Saturday, August 11, 2012

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும் -9 "மற்றொரு தொடக்கத்துக்காக"

"மற்றொரு தொடக்கத்துக்காக"

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த முடிவுரை. இரட்டைத் தேசியம் குறித்த விவாதம் ஒருவகையில் முடிவடைந்த மாதிரித்தான். இதனைச் சந்தேகித்து (எவ்வகையில் என்பது குறித்துப் பின்னாலே பார்ப்போம்) எதிர்த்த பல நண்பர்கள், அது அவசியமற்றது எனக் கண்டு மௌனித்துள்ளார்கள். அவர்கள் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை விளங்கி ஏற்றுள்ளார்கள் எனும் உண்மையைப் புரிந்து கொள்ளாமலே இதனை இருட்டடிப்புச் செய்ய விரும்பும் 'மாற்றம்பெறாத புனித மார்க்சிய வசனப்பக்தர்கள்', எல்லாம் ஒருவழியில் ஓய்வுக்கு வந்துவிட்டதாக மகிழ்வர். "மரம் ஓய்வை விரும்பிய போதிலும் காற்று அதனை அனுமதிப்பதில்லை". 
இதனை முடிவுரை என்று தலைப்பிடாமல் "மற்றொரு தொடக்கத்துக்காக" எனக் கூறியிருப்பது காரணத்தோடுதான். பண்பாட்டுப் புரட்சியைக் கோட்பாட்டு வடிவங்கொடுக்கும் வகையில் தனது சமூக மாற்ற வரலாற்றை முன்னெடுத்த தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கும் ஒரு புதிய தொடரை எழுத ஏற்றதாக இந்தத் தொடர் முடிவு பெறுகிறது. இப் பேசுபொருளை பூரணமாய்ப் புரிந்துகொள்ளவும், எமது வரலாற்றுப் போக்கை விளங்கிக்கொண்டு செயலில் இறங்கவும் அந்தப் புதிய தொடர் அவசியமாகும். எமது செயற் களத்துக்கான முன்னுரையாக உள்ள இத்தொடர் இச்சந்திப்போடு நிறைவுறும்.
தவிர, எந்தக் கோட்பாடும் முடிந்த முடிவாகிவிடுவதில்லையே; நடைமுறை அனுபவங்களைத் தொகுத்து உருவாக்கப்படும் ஒரு புதிய  கோட்பாடு தொடரும் நடைமுறைக்கான மார்க்கத்தை வடிவமைத்துத் தந்து பிரயோகிக்கப்படுகையில், முகங்கொள்ளும் இடர்ப்பாடுகளுக்கு அமைவாக புதிய செழுமைப்பாட்டுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். அதற்கு இடந்தரும் வகையில் முடிவில்லாத் தொடர் வளர்ச்சிக்குரியதாக சரியான கோட்பாடு கட்டமைக்கப்பட வேண்டும். மிகுந்த இடர்ப்பாட்டில் தொடரமுடியாத முடக்கத்துக்குள்ளாகும் கோட்பாட்டைக் கைவிட்டு புதிய கோட்பாட்டை வரித்துக் கொள்வதாக வரலாற்று வளர்ச்சி இயங்கியவாறுள்ளது. அவ்வாறு புதிய கோட்பாடுகளின் வழி மக்கள் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுப்பதாக மார்க்சியம் உள்ள காரணத்தினாலேயே, அது இறந்துவிட்டது என்று எக்காளமிட்டவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியவாறு புத்தொளி பெற்று மீண்டும் தேடலுக்குரிய தத்துவமாகியுள்ளது மார்க்சியம். 
மார்க்சியம் அதன் தொடக்க நிலையில் ஐரோப்பாவில் சோஸலிசம் வெற்றிகொள்ளப்படும் வகையில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியமாகும் எனக்கருதியது; ஒரு நாட்டில் வெற்றிபெறும் பாட்டாளி வர்க்கப் புரட்சி உடன் ஐரோப்பா பூராகப் பரவுவதன் வாயிலாக உலகம் சோசலிச மாற்றம்பெறும் எனக் கருதப்பட்டது. ருசியப்புரட்சி சாத்தியமான போதிலும், லெனினிசத்தின் வழி தனியொரு நாட்டில் சோசலிசத்தைச் சாத்தியமாக்குவது எனும் புதிய கோட்பாடு வரிக்கப்பட்ட நிலையிலேயே அவ்வெற்றி சாத்தியமாக முடிந்தது. "உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" எனும் மார்க்ஸ் எதிர்பார்த்தவாறான உலகப் புரட்சிக் கோட்பாட்டை பிரயோகித்திருப்பின் சோவியத் ருசியா படைக்கப் பட்டதனூடாக முக்கால் நூற்றாண்டு சோசலிசச் சாதனையை உலகு கண்டிருப்பதும் நிறைவேறாமல் போய், மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமற்றதோ எனும் சந்தேகம் எழுந்திருக்கும் (வேறு வடிவில் புதிய கோட்பாட்டை மர்க்சியம் வழங்கி மக்கள் விடுதலை சாத்தியப்பட்டிருக்குமாயினும், மிகுந்த சிரமங்களையும் கால தாமதத்தையும் கண்டிருக்க நேர்ந்திருக்கும்).
மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எதிர்பார்த்தவாறு மேற்கு ஐரோப்பா பூராவிலும் ஒரேவேளையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி ஏற்படாமல் போனது ஏன்? அப்போது ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கத்துக்கும் அங்குள்ள முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடே பிரதானமானதாக இருந்தது. அவர்களின் மறைவைத் தொடர்ந்து, லெனின் காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது ஏகபோக மூலதனத்தைக் குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்த நாடுகளைச் சுரண்டுவது தீவிரம் பெற்றபோது, ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்டநாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு பிரதான இடத்தை எடுத்தது. எடுக்கவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி வக்க - முதலாளி வர்க்க முரண் கூர் மழுங்கலாயிற்று.
கிழக்கு ஐரோப்பிய - ஆசியக் கண்டங்களுக்கான ருசியாவில் புதிய எழிச்சியோடு வரலாற்று அரங்குக்கு வந்த பாட்டாளி வர்க்கம் லெனின் தலைமையில் புதிய கோட்பாட்டை வகுத்து மார்க்சியத்தை வளர்த்தெடுத்து, ஒடுக்கப்பட்ட தேசங்களையும் விவசாயி வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தி சோசலிசத்தைச் சாத்தியமாக்கிக் காட்டியிருந்தது. அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழவில்லை என்பதால் மார்க்சியம் தோற்றுப்போய்விடவில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் இடையேயான முரண்பாட்டில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை வழிகாட்டலோடு சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கியூபா, வியட்னாம், வட-கொரியா போன்ற நாடுகள் எட்டிய சுதந்திரந்திரத்தினூடே சோசலிசத்தை வென்றெடுக்கும் வரலாற்றைத் தொடர்ந்தனர். 
இது தொடர்பில் மாஓ சேதுங் சிந்தனை பெறும் முக்கியத்துவத்தை அறிவோம். நகரங்களில் தொழிலாளர் புரட்சியை எதிபார்த்திருந்த சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியைக் கிராமங்களுக்கு ஆற்றுப்படுத்தி தேசப்பற்றுள்ள அனைத்து வர்க்கத்தினரையும் பாட்டாளிவர்க்கச் சிந்தனையின் கீழ் அணிதிரட்டி சீனப்புரட்சி வெற்றிவாகை சூட மா ஓசேதுங் சிந்தனை வழிவகுத்தது. தனித்த வழித் தடத்தில் முற்றிலும் தேசிய விடுதலைப் போராட்டமாகவே அமைந்த கியூபப் புரட்சியும் விரைவில் பாட்டாளி வர்க்கச் சிந்தனைத் தலைமைக்கு வர இயலுமாயிற்று. சுதந்திரத்தை வென்ற வேளையிலும் மார்க்சியத்தை ஏற்பதா இல்லையா என்ற தயக்கத்தோடு இருந்த தலைவர் பிடல் காஸ்ற்றோ விரைவில் கொம்யூனிஸ்ட் ஆகும் வகையில் வரலாற்று நெருக்கடி அமைந்தது; மார்க்சிய வழிகாட்டல் இல்லையெனில் தேச விடுதலையையும் பாதுகாக்க இயல்லாது எனக்கண்ட பின்னர் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழமாக மார்க்சியத்தைக் கற்றுப் பிரயோகித்த பிடலும், அவரை மார்க்சியத்தை ஏற்கவைக்க கடுமையாக உழைத்த அவரது உற்ற நண்பர் சே குவேராவும் இன்று மார்க்சியச் சிந்தனைத் தேடலாளர்களது பிரதான நாயகர்களாகியிருப்பது தற்செயலானதல்ல - தேசிய விடுதலைப் போர்க்குணத்தின் வாயிலாகச் சோசலிசத்தை வென்றெடுக்கும் அவசியத்தோடு தொடர்புடையது அது.
இந்த அம்சத்தில் முன்னர் அதிக முக்கியத்துவம்பெற்று, இன்று காலவோட்டத்தின் மறதிக்கு உள்ளாகும் மற்றொரு தலைவரான ஹோசிமின் கவனிப்புக்குரியவர். அவர் தலைமையில் முதலில் வியட்னாம் தேச விடுதலை மூலமாக சோசலிசத்தை அடையும் முன்னோடி நாடு எனப் பிரகடனப்படுத்தியிருந்தது, ஏகாதிபத்தியத் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்ட போதிலும் பின்னர் அவ்வழியில் சோசலிசத்தை வென்றெடுக்கும் தேச விடுதலையைப் பெற்றிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் இருபதாம் ஆண்டுகளில் வாழ்ந்த ஹோசிமின் மூன்றாம் அகிலம் தேசிய விடுதைக்காகப் போராடும் நாடுகளின் பால் சரியான வழிகாட்டலைக் காட்டுவதற்கு உதவும் வகையில் உழைக்க முடிந்தது. இது குறித்து யெவ்கனி கொபலெவ் எழுதியுள்ள "ஹோசிமின்" (தமிழிலில் க.விஜயகுமார்) எடுத்துக்காட்டியுள்ளமை கவனிப்புக்குரியது. ஏற்கனவே அவ்வழியில் செல்லும் கோட்பாட்டை லெனின் வகுத்து வழங்கியிருந்தமையை அறிவோம்.
லெனினிசம் இவ்வகையில் பெறும் முக்கியத்துவத்தை ஹோசிமின் வார்த்தைகளினூடாகக் காண்போம்: "முதலில் கம்யூனிசமல்ல, தேசியமே என்னை லெனின் மீதும் அகிலத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளச்செய்தது. படிப்படியாக போராட்டத்தின் போக்கில் நான் மார்க்சிய-லெனினியத்தைக் கற்றும், நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வந்தேன். உலகம் முழுவதும் உள்ள அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடுகளுக்கும், உலகெங்குமுள்ள தொழிலாளர்களுக்குமான விடுதலை என்பது சோசலிசத்தினாலும் கம்யூனிசத்தினாலும் மட்டுமே வென்றெடுக்கப்பட முடியும் என்ற முடிவுக்கு இறுதியாக நான் வந்து சேந்தேன். எவ்வாறு தேசபக்தியும் பாட்டாளிகளின் சர்வதேசியமும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளன என உணர்ந்தேன்" ("ஹோசிமின்" ப.82).
இவ்வகையில் தேச விடுதலைக்கும் சோசலிசத்துக்கும் இடையேயான உறவை ஏற்காமல் இல்லை, பிரச்சனை தேசியத்தைப் பிளவுபடுத்தும் உங்கள் இரட்டைத் தேசியக் கோட்பாட்டில்தான் உள்ளது என்கிறீர்களா. ஒட்சிசனையோ, நைதரசனையோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள் என்றால் அதற்கு முன்னர் அந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் இல்லாமலா இருந்தது? இருக்கத்தான் செய்தது; இவற்றைக் கண்டுபிடித்த பின்னர் பல விளங்காப் புதிர்களுக்கு விடை கண்டறிந்து மனுக்குலம் முன்னேற இயலுமாயிற்று. எமது சாதியச் சமூகம் ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சமூக சக்திகளாக சாதிகளை இன்றும் கொண்டுள்ள நிலையில் தேசியம் ஏற்கனவே ஒடுக்குவோருக்கானது-ஒடுக்கப்பட்
டோருக்கானது எனப் பிளவு பட்டுள்ளமையைக் கண்டறிந்து அதற்கமைவாக எமது விடுதலைத் திசைமார்க்கத்தைக் கண்டறிய முயல்வதே இரட்டைத் தேசியக் கோட்பாடு மேற்கொள்ளும் முயற்சியாகும். ஈழத் தமிழ்த் தேசியம் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தமக்குள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூக சக்திகளுக்கான சுய நிர்ணயத்தை வழங்குவதன் வாயிலாக ஒரே தேசிய அபிலாசைக்குள் ஐக்கியப்படுத்த இயலும் என்றே கூறுகிறோம். தவறும் பட்சத்தில் எதிரிகளால் பயன் படுத்த ஏற்ற எதிர்த் தேசியத்தை விட்டுவைத்தவர்களாவோம்.
இப்படிச் சொல்லும்போது எதிரிகளால் பயன் படுத்தப்படலாம் என்பதாலே தான் இரட்டைத்தேசியம் குறித்து தேடல் கொள்ள வேண்டுமா எனக் கேட்கப்படுகிறது. இல்லை, எமக்கான ஏற்றத்தாழ்வான சமூக உருவாக்கமே ஒடுக்கும்- ஒடுக்கப்படும் தேசங்கள் போன்று மருதத் திணையால் ஏனைய திணைகள் ஒடுக்கிச் சாதிமுறை வாயிலாக சுரண்டப்படுதல் சார்ந்தது என்கிற வகையில் தேசத்துக்கான முந்திய வடிவம் ஒன்று நவீன தேசிய உருவாக்கத்துள் கொண்டிருக்கும் பிரச்சனையை விளங்கிக்கொள்ள வேண்டும். நிதர்சனமாயுள்ள இந்தப் பிளவாக்கத்தை நிவர்த்திசெய்து ஈழத்தமிழ்த் தேசியத்துக்கான சுயநிர்ணயத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் கசப்பான உண்மைகளைக் கற்றறிந்தாக வேண்டியவர்களாயுள்ளோம். நெருப்பு சுடும் என்பதால் சுட்டுவிடுவதில்லை, சாதிய இழிவு எனும் நெருப்போடு இருக்கிறோம் என்று சொல்வதால் சாதி வந்துவிடுகிறது எனப்படுகிறதா? அவ்வாறாயின் நனவிலி மனதில் உறைந்துள்ள சாதிமனம் ஏற்படுத்தும் சூடுபற்றி சுயவிமர்சனம் கொள்ள அவசியமுள்ளது என்ற புரிதலோடு ஏற்ற கற்றலுக்கான "வைத்தியரை" நாடுங்கள்.
இன்னொருவகையில் வேறொரு நியாயமான சந்தேகம் சில நண்பர்களிடம் உண்டு. பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைக் கைவிட்டு ஒடுக்கப்படும் சாதித் (தலித்) தலைமையில் போராட வேண்டும் என்கிறீர்களா? இது மற்றொரு யதார்த்தம்; மிகப்பெரும்பான்மையான தலித் மக்கள் தொழிலாளர்களாயே உள்ளனர். அப்படியிருந்தும் சமூக மாற்றப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க நோக்கிலேயே முன்னெடுக்க வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்தோம். இதுவரையான வரலாற்றில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே தனது இருப்பையும் ஒழித்துக்கட்டினால் மட்டுமே ஈடேற்றம் என்ற யதார்த்தத்துடன் தோன்றியது; இழப்பதற்கு எதுவுமற்றதாகத் தோன்றி சோசலிசத்தின் வாயிலாகப் புத்துலகம் படைக்கக் கிடைத்த வாய்ப்பினாலேயே அவ்வர்க்கத்தால் மார்க்சியத்தைச் சிருஸ்டித்துத் தர இயலுமாயிற்று. அந்த மார்க்சிய வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சாதியத்தகர்ப்புப் போராட்ட அனுபவங்களின் தொகுப்பாகவே இரட்டைத்தேசியக் கோட்பாடு வெளிக் கிளம்பியிருந்தது என்பதை இத் தொடரில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். 
வர்க்கப்பார்வை சாதிச் சமூக வரலாற்று வளர்ச்சிச் செல்நெறியைக் கண்டறிய இடந்தராத தோற்றமயக்கத்தை ஏற்படுத்த அவசியமில்லை; வர்க்கப்போராட்டம் மட்டுமின்றி தேசிய விடுதலைப் போராட்டமும் சோசலிசத்தை வென்றெடுக்க வழி கோலியுள்ளது என்ற வரலாற்றை மறுக்கவும் அவசியமில்லை. வர்க்கம் போல தேசமும் சாதியும் 'சமூக வர்க்கமாய்' ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும்போது வர்க்கப் போராட்டத்தின் வேறொரு வடிவமாகவே சாதி-தேச விடுதலைப் போராட்டங்களும் அமைவன என்பதை ஏற்பதற்கும் தடையிருக்க அவசியமில்லை. இந்த ஒடுக்கலில் பண்பாட்டு ஒடுக்கலுக்குள்ளாகும் நிலை காரணமாக பண்பாட்டுப் புரட்சிக்குள்ள இடத்தை நிராகரிக்கவும் அவசியமில்லை. பண்பாட்டுப் புரட்சியூடாக சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்கிய வேறுபட்ட வடிவத்தை தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று மறுவாசிப்பு வாயிலாக கண்டறிய இயலும். அதை மற்றுமொரு புதிய தொடரில் மேற்கொள்வோம். தொடர்வோம்...