Wednesday, October 16, 2024
உள மகிழ்வுத் தொழிலுடன்
வாழ்வை நேசிக்கும்
மனிதர்கள்
இப்போதும் உள்ளனர்
ஶ்ரீலேக்கா பேரின்பகுமார் இன் “கோவர்த்தனம்” நாவலைப் படித்து முடித்ததும் மேலேயுள்ள தலைப்புத்தான் மனதிலாகியது!
“நிதானமான சமூகத்தை நோக்கி” என்கிற சிறி ஹெட்டிகே (தமிழாக்கம்: பேராசிரியர்கள் சோ. சந்திரசேகரன், மா. கருணாநிதி) இன் நூலைப் படிக்கத் தொடங்கி இடையிட்டு இந்த நாவலைப் படித்தேன்; வாழ்வியலைப் பறையும் அற்புத நாவல் என்பதால் ஒரே மூச்சாகப் படித்து முடித்தேன். சிறி கெட்டிகே, இன்றைய நிதானமிழந்த சமூக நியதிக்கான அடிப்படைகளில் ஒன்றாக “இன்று பெரும்பாலானவர்களுக்கு வேலை என்பது ஒரு வருமான மூலாதாரமாகவே உள்ளது. வேலையானது திருப்தி, அடைவு, நிறைவு, கௌரவம், பெருமை என்பவற்றைத் தருவதாக இல்லை” என்பதனைக் குறிப்பிடுவார்.
மாறாக, மன்னார் மக்களது வாழ்வோடு கலந்த
மாட்டுப்பட்டிக்கு மாடுகளைச் சாய்த்துச் சென்று சில மாதங்கள் காட்டினுள் வாழும் இயற்கை அம்சத்தை நாவலாக ஆக்கித் தந்த ஶ்ரீலேக்கா
நிதானமான சமூக ஓட்டம் ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார்.
இரண்டு நண்பர்கள் அவ்வாறு பட்டிக்கெனத் தேத்தாதீவுக்கு மாடுகளை ஓட்டிச் செல்வதோடு தொடங்கும் “கோவர்த்தனம்”, நிறைவாக மீண்டும் மாடுகளோடு வீடு திரும்புவதோடு முடிவுக்கு வரும்; அந்த வாழ்விலும் நெருக்கடிகளோடு இடையிடையே சலிப்புகள் தலைதூக்கின என்ற போதிலும் ஏற்புடைய சன்மானத்தாலும் வாழ்வியல் மகிழ்வாலும் மனம் நிறைவான நிலையில்
“யூலி என்னதான் இருந்தாலும் இப்படி வந்திட்டுப் போறதில ஒரு சந்தோசம் இருக்கு” எனச் செபஸ்ரியன் சொல்லக் காணலாம். யூலியனும் உடனே “நான் சொல்ல நினைக்கிறன் நீ சொல்லுறா மச்சி” (பக்கம் 134) என்பான்; 136 பக்கங்களுடன் நாவல் நிறைவு பெற்றது!
அந்தக் காலத்தில் சில ஆசிரியர்கள் கல்வியின் தாற்பரியம் உணராமல் - தமக்கு உள்ள தகுதியீனத்தை மறைக்க, “உனக்குப் படிப்புச் சரிவராது, மாடு மேய்க்கப் போடா” எனச் சொல்வதுண்டு.
மாடு மேய்ப்பது
அறிவோர் தொழில் என்பதை
இந்த நாவல் எடுத்துக் காட்டுகிறது; மட்டுமன்றிப்
படிப்பால்
வாழ்வைத் தொலைத்த தொழில்களோடு அல்லாடுகிறவர்களைக் கொண்ட இந்த உலகில்
மாடு மேய்த்து மகிழ்வையும் வாழ்வியல் செழிப்புகளையும் எட்டிய மாந்தர்களை இப்படைப்பு வெளிப்படுத்தி நிற்கிறது.
இன்று பெண் படைப்பாளுமைகள் மேலோங்கி வரும் காலம்; கல்வி, தொழில் துறைகள் எனப் புற வாழ்வில் போல மன வெளிப்பாட்டுக்கு உரிய ஆக்க இலக்கியங்களிலும் பெண்கள் மிகக் காத்திரமாகத் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிறுகதைகளில் சாதனை நிலைநாட்டிய ஶ்ரீலேக்கா நாவல் படைக்க வேண்டுமென மறைந்த தெணியான் வலியுறுத்தியதை (பின்னட்டையில் உள்ளது; கீழே படத்தில் காணலாம்) ஏற்று ஶ்ரீலேக்கா படைத்த முதல் நாவலே முழு நிறைவானதாக அமைந்துள்ளது!
ஜீவநதி வெளியிட்டுள்ள இந்த நூலை வாங்கிப் படித்து எமக்கான ஆற்றல்களை வளர்ப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment