் பேசிக்கொள்வோம். பத்துவருடங்களின் முன்னர் மணியம் தோழரின் மூத்த மகன் ஒரு விடயத்தைச் சொன்னார்; "அப்பா, சண் தலைமையிலிருந்து விலகியது தனது மிகப்பெரும் தவறு" என்று சொன்னதாக அவர்(சத்தியராசன்) கூறியபோது மிகுந்த கோபாவேசத்தோடு மறுப்பைத் தெரிவித்தேன். "வேறு வடிவத்தில் சொல்லியிருக்கக் கூடியதை இவ்வகையில் தவறாகப் பொருள்கொண்டு சொல்லாதீர்கள்" என்றேன். பின்னர் ராசன் விபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தும் நாலைந்து வருடங்கள் கடந்தோடிய நிலையில் மணியம் தோழரின் இளைய மகன் சத்தியகீர்த்தியும் அதேவிடயத்தைச் சொன்னார்; முன்னதாக ராசன் சொன்னதை நான் மறுத்திருந்தது கீர்த்திக்குத் தெரியாது.
இருவரும் ஒரேவிடயத்தைக் கூறிய நிலையில் அவர் இந்தப்பொருளில் கூறியிருக்க முடியாது எனத் தொடர்ந்து என்னால் கருத இயலவில்லை. பொதுவாகவே கொம்யூனிஸ்ட் கட்சி காலத்துக்குக் காலம் பிளவுபட்டு மக்களைவிட்டுத் தூரப்பட்டுப்போன தவறை இளைத்துவிட்டோம் என்று என்னோடும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அந்தவகையில் தனது அரசியல் செயற்பாட்டு அனுபவங்களை "ஒரு கொம்யூனிஸ்ட்டின் சுயவிமர்சனம்" என்பதாக எழுதவேண்டும் எனக்கூறிக்கொண்டிருந்தார். எழுத முன்னர் அவரே 'காலம் ஆகினார்'. அந்தக் கடந்த காலத்தவறில் தனதுமான பங்கை சுயவிமர்சனமாக முன்வைக்கும் நினைவே சண் தன் அரசியல் அனுபவங்களை 'ஒரு அப்பழுக்கற்ற கொம்யூனிஸ்ட்டின்' வாழ்க்கை போல எழுதியிருந்த காரணத்தால்தான். சண் மீது மிகுந்த மதிப்பு அவருக்கு இருந்தபோதிலும், திரிபுவாதத்துக்கு எதிராக வீறுடன் முன்னேறிய புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி பல பிளவுகளைச் சந்திக்க சண்ணே காரணமாக இருந்தார் என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியிருக்கிறார்.
மணியம்,டானியல்,சிவதாசன் 

                                                     பிரேமலால், கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் 1972 இல் பிளவடைந்தபோது அவர்களது அரசியல் நிலைப்பாடு சரியாகவும் ஸ்தாபன அணுகுமுறை தவறாகவும் இருந்தது; தனது அரசியல் வறட்டுத்தனங்களை சுயவிமர்சனத்தோடு சண் ஏற்று ஜனநாயகப் பண்பைப் பேணியிருந்தால் அந்தப்பிளவைத் தவிர்த்திருக்க இயலும். அதன்பின்னராவது சண் வறட்டுவாதத்தைக் கைவிட்டு வெகுஜன அணிதிரட்டலுக்குரிய கட்சிக் கட்டமைப்பைப் பேணுவார் என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துப்போனது. தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் அவர் "தொழிலாளி" பத்திரிகைக்கும் பிரசுரங்களுக்கும் எழுதிய ஆக்கங்கள் பல தடவை விவாதத்துக்கு உட்பட்டது. தமிழினம் தேசிய இனமல்ல எனத் தொடர்ந்தும் எழுதி வந்தார்; தவிர்க்கவியலாதநிலையில் 'தேசிய இனமாக வளர்ந்து வருகிறது' என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.
தேசிய இனமல்ல என்பதனூடாக சுயநிர்ணய உரிமையை மறுப்பதில் அவர் பிடிவாதமாக இருந்தது சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதுசார்ந்ததே; புறநிலை யதார்த்தம் குறித்த ஆய்வோ, ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் மறுக்கப்படும் உரிமைகள் குறித்தோ அவற்றை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ எந்தத் தேடலும் அவருக்கு அவசியமற்றதாக இருந்தது.
தர்மலிங்கம்,மணியம் 
அத்தகைய சூழலில் மூன்றாமுலகக் கோட்பாடு விவாதத்துக்கு வந்தது. பல சந்தர்ப்பங்களில் மாஒ சேதுங் மூன்றுலகக் கோட்பாட்டு அணுகுமுறையில் நாட்டுக்கும் நாட்டுக்கும் - மக்களுக்கும் மக்களுக்கும் - கட்சிக்கும் கட்சிக்கும் - இடையிலான உறவை அணுகியமை பற்றிச் சண் அறியாதவரல்ல. தேசிய இனப்பிரச்சனையில் மக்கள் நலன் பற்றி எந்தத் தேடலும் அற்று இருந்தது போலவே, சர்வதேச விவகாரங்களில் நிதர்சனத்தைக் காணத்தவறி, தன்னைப் பெரும் புரட்சியாளராகக் காட்டும் அவதியில் மூன்றாம் உலகக் கோட்பாட்டுக்கு எதிராக கருத்துரைக்க முனைந்தார். முன்னர் இதுபோன்ற கருத்துப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் போலன்றி உட்கட்சிப் போராட்டமாக தொடர்ந்து விவாதித்து இறுதியில் சிறப்பு மாநாடு வரை போராட்டம் உச்சம்கண்டது. தமிழ் உறுப்பினர்களில் மிகமிகப் பெரும்பான்மையினர் மூன்றுலகக்கோட்பாட்டை ஏற்றனர்; ஓரிருவர் தவிர்ந்த ஏனைய சிங்கள உறுப்பினர்கள் சண் தலைமையைச் சரியென ஏற்றனர். ஆயினும், மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பதாக பகிரங்கப்படுதுவதில்லை என முடிவானது.
அமிர்தலிங்கம் ,மணியம் 
தன்னிச்சையாக இயங்கும் தனது இயல்புப்பிரகாரம் கட்சி முடிவைமீறி சண் மூன்றுலகக் கோட்பாட்டைக் கட்சி எதிர்ப்பதாக அறிக்கைவிட்டார். இதன்பின்னரும் அவர் கூட்டு முடிவை முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர் என்ற முடிவை எட்டிய நிலையிலேயே, அவரிலிருந்து வெளியேறி "இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது)" உதயமானது. சண் தொடர்ந்து இயங்க இயலாத முடக்கத்துக்காளானார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முன்னெப்போதும் இல்லா அளவில் இந்தப் பிளவு அவரைப் பெரிதும் பாதித்தது. மணியம் இப்படித் துரோகம் செய்துவிட்டாரே என ஆதங்கப்பட்டதும் மெய். கோட்பாட்டையும் நடைமுறையையும் மீறி ஒரு விசுவாசத்தை அவரால் எப்படி எதிர்பார்க்க இயலுமாயிற்று? உண்மையில் அப்படியொரு போர்க்குணமிக்க உறவுப்பிணைப்பு சண்-மணியம் இடையே இருந்தது. சாதித் தகர்ப்புப் போராட்டத்திலும் தொடர்ந்து கட்சியைக் கட்டிவளர்ப்பதிலும் மணியம் காட்டிய உறுதியிலேயே சண்ணின் தலைமை ஆட்டங்காணாமல் இருந்தது. நடைமுறை சார்ந்த பிரயோகத்தில் சண்ணுடைய வரட்டுவாதத்தை மீறிச் சரியான பிரயோகத்தை முன்னெடுக்க ஏற்றதாக செயற்படும் அதேவேளை, ஏனைய கோட்பாட்டு விவகாரங்களிலும், பிரசாரங்களிலும், பல்வேறு தொடர்பாடல்களிலும் சண்ணின் ஆளுமை கட்சிக்குப் பலமாக அமைவதை மணியம் புரிந்தவராயிருந்தார். அதுசார்ந்த உயர் மரியாதை சண் மீது அவருக்கு இருந்தது. இதன் காரணமாகவே மணியம் தனது எந்த வறட்டுத்தனத் தவறையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் தன்னோடு இருப்பார் என நம்ப வைத்திருக்கிறது.
மணியம் ,யோகநாதன் ,கதிரேசு 
தனிப்பட்ட உறவைவிடவும் மக்கள் நலனுடைய புரட்சிகரக் கட்சியைக்  கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் சண்ணிலிருந்து பிரிவது தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு வந்தார். அதிதீவிரப் புரட்சிகரச் சுலோகங்களை முன்வைத்து மக்களிலிருந்து பிரிந்துபோவதாயில்லாது 'மக்களிடமிருந்து மக்களுக்கு' எனும் மார்க்கத்தை இனி முன்னெடுக்க இயலும் எனக் கருதினார். அதற்கு அமைவாக கட்சிப் பெயரும் "புதிய ஜனநாயகக் கட்சி" என மாற்றப்பட்டது.
இத்தகைய புதிய பாணி என்பது அடிப்படையில் மார்க்சிய-லெனினிய-மாஒ சேதுங் சிந்தனை மார்க்கத்துக்குரியதே. முரண்பாடு என்பதை எதிர்நிலைக்குரியதாக மட்டும் பார்ப்பதிலிருந்து நட்பு முரண்பாடு என்கிற ஒன்றை அறிமுகம்செய்த மாஒ, "மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது" என்பதையும் பேசியவர்; வலதுசாரிப் பிற்போக்காளார் மிகமிகச் சிறுபான்மையினர்-கொம்யூனிஸ்ட்டுகளும் சிறுபான்மையினரே; இடைநிலையில் உள்ளவர்களே மிகப் பெரும்பான்மையினர், அவர்களை வென்றெடுப்பது குறித்த மாஒ சேதுங் சிந்தனை வழிகாட்டல் மூன்றாமுலகக் கோட்பாட்டிலும் வெளிப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு சண்ணிலிருந்து வெளியேறியமை உதவிகரமானது எனக் கூறுவார்.
எஸ் டி பண்டரநாயக்க ,சண் ,மணியம் ,சிவதாசன் 
ஆயினும் அவர் விரும்பிய புதிய பாணியிலான கட்சிக் கட்டமைப்பு வந்தமையவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்துள்ளது. அதனாலேயே ராசன், கீரு ஆகியோரிடம் சண்ணிலிருந்து விலகியது தவறு என்பதை அவர் கூறியிருக்கிறார். அவ்வாறானபோதும் என்னிடம் விலகலின் அவசியத்தை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தியமை என்பது அடிப்படையில் வறட்டுவாதம் கடந்த இத்தகைய சரியான பாட்டாளிவர்க்க கருத்தியலை நான் வந்தடைய வேண்டும் என அவர் கருதியமை கரணமாகும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்புதிய கருத்தியல் மற்றும் மூன்றுலகக் கோட்பாடு வாயிலாக அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டமை பற்றி அடுத்த சந்திப்பில்.
(இங்கு இடம்பெற்றுள்ள படங்களில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த சிங்கள-தமிழ்த் தலைவர்களுடன் மணியம் இடம்பெற்றிருப்பதைக் காணலாம் .அன்றைய வெகுஜன மார்க்கம் சண்முகதாசனால் முடக்கப்படாத ஆரோக்கியமான சூழலின் பேறு இது. போராட்ட வெற்றிகளின் பின் தானே சரியான கோட்பாட்டில் தலைமை தாங்குவதான அகங்காரம் அவரிடம் ஏற்பட்ட பின்னரே வறட்டுவாதியானார் ).