Thursday, October 24, 2024

முன்னரே சொன்னோம் என்பது முக்கியமல்ல; தடுக்கத்தவறுகிறோம் என்ற குற்ற விமரிசனம் தவிர்க்கவியலாதது - இனி என்ன செய்ய வேண்டும் என்பதே தீர்மானகரமானது மார்க்சிய நோக்குக் கைவரப்பெற்ற எவரும் மாறிவரும் உலக ஒழுங்குச் செல்நெறியின் அடிப்படை அம்சங்களை வேறெவரை விடவும் துல்லியமாக கண்டு, காட்ட வல்லவர்களாக இருப்பர்! பத்து வருடங்களுக்கு முன்னர் கனடாவில் முதன்முதலாக வெளியிட்ட “இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்” நூலில் பிராந்திய மேலாதிக்க நாடான இந்தியா இலங்கையை எவ்வாறு கையாள்கிறது என்பது பற்றிச் சொன்ன விடயங்களை மீட்டுப் பார்த்தேன் (இந்த நூல் பின்னர் இலங்கையில் வெளியாகி இப்போது சவுத் விஷன் வாயிலாகத் தமிழகத்திலும் கிடைக்கிறது). கூடவே இந்தியாவை எவ்வாறு கணிப்பது என்ற கேள்வியும் அங்கே எழுப்பப்பட்டு இருந்தது! அமெரிக்கத் தலைமையிலான மேலைத்தேசங்களின் ஏகாதிபத்திய அணி உடன் வலுவாக இணைப்பை ஏற்படுத்தி வரும் இந்தியா ருஸ்யாவுடனும் உறவாடுகிறது; மட்டுமல்லாமல் இந்திய-சீன-ருஸ்யக் கூட்டுப் படைகளின் இராணுவ ஒத்திகை நிகழ்விலும் பங்கேற்கிறது (முன்னதாக அமெரிக்காவுடனான ஒத்திகையும் இடம்பெற்றது). இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்குப் ‘பாடம் கற்பிக்கும்’ எந்தவொரு நடவடிக்கையையும் மேலாதிக்க சக்திகளால் மேற்கொள்ள இயலவில்லை. பத்து வருடங்களின் முன்னர் முதல் பத்துப் பொருளாதார முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்க வாய்ப்பற்று இருந்த இந்தியா இன்று பிரித்தானியா வகித்திருந்த ஐந்தாவது இடத்தைப் பெற்றுவிட்டது (இந்தியாவைச் சுரண்டி ஒட்டாண்டி ஆக்கிய பிரித்தானியா ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி என்பன இந்தியாவுக்கு முன்னே உள்ளன). அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி என்பன தொடர்ந்து முன்னேற இயலாத நெருக்கடி நிலையை அடைந்து வருவதனால் முதல் நிலைக்குச் சீனாவும் இரண்டாவது இடத்துக்கு இந்தியாவும் வருவதற்கான மாற்றப்போக்கு வளர்ந்து வருகிறது! இத்தகைய வரலாற்று மாற்றப்போக்கைத் தடுக்க இயலாத ஏகாதிபத்திய அணிக்கு முன்னாலுள்ள சவால் சீனா; புதிய வடிவில் சோசலிச மாற்றத்தின் வாயிலாக உலகை மறு கட்டமைப்புக்கு உள்ளாக்க முயற்சிக்கும் சீனாவின் செயலொழுங்கைத் தடுக்க வேண்டி உள்ளதன் காரணமாக இந்தியாவை ஏகாதிபத்திய அணியின் முன்னணிச் சக்தியாக வளர்த்தாக வேண்டிய நெருக்கடி மேற்குலகுக்கு! இலங்கை மீது இந்தியா மேலாதிக்கவாத நடைமுறைகளை மேற்கொள்வதனை மூடிமறைக்கும் காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக ஊதுகுழல்கள், சீனாவின் பிரிக்க இயலாத பகுதியே தைவான் எனக் கோட்பாட்டு அளவில் ஏற்றுக்கொண்ட போதிலும் ‘சீனா தைவானை ஆக்கிரமிக்க முற்படுகிறது’ என அபாண்டமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது!
பாட்டாளி வர்க்கச் சோசலிச நிர்மாணத்தில் இருந்து வேறுபட்ட வடிவத்தை உடைய விடுதலைத் தேசியச் சோசலிச நிர்மாணத்தைச் சீனா மேற்கொண்டு வருகிறது. அதன் பிரதான அம்சம், தேசங்களும் தேசிய இனங்களும் ஏகாதிபத்தியத்தாலும் பேரினவாதத்தாலும் சுரண்டப்படாமல் பூரண விடுதலை பெற்றுத் தேசங்கள் இடையே சமத்துவத்தை ஏற்படுத்துதல். அவ்வகையில் நாடுகளுடன் சிறியது - பெரியது என்ற வேறுபாடு பாராட்டாது உறவாடும் சீனாவை ஆக்கிரமிப்பாளராகக் காட்டுவதற்குத் தைவான் விவகாரத்தை மேலாதிக்க நாடுகள் கையாள்கின்றன. மாற்று வழி இல்லாத போது வன்முறை வாயிலாகத் தைவானை மீட்டெடுக்கும் நிர்ப்பந்தம் சீனாவுக்கு ஏற்படலாம்! ஏகாதிபத்திய ஊடக மோசடிகள் அந்த அவசியமான (சீனாவுக்கான இறைமையையும் சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாக்கும்) நடைமுறையை ‘ஆக்கிரமிப்புச் செயற்பாடு’ எனப் புலம்பித் தள்ளும்போது இலங்கை தன்னை இந்தியாவுடன் இணைக்கும்படி ‘கெஞ்சிக் கேட்டு’ அதனது சுதந்திரத்தை இழந்து போயிருக்கும் (ஏற்கனவே முப்பது வருட யுத்தம் ஊடாக இறைமையை இந்தியாவிடம் கையளித்தோம்; இந்தியாவை விடவும் வலுவான வாழ்வியலைக் கொண்டிருந்த இலங்கை ஒட்டாண்டி நிலைக்குள்ளாக நேர்ந்து, இந்தியா ஐந்தாவது பொருளாதார வல்லரசாக வளர இயலுமான மாற்றச் செல்நெறி இந்திய இராஜதந்திரத்தின் நுட்பமான கையாளுகையின் பெறுபேறு. இன்றைய சுதந்திரத்தைப் பறித்தெடுக்கும் இந்திய இராஜதந்திரத்துக்கு ஊடகப் பரப்புரையாளர்கள் பேருதவி நல்கி வருகின்றனர்). இதுவரை இனவாதப் பிளவுகளால் வீழ்ச்சியின் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்ட நாம் இனியாவது விழிப்படைய வேண்டாமா? புதிய உலக ஒழுங்குக்கான மார்க்சியத் திணை அரசியல் பற்றிக் கற்றுச் செயற்பட முன்வர வேண்டாமா?
சாதியத் தகர்ப்பு அரசியல் முன்னெடுப்பில் ஆனந் டெல்டும்ப்டெயின் மகத்தான பங்களிப்பு எழுபதாம் ஆண்டுகளில் மார்க்சிய இயக்கம் வீறுடன் போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூழலில் விரைவில் சோசலிசப் புத்துலகு சாத்தியம் என்ற நம்பிக்கை உலக நாடுகள் பலவற்றிலும் இருந்தது! இலங்கை அத்தகைய நம்பிக்கைக்கு உரிய முன் வரிசை நாடாக இருந்ததன் பேறாக வலதுசாரி மக்கள் விரோத ஐதேக அரசு எண்பதாம் ஆண்டுகளில் இனவாத யுத்தத்துக்கு நாட்டை ஆட்படுத்தியது; முப்பது வருடங்கள் நீடித்த போரின் முடிவில் இறைமையை இழந்து போனமை முதல் சருக்கம். இன்றைய இரண்டாம் சருக்க முன்னெடுப்பைக் கடந்தவாறு இருக்கிறோம்! இன்னொரு வடிவில் இன-மத வாதங்கள் மேற்கிளம்பி வருகின்றன; எண்பதுகளில் ஜே.ஆர். ஜெயவர்த்தன கையாண்ட இராஜதந்திரக் கையாளுகையை அவரது மருமகனார் கனகச்சிதமாக இன்று முன்னெடுத்து வருகிறார்! நாட்டின் சுதந்திரத்தையும் மேலாதிக்க வல்லரசிடம் கையளிப்பதற்கான ‘இரத்தம் சிந்தாத யுத்தமான’ இன்றைய அரசியல் முன்னெடுப்புகள் வாயிலாக, இன-மத கலவரங்களைத் தோற்றுவிப்பதற்கு ஏற்ற இனக்காழ்ப்புணர்வுகள் காப்பிரேட் ஊடகங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன! தம்மையும் அறியாமல் பலர் ‘கஞ்சிக் கலயங்கள்’ ஏந்தியவர்களாக இன்றைய இன வெறுப்பு நெருப்புக்கு எண்ணை ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள்!
இலங்கையை விழுங்கி ஏப்பமிடும் ஏகாதிபத்தியமாக இன்று இந்திய வளர்ச்சி அபரிமிதமாக விஸ்வரூபம் எடுத்து விட்டது; மக்கள் சீனச் ‘சந்தைச் சோசலிச’ முன்னெடுப்பானது ஒடுக்கப்படும் தேசங்களுக்குக் கலங்கரை விளக்காக அமையும் என்பதால் இந்தியாவை ‘ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம்’ தமக்கான தலைமைக் கேந்திரமாக அமையுமாறு இவ்வகை வளர்ச்சியைச் சாத்தியமாக்கி உள்ளது! இந்திய விடுதலைப் போராட்ட சக்திகளும் எழுபதுகளில் தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுத்தனர்! ருஷ்ய பாணி, சீனப் பாதை என்பதான விடுதலை மார்க்கங்கள் குறித்து முனைப்புக் காட்டிய அளவுக்கு இந்தியச் சமூக நிதர்சனத்தை எவரும் கவனங்கொள்ளவில்லை; இந்தக் கண்மூடித்தனமான வரட்டுவாத நிலைப்பாடு காரணமாக வரலாறு, புரட்சிகர சக்திகளது கைகளை விட்டு விலகி ஏகாதிபத்தியச் சுயநிர்ணய வழித்தடத்தை இந்தியா முன்னெடுக்க இடமளித்துள்ளது! பார்க்கத் தவறிய பக்கத்துக்கு கவனத்தைக் குவிப்பதற்கென எழுதப்பட்ட நூல் ஆனந்த் டெல்டும்ப்டெ இன் “ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்.” மார்க்சிய அணிகளும் வர்க்கவாதங்கடந்து இந்தியச் சமூகச் சிறப்பம்சத்தைக் கவனங்கொள்ளவில்லை; தலித்திய அணிகளும் சாதிவாத முடக்கங்களை விட்டொழித்து வர்க்கப் பார்வையின் அவசியத்தை விளங்க முயற்சிக்கவில்லை! இரு அணிகளாலும் கைவிடப்பட்ட நூலாசிரியர் இந்துத்துவ ஆட்சியாளர்களால் சிறையிடப்பட்டு உள்ளார். மார்க்சியர்களாக வலம் வருவோருக்குப் புரியாத மார்க்சியம் இந்துத்துவத்துக்கு விளங்கியுள்ளது என்பது பேரவலம்!
மறைக்கும் மாயநந்தி - தமிழகத்தின் ‘புலப்பெயர்வு நாவல்’ சொக்கலிங்கம் பிரபாகரன் (பயணத்தொடரில் பிரபாகரென அறிமுகம் செய்திருந்த தோழர்) எழுதி இரண்டு வருடங்களின் முன்னர் சிந்தன் புக்ஸ் வெளியீடாக வாசகர் கரங்களுக்குக் கிடைத்த தனிவகைப் படைப்பு இந்த நாவல். சாத்தூரில் இடம்பெற்ற த.க.இ.பெ.ம. 12 வது மாநாட்டில் தோழர் பிரபாகரைச் சந்திப்பேனென எதிர்பார்த்து இருக்கவில்லை; பல நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்றவகையில் அவரை அறிந்திருந்தேன் ஆயினும் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வம் உடையவராக இருப்பாரென எண்ணி இருக்கவில்லை. பங்கேற்கும் வகையில் ஆக்க இலக்கிய கர்த்தாவாக அவர் அங்கே மதிக்கப்பட்டமை புதிய செய்தியாக இருந்தது. பேராசிரியர் ஆனந்தகுமார் அவர் மேல் அதீத மதிப்புக்கொண்டு இருந்தார் (அடுத்து வெளிவரவுள்ள பிரபாகரின் சிறுகதைத் தொகுப்புக்கு இவரே முன்னுரை எழுத உள்ளார்). மூன்று நாட்கள் மாநாட்டின் இடைவேளைகளில் திணை அரசியல் குறித்து விளக்கங்களைக் கேட்டு விவாதித்தபடி இருந்தார் பிரபாகர். ‘நமது சமூகத்தை அணுகுவதற்கான அடிப்படை அம்சம் இதில இருக்கே; இதை அறிஞ்ச நிலையில, இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட என்னுடைய நாவலை மீள எழுத வேணும் போலிருக்கே’ என ஆதங்கப்பட்டுக்கொண்டு இருந்தார். அவ்வாறு நாவல் வந்திருந்த புதிய செய்தி ஆச்சரியம் ஊட்டிய வகையில் அதனைப் பெற இயலுமா எனக்கேட்டேன். அவருடைய வீட்டுக்குச் சென்றதும் கைக்கு எட்டிய படைப்பைப் படிக்கத் தொடங்கி விமானம் ஏறுமுன்னரே படித்து முடித்துவிட்டேன். இப்போதுதான் பதிவு சாத்தியமாச்சு (ஏனைய பல புத்தகங்களையும் படித்தபடி இருக்கிறேன்; ஒன்றொன்றாகப் பதிவிடுவேன்). இந்த நாவல் புலம்பெயர் படைப்பு என்றதும் எந்த மேலைத்தேசத்துக்கு உரியது என்ற கேள்வி எழுந்து இருக்கலாம்; இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் வடிவத்துக்கு உரிய தொழிற்சங்கப் போராட்டம் காரணமாகத் தமிழ்நாட்டில் இருந்து உத்தரப்பிரதேசம் - லக்னோவுக்கு தூக்கிவிளாசப்பட்ட வசந்தன் இந்நாவலின் பிரதான கதாமாந்தன். லக்னோ தான் பிரதான கதைக்களம். வெவ்வேறு காரணங்களால் அங்கு வந்து பணியாற்றிய தமிழகத்தவரே பெரும்பாலான பாத்திரங்கள். அந்த ஊர்வாசிகளும் இந்தியாவுக்கு உட்பட்ட வெவ்வேறு தேசத்தவரும் (இந்தியா பல்தேசக் கூட்டு என்பதை இந்துத்துவம் நாசப்படுத்த முனைந்த போதிலும் அங்குள்ள மக்கள் அந்தப் புரிதலுடன் கொண்டும் கொடுத்தும், முரணுற்றும் சேர்ந்து இயங்கியும் அழகுற வாழ்வதனை இந்தப் படைப்பும் காட்டுகிறது) கதை மாந்தர்களாக இடம்பெறுகின்றனர். தமிழக கம்பெனி லக்னோவைச் சுரண்டுவது பற்றி ‘தென்னாட்டவர்களே வெளியேறுங்கள்’ என்ற போராட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றமையையும் கதை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் ‘வடக்கத்தியரை வெளியேற்றுவோம்’ என்ற தமிழ் தேசிய முழக்கங்கள் அவ்வப்போது எழுந்தாலும் பல்தேச உணர்வோடு தமிழக மக்கள் அனைவரையும் அரவணைத்து வாழ்வதைப்போல அங்கேயும் இந்திக்கார மக்கள் நம்மவரோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தபடி! எதிர்பாராத வேளை, தொழிற்சங்கப் பழிவாங்கலுக்கு எதிரான போராட்ட வெற்றியால் வசந்தன் தமிழகம் திரும்பும்போது லக்னோ மக்கள் வழங்கிய பிரியாவிடை இத்தகைய இரத்தமும் தசையுமான பிணைப்பைக் காட்டவல்லது. அங்கேயும் மக்கள் விடுதலைக்கான ஒரு கொம்யூனிஸ்ட்டாகப் போராட்டங்களை முன்னெடுத்து அந்த மக்களுறவை அவன் சம்பாதித்து இருந்தான் என்பது கவனிப்புக்கு உரிய அம்சம்!
ரத்தினசாமி சாருக்கு வசந்தன் எழுதும் கடிதம், அதனை வாசித்துச் செல்லும்போது இடையிட்டு அவரிடையே எழும் எண்ண அலைகள் என்ற வடிவில் நாவல் நகர்ந்து செல்கிறது. அதிகார மோகங்கொண்ட ரத்தினசாமி, மக்கள் விடுதலை நாட்டத்துடன் தனது வாழ்க்கைப் போராட்டங்களை முன்னெடுக்கும் வசந்தன் என்ற எதிர்நிலைப் பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறும் இந்தப் படைப்பானது, திணை அரசியல் கண்ணோட்டத்தை உள்ளுணர்வாக கொண்டு இருந்தவாறு சொ. பிரபாகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது எனக் கணிக்க ஏற்றதாக உள்ளது. ‘வெறும் வர்க்க மோதல் புரிதலுடன் இந்த நாவலை எழுதிவிட்டேன்; திணை அரசியல் புரிதலுடன் அதனைத் திரும்ப எழுத வேண்டும்போல இருக்கிறது’ எனத் திரும்பத் திரும்பக் கூறினார். மக்கள் ஊடாட்டங்கள் என வரும்போது வெறும் வர்க்கவாதியாக இல்லாமல் சமூக மாற்ற நேசிப்புடன் அனைவரையும் அரவணைத்து இயங்கும் மார்க்சியருக்கான இயல்பண்பு வெளிப்படும் வகையில், இப்படைப்பு திணை அரசியல் சிந்தனைக்கு உரியதாக எனக்குப் படுகிறது. எதையும் வேகமாக உள்வாங்கித் தனக்கு உரியதாக வளர்த்தெடுப்பவர் பிரபாகர். “இந்துத்துவம் இந்து சமயம் சமூக மாற்றங்கள்” நூலைப் படித்ததும் தோழர் பாலாஜி உடன் வீடுதேடி வந்து அவர் உரையாடியது பற்றி எழுதி இருக்கிறேன். இந்தப் புதிய கண்ணோட்டத்தில் இதே படைப்பை இன்னும் வீச்சானதாக வெளிப்படுத்த அவரால் இயலும் என்பதனை மறுக்க இயலாது (இந்தப் பார்வைத் திறன் இயல்பாக உள்ளதனாலே தான் கற்பூர வேகத்தில் மாற்றுக் கருத்தைக் கிரகித்து விடுகிறார் என்பதைக் கவனங்கொள்வோம்). விரிவாக விமரிசனம் எழுத அவசியம் உடைய படைப்பு; இந்த அறிமுகத் தூண்டல் நூலைப் பெற்றுப் படிக்கும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். புலப்பெயர்வுக் களம் என்ற வேறுபட்ட வாழ்வியலை இன்னும் பல கதைகளாக வைத்துள்ள அவரது எழுத்தார்வம் மென்மேலும் பெருகும் வண்ணம் இந்த நூலுக்கான ஆதரவை வழங்குவோம்!
விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமைக்கான கருத்தியல்: ஆன்மீக நாத்திகம் இந்த வையகத்துக்குத் தமிழ் வாழ்வியல் வழங்கிய தனித்துவப் பங்களிப்பான திணை (முழுச் சமூக சக்தி) அரசியல் செல்நெறிக்கான ஏழாவது பதிவு மே மாதம் 8 ம் திகதி இடம்பெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் அடுத்த பதிவு இது(இடையிட்ட வேலைகள் இத் தாமதத்தை ஏற்படுத்திவிட்டன). வீறுடன் வரலாறு படைத்து வந்ததன் பேறாக வர்க்க அரசியல் இயங்காற்றலுக்கு அப்பால் முழுச் சமூக சக்திகளான சாதி, தேசம் (திணைகள்) என்பவற்றின் இயங்கு முறைமைக்கான தெளிவைப் பெறத் தமிழக வரலாற்றுச் செல்நெறியைப் படித்தாக வேண்டும் எனப் பார்த்து வந்தோம்! அத்தகைய வரலாறு படைக்கும் ஆற்றல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்னர் கை நழுவிப்போன காரணங்களை ஏழாவது பதிவு வெளிப்படுத்தி இருந்தது. மேலாதிக்க ஒடுக்கு முறையில் சுகித்து மகிழ முனைந்த வாழ்வியலில் மூழ்கத் தொடங்கியதும் வரலாறு படைக்கும் ஆற்றல் இழப்புக்காளானது. ஆங்கில மேலாதிக்கத்தின் கீழ் சுதந்திரம் இழந்த சுரண்டும் கும்பலும் அவமானங்களைச் சந்தித்த போது விடுதலைத் தேசிய வரலாறு படைக்கும் முனைப்புக்கு உத்வேகமூட்ட வேண்டிய நிர்ப்பந்தம்! இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் மக்கள் எழுச்சிக்கு அறைகூவல் விடுத்துப் போராடும் சக்திகள் களமாட அவசியப்பட்ட செயல் திட்ட வடிவங்களை முன்னிறுத்தும் தேவை வலுப்பட்டு வந்தது!
அந்நிய ஆதிக்கத்தைத் தகர்த்தல், சாதி பேதங்களைக் களைந்து எறிதல், பெண் விடுதலை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவத்தை வென்றெடுத்தல் என்ற முழுமைப்பட்ட விடுதலைத் தேசியக் கருத்தியல் தமிழகத்தில் இருந்து மட்டுமே வெளிப்பட இயலுமாயிற்று! திணை அரசியல் இயக்குவிசை ஆறு நூற்றாண்டுகள் (14 - 19 ம் நூற்றாண்டுகள்) செயல் வேகம் அற்றதாகித் தமிழகம் வீழ்ந்துபட்டுப் போயினும், முன்னரிருந்து இயங்கி வந்த சிந்தனை முறையின் வீச்சுக் காரணமாக பாரதியின் ஆன்மீக நாத்திகம் எனும் விடுதலைத் தேசியத்துக்கான கருத்தியல் மேற்கிளம்பி வர முடிந்தது! கடவுள் இந்த உலக இன்ப, துன்பங்களின் காரணியல்ல; மனிதச் செயல்களின் (சுரண்டல் அமைப்பின்) பேறான ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்துச் சமத்துவ சமூகத்தைப் படைப்பது மனித ஆற்றலுக்கு உட்பட்ட விவகாரம். கடவுளென ஒரு சக்தி இல்லையென்ற புரிதலைப் பெற்றுக்கொண்ட செயல் வீரர் ஒருவர், கடவுளை நம்பும் மக்களைச் செயல் வேகங்கொள்ளத் தூண்டுவதற்கு முனையும் போது நாத்திக வாதத்தைத் தவிர்த்து மக்களின் ஆன்மீக மொழியில் உரையாடியாக வேண்டும். அதற்காக ஆன்மீக வாத முன்னெடுப்புகளுக்கு ஆட்பட அவசியமில்லை! பாரதி ஆன்மீக வாதி அல்ல! ஷெல்லிதாசன் என்று நாத்திக வாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியவர், மக்கள் கருத்தை உருவாக்க முனைந்த போது நாத்திக வாத ‘வளர்ச்சியை’ வெளிப்படுத்தும் விடலைப்பருவ மனோபாவத்தை விட்டொழித்தவர்! ஆன்மீக நாத்திக வாதியும் அல்ல; ஆன்மீக நாத்திகச் சிந்தனை முறையை முன்னிறுத்தி இயங்கும் செயற்பாட்டாளர்! பின்னரான வரலாற்று ஓட்டங்களைக் காணும்போது பாரதியின் ஆன்மீக நாத்திக உலக நோக்கின் அவசியம் ஏன் வலியுறுத்தப்பட வேண்டும் என்ற புரிதலைப் பெற இயலுமாக இருக்கும்! தொடர்வோம்!!
“புலம் பெயர்ந்தோர் இலக்கியம் - பனுவல்களும் மதிப்பீடுகளும்” - முனைவர் பா. ஆனந்தகுமார் நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக 2018 இல் வெளிவந்து திருத்தப்பட்ட 2 ம் பதிப்பாக 2020 இல் மலர்ந்த நூல் கையில் கிடைத்த உடன் படிக்கத் தொடங்கி, இன்று படித்து முடித்தேன்! யுத்தக் கொடூரத்தால் புலச்சிதறல்களுக்கு உள்ளான ஈழத் தமிழர் படைப்பாக்கம் எண்பதாம் ஆண்டுகளில் வீச்சுடன் வெளிப்பட்ட பின்னரே இத்தகைய புதிய வடிவம் தமிழிலக்கியச் சூழலில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருந்தது. எம்மவர்கள் பெரும்பாலும் யுத்த அனர்த்தப் புலச் சிதறலே ‘புலம் பெயர் இலக்கியத்’ தகுதி உடையன என்ற கருத்துடையவர்கள்!
அதனைக் கடந்த விரிந்த பார்வை இந்நூல் வாயிலாக வெளிப்படக் காணலாம். மனிதக் கொடூரத்தில் ‘இரத்தம் சிந்தும் அரசியலான’ யுத்த அனர்த்தத்துக்கு குறைந்த அவலமல்ல ‘இரத்தம் சிந்தாத யுத்தமான’ அரசியல்-பொருளாதார அனர்த்தம் காரணமான புலச் சிதறல்கள். அந்தவகையில், பிரித்தானிய ஏகாதிபத்தியம் கூலிகளாக கப்பலேற்றி நான்கு திசைகளின் பலவேறு நாடுகளுக்கும் சிதறடித்த உழைக்கும் மக்களின் கண்ணீரைக் கவியாக்கிய பாரதி இடம் புலம்பெயர் இலக்கியம் தொடக்கம் பெற்றதென பேராசிரியர் ஆனந்தகுமார் காட்டுவார்! புதுமைப்பித்தன், பா.சிங்காரம் போன்றோர் வளர்த்தெடுத்த இப்புதிய வடிவம் ஈழப் போராட்டம் காரணமாக ஏற்பட்ட புலச் சிதறல் வெளிப்படுத்தி இருந்த படைப்பாக்கங்கள் வாயிலாகப் புதிய பரிமாணங்களை எட்டி இருந்ததென வலியுறுத்தத் தவறவில்லை. ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்: வரையறைகளும் கூறுகளும்’ என்ற முதல் கட்டுரை இந்தப் புதிய வடிவம் குறித்த பன்முகத் தரிசனங்களை வெளிப்படுத்துகிறது. “ ‘சயாம் மரண ரயில்’ நாவல் - ஓர் அறிமுகம்” என்ற நாலாவது கட்டுரை யுத்தக் கொடூரப் புலச் சிதறலுக்கு முந்திய (இரண்டாம் உலக யுத்த அனர்த்தத்தினுள் தமிழகப் புலம் பெயர்ந்தோர் அனுபவித்த கொடூரங்களைக் காட்டும்) வடிவத்துக்கான இலக்கியம் குறித்துப் பேசும்! இடையிட்ட இரு கட்டுரைகள் ஈழப் புலம் பெயர் இலக்கியங்கள் பற்றியன! இப்பேசுபொருளுக்கான ஆக்கங்கள் தொகுப்பில் சரிபாதி இடங்களைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டுக்கு உரியனவாக (தேர்ந்து எடுத்த சிறப்பான) ஒன்பது கவிதைகள், ஐந்து சிறுகதைகள் ஆதியன இடம்பெற்றுள்ளன. நூறு பக்கங்கள் கொண்ட நூல் வாயிலாக புலம்பெயர் இலக்கியம் குறித்த விசாலித்த பார்வையை எட்ட இயலுமாக இருப்பது வியப்பளிக்கிற அம்சம்! ‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தும்’ நுட்பத்திறன் இதுவெனலாம்!
கே. டானியல் இறுதியாக எழுதிய “சாநிழல்” நாவல் பற்றிய அறிமுக உரை இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு மண்டபத்தில் இடம்பெற்ற போது தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி மாதந்தோறும் இடம்பெற்று வருகின்ற ‘புத்தகப் பண்பாட்டு அரங்கம்’ மூன்று தினங்களாக இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவேறி வருகிறது; இன்று இறுதித்தினப் புத்தகக் கண்காட்சி! நேற்றைய புத்தக அறிமுக நிகழ்வில் டானியலின் ‘சாநிழல்’ நாவலை அறிமுகம் செய்து பேசியிருந்தேன். நூல் பற்றி விரிவான பதிவு பின்னர். இதே பொருளில் ஒரு சிறுகதையை 1962 இல் டானியல் எழுதி ‘ஈழநாடு’ இதழில் வெளிவந்ததுண்டு; அதனை நாவலாக விரிவுபடுத்தி 1986 இல் எழுதப்பட்ட போதிலும் இப்போதுதான் நூலுருப்பெற்றுள்ளது. அதன் வெளியீட்டு நிகழ்வுக்காக வருகை தந்த அ. மார்க்ஸ் கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்துக்கு வருகை தந்தது பற்றி ஏற்கனவே பேசியுள்ளேன். அ. மார்க்ஸ் வீட்டில் தங்கியிருந்து வைத்தியத் தேவைகளை மேற்கொண்ட நிலையில் தான் இந்த நாவலை டானியல் எழுதியுள்ளார். வெளிவந்துள்ள நூலில் 1962 இல் ‘ஈழநாடு’ பிரசுரித்த சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. ஒரு வைத்தியராக, தன்னுடன் பணிபுரியும் அடிநிலை ஊழியரான சுடலை என்கிற தோட்டியைப் பிற ஆதிக்க சாதிக் கனவான்கள் போலல்லாது மனிதத்துவத்துடன் அணுகும் உயர்ந்த உள்ளம் கொண்ட பாத்திரம் இறுதியாகத் தனது முகத்தில் ‘சாநிழல்’ படர்வதாக உணரும் நிலை சிறுகதையில்! நாவலில் அதே உணர்வுகள் வெளிப்பட்ட போதிலும் தன்னிடம் சாநிழல் படிவதாக டொக்ரர் உணர்வதாக இல்லை; சாதிய வாழ்வியல் சார்ந்த வேறு சாநிழல்கள் நாவலில்!
“பஞ்சமர்” நாவலை 1974 இல் எழுதிய பின்னர் தான் அந்த நாவலின் களமான சாதிய வாழ்நிலைகளைப் படைப்புகளுக்கான பேசுபொருள் என ஆக்கிக்கொண்டார் டானியல்; முன்னதாகச் சிறுகதைகளில் வர்க்கச் சுரண்டலை முகங்கொள்ளும் வாழ்வியலே பேசப்பட்டன. மூன்று சிறுகதைகள் சாதி முரணை வெளிப்படுத்தின என்றாலும் அங்கேயும் வர்க்க முரண் முனைப்பாக வெளிப்படக் காணலாம்! நாவல்களில் சாதிவாதச் சரிவுக்கு ஆளாகிறார் என்ற விமரிசனம் டானியலின் மீது (ஒவ்வொரு நாவல் வெளிவந்த சந்தர்ப்பங்களிலும்) தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் இறுதியாக எழுதிய “கானல்” நாவலை சாதியச் சழக்குகளுக்கு இடமற்ற வகையில், மார்க்சிய நோக்குடன் (வர்க்கப் பார்வையில்) படைத்தளித்திருந்தார். அதற்கும் பின்னராக - இறப்புக்கு முன்னர் நிறைவாக எழுதிய - இந்தப் படைப்பிலும் சாதிவாதம் அண்டாத வகையில் கதையை நகர்த்திச் சென்றுள்ளார். பிராமணியம் வளர்த்துள்ள மூட நம்பிக்கைகளை நிராகரிப்பதற்கு பெரியாரியம் அவசியமில்லை; பிராமண எதிர்ப்பு அரசியலாக அன்றிச் சாதிபேதங்களைத் தகர்க்கும் போராட்டத்துக்கு மார்க்சியம் வழிகாட்ட வல்லது என்பதனைப் பாத்திர வாயிலாக வெளிப்படுத்துவதனை அவதானிக்கலாம். டொமினிக் ஜீவா (நாவலில் காட்டப்பட்ட ‘ஜீவா வாயிலாக சாதியத் தகர்ப்புக் கருத்தியலைப் பெற்றோம்’ என்ற அம்சத்தில் அந்த ஜீவாவைத் தனது பெயருடன் நிரந்தரமாக இணைத்துக் கொண்டவர்), என்.கே. ரகுநாதன் போன்றோர் ப. ஜீவனந்தத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு மார்க்சியத்தை வரிப்பதற்கு முன்னர் திராவிடரியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்; அவர்கள் அளவுக்குக்கூட டானியலிடம் திராவிடர் இயக்கச் சாய்வு இல்லாமல் மார்க்சிய நாட்டமே டானியலிடம் மேலோங்கிய வகையில் அவரது வாழ்வியல் அமைந்திருந்தது. இதுபற்றி நாலு முன்னோடிப் படைப்பாளுமைகளை முன்னிறுத்தி எழுதிய “முற்போக்கு இலக்கிய எழுச்சி” எனும் நூலில் விரிவாக எழுதி உள்ளேன்! இன்னும் இவை பற்றிய தேடலை விரிவாக்கும் அவசியம் உள்ளது!! இந்த நூலினை டானியலின் இளைய மகன் வசந்தன் (ஷாம் மாஸ்டர்) இடையறாத தேடலில் கண்டு பிடித்து ‘புனைவகம்’ வாயிலாக வெளியிட்டுள்ளார். பிரதியைப் பாதுகாத்துச் சேர்ப்பித்த கதையை அசுரநாதன் இந்நூலில் வெளிப்படுத்தி உள்ளார். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களது அணிந்துரை, அ. மார்க்ஸ் அவர்களது முன்னுரை என்பனவும் பல உண்மைகளை வெளிப்படுத்துவன!
பாபாசாஹேப் அம்பேத்கர் தலைமையேற்று முன்னெடுத்த ‘முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்’ என்ற வரலாற்றுத் தடம் - மகத்தான மஹத் போராட்டம் மிகமிக அற்புதமான படைப்பாக்கமாக ஆனந்த் டெல்டும்டே அவர்களால் மஹத் எழுச்சி நூலாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தின் வழியாக தமிழில் கமலாலயன் வழங்கியுள்ள இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு! இன்னும் ஐந்து வருடங்களில் மஹத் போராட்டம் நூற்றாண்டைக் காண உள்ளது. நிறைவுரையாக 506 ம் பக்கத்தில் “தலித் மக்களுக்கு மஹத் ஒரு மகோன்னதமான தருணத்தை ஐயத்திற்கு இடமின்றி நிறுவியிருக்கிறது. ஆனால், அதே சமயம்…” என அந்தப் போராட்டத்தின் பலம்-பலவீனங்கள் அனைத்தையும் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். குறிப்பாக அரசு பற்றிய தெளிவீனம் - தொடர்ந்து அரசைச் சார்ந்திருக்கும் இயக்கமுறையைத் தொடக்கி வைத்தமை என்பன விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதனை அவதானிக்கலாம்! இத்தகைய விமரிசனக் கண்ணோட்டத்தை கடந்த கால வரலாற்றின் மீது பிரயோகிப்பது அவசியம்; அதன் வாயிலாகவே எதிர்காலச் செயற்பாட்டைத் தவறற்ற வகையில் முன்னெடுக்க இயலும் என வலியுறுத்தும் ஆசிரியர், இது எந்தவகையிலும் வரலாறு படைத்த அன்றைய சாதனையாளர்களை மதிப்பிறக்கம் செய்வதாகாது எனவும் எடுத்துக்காட்டுகிறார்! மாறாக, அந்த முன்னோடிகளை வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆக்குவதே அவர்களுக்கும் வரலாற்றுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகம் என இடித்துரைப்பார் ஆனந்த் டெல்டும்ப்டே! இந்தப் போராட்டத்தை வடிவப்படுத்தித் தொடக்கிவைத்த (பாபாசாஹேப் அம்பேத்கரை வற்புறுத்தித் தலைமை ஏற்க வைத்த) தோழர் ஆர்.பி. மோரே அவர்கள் அந்த நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தெளிவுற 1963-64 ம் ஆண்டுகளில் எழுதி இருந்தார்; சிறுநூலுக்கான அந்தப் பகுதியும் ஆனந்த் டெல்டும்ப்டேயின் நூலுக்கான ஒரு பகுதியாக இடம்பெற்று உள்ளமை சிறப்பம்சம். தோழர் மோரே தொடர்ந்து பாபாசாஹேப் அம்பேத்கருடன் இயங்க இயலாமல் கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர்; இந்த விலகலை (வளர்ச்சியை) பாபாசாஹேப் விருப்புறுதியுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் நட்புணர்வுடன் - அதனை ஏற்றுத் தட்டிக்கொடுத்து நட்புறவைப் பேணியவராக வாழ்ந்தார் என்ற பதிவையும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இயங்கிய தோழர் மோரே தந்துள்ளார். அந்தப் போராட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இந்த நூல் உள்வாங்கி ஆய்வுபூர்வமாக (படிப்பதற்கு சிரமமற்ற வடிவில்) தந்துள்ளது. போராட்ட வரலாற்று பக்கங்கள் விரித்துரைக்கப்பட்ட பாங்கு பாபாசாஹேப் அம்பேத்கரை வழிபாட்டு உணர்வுடன் ஆசிரியர் முன்வைக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியமை மெய்; அந்த வெளிப்பாடு தவிர்க்கவியலாதது - சரியானதே - என்ற புரிதலை “மஹத்தைப் பிரதிபலித்தல்: பின்னோக்கிப் பார்த்தலும் முன்னோக்கி நகர்தலும்” என்ற இறுதி அத்தியாயம் தெளிவுபடுத்திவிடுகிறது. அந்த முதல் தொடக்கம் பற்றிய தயவுதாட்சண்யமற்ற முழுமைப்பட்ட விமரிசனம் இந்த அத்தியாயத்தில் முழுமையாக (எந்த விடுபடலும் அற்ற பரிபூரணத் தன்மையுடன்) முன்வைக்கப்பட்டு உள்ளது. தலைமையைச் சார்ந்திருத்தல், தலைமையின் வர்க்கப் பார்வையும் வர்க்கக் குணாம்சமும் முழு இயக்கத்தையே குறுகத் தறிக்க இடமளித்தல், இன்றுவரை குட்டிமுதலாளி வர்க்கப் பண்புடன் தலித் அரசியல் தொடருதல், தூலமான பிரச்சினைகளை விடுத்து அரூபங்களில் - அடையாளங்களில் மட்டுப்பட்டு இருத்தல் … எனப் பலவும் பேசப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் தலித் அரசியல் முன்னெடுக்கப்படுவதற்கு, மகத்தான (முதலாளித்துவச் சிந்தனை வரம்புக்குள் இருந்தபோதிலும்) புரட்சிகரமான தலித் எழுச்சி முன்னோடியாகத் திகழ்ந்த அம்பேத்கரது வகிபாகத்தை எவ்வகையில் உள்ளெடுக்க இயலும் - வேண்டும் என்கிற புரிதலை வந்தடைவதற்கு இந்த நூல் அனைவராலும் படிக்கப்படுவது மிகமிக அவசியம்!