Thursday, October 24, 2024

“வன்னிக் குடிசை”: தனித்துவம்மிக்க ஈழப்போராட்ட நாவல் மு.சி. கந்தையாவின் புதிய நாவல் ‘வன்னிக் குடிசை’. பொன்னுலகம் புத்தக நிலையம் டிசெம்பர் 2021 இல் இதனை வெளியிட்டுள்ளது. இவரை முதன்முதலில் மே மாதம் சாத்தூரில் இடம்பெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் சந்தித்தேன். மலையகத்தில் இருந்து புலச்சிதறலுக்கு ஆளாக்கப்பட்ட சி. பன்னீர்செல்வம், அரு. சிவானந்தன் ஆகியோருடன் கவிஞர் மு.சி. கந்தையா அவர்களது பெயரும் இணைந்து பேசப்படுவதனை அறிந்திருந்த போதிலும் மேற்படி மதுரை மாநாடு தான் எங்கள் இடையேயான சந்திப்பைச் சாத்தியம் ஆக்கியிருந்தது! இலங்கைத் தேசிய உணர்வுடன் இளமைச் செயற்பாட்டில் தடம்பதித்த மு.சி.க. பின்னரான இந்தியத் தேசிய அடையாளத்துக்குள் இயங்கிப் பெற்ற அனுபவத்துடன் ஈழப் போராட்ட வாழ்வியலை நாவலாக்கி உள்ளார். படைப்பாக்கத்துக்கான உள்ளார்ந்த அனுபவச் செழுமையும் விமரிசன பூர்வ ஆக்கமாக்க அவசியமான விலகிப் பார்க்கும் சாத்தியமும் இந்த நாவலைத் தனித்துவமிக்கதாக வெளிப்படுத்த உதவி உள்ளது! வெளிப்படையாக இயக்கங்கள் செயற்பட்ட களத்தின் யதார்த்த பூர்வப் படைப்பாக உள்ள அதேவேளை ஆழ்ந்திருக்கும் ‘கவியுள்ளத்துக்கான’ குறியீட்டுப் பாங்குடன் ஆக்கப்பட்டுள்ள பண்பின் காரணமாகப் பன்முக விசாரணைகளை வாசக மனங்களில் ஏற்படுத்திவிடுகிறது. ‘வன்னிக் குடிசை’ என்பதே ஈழப்போராட்ட இயங்கு முறையினதும் இறுதி முடிவினதும் உச்சமான படிமம் என்பதை உணர இயலும். வரலாற்றுப் பாங்கு கையாளப்பட்ட போதிலும் படைப்பாக்கப் புனைவு மயமாக ஆக்கப்பட்டதில் நாவல் வெற்றிபெற்றுள்ளது. இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பேசப்பட்ட பின்னர் சித்திரா அச்சகத்தில் வைத்து இடம்பெற்ற சகோதர இயக்கப் படுகொலை நாவலில் காட்டப்பட்டு உள்ளது. நடைபெற்ற ஒழுங்கு தலைகீழானது. சகோதரப் படுகொலைகள், வெறும் சந்தேகக் கொலைகள் என்பவற்றைச் செய்து இராணுவ வாதச் செயற்பாட்டில் மட்டும் விடுதலையைப் பெற இயலுமென இயங்கி இறுதியில் ஆயுதங்களை மௌனிக்கச் செயத அமைப்பே சித்திரா அச்சக கொலையை முதலில் செய்தது; அதற்கான காட்டிக் கொடுப்பாளர் என்ற சந்தேகத்தின் பேரிலான பழிவாங்கல் கொலைத் ‘தண்டனையே’ இறை-உமை ஆகியோருக்கானது. சமாந்தரமாக இயக்க மோதல்களின் வரலாற்றைப் படைப்பாக்குவதாக இல்லாமல் குறியீட்டுப் பாங்குடன் எமது இயங்குமுறையை வெளிப்படுத்திய வகையில் ஏற்படுத்தப்பட்ட மேற்படி மாற்றம் ஏற்கத்தக்கதே! எந்த அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட அவசியம் இல்லாமல் போராட்ட வரலாற்றின் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்பவற்றை சிறப்பாக இப்படைப்பு வெளிப்படுத்தி உள்ளது. நாவல் குறித்த முழுமையான திறனாய்வு வேறொரு தளத்தில் எழுதப்பட அவசியம் உள்ளது!

No comments:

Post a Comment