Thursday, September 12, 2024
விடுதலைத் தேசியச் சோசலிசக் கட்டமைவுக்கான புதிய ஜனநாயகம்
சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பமும் கூட தொழிலாளர் புரட்சி வாயிலாகச் சோசலிசப் புரட்சியை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் தான் தொடங்கப்பட்டது!
ஏகாதிபத்திய நாடுகளால் துண்டாடப்பட்ட சீனத்தை விவசாயப் புரட்சி வாயிலாக விடுவிப்பதன் வாயிலாகவே சீனா தனக்கான சோசலிசத்தைச் சாதிக்க இயலுமென மாஓ முன்வைத்த கருத்துக் கட்சியால் ஏற்கக் கூடியதாக இருக்கவில்லை; மாற்றுக் கருத்துக் காரணமாக நான்கு தடவைகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு மீளவும் மீளவும் இணைக்கப்படுகிற நிலை மாஓவுக்கு.
தேச விடுதலைக்கான முதலாளித்துவக் கட்சியான கோமின்டாங் ஒரு லட்சம் கொம்யூனிஸ்டுகளைக் கொன்ற பின்னர் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மாஓ சேதுங்கிடம் கையளிக்கப்பட்டது; விவசாயப் புரட்சிக்கான வேலைத் திட்டத்துடன் கிராமங்களை வென்றெடுத்துச் சுற்றி வளைப்பதன் வாயிலாக இறுதியாக நகரத்தை மீட்கும் மாஓவின் வழிமுறையை முழுக் கட்சியும் நடைமுறைப்படுத்த முன்வந்தது!
கட்சிக்குத் தலைமையேற்று ஐந்து வருடங்களின் பின்னர் (1940 ம் ஆண்டில்) “புதிய ஜனநாயகம்” பற்றி எனும் கட்டுரையை மாஓ எழுதி இருந்தார். மாஓ சேதுங்கின் அனைத்து ஆக்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஒன்பது தொகுப்புகளாக தமிழில் வெளிவந்துள்ளன; முதல் நான்கு விடியல் பதிப்பகத்தாலும் ஏனைய ஐந்தும் அலைகள் பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டன. “புதிய ஜனநாயகம்” இரண்டாம் தொகுப்பில் இடம் பெற்று உள்ளது!
முதல் பக்கத்திலே மிகுந்த குழப்பத்தில் சீனம் (1940 இல்) இருப்பதைக்கூறி இந்தச் சூழலில் மிக அதிகம் குழம்பக் கூடியவர்கள் புத்திஜீவிகளும் மாணவர்களும் என்பதை எடுத்துக்காட்டி இருப்பார் (இத்தகைய குழம்பிய கும்பல் ‘மக்கள் போராட்ட’ முன்னோடிகள் ஆகப் போவதில்லை).
இங்கு எமக்கு அவசியப்படுவது, விவசாயப் புரட்சியைச் சோசலிசத்துக்கானதாக மாஓ ஆற்றுப்படுத்தும் வகையில் புதிய ஜனநாயகக் கோட்பாடு எவ்வகையில் அவரால் வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது என்பதே (இந்தக் கட்டுரை தனி நூலாகப் பல தடவைகள் வெளிவந்துள்ளது; இன்றைய சூழலில் கண்டிப்பாகத் தேடிப் படித்தாக வேண்டும்).
ஒக்ரோபர் (1917) புரட்சியானது சோசலிச நாடான சோவியத் யூனியனை உருவாக்கி உலக அரசியல் செல்நெறியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது; தேசியப் புரட்சிகள் வென்றெடுக்கும் ஜனநாயக வாழ்முறை முதலாளித்துவத்தின் பகுதியாக அன்றிச் சோசலிசத்தின் பகுதியாக இப்போது மாறிவிட்டது!
விவசாயிகளது சீனப் புரட்சியால் வென்றெடுக்கப்படும் தேசிய விடுதலையானது மேலைத்தேச வகையிலான முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பின்பற்ற எத்தனித்தால் ஏகாதிபத்தியப் பிணைப்புக்குள் சீனம் தொடர்ந்து நீடிக்க வகை செய்வதாகிவிடும். சோவியத் யூனியனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்க முடியாத நிலை, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை எனும் நிதர்சனத்தால் உணர்த்தப்படுகிறது. தொழிலாளி வர்க்கச் சிந்தனை வழிகாட்டலுடன் புதிய ஜனநாயக வடிவத்தைக் கட்டமைப்பது அவசியம்!
இவற்றுக்கான விரிவான விளக்கங்களை மாஓ சேதுங் அந்தக் கட்டுரையில் முன்வைத்து இருந்தார்.
இப்போது சோவியத் சோசலிசம் இல்லை. விடுதலைத் தேசியங்களின் மாற்று வழித் தடங்களிலான சோசலிசத்தை வடிவமைப்பதற்கு சீனா, கியூபா, வியட்னாம் போன்ற தேசங்கள் முயற்சித்தபடி!
உலகப் புரட்சியைப் பாட்டாளி வர்க்கம் சாத்தியமாக்கும் வரலாற்று ஒழுங்கு முடிவுக்கு வந்துவிட்டது,
விடுதலைத் திணை (தேசம், இனத் தேசியங்கள், சாதிகள், ஒடுக்கப்படும் மதங்கள்-பாலினங்கள்-சமூகக் குழுக்கள் ஆகிய ‘முழுச் சமூக சக்தி’ முன்னெடுக்கும்) அரசியல் போராட்டங்கள் மேலெழுந்து வருகின்றன!
மேலாதிக்கங்களைத் தகர்ப்பதற்கான (பேரினவாதம், சாதிவாதம், ஆணாதிக்கம் என்பவற்றை முறியடித்தபடி ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றுமுழுதாகத் தகர்க்கும்) திணை அரசியல் செயலொழுங்குப் பிரகாரம் விடுதலைத் தேசங்கள் கட்டமைக்கும் சோசலிச நிர்மாணத்துக்கானதாக
புதிய ஜனநாயகப் பிரயோகம் அவசியப்படுகிறது!
தேசங்கள் குடியேற்றவாதப் பிணைப்பைத் தகர்த்துச் சுதந்திரங்கள் எட்டப்பட்டதும் உள் நாட்டு முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமான முரண்பாடே பிரதானமானது என்ற எடுகோளுடன் இயங்கி வந்தோம்.
இல்லை,
ஏகாதிபத்தியத் திணையின் சுரண்டல் வலைக்குள் இன்னமும் நீடிக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களாகவே எமது நாடுகள்!
ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றாகத் தகர்க்கும்
பரந்த ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு,
வெகுஜன மார்க்கப் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது
புதிய ஜனநாயகப் பிரகாரம்
இனத் தேசியங்கள் உட்படப் புறக்கணிக்கப்படும் அனைத்துத் தரப்பாரது நலன்களும் உள்வாங்கப்பட்ட அரசியல் செயலொழுங்கு மேலெழும் - மேலெழுந்தாக வேண்டும்!
இன்றைய குழம்பிய புத்திஜீவிகள்-மாணவர்கள் என்ற தரப்பிடம் மாற்றத்துக்கான அடித்தளம் இல்லை;
உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் மீட்சியை முதன்மைப்படுத்திய விடுதலைத் திணை அரசியல் வடிவத்துக்கான மார்க்சியம் கண்டறியப்பட வேண்டும்!
இன்றைய குழப்பத்தின் மையமாக (இதனைத் தூண்டிக் குழம்பிய குட்டையில் அறுவடை பெற எத்தனிக்கும்) காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக வலைப் பின்னலும் நுகர்வுப் பண்பாட்டு மோகமும் உள்ளன என்ற புரிதல் மிகமிக அவசியமானது; இச்சூறாவளிகள் புத்திஜீவிகளை எவ்வகையில் நச்சுப்படுத்தி உள்ளன என்பதை வெளிப்படுத்துதலும் அவசியம். காப்பிரேட் ஊடக சுதந்திரம்-ஜனநாயகம் என்ற மாயைகளைத் தகர்த்து
புதிய ஜனநாயக அரசியல் முன்னெடுப்பை மெலெழச் செய்வோம்!
வரலாற்று உந்துவிசையில் வட இந்தியா
திணை அரசியல் தொடரின் 6 வது அமர்வு “வட இந்திய ஆய்வியலில் திணை அரசியல் வெளிப்படவில்லையா?” எனும் பேசுபொருள் சார்ந்தது. (மின் தடைகள் காரணமாக உரை வடிவில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், நூலாக விரித்து எழுதி வருவதனால் இங்கு பத்து அமர்வுகளுக்குமான பேசுபொருளைப் பதிவிடுவேன். மாற்றுக் கருத்துகளை விவாதிக்கும் பட்சத்தில் அவற்றை எழுத்தாக்கத்தில் கவனங்கொள்ள இயலும்).
தமிழக நகருருவாக்கம் ஏற்படத் தொடங்கி ஒரு நூற்றாண்டின் பின்னரே வட இந்தியாவில் நகருருவாக்கம் சாத்தியப்பட்டது.
இங்கு விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிக - கைத்தொழில் விருத்திகளுடன் நகர் உருவான சம காலத்தில் வட இந்தியாவில் விவசாய எழுச்சியுடன் பிராமண நிலவுடைமையாளர்கள் சார்பான அரசுருவாக்கமும் ஏனையவர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதலும் இடம்பெறலாயிற்று; வெற்றிகொள்ளப்பட்டு அடக்கப்பட்டவர்கள் உழைக்கும் சாதிகளாக்கப்பட்டதுடன் சாதியக் கருத்தியல் வடிவம்பெறலாயிற்று.
வெளியே இருந்து வந்த ஆரியர்கள் மட்டுமே முற்றுமுழுதான வெற்றியாளர்கள் அல்ல. நில ஆக்கிரமிப்பைச் சாத்தியப்படுத்தி மேலாதிக்கம்பெற்ற பிராமணர் என்ற ஆதிக்க சாதி, திராவிட-ஆரிய இணைப்பில் உருவான சமூக சக்தி.
இவ்வகையில் சாதி உருவான வரலாற்று நிகழ்வுப்போக்கு மார்க்சிய ஆய்வாளர்களால் எடுத்துக்காட்டப்பட்ட பொழுதிலும் சாதியைப் புரிந்து கொள்வதில் தெளிவீனங்கள் உள்ளன. திணை மேலாதிக்கத்துடன் தமிழகத்தில் சாதியம் உள்வாங்கப்பட்டதில் இருந்து சாதி பற்றித் தெளிதலைப்பெற இயலுவது போல வட இந்திய அரசியல் - வரலாற்று செல்நெறி இல்லை.
மட்டுமல்லாமல், தொடர் வரலாற்று போக்கில் இடம்பெற்று வந்த சமூக மாற்ற இயங்காற்றல் பற்றிய தெளிவான வெளிப்பாடும் அங்கு இல்லை. வீர யுக முடிவில் மருதத் திணை மேலாதிக்கத்துடன் நிலச் சொத்துடைய கிழார்கள் வரலாற்று அரங்கில் தோன்றிச் சாதியத்தை வரித்தமை, அறநெறிக் காலத்தில் வணிக மேலாதிக்க அரசியல் சாத்தியமானமை, பக்திப் பேரியக்கத்தில் விவசாய மேலாதிக்கம் மீளெழுச்சி பெற்று நிலப்பிரபுத்துவம் மேலாதிக்கம் பெற்றமை போன்ற தமிழக வரலாற்றியல் தெளிவுறக் காட்டும் அம்சங்கள் போன்றன அங்கு இல்லை.
எமக்கான மத்திய காலம் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையார் தொடக்கிய சைவ எழுச்சி, 7 ம் நூற்றாண்டில் நாவுக்கரசராலும் ஞானசம்பந்தராலும் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் வாயிலாக உறுதிப்பட்டது - தொடர்ச்சியாகத் தனக்கேயான வரலாற்று விருத்தியை வெளிப்படுத்தியது.
வட இந்தியாவில் சமூகமாற்ற உந்துவிசைகள் தெளிவற்று இருப்பதைப் போல மத்தியகாலம் பற்றியும் தெளிவுபெற இயலாத விடயங்கள் உள்ளன.
சாதியைப் புரிந்து கொள்வதிலான இடர்ப்பாடு, மத்தியகாலம் பற்றிய தெளிவீனம் என்ற விடயங்களை ரோமிலா தாப்பர் “முற்கால இந்தியா” எனும் நூலில் (பக்கங்கள் முறையே 20,75) மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ளார்.
ஆயினும் வட இந்தியாவை மையப்படுத்தியே இந்திய வரலாறு ஆராயப்பட்டு வந்ததே, அது ஏன்?
நீண்ட கால இயக்கத்துடன் இருந்ததும் இந்தியச் சமூகச் சிறப்பம்சமாய் அமைந்ததுமான சாதி பற்றிய முதல் ஆதாரங்களை ரிக் வேத இலக்கியமும் வட இந்திய வரலாறுமே காட்டி இருந்தன என்பதன் காரணமாக!
இன்னொன்று, 13 ம் நூற்றாண்டு வரை வீச்சுடன் வரலாறு படைத்தலைச் சாதித்து வந்த தமிழகம் பின்னர் புதியதைப் படைக்கும் ஆற்றலை இழந்தது. தமிழின் அரிய பங்களிப்பான சைவசித்தாந்தம் கூட சமஸ்கிருதத்தில் தோற்றம்பெற்று மொழிபெயர்த்துத் தமிழுக்கு வந்ததென்ற புனைவுகள் மேலோங்கின. சமஸ்கிருதம் தாய்மொழி, தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகள் அனைத்துமே அதிலிருந்து வந்த வழிமொழிகள் என்ற பொய்யுரைகளும் வலுத்தன.
தமிழின் மேலாதிக்க சக்தியான நிலப்பிரபுத்துவச் சாதி, தனக்கான அதிகாரத்தை நிலை நிறுத்த வாய்ப்புள்ளது என்றவகையில் நட்பு சக்தியாக அரவணைத்த பிராமணத் தரப்பு தன்மீதே அதிகாரம் செலுத்த இடமளித்த வாய்ப்புக்கேடு எப்படி ஏற்பட்டது?
“தமிழகத்தின் வீழ்ச்சி” அடுத்துப் பார்க்க அவசியம் உடையது!
கனதியான இரு நிகழ்வுகள் காணத்துடித்தோர் பட்ட அவதிகள்
முதல் நிகழ்வு ஜீவநதி முன்னெடுத்த பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களின் “ஜீவநதி ஆளுமைச் சிறப்பிதழ்” வெளியீடு மாலை 3.50 மணிக்கு ஆரம்பித்தது; நேற்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதனால் உரிய நாளில் நடாத்த வேண்டும் என்ற துடிப்புடன் பரணிதரன் சிறப்பிதழையும் வெளியிட்டு நிகழ்வையும் கனங்காத்திரமாக முன்னெடுத்தார். திட்டமிட்ட ஒழுங்கமைப்புடன் இயங்கும் நண்பர் பரணி முன்னதாகவே இந்த நிகழ்வை அறிவித்திருப்பின் சில சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம். முன்னதாக ஜீவநதி வெளியீடான அநாதரட்சகனின் ‘பின்தொடரும் வலி’ என்ற சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவை யாழ். காரியாலயத்தில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது; இந்த நிகழ்வை அறிந்ததும் அதனைப் பின்போட்டனர்.
மிகுந்த வேலைப்பழுவுடன் இயங்கும் ஜீவநதி மீதான குற்ற விமரிசனம் அல்ல இது; அவரால் முன் கூட்டியே அறிவிக்க இயலுமான வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் இனிமேல் கவனத்தில் எடுக்க உதவுவதன் நோக்கத்திலானது இந்த முன்வைப்பு!
மற்றைய கூட்டத்துக்குரிய கலம் அமைப்பினரும், ஜீவநதி நிகழ்வு முன்னரே தெரிந்திருப்பின் தாங்கள் கூட்டத்தை வேறொரு நாளுக்கு மாற்றி இருப்போம் எனத் தெரிவித்திருந்தனர்; மட்டுமன்றி, அந்த நிகழ்வு அங்கே நிறைவடைந்த பின்னரே கலம் அமைப்பினர் தமது கூட்டத்தை ஆரம்பித்தனர். ஜீவநதி மீதும் பரணி மீதும் அவர்களுக்குள்ள மதிப்புணர்வை இந்தக் கருத்தும் செயற்பாடும் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன எனலாம்!
சேரனின் “காஞ்சி” கவிதை நூல் தொகுப்புப் பற்றி பேராசிரியர் மகேஸ்வரன், கலாநிதி திருவரங்கன் ஆகியோர் மிகச் சிறப்பான உரைகளை கலம் நடாத்திய நிகழ்வில் ஆற்றியிருந்தனர். உரைகளுக்கு அப்பால் ஒரு கவிதை நூலை எவ்வகையில் அறிமுகம் செய்யலாம் என்பதற்கு முன்னுதாரணமாக அமையத்தக்க மிகச் சிறந்த நிகழ்வை கலம் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
மனநிறைவைத் தந்த இந்த நிகழ்வு மிகப் பெரும் சோர்வையும் தருவதாய் அமைந்தது. யுத்த அவலம் மீட்டுருவாக்கப்படுவது நிகழ்வின் மைய இழையாக அமைந்தது. பதினைந்து வருடங்களுக்கு முந்திய அவலத்தை நினைவூட்டி எதிர்காலத்துக்கான தெளிவுணர்வை வருவிப்பது தவறல்ல; தனியே இராணுவ அட்டூழியங்களைக் கவனங்கொள்ள வைத்துத் தொடரும் தவறான அரசியல் முன்னெடுப்புகளுக்கு உரமூட்டுவது என்ன வகை நியாயம்?
