Tuesday, October 22, 2024
"எனக்கு நானே கடவுள்... எனக்கு நானே பக்தன்... என் வாழ்நாள் எல்லாம் திருநாள்... மரணம் எனக்கு கரிநாள்!"
நேற்று(8.4.2015) ஜெயகாந்தன் தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார் என்ற செய்தியைக் காலையில் தெரிந்துகொண்ட போது உடன் அதிர்வொன்று இருந்ததாயினும் அவருக்கேயான தளத்தில் அவரது செயற்பாடு அற்றுப்போய்ப் பலகாலம் என்ற நினைப்பும் கூடவே வந்தது. மீறி வந்த அதிர்வு அவரது செயற்பாட்டின் கனதி சார்ந்தது.
ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன் ,ரா.பி.சேதுப்பிள்ளை, தி.க.சிவசங்கரன், வ.ரா., திருலோக சீதாராம், தி.ஜ.ரங்கநாதன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி,கண.முத்தையா, ப.நீலகண்டன், ஆர்.சண்முகசுந்தரம், சாலிவாகனன், ஆதித்தனார், அகிலன், தொ.மு.சிதம்பர ரகுநாதன், கு ப இரா , மு வரதராஜன் ,ஏ.கே. செட்டியார், இளங்கோவன், நாரண துரைக்கண்ணன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி என்று நீண்டு தமிழின் எழுத்தாளர்கள் எம் காலத்து சொத்துக்கள்!
சென்ற நூற்றாண்டின் அறுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் தமிழ்ச்சிறுகதை உலகின் கவனத்தை ஈர்த்த ஜெயகாந்தன், எழுபதுகளில் நாவலாக்கத்திலும் தடம் பதித்தார். கூடவே சினிமாவிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அனைத்துத் தளங்களிலும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தத்தவறியதில்லை. ஒருவர் தனது பலத்தையே பலவீனத்தின் எல்லைக்கு கொண்டுபோவதற்கு உதாரணமாய்ப் பல சந்தர்ப்பங்களில் தன்மீது கவனத்தை ஈர்க்கும் புகழ்நாட்ட மோகத்திலும் அவசியமற்ற அதிர்ச்சிக்கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதற்காக அவர் ஏற்படுத்திய சாதகமான அதிர்வுகள் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறைத்து மதித்துவிட இயலாது. எனது உணர்வு சார்ந்து ஒரு பதிவு. எனது மன்றத்தில் நண்பர்களுடன் பண்பாட்டு செயற்பாட்டின் ஒரு அங்கமாக இலக்கிய ஒன்றுகூடலில் சிறுகதை எழுதி வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்த எழுபதுகளின் நடுக்கூறில், அவை சமூக சீர்திருத்தத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. சமூக மாற்றக் கருத்தியலை வந்தடைந்த நண்பர்கள் என் போதாமையை விமர்சித்தனர். சமூக மாற்ற உணர்வை ஏற்படுத்தும் எழுத்துக்கு உதாரணமாக ஜெயகாந்தனின் சிறுகதைகளைச் சொன்னார்கள்.
அவரைப் படிக்கத்தொடங்கிய போது பெரும் அதிர்வுக்குள்ளானேன். அதுவரை போற்றிவந்த மதிப்பீடுகள் குலைக்கப்பட்டன. சமூகத்தின் ஒழுங்குகளை மட்டுமே பார்க்கப்பழக்கப்பட்ட எனக்கு வேறொன்றான உண்மை உலகு காட்டப்பட்டபோது ஏற்க இயலாதிருந்தது. ஆயினும் சமூகம் இத்தகைய முரண்பாடுகளோடும் போராட்டங்களோடும் உள்ளமையை வாழ்க்கையனுபவம் உணர்த்தியபோது அவரது எழுத்துகளில் இணங்கிப்பயணிக்க கற்றுக்கொண்டேன்.
அவரது "அக்கினிப்பிரவேசம்" சிறுகதை ஆனந்த விகடன் இதழில் வந்தவுடன் அதனை எடுத்துச்சென்று ஆனந்த விகடன் காரியாலயத்தின் முன் எரித்தவர்கள் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். அவர்களாவது பரவாயில்லை, வாசிப்பது பாதுகாப்பானதாயிருக்க விரும்புகிறவர்கள்; சமூகத்தை உய்விக்க எழுதுகிறோம் என்று எழுத வந்த நாலைந்து படைப்பாளிகள் அந்தச் சிறுகதை முடிவை மாற்றி எழுதிக்காட்டியமை ஆரோக்கியமான சிந்தனையே தமிழ்ச் சமூகத்தில் இருக்க மடியாதோ என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தது.
அத்தகைய பண்பாட்டுக் காவலர் விரும்புமாறு நடந்தால் எத்தகைய சமூகச் சிதைவுகள் ஏற்படும் என்பதையும் சம்பத்தப்பட்ட பாத்திரங்களின் வாழ்வு எவ்வாறெல்லாம் கெட்டழியும் என்பதையும் காட்ட அவர் எழுதிய நாவல் "சில நேரங்களில் சில மனிதர்கள்". இது சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றது, சினிமாவானபோது நடித்திருந்த லட்சுமி தேசிய விருதைப்பெற்றார்(தமிழ்ப் படமொன்றில் ஒரு நடிகைக்கான முதல் வாய்ப்பு).
ஒரு கம்யூனிஸ்டாகத் தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய அவர் ஆனந்த விகடன், தினமணி கதிர் முதலான ஜனரஞ்சக இதழ்களில் பெரும் பிரபலம் பெற்றபோது, அவர் மார்க்சீயத்திலிருந்து விலகுகிறார்,ஜெயகாந்தனின் வளர்ச்சியில் ஒரு பாரிய மாற்றம் அல்லதுவேறு தொடக்கம் எனலாம். மார்க்சீயத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் கவனம் கொள்கிறார் என்கிற விமர்சனங்கள் மட்டுமே இருந்தன. இறுதிக்காலங்களில் அவர் மார்க்சீய விரோதியாகி விட்டார் என்கிற அளவிற்கு அவரது இந்தக் காலகட்ட எழுத்துக்கள் விமர்சனங்களை எதிர் கொண்டன. ‘ஜெய ஜெய சங்கர’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘ஹரஹர சங்கர’ முதலியன அவரது இறுதிக் காலகட்டப் படைப்புகளில் சில அவற்றைச் சொல்லின.இருந்தும் மார்க்சீயம் முன்வைக்கும் பொதுவுடமைச் சிந்தனைகளின்பால் விரக்தியையோ, வெறுப்பையோ ஏற்படுத்தி விடாது . மாறாக உலகை, மக்களை, சமூகத்தை ,தேசத்தை ,எல்லாத் தரப்பு மக்களையும் வெறுப்பின்றி நேசிக்கும் மனநிலையைத்தான் அவை ஏற்படுத்தும் . மாற்றத்திற்கான உதாரணமிக்க எழுத்தாக காட்டவியலாத பல குழறுபடிகளையும் கூடவே கொண்டுள்ளார் ஜெயகாந்தன். சங்கர மட சங்கமிப்பு, இந்திய அமைதிப்படை அட்டூழியங்களை ஈழ மண்ணில் செய்து கொண்டிருந்தபோது வக்காலத்து வாங்கி எல்லை கடந்து எழுதியதோடு வானொலியில் முழங்கியமை எனக் குற்ற விமரிசனம் செய்ய நிறைய உண்டு; அவற்றை மீறி, தனது நினைவை உலகு போற்றும் வண்ணம் சாதகமான பலபக்கங்களை அவர் விட்டுச்சென்றுள்ளார். அவரை நேசிக்கும் இலக்கிய நெஞ்சங்களோடு துயரைப் பகிர்வதுடன் எனது அஞ்சலியையும் இணைத்துக்கொள்கின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment