இருபது வருடங்களின் முன்னர் “திருக்குறளின் கல்விச் சிந்தனை” என்ற முனைவர் பட்டப்பேற்றுக்கான ஆய்வைத் தொடங்கிய போது என்னிடம் இருந்த கருத்து நிலையில் இருந்து பல வேறுபட்ட மாற்றங்களை இன்று எட்டியுள்ளேன்.
மீளாய்வில் ஈடுபட்டபோது - திருக்குறளில் மிக ஆழமான கல்விச் சிந்தனை,
கிரேக்கத்தின் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஷ்டோட்டில் ஆகியோரதையும் விடக் கனதியானதாக காணப்படுவதனைக் கண்டுணர இயலுமானதாக இருந்தது.
அதன் வீச்சு, எவ்வாறு இது சாத்தியப்பட்டது என்ற கேள்வியை எழுப்பி, அந்ததிசையில் தேடலை மேற்கொள்ள வழிப்படுத்தியது. திருக்குறள் வெளிப்பட்ட காலச் சமூக - பொருளாதார - பண்பாட்டுத் தளப் பரிமாணங்கள் எனது ஆய்வேட்டின் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டது.
கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் (1990 களில்) தமிழக வரலாற்றுத் தொடக்கத்தை கிமு 7 ம் நூற்றாண்டுக்கு எடுத்துச் சென்றது.
இப்போது ஆறேழு வருடங்களாக கீழடியின் பண்டைக்காலக் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கிமு ஏழாம் நூற்றாண்டில் இருந்து தமிழர் வரலாற்றெழுச்சி வீறு கொள்ளத் தொடங்கியமை உறுதிப்பட்டுள்ளது.
விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிக விருத்தி தமிழகத்தில் சாத்தியப்பட்டமையை மேற்படி இரு ஆய்வுகளும் (கொடுமணல், கீழடி) எடுத்துக் காட்டி இருந்தன. கிமு 6 ம் நூற்றாண்டில் இருந்து குறிஞ்சி, முல்லை, நெய்தலின் வணிகப் பெருக்கம் காரணமாக திணை வாழ்வியல் பேசுபொருளாக இயலுமாகி இருந்தமை தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவத்துக்கான அடிப்படை!
கிமு 3 ம் நூற்றாண்டிலிருந்து வம்ப வேந்தர் ஆட்சி மூன்று பேரரசுகளைச் சாத்தியப் படுத்தியது; விவசாய எழுச்சியின் கிழார்கள் எனும் புதிய உற்பத்தி சக்தி வரலாற்றரங்குக்கு அறிமுகமானது.
கிபி 1 ம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க, ரோமுடனான நேரடி வணிக வாய்ப்புப் பெருகியபோது வணிகசக்தியின் மேலாண்மை புது வரலாறாக ஆகியது.
இந்தச் சமூக சக்திகளின் அதிகாரக் கைமாறுதல் நடந்த கிபி 2 ம் நூற்றாண்டில் ‘திருக்குறள்’ தோன்றியது. இரு தரப்பும் சமநிலையில் இருந்த சூழலில் விவசாய-வணிக மேலாண்மைகளில் எதனையும் ஆதரிக்காது மானுட வாழ்வியலின் அனைத்து அவசியக் கூறுகளையும் வலியுறுத்தும் பாங்குடைய படைப்பாகத் திருக்குறள் அமைந்தது.
இரு தரப்பும் சமநிலையில் இருந்ததனாலே எத்தரப்பையும் சாராத படைப்பாகத் திருக்குறள் வெளிப்பட்டது என்பதற்கில்லை; முந்திய திணைகளிடையே சமத்துவப் பரிவர்த்தனை வர்த்தகம் நிலவிய காலத்தின் பொதுமைச் சிந்தனைக் கருத்தியலுடைய ஆசீவகம் தமிழை இயக்கி வந்தது - அந்த ஆசீவகத்தின் சமத்துவ நோக்கே திருக்குறளின் தனித்துவ வீச்சுக்கான அடித்தளம்!
எனது ஆய்வேட்டில் திருக்குறள் ஆசீவகத் தளத்துக்கு உரியது எனக் கூறி இருந்தபோதிலும், புதிய சிந்தனைகளையும் வள்ளுவர் ஏற்றிருந்தார் எனக் கூறி இருந்தேன். அதனைத் திருத்த அவசியமுள்ளது.
புதிய வரலாற்றரங்குக்கு அறிமுகமான விடயங்களை ஆசீவகச் சிந்தனையாளராக எவ்வடிவில் வள்ளுவர் வெளிப்படுத்துகிறார் என்பதே திருக்குறள்!
ஆசீவகத்தைப் புரிந்து கொள்ளுதல் திருக்குறளைச் சரியாக அர்த்தப்படுத்துதற்கு அவசியமானது!
திருக்குறளுக்கே உரிய நோக்கில் அதனை மறுவாசிப்புக்கு உட்படுத்துவோமாயின்
ஆசீவகத்தை
விளக்கம் கொள்வோம்!
‘ஆசீவகர்கள் கட்டமைக்க முயன்ற வாழ்வியல் நெறி’ எனும் வடிவில்
குறட்பாக்களில் சிலவற்றை உரையோடு சிறுநூலாக்கும் வேலையைத் தொடங்கி உள்ளேன்!
ந.இரவீந்திரன்
No comments:
Post a Comment