சிங்களப் பேரினவாதம் மட்டும் தவறுக்குப் பொறுப்பானதல்ல, சிறுபான்மையாக இருந்துகொண்டு தமிழ்ப் பேரினவாத உணர்வுடன் மேலாதிக்கத் தேசிய அபிலாஷையை முன்னெடுத்த எமது தரப்பும் சேர்ந்து தான் மக்கள் மீது அந்த யுத்தத்தை அவசியமற்ற வகையில் திணித்தனர்; தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் நாசமாக்கி, வலிந்து யுத்தத்தை வருவித்தது எமது தரப்பின் ஆயுத வழிபாட்டு மோகத்தால் விளைந்தது (போரில்லையேல் மக்கள் தங்களை மறந்துவிடுவர் என்ற ‘அரசியல் ஞானம்’ இருந்த அளவுக்கு இராஜதந்திர முன்னெடுப்பு எதுவும் எமது தரப்பிடம் இல்லாமல் இருந்ததனை இனியும் கூடப் பேசக்கூடாதா?).
“உன்னையே நீ அறிவாய்” என்றும் “தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்து களம் இறங்கு” என்றும் சொல்லப்பட்டவற்றை அறிந்திருந்தும் அவலங்களுக்கான பழியை மற்றவர் தலை மேல் போட்டு இன்னமும் இனவாதச் சகதிக்குள் அழுந்துவது,
இனியும் எந்த அவதிகளைக் காண்பதற்கு?
கவிஞர்களும் சமூக அக்கறை உள்ள செயற்பாட்டாளர்களும் தமக்கான பொறுப்புணர்வுடன் கருத்துகளை வெளிப்படுத்துவது அவசியம்.
தவறான பாதைக்கு வழிப்படுத்திவிட்டுப் பள்ளத்தில் வீழ்ந்து துயர்களை அனுபவிக்கும் போது அவற்றையும் பேச நாங்கள் இருக்கிறோம் எனக் களமாடுவதா?
செய்ய வேண்டியதைச்
செய்யாமல் இருப்பதும்,
செய்யத்தகாதவற்றை
செய்வதும்
தீங்கு விளைப்பன!
(ஆரோக்கியமான தரப்பினரிடம் வெளிப்பட்ட தவறென உணரும் ஒரு அம்சத்தின் மீதான இந்த விமரிசனமும் ‘செய்யப்பட வேண்டிய நேரத்தில் செய்தாக வேண்டும்’ என்ற பொறுப்புணர்வின் பேரில் முன்வைக்கப்படுகிற ஒரு கருத்து வெளிப்பாடு தான்; எவரையும் புண்படுத்துவதற்கானது அல்ல).
மாற்றங்களை மனங்கொண்டு மார்க்சியராகச் சிந்தித்துச் செயற்பட
மாற்றங்களை
மனங்கொண்டு
மார்க்சியராகச்
சிந்தித்துச் செயற்பட
உலகச் செல்நெறி மாற்றங்களை அதற்கே உரித்தான வேகத்தில் கண்டறிந்து ஏற்ற கோட்பாட்டை வகுத்துச் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார் லெனின்!
மார்க்சிய-லெனினிய அர்ப்பணிப்பாளர் பலரும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான சகாப்தம் முடிவுற்று விடுதலைத் தேசிய சோசலிச நிர்மாணம் வாயிலாகவே இனிச் சமூக மாற்றம் சாத்தியம் என்பதைக் கண்டு காட்டத் தவறுகின்றனர்.
இதன் காரணமாக மார்க்சியம் குறைபாடுடையது எனத் தப்பபிப்பிராயம் கொண்டு அடையாள அரசியல் போக்கில் மக்களை ஒருவரோடு ஒருவர் மோதி அழிவுப்பாதை நீடிக்க ஆற்றுப்படுத்துகின்றனர்.
தமிழர் வரலாறு விசேடித்த தொடக்கங்களுடன் ஏற்றத்தாழ்வு சமூக அமைப்பை வெளிப்படுத்துகிற ஒன்று. இங்கு மட்டுமே விடுதலைத்தேசிய அரசியலுக்கு உரிய, முழுச் சமூக சக்தியாக வரலாற்று இயக்கம் இருந்ததற்கான எடுத்துக்காட்டு இருக்கிறது.
மருத திணை மேலாதிக்கம் தம்முள் ஒப்பீட்டளவில் சமத்துவத்துடன் இருந்த திணை வாழ்முறையைத் தகர்த்துச் சாதிய வாழ்துறையை ஏற்படுத்திவிட்டது. வர்க்க அரசியலுக்கான இயங்குமுறையை ஐரோப்பா தெளிவுறுத்துவதைப்போல முழுச் சமூக சக்திக்கான அமைப்பு மாற்றங்களைத் தமிழக வரலாற்றின் வாயிலாக மட்டுமே கற்றறிய இயலும்.
மேலாதிக்கத் திணை அரசியல் போக்கைத் தகர்த்து முன்னரிருந்த திணைச் சமத்துவத்திலும் மேலான பொதுமை வாழ்வை வென்றெடுக்கத் தமிழ் வரலாறு கற்றுத்தரும் திணை அரசியலை நுண்மாண் நுழைபுலத்துடன் படிப்போம்!
Wednesday, September 11, 2024
தேர்தல் படிப்பினை: மாற்று(ம்) வழி
தேர்தல் படிப்பினை:
மாற்று(ம்) வழி
சென்ற வாரம் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய ஒரு நோக்கினை வெளியிட்டிருந்தேன். பேரின ஆட்சியாளர் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், சிறு தேசிய இனங்கள் தம்முள் பிளவுற்றுள்ளமை ஜனநாயகப் பண்புடன் தேசிய இனப் பிரச்சினை கையாளப்பட வழிகோலுமா என்ற சந்தேகம் தொடர்பில் அங்கு பேசியிருந்தோம். யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டிருக்கும் அதேவேளை ஒடுக்கப்பட்டு போரின் வாயிலாகவும் தமிழ் தேசிய விடுதலைக் குரல் ‘அழிக்கப்பட்ட’ சூழலில் தமிழ் தேசியத்தின் நலன்களை வென்றெடுப்பதனை இணைத்ததாகவும் தேர்தல் களத்தை முகங்கொண்ட மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி (ம.மே.ஐ.மு.) எதிர்பார்த்த ஆதரவைப் பெறாத துடன் பெண் வேட்பாளர்எவரும் தமிழர்களால் தெரிவு செய்யப்படாத காரணங்கள் அலசப்பட வேண்டி உள்ளது என்று கூறி, அதனைப் பின்னர் பார்க்கலாம் என்று விடுப்பு எடுத்திருந்தேன். இப்போது அதுபற்றிப் பேசலாம்.
முதலில் ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ பற்றி. அந்த வரையறை காட்டுவது போல அது பழையகதை! ‘ஒடுக்கப்படும் சாதி’ இப்போது இலங்கையில் இல்லை (முற்றாகவே இல்லை எனப் பொருள் கொள்ள வேண்டியதில்லை. தமது ஆளுமை விருத்தியை மனங்கொள்ள வேண்டும் எனும் அந்த மக்களின் உணர்வை மதிப்பது அவசியம்). எழுபதாம் ஆண்டுகளில் இடதுசாரிக் கட்சிகளுடன் ஐக்கியப்பட்டு சிறீமாவோ பண்டாரநாயக்காவின் கூட்டரசாங்கம் ஏகாதிபத்தியப் பிடிப்புகளைத் தகர்த்து இலங்கையின் மக்கள் நலன்களை வென்றெடுக்கும் முற்போக்குத் தேசிய நிலைப்பாட்டை முன்னெடுத்தவாறு இருந்தது; அப்போது ஏகாதிபத்தியப் பிணைப்பை பாதுகாப்பதற்கான தமது கூட்டுக்கு உரிய ஐ.தே.க. உடன் இணைந்து தமிழ் தேசியத் தலைவர்கள் ஒன்றுபட்டு முற்போக்கு இலங்கைத்தேசியத்தை எதிர்ப்பதற்கு அமைவாக தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர்; முற்போக்கு இலங்கைத் தேசியத்துக்கு நெருக்கடி கொடுக்கும்
உத்தியாக பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தனர். அந்தப் பிரிவினைக் கோரிக்கையை ஒடுக்கப்பட்ட மக்கள் முற்றாக நிராகரித்தனர்
முப்பது வருட யுத்தம் ஐதேக உடன் இணைப்பு அரசியல் நடாத்திய கூட்டணித் தமிழ் தேசியர்கள் எதிர்பாராத ஒன்று. முற்போக்கு இலங்கைத் தேசியத்துக்குத் தான் அவர்கள் எதிர்ப்பரசியல் உத்தியைக் கையேற்றனர்; தமக்குரிய ஏகாதிபத்திய நலன் பேணும் பிற்போக்கு ஐதேக உடனான இணக்க அரசியலும் அடிவாங்கும் என்பதனை அவர்கள் முன்னதாக ஊகித்திருக்கவில்லை. ஐதேக அரசு ஏற்பட்டு இளைஞர் அமைப்புகளது ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு “யுத்தமென்றால் யுத்தம்...” எனப் போர்ப் பிரகடனம் செய்து உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுத்த பொழுது ஏராளமான கிழக்கு மற்றும் வன்னி இளைஞர் யுவதிகளுடன் யாழ்பபாணத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரே போராளிகளை ஆகுதியாக்கினர்; ஒடுக்கப்பட்ட மக்களே களத்தில் வாழ்ந்து அர்ப்பணிப்புகளை வழங்க வேண்டியதாக வரலாறு இயக்கம் பெற்றது. அப்போது ஓடித்தப்பிய உயர் சாதி மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையினர் ‘அடைந்தால் தமிழீழம், இல்லையேல் வீர மரணம்’ என்பதாக கூறுவதைப் போன்றதாக அல்லாமல் வேறொரு வடிவத் தமிழ் தேசியம் இன்று பெரும்பான்மையினராக உள்ள யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடமும் ஏனைய பிரதேசங்களின் தமிழ் மக்களிடமும் உள்ளதனையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. தீவிர தமிழ் தேசியம் பேசிய இருவர் மட்டுமே (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி. விக்கினேஸ்வரன்) வெற்றிபெற்ற நிலையில் ‘தமிழ் தேசிய நீக்க’வாதி சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்புக்குள் குரல்கொடுத்தவர்கள் நிராகரிக்கப்பட்டு சுமந்திரனே வெற்றியாளராக்கப்பட்டார். அறுபது வருடங்களுக்குப் பின்னர் சுதந்திரக்கட்சி வேட்பாளர் யாழ்ப்பாணத்தின் அதிகூடிய விருப்ப வாக்குகளால் வெற்றி பெற வைக்கப்பட்டுள்ளார். இணக்க அரசியலின் அவசியத்தைப் பேசிய டக்ளஸ் வெற்றிபெற்றதோடு அவரது சகா வன்னியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ம.மே.ஐ.மு. போதிய வாக்குகளைப் பெறாத பொழுதிலும் அது முன்னிறுத்திய விடுதலைத் தேசிய உணர்வுக்கு உரிய குரலே மேற்படி தேர்தல் தீர்ப்புகளில் வெளிப்பட்டுள்ளது என்பதைக் கவனிப்பது அவசியம். தமிழ் தேசியத்துக்கு ஆகுதியான ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்கள் இந்த முதல் முன்னெடுப்பிலேயே இந்தப்பக்கத்தை ஆதரித்துவிட இயலாதுதான். இன்னொரு விடயம், இந்தக் களத்தில் இயங்கிய பலர் இன்றைய மாற்றப்போக்கினை விளங்கிக் கொண்டிருக்கவில்லை. ‘முற்போக்குத் தமிழ் தேசியம்’ பற்றிப் பேசப்பட்டது. ‘தேசியம்’ அடிப்படையில் முதலாளித்துவத்தின் அரசியல் வடிவம். அதன் முற்போக்குப் பாத்திரம் மூன்றாமுலக நாடுகளில் எழுபதாம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட சுயசார்பு பொருளாதார முயற்சியுடன் முடிவுக்கு வந்துவிட்டது; ஏகாதிபத்தியப் பிடிப்பைத் தகர்ப்பதற்கென சுதந்திரம் பெற்ற தமது மண்ணில் ஒவ்வொரு நாட்டினதும் தேசிய முதலாளி வர்க்கப் பிரிவினர் முயற்சித்த வரலாற்றுக்கட்டம் எண்பதுகளுக்கு வந்தபொழுது மாற்றம் பெற்றிருந்தது. அந்த முன்னெடுப்பில் அவர்கள் இழைத்த தவறுகளின் பேறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்க சக்தியாகி ஒவ்வொரு நாட்டினுள்ளும் கைவைப்பதற்கு வசதி ஏற்படுத்துவதாயிற்று; சுயசார்புப் பொருளாதாரத்தை மூட்டைகட்ட வைத்துத் திறந்த பொருளாதாரத்துக்குக் கதவை அகலத்திறக்க வகைசெய்ய ஏற்றதான உலகமயமாதல் அரங்கேறிவிட்டது. அதன் பின்னர் தேசிய முதலாளித்துவ சக்திகள் ‘மனிதமுகத்துடன் கூடிய உலகமயம்’ பற்றி பேச வேண்டி ஏற்பட்டது. தேசிய விடுதலைப் போராட்டங்கள் முன்னர் வகித்த முற்போக்குப் பாத்திரத்தை இழந்து அமெரிக்க மேலாதிக்க நலனுக்கு ஏற்புடைய வகையில் வடிவமைக்கப்பட்டன.
இன்று ஒடுக்கப்படும் தேசியம் விடுதலைத் திசை மார்க்கத்துக்கு உரியதா என்பதே கவனிப்புக்கு உரியது. இங்கு விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டம் மக்கள் விடுதலைப் பண்புடையதில்லை என்ற உணர்வின்றி முன்வைக்கப்படும் கருத்து மக்களைச் சரியான அமைப்பில் ஒன்றுபடுத்த இடந்தராது. அதனைச் செய்யத் தவறும்போது அரங்கிலுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கே மக்களாதரவு நீடித்து செல்லும். அதேவேளை அப்போராட்டத்தில் மாவீர ரான இளைஞர் யுவதிகளது அர்ப்பணிப்பு மதிக்கப்படும் வகையில் தெளிவான வேறுபடுத்தல் முன்வைக்கப்படும் அவசிமும் உள்ளது.
தேசியப் பிரச்சினையை இனவாத உணர்வு மேவும் வகையிலும் சாதியடிப்படையில் புறக்கணிப்புக்கு உள்ளாகும் மக்கள் பிரச்சினையைச் சாதிவாத தொனியில் வெளியிடுவதுமான இரண்டக நிலை ஏற்படுவது மார்க்சியத்தை வர்க்க வாதமாக அணுகுவதனால் வந்த வினை. சாதியவாத, இனவாத முழக்கங்களை முன்வைத்து இவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னர் வர்க்கப் புரட்சி வந்து எமது வீட்டுக் கதவைத் தட்டி ‘தலைமையேற்க வாருங்கள் தோழர்’ எனக் கேட்கும் என எமது தலைவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அண்மையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின்மத்திய குழு, ‘விரைவில் வர்க்கப் புரட்சி வர இருப்பதற்கான அறிகுறிகள்’ தெரிவதாக கூறி அதற்கு ஏற்ற தயாரிப்புடன் இருக்க ஊழியர்களை அறைகூவி இருப்பதாக அறிய முடிந்தது; இது தொடர்பிலான சில காணொளிகள் வந்திருந்தன. இப்போதும், இந்துத்துவம் மேவிவரும் இன்றைய சூழலிலும் வர்க்க அரசியல் செல்நெறிக்குள் இயங்குவதான நினைப்பு அவர்களுக்கு. முப்பது வருடங்களுக்கு மேல் பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்துக்கு பல்லாயிரம் மக்களுயிர்களை ஆகுதியாக்கி பௌத்த சிங்களப் பேரினவாத அரசு ஒன்று மிக உறுதியுடன்ஏற்பட்ட பின்னரும், நவீன வரலாற்றில் திணை அரசியலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள இலங்கையில் இருந்துகொண்டும் எமது தோழர்கள் இன்னமும் வர்க்க வாதமாக மார்க்சியத்தைப் புரிதல்கொள்ளும் நிலை!
சாதியொடுக்கு முறைக்கு எதிராக மார்க்சிய வழிகாட்டலுடன் நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து நான்கு தசாப்தங்கள் முன்னெடுத்த போராட்ட அனுபவங்களின் திரட்சியாக அப்போதே திணை அரசியலை வடிவப்படுத்தி இருக்க வேண்டும். அதனொளியில் தேசிய இனப் பிரச்சினையின் நான்காம் கட்டப் போராட்டத்தை மார்க்சிய வழிகாட்டலில் கொம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்து இருக்கும்பட்சத்தில் தமிழ் தேசியர்கள் மேற்கொண்டவாறான மேலாதிக்கவாத தேசிய முன்னெடுப்பு முறியடிக்கப்பட்டிருக்கும்; முப்பது வருட யுத்த அவலமும் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த தேர்தல் தந்த படிப்பினை, மாற்று வழி ஒன்றின் அவசியத்தை; எமது வேலைப்பாணி மாற்றப்பட்டாக வேண்டும் என்பதனை. ஏற்கனவே பேசுபொருளாக மேலெழுந்துள்ள திணை அரசியல் மார்க்சியத்தைக் கையேற்காத ஒருவர் தன்னை மார்க்சியராக அழைப்பது இன்னொரு வடிவ மதவாதமே அன்றி வேறில்லை!
(தமிழ் தேசியப் போராட்டம்:
முதலாம் கட்டம்: ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்த ‘ஐம்பதுக்கு ஐம்பது’ கோரிக்கை.
இரண்டாம் கட்டம்: தமிழரசுக் கட்சியின் ‘சமஷ்டிக் கோரிக்கை’
மூன்றாம் கட்டம்: எண்பதாம் ஆண்டுகளின் இளைஞர் எழுச்சி முன்னிறுத்திய தமிழீழக் கோரிக்கை.
நான்காம் கட்டம்: 'ஒடுக்கப்பட்ட மக்கள், உழைப்பாளர் பங்கேற்கும் தொழிலாளி வர்க்கச் சிந்தனை வழிகாட்டலிலான போராட்டம்'!
- தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்).
உயிரோடு நானாக
ஒரே விடயம் இருவருக்கு
வேறுபட்ட விளக்கத்தை ஏற்படுத்தும்
இரு வேறு உலகத்து இயற்கையை
மாற்றவெனப் பிறந்த அரியதொரு
படைப்பு
கதிர். திருச்செல்வம் அவர்களது
“உயிரோடு நானாக”
‘மகுடம்’ வெளியீடான இந்த நூல் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த போதிலும் இன்று தான் இதனைப் படித்து முடித்தேன். திருக்கோணமலையில் ஓகஸ்ட் 22 ஆம் திகதி இடம்பெற்ற எனது நூல் குறித்த கருத்தாடலரங்குக்குச் சென்ற நிலையில் நூலாசிரியர் கதிர். திருச்செல்வம் இந்த நூலைத் தருகின்ற வரையில் இதனைப் பற்றி நான் அறிந்திருக்க வாய்ப்பை வழங்குவதாக எங்கும் பேசப்பட்டு இருக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது; இப்படி எத்தனை ‘குடத்தினுள் அகப்பட்ட விளக்குகள்’ இருக்குமோ? இது வெளிப்படாமல், அவசியமற்ற ஏதேதோவெல்லாம் பெரும் ஆரவாரம் செய்கிற அளவுக்குச் சிதைந்து நாசப்பட்ட சமூகமாகவா நாம் ‘வாழ்கிறோம்’?
இன்னும் செழுமைப்பட்ட படைப்பாக இது அமைந்திருந்தால் கவனம் பெற்றிருக்குமோ? - இவ்வாறு சொல்லவும் எவரேனும் முனையலாம்!
அழகியல் வாதக் குட்டைக்குள் அமிழ்த்தி அற்புதமான படைப்புகளை இருட்டடிப்புச் செய்வதன் வாயிலாகச் சமூக இயக்கங்களில் உறைந்திருக்கும் உண்மைகளை மறைத்துப் போலிகளை மேலெழச் செய்யும் முயற்சி இன்னும் எத்தனை காலம் செல்லுபடியாக இருக்கப்போகிறதோ? !
முப்பது வருட யுத்தப் பேரிடர் குறித்து எந்த ‘விமரிசனத்தையும்’ வெளிப்படையாக இந்த நாவல் பேசவில்லை; இங்கே பேசப்பட்டவாறு தமிழர் போராட்டம் விடுதலைத் திசை மார்க்கத்தில் முன்னேறி இருந்தால் இன்று ஏற்பட்ட நிர்க்கதி நிலை தவிர்க்கப்பட்டு இருக்கும் (“கடல் அலைகளை மேவிய கதை” இன்னொரு சங்கதி பேசியிருக்கும்) என்பதனை இப்படைப்பைப் படித்து முடிக்கும்போது உணர்வோம்; அதனாலேயே தான் இந்த நாவல் அதிகம் பேசப்படாமல் ‘ஈழநதி’கள் பலவும் காட்டாற்று வெள்ளமாகக் கரைபுரண்டு ஓட வாய்ப்பாகி உள்ளன!
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நூலாசிரியரைச் சந்தித்த போது “நம்மட முற்றம்” இதழாசிரியராக மட்டுமே அவரை அறிந்திருந்தேன்; நூலைக் கையளிக்கும் வரை தன்னை ஒரு நாவலாசிரியராக அவர் வெளிப்படுத்தவும் இல்லை.
நமது வரலாறு சரியான முன்னெடுப்பை எவ்வாறு தொடர்ந்திருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான இந்த நாவலை, விடுதலை நாட்டமுள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்தாக வேண்டும். இந்த நாவலின் பேசுபொருளாக உள்ள, தமிழர் புறக்கணிப்புக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பத்தை வெளிப்படுத்திய அமைப்பும் பின்னர் பொது நீரோட்டத்தில் ஏனைய அமைப்புகள் போன்ற தவறுகளுக்கு ஆட்பட்டு அந்தப் பேரலைக்குள் ஒடுங்கிக் காணாமல் போனது என்பது எங்களுக்கான துன்பியல். மார்க்சிய வழிகாட்டலுடன் தொடங்கிய அந்த முதல் அமைப்பில் இயங்கிய ஆரோக்கியமான மனக் கட்டமைப்புடன் வெளிப்பட்டுள்ள இந்தப் படைப்பு மிகுந்த சிரத்தையுடன் மக்கள் மயப்படுத்த அவசியம் உடையது!
செய்யத்தகாதன செய்து
கெட்டுச் சீரழியும் எமது
தலையெழுத்தை மாற்றும் பொருட்டு
மக்கள் இலக்கியமான
“உயிரோடு நானாக”
நாவலை
மக்களிடம் எடுத்துச்
செல்லும் வழிதுறைகளைத்
தேடுவோம்!
மீண்டும் பாரதி
“காகிதப் புலிகள்”
எண்பதாம் ஆண்டுகளில்
பலதும் போல அந்தப்பெயரும்
பேசாப்பொருள் ஆக்கப்பட
“மீண்டும் பாரதி”
அப்போது பாரதி பிறப்பின் நூற்றாண்டு விழாக்கள் நடந்தேறிய சூடு ஆறிக்கொண்டு இருந்ததில் அந்தத் தலைப்பு ஏற்புடையதாக இருந்தது; பின்னரான
அரசியல் நீக்க,
சமூக அக்கறை விலக்கு,
விழுமியத்தகர்ப்பு
என்பன மேவிய பின்னவீனத்துவக் குழறுபடிகள் மேவிய சூழலில் பாரதி மறக்கப்பட்டவரானார். மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய, மதவாத, இனவாத, மொழிக்குரோத, பாலின விரோத மனப்பாங்குகள் வளர்க்கப்படலாயின; அவற்றுக்குத் தூபம் போடும் ஆளுமைகள் ஒவ்வோரம்சங்களில் வீச்சுடையவர் என்றபோதிலும் ஒட்டுமொத்த மக்கள் விடுதலைக்குக் குந்தகம் விளைவிப்பவர் என்பது கண்டுகொள்ளப்படாமல், அத்தகையவர்களை வழிபடும் போக்கு வளர்ந்து வந்துள்ளது.
பாரதி மறைந்த நூற்றாண்டு மூன்றாண்டுகள் முன்னே வந்து போன போது சிறிய அளவில் பேசப்பட்ட போதிலும் மீண்டும் பாரதி வேரோட இயலவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் (வருகிற புதன் கிழமை - 11.9.2024) பாரதியின் நினைவு நாள் வருகிறது; அன்றைய தினம் வடமராட்சியில் இடம்பெறும் பாரதி நினைவரங்க நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும்படியான அழைப்பொன்றை நண்பர் இராஜேஸ்கண்ணா விடுத்துள்ளார். மிகுந்த மகிழ்வைத்தந்த அந்தச் செய்தியுடன் இன்னுமிரு திருப்திகரமான விடயங்களை இங்கு வெளிப்படுத்த வேண்டும்!
மூன்று வருடங்களின் முன்னர் தமிழக அரசின் செயலாளராகப் பதவி வகித்த (இப்போது ஓய்வு பெற்றுள்ள) இறையன்பு அவர்கள் பாரதி தொடர்பான தனது தேடுதலின் தேவை கருதி “பாரதியின் மெய்ஞ்ஞானம்” நூலை சவுத் விஷன் தோழர்களிடம் கேட்டுள்ளார். நான்காம் பதிப்புக்கான வேலைகள் நடப்பதாக கூறி, அப்போதைய இருப்பின் ஒரு பிரதியைக் கொடுத்துள்ளார்கள் (தீர்ந்து போன நிலையில் வைப்புக் கருதி வைத்திருந்தது). புதிய பதிப்பு வந்ததும் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதன் பேரில் இன்றைய சவுத் விஷன் தலைமைமைப் பொறுப்பாளர் வேணி அவர்கள் வழங்கி வைத்த நினைவுப் பதிவு கீழே:
அந்தப் படத்தை அனுப்பிய வேணியின் இணையரும் எனது நீண்டகால நண்பருமான நீதிராசன் இன்னொரு படத்தையும் அனுப்பி வைத்தார். அது மிகப்பெரும் மகிழ்வலைகளை எனக்கு ஏற்படுத்தி இருந்தது; பாரதியிடம் எனது நூலொன்றைக் கையளித்தது போன்ற மகிழ்வைத் தந்த விடயம் அது.
என்னைப் பிரதியீடு செய்து
எனது நூலைக் கையளிக்கும்
தோழரிடமிருந்து
அதனைப்பெறும்
தொழிலாளரணியின்
பெருந்தலைவர்
பாரதிக்கு நிகரானவர்!
“என்ன தோழர், பாரதி நிலையில் வைத்துப் பேசுவதா?” என்று தோழர் வி. மீனாட்சிசுந்தரம் (வி.எம்.எஸ்.) கண்டிப்பார் என்பது எனக்குத் தெரியும். அவ்வளவு தன்னடக்கம் அவரிடம் உண்டு; அதனால் என்னை ஒரு கூட்டத்தில் வைத்து ‘எங்களைவிட எல்லாம் இவர் பெரிய மார்க்சியர்’ எனச் சொல்லும் விசால மனம் படைத்தவர். மிகப்பெரும் தொழிற்சங்கச் செயற்பாட்டு அனுபவ வீச்சுடன் ‘தீக்கதிர்’ , ‘மார்க்சிஸ்ட்’ இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்தவர் தோழர் வி.எம்.எஸ். அவர்கள்!
எனது எழுத்துகள் மீது அத்தனை பெரிய மதிப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்த அவரிடம் “ஏகாதிபத்தியம் சுயநிர்ணய உரிமை மக்கள் இலக்கியம்” நூலை தோழர் நீதிராசன் கையளித்துள்ளார். எனது நூல்கள் முன் வைக்கும் கருத்துகளில் மாறுபட்ட விமரிசனங்கள் தோழர் வி.எம்.எஸ். அவர்களுக்கு இருந்த போதிலும், இவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியன என்ற மார்க்சியத் தெளிவு அவரிடம் உள்ளது. அந்தவகையில் அவருக்கான நூல் வழங்கும் நினைவுப் பதிவை முன்னதாகத் தருகிறேன்.
திருக்கோணமலையில் தோழர் கதிர் தந்த நினைவுச் சின்னத்தை நூலகச் செயற்பாட்டாளர்கள் பாரதிக்கு அருகே வைத்துள்ளனர்; பாரதியை முன்னிறுத்தி எமக்கான மார்க்சியப் பிரயோக வடிவத்தை வெளிப்படுத்தி வந்துள்ளேன் என்ற வகையில் இதனை அனுமதிக்கலாம்!
“உங்களுக்கு பாரதியில் கூடுதலான விசுவாசம் உள்ளதல்லவா?” என்று திருக்கோணமலையில் தோழர் முரளி கேட்டிருந்தார்;
“இல்லை, எந்தவொருவர் மீதான விசுவாசத்துடன் நான் இல்லை. பாரதியின் கருத்தியல், முழுமைப்பட்ட மக்கள் விடுதலைக்கானது என்ற வகையில் அவரது சிந்தனை முறைமை, செயற்பாட்டுப் பாங்கு என்பவற்றைப் பேசுபொருள் ஆக்குவதனை அதிகமாகக் கொண்டுள்ளேன்” என்ற பொருளில் பதில் சொல்லி இருந்தேன்!
பாரதியின்
நினைவு நாளில்
எமது பாதையை
அவரது பார்வையூடாகவும்
அவரை,
எமக்கான அனுபவ வீச்சுக்கள்
வாயிலாகவும்
மறுவாசிப்புகளுக்கு
உள்ளாக்குவோம்!
Subscribe to:
Posts (Atom)