Wednesday, October 23, 2024

மத உணர்வில் விடுதலைத் தேசியமும் மத அடிப்படை வாதங்களும் அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் மக்கள் அபிப்பிராயத்தின் ஓரம்சத்தைத் தெளிவுற காட்டியுள்ளது. அதீத தமிழ் வெறியைப் பரப்பி மக்களிடையே பெரும் சலசலப்பை ‘நாம் தமிழர்’ அமைப்பு ஏற்படுத்தி வருவதாகவும் அதன் அறுவடையை இத்தேர்தல் துலக்கமுற எடுத்துக்காட்டும் எனவும் சமூக ஊடகங்கள் அலப்பறை பண்ணிக்கொண்டு இருந்தன. மக்கள் தீர்ப்புத் தெளிவாகவே நாம் தமிழர் அமைப்பை நிராகரித்து இருப்பதனையே இந்தத் தேர்தல் உணர்த்தி உள்ளது. இது சார்ந்து வெளிப்பட்டுள்ள மூன்று கருத்துகள் கவனத்தை ஈர்ப்பன: 1. ஈழத்தமிழர் மத்தியில் யாழ் மேலாதிக்க வாதம் எடுபட்டதைப் போலத் தமிழகத்தில் மேலாதிக்கவாத தேசியம் மேலோங்க இயலாது; தமிழகத்தில் நிலவும் ஜனநாயகப் பண்பு பிரபாகரன் போன்ற ஒரு பாசிசத் தலைவரை அங்கே அனுமதிக்க இடம் தந்துவிடாத அரண்! 2. இதற்கு நேர்விரோதப் பண்பியல் சார்ந்தது இரண்டாந்தரப்புக் கருத்து. புலிகளை முன்னிறுத்திப் பாசிசத் தமிழ் தேசியம் தமிழகத்தின் இளந்தலைமுறை ஒன்றை நாசப்படுத்த இயலுமாய் உள்ள போதிலும் வெகுஜனச் செல்வாக்கை அதனால் பெற்றுவிட இயலாத தடை ஒன்று இருக்கிறது; சாதிய முரண் கூர்மைப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் (1966 இல் அது முனைப்புற்று ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பன்முகப் போராட்டங்கள் இடம்பெற்றன; ஆயினும் அதன் வேர் 1925 இன் மாணவர் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகள், 1944 இல் உருப்பெற்று இயங்கிய சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் செயல்வேகம் என்பவற்றின் அத்திவாரத்தில் ஊன்றி நின்றது) இரட்டைத் தேசியப் பிளவுடன் இருந்த தமிழர்களை ஒன்றிணைத்தது போல தமிழக நிலை இல்லை. தலித் எழுச்சி தமிழகத்தின் தமிழ் தேசியத்தை முறியடிப்பதாக தீடித்திருக்கும்! 3. தமிழ் மக்கள் தமது தாய் மத த்துக்குத் திரும்ப வேண்டும் என்ற நாம் தமிழர் அமைப்பின் முழக்கம் தேசியத்துக்குப் பொருத்தமற்றது. மொழி உணர்வுதான் தேசியத்துக்கு உரியதாக இருக்க இயலும், மத அரசியல் என்பது இந்துத்துவம் போன்ற அடிப்படைவாத பாசிசவாத த்துக்கு வழிகோலும்! தேசியம் குறித்த வர்க்கவாத அணுகுமுறை சார்ந்த தவறின் பாற்பட்ட கருத்துகள் அவை. பழகிப்போன வர்க்க அரசியல் மட்டுமே விஞ்ஞான பூர்வமானது - அதுவே மார்க்சியம் என்ற மயக்கம் கலையாமல் தேசியப் பிரச்சினையைப் புரிதல் கொள்ள இயலாது. தவறான சக்திகள் தேசியவாத, சாதிவாத அரசியலை முன்னெடுத்து அழிவுகள் பெருக க் காரணம் இந்த வர்க்க வாத முடக்கம் என்ற உணர்வு இன்று அழுத்தி வலியுறுத்தப்பட வேண்டும். வர்க்கப் போராட்டம் மட்டும் வரலாற்றை இயக்கும் சக்தியல்ல; சாதி, தேசம் எனும் முழுச் சமூக சக்திகளிடையேயான போராட்டங்கள் ஊடாகவும் வரலாற்று இயக்கம் (சமூக அமைப்பு மாற்றங்கள்) ஏற்பட்டு வரும் மற்றொரு விஞ்ஞான பூர்வ உண்மையையும் புரிதல்கொள்வது அவசியம். ஆதிக்க நாட்டம் உடையவை - விடுதலை நாடுவன என்ற இரட்டைத் தன்மை சாதிகளிடமும் தேசியங்களிடமும் உள்ளன. யாழ்ப்பாணத்தின் சாதியத் தகர்ப்புப் போராட்ட வரலாறு விடுதலைத் தேசிய வகைப்பட்டது. புலிகள் முன்னெடுத்த மேலாதிக்கத் தமிழ் தேசியத்துக்கு வழிவிட்டுக்கொடுக்கும் துரோக வரலாறல்ல அது. வர்க்கவாதச் சிந்தனை வரம்பிட்ட காரணத்தால் பேரினவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை மார்க்சியர்கள் முன்னெடுக்கத் தவறினர்; பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையை ஊக்குவிப்பதாக தமிழ் தேசிய மேலாதிக்கவாத புலிகளின் இராணுவ வாத முன்னெடுப்புகள் அமைந்தன; அவற்றில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான தலித் மக்கள் புலிகளின் போராட்டத்துக்கு களப்பலியானது முற்போக்கு சக்திகள் வரலாற்றைக் கைநழுவ விட்ட துரதிர்ஷ்ட நடைமுறையின் பேறு. அவ்வாறேதான் மத உணர்வு பற்றிய தெளிவின்மை இன்று இந்தியாவில் இந்துத்துவப் பாசிசம் வளர இடமளிப்பதாக உள்ளது. வர்க்கப் போராட்டம் போன்று அல்லாமல் கருத்தியல் ஒடுக்குமுறைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி வடிவத்துக்கு முன்னுரிமை வழங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கான வரலாற்றியலின் சிறப்புப் பண்பு. மதம் அடிப்படை வாத த்துக்கானது மட்டுமல்ல. ஏனைய மதங்களில் விடுதலை இறையியல் சாத்தியப்பட்டுள்ளதைப் போல இந்து விடுதலை நெறியை விவேகானந்தர் முதல் குன்றக்குடி அடிகளார் வரை பலர் எடுத்துக்காட்டி உள்ளனர் அல்லவா? காந்தி முன்னிறுத்திய இராமராச்சியம் விடுதலைத் தேசியக் குரலுக்கு உரியதா இந்துத்துவ இராமராச்சியம் போன்றதா?
பாரதி ஆன்மீக நாத்திக இந்து மதம் ஒன்றை முன்னிறுத்திப் புதிய பண்பாட்டு இயக்கத்தை கட்டியெழுப்ப முனைந்தமையைக் கண்டுகொள்ளாது இருக்கப்போகிறோமா? ஐரோப்பிய நிழலாக எமது வரலாற்றைப் பார்ப்பதில் இருந்து விடுபட்டு வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில் எமது சாதியச் சமூகத்தையும் மதங்களையும் புரிந்துகொள்ள முற்பட வேண்டாமா?

No comments:

Post a Comment