Tuesday, October 22, 2024

நண்பர்கள்-தோழர்கள் எப்போதும் வந்தவண்ணம் கே.ஏ. சுப்பிரமணியம் நூலகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் அடிக்கடி பலரும் வந்து நூலகத்தைப் பார்த்துச் செல்வதும் இடம்பெற்றபடி! சமூகமாற்ற அக்கறை கொண்ட பலரும் கட்சி பேதங்கள் இன்றி நூலகப் பயன்பாடு அனைவரையும் அரவணைப்பதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்! அதற்கான வாக்குறுதியைச் சத்தியமனை உறுதியாக வழங்கி நிற்கிறது! நீண்டகால அரசியல் செயற்பாடு எனக்கு இருந்தபோதிலும் இனி முழு அளவில் இந்த நூலகம் வாயிலாக சமூக விஞ்ஞான நோக்கைப் பரவலாக்குவதற்கான உழைப்பையே முன்னுரிமையாக்கி இயங்குவதற்கு உறுதி பூண்டிருக்கிறேன் என்பதனை அனைத்துத் தோழர்களுக்கும் வலியுறுத்தினேன்! இன்றைய அரசியல் - பொருளாதார நெருக்கடி பற்றி எதுவும் கூறவில்லையே என்ற ஆதங்கத்தைச் சில நண்பர்கள் வெளிப்படுத்தினர். இது செயற்கையான ஒரு நெருக்கடி. ஓரிரு நாட்களின் முன்னரே சர்வதேச நாணய நிதியம் கடனுதவி புரிந்து சிக்கலைத் தீர்க்க வாக்குறுதி அளித்துவிட்டிருந்தது. அவ்வாறு இயல்பு நிலை திரும்புவதற்கு முன்னர் மக்களைக் கெம்பியெழ வைத்து ஆட்சியாளர்களுக்கு எதிரான உணர்வலை பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஊடக உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அவசியமற்ற ஆர்ப்பாட்டங்கள் இவை. இதனை வைத்து உடனே ஆட்சியைக் கலைக்கும் நோக்கங்கூட அடுத்துவர உள்ள ‘தர்மிஷ்ட’ அவதார புருசருக்கு இல்லை; அமெரிக்க-இந்திய மேலாதிக்க சக்திகளிடம் பணிந்து பணியாற்றி இன்னும் சில காரியங்கள் இவர்கள் வாயிலாகவே நிறைவேற்ற வேண்டி இருப்பதைப் புதிய தர்மிஷ்டர் அறிவார். தமது எசமானர்களது மனமறிந்து உவப்புடன் அந்நியர் விருப்பங்களை நடைமுறைப்படுத்த இருக்கும் அவர்கள் பொறுமை காத்து ஜனநாயக பூர்வமாக அதிகாரத்தைப் பெறக் காத்திருப்பர்; 1977- 94 யுகத்துக்கு நாட்டை மீட்டெடுக்க உள்ள அந்தப் புனிதக் கடமைக்கு மக்கள் பகடைக் காயாக்கப்படுகின்றனர்! அதனைத் தடுக்கும் அரசியல் தெளிவு மார்க்சியர்களாகச் சொல்லிக்கொள்வோரிடமும் இல்லை என்பதே இன்றைய அவலம்! சர்வதேச நிதியத்திடம் அடிபணியோம் என்று வீரம்பேசிய இன்றைய ஆட்சியாளர்கள் அவ்வகையில் இயங்க அவசியமான துணிவு, நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு என்பவற்றுடன் செயற்படவில்லை. கடந்தகால ஊழல்களுக்கான வழக்குகளில் இருந்து சட்டவிரோதமாக மீளல், யுத்தக்குற்றக் கொடூரர்களைக் காத்தல், நிதி மோசடிகள், குடும்ப ஆட்சி என்ற பலவீனங்களோடு செயற்பட்டதன் காரணமாக மிக மோசமாக நாட்டை அந்நிய சக்திகளிடம் சரண் அடைய வைத்துவிட்டனர். இன்றைய போராட்டங்கள் இந்த அடிபணிதலைத் தடுப்பதற்கானவை அல்ல; மேலும் வலுவோடு சறுக்கச் செய்வதற்கானவை! மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகள் இந்த வரலாற்றுப் படிப்பினைகளில் இருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக!

No comments:

Post a Comment