Tuesday, October 22, 2024
மேலாதிக்க ஒடுக்குமுறைகளைத்
தகர்த்து
விடுதலைத் தேசியங்களது
சமத்துவத்தை
வெற்றிகொள்ளும் புது வரலாறு
படைப்போம்!
தேசியங்களின் தாற்பரியத்தை முற்போக்கு+பிற்போக்கு என வரையறுப்பதில் உள்ள தவறு பற்றிப் பேசி இருந்தோம்.
சுரண்டலின் அவசியத்துடன் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் ஒரு வர்க்கத்துக்கான அரசு நிலைபேறாக நீடிக்க உதவும் கருத்தியலும் நடைமுறைகளும் சார்ந்தவை பிற்போக்கானவை; அதனை முறியடிக்க உதவும் கருத்தியலும் நடைமுறையும் சார்ந்தவை முற்போக்கானவை!
தேசியம் என வரும்போது ஒடுக்கும் தேசத்தின் அனைத்து வர்க்கங்களுமே சுரண்டப்படுகிற தேசங்களால் அபகரிக்கப்படுவனவற்றில் இருந்து ஏதோ சில ஆதாயங்களைப் பெறுவன; ஒடுக்கப்படும் தேசங்களின் சுரண்டும் வர்க்கமுங்கூட இழப்பைச் சந்திக்கிறது!
ஐநூறு வருடங்களின் முன்னர் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் என எம்மீது ஒடுக்குமுறையை மேற்கொண்டு கொள்ளையடித்த ஐரோப்பியரது மூலதன விருத்தியானது அங்கே வீறுடன் வர்க்க அரசியலை வளர்த்திருந்தது; முற்போக்கான வர்க்க அரசியல் அங்கே திசைமுகம்பெற இயலுமாயிற்று!
பிரான்சியப் புரட்சி (1789) வரை முதலாளி வர்க்கம் முற்போக்கு அரசியல் சக்தியாக இயங்கியது; பின்னர் பாட்டாளி வர்க்கம் அந்த முற்போக்குப் பாத்திரத்தைக் கையேற்று இருந்தது!
ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்ட எம்மவரது நாட்டார் பாடல்களில் அவர்களது ஒட்டச் சுரண்டும் கொள்ளையை “என்ன பிடிக்கிறாய் அந்தோனி, எலி பிடிக்கிறன் கிஞ்சோனி” என்று கிண்டல்தான் பண்ண முடிந்தது.
முல்லைத்தீவில் முஸ்லிம் வணிகர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே பாக்கு வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட மோதலைக் குறிக்கும் “பாக்குச் சண்டை” என்ற நாட்டார் பாடல் வழக்கில் இருந்ததை அறிய இயலுமாக உள்ளது!
இன்றும் ஏகாதிபத்தியத் தேசங்கள் மேலாதிக்க வாய்ப்புடன் எம்மைச் சுரண்டுவதற்கு ஏற்ற பூகோள அரசியல் வாய்ப்புடையன!
பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்திய மேலாதிக்கச் சாதிகளது கைகளில் அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றி வழங்கிய அரசியல் முறைமை இன்று இந்தியாவை ஏகாதிபத்திய மேலாதிக்கக் கூட்டுக்குள் நகர்த்தும் செயலொழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகோலி இருக்கிறது.
விடுதலைத் தேசிய எழுச்சிக்காக மகத்தான தியாகப் போராட்டங்களை நடாத்திய, இன்னமும் பூரண விடுதலைக்கென அர்ப்பணிப்புடன் போராடும் பலவேறு சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தை ஏகாதிபத்திய அபகரிப்பாளர் என ஆகும் அபகீர்த்தியிலிருந்து தடுக்க இயலவில்லை.
விடுதலைக்காகப் போராடும் சக்திகள் விடுதலைத் தேசியச் சிந்தனையை வந்தடைய இடந்தராத இடர்ப்பாடுகளை எங்களிடம் இருந்து அபகரித்துக் கொழுக்கும் இந்தியப் பெரு முதலாளித்துவக் கும்பலால் சுவற விடப்படுகிற எலும்புத் துண்டுகள் ஏற்படுத்தியபடி. அதிதீவிர தலித்தியவாத, வர்க்கவாத, வெறுப்பரசியல் பிளவாக்கங்கள் ‘புரட்சிகர முழக்கங்களாக’ பல்கிப் பெருகியபடி; இவற்றின் வாயிலாக விடுதலைச் சக்திகள் ஒன்றுபட இடந்தராத தடைகளை மேலாதிக்கவாத ஊடகப் பரப்புரைகள் வளர்த்தபடி!
இந்திய ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்டுச் சுரண்டப்படுவதைக் கண்டுகொள்ள இடந்தராத பரப்புரைகளை எமது ஊடகங்கள் கனகச்சிதமாகச் செய்கின்றன.
இந்திய மேலாதிக்கத்தைத் தகர்ப்பதற்கு அனைத்துத் தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை வந்தடைய இடந்தராமல் பௌத்த சிங்களப் பேரினவாத நச்சு, சிங்கள ஊடகங்களால் ஊட்டப்பட்டபடி!
தமிழ்த் தேசியம் ஜி.ஜி. பொன்னம்பலம்-செல்வநாயகம் காலம் முதல் இன்றுவரை மேலாதிக்கத் தேசிய அபிலாசைகளுடன் ஏகாதிபத்திய நாடுகளின் ஐந்தாம்படை இயங்கு தளமாகவே செயற்பட்டு வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் அவசியம் இல்லை.
இங்கே எமக்கான தீர்வின் வடிவங்கள், அவற்றை வென்றெடுக்க ஏற்ற செயல்திட்டங்கள் என்பவற்றைத் தேடுவதைவிட ஜெனீவாத் திருவிழாவுக்குக் காவடி தூக்குவதிலும் அமெரிக்க வல்லூறின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்பதிலும் தானே தமிழ்த் தேசியத்தின் அக்கறை இருந்துவருகிறது!
மார்க்சிய வழிப்படுத்தல் ஏகாதிபத்தியத்தை முறியடித்து விடுதலைத் தேசிய எழுச்சிக்கு வழிகோல வேண்டும்!
ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு ஏகாதிபத்தியம் மற்றும் பௌத்த சிங்கள மேலாதிக்கங்களைத் தோற்கடிக்கும் வகையில் வலுவான ஐக்கியத்தை வென்றெடுக்க வேண்டும்!
மேலாதிக்க/ஏகாதிபத்தியச் சுரண்டல்களை அங்கீகரித்தபடி இயங்கும் ஆட்சியாளர்கள் பௌத்த சிங்களப் பேரினவாதப் பட்டுப்பீதாம்பரம் போர்த்திய மயக்கு நிலையில் வைத்துச் சிங்கள மக்களையும் ஒடுக்கிச் சுரண்டுகின்றனர்; அவர்களது ஏமாற்றுப் பசப்புகளைத் தாண்டி அரசுக்கு எதிராகச் சிங்கள மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்; அவர்களோடான ஐக்கியத்தை வலுப்படுத்துவோம்!
அமெரிக்க-இந்திய மேலாதிக்கங்களைத் தகர்க்கும் போராட்டத்தில் அந்த நாடுகளின் உள்ளே தமது வாழ்வாதாரத்துக்காகப் போராடும் உழைக்கும் மக்களுடன் ஒன்றுபடுவது அவசியம்!
மேலாதிக்க சக்திகளுக்குச் செங்கம்பளம் விரிக்கும் பழைமைவாதப் பண்பாட்டு அம்சங்களை (ஒடுக்குமுறைக்கான மரபுவாதங்களை) எதிர்ப்போம்!
வெறுப்பரசியலை வளர்க்கும் எதிர்ப் பண்பாட்டியத்தைக் கைவிட்டு விடுதலைச் சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தும் புதிய பண்பாட்டு அணுகு முறையை வளர்த்தெடுப்போம்!
புதிய வாழ்வு!
புதிய பண்பாடு!
விடுதலைத் தேசங்கள் அனைத்தும் மேலாதிக்கச் சுரண்டலைத் தகர்த்துச் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தும்,
புதிய பார்வை!
மாறாநிலை -
வறட்டுவாதங்கள்
முறியடிக்கப்பட்ட,
மார்க்சிஸம்-லெனினிசம்-மாஓ சேதுங் சிந்தனையைக்
கையேற்றுப்
பாதுகாத்து
வளர்த்தெடுத்துப்
பிரயோக நெறியாக்குவோம்!!
அடிநிலை
மக்கள் வரலாற்றில்
பக்தி இயக்கம்
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பக்திப் பேரியக்கம் வேறுபட்ட வரலாற்றியலின் சமூக மாற்ற வடிவத்தை உலகுக்குக் காட்டி இருந்தது.
அருணகிரிநாதர், குமரகுருபர ர் போன்றோரது முருக வழிபாடு சார்ந்த பக்தி இயக்கத்துக்கான சமூக-பண்பாட்டு-வரலாற்றியல் காரணங்கள் பற்றிய ஆய்வுகளும் உள்ளன. எழுபதாம் ஆண்டுகளில் திராவிடர் இயக்கத்தின் நாத்திகவாத அலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் சினிமாவின் பக்திப்பட வரிசை, பித்துக்குளி முருகதாசின் பாடல்கள், கிருபானந்த வாரியார் பிரசங்க இயக்கம் என்பவற்றின் வாயிலாக ஒரு பக்தி இயக்கம் எழுச்சி பெற்றதாக பேராசிரியர் கா. சிவத்தம்பி சொல்வார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் சைவத்தின் காவலராக இருந்தது குறித்து ஐந்தாம் குரவராக கொண்டாடப்படும் ஒரு மரபும் உள்ளது. அவர் ‘சிறு தெய்வ வழிபாட்டை’ நிராகரித்து, ஆகம வரிபாட்டுக்கே முக்கியத்துவம் வழங்கியவர்; அந்தவகையில் மேலாதிக்கச் சைவ வாத த்தை முன்னிறுத்தியவர் - எனும் கணிப்பும் உண்டு!
அவரால் நிராகரிக்கப்பட்ட நாட்டார் வழிபாடே உழைக்கும் மக்களுக்கு உரியதாக இருந்தது. சாதி அகம்பாவத்துக்கு எதிராக அடிநிலையில் வைக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்கள் மத மாற்றத்தை நாடியபோது ஐந்தாம் குரவரின் இயக்கம் அதனைத் தடுக்க ஏற்ற நடைமுறை எதனையும் கொண்டிருக்கவில்லை.
கோப்பாயில் இருவரது முன்னெடுப்பின் வாயிலாக வைரவர் பக்தி இயக்கம் ஒன்று எழுச்சிபெற்று நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக வீறுடன் இயங்கி வந்திருக்கிறது; அந்தக் கிராம மக்களை ஆளுமைமிக்கவர்களாக வளர்த்துப் புதிய பண்பாட்டுக் களமாக வடிவமைத்து உள்ளது.
ஒரு உதாரணம், எங்கும் ஏற்படக்கூடியதை போல வைரவர் கோயிலிலும் முரண்பாடு ஏற்பட்டுப் போட்டியாக இன்னொரு வைரவர் ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. இரு தடவைகள் அவ்வாறு நிகழ்ந்த போதிலும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் முரண் களையப்பட்டு மீண்டும் ஒரே ஆலயமாக புத்தெழுச்சி பெற்ற வரலாறைக் காணும்போது வியப்புணர்வுக்கு ஆட்படாமல் இருக்க இயலாது. தோற்றுவித்த அந்த இரு ஆளுமைகளது ஒற்றுமை உணர்வு ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக அந்தக் கிராமத்தை இயக்கி வந்துள்ளது என்ற உண்மையை இது காட்டுகிறது எனலாம்!
எஸ். பாலா அவர்களால் இந்த வரலாறு “ஒரு கிராமத்தின் பக்தி நெறிப் பயணம்” என்ற நூலாக்கப்பட்டுள்ளது. பல நூல்களின் ஆசிரியராக மட்டுமன்றிப் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் எஸ். பாலா அரங்க இயலாளராகவும் அறியப்பட்டவர்!
மேட்டிமை வரலாற்றைக் கேள்விக்கு உள்ளாக்கும் அடிநிலை மக்களது பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கத்தின் பல தளங்களிலான செயற்பாடுகளை இந்த நூல் வெளிப்படுத்தி நிற்கிறது (ஒரு சில தகவல் தவறுகளைத் திருத்திக்கொண்டு புதிய பல பதிப்புகள் வாயிலாக கிராமங்கள் தோறும் - கல்விப்புலம் எங்கும் இந்நூல் கொண்டுசெல்லப்படுவது அவசியம்).
காப்பிரேட் ஏகாதிபத்திய அரசைத்
தோற்கடித்து
விடுதலைத் தேசியப் புரட்சி
வென்றெடுக்கும்
சோசலிசம்
“நமது புரட்சி” எனும் லெனினால் (1923 ஆம் ஆண்டு) எழுதப்பட்ட கட்டுரை மிகச் சிறியது; வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தைக் காட்டுவதில் காத்திரமிக்க பங்களிப்பை நல்கியுள்ள கட்டுரை அது!
பின்தங்கிய - முதலாளித்துவ வளர்ச்சியை எட்டாத - ருஷ்யாவில் சோசலிச மாற்றத்தை எட்ட இயலாது என்ற ‘மாறா நிலை மார்க்சியர்களை’ நிராகரித்து, ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் மார்க்ஸ் எதிர்பார்த்ததற்கு மாறான வழியிலேயே சோசலிசக் கட்டுமானம் அமையும் எனக் காட்டுவார் லெனின்!
“ஆனால், அதிகமாகவோ குறைவாகவோ செல்வாக்குடைய மேற்கு ஐரோப்பிய நாடு ஒவ்வொன்றும் ஈடுபட்டிருக்கும்படியான ஏகாதிபத்திய உலகப் போரில் ருஷ்யாவை இழுத்துவிட்ட அந்தச் சூழ்நிலை - மற்றும் கிழக்குலகில் முற்றி வந்த, அல்லது, ஏற்கனவே ஓரளவுற்குத் தொடங்கிவிட்ட புரட்சிகளது முன்னறிவிப்பை ருஷ்யா கண்டுகொள்ளும்படிச் செய்த அந்தச் சூழ்நிலை - ‘விவசாயிப் போர்’ ஒன்றைத் தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இணைத்துக் கொள்ளும் சாத்தியப்பாடு பிரஷ்யாவுக்குக் கைவரப்பெறலாம் என்று மாபெரும் ‘மார்க்சியவாதியான’ மார்க்சே 1856 இல் ஆலோசனை கூறிய அதே இணைப்பை நாம் சாதித்துக் கொள்ளும்படியான ஒரு நிலைக்கு ருஷ்யாவையும் ருஷ்ய வளர்ச்சியையும் கொண்டுவந்த நிலைமைகளைத் தோற்றுவிக்குமாயின் என்ன செய்வதாம்?”
பாட்டாளி வர்க்க - முதலாளி வர்க்க முரண் நன்கு முற்றிய மேற்கு ஐரோப்பா சோசலிசத்துக்கு மாறுகிற வரை ருஷ்யப் பாட்டாளி வர்க்க (பண்ணை அடிமைத்தனத்தைத் தகர்க்கும் விடுதலைத் தேசியத்தை வென்றெடுத்த விவசாயி வர்க்க மற்றும் ஜாரிஸ ருஷ்யாவிலிருந்து சுயநிர்ணய உரிமை பெற்றுச் சோசலிசக் கூட்டரசில் இணைந்திருந்த ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின்) அரசு பொறுமை காக்க இயலாது என்பதையே லெனின் வலியுறுத்துகிறார்!
இரண்டொரு தசாப்தங்களின் பின்னர் உலகின் பிச்சைக்கார நாடாக ஒடுங்கிக்கிடந்த சீனாவில் சோசலிச மாற்றியமைத்தலை முன்னெடுத்த மாஓ சேதுங் தூர கிழக்குக்குப் புரட்சி அலை சாத்தியப்பட்டதை வெளிப்படுத்தினார்; இனி மேற்கல்ல, கிழக்குலகே வரலாற்று மாற்ற வீச்சின் மையமென மாஓ முன்னறிந்து பிரகடனப்படுத்தியதை மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் சீனம் விடுதலைத்தேசிய உலகின் தலைமை சக்தியாக மிளிர்ந்து வருகிறது!
“நமது புரட்சி” என்ற மேற்படி கட்டுரையின் இறுதிப் பகுதியில் லெனின் இந்த மாற்றத்தைக் கோடிட்டுக் காட்டி உள்ளார்: “கிழக்குலக நாடுகளில், மக்கள் தொகையில் இன்னும் மிகப்பெரிய, சமூக நிலைமைகளில் மேலும் பெரிய அளவுக்குப் பல்வேறுபட்ட இந்நாடுகளில், இனி நடைபெறப் போகும் புரட்சிகள் ருஷ்யப் புரட்சியைக் காட்டிலும் இன்னும் கூட அதிகமாகத் தனி இயல்புகளை நிச்சயம் வெளிப்படுத்திக் காட்டும் என்பது நமது ஐரோப்பிய அற்பவாதச் சிறுமதியினருக்கும் கனவிலும் கருத முடியாத ஒன்று தான்.”
‘அதிகத் தனி இயல்புடன்’ மாற்றங்களைப் பெற்றுள்ள இன்றைய உலக ஒழுங்கை எவ்வாறு மதிப்பிடப் போகிறோம்?
உலக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டு நொடிந்து போகும்போது விரல் விட்டு எண்ணக்கூடிய காப்பிரேட் நிறுவனங்கள் வருமானத்தைப் பன்மடங்கு பெருக்க முடிந்ததை எப்படி விளக்கப் போகிறோம்?
இன்றைய பிரதான முரண்பாடு காப்பிரேட் ஏகாதிபத்திய அரசு (அதற்கு அடிபணியும் உள்ளூர் அரசு) - மேலாதிக்கத்தை தகர்க்க வேண்டிய விடுதலைத் தேசியங்கள் என்பவற்றிடையே இயக்கம் கொண்டுள்ளது என்பதை இனியும் கண்டுகொள்ளாதிருக்க இயலுமா?
இலங்கையில் பௌத்த சிங்களப் பேரின வாத த்துக்கு எதிராக சிறு தேசிய இனங்கள் போராடும் அவசியம் உடையன; அது இனத்தேசிய வாத அடிப்படையில் முன்னெடுக்க ஏற்றதல்ல. இந்திய-அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராட வேண்டியுள்ள சிங்களத் தேசியத்துடன் ஐக்கியப்படும் அவசியத்தை விடுதலைத் தேசியச் சிந்தனை வலியுறுத்தி நிற்கிறது!
இந்தியாவில் தலித்திய வாத த் தனிமைப்படல் பொதுவான மக்கள் விடுதலைக் குறிக்கோளுக்கு எதிராகச் சாதிப் பிரச்சினையை மேலெழச் செய்யும் முனைப்புடன் இயங்கக் காண்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னர் பொது இடங்களில் காந்தி, நேரு படம் இருந்தது என்றால் ‘ஏன் அங்கே அம்பேத்கர் படம் இல்லை?’ என்று கேட்பது புரட்சி போலக் காட்டப்படுகிறது.
ஏகாதிபத்தியத் தகர்ப்பில் அம்பேத்கர் முன்னுதாரணம் மிக்க பங்களிப்பை நல்கவில்லை. காந்தியும் நேருவும் தம்மளவில் சரியெனப்பட்ட கோட்பாட்டு அடிப்படையில் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்க்க முயன்றனர். அதுவே அன்றைய வரலாற்று அவசியமாக இருந்ததால், அதனை மதிக்கும் வகையில் அவர்களது படங்களை மக்கள் பிரபலப்படுத்தினர் (முதலாளித்துவ ஊடகங்கள் அதற்கான வெளியை ஏற்படுத்தின எனும் பக்கத்தையும் மறக்க இயலாது).
அவர்களது பாதை பூரண விடுதலைத் தேசியத்துக்கு உரியதல்ல எனும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்புக்காகப் போராடிய அம்பேத்கர் கவனம் பெறுகிறார். அன்றைய நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை விடவும் தான் சார்ந்த மக்களது ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுவது அவருக்கு முதன்மையாகப் பட்டிருக்கலாம்; சாதியத் தகர்ப்பு முதன்மை பெறும் இன்றைய நிலையில் விடுதலைத் தேசிய மார்க்கத்துக்கு எதிராகத் தலித் மக்களைத் தனிப்பட்டுத்துவது எப்படிச் சரியாகும்? (இந்தத் தனிப்படுத்தலை ஊடக காப்பிரேட் சதித்திட்டம் கையாள்கிறது என்பதையும் மறக்க இயலாது)!
எமது முன்னோடிகள் பல தளங்களில் விடுதலைக்காகப் போராடினர். ஒவ்வொரு தரப்பும் மகத்தான பங்களிப்புகளை நல்கினர்; சில பல தவறுகளும் நேர்ந்தன.
எந்தவொரு தலைவரையும் (அணியையும்) வழிபாட்டுக்கு உரியதாகவோ, தூற்றுதலுக்கு உரியதாகவோ அணுகுவதை விடுத்து சாதனைகளை வளர்த்தெடுப்போம், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம்.
புதிய தடத்தில்
புதிய சிந்தனையை வரித்துப்
புத்துணர்வுடன்
ஒன்றுபட்டு
முன்னேறுவோம்!
மார்க்சியமற்ற
மார்க்சியர்கள்
‘புத்தரை அன்றி வேறெவரும் பௌத்தர்களாக இல்லை; ஜேசுவை மட்டுமே உண்மைக் கிறிஸ்தவராக கொள்ள இயலும்; முகமது நபியின் நடைமுறை-கோட்பாட்டை அப்படியே வேறெந்த முஸ்லிமும் பின்பற்றுவதாக கூற இயலாது’ -
என்பதாக பத்து வருடங்களுக்கு முன்னர் தோழர் மூர்த்தி சொன்னார். அவரை அறிந்த, அவரோடு சேர்ந்து இயங்கிய தோழர்கள் சிலருக்கு மட்டுமே அவரைத் தெரிந்திருக்கும்.
மலையகத்தில் பேரதிர்வுகளை ஏற்படுத்திய செங்கொடிச் சங்கத்தின் பொருளாளராக நீண்ட காலம் இயங்கிய அர்ப்பணிப்புமிக்க மார்க்சியர் தோழர் மூர்த்தி. முன்னதாக தோழர் சண் தலைமையிலேயே செங்கொடிச் சங்கம் இயங்கியது; 1972 இல் சண்முகதாசனைக் கட்சி உறுப்புரிமை நீக்கம் செய்வதாக கூறிப் பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்கள் வெளியேறி, மார்க்சிஸ-லெனினிஸக் கட்சியெனப் புதிய அமைப்பை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வில் மூர்த்தியும் அவர்களுடன் இணைந்து வெளியேறி இருந்தார். அவர் மட்டுமன்றி செங்கொடிச் சங்க நிர்வாகிகள் பலரும் (ஏறத்தாழ அனைவரும்) சண் தலைமையை நிராகரித்தமையால் ‘புதிய செங்கொடிச் சங்கம்’ என ஒன்றைத் தோழர் சண் தொடங்க வேண்டி இருந்தது.
சண் தனித்துவிடப்பட்ட போது வெளியேறிய தோழர்களது ஸ்தாபன முறையற்ற செயற்பாட்டை ஏற்க இயலாதெனக் கூறி தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் (கே.ஏ.எஸ்) உறுதியுடன் சண் தலைமையிலான கொம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இயங்கக் களம் அமைத்துக் கொடுத்தார்.
கோட்பாடு, நடைமுறை என்பவற்றில் தோழர் சண்ணிடம் இருந்த தவறுகளை கே.ஏ.எஸ். அறியாதவரல்ல. வெளியேறியவர்களைச் ‘சீர்குலைவாளர்கள்’ எனச் சண் முத்திரை குத்தி, அவர்களோடு எந்த ஒட்டுறவையும் தோழர்கள் எவரும் பேணக்கூடாது என்ற நிலைப்பாட்டையே தோழர் சண்முகதாசன் கொண்டிருந்தார்.
இருப்பினும் தோழர் கே.ஏ.எஸ். வேறுவகை நடைமுறையைக் கையாண்டார். சண் தலைமைக் கட்சியைக் கட்டி வளர்ப்பதில் உறுதியான, அர்ப்பணிப்புமிக்க உழைப்பை நல்கிய அதேவேளை வெளியேறிய தோழர்களில் நேர்மைமிக்க ஊழியர்களுடன் தோழமை உணர்வுடன் கூடிய நட்புறவைப் பேணி வந்தார்.
அத்தகைய தோழமைப் பிணைப்பில் மூர்த்தி-கே.ஏ.எஸ். நட்புறவு தொடர்ந்தமையால் எனக்கும் தோழர் மூர்த்தியுடன் பழகவும் அவரது காத்திரமிக்க கருத்துகளைக் கேட்டறியவும் இயலுமாயிற்று. அவர் மலேசியர். மார்க்சிய ஈடுபாட்டால் இலங்கை வந்து தமிழைக் கற்றறிந்து மக்கள் மத்தியில் இயங்கியவர். சிறந்த ஆங்கிலப் புலமையாளர். ஆழமாக மார்க்சிய நூல்களைப் படித்துத் தெளிவு பெற்றதோடு செழுமைமிகு அனுபவ அறிவையும் ஒருங்கே கைவரப் பெற்றவர்.
அதன் காரணமாகவே, மார்க்சியச் சிந்தனை முறை அற்றவர்களாக இருந்துகொண்டு மார்க்சியம் பேசுகிறவர்கள் மீது மிக க்காட்டமான விமரிசனத்தை வெளிப்படுத்தினார்; இறுதிக் காலத்தில் கட்சிப் பின்னணி ஏதுமின்றித் தனித்து விடப்பட்ட அவதி காரணமாக ஆன்மீக நாட்டத்துக்கும் ஆளானார் - அது சமூக க் கேடாகும் அளவுக்கு விரிவுபடவில்லை.
எந்தவொரு ஆன்மீகத் தலைவரும் வெற்றி பெற்றவர் அல்ல என்பது அவர் கருத்து. அதனாலேயே புத்தர், ஜேசு, நபி ஆகியோர் கருத்துப்படி அவர்களைப் பின்பற்றும் மதப் பிரிவினர் எவரும் இல்லை எனக் கூறினார்.
மார்க்சியர்களும் மார்க்சியச் சிந்தனை முறைமைப்படி இல்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது.
மாறிய வரலாற்று நிலைக்கான மார்க்சியர்கள் இருக்கிறோம் என
அன்றைய அர்ப்பணிப்புமிக்க மார்க்சியப் போராளிகளிடம்
நெஞ்சு நிமிர்த்திச் சொல்லவல்லோமா?
சமூக மாற்றச் செல்நெறியில்
விவசாய-வணிக சக்திகள்
இடையே இடம்பெற்ற
மேலாதிக்க நாட்டத்துக்கான மோதல்களின் பங்குப்பாத்திரம்
இது வரலாற்று இயங்கியலில் மற்றொரு பக்கம்; மட்டுமன்றி இவ்வகைப்பட்ட வரலாற்று இயக்கமே இன்று மேலெழுந்து வந்துள்ளது!
அரை நூற்றாண்டின் முன்னர் - எழுபதாம் ஆண்டுகள் வரை - வர்க்கப் போராட்ட அரசியல் இயங்குமுறை சமூக மாற்றத்தின் அடிப்படையாக இருந்தது. இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக உலகின் மேலாதிக்க சக்தியாக ஐரோப்பா மேற்கிளம்பிய வரலாற்றுப் போக்கினூடாக முகிழ்த்த சமூக விஞ்ஞான நோக்கு நிலை வர்க்கப் போராட்டம் வாயிலாக இடம்பெற்ற வரலாற்றியலை வெளிப்படுத்தியது.
எண்பதாம் ஆண்டுகளில் முனைப்படைந்த அடையாள அரசியல் வர்க்க அரசியலை வலுவிழக்கச் செய்து வருகிறது. முழுச் சமூக சக்திகள் இன, மத, நிறபேத, பாலின ஒடுக்குதல்களுக்கு எதிராக அடையாள அரசியலைக் கையேற்ற பொழுது மார்க்சியர்கள் பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆட்பட்டனர்.
அதனை முற்றாக எதிர்த்து, வர்க்கப் புரட்சி எதிர்காலத்தில் மேற்கிளம்பி வரும் என்ற நம்பிக்கையுடன் ஒரு தரப்பினர்!
அடையாள அரசியலுக்கான களத்தை அவர்களோடு ஒன்றிணைந்து போராடி ஒடுக்கும் ஏகாதிபத்திய, பேரினவாத, நிறவாத, ஆணாதிக்க சக்திகளின் அக்களம் சார்ந்த சதியை முறியடித்துப் பின்னர் மேலெழுகிற வர்க்கப் புரட்சியைத் தலைமை ஏற்கும் கனவுடன் இன்னொரு தரப்பினர்.
ஒடுக்கப்படும் முழுச் சமூக சக்திகள் விடுதலைத் தேசியச் சிந்தனையைக் கையேற்று, மார்க்சியர் தலைமையேற்கும் மாற்று வழி ஒன்றை முன்னெடுப்பது குறித்து இங்கு பேசி வருகிறோம். இப்பேசு பொருளை இரு தள வடிவங்களில் நூலாக்குவது சார்ந்து கூட்டுப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் தோழர்கள் நம்பிக்கை ஊட்டும் சக்திகள்!
ஏற்கனவே இயங்கி வரும் மார்க்சிய அணிகள் வர்க்கப் போராட்டத்தை மட்டும் கவனங்கொண்டவர்களாக உள்ளனரே; திணை அரசியல் எனும் மாறுபட்ட (முழுச் சமூக சக்திகள் இடையில் இடம்பெறும் ஆதிக்க அரசியல் போட்டிக்கான) வரலாற்று இயங்குமுறை தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தமையை எடுத்துக்காட்டி நாங்கள் பேசி வந்த பொழுதிலும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் கண்டுகொள்ளாது இருக்கிறார்களே என்ற ஆதங்கம் விடுதலைத் தேசியச் சிந்தனை முறையை ஏற்ற தோழர்களிடம்!
கட்சி ஊழியர்களிடம் மட்டும் புதிய சிந்தனையை வரித்துக்கொள்ள இயலாத தடை இருக்கவில்லை. கல்விப்புல மேதைமைமிக்கோரும் தடுமாற்றங்களுடன்!
“இந்தியத் த த்துவங்களும் தமிழின் தடங்களும்” என்ற (2016 இல் என்.சி.பி.எச். வெளியிட்ட)நூலை இப்போதான் படித்து முடித்தேன். கல்விப்புலத்தில் மெய்யியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய ந. முத்துமோகன் இந்த நூலின் ஆசிரியர். எம்மனைவராலும் மதிக்கப்படும் தலைசிறந்த மார்க்சிய மெய்யியலாளரான அவர் எமது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நூலை ஆக்கித் தந்துள்ளார்!
குறிப்பாகத் தனிவகையில் - விசேடித்த பண்புடன் - தமிழியல் சிந்தனைக்கான வரலாற்று இயக்கம் எவ்வகையில் வளர்ச்சி பெற்று வந்தது என்பதனை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டி உள்ளார். சங்ககாலச் சிந்தனையின் மெய்யியல் தளம் முதற்தடவை செப்பமுறத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை இந்நூலின் மகத்தான பங்களிப்பு! அந்தத் தளத்தில் உறுதியாக இருந்தபடி திருக்குறள், சைவ சித்தாந்தம், வள்ளலார், அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் என்ற இயக்க வடிவப்பட்ட சிந்தனைப் போக்குகள் வெளிப்படும் களமாகத் தமிழியல் செயலாற்றி வந்தமையைச் சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ளார்!
இந்தியச் சிந்தனை முறைமையை எடுத்துக் காட்டும்போது இடறல் ஏற்பட்டுவிடுகிறது. சங்ககாலத் தளத்தைத் தெளிவுற அடையாளங்கண்ட பலமான அத்திவாரம் போல் இந்திய மெய்யியல் தளத்தின் அடிப்படையை இனங்காண இயலவில்லை.
நாடோடிகளாக வந்த ஆரியர் - அவர்களால் வென்றடக்கப்பட்ட வளமிகு பூர்வீகச் சிந்தனை முறை எனும் எதிரீடு அடிப்படையாக கொள்ளப்பட்டமை பெரும் பலவீனமாய் ஆகியுள்ளது. பிராமண மதமாக இயங்கி வேதாந்தச் சிந்தனை விருத்தியை ஏற்படுத்திய பிராமணர்கள் ரிக் வேத ஆரியரும் பூர்வீக (குறிப்பாகச் சிந்துவெளிப் பண்பாட்டுக்கு உரியோராக இருந்த திராவிடப்) பூசகரும் இணைந்து உருவானவர்கள் என்ற (டி.டி. கோசாம்பி போன்ற மார்க்சிய ஆய்வறிஞர்களால் காட்டப்பட்ட) உண்மையைக் கூடக் கவனங்கொள்ளவில்லை இந்நூல்.
பிராமணச் சிந்தனையில் வரலாற்று நெடுக எப்போதும் பிற்போக்குத்தான் இருந்தது; எந்தவொரு முற்போக்கு அம்சமும் கிடையாது. அத்வைதம் என ஒருமைப்படுத்தி ஒற்றைப்படைத் தன்மை மேலோங்க வழிவகுத்த பிராமணியத்துக்கு மாறான பன்மைத்துவத்தை, அறிவுத்தேடலை வலியுறுத்திய சிராமண (ஆசீவக, சமண, பௌத்தப் பள்ளிகளது) சிந்தனை முறையே எப்போதும் முற்போக்காக இருந்ததென இந்த நூல் வலியுறுத்துகிறது; இதனை வைதிக மரபால் வீழ்த்த முடியாமல் இருந்து பௌத்தமோ சமணமோ நீடித்து இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்!
நீடித்து இருந்தால் மட்டும் யப்பானிலும் இலங்கையிலும் யுத்த சன்னத்தராய் ராணுவ வெறியர்கள் வழிபட வரும்போது தடுக்க முடியாமல் இருந்த யப்பான்/சிங்களப் புத்தரைப் போலன்றித் தமிழ் புத்தர் இப்போதும் ‘முற்போக்காளராய்’ இருந்திருப்பாரா?
வரலாற்றுப் பொருள்முதல் வாத நோக்கின்றி வெறுமனையே ஒருமை-பன்மைத்துவ அடிப்படை சார்ந்த மெய்யியல் அணுகுமுறையை வைத்து முற்போக்கு/ பிற்போக்குக் கணிப்பை மேற்கொள்ள இயலாது.
அத்வைத த த்துவத்தை முன்னிறுத்தி நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்திய ஆதி சங்கர ர் வரலாற்றின் அவசியப்பட்ட முற்போக்கு வகிபாகத்தை வகித்தவர்; நாலாம்-ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சமணமும் பௌத்தமும் பிற்போக்கான வரலாற்றுக் கட்டத்தை வந்தடைந்தமையாலேயே அன்று தோல்வியைத் தழுவிப் பின்னடைந்தன.
வணிகத்துக்கு உரிய முதலாளித்துவ எழுச்சி முற்போக்குப் பாத்திரம் வகித்த போது சிராமணச் சிந்தனை கையேற்கப்படும் வரலாறு மேலெழுகிறது; அயோத்திதாசரில் இந்த வெளிப்பாட்டைப் பார்க்கிறோம்.
நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட வேண்டிய இன்றைய கட்டத்துச் சங்கராச்சாரிகள் பிற்போக்காளர்களே!
அதற்காகப் பிராமணர்கள் அனைவருமே பிற்போக்காளரும் அல்ல, எதிரிகளும் அல்ல; மட்டுமன்றி அத்வைதங்கூட முற்போக்கான விடுதலைத் தேசியச் சிந்தனை மெய்யியல் ஆக இயலுமாயிற்று என்பதும் கவனிப்புக்கு உரியது! சங்கர ருக்கு வேறுபட்ட உத்தாலகரது அத்வைத மெய்யியல் வகைப்பட்ட பாரதியின் ஒருமை வாதம் சமூகத் தளத்தின் பன்மைத்துவத்தையும் அறிவுத் தேடலையும் முன்னிறுத்திய ஒன்று!
தமிழின் விசேடித்த பண்பை எடுத்துக் காட்டி இருந்த இந்த நூல் திணை அரசியல் செல்நெறி சார்ந்து இயங்கிய தமிழியலின் அடித்தளத்தைக் கண்டு கொள்ளவில்லை. அதன்பேறாகவே முழுமை சார்ந்த தளத்தில் பலவீனப்பட்டு தவறான நோக்கினை வெளிப்படுத்த வேண்டி வந்துள்ளது.
தனி நூலாக விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமை பற்றி எழுதியாக வேண்டும் என்ற அவசியத்தை உணர்கிறேன். அதன் தேவையைத் தோழர்கள் வலியுறுத்தி வந்திருந்தனர்.
எழுதுவதற்கான தொடக்க வேலைகளைக் கையேற்றுவிட்டேன்!
விடுதலைத் திணை அரசியல்
எனும் மார்க்சியப்
பரிமாணம்
தமிழர் வாழ்வியல் வெளிப்படுத்திய கொடை எனப் பேசி வந்திருக்கிறோம்; தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைத்த திணை அரசியல் செல்நெறியை முழுமையாகத் தனியொரு நூலாக எழுதும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
இன்று பேசப்படும் மார்க்சியத்தால் மக்கள் இயக்கங்களுக்குத் தலைமை தாங்க இயலாத நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது; அர்ப்பணிப்புடன் மார்க்சியர்கள் களமாடிய போதிலும் ஓரடி கூட முன்னேற இயலாது இடர்ப்பட நேர்கிறது. மட்டுமல்லாமல் பின்னடைவுகள் மலிந்தபடி.
இந்த நிலைக்கு மார்க்சியச் செயற்பாட்டாளர்களது தனிப்பட்ட தவறுகளே காரணமெனத் தவறாக விளக்கங்கொள்கிற சில தோழர்கள் மதவாத, சாதிவாத, இனவாத அடையாள அரசியல்களுக்கு எண்ணை ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்துத்துவம், பௌத்த-சிங்கள அடிப்படை வாதம் என்பவற்றுக்கு எதிராக இங்கே அடையாள அரசியல் எழுச்சி பெறுவது தவிர்க்க இயலாதவொன்று என அவர்கள் கருதுகின்றனர். மேலைத்தேசங்கள் அடையாளப் பாதுகாப்பைப் பார்ப்பதைப்போல நாங்கள் பார்க்க இயலாது என்கின்றனர்.
ஒடுக்கப்படும் மக்களது அடிப்படை வாழ்வாதாரங்கள், உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவதை விடுத்து,
அத்தகைய மக்கள் போராட்டங்கள் உருவாக இடந்தராமல் இனவாத, மதவாத, சாதிவாதப் போராட்டங்கள் வாயிலாகத் திசை திருப்பவே இந்த அடையாள அரசியல்.
பௌத்த-சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அவசியம் ஈழத்தமிழருக்கு இருந்தது; அதனை அடையாள அரசியல் ஒழுங்கில் முன்னெடுத்துக் கண்ட அவல முடிவில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டாமா?
ஒவ்வொரு தனிப்பட்ட அடையாள மீட்புக்காகவும் மக்களை மோதவிட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா?
மக்கள் விடுதலைக்கான ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான களங்களைக் கண்டறிய வேண்டாமா?
மேலாதிக்க சக்திகள் தமக்கு வாய்ப்பான களத்துக்கு மக்கள் சக்தியை இழுத்து அர்த்தமற்ற மோதல்களைத் தூண்டும் கபடத்துக்குப் பலியாக வேண்டுமா?
ஒன்றுபட்ட போராட்டம் வாயிலாக ஒடுக்கப்படும் மக்கள் சக்தி மார்க்சியப் பிரயோகத்தை மேற்கொள்ளும் வடிவமாக மேலெழுந்து வருவதே விடுதலைத் திணை அரசியல்; தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றின் ஊடாக மட்டுமே இது வெளிப்பட்டு வந்தது.
கிரேக்க-ரோம் அடிமைப் புரட்சிகள்,
பிரான்சியப் புரட்சி,
ருஷ்ய ஒக்ரோபர் புரட்சி -
என்பன வர்க்க அரசியலுக்கான மார்க்சிய-லெனினிஸத்தைத் தந்தன.
தேசிய விடுதலையூடாக சோசலிசத்தை வென்றெடுக்க ஏற்ற மார்க்கமாக மாஓ சேதுங் சிந்தனை வந்தது.
ஆயினும்,
தேசிய-சாதி-மத வடிவங்களில் மேற்கொள்ளப்படுகிற ஒடுக்குமுறைகளை முறியடிக்கும் வகையில் முன்னெடுக்கத்தக்க மார்க்கம் வர்க்க அரசியலில் இருந்து வேறுபட்டது என்ற புரிதல் எட்டப்படவில்லை.
அதன்காரணமாகவே இன்றைய மார்க்சியம் மக்களுக்கு வழிகாட்ட இயலாத நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
முழுச் சமூக சக்தியாக ஒடுக்குமுறையை மேற்கொண்ட (மருத திணை மேலாதிக்க அரசுருவாக்கத்தை மேற்கொண்ட) தமிழகமே விடுதலைத் தேசியச் சோசலிசத்தை வெற்றிகொள்ள ஏற்றதான கோட்பாட்டைத் தந்துள்ளது.
இதனைத் தனி நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு எழுத த்தொடங்கும் நிலையில் தயாரித்த அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. அதனைப் பரிசீலித்துக் கருத்துரைப்பதன் வாயிலாக இந்த எழுத்து இயக்கத்தைக் கூட்டுச் செயற்பாடாக ஆக்கும் பொறுப்பு உங்கள் முன்னால்!
வர்க்கப் போராட்டம்
சோசலிச முன்னெடுப்பில்
அற்றுப்போய்விடுமா?
எந்தவொரு சமூக, கருத்தியல் நெருக்கடி ஏற்படும்போதும் மார்க்சுடன் உரையாடும் போது (அவருடைய நூல்களைப் படிக்கையில்) தீர்வைக் கண்டடைய இயலும் என்பார் லெனின்.
வர்க்கப் புரட்சி வாயிலாக அன்றி முழுச் சமூக சக்தி (திணை) மோதலுக்கு ஆட்பட்டுள்ள ஒடுக்கப்படும் தரப்பினர் விடுதலைத் தேசியம் வாயிலாகச் சமத்துவத்தை வென்றெடுப்பது பற்றிப் பேசி வருகிறோம்; இதற்கான வழிப்படுத்தலையும் மார்க்ஸ் தருவார்.
எஸ்.வி.ஆர். தமிழாக்கம் செய்து அறிமுக உரை, விளக்கக் குறிப்புகள் என்பவற்றோடு பதிப்பித்திருக்கும் “கொம்நூனிஸ்ட் கட்சி அறிக்கையை” படித்துக் கொண்டு இருந்த போது (நேற்று அந்த நூல் வெளியிடப்பட்ட 174 வது ஆண்டு நினைவு நாள் என்ற வகையில் சவுத் விஷன் புக்ஸ் ‘சிவப்புப் புத்தக தினத்தைக்’ கொண்டாடி இருந்தது),
மார்க்ஸ் இடித்துரைத்தார், வரலாற்று மாற்றப் போக்கு இருந்த போதிலும் வர்க்கப் போராட்டம் இல்லாமல் போய்விடாது என்பதாக (188, 189 இற்கு உரியவை. முகம் பதிப்பில் பக்கங்கள் 399-403).
சோசலிசக் கட்டமைப்பிலும் வர்க்கப் போராட்டம் நீடித்திருக்கும் என்பதனை மாஓ சேதுங் சிந்தனை வலியுறுத்தியது; அதுவே முதன்மை உடையது எனபதைக் கைவிட்டு உற்பத்தி சக்தி விரிவாக்கத்துக்கு முன்னுரிமை உள்ளது என்பதை இன்றைய மாஓ சேதுங் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
நேற்றைய அட்டவணையில் 5 வதாக அதனைச் சேர்த்து மீண்டும் எழுதியபோது ஏனையவற்றையும் செழுமைப்படுத்தினேன். திருத்தப்பட்ட வடிவம் கீழே.
மார்க்ஸ் முதல் மாஓ வரையான எமது முன்னோடிகளே எல்லாவற்றையும் சொல்லிவிட இயலாது. புதிய களத்துக்கான மாற்றுகளைத் தேடுவதில் தவறுகள் ஏற்படாதிருக்க ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் கூடிய கலந்துரையாடலை முன்னெடுப்பது அவசியம்!
தொடர்ந்து கற்போம்,
தேடுவோம்,
புத்தொளியை வரிப்போம்!
மனந்திறந்து விவாதிப்போம்!
Subscribe to:
Posts (Atom)