Wednesday, October 9, 2024
“மக்கள் இலக்கியம் மேட்டுக்குடி இலக்கியம்”
“மக்கள் இலக்கியம்
மேட்டுக்குடி இலக்கியம்”
“கலை மக்களுக்காக
கலை கலைக்காக”
“மண்வாசனை இலக்கியம்
இழிசினர் இலக்கியம்”
“இலக்கியத்துக்கான மக்கள் விடுதலைக் கோட்பாடு!
கோட்பாட்டுச் சிறை படைப்பாளியை முடக்கும்!”
இப்போது தேசிய கலை இலக்கியப் பேரவை தொடக்கம்பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவானதை ஒட்டித் தொடர் ஆய்வரங்கத்தைப் பேரவை முன்னெடுத்து வருகிறது!
“மக்கள் கலை-இலக்கிய முன்னோக்கில் … நாவல்/சிறுகதை/சிறுவர் இலக்கியம் …”
- என்பதாக இந்தத் தொடர்!
‘மக்கள் கலை-இலக்கியம்’ என்பது குறித்து இலங்கையின் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ , ‘தேசிய கலை இலக்கியப் பேரவை’ என்பன பேசி வருகின்றன.
சென்ற நூற்றாண்டின் ஐம்பதாம் ஆண்டுகளில் தான் இலங்கைச் சமூகத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பலை வேகம்பெற்றது. முன்னதாக இந்திய மக்கள் தீரமிக்க போராட்டங்கள் வாயிலாக பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்தபோது இலவச இணைப்பாக இலங்கைக்கும் சுதந்திரப் பத்திரம் கிடைத்தது!
ஏகாதிபத்திய சக்தி கையறுநிலைக்கு ஆளாகி ஓடவில்லை; புதிய பாணியில் ‘காலனித்துவம்’ தொடர ஏற்றதாகவே உள்ளூர் துரைகளிடம் ஆட்சியைக் கையளித்துப்போயினர். பிரித்தானியாவை மேவி மேலெழுந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இயங்குவதற்கு இந்த ‘நவ காலனித்துவ’ முன்னெடுப்பு அவசியப்பட்டது!
இதனை முன்னரே மார்க்சியர்கள் முன்னுணர்ந்து கூறி வந்தபோதிலும் ‘மார்க்சியம் கடக்கும் முடக்கு வாதங்கள்’ புதிதாக பின் நவீனத்துவத் தாவலுடன் ‘பின் காலனித்துவம்’ பற்றி அளப்பறை செய்கின்றன!
இந்த நவ காலனித்துவம் இந்தியாவை ஏகாதிபத்திய அணிக்குத் தலைமை சக்தியாக்கும் வகையில் அங்குள்ள சமூக சக்திகள் ‘சுதந்திரத்தைப் பங்குபோட’ முற்பட்டபோது தான் (ஐம்பதாம் ஆண்டுகளின் பின்னர்) ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் எழுச்சி இலங்கையில் வீறுகொள்ளத் தொடங்கியது!
‘அகண்ட பாரத’க் கனவு சுதந்திரம்பெற்ற கையோடு (ஆதாயங்களைப் பங்குபோடும் முனைப்புத் தொடங்கிய நாள் முதல்) இந்திய அதிகாரத் தரப்பிடம் இருந்த ஒன்று; அதன் பேரில் இலங்கை மார்க்சியர்கள் ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ பற்றி விழிப்புணர்வைப் பரவலாக்கினர்!
ஆயினும், சிறுசிறு கோட்பாட்டுப்பிளவைப் பெரிதாக்கிப் பிளவுகளடைந்து சின்னஞ்சிறிய குழுக்களாகச் சிதறிய அணிகளின் குழுவாதக் குடுமிப்பிடிச் சண்டையாலும்
இலங்கையின் அதிகாரத் தரப்பு விருப்பத்துடன் இந்திய மேலாதிக்கத்தை
(இல்லையேல் பிளவுண்ட இடதுசாரிகள் ஐக்கியப்பட்டு நாட்டைச் சமத்துவம் நோக்கி மாற்றிவிடுவர் என்பதால்)
நாடுவதனாலும்
விரைவில்இலங்கை இந்தியாவுக்குள் சங்கமிக்கும் நிலை வளர்ந்து வருகிறது; இப்போதாவது விடுதலைத் தேசியச் சுயநிர்ணய உரிமை பற்றிய தேடலின்றி ஏகாதிபத்தியச் சுயநிர்ணயத்துக்கு எடுபடும் நாட்டத்திலேயே ஒவ்வொரு இனத்தேசிய தலைமைகளின் மேலாதிக்கத் தேசிய நாட்டம்!
ஆயினும் ஐம்பதாம் ஆண்டுகளில் இருந்து தமிழ் மார்க்சிய அணி மண்வாசனை இலக்கியம், மரபுப் போராட்டம் என்பவற்றின் வாயிலாக ‘தேசிய இலக்கியக் கோட்பாட்டை’ கட்டி எழுப்பி இருந்தது!
அப்போது தேசிய இலக்கியம் என்பதை எதிர்த்த தமிழ்த் தேசியர்கள் இன்று ‘தேசியம்’ என்பதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடக் காரணம் அவர்களது ஏகாதிபத்தியச் சுயநிர்ணயச் சோரம் போதலில் தேசியம் என்றால் ‘தமிழ்த் தேசியம்’ மட்டுமே!
அன்றிருந்த மார்க்சியர்களின் விடுதலைத் தேசிய உணர்வு அனைத்து இனத்தவரும் சம உரிமை உடைய ‘இலங்கைத் தேசிய’ வடிவம் கொண்டது (வளர்ந்து வந்த பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்கம் ஏனைய இனத் தேசியங்களைப் புறக்கணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாக்கி வருவதனைக் காணத் தவறியமை காரணமாக ‘இந்திய விஸ்தரிப்பு வாதம் பேசியும்’ பயனற்ற நிலை!).
இந்த மண்வாசனை இலக்கியத்தை ‘மக்கள் இலக்கியக்’ கோட்பாடாக வளர்த்தவர் க. கைலாசபதி!
இன்று நவ நாகரிகமாக ‘படைப்பாளிக்குக் கோட்பாட்டுச் சிறை வேண்டியதில்லை’ என்பவர்கள் ‘எல்லா இலக்கியமும் மக்கள் பற்றிய மக்கள் இலக்கியங்கள் தானே’ எனக் கதை அளப்பர்!
இந்தியாவில் மிகப்பெரும் மேதமைகள் வந்ததுண்டு. க.கை. போல மக்கள் இலக்கியத்தை எவரும் வரையறுத்தது கிடையாது - இது விடுதலைத் தேசிய எழுச்சி உணர்வு இலங்கையில் நிலவிய சூழலின் வெளிப்பாடு!
அங்கே ‘சோசலிச யதார்த்த வாதம்’ , ‘விளிம்பு நிலை மக்கள் இலக்கியம்’ என்ற விதண்டா வாதங்களே வளர்ந்தன!
கைலாசபதி வாயிலாக மக்கள் இலக்கியத்தைக் கற்றுத் தொடர்ந்து பேசி வந்த காரணத்தால் 1997 இல் ‘பின் நவீனத்துவமும் அழகியலும்’ என்ற நூலை வெளிப்படுத்த இயலுமாக இருந்தது; 2002 இல் சவுத் விஷன் வாயிலாக விரிவுபடுத்தப்பட்ட நூலாக அது வெளியிடப்பட்டு இருந்தது. “கலாசாரம் எதிர் கலாசாரம் புதிய கலாசாரம்” என்ற நூலும் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி மேற்கொண்ட விவாதங்களுக்கு உரிய நூல் தான்.
இவை இரண்டும் மறு பிரசுரமாக வேண்டும் என்ற ‘கேள்வி’ எழுந்துள்ளது;
வெளிவரும்!
தொடர்வோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment