Thursday, October 24, 2024
சிப்பாய் புரட்சி முறியடிப்பு,
“கடைசி முகலாயன் -
ஓர் அரச குலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857”
இன்றைய உலகச்
செல்நெறி மாற்றம்
மார்க்சியத்தின்
நெருக்கடி
வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய “கடைசி முகலாயன் (ஓர் அரச குலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857)” என்ற நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். இன்றைய சமகால மாற்றச் செல்நெறிகளுடன் பொருத்திப் பார்த்துப் படிப்பதற்கான சுவாரசியத்துடன்,
ஏகாதிபத்தியப் பிடிக்குள் முழுதாக மாட்டப்படுவதற்கான வன்முறைக் கொடூரங்களில் எமது முன்னோர் (நூற்றைம்பது வருடங்களின் முன்னர்) அனுபவித்த தாங்கவியலாத சித்திரவதைகளை மனதால் சுமந்தபடி படிக்க ஏற்றதாக இந்த நூல் படைக்கப்பட்டு உள்ளது!
இதனடிப்படையை “தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” எழுநா தொடரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். முன்னதாக எழுதிய “சமணப் பள்ளிப் படி தாண்டி பக்தி இயக்கத்துக்கு” என்ற அத்தியாயம் ஓரிரு தினங்களில் எழுநாவில் வெளிவந்த பின்னர் ‘கடைசி முகலாயன்’ அனுபவத்தை உள்வாங்கி எழுதும் “பிராமண மத வரம்பைக் கடந்த மக்கள் களம்” என்ற அத்தியாயம் ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் உங்கள் பார்வைக்கு வரும்.
நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த மாற்றம் ஏகாதிபத்திய அரசியல் பிணைப்புக்குள் எங்களை முழுதாக மாட்டி வைத்ததென்றால் ஆயிரத்தைநூறு வருடங்களுக்கு முன்னர் பக்திப் பேரியக்கத்தின் ஊடாக நடந்த மாற்றம் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் பிணித்துக் கொண்டது; முன்னதாக ‘நல்ல மதங்கள்’ (பௌத்தமும் சமணமும்) அதிகாரத்தில் இருந்தன - இந்த மாற்றத்துடன் பிராமண மதம் மீளெழுச்சி பெற்றது என்பதான பிறழ் வரலாற்று எழுது முறையை மறுத்து, பக்திப் பேரியக்கம் மகத்தான சமூக மாற்றத்தை நிதர்சனம் ஆக்குவதன் பொருட்டு புதிய மத உருவாக்கத்தை வெளிப்படுத்தியது எனக் காட்டுவதாக அந்தத் தொடர் உள்ளது!
சிப்பாய் புரட்சி முந்திய நிலப்பிரபுத்துவ இணைப்புடன் தேசிய விடுதலைக்காக முனைந்து
முறியடிக்கப்பட்ட ஒன்று!
கிறிஸ்தவத் திணிப்பு காலனித்துவத்துடன் இணைந்து இந்து-இஸ்லாமியர்களை அச்சுறுத்திய சூழலில் இரு தரப்பாரும் இணைந்து அந்தப் புரட்சியை முன்னெடுத்தனர். சீக்கியர்களையும் தலித் மக்களையும் ஒன்றுபடுத்தத் தவறியதுடன் வேறும்பல விடுபாடுகளால் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக் கொள்ளையரால் மீண்டும் டெல்லியைக் கைப்பற்ற இயலுமாயிற்று. அதன் பின்னரே பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சிக்குள் எமது பிரதேசங்கள் கொண்டு வரப்பட்டன.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தில் இருந்து சுதந்திரம் எழுபது வருடங்களுக்கு முன்னர் எட்டப்பட்ட போதிலும் அமெரிக்க ஏகாதிபத்திய நவ காலனித்துவப் பிடி இன்று வரை தொடர்கிறது.
இந்த ஏகாதிபத்தியப் பெரும் பிணைப்பு இறுதியாகத் தகர்க்கப்படுவதாக இல்லை என்ற போதிலும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்றிணைந்து இயங்கித் தேசங்கள் இடையே சமத்துவத்தை வென்றெடுக்க ஏற்ற அரசியல் கள மாற்றம் ஒன்று இப்போது ஏற்பட்டு வருகிறது.
இவை குறித்து மார்க்சிய அணிகளுக்குப் பெரிதான புரிதலோ அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை;
இப்போதும் வர இருக்கிற
‘வர்க்கப் புரட்சி’
தங்களைத் தலைமை ஏற்க வருமாறு அழைக்கும் என்ற கனவுகளுடன் அவர்கள்!
இலங்கையில் மார்க்சியப் பிரயோகத்துக்கான அணி உருவாக்கம் சாத்தியப்பட்டு நூற்றாண்டை பத்து வருடங்களில் சந்திக்க உள்ளோம். எமது மண்ணுக்கேற்றதாக ‘சம சமாஜக் கட்சி’ என்ற பெயரில் அனைத்து மார்க்சியர்களும் சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் இணைந்து செயற்பட்டனர். மார்க்சியமல்லாத சிந்தனைக் கோளாறால் பத்து வருடங்களில் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி தனியே பிரிந்து இயங்க நேர்ந்தது (ச.ச.கட்சியின் தலைமையின் பெரும்பான்மையினர் ட்ரொஸ்கியத்தைப் பின்பற்றியதால் ஸ்டாலினிஸ்ட்டுகளை வெளியேற்றிய துர்ப்பாக்கியத்தின் வெளிப்பாடு தனிக்கட்சி!).
சோவியத்-சீன மாபெரும் விவாதம் 1964 இல் முன்னெடுப்பட்டு வந்த போது ருஷ்ய சார்புத் தலைமையால் வெளியேற்றப்பட்ட சீன சார்பினர் தமக்கான தனிக் கட்சியை ‘புரட்சிகர இலங்கை கொ.க.’ என்ற புதிய பதாகையுடன் உருவாக்கி இயங்கினர்.
சோவியத் சார்பு கொ.கட்சி பாராளு மன்றப் பாதையை முன்னெடுத்த போது சீன சார்புத் தலைமை வன்முறைப் புரட்சி பற்றிய புத்தக வாத முழக்கங்களை முன்வைத்தவாறு இருந்தது (யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உயிர்ப்பான மார்க்சியப் பிரயோகத்துடன் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, அதற்கான வகைமுறைப்படி வன்முறைப் பாதை இடம்பெற்று இருந்தது). தலைமையின் அந்த வன்முறை மார்க்கப் பிரசாரத்தை முழுமைப்படுத்திய வடிவமாக்க முயன்ற ரோகண விஜயவீரவின் ஜே.வி.பி. தொடர்ந்தும் முன்னெடுக்கும் தலைவர் வழிபாடு காரணமாக இன்றளவும் தெளிவான மார்க்சியப் பாதையைக் கண்டடைய இயலாததாக இயங்குகிறது!
ட்ரொட்ஸ்கிய
திரிபுவாத
புத்தகவாத
வன்முறை
பாதைகளைக் கடந்த
வெகுஜன மார்க்கத்துடன்
மக்கள் போராட்டங்கள் வாயிலாக
விடுதலைத் தேசிய முன்னெடுப்பில்
சோசலிசத்தை வென்றெடுக்கும் சரியான மார்க்சியப் பிரயோகத்துக்கு தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் முற்பட்டதன் அடையாளமாக 1978 இல் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது) உதயமானது!
அதன் 45 ஆவது ஆண்டு நினைவுகூரல் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது!
மார்க்சியப் பிரயோகத்தில் கடந்த காலத்து அனுபவங்கள் ஊடாகத்
தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு,
சரியான நடைமுறைகளை மேலும் செழுமைப்படுத்துவதாக
தோழர் மணியம் பாதை அமைந்துள்ளது!
புறநிலையான ஆய்வுகள்,
சரியான கொள்கை-கோட்பாடுகளை வகுத்தல்,
வெகுஜன மார்க்கம்,
பரந்த ஐக்கிய முன்னணி,
மக்கள் நலன்களை நிறைவாக்கும் செயற்பாடுகள் வாயிலாக மக்களிடம் இருந்து கற்றல்,
கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் எனும் கலந்துரையாடல் முறையால் தீர்மானங்களை எட்டுதலும் செயலுருப்படுத்தலும்,
கூட்டான முடிவும் தனிநபர் பொறுப்பும்,
உட்கட்சிப் போராட்ட உரிமையுடன் சரியைக் கண்டறிதல், தவறைத் திருத்துதல்,
ஜனநாயக மத்தியத்துவ நடைமுறையைப் பின்பற்றுதல்
எனும் தோழர் மணியம் பாதையை மக்கள் மயப்படுத்தி சமத்துவ சமூகம் படைக்க முன்வருவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment