Monday, September 23, 2024
விடுதலைத் தேசியச் சோசலிச நிர்மாணமும் புதிய ஜனநாயகமும்
விடுதலைத் தேசியச்
சோசலிச நிர்மாணமும்
புதிய ஜனநாயகமும்
சோசலிச நிர்மாணக் கட்டமென வந்த போது ‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்’ என்பதைக் கடந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதனை மாஓ சேதுங்கும் கையேற்றார்; தேசிய விடுதலைப் பணியை முன்னெடுத்த சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி, சீனப் புரட்சிக்கான வடிவம் ‘புதிய ஜனநாயக’ வகைப்பட்டது எனக் கண்டு தெளிந்து சரியான வழியில் முன்னேறக் கோட்பாட்டு உருவாக்கம் செய்த மாஓ வும் சோசலிச நிர்மாணம் என வரும்போது இவ்வகைத் தவறுக்கு ஆளானார் என்று பேசி வருகிறோம்!
மாஓ சேதுங்கைப் பக்தி விசுவாசத்துடன் அணுகும் ஒரு தரப்பினருக்கு இதனை ஏற்க முடிவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ‘மாஓ சொன்ன ஒவ்வொன்றும் சரியானவை, அவர் செயற்படுத்திய வழிமுறை அப்படியே பின்பற்றப்பட வேண்டியது’!
மார்க்சிய விரோதமான இந்த நிலைப்பாடு மாஓ சேதுங்குக்கு உடன்பாடற்றது. சோசலிச நிர்மாணக் காலகட்டத்துக்கான தனது படைப்புகளை ஐந்தாவது தொகுதியாக வெளியிடுவதனை அவர் உயிருடன் இருந்தவரை அனுமதிக்கவில்லை; பரீட்சார்த்தமாக உள்ள அவை சரியானவை என நடைமுறை வாயிலாகக் கண்டறியப்படாத வரை அவற்றை வெளியிட வேண்டாம் என வலியுறுத்தி வந்தார் (இந்த விடயத்தை தோழர் சிறீமனோகரன் எடுத்துக்கூறி வந்தார்).
சமூக மாற்றத்தைப் பாட்டாளி வர்க்கம் சாதித்துச் சமத்துவம் நிலைநாட்டப்படும் என்ற எடுகோள் காரணமாகவே சோசலிச நிர்மாணக் கட்டத்தைச் சீனா எட்டிய போது பாட்டாளி வர்க்கச் சிந்தனையைக் கையேற்க வேண்டி வந்தது. விடுதலைத் தேசியத்தின் சோசலிச முன்னெடுப்பாக வரலாற்று மாற்றம் ஏற்பட்டமை இன்றளவும் பல மார்க்சியர்களால் புரிதல் கொள்ளப்படாத நிலையில் எழுபதாம் ஆண்டுகளில் மாஓ ஏன் முன்னுணரத் தவறினார் எனக் கேட்க இயலாது.
நடைமுறை நிதர்சனங்களே புதிய கோட்பாட்டு உருவாக்கத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கின்றன. சீனாவினுள் எதிர் போராட்டங்கள் வலுப்பட்டு மாஓவுக்கு எதிரான இளைஞர் அலை எழுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் வலுப்பட்ட பொழுது ‘பாட்டாளி வர்க்க நிலைப்பட்ட சோசலிச முன்னெடுப்பைக்’ கைவிட்டு ‘விடுதலைத் தேசியச் சோசலிச நிர்மாண முறைமை’ கையேற்கப்பட்ட பொழுது சந்தைச் சோசலிசம் என்ற வடிவம் மேலெழுந்து வரலாயிற்று. இந்த மாற்றம் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் சோவியத் யூனியன் போலச் சீனாவும் வீழ்ச்சி அடைந்து, சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியும் கலைக்கப்பட்டு வேறொரு வரலாற்று ஓட்டம் நேர்ந்திருக்கும்.
இன்றைய சீனம் சோசலிச நிர்மாணம் என வரும்போது ஐரோப்பிய நிலைப்பட்ட மார்க்சிஸ-லெனினிஸத்தைப் பிரயோகிப்பது அல்ல; அவற்றின் வளர்ச்சியான மாஓ சேதுங் சிந்தனையையே விருத்தி செய்து பிரயோகிக்கும் அவசியம் ஏற்பட்டு உள்ளது என்ற தெளிவுடன் இயங்குவதனாலேயே சீன மக்களுக்கான தலைமையை இன்னமும் கொம்யூனிஸ்ட் கட்சியால் தக்க வைக்க இயலுமாகி உள்ளது!
மாறிய வரலாற்றுச் செல்நெறியைக் கவனத்தில் எடுத்து,
அதற்கமைவான விருத்தி பெற்ற கோட்பாட்டு உருவாக்கத்தைக் கண்டறிந்து இயங்காத வரை
எமது நாடுகளில் கொம்யூனிஸ்ட்டுகளால் தலைமைத்துவ வகிபாகத்தைக் கையேற்க இயலாது!
சில வருடங்களின் முன்னர் தமிழகத்தில் பிரவீன் என்ற இளந்தோழர் ஒரு கேள்வியைக் கேட்டார்: “கொம்யூனிஸ்ட் அணிகளில் மாஓயிஸ்ட்டுகள், மக்கள் விடுதலையை வென்றெடுத்து - முதலில் புதிய ஜனநாயக கட்டத்தை நிறைவேற்றிப் பின்னர் சோசலிசத்துக்கு வளர்த்து எடுத்தாக வேண்டும் என்கிறார்களே, இது எந்தவகையில் சரி?
‘மாஓ புதிய ஜனநாயகம் முதற்படி எனச் சொன்ன அன்றைய சீன நிலை இன்று எமது நாடுகளில் உள்ளதா? ஏழு தசாப்தங்களாக ஒருவகை ஜனநாயகம் நிலவும் எங்களுடைய நாடுகளில் இன்னொரு ‘புதிய’ ஜனநாயகம் என்பதை எப்படி வியாக்கியானப்படுத்துவது?”
இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சிகளில் ஏனைய இரண்டும்,
நிலவும் ஜனநாயகத்துக்கு மாற்றாக ‘பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில்
- தேசிய ஜனநாயகத்தை
- மக்கள் ஜனநாயகத்தை
பிரயோகித்த பின்னர் சோசலிசக் கட்டத்தை அடைவது’
எனும் வேலைத்திட்டங்களைக் கொண்டுள்ளன.
இவையனைத்தும் வர்க்க அரசியல் செயலொழுங்கைக் கவனங்கொள்ளும் வியாதிக்கு உரியன!
வரலாற்றுப் போக்கின் மாற்றத்தைக் கவனத்தில் எடுப்போமாயின்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு உரிய சோசலிச நிர்மாணம் சாத்தியமற்றது என்ற தெளிவைப் பெறுவோம்!
விடுதலைத் தேசியத்தின் சோசலிச நிர்மாணத்துக்கானதாக ‘புதிய ஜனநாயகம்’ (புதிதை - தேசிய/ மக்கள் என அழைக்கும் குடுமிப் பிடிச் சண்டை இனியும் அவசியமில்லை; குடுமி போய் மொட்டந்தலையாகி நிற்பதைக் கவனங்கொள்வோம்) என்ற அரசியல் வடிவம் உள்ளது எனும் புரிதல் அவசியம் (சமத்துவ விரோதிகளுக்கு எதிராக ‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்’ அவசியப்படலாம்!
மார்க்சியத்தை ஏகாதிபத்திய சகாப்தத்துக்கு உரிய வகையில் லெனின் வளர்த்தெடுத்தது போல
திணை அரசியல் செயலொழுங்குக்கு உரியதாக மாஓ சேதுங் சிந்தனையை விருத்தி செய்ய வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது!
Sunday, September 22, 2024
விடுதலைத் தேசியச் சோசலிச நிர்மாணத்துக்கான பொருளாதார-அரசியல்-பண்பாட்டு அவசியங்களை வலியுறுத்தும் ஜப்பானிய மார்க்சியர்
விடுதலைத் தேசியச்
சோசலிச நிர்மாணத்துக்கான
பொருளாதார-அரசியல்-பண்பாட்டு
அவசியங்களை வலியுறுத்தும்
ஜப்பானிய மார்க்சியர்
ஃபூவா டெட்சுவோ ஜப்பானிய கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்தவர். சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் சமூக அறிவியல் கழக (பெய்ஜிங்) அழைப்பில் சென்று, அவர்கள் மத்தியில் ஃபூவா டெட்சுவோ 2002, 2006 ஆகிய ஆண்டுகளில் ஆற்றிய இரண்டு உரைகள் ச. லெனின் தமிழாக்கத்துடன் பாரதி புத்தகாலயத்தால் 2017 இல் வெளியிடப்பட்டு உள்ளது.
மாற்றமடைந்த அரசியல், பொருளாதார சூழலில் சோசலிசத்துக்கான அவசியத்தை மிக நுட்பமாக இந்த உரைகள் எடுத்து முன்வைக்கின்றன.
காப்பிரேட் ஏகாதிபத்தியத்தைத் தகர்த்து ஜனநாயக கட்டத்தை வென்றெடுப்பதன் ஊடாக சோசலிசம் நோக்கிச் செல்ல ஜப்பானிய கொம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டுள்ளதனை அவர் எடுத்துக்காட்டினார்.
சோசலிச அரசியல் முன்னெடுப்புடன் சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சீன முன்னுதாரணம் சிறந்த படிப்பினையாகத் தங்களுக்கு அமையும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்!
புதிய பொருளாதாரக் கொள்கை வாயிலாக சோவியத் சோசலிசத்தை முன்னெடுக்க முற்பட்ட லெனினது சந்தைப் பொருளாதார இணைப்பை 1929 இன் பின்னர் சோவியத் கைவிட்டதன் தவறின் தொடர்வளர் நிலையே சோவியத் தகர்வுக்கு வழிகோலியது என வலியுறுத்துகிறார்!
முதலாளித்துவப் பொருளாதாரம், அரசியல் என்பன தோற்றுவிட்டதால் மட்டுமன்றி புவிப் பாதுகாப்புக்காகவும் (உயிர் வாழும் கோளாக நீடிப்பதற்காகவும்) சந்தைச் சோசலிச முன்னெடுப்பு அவசியமென முத்தாய்ப்பாக கூறுகிறார்!
இருபத்தோராம் நூற்றாண்டுக்கான மார்க்சியப் பிரயோகம் பற்றி விவாதிப்பதன் பொருட்டு அவசியம் கற்க வேண்டிய நூல் இது!
“ஜீவநதி ந. இரவீந்திரன் ஆளுமைச் சிறப்பிழ்” “ஏகாதிபத்தியம் சுயநிர்ணய உரிமை மக்கள் இலக்கியம்”
மிகுந்த நம்பிக்கையுடன்
திணை அரசியல் செல்நெறி
குறித்த முழுமைப்பட்ட நூலான
“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும்
ஓட்டங்களும்” என்பதனை எழுதும்
ஆர்வத்தினைக் கொழும்புக் கூட்டமும்
வழங்கி உள்ளது
முதலில், இரு நூல்களான
“ஜீவநதி ந. இரவீந்திரன் ஆளுமைச் சிறப்பிழ்”என்பனவற்றின்
வெளியீடு இமையாணனில்
இடம்பெற்றபோது முன்வைக்கப்பட்ட கருத்துரைகள்
தொடர்ந்து, வவுனியா- கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகம் என்பவற்றில் வழங்கப்பட்ட கருத்துரைகள்
என்பன போலவே நேற்றைய தினம் வினோதன் மண்டபத்தில் இடம்பெற்ற இரு நூல்கள் அறிமுக அரங்கின் உரைகளும் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுவனவாக அமைந்தன. தலைமை வகித்த வசந்தி தயாபரன் குறிப்பிட்டது போல, “எவரும் இந்த நூல்களின் கருத்துரைகளில் வெறும் முகமனுக்காக எதையும் சொல்லவில்லை; நூலாசிரியரின் உண்மை முகத்தைத் தமது பார்வைக் கோணத்தில் வெளிப்படுத்தி உள்ளனர்”. “ஏகாதிபத்தியம்…” நூலுக்கான இராஜேஸ்கண்ணனின் முன்னுரையை சிலாகித்துப் பேசி இருந்தார் தலைவர்.
இளந்தலைமுறையினரில் மிகுந்த நம்பிக்கை தரும் செயற்பாட்டுத் திறனாய்வுக்குரிய ஆளுமைகளான மல்லிகைப்பூ சந்தி திலகர், சிறாஜ் மசூர் ஆகியோர் வெளிப்படுத்திய நூல்கள் பற்றிய கருத்துரைகள் ஆணித்தரமாக அமைந்தன. நன்றியுரை வழங்கிய இதயராசன் நூல் குறித்த தொகுப்புரையைத் தயாரித்து வைத்திருந்தமை பற்றிப் பேசியிருந்தார்; அதனைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டும் உள்ளார்.
கூட்டம் குறித்து சூட்டோடு சூடாக நண்பர் சிவலிங்கம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு கரைகடந்த உற்சாகத்தைத் தருவதாக இருந்தது. அவர் குறிப்பிட்டது போல, மதியம் சுழன்றடித்த காற்றும் மழையும் கூட்டம் நடக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்திய போதிலும் அரங்கம் நிறைந்த ஆர்வலர்கள் (ஒவ்வொருவருமே மிகப் பெரும் ஆளுமைகள்) கலந்துகொண்டு சிறப்பித்து இருந்தமையானது சமூக ஊடாட்டச் செயற்பாட்டாளர் எவருக்கும் மிகுந்த உற்சாகத்தை ஊட்டவல்லது!
மக்கள் விடுதலைப் பாதை
நெழிவு சுழிவுடன் தொடர்ந்தாலும்
இறுதி வெற்றி
மக்களுக்கே!
அனைத்துத் தரப்பிலும்
மாற்றத்துக்காக உழைத்த
மகத்தான எமது முன்னோடிகள்
மிகப்பெரும் சாதனைகளையும்
அனுபவப் பொக்கிசங்களையும்
விட்டுச் சென்றனர்!
அவர்கள் காணத்தவறிக்
கையேற்றுச் செயற்படுத்தாத
நடைமுறைத் தவறுகளைக்
கண்டு காட்டுவனவாக அமைந்த
மேற்படி நூல்களுக்கான
உள்ளார்ந்த அர்த்தங்கள்
தெளிவுற வெளிப்பட்டுப்
பலராலும் பேசப்பட்டமையே
நம்பிக்கையூட்டும்
பலமான அம்சம்!
சாதனைகளை வளர்ப்போம்,
தவறுகளை இனங்கண்டு
திருத்தமான
மார்க்கம் வகுத்துத்
தொடர்ந்தும் செயல்வேகத்தை
வளர்ப்போம்!
தேசிய ஒடுக்குமுறைக் கருவியாக அரச
தேசிய
ஒடுக்குமுறைக்
கருவியாக அரசு
ஆதிக்கம் பெற்ற வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கங்கள் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் கருவியே அரசு என மார்க்ஸ், லெனின் ஆகியோர் முன்வைத்த கருத்து வர்க்க சமூக இயக்கம் சார்ந்த ஒன்று. அரசின் வர்க்க அதிகார வடிவம் இப்போதும் கவனிப்புக்கு உரியதாயினும் முழுச்சமூக சக்தியாக ஒடுக்குமுறையை மேற்கொண்டு சுரண்டலை மேற்கொள்ளும் ஆசிய உற்பத்தி முறைச் சமூகங்களில் இன்னொரு வடிவச் செயற்பாட்டையும் அரசு வகித்திருந்தது எனும் உண்மையைக் கவனங்கொள்ளாதிருக்க வேண்டியதில்லை.
வர்க்கப்பிளவு பூரணமடையாது இனமரபுக் குழு மேலாதிக்கத்தில் சாதிகளாகி இயங்கிய இந்திய ஆட்சியியலை ‘வர்க்கப் பணியாக அன்றி முழுச்சமூக ஒடுக்குதலை மேற்கொள்வதாகிய’ கொடுங்கோன்மை முறையாக மார்க்ஸ் கருத நேர்ந்தது. மேற்கு அரசுகளில் வர்க்கங்கள் மீதான ஒடுக்குமுறையை விடவும் அதிகமான ஒடுக்குமுறை இங்கு இருந்ததில்லை என்பதைக் காணும் ஆதாரங்களை அவரால் பெற இயலாதிருந்தது.
தவிர, முழுச்சமூக சக்தி வரலாறு படைக்கும் ஆற்றல் அவர் வாழ்ந்த 19 ம் நூற்றாண்டில் வெளிப்பட்டு இருக்கவில்லை. இன்று தேசிய விடுதலைப் பணி வரலாற்று இயக்கத்துக்கு உரியதென முற்பட்டுள்ள நிலையில் எமது வரலாற்றையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறோம் அல்லவா?
பிராமணியக் கருத்தியல் மேலாதிக்கம் வாயிலாக இடைநிலை, ஒடுக்கப்பட்ட சாதி சனங்களைச் சுரண்டும் முழுச்சமூக சக்திக்கு உரிய அரசின் இயங்குமுறை தனி வகைப்பட்டது.
சுதந்திரம் எட்டப்பட்ட பின்னர் பேரினவாதக் கருவியாக இருந்து சிறு தேசிய இனங்களை அதிகமாகச் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் நடைமுறையைக் காண்கிறோமல்லவா?
ஏகாதிபத்தியச் சுரண்டலைத் தொடரவிட்ட தரகுமுதலாளி வர்க்க ஐதேக ஆட்சி இனவொடுக்கலை வெளித்தெரியாமல் செய்தது; மட்டுமல்லாமல் எமது இனத்தேசியத் தலைமைகளின் ஏகாதிபத்திய சார்புத் தரகுமுதலாளித்துவக் குணாம்சம் காரணமாகவும் அந்த உண்மை அம்பலப்படுத்தப்படாது இருந்தது.
நாட்டு நலனைப் பேண முற்பட்ட தேசிய முதலாளித்துவக் கட்சியான சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃவ்.பி.) சிங்களத் தேசியத்தைப் பிரதானப்படுத்திய காரணத்தால் ஏனைய தேசிய இனங்களைப் புறக்கணித்த இடங்கள் வெளிப்பட வாய்ப்பாகி இருந்தது.
சிறு முதலாளி வர்க்கச் சிங்களத் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனாலேயே ஜே.வி.பி. யினால் தெளிவான சுயநிர்ணயக் கோட்பாட்டை முன்வைக்க இயலாது இருக்கிறது. இவர்களது அரசாக அதிகாரம் கைமாறும் போதும் மேலாதிக்கத் தேசிய ஒடுக்குமுறை நீடிக்கவே வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக காப்பிரேட் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து அனைத்துத் தேசிய இனங்களும் விடுதலைத் தேசியத்தை வென்றெடுக்கும் பொழுது இலங்கைக்கான அரசு பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைப் பெற இயலும் என்பது தெளிவல்லவா?
சென்றவாரம் யாழ்ப்பாணம் சென்றபோது சுழிபுரத்தில் புத்தகதினக் கூட்டம் நடைபெறுவது அறிந்து பார்க்கச் சென்றேன்.ஏற்பாட்டாளர் பின் வரிசையிலிருந்த என்னை முன் வரிசையிலிருக்கக் கேட்டுக்கொண்டார்.எவரும் இருக்கவில்லை என்பதால் கேட்பதாக நினைத்தேன்.அவர் சங்கானை நூலகத்தின் நூலகர் என்றவகையில் என்னைத் தெரிந்தேதான் முன்னேற்றினார் எனக்கூட்ட முடிவில் அறிந்து கொண்டேன்.
ஒரு நூலகர் இத்தனை அவதானிப்பு-நினைவாற்றல் என்பவற்றோடா இருப்பார் என்று பெரும் வியப்பாக இருந்நது.பின் என்ன?நாற்பது வருடங்களின் முன் அந்த நூலகமே கதி என்று இருந்தாலும் பின்னர் ஊரைப்பிரிந்து பலகாத தூரம் போன 'மந்தையைப் பிரிந்த ஆட்டை' இத்தனை ஆண்டுகளாக நினைவில் வைத்திருப்பார்களா?அந்த நூலகத்தைப் பயன்படுத்திய பலரையும் இணைத்த செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருப்பதைக்கூறினார்.அதனோடு இணைவோம்!
இந்தப்பதிவு அதே தளத்தின் வேறு களத்துக்கானது.இரண்டு மாதங்களின் முன் "தறியுடன்" நாவல் படித்திருந்தேன்.முடித்ததும் அதை எனக்கு அனுப்பிய நவநீதனுக்கு தொலைபேசி வாயிலாக கூறியிருந்தேன்,அற்புதமான இந்த நாவல் பற்றி உடன் விமர்சனம் ஒன்று எழுதுவேன் என்று.நேரத்தை அதற்கென ஒதுக்க இயலவில்லை.அது 780 பக்கங்களில் விரிந்த நாவல்.தறியோடு வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறி மார்க்சியராக வாழ்ந்த வாழ்வனுபவத்தைப் பேசுவது.அந்தவகையில் நிதானமாக விரிவான விமரிசனம் எழுதும் விருப்பினால் நேரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இப்போது ஒரு முன்னோட்டமாக இந்தப்பதிவு.
நூலகமே கதியென வாழ்ந்த நாட்களை இரா.பாரதிநாதன் தனது முக நூல் பக்கத்தில் உலகபுத்தக தினமான ஏப்ரல் 23 அன்று பதிவு செய்தபோது எனது விமர்சனம் எழுதும் கருத்தைப் பதிவிட்டிருந்தேன்.அதன் காரணமாக இந்தச் சிறுகுறிப்பு.
தரும்புரியைப் போல விசைத்தறியில் அல்லாடும் மக்கள் மத்தியில் மார்க்சியர்கள் ஆழக்கால் பதித்த குமாரபாளையம் கதைக்களமாகும்.சிவலிங்கம் என்ற நக்சல்பரி இயக்கத்தோழர் வென்றெடுக்க வரும் நிலையில் நூலகமும் தறியுமென வாழும் ரங்கன் என்ற நாயகன் தப்பமுடியாது மாட்டுப்படும் உணர்விலிருந்து வளர்ந்து அக்கட்சியின் முழுநேர ஊழியராக வாழ்ந்து போராடிய வரலாறு நாவலாக விரிந்துள்ளது.
மார்க்சியராக மாறிய சூழல்,மார்க்சிய செயற்பாட்டின்போது எழுந்த விவாதங்கள் என்பன புத்தக வாத வசனக்குவியலாகிவிடாமல் உயிர்ப்புடன் இருக்க முடிந்தமை அவரது சொந்த வாழ்வனுபவத்தைப் படைப்பாக்கியதன் பேறாகும்.குறிப்பாக வெறும் வர்க்கவாதமாகாவகையில் சொந்தச்சமூக இருப்பை நாவல் வெளிப்படுத்துகிறது.விசைத்தறிக்களத்தின் நிதர்சனம் இப்படிக் காட்டப்பட்டுள்ளது:"ஊரின் நான்கு திசைகளிலும்,சுத்துப்பட்டு கிராமங்களிலும்,செட்டியார்,நாடார்,வன்னியர்,அய்யர்,முதலியார்,கொங்கு வெள்ளாளக் கவண்டர்,சாணார்,ஆதிதிராவிடர்,அருந்ததியர் என சொல்ல மூச்சு முட்டுகிற அளவுக்கு ஏகப்பட்ட சாதிகள் இருக்கின்றன.ஜவுளித்தொழிலில் செட்டியார் ஆதிக்கம்,கடை வீதியில் நாடார் ஆதிக்கம்,பால் வியாபாரத்தில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்,வன்னியர்களோ சிறுவிவசாயிகளாகவும் பெரும்பான்மை விசைத்தறி தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள்.தலித்துகள் கூலி விவசாயிகளாகவும்,துப்புரவு செய்பவர்களாகவும் நீடிக்க,அவர்களுக்கு மட்டும் ஊரில் யாரும் தறிகள் விடுவதில்லை.இயந்திரத் தொழில் வந்து விட்டாலும்,அதன் தலையில் ஏறி உட்கார்ந்து சாதிவெறி ஆட்டம் போடுகிறது"(பக்.23-24).
இத்தகைய புரிதலுடன் சமூகத்தை அணுகி வெவ்வேறு ஊர்களிலும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் வாயிலாக மார்க்சிய அணியில் வென்றெடுக்க இயலுமாகி வளர்ந்தமை பெரும் நம்பிக்கை தரும் ஒன்றாய்த் துலங்குகிறது.அவ்வாறு ஒரு ஊரில் இயங்கத் தொடங்கும்போது முன்னேறிய தோழர்களே போராடுவதாக இல்லாமல்,மீன் தேவையாக உள்ளவருக்கு அதனைக் கொடுப்பதைவிட தூண்டிலைக் கொடுத்து பிடிக்க வழிப்படுத்தும் உதவியையும்,சினிமாப்பாணி ஹீரோயிசத்தை தவிர்க்கும் முனைப்பையும்(ப.309) காணமுடிகிறது.
ஆயினும் மாஒ சேதுங் சிந்தனையை வரித்துக்கொண்ட ஆசிரியர்,இந்திய நிலையில் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றிப் பேச வேண்டியிருக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரும் எனச் சொல்வதைப் பார்க்கிறோம்(ப.663).பொதுவாகவே மார்க்சிய அணிகள் அனைத்திடமும் இதுபோல புத்தகவாதமாயும் வர்க்கவாதமாயும் மார்க்சியத்தைக் குறுக்கும் சந்தர்ப்பங்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டபடிதான்.வாழ்வனுபவத்துடன் மார்க்சியத்தை உயிர்ப்புடன் கற்கும் தறியுடன்கூட இது ஒட்டிக்கொண்டுவிடுகிறது.
இவ்வகையில் அர்ப்பணிப்போடு இயங்கிய தோழர்கள் கோட்பாட்டு விவாதங்கள் காரணமாக பிளவடைந்த வரலாறு துயர்மிகுந்தது.என்னதான் புனிதமான கோட்பாட்டு காரணமாயினும் பிளவென்பது மனதில் வலியை ஏற்படுத்துகிறது எனக்கூறித் தொடர்ந்து சொல்கிறார்:"கிராமத்தில்,பொறுப்பற்ற விவசாயியைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்.போன மாட்டை தேடமாட்டான்,வந்த மாட்டைக் கட்டமாட்டான் என்று.இதையே கம்யூனிச இயக்கத்தின் மீது ஒரு விமர்சனமாக்க்கூட சொல்லப்படுவதுண்டு.ஆனால்,சிறையில் அப்படியில்லாமல் மாற்றுக்கருத்துள்ள தோழரை அரவணைத்துச் செல்வது பாராட்டத்தக்கது"(ப.670).
ஒரு நாவலுக்கான வாழ்வனுபவம்,த்த்துவார்த்த விவாதங்கள் என வளர்க்கப்பட்ட நாவலின் முடிவு சினிமாப்பாணி முடிவாக்கப்பட்டதைத் தவிர்த்திருக்கலாம்.அதைமீறி,மிகச்சிறந்த நாவல்களின் வரிசையில் "தறியுடன்" இடம்பெறுவதை மறுக்க நியாயமேதும் இல்லை.ஒரு முழுமையான விமர்சனத்தில் சந்திப்போம்.அதற்கு முன்னதாக இதனைத் தேடிப்படிக்கும் உத்வேகத்தை இந்தக் குறிப்பு ஏற்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் தொடர்வோம்!
Thursday, September 12, 2024
விடுதலைத் தேசியச் சோசலிசக் கட்டமைவுக்கான புதிய ஜனநாயகம்
சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பமும் கூட தொழிலாளர் புரட்சி வாயிலாகச் சோசலிசப் புரட்சியை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் தான் தொடங்கப்பட்டது!
ஏகாதிபத்திய நாடுகளால் துண்டாடப்பட்ட சீனத்தை விவசாயப் புரட்சி வாயிலாக விடுவிப்பதன் வாயிலாகவே சீனா தனக்கான சோசலிசத்தைச் சாதிக்க இயலுமென மாஓ முன்வைத்த கருத்துக் கட்சியால் ஏற்கக் கூடியதாக இருக்கவில்லை; மாற்றுக் கருத்துக் காரணமாக நான்கு தடவைகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு மீளவும் மீளவும் இணைக்கப்படுகிற நிலை மாஓவுக்கு.
தேச விடுதலைக்கான முதலாளித்துவக் கட்சியான கோமின்டாங் ஒரு லட்சம் கொம்யூனிஸ்டுகளைக் கொன்ற பின்னர் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மாஓ சேதுங்கிடம் கையளிக்கப்பட்டது; விவசாயப் புரட்சிக்கான வேலைத் திட்டத்துடன் கிராமங்களை வென்றெடுத்துச் சுற்றி வளைப்பதன் வாயிலாக இறுதியாக நகரத்தை மீட்கும் மாஓவின் வழிமுறையை முழுக் கட்சியும் நடைமுறைப்படுத்த முன்வந்தது!
கட்சிக்குத் தலைமையேற்று ஐந்து வருடங்களின் பின்னர் (1940 ம் ஆண்டில்) “புதிய ஜனநாயகம்” பற்றி எனும் கட்டுரையை மாஓ எழுதி இருந்தார். மாஓ சேதுங்கின் அனைத்து ஆக்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஒன்பது தொகுப்புகளாக தமிழில் வெளிவந்துள்ளன; முதல் நான்கு விடியல் பதிப்பகத்தாலும் ஏனைய ஐந்தும் அலைகள் பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டன. “புதிய ஜனநாயகம்” இரண்டாம் தொகுப்பில் இடம் பெற்று உள்ளது!
முதல் பக்கத்திலே மிகுந்த குழப்பத்தில் சீனம் (1940 இல்) இருப்பதைக்கூறி இந்தச் சூழலில் மிக அதிகம் குழம்பக் கூடியவர்கள் புத்திஜீவிகளும் மாணவர்களும் என்பதை எடுத்துக்காட்டி இருப்பார் (இத்தகைய குழம்பிய கும்பல் ‘மக்கள் போராட்ட’ முன்னோடிகள் ஆகப் போவதில்லை).
இங்கு எமக்கு அவசியப்படுவது, விவசாயப் புரட்சியைச் சோசலிசத்துக்கானதாக மாஓ ஆற்றுப்படுத்தும் வகையில் புதிய ஜனநாயகக் கோட்பாடு எவ்வகையில் அவரால் வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது என்பதே (இந்தக் கட்டுரை தனி நூலாகப் பல தடவைகள் வெளிவந்துள்ளது; இன்றைய சூழலில் கண்டிப்பாகத் தேடிப் படித்தாக வேண்டும்).
ஒக்ரோபர் (1917) புரட்சியானது சோசலிச நாடான சோவியத் யூனியனை உருவாக்கி உலக அரசியல் செல்நெறியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது; தேசியப் புரட்சிகள் வென்றெடுக்கும் ஜனநாயக வாழ்முறை முதலாளித்துவத்தின் பகுதியாக அன்றிச் சோசலிசத்தின் பகுதியாக இப்போது மாறிவிட்டது!
விவசாயிகளது சீனப் புரட்சியால் வென்றெடுக்கப்படும் தேசிய விடுதலையானது மேலைத்தேச வகையிலான முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பின்பற்ற எத்தனித்தால் ஏகாதிபத்தியப் பிணைப்புக்குள் சீனம் தொடர்ந்து நீடிக்க வகை செய்வதாகிவிடும். சோவியத் யூனியனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்க முடியாத நிலை, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை எனும் நிதர்சனத்தால் உணர்த்தப்படுகிறது. தொழிலாளி வர்க்கச் சிந்தனை வழிகாட்டலுடன் புதிய ஜனநாயக வடிவத்தைக் கட்டமைப்பது அவசியம்!
இவற்றுக்கான விரிவான விளக்கங்களை மாஓ சேதுங் அந்தக் கட்டுரையில் முன்வைத்து இருந்தார்.
இப்போது சோவியத் சோசலிசம் இல்லை. விடுதலைத் தேசியங்களின் மாற்று வழித் தடங்களிலான சோசலிசத்தை வடிவமைப்பதற்கு சீனா, கியூபா, வியட்னாம் போன்ற தேசங்கள் முயற்சித்தபடி!
உலகப் புரட்சியைப் பாட்டாளி வர்க்கம் சாத்தியமாக்கும் வரலாற்று ஒழுங்கு முடிவுக்கு வந்துவிட்டது,
விடுதலைத் திணை (தேசம், இனத் தேசியங்கள், சாதிகள், ஒடுக்கப்படும் மதங்கள்-பாலினங்கள்-சமூகக் குழுக்கள் ஆகிய ‘முழுச் சமூக சக்தி’ முன்னெடுக்கும்) அரசியல் போராட்டங்கள் மேலெழுந்து வருகின்றன!
மேலாதிக்கங்களைத் தகர்ப்பதற்கான (பேரினவாதம், சாதிவாதம், ஆணாதிக்கம் என்பவற்றை முறியடித்தபடி ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றுமுழுதாகத் தகர்க்கும்) திணை அரசியல் செயலொழுங்குப் பிரகாரம் விடுதலைத் தேசங்கள் கட்டமைக்கும் சோசலிச நிர்மாணத்துக்கானதாக
புதிய ஜனநாயகப் பிரயோகம் அவசியப்படுகிறது!
தேசங்கள் குடியேற்றவாதப் பிணைப்பைத் தகர்த்துச் சுதந்திரங்கள் எட்டப்பட்டதும் உள் நாட்டு முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமான முரண்பாடே பிரதானமானது என்ற எடுகோளுடன் இயங்கி வந்தோம்.
இல்லை,
ஏகாதிபத்தியத் திணையின் சுரண்டல் வலைக்குள் இன்னமும் நீடிக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களாகவே எமது நாடுகள்!
ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றாகத் தகர்க்கும்
பரந்த ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு,
வெகுஜன மார்க்கப் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது
புதிய ஜனநாயகப் பிரகாரம்
இனத் தேசியங்கள் உட்படப் புறக்கணிக்கப்படும் அனைத்துத் தரப்பாரது நலன்களும் உள்வாங்கப்பட்ட அரசியல் செயலொழுங்கு மேலெழும் - மேலெழுந்தாக வேண்டும்!
இன்றைய குழம்பிய புத்திஜீவிகள்-மாணவர்கள் என்ற தரப்பிடம் மாற்றத்துக்கான அடித்தளம் இல்லை;
உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் மீட்சியை முதன்மைப்படுத்திய விடுதலைத் திணை அரசியல் வடிவத்துக்கான மார்க்சியம் கண்டறியப்பட வேண்டும்!
இன்றைய குழப்பத்தின் மையமாக (இதனைத் தூண்டிக் குழம்பிய குட்டையில் அறுவடை பெற எத்தனிக்கும்) காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக வலைப் பின்னலும் நுகர்வுப் பண்பாட்டு மோகமும் உள்ளன என்ற புரிதல் மிகமிக அவசியமானது; இச்சூறாவளிகள் புத்திஜீவிகளை எவ்வகையில் நச்சுப்படுத்தி உள்ளன என்பதை வெளிப்படுத்துதலும் அவசியம். காப்பிரேட் ஊடக சுதந்திரம்-ஜனநாயகம் என்ற மாயைகளைத் தகர்த்து
புதிய ஜனநாயக அரசியல் முன்னெடுப்பை மெலெழச் செய்வோம்!
வரலாற்று உந்துவிசையில் வட இந்தியா
திணை அரசியல் தொடரின் 6 வது அமர்வு “வட இந்திய ஆய்வியலில் திணை அரசியல் வெளிப்படவில்லையா?” எனும் பேசுபொருள் சார்ந்தது. (மின் தடைகள் காரணமாக உரை வடிவில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், நூலாக விரித்து எழுதி வருவதனால் இங்கு பத்து அமர்வுகளுக்குமான பேசுபொருளைப் பதிவிடுவேன். மாற்றுக் கருத்துகளை விவாதிக்கும் பட்சத்தில் அவற்றை எழுத்தாக்கத்தில் கவனங்கொள்ள இயலும்).
தமிழக நகருருவாக்கம் ஏற்படத் தொடங்கி ஒரு நூற்றாண்டின் பின்னரே வட இந்தியாவில் நகருருவாக்கம் சாத்தியப்பட்டது.
இங்கு விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிக - கைத்தொழில் விருத்திகளுடன் நகர் உருவான சம காலத்தில் வட இந்தியாவில் விவசாய எழுச்சியுடன் பிராமண நிலவுடைமையாளர்கள் சார்பான அரசுருவாக்கமும் ஏனையவர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதலும் இடம்பெறலாயிற்று; வெற்றிகொள்ளப்பட்டு அடக்கப்பட்டவர்கள் உழைக்கும் சாதிகளாக்கப்பட்டதுடன் சாதியக் கருத்தியல் வடிவம்பெறலாயிற்று.
வெளியே இருந்து வந்த ஆரியர்கள் மட்டுமே முற்றுமுழுதான வெற்றியாளர்கள் அல்ல. நில ஆக்கிரமிப்பைச் சாத்தியப்படுத்தி மேலாதிக்கம்பெற்ற பிராமணர் என்ற ஆதிக்க சாதி, திராவிட-ஆரிய இணைப்பில் உருவான சமூக சக்தி.
இவ்வகையில் சாதி உருவான வரலாற்று நிகழ்வுப்போக்கு மார்க்சிய ஆய்வாளர்களால் எடுத்துக்காட்டப்பட்ட பொழுதிலும் சாதியைப் புரிந்து கொள்வதில் தெளிவீனங்கள் உள்ளன. திணை மேலாதிக்கத்துடன் தமிழகத்தில் சாதியம் உள்வாங்கப்பட்டதில் இருந்து சாதி பற்றித் தெளிதலைப்பெற இயலுவது போல வட இந்திய அரசியல் - வரலாற்று செல்நெறி இல்லை.
மட்டுமல்லாமல், தொடர் வரலாற்று போக்கில் இடம்பெற்று வந்த சமூக மாற்ற இயங்காற்றல் பற்றிய தெளிவான வெளிப்பாடும் அங்கு இல்லை. வீர யுக முடிவில் மருதத் திணை மேலாதிக்கத்துடன் நிலச் சொத்துடைய கிழார்கள் வரலாற்று அரங்கில் தோன்றிச் சாதியத்தை வரித்தமை, அறநெறிக் காலத்தில் வணிக மேலாதிக்க அரசியல் சாத்தியமானமை, பக்திப் பேரியக்கத்தில் விவசாய மேலாதிக்கம் மீளெழுச்சி பெற்று நிலப்பிரபுத்துவம் மேலாதிக்கம் பெற்றமை போன்ற தமிழக வரலாற்றியல் தெளிவுறக் காட்டும் அம்சங்கள் போன்றன அங்கு இல்லை.
எமக்கான மத்திய காலம் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையார் தொடக்கிய சைவ எழுச்சி, 7 ம் நூற்றாண்டில் நாவுக்கரசராலும் ஞானசம்பந்தராலும் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் வாயிலாக உறுதிப்பட்டது - தொடர்ச்சியாகத் தனக்கேயான வரலாற்று விருத்தியை வெளிப்படுத்தியது.
வட இந்தியாவில் சமூகமாற்ற உந்துவிசைகள் தெளிவற்று இருப்பதைப் போல மத்தியகாலம் பற்றியும் தெளிவுபெற இயலாத விடயங்கள் உள்ளன.
சாதியைப் புரிந்து கொள்வதிலான இடர்ப்பாடு, மத்தியகாலம் பற்றிய தெளிவீனம் என்ற விடயங்களை ரோமிலா தாப்பர் “முற்கால இந்தியா” எனும் நூலில் (பக்கங்கள் முறையே 20,75) மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ளார்.
ஆயினும் வட இந்தியாவை மையப்படுத்தியே இந்திய வரலாறு ஆராயப்பட்டு வந்ததே, அது ஏன்?
நீண்ட கால இயக்கத்துடன் இருந்ததும் இந்தியச் சமூகச் சிறப்பம்சமாய் அமைந்ததுமான சாதி பற்றிய முதல் ஆதாரங்களை ரிக் வேத இலக்கியமும் வட இந்திய வரலாறுமே காட்டி இருந்தன என்பதன் காரணமாக!
இன்னொன்று, 13 ம் நூற்றாண்டு வரை வீச்சுடன் வரலாறு படைத்தலைச் சாதித்து வந்த தமிழகம் பின்னர் புதியதைப் படைக்கும் ஆற்றலை இழந்தது. தமிழின் அரிய பங்களிப்பான சைவசித்தாந்தம் கூட சமஸ்கிருதத்தில் தோற்றம்பெற்று மொழிபெயர்த்துத் தமிழுக்கு வந்ததென்ற புனைவுகள் மேலோங்கின. சமஸ்கிருதம் தாய்மொழி, தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகள் அனைத்துமே அதிலிருந்து வந்த வழிமொழிகள் என்ற பொய்யுரைகளும் வலுத்தன.
தமிழின் மேலாதிக்க சக்தியான நிலப்பிரபுத்துவச் சாதி, தனக்கான அதிகாரத்தை நிலை நிறுத்த வாய்ப்புள்ளது என்றவகையில் நட்பு சக்தியாக அரவணைத்த பிராமணத் தரப்பு தன்மீதே அதிகாரம் செலுத்த இடமளித்த வாய்ப்புக்கேடு எப்படி ஏற்பட்டது?
“தமிழகத்தின் வீழ்ச்சி” அடுத்துப் பார்க்க அவசியம் உடையது!
Subscribe to:
Posts (Atom)