Thursday, October 3, 2024
ஜனநாயகம்-குடியுரிமை
என்பவற்றை வென்றெடுக்க
சாதிகளிடையேயான
சமத்துவத்துக்காகப்
போராடுவோம்
கிமு ஆறாம் நூற்றாண்டு முதலாக வீறுடன் வரலாறுபடைக்கத் தொடங்கிவிட்ட தமிழகம் விவசாய மேலாண்மையால் வரலாற்றைத் தொடக்கும் ஏனைய சமூகங்களினின்றும் வேறுபட்ட தொடக்கத்தைக் கொண்டிருந்தது.
விவசாயம் சாராத இயற்கைப் பொருட்களையும் அக்காலத்துக்கான நுட்பத்திறன் மிக்க கைத்தொழில் பண்டங்களையும் வணிகமயப்படுத்த இயலுமாக இருந்தமையால் புவியமைப்புச் சார்ந்த நான்கு திணைகளாக இயங்கின; அவையொவ்வொன்றும் மன்னராட்சியைப் பெற்றிருந்த பொழுதிலும் ஒப்பீட்டு ரீதியில் சமத்துவ ஊடாட்டங்களை ஒன்றுடன் ஒன்று ஏற்படுத்தியவாறு வாழ்வியலைத் தொடர்ந்தன.
பெரியளவான நெல்லுற்பத்தியுடன் மருத திணை ஏனைய திணைகளை வென்றடக்கும் முடிவேந்தராட்சி சாத்தியப்பட்ட பின்னர் திணைச் சமத்துவம் தகர்ந்தது. மேலாதிக்கம்பெற்று நிலக்கிழார்களான மருத திணை உடைமையாளர் பிராமணருக்கும் நிலங்களைப் பகிர்ந்துகொண்டு வெள்ளாளரெனும் சாதிகள் ஆகினர். பிராமணியம் தமக்குள் மேலாதிக்கத்தில் பிராமணரை உயர்பீடத்துக்கு உரியோர் என ஆக்குவதனைக் கண்ட பொழுது, பின்னாலே வெள்ளாளர்களுக்கான சைவ மடங்கள் ஊடாகத் தமக்கேயுரிய சைவசித்தாந்தம் எனும் தனித்துவமிக்க த த்துவ நெறியை வெள்ளாளர்கள் உருவாக்கிக்கொண்டனர்.
நிலக்கிழார்கள் தொடர்ந்தும் மேலாதிக்க சக்திகளாக இருக்க இயலவில்லை. கிபி 2 முதல் 7 ம் நூற்றாண்டுகளில் வணிகச் சாதியினரின் மேலாதிக்கம் இருந்தது. மீண்டும் நிலப்பிரபுக்களாக வெள்ளாள-பிராமணர் மேலாதிக்கத்தை வென்றெடுப்பதற்கான பக்தி இயக்கம் காரைக்காலம்மையாரால் தொடக்கப்பட்டு இருந்ததென அறிவோம்.
அவர் வணிகச் சாதியைச் சேர்ந்தவர். பின்னர் கிபி 7 ம் நூற்றாண்டில் பக்திப் பேரியக்கத்தை வீறுடன் முன்னெடுத்த நாவுக்கரசருக்கு அப்பூதியடிகள் என்ற வணிகர் நட்பாளலாக இருந்ததையும் அறிவோம்!
வீழ்த்தப்படும் மேலாதிக்க சக்திக்குள் இருக்கும் வர்க்க வேறுபாடு, பெரும் பணக்குவை கொண்டிராத கீழ் மட்டத்தவரை எதிர் தரப்புடன் ஐக்கியப்பட வைத்துவிடுகிறது!
இன்று சாதி மேலாதிக்கங்களை, காப்பிரேட் ஏகாதிபத்தியத்தைத் தகர்ப்பதற்காக அனைத்துச் சாதிகளிலுமுள்ள உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய வரலாற்றுக்கட்டம்!
எந்தச் சாதியும் புனிதமானதல்ல, உடலுழைப்பாளரை இழி சாதியெனக் கேவலப்படுத்திய பிராமணியமே அசிங்கமானதெனச் சாடி, உழைப்பைப் போற்றும் புதுயுகம் படைப்போம்!
பொருளாதார-பண்பாட்டுச் சமத்துவத்தை வென்றெடுப்பதன் வாயிலாக சாதிகளற்ற பொதுமைச் சமூகத்தை வென்றெடுப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment