Saturday, April 14, 2012

ஒரு, நல செய்தி 14-04-2012

நலம்.......நலமறிய ஆவல்

அனைத்து நண்பர்களுக்கும், மற்றுமொரு புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்களுக்குத்தான் எத்தனை புத்தாண்டுகள்; என்ன, ஒருவர் சொல்லும் புத்தாண்டு
தினத்தை மற்றொருவர் ஏற்க மறுக்கும் சமூக முரண் எங்களிடம் ஆழமாகவே உண்டு. இதிகாச - புராண பண்பாட்டுக் கட்டமைப்பாலான, ஒன்றில்
தேவர்கள் அல்லது அசுரர்கள் என்ற இரு அந்தலைகளிலேயே அனைத்தையும் முரண்படுத்தி, வைத்தால் கூந்தல் - அடித்தால் மொட்டை என்று
பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்ட தமிழ் மனங்களுக்கு இந்தச் சமூகச் சிக்கலில் யாரை எங்கே வைப்பது (தேவராகவா அசுரராகவா) என்பதில்தான்
குழம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

ஆயினும் புத்தாண்டு விடயத்தில் மக்கள் அதிகம் குழம்புவதாய்த் தெரியவில்லை; ஜனவரி 1, தை 1(பொங்கல் திரு நாள்), சித்திரை 1(இலங்கைச்
சொல்லாடலின் பிரகாரம் தமிழ்-சிங்களப் புத்தாண்டு) என எந்த ஒரு ''விடுமுறைக் கொண்டாட்ட நாளையும்'' ஒரு கை பார்த்து விடுவதில் பின்
வாங்குவதில்லை. கோட்பாட்டாளர்களுக்குத் தான் பிரச்சனை. சில கோட்பாடுகளில் முரண்படுகிறவர்களும் குறித்த பிரச்சனை ஒன்றில் தமக்கு
உடன்பாடான விடயத்தை முன்வைக்கிறபோது அந்த ஒரு விடயத்திலாவது ஒன்றுபட்டுப் போவோமே என்று இழுபட்டுப் போவதுண்டு.

இதற்கு நல்ல உதாரணமாய் அமைவது தமிழ்-சிங்களப் புத்தாண்டு. தமிழகத்தில் சிறிய அளவிலாவது எது தமிழ்ப் புத்தாண்டு என்ற சலனமுண்டு.
இலங்கையில் தைப்பொங்கல் தெளிவாக உழவர் திருநாள் மட்டுமே. புத்தாண்டாக சித்திரை முதல் நாளை விவாதத்துக்கு இடமின்றி ஈழத்தமிழ்
மனங்கள் அங்கீகரிக்கின்றன. சிங்கள மக்களின் நல்லபண்புகளைப் பார்க்க வாய்ப்பற்று, பேரினவாத முகத்தை மட்டுமே பார்த்து வெறுப்புடனுள்ள
தமிழர்களும்கூட, இந்த ஒரு விடயத்திலாவது ஒரே நாட்டில் வாழ்கிற நாம் ஒன்றுபட்டிருபோமே என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

மோசமான இரு தரப்பு இனவாத ஆதிக்க மோகங்கொண்டோரை மோதி வீழ்த்திவிட்டால் இந்நாட்டில் அற்புதமான இன ஐக்கிய முன்னுதாரணத்தைக்
கட்டியெழுப்புவது சுலபம் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டில்லையா? நான் பெரிதாக இந்தப் புதிய நாட்களைக் கொண்டாடுவதில்லை;
அதற்காக நாளை மற்றுமொரு நாளே என விரக்தி கொண்டதுமில்லை. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற தெம்புடன் உலகை மாற்றிப் புனைந்து
புத்துலகம் படைக்கும் மக்கள் சக்தியைச் சுயமுணர ஆற்றுப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன், அதற்காக இயங்கியவாறு இருப்பவன். இன்று 
புலர் பொழுதில் மூன்று நாலு கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள சிங்களக் குடும்பம் ஒட்டுமொத்தமாய் எல்லோரும் புதுவருட 'சிங்களப் பலகாரங்களுடன்'
வீட்டுக்கு வந்திருந்தார்கள்; இந்த இனிய நாளில் மகிழ்ச்சி பொங்காதிருக்குமா?

இன்னுமொரு மகிழ்வான சங்கதி. காணாமற் போய், முற்றாகத் தொலைத்துத்தான் விட்டேனோ என்று பயத்துடன் மூன்று மாதங்களாய்த் தேடிய என்
பெரும் செல்வம் மீளக் கிடைத்திருக்கிறது. அதைக் களவாடிய நோய்க் கூறுடன் நான் நடத்திய போராட்டத்தில் வெற்றியீட்டியுள்ளேன். நீங்கள் வெல்வீர்கள்,
அதற்கெனப் பிரார்த்திக்கிறோம் என நண்பர்கள் பலரும் என் போராட்டத்துக்கு தெம்பூட்டியிருந்தீர்கள். வெற்றி சாத்தியம் தானா என்ற கடும் சந்தேகத்துடனும், வீழ்ந்திட மாட் டேன் என்ற நம்பிக்கையுடனும் எனது போராட்டம் இருந்தது மெய். "மெய்வருத்தக் கூலியுண்டு, முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கமைய, நான் எனது அந்தக் ''கம்பீரமான'' பலத்தை மீட்டெடுத்தேன். !! (நன்றி: Lenin Mathivanamலெனின்,கே.எஸ்.சிவகுமாரன் Ks Sivakumaran ,எம்.கே.முருகானந்தம் Dr.Muttiah Kathiravetpillai Muruganandan, அ.மார்க்ஸ் Marx Anthonisamy ,பெ.சு மணி ,சிவசேகரம், செல்வா Selva Sfi மற்றும் என் அன்பு தோழர்கள் - இவ்வாறான அடைமொழி தந்தமைக்கும்).

ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி! 
சூழ்ந்திடும் இருளும் அகல்வது உறுதி! - (பாப்லோ நெரூடா.)

நன்றிகளோடு, அன்பு தோழன் -இரவி. 

No comments:

Post a Comment