வெள்ளை உன்னதம், கருப்பு அவலட்சணம் என்ற பார்வைக்கோணம் குடியேற்றவாத வாழ்வியலைத் தொடங்கி ஏகாதிபத்தியமாகப் பரிணமித்த ஐரோப்பிய வெள்ளையின உணர்வோட்டத்தால் ஏற்படுத்தப்பட்டது. ஆபிரிக்க மக்களை அடிமைகளாக கடத்தி ‘புதிய கண்டங்களை’ வளப்படுத்தும் கடின உழைப்புக்கு ஆட்படுத்தியபோது கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவாதக் கருத்தியல் விருத்தி செய்யப்பட்டது!
மண்ணிற, மஞ்சள் நிற மக்களையும் ஏகாதிபத்தியம் இழிவுபடுத்தத் தவறியதில்லை. வெள்ளை மேலாதிக்கம் தகர்க்கப்படுவது இன்று வலுப்பட்டு வலுகிறது. ஆயினும் ஏகாதிபத்தியச் சுரண்டலால் மூன்றாமுலக நாடுகள் வற்றடிக்கப்படுவது முற்றாக அகன்றுவிடவில்லை.
அறுபதுகளில் ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்ற போது முழுமைப்பட்ட விடுதலைத் தேசிய எழுச்சிக்குரியதாக வளர்த்தெடுக்க முனைந்த கொங்கோ நாட்டின் லுமும்பா ஏகாதிபத்தியச் சதியால் கொல்லப்பட்டார். எழுபதுகளில் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்க்க முனைந்த சிலியின் அலண்டே கொல்லப்பட்டார்.
மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை அபகரிப்பதற்காக சதாம் உசேன், கடாபி ஆகியோரை ஏகாதிபத்தியக் கூட்டுப்படை பொய்கள் பல கூறிக் கொன்றழித்தது அண்மைக்கால வரலாறு!
ஊடகப் பொய்யுரைகள் எமது மூளைகளைத் தம்வயப்படுத்தி ஆள்வதால் தொடர்ந்தும் ஏகாதிபத்திய வெள்ளை ஜொலிப்புடன், ‘நிறத்தவர்’ நாமெல்லாம் மனதளவிலும் எம்மை நாமே அசிங்கமாக உணர்ந்தபடி!
ஐரோப்பா வீறுடன் வரலாறு படைத்த காலத்து வர்க்க அரசியல் சிந்தனையை வளர்த்தெடுத்து முழுச் சமூக சக்தியாகச் சுரண்டப்படும் ஏகாதிபத்திய முறையைத் தகர்க்கும் விடுதலைச் சிந்தனையைக் கண்டடைய மாட்டோமா?
வர்க்க அரசியல் வாயிலாக சமத்துவ உலகு படைக்கும் சிந்தனை முறைமையைத் தந்த மார்க்சியம் விடுதலைத் தேசியச் சோசலிசம் படைக்கும் மார்க்கத்தையும் தேர்ந்து தெளிவுற வழிகாட்டும்!
புதிய வரலாற்றாக்க உணர்வுடன் மார்க்சை மறுவாசிப்புக்கு ஆட்படுத்துவோம்! மார்க்சியத்தை வளர்த்தெடுப்போம்!!
ந.இரவீந்திரன்
No comments:
Post a Comment