Saturday, April 28, 2012

இரட்டைத் தேசியம் - வர்க்க - அரசியலுக்கு மாற்று : சாதியும் மதமும்


இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் - 5

வர்க்க - அரசியலுக்கு  மாற்று : சாதியும் மதமும். ந . இரவீந்திரன் 
முன்னதாக, இந்தத் தலைப்பு ஏற்படுத்தும் மயக்கத்தை மட்டுப்படுத்துவது அவசியம்; கட்டுரையை முழுமையாகப் படிக்காமலே முன் முடிவுகளுடன் முத்திரை
குத்துவோரிடமிருந்து தப்புவதற்காக அல்ல, எமது சமூகப் பார்வை தொடர்பில் அவசியமாய் வந்தடைய வேண்டியுள்ள தெளிவு தொடர்பில் இடர்ப்பாடுகள் களையப்பட ஏற்றது என்கிற வகையில். இரட்டைத்தேசியம் பற்றிய பேசு பொருளே இந்த 'நோக்கு' சார்ந்தது என்கிற வகையில், முடிவில் அனைவரது வாத விவாதங்கள் ஏற்படுத்தும் தெளிவுதான் அவசியம் என்றபோதிலும் இந்த முன்னெச்சரிக்கை!

மாற்றங்களை அதன் வேக மற்றும் பரிமாண விகசிப்புகளோடு உட்செரித்து, வந்தடைய வேண்டிய புதிய முடிவுகளுக்கு ஆற்றுப்படுத்தும் சிந்தனை முறையான
மார்க்சியத்தையுங்கூட வசனங்களுக்குள் சிறைப்படுத்தி, மார்க்ஸ் சொன்னார்-லெனின் சொன்னார் என்று இடர்ப்படும் எமக்கு மேலதிக சுமையாக இந்தத் தலைப்பும் இருந்துவிடக் கூடாது. வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பிய சமூகத்தில் வர்க்கம் வகித்த பங்குப்பாத்திரத்தை மருதத்திணை மேலாதிக்கத்தால் ஏனைய திணைகளை வென்றடக்கி சுரண்டலை சாத்தியப் படுத்திய எமது சாதியச் சமூகத்தில் சாதியே வகிக்கிறது; அங்கு அரசியல் புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களை இங்கு மதச் சிந்தனை மாற்றங்கள் ஏற்படுத்தின. இதனைக் கவனத்தில்கொள்ள மறுத்ததிலேயே எமது மார்க்சியப் பிரயோகத் தவறு நேர்ந்துள்ளது; எமது சமூகக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கு இயலாமலும் சிரமப்பட்டோம். மறுபக்கத்தில் சாதியவாதங்களும் (தலித்தியமும்) மத அடிப்படைவாதமும் மேற்கிளர்ந்து பல அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இருக்கட்டும்,இருக்கட்டும் திரும்ப வயிறு கடிக்கத்தானே போகிறது, அப்போது வர்க்க அரசியல் மேற்கிளம்பி எங்களைக் கூவியழைக்காமல் போய்விடுமா என்று 'மார்க்சிய-லெனினிய' பாராயணம் பாடிக்கொண்டு இருப்பவர்களும் இல்லாமல் இல்லை. அவர்களது பக்தியை மெச்சி மார்க்சோ லெனினோ வந்து கதிமோட்சம் தந்தால்தான் உண்டு.

சமூக இயங்காற்றலைப் புரிந்துகொண்டு மக்கள் விடுதலைச் செல்நெறிக்கு அமைவாக மக்களை அணிதிரட்டிக் களத்தில் இறக்கி புரட்சிகர அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தவறும்போது பிற்போக்கு சக்திகள் தமது சுரண்டல் வாழ்முறையை நீடித்துக் கொண்டுசெல்ல வாய்ப்பைப் பெறுவர். அதுசரி, வர்க்க - அரசியலுக்கு மாற்றாக சாதியையும் மதத்தையும் பேசுகிற கட்டுரையை எழுத வந்த நீர் இதென்ன வேதாளம் வேதம் ஓதிய கதையாக என்கிறீர்களா? அதன் பொருட்டாகவே இந்த ஸ்பீட் ப்றேக்கர் (இதையே எமது மரபு வழிப்பட்டுச் சொன்னால் 'அடைகட்டை'; உலகம் என்னதான் தலைதெறிக்க ஓடினாலும், மனித மனங்களைக் கட்டியுள்ள தளையாகப் பண்பாடு விளங்கி மரபுக்கான இடத்தைக் கவனங்கொள்ள வலியுறுத்தவே செய்கிறது. மரபு மீறலோடு பாய்ச்சல் அவசியம் என்றபோதிலும், மரபைப் புரிந்துகொண்டவராலேயே எவ்வகையில் மீறல் சாத்தியம் என்பதையும் நிகழ்த்திக் காட்ட இயலும்).

வர்க்க அரசியலை மறுப்பதல்ல இந்தத் தலைப்பு. வர்க்கப்பார்வை அவசியமானது. அதன் வழி, வர்க்கத்துக்குப் பதிலாக சாதியும், அரசியலின் பாத்திரத்தை மதம் வகிக்க இயலுமாயிருந்ததும் எமது வர்லாற்றுப் போக்கின் பிரத்தியேகத் தன்மை என்ற புரிதல் கொள்ளத்தவறின் வரலாற்றுப் பணியைக் கையேற்க இயலாதவர்களாவோம். ஆறுமுகநாவலர், அனகாரிகதர்மபாலர், வள்ளலார், தயானந்தசரஸ்வதி, ராஜா ராம்மோகன் ராய் போன்றோர் தொடக்கி வைத்த பண்பாட்டு தேசிய இயக்கம் விவேகானந்தரை அரசியல் தேசிய விழிப்புணர்வின் தொடக்குனர் என்ற பாத்திரமேற்க வழிப்படுத்திய வரலாற்றை அதற்குரிய குணாம்சத்தில் புரிந்து கொள்வதில் சிரமப்படுபவர்கள் எம்மில் பலர் உண்டு. இவர்கள் வர்க்கப் பார்வையில் பார்க்காமல், ஐரோப்பியக் கண்ணாடியால் பார்க்கிறார்கள் என்பது தான் பிரச்சனை. வர்க்கப் பார்வையை வரிக்காத போதிலும் எமது சொந்த வரலாற்று இயக்கப்போக்கை, ஐரோப்பிய அனுபவ ஒளியில் வைத்துப் பார்த்த விவேகானந்தர், பிராமணர் ஆட்சியும் சத்திரியர் ஆட்சியும் வைசியர் ஆட்சியும் இதுவரை வரலாறாக இருந்தன, இனிச் சூத்திரர் ஆட்சி சாத்தியமாகும் என சொல்ல இயலுமாயிருந்ததே அவரது பார்வை வீச்சுக்கு கட்டியம் கூறுவதாயமைந்த அம்சம்தான். அந்த ஆளுமையே அவரை ஒரு புதிய வரலாறு படைக்கும் பாத்திரத்துக்கு உரிமையாளராக்கியது. அவர் காலத்தில் எமது பழைய பண்பாட்டு தளைக்குள் மாட்டுப்பட்டு சிக்கெடுக்க இயலாமல் தடுமாறியவர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? ஐரோப்பியக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அதி நவீனத்துவம் பேசி மக்களைப் பிரிந்த 'புரட்சிகரச் சிந்தனையாளர்கள்' எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள்? "ஒன்று மற்றொன்றைப் பழித்து" தான் மட்டுமே சரியென்று முடக்கும் அரைவேக்காடுகள் போலன்றி, ஒவொன்றிலுமான இரு அம்சங்களையும் கவனங்கொள்ளும் இயங்கியலாளர்களாய் அமையும்போது சரியான பார்வை வந்தமையும். விவேகானந்தரிடம் மரபு வழிப்பட்டும் ஐரோப்பிய சிந்தனை வளர்ச்சி ஏற்படுத்திய வாய்ப்பினாலும் அன்றைக்கு வந்திருக்கக்கூடிய அதியுச்சச் சிந்தனைக்கு வர இயலுமாயிற்று.

அப்படி அரசியலுக்குள் மதத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்தியமையாலேயே திலகர், கோகலே போன்றோரின் பிராமணத் தேசியம் எழுச்சியுறவும் அதன் எதிர்வினைக் கேடாக முஸ்லீம் தேசியம் தோற்றம் பெற்று பாகிஸ்தான் பிரிவினை வரை வளர்ந்து இன்றுவரையான அவலங்களுக்கு கால்கோளாயிற்றே எனவும் கூறப் படலாம். ஆம், இது எமது தவிர்க்கவியலாத வரலாற்றுச்செல்நெறி. இந்த இயக்கப் போக்கிலும் வெறும் வர்க்கங்களைப் பார்ப்பதிலிருந்து யதார்த்தத்தில் நிலவிய சாதித்தேசியங்களின் அணிசேர்க்கைகளையும் மாற்றப் போக்குகளையும் கவனங்கொண்டு மார்க்சியர்கள் தமக்கான அரசியல் செயற்பாட்டு மார்க்கத்தை வகுத்து இயங்கியிருப்பின், வரலாற்றைப் புரட்சிகரமான திசைவழியில் முன்னெடுத்திருக்க இயலும்; வேண்டுமென்றே எவரதும் துரோகத்தால் ஏற்பட்ட தவறென்பதை விட, வர்க்கப் பார்வை என்பதை வர்க்கங்களை மட்டுமே பார்ப்பதான தோற்ற மயக்கத்துக்கானதாக முடக்கிப் பார்த்துவிட்ட கோளாறின் பேறானது இத்தவறு! இதனை மார்க்சியத் தேடல் இன்று கவனங்கொண்டு விவாதப் பொருளாக்கியுள்ளது என்கிற வகையில், இனி மார்க்சிய இயக்கச் செல்நெறி அவசியமான அணி சேர்க்கைகளுக்கான வாய்ப்புகளைக் கண்டடைந்து புதிய வரலாறு படைப்பது சாத்தியமாகும் என நம்பலாம்.

இதுபற்றிய அருட்டுணர்வு நீண்ட காலமாய் இருந்து வந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தினூடாக நவீன, தாராள, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பை வென்றெடுப்பதில் இருந்த சிரமம் பற்றிப் பேசும்போது தலைசிறந்த மார்க்சியச் சிந்தனையாளரான நம்பூதிரிபாட் இவ்வாறு கூறுவார்: "எனினும் இந்தப் பொதுவான யோசனையை பக்குவப்படுத்தி, வளர்ப்பது ஹிந்து சமூகத்திலுள்ள ஏராளமான சாதிகளாலும், ஹிந்துக்களல்லாதோரில் இருக்கும் பிரிவினைகளாலும் பாதிக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றும் தமக்கே உரித்தான பொது சமூக - கலாசார உணர்வைக் கொண்டிருந்தன. இது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை என்பதைப் புரிந்து கொள்வதில் பல்வேறு பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தியது."

சரி, அப்போது இவற்றைக் கடந்த வர்க்க இணைப்பை எதிர்பார்த்தமை இலவுகாத்த கிளியின் கதையாயிற்றென்றால், இப்போதாயினும் சாதிகள் - மதக் குழுக்கள் ஒவ்வொன்றும் தமக்கேயுரித்தான 'பொது சமூக - கலாசார உணர்வைக்' கொண்டுள்ள நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு அதன் தேசியக் குணாம்சத்தை விளங்கிய வகையில் கொள்கைவகுப்பதற்கு முன்வந்தாக வேண்டுமில்லையா? "இந்தச் சாதி, மத சமூகங்களின் தனிப்பட்ட உணர்வுகள்" ,"இந்தியத் தேசிய காங்கிரஸ் உருவாக்கிய தேசிய உணர்வுக்கு எதிரான" திசையில் அமையும் தன்மையை நம்பூதிரிபாட் குறிப்பிடத் தவறவில்லை; காங்கிரஸ் பிராமணத் தேசிய நலனை அதிகாரத்துக்கு கொண்டுவர முயன்ற நிலையில் ஏனைய சாதித் தேசியங்களும் மதத் தேசியங்களும் தத்தம் நலங்கள் பேணப்படுவதற்கு போராட அவசியம் இருந்தது. அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலை உடனடித் தேவை என்கிறவகையில், கொம்யூனிஸ்ற் கட்சி தாராளவாத அரைப் பிராமணத் தேசிய இயக்கத்துடன் ஐக்கியப்பட்டு இயங்கியது தவிர்க்க இயலாததே; அதேவேளை எதிர்த் தேசியமாக அமைந்த அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகளோடும் ஐக்கியமும் போராட்டமும் என்ற நடைமுறையை இணைத்திருக்க வேண்டும் என்கிற அம்சத்தை இன்று சுயவிமர்சன ரீதியில் ஏற்றாக வேண்டும்.

"காந்தி படுகொலையின் அரசியல்" என்ற தலைப்பில் நம்பூதிரிபாட் எழுதிய கட்டுரையில் மேற்படி முக்கியத்துவமிக்க கருத்து வெளிப்பாட்டைக் காணவியலும் (பக். 132-133). " மக்கள் நாட்குறிப்பில் விடுதலைப் போராட்டம்" என்ற சீத்தாராம் யெச்சூரி தொகுப்பில் இக்கட்டுரை உள்ளது. இதே நூலில் நரேஷ் நதீம்  "1857 க்குப் பிறகு பிந்திய இந்தியா, அதற்கு முன்பு இருந்ததைப்போல இல்லை" எனும் தலைப்பில் எழுதும்போது குறிப்பிடும் விடயம் கவனிப்புக்குரியது. "கிழக்கு நாடுகளின் வரலாறு முழுவதும் மதத்தின் வரலாறாகவே தோன்றுவது ஏன் என்பது பற்றி ஆய்வு செய்யவேண்டியது அவசியம் என்று ஏங்கல்ஸுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் வலியுறுத்தினார். இத்தகைய ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு வேறு வழிகள் இல்லாவிட்டால், மதம் அதற்கான வழிமுறையாகிறது என்று நன் கு தெரிந்த சமூகவியல் முடிவு, கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" என்பார் நரேஷ் நதீம் (ப.245). அந்த வெளிச்சமே தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தி, மார்க்ஸ் எதிர்பார்த்த ஆய்வு மேற்கொள்ளப்படா நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

இத்தகைய தவறான புரிதலுடனேயே எமது வரலாறு எழுதுமுறை அமைந்துள்ளது என்ற துன்பியலை ஏற்றாக வேண்டும். "மதத் தலையீடு அதன் அளவை விரிவுபடுத்திய அதேசமயம் வேளாண் எழுச்சிகளின் வர்க்க இயல்பை பலவீனப்படுத்தியது" என இர்பான் அபீப் "இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள் (ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி)" என்ற நூலில் குறிப்பிடுகையில் அந்தத் தவறு வெளிப்படக் காணலாம் (ப. 326). மார்க்சிய அணுகுமுறையிலான அற்புதமான அந்த நூலிலேயே இத்தவறு வெளிப்படுவதென்பது அடிப்படையில் எமது ஏற்றத்தாழ்வுச் சமூக உருவாக்கம் பற்றிய புரிதலின்றி மேற்கொண்டு செல்வதில் இருக்கும் இடர்ப்பாடு சார்ந்தது. தமிழகத்தில் கி. பி. ஆறாம் நூற்றாண்டு வேளாண் எழுச்சி நிலப்பிரபுத்துவ "வர்க்க அமைப்பு" மாற்றம் ஏற்பட வழிகோலியது; ஆயினும் அது வேளாண்வர்க்க எழுச்சியல்ல, வெள்ளாளச்சாதி மேலாண்மை பெற்ற மாற்றம். மற்றொரு மிகமிக முக்கியத்துவமுள்ள விடயம், இந்த அதிகார மாற்றம் சைவ-வைணவ மத எழுச்சிகள் பக்திப் பேரியக்கம் வாயிலாக சாத்தியப்படுத்திய ஒன்றாகும். ஒரு சமூக அமைப்பு மாற்றம் மத இயக்க வாயிலாக நடந்தேறியதென்பதும், அதிகாரம் ஒரு சாதியின் கையில் சென்றடைந்தபோது பிராமணச் சாதியெனும் மற்றொன்றோடு கூட்டமைத்து  ஆயிரம் ஆண்டுகளாய் இயங்கி வந்துள்ளன என்பதும் கவனிப்புக்குரியது. தொடர்ந்த வரலாற்றில் தெலுங்கு நிலப்பிரபுத்துவச் சாதிப் பிரவேசத்திலும் இவர்களது கூட்டு நீடிக்க முடிந்தது. பள்ளு இலக்கிய வடிவத் தோற்றம் பற்றிய ஆய்வுகள் அந்த ஆதிக்கச் சாதிகளிடையேயான மோதலும்-இணக்கமும் ஏற்படுத்திய சமூகத் தாக்கங்கள் பற்றி அக்கறை கொள்ளக்காணலாம்.

இவைகுறித்து இர்பான் அபீப் மாற்றுக் கருத்துடையவரல்ல; ஆயினும் சாதி மோதல்களுடன் மத விவகாரங்களூடாயே எமது வரலாறு இயங்கியது என்பதற்கு வரும் வாய்ப்பைப் பெறாமல், வர்க்க மாற்றத் தோற்ற மயக்கத்தில் அல்லாடுவதால் அனைத்து அம்சங்களிலும் தொடர்புபடுத்தத் தவறிவிடுகிறார். இதற்கான எடுத்துக்காட்டொன்றையும் அதே "இந்திய வரலாறு" குறித்த அவரது நூலிலிருந்து காண இயலும். வட இந்திய மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கம் பற்றிக் கூறுகையில் இர்பான் அபீப் இவ்வாறு கூறுவார்: "ஆரியர்களுடைய வேளாண் சமூகத்தின் 'சமத்துவக் கட்டமைப்பு' உள்ளூர் எதிரிகளுடன் அவர்கள் நடத்திய போரின் பொழுது கட்டாயம் பாதிப்புக்குள்ளானது. தாசர்கள் அனைவரும் கொலை செய்யப்படவில்லை. சிலர் அடிமைப்படுத்தப்பட்டனர். அத்தகைய ஆண் (தாசர்கள்), பெண்(தாசிகள்) அடிமைகள் பரிசளிக்கக்கூடிய விருப்பமான பொருட்களாவர். ஆரிய வட்டத்துக்குள் தாசர்களை உள்வாங்கிக்கொண்டதற்கான சான்றுகளும் இருப்பதாக கோசாம்பி குறிப்பிடுகிறார். ஆயினும் அவர்கள் நகர்ப்புறவாசிகள் என ரிக் வேதத்தில் அழைக்கப்பட்டனர். மிகவும் வளர்ச்சிபெற்ற வர்க்கக் கட்டமைப்பை அவர்கள் தங்களிடையே கொண்டிருந்ததற்கான வாய்ப்புகள் உண்டு. அடிமைப்படுத்தப்பட்ட மக்களைத் தமக்குக் கீழ் இணைத்துக்கொண்டு விரிவடைந்தபோதிலும் சூத்திரர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. சூத்திரர்கள் ரிக் வேதத்தின் இறுதிப் பகுதியில் அங்கீகரிக்கப்பட்டிருந்தனர்.பழைய விஸூக்களான வைசியர்களுக்கு கீழாக நான் காவது வருணமாக (சாதி-வர்க்கம்) அவர்கள் குறிப்பிடப் பட்டிருந்தனர். வேதத்தின் ஆரம்பக்கட்டத்தில் சூத்திரர்களின் உண்மையான தகுதி குறித்த எவ்விதமான சான்றும் இல்லாத போதிலும் அவர்கள் விவசாயிகளாக அல்லாமல் இனக்குழு மக்களுக்கு அல்லது அவர்களுடைய சொந்த எஜமானர்களுக்கு அடிமைத் தொழில் புரியும் கூலியாட்களாக அல்லது வேத பிற்காலத்தில் நினைத்ததைப்போல 'அடிமைகளாக' இருந்திருப்பதற்கான
சாத்தியமுண்டு" (ப. 86).

வருணம் எவ்வாறு கருதப்பட வேண்டும்? சாதி-வர்க்கம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? 'நகர்ப்புற வாசிகள்' வர்க்கக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனரா - அல்லது அங்கும் மேலாதிக்க இன மரபுக் குழு முறையிலான ஏற்றத்தாழ்வான அமைப்பேதான் இருந்ததா? ஆரியர் பிரவேசத்துக்கு முந்திய சிந்துச் சமவெளியின் நகர்ப் பண்பாடு வர்க்க உடைவுக்கானதாக அமைந்திருப்பதைவிட, அப்போதும் இன மரபுக் குழு மேலாதிக்கத்துக்கான சுரண்டல் நிகழ்ந்திருப்பதற்கே வாய்ப்புண்டு.ஆயினும், ஆரியர் பிரவேசத்தின் பின்னர் தொடர்ந்த வரலாற்றுச் செல்நெறியில் சுரண்டல் சாத்தியப்பட்ட நிலையிலேயே சாதியம் தோற்றம் பெற்றது என்பது தெளிவு. இதுகுறித்து இர்பான் அபீப் இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். கூடவே சாதியம் தனியே பிராமணியத்துக்குரியது மட்டுமல்ல, சுரண்டல் அமைப்புக்கான கருத்தியல் என்கிற வகையில் பௌத்தத்துக்கு அதனோடிருந்த தொடர்பையும் தெளிவுபடுத்தியுள்ளார். பிரச்சனை முழுநிறைவான வர்க்க அமைப்பாக இந்திய சமூக அமைப்பைக் காண்பதிலேயே உள்ளது. முழு நிறைவான சுரண்டல் நிலவியபோதிலும் வர்க்கக் கட்டமைப்பாகவன்றி,மேலாதிக்கம்பெற்ற இனமரபுக்குழு சாதி ஒடுக்குமுறையை ஏற்படுத்திக்கொண்ட பிரத்தியேகச் செல்நெறி அது என்கிற தனித்துவம் கவனம் கொள்ளப்படாது விடப்படுவதில் உள்ளது. அந்தவகையில், "சாதி-வர்க்கம்" என்பது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும். உண்மையில் ஆதிக்கச் சாதிகள், இடைச் சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள் என்பன சாதியவர்க்கங்கள் எனும்வகையில் புதிய பண்பு ரீதியிலான வேறுபாடுகளோடு அமைவன.

இங்கு வலியுறுத்த அவசியமான விடயம் உண்டு; இந்தியச் சமூகப் பிரத்தியேகத் தன்மை வேறுபாடு குறித்து ஐரோப்பிய(முதலாளித்துவச்) சிந்தனையாளர்கள் சரியான புரிதலின்றிக் குழம்பிக்கொண்டு குழப்பியடித்தபோது தனது ஆரம்பக்காலக் குரு ஹெகல் போல மார்க்ஸும் தவறான புரிதலுக்காளானார்; பாட்டாளி வர்க்கச் சிந்தனையாளர் என்கிற வகையில் இருந்த குறைவான தகவல்கள் அடிப்படையிலேயே இந்திய ஏற்றத்தாழ்வு வாழ்முறையின் பிரத்தியேகத் தன்மை குறித்து கவனம்கொள்ளும் எச்சரிக்கைக்காளாகியிருந்தார் மார்க்ஸ். இதுகுறித்து இர்பான் அபீப்பின் இவ்வார்த்தைகள் கவனிப்புக்குரியன:" இந்தியாவைப் பற்றிய மார்க்சின் கருதுகோள் ஹெகலின் திருத்தப்பட்ட மறுகூற்றாக இல்லை. ஹெகலின் இயக்கவியல் பற்றிய கொள்கையில் செய்ததையே மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய அம்சத்திலும் செய்தார். அதாவது அதனை அவர் 'தலைகீழாக' மாற்றினார். 'கீழை நாடுகளின் வரலாறு மதங்களின் வரலாறாகத் தோன்றுவது ஏன்?' என்ற கேள்வியை ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில் ஏற்கனவே அவர் எழுப்பியிருந்தார். இந்தியப் பண்பாட்டின் சிறப்புத் தன்மைகளுக்கான கூறுகளாக மதத்தின் சிறப்புத்தன்மைகள் இருப்பதாக ஹெகல் கண்டது உண்மையில் இந்தியச் சமூக அமைப்பில், எல்லாவற்றுக்கும் மேலாக கிராமச் சமுதாயத்தில் இருந்த கூறுகளின் காரணமாகவே ஆகும். 1853ம் ஆண்டு மார்க்ஸ் கண்ட இந்தக் கடைசி அம்சம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகவும், எல்லாவற்றையும் நடைமுறையில் விளக்கு வதாகவும் அமைந்திருந்தது." (பக். 25-26).

இந்திய மதங்களின் சிறப்புப் பண்பினால் அவை சமூக மாற்றக் கருவிகளாயிருக்கவில்லை; சமூக அமைப்பில் இருந்த வேறுபட்ட பண்புக்கூறே அதன் அமைப்பு வேறுபாடுகளை மதச்சிந்தனை மாற்றங்களூடாக நிகழ்த்தியாக வேண்டிய இயக்கப் போக்கை வலியுறுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறின், சாதிய ரீதியிலான சமூக ஒடுக்குமுறையை உடைய இந்தியச் சமூக முறை, அத்தகைய சமூகக் குழுக்களின் அதிகார மாற்றியமைத்தலை அவற்றின் பண்பாட்டுத் தளத்தில் தாக்குதலை நிகழ்த்துவதன் வாயிலாகவே சாத்தியப்படுத்த வல்லதாக இருந்தது. வர்க்கப் பிளவுறாத, தேசிய ஒடுக்குமுறையை ஒத்த சமூக ஒடுக்குமுறையான சாதிச் சுரண்டலையுடைய எமது சமூக அமைப்பு மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சி வடிவங்கொண்டவை என்ற புரிதலின்மையால் மார்க்சிய இயக்க வளர்ச்சியில் இடர்ப்பாடு இன்னமும் நிலவுகின்றது. எமது சமூக அமைப்பின் பிரத்தியேகத் தன்மைகுறித்த புரிதலுக்கான தொடக்கத்தை மார்க்ஸ் தொட்டுக்காட்டியபோதிலும் அன்றைய ஐரோப்பியப் புரட்சி குறித்த ஆய்வுக்கு தனது உழைப்பை செலுத்த வேண்டியிருந்ததால் அடுத்த கட்ட வளர்ச்சியை அவரால் முன்னெடுக்க இயலாது போயிற்று. மார்க்ஸ் சொல்லாத எந்தப் பாதையிலும் போகப் போவதில்லை என்பதற்கு மார்க்சியம் ஒன்றும் மதப் புனித நூலல்ல. மார்க்சியச் சிந்தனை முறை கால-தேச நிலைகளை அவற்றுக்குரிய வகையில் புரிதல் கொள்ள வழிப்படுத்தி, அதை மக்கள் விடுதலைத் திசையில் மாற்ற ஆற்றுப்படுத்துவதாகும். மாற்றங்களை அதன் திசை வழியே புரிதல்கொள்ள முயல்வோம்; எமது அர்த்தங்கொள்ளலுக்கு ஏற்றதாக புறநிலை அமைவதில்லை. அது எவ்வகையில் உள்ளது என்பதை விளக்குவதாயும், எவ்வாறு மாற்றுவது சாத்தியம் என்பதையுமே மார்க்சியம் கற்றுத்தருகிறது. மதம் வகித்த பங்குப் பாத்திரம் குறித்த மார்க்சின்
தேடல் பண்பாட்டுப் புரட்சி பற்றிய ஆய்வுக்கு எம்மை இட்டுச்செல்லும். தொடர்வோம் ...

No comments:

Post a Comment