Tuesday, October 22, 2024

மார்க்சியமற்ற மார்க்சியர்கள் ‘புத்தரை அன்றி வேறெவரும் பௌத்தர்களாக இல்லை; ஜேசுவை மட்டுமே உண்மைக் கிறிஸ்தவராக கொள்ள இயலும்; முகமது நபியின் நடைமுறை-கோட்பாட்டை அப்படியே வேறெந்த முஸ்லிமும் பின்பற்றுவதாக கூற இயலாது’ - என்பதாக பத்து வருடங்களுக்கு முன்னர் தோழர் மூர்த்தி சொன்னார். அவரை அறிந்த, அவரோடு சேர்ந்து இயங்கிய தோழர்கள் சிலருக்கு மட்டுமே அவரைத் தெரிந்திருக்கும். மலையகத்தில் பேரதிர்வுகளை ஏற்படுத்திய செங்கொடிச் சங்கத்தின் பொருளாளராக நீண்ட காலம் இயங்கிய அர்ப்பணிப்புமிக்க மார்க்சியர் தோழர் மூர்த்தி. முன்னதாக தோழர் சண் தலைமையிலேயே செங்கொடிச் சங்கம் இயங்கியது; 1972 இல் சண்முகதாசனைக் கட்சி உறுப்புரிமை நீக்கம் செய்வதாக கூறிப் பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்கள் வெளியேறி, மார்க்சிஸ-லெனினிஸக் கட்சியெனப் புதிய அமைப்பை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வில் மூர்த்தியும் அவர்களுடன் இணைந்து வெளியேறி இருந்தார். அவர் மட்டுமன்றி செங்கொடிச் சங்க நிர்வாகிகள் பலரும் (ஏறத்தாழ அனைவரும்) சண் தலைமையை நிராகரித்தமையால் ‘புதிய செங்கொடிச் சங்கம்’ என ஒன்றைத் தோழர் சண் தொடங்க வேண்டி இருந்தது. சண் தனித்துவிடப்பட்ட போது வெளியேறிய தோழர்களது ஸ்தாபன முறையற்ற செயற்பாட்டை ஏற்க இயலாதெனக் கூறி தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் (கே.ஏ.எஸ்) உறுதியுடன் சண் தலைமையிலான கொம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இயங்கக் களம் அமைத்துக் கொடுத்தார். கோட்பாடு, நடைமுறை என்பவற்றில் தோழர் சண்ணிடம் இருந்த தவறுகளை கே.ஏ.எஸ். அறியாதவரல்ல. வெளியேறியவர்களைச் ‘சீர்குலைவாளர்கள்’ எனச் சண் முத்திரை குத்தி, அவர்களோடு எந்த ஒட்டுறவையும் தோழர்கள் எவரும் பேணக்கூடாது என்ற நிலைப்பாட்டையே தோழர் சண்முகதாசன் கொண்டிருந்தார். இருப்பினும் தோழர் கே.ஏ.எஸ். வேறுவகை நடைமுறையைக் கையாண்டார். சண் தலைமைக் கட்சியைக் கட்டி வளர்ப்பதில் உறுதியான, அர்ப்பணிப்புமிக்க உழைப்பை நல்கிய அதேவேளை வெளியேறிய தோழர்களில் நேர்மைமிக்க ஊழியர்களுடன் தோழமை உணர்வுடன் கூடிய நட்புறவைப் பேணி வந்தார். அத்தகைய தோழமைப் பிணைப்பில் மூர்த்தி-கே.ஏ.எஸ். நட்புறவு தொடர்ந்தமையால் எனக்கும் தோழர் மூர்த்தியுடன் பழகவும் அவரது காத்திரமிக்க கருத்துகளைக் கேட்டறியவும் இயலுமாயிற்று. அவர் மலேசியர். மார்க்சிய ஈடுபாட்டால் இலங்கை வந்து தமிழைக் கற்றறிந்து மக்கள் மத்தியில் இயங்கியவர். சிறந்த ஆங்கிலப் புலமையாளர். ஆழமாக மார்க்சிய நூல்களைப் படித்துத் தெளிவு பெற்றதோடு செழுமைமிகு அனுபவ அறிவையும் ஒருங்கே கைவரப் பெற்றவர். அதன் காரணமாகவே, மார்க்சியச் சிந்தனை முறை அற்றவர்களாக இருந்துகொண்டு மார்க்சியம் பேசுகிறவர்கள் மீது மிக க்காட்டமான விமரிசனத்தை வெளிப்படுத்தினார்; இறுதிக் காலத்தில் கட்சிப் பின்னணி ஏதுமின்றித் தனித்து விடப்பட்ட அவதி காரணமாக ஆன்மீக நாட்டத்துக்கும் ஆளானார் - அது சமூக க் கேடாகும் அளவுக்கு விரிவுபடவில்லை. எந்தவொரு ஆன்மீகத் தலைவரும் வெற்றி பெற்றவர் அல்ல என்பது அவர் கருத்து. அதனாலேயே புத்தர், ஜேசு, நபி ஆகியோர் கருத்துப்படி அவர்களைப் பின்பற்றும் மதப் பிரிவினர் எவரும் இல்லை எனக் கூறினார். மார்க்சியர்களும் மார்க்சியச் சிந்தனை முறைமைப்படி இல்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது. மாறிய வரலாற்று நிலைக்கான மார்க்சியர்கள் இருக்கிறோம் என அன்றைய அர்ப்பணிப்புமிக்க மார்க்சியப் போராளிகளிடம் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லவல்லோமா?

No comments:

Post a Comment