Thursday, October 24, 2024

சுதந்திரப் போராட்டத்தின் தலித் அரசியல் இருபதாம் நூற்றாண்டின் இருபதுகள் காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் வெகுஜனமயப்படத் தொடங்கி இருந்தது. முன்னதாக திலகர், கோகலே போன்றோரது தலைமைகள் பிராமணியத் தேசிய வடிவில் முன்னெடுத்த இயக்கச் செயற்பாடுகளைவிட காந்தியின் தாராளவாத அரைப் பிராமணியத் தேசியச் செயற்திட்டங்கள் மென்மேலும் வெகுஜனங்களைத் தட்டியெழுப்புவதாக அமைந்திருந்தது. நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் காங்கிரஸ் உதயமான போதே ஜோதிராவ் பூலே மராட்டியத்திலும் அயோத்திதாசர் தமிழகத்திலும் ‘மீண்டும் பிராமண மேலாதிக்கத்தை வென்றெடுப்பதே காங்கிரசின் திட்டம்; அந்நியராட்சியில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்ற வாழ்வுரிமைகளைக்கூட சுதந்திரம் அடைந்துவிட்டால் பின்னர் இழந்துவிட நேரும்” என எச்சரித்திருந்தனர். இருபதாம் ஆண்டுகளில் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அக்கறை ஏதும் காங்கிரசிடம் இருந்ததில்லை. முப்பதாம் ஆண்டுகளில் லண்டனில் இடம்பெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தலித் மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை வெற்றிகொண்டதை காந்தியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆரம்ப முதலாகவே தலித் மக்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் அவசியமில்லை, அவர்களும் இந்துக்களே எனக் காந்தி வாதாடி வந்தார். பூனா சிறையில் இருந்தபடி மேற்கொண்ட உண்ணாவிரத மிரட்டலில் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையைக் கைவிடும்படி செய்யப்படும் அரசியலைக் காந்தி நடைமுறைப்படுத்தி இருந்தார். காந்தி இறந்து, அந்தப் பழி தலித் மக்கள் மேல் வரவேண்டாம் என்பதால் அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் என்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே அனைத்தையும் தாரைவார்த்து தோல்வியை அந்த ஒப்பந்தமூடாக அம்பேத்கர் வந்தடையவில்லை. “சமூக நீதிக்கான அறப்போர்” (சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு) நூலில் பி.எஸ். கிருஸ்ணன் பூனா ஒப்பந்தம் வாயிலாக அம்பேத்கர் வெற்றிகொண்ட அம்சங்களை வெளிப்படுத்தி இருப்பதைக் காணலாம். ஒப்பந்தச் சரத்துகளிலேயே சாதி இந்துக்கள் விட்டுத்தர வேண்டிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை பின்னர் காந்தி நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கவும் செய்தார். அதைவிட, காந்தி தன்னளவில் தலித் மக்களது உண்மை நிலவரங்களை அறியாமலே இருந்த தவறை உணர்ந்து கொண்டு ஓரளவிலேனும் அவர்களது கோரிக்கைகளைக் காங்கிரஸ் கவனம் கொள்ளும் வகையில் ஆற்றுப்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பை எழுதும் தலைமைப் பொறுப்பு அம்பேத்கரிடம் வழங்கப்பட வேண்டும் என நேருவிடம் வலியுறுத்தியதே காந்திதான் எனக்கூறப்படும் நிலையையும் பூனா ஒப்பந்தமே ஏற்படுத்திக்கொண்டது எனக் கருத இடமுண்டல்லவா? ‘ஹரிஜனங்கள்’ எனத் தலித் மக்களுக்குக் காந்தி பெயரிட்டதைக் கண்டிப்போர் உள்ளனர்; அதற்கான தர்க்கங்கள் நியாயமானவை. அதேவேளை, அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களையும் சுதந்திரப் போராட்டதில் காந்தி அரவணைக்க முற்படவில்லை எனில் ஏகாதிபத்திய சக்தி மேலும் சில காலம் இந்தியாவை அடிமைப் படுத்தி வைத்திருக்க இடமளிப்பதாகி இருந்திருக்கும் அல்லவா? முழுமையான ஏகாதிபத்தியத் தகர்ப்புடன் விடுதலைத் தேசியம் வெற்றிகொள்ளப்பட இந்தப் படிப்பினை மீட்டுப்பார்க்கப்படுவது அவசியமல்லவா? தேசியத்தின் அனைத்துத் தரப்பினரது கோரிக்கைகளையும் உள்வாங்கி இயங்க வேண்டிய தேவையையே விடுதலைத் தேசிய (மார்க்சியத் திணை) அரசியல் வலியுறுத்துகிறது! இன்றைய இருள் சூழ் நிலை மேலாதிக்க சக்திகளால் வடிவப்படுத்தப்படும் பாங்கு குறித்துப் பலரும் பேசத் தொடங்கி உள்ளனர்! பிரச்சினை, மீள இயலாக் கையறு நிலைக்கு உரிய பலமிழந்த சக்தி நாமெனக் காலங்கடத்துவதை விடுத்து ஆரோக்கியமான தற்காப்பு நடவடிக்கை என எவற்றை மேற்கொள்ள வேண்டும் என்ற தேடலும் இன்றி இருக்கிறோம் என்பதில் உள்ளது! அதன்பேறாக எதிரி விரித்த வலைக்குள் விழுந்து ‘போராட்டம்’ பண்ணி எதிரியின் வெற்றிக்கு எம்மை அறியாமலே உதவும் ‘கபடத்தனங்களுக்கு’ ஆட்பட நேர்கிறது. ‘தவறில் விழுதல் அறிவில் எழுதல்’ என்பது மானுடப் பண்பு - மக்கள் விடுதலைச் சக்திகளுக்கான சிறப்புக் குணம்! அவ்வாறன்றித் தற்செயல் தவறை மறைக்கும் நியாயங்களைக் கற்பித்து, பேசி வந்த கோட்பாடுகளைத் திரிபுபடுத்தும் இழிநிலைக்கு ஆட்பட்டுவிடலாகாது! ‘அரசியலில் நேர்மை - பலத்தின் விளைவு, கபடம் - பலவீனத்தின் விளைவு!’ புதிய சிந்தனைப் பலத்துடன் விடுதலைத் தேசிய மார்க்கத்தைக் கட்டியெழுப்புவோம்! (மீள வலியுறுத்தல்):

No comments:

Post a Comment