Thursday, October 24, 2024
மறைக்கும் மாயநந்தி
- தமிழகத்தின் ‘புலப்பெயர்வு நாவல்’
சொக்கலிங்கம் பிரபாகரன் (பயணத்தொடரில் பிரபாகரென அறிமுகம் செய்திருந்த தோழர்) எழுதி இரண்டு வருடங்களின் முன்னர் சிந்தன் புக்ஸ் வெளியீடாக வாசகர் கரங்களுக்குக் கிடைத்த தனிவகைப் படைப்பு இந்த நாவல்.
சாத்தூரில் இடம்பெற்ற த.க.இ.பெ.ம. 12 வது மாநாட்டில் தோழர் பிரபாகரைச் சந்திப்பேனென எதிர்பார்த்து இருக்கவில்லை; பல நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்றவகையில் அவரை அறிந்திருந்தேன் ஆயினும் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வம் உடையவராக இருப்பாரென எண்ணி இருக்கவில்லை. பங்கேற்கும் வகையில் ஆக்க இலக்கிய கர்த்தாவாக அவர் அங்கே மதிக்கப்பட்டமை புதிய செய்தியாக இருந்தது. பேராசிரியர் ஆனந்தகுமார் அவர் மேல் அதீத மதிப்புக்கொண்டு இருந்தார் (அடுத்து வெளிவரவுள்ள பிரபாகரின் சிறுகதைத் தொகுப்புக்கு இவரே முன்னுரை எழுத உள்ளார்).
மூன்று நாட்கள் மாநாட்டின் இடைவேளைகளில் திணை அரசியல் குறித்து விளக்கங்களைக் கேட்டு விவாதித்தபடி இருந்தார் பிரபாகர். ‘நமது சமூகத்தை அணுகுவதற்கான அடிப்படை அம்சம் இதில இருக்கே; இதை அறிஞ்ச நிலையில, இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட என்னுடைய நாவலை மீள எழுத வேணும் போலிருக்கே’ என ஆதங்கப்பட்டுக்கொண்டு இருந்தார்.
அவ்வாறு நாவல் வந்திருந்த புதிய செய்தி ஆச்சரியம் ஊட்டிய வகையில் அதனைப் பெற இயலுமா எனக்கேட்டேன். அவருடைய வீட்டுக்குச் சென்றதும் கைக்கு எட்டிய படைப்பைப் படிக்கத் தொடங்கி விமானம் ஏறுமுன்னரே படித்து முடித்துவிட்டேன். இப்போதுதான் பதிவு சாத்தியமாச்சு (ஏனைய பல புத்தகங்களையும் படித்தபடி இருக்கிறேன்; ஒன்றொன்றாகப் பதிவிடுவேன்).
இந்த நாவல் புலம்பெயர் படைப்பு என்றதும் எந்த மேலைத்தேசத்துக்கு உரியது என்ற கேள்வி எழுந்து இருக்கலாம்; இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் வடிவத்துக்கு உரிய தொழிற்சங்கப் போராட்டம் காரணமாகத் தமிழ்நாட்டில் இருந்து உத்தரப்பிரதேசம் - லக்னோவுக்கு தூக்கிவிளாசப்பட்ட வசந்தன் இந்நாவலின் பிரதான கதாமாந்தன். லக்னோ தான் பிரதான கதைக்களம். வெவ்வேறு காரணங்களால் அங்கு வந்து பணியாற்றிய தமிழகத்தவரே பெரும்பாலான பாத்திரங்கள். அந்த ஊர்வாசிகளும் இந்தியாவுக்கு உட்பட்ட வெவ்வேறு தேசத்தவரும் (இந்தியா பல்தேசக் கூட்டு என்பதை இந்துத்துவம் நாசப்படுத்த முனைந்த போதிலும் அங்குள்ள மக்கள் அந்தப் புரிதலுடன் கொண்டும் கொடுத்தும், முரணுற்றும் சேர்ந்து இயங்கியும் அழகுற வாழ்வதனை இந்தப் படைப்பும் காட்டுகிறது) கதை மாந்தர்களாக இடம்பெறுகின்றனர்.
தமிழக கம்பெனி லக்னோவைச் சுரண்டுவது பற்றி ‘தென்னாட்டவர்களே வெளியேறுங்கள்’ என்ற போராட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றமையையும் கதை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் ‘வடக்கத்தியரை வெளியேற்றுவோம்’ என்ற தமிழ் தேசிய முழக்கங்கள் அவ்வப்போது எழுந்தாலும் பல்தேச உணர்வோடு தமிழக மக்கள் அனைவரையும் அரவணைத்து வாழ்வதைப்போல அங்கேயும் இந்திக்கார மக்கள் நம்மவரோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தபடி!
எதிர்பாராத வேளை, தொழிற்சங்கப் பழிவாங்கலுக்கு எதிரான போராட்ட வெற்றியால் வசந்தன் தமிழகம் திரும்பும்போது லக்னோ மக்கள் வழங்கிய பிரியாவிடை இத்தகைய இரத்தமும் தசையுமான பிணைப்பைக் காட்டவல்லது. அங்கேயும் மக்கள் விடுதலைக்கான ஒரு கொம்யூனிஸ்ட்டாகப் போராட்டங்களை முன்னெடுத்து அந்த மக்களுறவை அவன் சம்பாதித்து இருந்தான் என்பது கவனிப்புக்கு உரிய அம்சம்!
ரத்தினசாமி சாருக்கு வசந்தன் எழுதும் கடிதம், அதனை வாசித்துச் செல்லும்போது இடையிட்டு அவரிடையே எழும் எண்ண அலைகள் என்ற வடிவில் நாவல் நகர்ந்து செல்கிறது. அதிகார மோகங்கொண்ட ரத்தினசாமி, மக்கள் விடுதலை நாட்டத்துடன் தனது வாழ்க்கைப் போராட்டங்களை முன்னெடுக்கும் வசந்தன் என்ற எதிர்நிலைப் பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறும் இந்தப் படைப்பானது, திணை அரசியல் கண்ணோட்டத்தை உள்ளுணர்வாக கொண்டு இருந்தவாறு சொ. பிரபாகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது எனக் கணிக்க ஏற்றதாக உள்ளது.
‘வெறும் வர்க்க மோதல் புரிதலுடன் இந்த நாவலை எழுதிவிட்டேன்; திணை அரசியல் புரிதலுடன் அதனைத் திரும்ப எழுத வேண்டும்போல இருக்கிறது’ எனத் திரும்பத் திரும்பக் கூறினார். மக்கள் ஊடாட்டங்கள் என வரும்போது வெறும் வர்க்கவாதியாக இல்லாமல் சமூக மாற்ற நேசிப்புடன் அனைவரையும் அரவணைத்து இயங்கும் மார்க்சியருக்கான இயல்பண்பு வெளிப்படும் வகையில்,
இப்படைப்பு திணை அரசியல் சிந்தனைக்கு உரியதாக எனக்குப் படுகிறது.
எதையும் வேகமாக உள்வாங்கித் தனக்கு உரியதாக வளர்த்தெடுப்பவர் பிரபாகர். “இந்துத்துவம் இந்து சமயம் சமூக மாற்றங்கள்” நூலைப் படித்ததும் தோழர் பாலாஜி உடன் வீடுதேடி வந்து அவர் உரையாடியது பற்றி எழுதி இருக்கிறேன். இந்தப் புதிய கண்ணோட்டத்தில் இதே படைப்பை இன்னும் வீச்சானதாக வெளிப்படுத்த அவரால் இயலும் என்பதனை மறுக்க இயலாது (இந்தப் பார்வைத் திறன் இயல்பாக உள்ளதனாலே தான் கற்பூர வேகத்தில் மாற்றுக் கருத்தைக் கிரகித்து விடுகிறார் என்பதைக் கவனங்கொள்வோம்).
விரிவாக விமரிசனம் எழுத அவசியம் உடைய படைப்பு; இந்த அறிமுகத் தூண்டல் நூலைப் பெற்றுப் படிக்கும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன்.
புலப்பெயர்வுக் களம் என்ற வேறுபட்ட வாழ்வியலை இன்னும் பல கதைகளாக வைத்துள்ள அவரது எழுத்தார்வம் மென்மேலும் பெருகும் வண்ணம் இந்த நூலுக்கான ஆதரவை வழங்குவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment