Friday, April 13, 2012

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும் -மாற்றமுடியாதது மார்க்சியம்இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும்
ந.இரவீந்திரன் 
                        3

மாற்றமுடியாதது மார்க்சியம் -


  இரட்டைத் தேசியம் என்பதை இறக்குமதிக் கருத்தியல் என்பது பொருளற்றது என்பதுபற்றி பார்த்திருந்தோம். எந்தவொரு விடயத்திலும் சர்வவியாபகத் தன்மையோடு ஒரு சிந்தனை முறையைக் கையேற்பதில் கேடு வந்துவிடப் போவதில்லை. சொந்த மக்களைப் பிறரிடம் அடிமைகொள்ள வழி கோலுவதையேகண்டிக்கவேண்டும். அப்படியிருந்தும், இரட்டைத் தேசியம் ஈழப் பிறப்பு என்பதை காட்ட வேண்டியிருந்தது (இந்த வெளி நாட்டுச் சரக்கு தங்களுக்கு வேண்டாம்எனப் பிறர் நிராகரிப்பது பற்றி இப்போதைக்கு எங்களுக்கு வருத்தமில்லை; வரலாற்றை மக்கள் விடுதலைத் திசையில் முன்னெடுப்பதில் எங்களுக்கே பொறுப்புஇன்றைய நிலையில் அதிகம் உள்ளது. நாம் சில்லெடுத்து விட்டால் மட்டுமே தமிழக முற்போக்கு சக்திகள் ஆதிக்க சாதித் தமிழ்த் தேசியப் பிடியிலிருந்து தமிழக வரலாற்றுசெல்நெறியை முற்போக்குத் திசையில் மீட்டெடுக்க முடியும். இது குறித்துப் பின்னாலே பார்ப்போம்).


இவ்வாறு நாம் கையேற்றுள்ள மார்க்சியம் மாற்றப்பட முடியாதது என்பதே இப்போதைய பேசுபொருள். முந்திய சந்திப்பில் வர்க்கப் போராட்டம் சோசலிசத்தைஎட்டுவது என்ற மார்க்சின் எதிர்பார்ப்பிலிருந்து தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக சோசலிசம் எட்டப்படுவதாக வரலாற்றுப் போக்கு மாற்றம் ஏற்பட்டதுபற்றி பேசியிருந்தோம். இந்த மாற்றத்தினூடாக மாற்றம் பெறாத ஒரு சிந்தனைமுறை இயங்கி வளர்ந்து வந்திருக்கிறது - அதன் ஒரு வடிவமே இரட்டைத் தேசியம் என்பதைப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். இதனை மறுக்கும் சபா நாவலன், இரட்டைத் தேசியப் பிளவில் ஆதிக்க சாதித் தேசியமாய் ஈழத்தமிழ்த் தேசியம் முடங்கிப் போனமையால் தோற்றுப் போய்விடவில்லை, பின் தங்கிய பொருளாதார நிலை காரணமாய் ஈழத் தமிழ்த்தேசியம் இன்னமும்வளர்ந்து வரும் நிலையில் இருப்பதாலேயே இடர்ப்பட வேண்டியிருப்பதாக கூறுவார். வளராததாலே தான் பருங்கள் கிழக்கில் கருணா கொஞ்சம் இடக்குப் பண்ணுகிறார் என்றதும் பிரபாகரனின் டாங்கிகளும் முப்படைகளும் மட்டக்களப்பை சுற்றிவளைத்து மேலாண்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஐயா, விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே வலுவான கப்பல் படையோடு நோஞ்சான் நிலையிலென்றாலும்( இப்படிச் சொன்னதற்காக வீரத் தமிழ் மறவர்கள்மன்னித்தருள்க) விமானப் படையையும் கொண்டிருந்த ஈழப் போராட்டம், எப்படி வளர்ச்சிபெறாத தேசிய இனத்திலிருந்து வந்திருக்க முடியும்? முப்பது வருடங்களுக்கு முன்னரே சண்முகதாசன் தோழர் தமிழினம் இலங்கையில் தேசிய இனமாக இன்னமும் வளர்ந்துவிடவில்லை என்றதைக் கேட்டே ரோசம்பொத்துக்கொண்டு வந்து பிரமாண்டமாய் வளர்ந்து காட்டப்போய் இப்போது பொத்தென்று விழ நேர்ந்திருக்கிறது. யுத்தமுனைப்பை வளர்த்த இந்தியாவே இந்தகப்பல் படை வளர்ச்சி வேகம் கண்டு அச்சம்கொண்டிருந்தது என்பதில் இரகசியம் ஒன்றும் இல்லை.


இதை அவர் மூன்று வருடங்களுக்கு முந்திய மே 18 க்கு முன்னர்(அல்லது, ஓடத் தொடங்குவதற்கு முன்னர்) சொல்லியிருந்தால் தமிழ்த்தேசியச் சண்டியர்களிடம்இருந்து லேசில் தப்பியிருப்பார் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை; இப்போது தோல்விக்கு உண்மைக் காரணத்தைக் கண்டறியவிடாத எத்தனிப்புக்கு இதுதேவைப் படலாம் என்பதால் விடப்பட்டிருப்பார். போராட்டம் நம்பிக்கையுடன் வளர்ந்துவந்த ஆரம்ப காலத்தில் இத்தகைய கதை எதையும் தமிழ்த் தேசியர்கள்மறந்தும் முன்வைத்திருக்க மாட்டார்கள். ஈழத்தமிழ்த் தேசியத்தால் குறைந்தபட்சம் வடக்கையும் கிழக்கையுமே இணைக்க முடியாமல் இருக்கும் என்றபோதுஅன்றைய ஈழத்தேசியர்கள் ஆக்ரோசத்தோடு அதைப் புறந்தள்ளியிருந்தார்கள் (''பிரிந்துசெல்வதை மறுக்கும் சுயநிர்ணய உரிமை'' என்ற என் கட்டுரை 'இனியொரு'வில் இதே கேள்வியை எதிர்கொண்டது-'குறைந்தது, வடக்கு கிழக்கு இணைப்பாவது சாத்தியமா?' என்ற பின்னூட்டல் அங்கே வந்ததை நினைவுபடுத்துக!).


இது தொடர்பில் ஒரு சம்பவம் ஞாபகத்தரையைத் தட்டுகிறது. நான் முப்பத்துமூன்று வருடங்களின் முன்னர் மட்டக்களப்புக்குச் சென்றபோது இது தொடர்பில்ஒரு நண்பருடன்(இந்த விவாதத்தில் தனது பெயர் தவிர்க்கப்படுவது நல்லது என அவர் கருதலாம் என்பதால் பெயரைக் குறிப்பிடாது விடுகிறேன்) விவாதித்தேன்.ஈழ வாழ்த்து மடல் ஒன்றை வாங்க மறுத்த ஒரு அம்மா தன்னிடம் இந்தச் சம்பவத்தைக் கூறியிருந்தாராம்:''பஸ்ஸில் பயணித்த ஒருநாள் என் இருக்கைக்குமுன்னாலே இரு இளைஞர்கள் விவாதித்துக்கொண்டு வந்தார்கள்; ஒருகட்டத்தில் கோபாவேசத்துடன் எழுந்த ஒருவன் மற்றவனை எச்சரிக்கை தொனியுடன் அதட்டிச் சொன்னான், இதற்கெல்லாம் ஈழம் வரட்டும் உங்களைக் கவனிக்கிற மாதிரிக் கவனிக்கிறோம் என்று; கோபவெறியுடன் எழுந்தவன் யாழ்ப்பாணத்தான்,வாயடைத்துப்போயிருந்தவன் மட்டக்களப்பான். ஈழம் வந்தால் நாங்கள் யாழ்ப்பாணத்தானுக்கு அடிமைப்பட வேண்டியிருக்கும் என்பதால் உங்கடை ஈழம் வேண்டாம் தம்பி.'' சோசலிச ஈழம் பிரதேச ஏற்றத்தாழ்வைத் தகர்த்துவிடும் என்று அந்த அம்மாவுக்குச் சொன்ன பதிலை எனக்கு மேலும் பட்டை தீட்டி அந்தநண்பர் சொல்லியிருந்தார்; தொடர்ந்து சோசலிச ஈழத்துக்காகப் போராடும் அவருக்கான உரிமையை மறுத்ததில்,தலைமயை ஆக்கிரமித்திருந்த யாழ்.வெள்ளாளதேசியத்துக்கு உள்ள பங்கு வெளிப்படையானது; அனேகமாய், அந்த நண்பர் இதனை ஏற்பார் என்றே நம்புகிறேன்.


எமது ஈழத்தேசியம் மட்டுமன்றி மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனங்கள் அனைத்தையுமே இந்தக் குறை வளர்ச்சி தேசிய இனமாக வளர இயலா நெருக்கடியை முகங்கொள்ள வைத்துள்ளது என்பது முன்வைக்கப்பட்டுள்ள தர்க்கம். இந்தியாவில் தேசியம் தோற்றுப் போவதற்கும் உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. அண்மையில் தோல்வியைத் தழுவிய மாயாவதி தான் முதலமைச்சராக இருந்தபோது உத்தரப்பிரதேச மாநிலத்தை நாலு மாநிலங்களாக பிளவுபடுத்தும் தீர்மானத்தைச் சட்டசபையில் நிறைவேற்றியிருந்தார். ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்கானா பிளவுபடுத்தலுக்கான போராட்டம் உக்கிரமாகிவருகிறது. தமிழ்நாட்டிலும் வட தமிழகத்தைப் பிரிக்கும் கோரிக்கை தேவைப்படும் போதெல்லாம் பா.ம.க.வினால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆக, இந்தியாவினுள்மொழித் தேசியங்கள் உடைந்து போகக்கூடிய பலவீனங்களுடனேயே உள்ளன. வலுவான தேசிய இனங்களாயிருந்திருப்பின் இப்படி நொய்தாகிப்போமா எனக்கேட்கமுடிவதால் வளராத் தேசியக் கருத்து செல்லுபடியானதைப் போன்றே தோன்றும்.


இங்கு இரண்டு பிரச்சனைகள் உண்டு. ஒன்று, இந்தியா இப்போது மூன்றாம் உலகுக்குரிய குறைவளர்ச்சி நாடல்ல; உலகமயமாதலுடன் கூட்டமைத்து மேலாதிக்கநாடாக பரிணமித்துவிட்ட ஒன்று. மற்றது இதனோடு தொடர்புபட்டது; தேசியம் குறை வளர்ச்சிப் பிரச்சனையை எதிர் நோக்குவதற்கன்றி, தேசியமே அற்றுப்போய்க்கொண்டிருப்பதற்கு உதாரணமாகவே இவை சொல்லப்படுகின்றன. இரண்டையும் நிராகரித்தே இரட்டைத் தேசியக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.


தேசியம் தோற்றுப்போய்விட்டன என்ற கருத்தை முன்வைக்கும் அ.மார்க்ஸ் பின் நவீனத்துவ நிலையில் நின்று தலித்தியம் பேசியவர். இன்று தலித்தியம்தோற்றுப்போயிருப்பதை வெளிப்படையாகப் பேசுவதோடு, பின் நவீனத்துவம் தீர்வுக்கு வழி காட்டத் தவறியுள்ளது என்பதையும் ஏற்பவர். மார்க்சியமே சமூகப்பிரச்சனைகளுக்கான தீர்வை எட்ட உதவவல்லது என்பதுடன், தான் ஒருபோதுமே (பின் நவீனத்துவம் பேசிய காலத்திலும்) மார்க்சியத்தை விலகியதில்லை என்றும் வலியுறுத்துகிறவர்.


இருப்பினும், தேசியப் பிரச்சனையை மார்க்சிய நிலைப்பட்டு அணுகுவதற்கு அவரால் இப்போதும் இயலவில்லை. அடையாள அரசியலின் பகுதியாகவே இதனைப்பார்க்கிறார்; தேசியம் தோற்றுப் போவதான கருத்து ஏற்கப்பட்ட பின்னர் இது தவிர்க்க முடியாததுதானே? ''நமக்கென்றொரு சொல்வெளி'' தொடர் எழுத்தில்''மாயாவதியின் தோல்வியும் அடையாள அரசியலின் எதிர் காலமும்'' என்றதலைப்பில் அ.மார்க்ஸ் எழுதும்போது குறிப்பிடும் இக்கருத்து ஒரு சோறு பதம்:''இன,மொழி உணர்வுகளின் அடிப்படையில் பிராந்திய மயப்படுத்தல் மற்றும் மாநில அளவு கட்சிகள் உருவாகுதல் என்பது முதலில் தமிழகத்தில் தான் தொடங்கியது.காங்கிரஸ், யனசங், பொதுவுடமைக் கட்சிகள் ஆகியவற்றுக்கப்பால் சோசலிஸ்ட் கட்சி முதலியன ஒருவகையில் பிராந்திய அளவிலேயே செயல்பட்ட போதும் அவை இன, மொழி உணர்வுகளின் அடிப்படையில் உருவாகவில்லை. 1990 களுக்குப் பின் அடையாள அடிப்படையில் கட்சிகள் உருவானபோது அவையும் ஒருவகையில் பிராந்தியத் தன்மையுடனேயே அமைந்தபோதிலும் இன, மொழி உணர்வுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளை விளித்து அவை உருவாகின. பகுஜன் என்கிற சற்று விரிவான அடையாளத்துடன் கான்ஷிராமால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி குர்மி, சமர் முதலான தலித் மற்றும் அதையொத்தசமூகப் பிரிவுகளை தனது ஆதரவுத் திரட்சியாகக் கொண்டு உருவாகியது. சமாஜ்வாதிக் கட்சி யாதவ்கள் மற்றும் இதர சில பிற்படுத்தப்பட்டவர்களை இலக்காக்கிஉருவாகியது. பார்ப்பனர்களும்(11%) முஸ்லிம்களும் அது நம்பியிருந்த அடுத்த நிலை ஆதரவுத் தொகுதிகளாக இருந்தன. சிரோமணி அகாலி தளம் பஞ்சாபி ஜாட்மேல் தட்டினரை மையப்படுத்தி உருவாகியது. அடையாள அரசியல் பேசும் இந்தக் கட்சிகள் தமது நிரந்தர ஆதரவுத் தொகுதிக்கு அப்பால் குறிப்பிட்ட தேர்தல்சூழலில் எந்தப் பிற ஆதரவுத் திரட்சியை தம்முடன் இணைத்துக் கொள்கின்றனவோ அதைப்பொறுத்தே வெற்றி அமைகிறது என்று பார்த்தோம். 2007 இல் வரலாறு காணாத மாபெரும் வெற்றி ஒன்றை மாயாவதி ஈட்டினார். இந்தியா முழுவதிலுமுள்ள தலித் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையும் பெருமிதமும் உருவாவதற்கு அவர் காரணமானார். இரும்புப் பெண்மணி எனத் தலித்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.''


மார்க்சிய அடிப்படையில் பேசும் போது, கொம்யூனிஸ்ட்டுகளின் முதல் வெற்றிகளைப் பேசும்போது, கேரளமும் மேற்கு வங்கமும் நினைவில் வரும். அவ்விரு மமாநிலங்களிலும் இந்தியத் தேசியத்துக்கு உட்பட்டு முறையே மலையாள மற்றும் வங்காளி இனத் தேசியங்களை சரியான வகையில் கொம்யூனிஸ்ட்டுகள் கையேற்றிருந்தனர் என்றே பேசுவோம். 'பிராந்திய மயப்பட்ட- இன,மொழி உணர்வு அரசியலாய்' அன்றி தமிழகம் தொடக்கிவைத்தது இனத் தேசிய அரசியல் என்றேதிடாவிடர் இயக்க அரசியலை மார்க்சிய மொழியில் பேசுவோம். அந்த இனத் தேசியம் இந்தியத் தேசியத்துக்கு விரோதமாக போவதாகக் கண்டு தமிழகத்தில்கொம்யூன்ஸ்ட்டுகள் இனத் தேசியத்தை சரியான அளவில் கணிக்கவியலாதவர்களாயினர் என்பது கவனிப்புக்குரியதாகிறது. நீண்ட நாட்களாக இந்திய(நாட்டுத்)தேசியத்துக்கு உட்பட்டு இனத் தேசியத்தின் சாத்தியத்தை ஏற்க முடியாமல் கொம்யூனிஸ்ட்டுகள் உள்ளமை பற்றி அறிவோம்.


இப்போது மேலதிகமாக சாதித் தேசியம் பற்றி பேசும்போது குழப்பம் அதிகரிக்கவே செய்யும். குழப்பங்களூடாக தொடரும் சரியான விவாதங்கள் தெளிவை ஏற்படுத்தும். மார்க்ஸிய இயக்க வளர்ச்சி என்பதே இத்தகைய பரிணமிப்புகள் வாயிலாகவே எட்டப்பட்டுவந்துள்ளது. அதுபற்றிய பேச்சுக்கு செல்லுமுன்னர் ஒருவிடயம்.அ.மார்க்ஸ் பேசும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அடையாள அரசியலைத் தானே 'மார்க்சிய மொழியில்' சாதித் தேசியம் என்று பேசுகிறீர்கள் என்றசந்தேகம் எழுப்பப்படுகிறது. அவ்வாறாயின் தலித்தியம் மற்றும் பின் நவீனத்துவம் சார்ந்த கருத்தியலாக இது ஆகவில்லை என்பது என்ன நிச்சயம் எனக் கேட்கப்படலாம். நேரடியாக இதனைக் கேட்காத போதிலும் 'தமிழக நகர்ப்புற சிந்தனையாக' இரட்டைத் தேசியத்தைக் காட்டும் முயற்சி இதன்பாட்பட்டதே. 


உள்நோக்கின்றி நேர்மையாக இந்த உரையாடலைத் தொடர்கிற எவரும் தலித்தியவாதத்திலிருந்து முற்றான முறிவை ஏற்படுத்திய மார்க்ஸிய அணுகுமுறையைசாதித் தேசியம் என்பதாகப் பேசுகிறோம் எனப் புரிந்துகொள்வர். இதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியதில் அ.மார்க்ஸ் தொடக்கிவைத்த விவாதங்கள் அமைந்தனஎனச் சொல்லும்போது தவறான முத்திரை குத்தலுக்குள்ளாகும் என்று அச்சம் கொள்ளும் அளவுக்கு இரட்டைத் தேசியக் கோட்பாடு பலவீனமான ஒன்றல்ல.அவர் ஏற்க மறுத்தபோதிலும் மார்க்சியத்திலிருந்து கொண்டவிலகல் காரணமாக அவர் பார்வையில் சில அடிப்படையான தவறுகள் வெளிப்படுவது மெய். அதில்அடிப்படையானது அடையாள அரசியல் பற்றிய பேச்சு. அதேவேளை, அவரிடமுள்ள மார்க்சியத்தின் தொடர்ச்சி காரணமாக தவறுகளின் ஊடாகவும் சிலவிடயங்களில் சரியான பார்வையை அவரால் வெளிப்படுத்த முடிகிறது. குறிப்பாக மார்க்சிய நிலைப்பட்டு எழுதுகிறோம் என்கிற எவரது கருத்துகளைவிடவும்ஈழப் பிரச்சனை பற்றிய அவரது நூல்கள் தெளிவானவையாகவும் சரியானவையாகவும் இருப்பதைக் காணலாம்.


மார்க்சியத்திலிருந்தான விலகல் காரணமாக இனப்பிரச்சனைத் தீர்வை எட்டுவதற்கான மார்க்கத்தை அ.மார்க்ஸினால் காட்ட இயலவில்லை. அவர் மார்க்சியஅணியில் பூரண ஈடுபாட்டுடன் தீவிரமாக இயங்கியவர். இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) இலிருந்து அவர் விலகக் காரணமாக அமைந்த அடிப்படைப் பிரச்சனைகளில் ஒன்றாக ஈழப்பிரச்சனை அமைந்திருந்தது. ஈழத்தமிழ்த் தேசியத்துக்கான அவரது ஆதரவு நிலைப்பாடு காரணமாக மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்துஅவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் செயற்பட்ட மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியும் அப்போது தேசிய இனப்பிரச்சனையில் தவறான நிலைப்பாட்டுடனேயே இருந்தது. அமைப்பு ரீதியில் கொம்யூனிஸ்ட் கட்சிகள் இழைத்த தவறுகள் குறித்து விரக்தியுற்ற அவர் மார்க்சிய அடிப்படையில் தேடலை மேற்கொள்வதற்கு முன்னதாக, அன்று அறிமுகப்பட்ட பின் நவீனத்துவத்தில் நாட்டம் கொண்டமை காரணமாக தேசியப் பிரச்சனைத் தீர்வில் மார்க்சிய வழிகாட்டலை வந்தடையத்தவறுகிறார்.


இனப்பிரச்சனைத் தீர்வில் மார்க்சிய அணுகுமுறையை வந்தடைய இயலாமல் மார்க்சிய அணிகளும் இடர்ப்படுகின்றன. இந்திய மா.லெ. அணிகள் வன்முறைவழிபாடு காரணமாக புலிகளின் வலதுசாரிப் பாஸிஸ அணுகுமுறையைக் கவனம்கொள்ளாமல் அவர்களை ஆதரிக்கிற அளவுக்கு சென்றார்கள். மார்க்சிஸ்ட் கட்சியும் இனத் தேசியம் பற்றிய தெளிவற்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. மேலே குறித்தவாறு, கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் அந்தந்த மாநிலங்களின் இனத்தேசிய அரசியலை நடைமுறையில் முன்னெடுத்த போதிலும் கோட்பாட்டு ரீதியில் ''வர்க்கப் போராட்டத்துக்குள்'' மட்டுமே நின்றார்களேஅல்லாமல் வர்க்கப் பார்வையில் தேசியப் பிரச்சனையை அணுகத் தவறினார்கள். அதன் காரணமாக ஏனைய மாநிலங்களில் அந்த அனுபவங்களைப் பிரயோகிக்கஇயலாமற் போயிற்று.


இனத்தேசியங்களின் சுயநிர்ணய உரிமயைப் பிரிவினை அச்சத்தால் நிராகரிக்கும் நிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி சென்றமையால் இந்தப் புரிதலின்மை மேலும்வலுத்தது. இது தொடர்பில், ''7வது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட கட்சித்திட்டத்தில் கண்ட 'அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை'என்ற அம்சத்தை நீக்கியது. இந்திய நிலைமை சோவியத் யூனியன் நிலைமையிலிருந்து மாறுபட்டது என்று 9வது காங்கிரஸ் தெளிவுபடுத்தியது'' என்பார் ஹரிகிஷன்சிங் சுர்ஜித். அவர் மேலும் குறிப்பிடும் இவ்விடயம் கவனிப்புக்குரியது: '' 1947 இல் அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, தேசியப் பிரச்சனையின் தன்மை முக்கியத்துவம் வாய்ந்த மாறுதலைக் கண்டது. பல்வேறு மொழி வழி மற்றும் உள்தேசிய நீரோட்டங்களும் அவர்களது பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டங்களும் இந்திய ஒன்றியத்துக்குள் உள்ள ஏதாவது ஒரு ஒடுக்கும் தேசத்திற்கு எதிரான போராட்டமல்ல; மாறாக, பொருளாதாரஸ் சார்புநிலை மற்றும் பின் தங்கிய நிலை ஆகியவற்றை ஒழித்துக்கட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். இந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதன் மூலம் இந்தப் பொதுவான போராட்டம் மேலும் வலுப்பெறும். மாறாக,பிரிவினை சக்திகளின் வளர்ச்சி போராடும் மக்களின் ஒற்றுமையைக் குலைத்துப் பிளவுபடுத்த ஆளும் வர்க்கத்திற்கு உதவுகிறது. இந்தியாவில், ஒருஒடுக்கும் தேசம் ஒன்று அல்லது பல ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதிக்கம் வகிக்கும் பிரச்சனை இல்லை;மாறாக, பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெரு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அந்நியமூலதனத்துடன் கூட்டாகவும், நிலப்பிரபுக்களுடன் அணி சேர்ந்தும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை கடைப்பிடிப்பதுதான் பிரச்சனையாகும்.''


பிரிவினை அபாயத்தை நீக்கியவாறு இனத்தேசிய சுயநிர்ணயத்தை எவ்வகையில் விருத்தி செய்வது என்பது பற்றிய விவாதங்களை முன்னெடுக்கும் வகையில்இன்று நடைமுறை மார்க்சிய அணிகளை வலியுறுத்துவதை அறிவோம்; இந்தியத் தேசியத்துக்கு அளவுக்கு மீறிய அழுத்தம் கொடுத்து இனத்தேசியத்தின் அவசியத்தை அதற்குரிய அளவில் கவனம் கொள்ளத்தவறியதன் பேறாக மாநிலங்களில் மார்க்சியர்கள் பின் தங்க நேர்ந்தமை போதிய படிப்பினையாக வந்துள்ளது. இனத் தேசியம் பற்றிய புரிதலின்மையிலான தவறு இந்தியாவுக்கு மட்டும் உரியதில்லை. இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இத்தவறு வெளிப்பட்டிருந்தது; தமிழ்த் தேசியம் மக்கள் விரோதத் திசையில் சென்று ஏற்படுத்திய சேதங்கள் அனைத்துக்கும் மார்க்சியர்கள் மேல் பழி போடும் கபடத்தைபுறந்தள்ளிய போதிலும், தேசிய இனப் பிரச்சனையைக் கையேற்பதில் கொம்யூனிஸ்ட்டுகள் தவறிளைத்தமையைச் சுயவிமர்சன ரீதியில் ஏற்கத் தவறுவதில்லை.தவிர, இத்தவறு இலங்கை - இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்குரியது மட்டுமல்ல; உலக அளவில் வர்க்கப் போராட்டத்தை முக்கியப்படுத்திய அளவில் தேசியப் பிரச்சனையைக் கவனம் கொள்ளத்தவறியது பற்றி இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. சோசலிசத்தை நோக்கியதாயில்லாத தேசியமும், தேசிய உணர்வைக் கவனம் கொள்ளத் தவறும் சோசலிசமும் மக்கள் விடுதலைக்கு இட்டுச் செல்லாது என்பது பற்றி இன்று பேசப்பட்டுள்ளது. சற்று மிகைப்பட்டுப்போன சோவியத் -சீன பாட்டாளி வர்க்கங்களின் தேசிய உணர்வினால் அந்தந்த நாடுகளின் சோஸலிஸ முன்னெடுப்புக்கு மட்டுமன்றி உலகப் பாட்டாளி வர்க்கஇயக்கத்துக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை பற்றியும் பேசப்பட்டுள்ளது.


மார்க்ஸ் பாட்டாளி வர்க்கப் போராட்டம் வாயிலாக சோசலிசம் வெல்லப்படுவது பற்றி பேசினார் என்றால் அன்று மேற்கு ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கங்கள்அதனை சாத்தியப்படுத்தும் வரலாற்றைப் படைத்துக்கொண்டிருந்தன. குடியேற்ற நாடுகளில் சுரண்டப்படுவது கொண்டு பாட்டாளி வர்க்க இயக்கம் பாதிக்கப்படுவதுபற்றிய புரிதல் மார்க்சுக்கு இருந்தது. பிரித்தானியப் பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் ஆற்றலை இழப்பது பற்றி இக்காரணத்தை முன்னிறுத்தி ஏங்கெல்ஸ்தனது ஆய்வினை வெளிப்படுத்தியிருந்தார். அந்தவகையில், மார்க்ஸ் பிரித்தானியப் பாட்டாளி வர்க்கம் வெற்றிபெறுவதன் வாயிலாக இந்தியா சுதந்திரம் பெறலாம், தவறின் தனது விடுதலையைச் சாத்தியப் படுத்துவதன் வாயிலாக இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டம் வாயிலாக சோசலிச இயக்கம் முன்னேற்றம் ஈட்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். மார்க்சிய எதிர்வு கூறல் இதனை முன்மொழிய மார்க்ஸை வழிப்படுத்திய போதிலும், தேசியம்குறித்து அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தும் அவசியம் இல்லாத வகையில் பாட்டாளிவர்க்க இயக்கம் சோசலிசத்தை சாத்தியப்படுத்தும் வாய்ப்பு இருந்த வகையிலும்அந்த வர்க்கப் பார்வையின் அவசியம் காரணமாயும் பாட்டாளி வர்க்க கட்சிப் பணியும் சாத்தியமும் பற்றியதாயுமே மார்க்சின் ஆய்வு வரையறைப்பட்டிருந்தது.அவர் கூறியவாறே மேற்கு ஐரோப்பியாவிலிருந்து புரட்சி எழுச்சி நகர்ந்து ருசியாவில் மையங்கொண்டு, அங்கு சோசலிசம் வென்றெடுக்கப்பட்டிருந்தது.


இதனைப் பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கத்தோடும் ஒடுக்கப்பட்ட தேசங்களோடும் ஐக்கியப்பட்டு சாதித்திருந்தது. அதற்குத் தலைமையேற்ற லெனின் மார்க்சியத்தை லெனினிசம் எனும் புதிய தளத்துக்கு வளர்த்திருந்தார். இதன் பின்னரான வரலாறு தேசிய விடுதலைப் போராட்டம் வாயிலாகவே சோசலிசம்வெல்லப்பட்டது என்ற நிதர்சனத்துக்கு அமைவாக உலகப்பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கப்பட்ட தேசங்களோடு ஐக்கியமுறுவதற்கு அறைகூவினார் லெனின்.தேசிய விடுதலை வாயிலாக முதலாளித்துவ இடைனிலை இன்றி நேரடியாக சோசலிசத்தை வென்றெடுக்க இயலும் என்ற அவரது எதிர்வுகூறலுக்கு ஏற்பசீனா, கியூபா போன்ற நாடுகள் இன்றும் சோசலிசத்தை பாதுகாத்து வளர்த்தெடுக்கப் போராடக் காண்கிறோம். ஆக, தேசியம் என்பதை ஏதோ இரண்டாம் மூன்றாம் பட்ச விடயமாக பார்த்துவிட முடியாது. முதலாளித்துவம் வரலாற்றரங்கில் தோன்றியபோது அதன் அவசியமாக சந்தைத் தேவையின் வெளிப்பாடாக தேசக்கட்டமைப்பு தோற்றம் பெற்றது; அதற்காக தேசிய உணர்வு முதலாளிவர்க்கத்துக்கு மட்டுமுரியதன்று. பாட்டாளி வர்க்கத்தின் தேசியப் பார்வையில் சர்வதேசப் பார்வை வேறெந்த வர்க்கத்திலிருந்தும் அதிகமாயிருக்குமே அல்லாமல் பாட்டாளிவர்க்கத்திடமோ அதன் முன்னணிப் படையான கொம்யூனிஸ்ட் கட்சியிடமோ தேசிய உணர்வு முனைப்புறாது என்பதற்கில்லை. இதனை லெனின் முன்னறிந்து கூறாததுடன், தேசியம் முதலாளித்துவத்துக்குரியது என்று கூறினார் எனில், அது மனித சிந்தனை ஆற்றலின் எல்லைப்பாடு தொடர்பானது. மக்கள் விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக கோட்பாடு ரீதியாக வளர்ச்சி ஏற்பட்டுவந்தபோதிலும் சிந்தனை முறையியல் என்கிற வகையில் மார்க்ஸ் தொடக்கிய அந்த வர்க்கப் பார்வையையே லெனின் தொடர்ந்தார்; தொடர்ந்து மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் சிந்தனையாளர்கள் முன்னெடுக்கின்றனர்.


அவ்வாறெனில் பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் ஆற்றலை இழந்தது ஏன்? இங்கு தேசியம் குறித்து கவனங்கொள்ள வழிப்படுத்தப்படுவோம். ஏகாதிபத்தியநாட்டின் அதிகார வர்க்கம் ஊட்டும் தேசிய மேலாண்மை உணர்வும் எலும்புத் துண்டுகளும் பாட்டாளிவர்க்க இயக்கத்தைப் பாதிக்கும்போது, எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பண்பாட்டியக்கத்துக்கு தள்ளப் படுகின்றனர்; புதிய பண்பாட்டை படைக்கும் பாட்டாளி வர்ர்க்கத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க இயலாது ஆக்கப்படுகின்றது. வெள்ளையர் உணர்வு மேவியிருந்த ஐரோப்பியக் கொம்யூனிஸ்ட்டுகள் ஆபிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு உதவத் தவறினர் எனக் கப்ரால்,ஃபனான் போன்ற சிந்தனையாளர்கள் குற்றம் சாட்டியபோதிலும், தம்மால் முடிந்த அளவுக்கு ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைக்கு உதவியுள்ளனர். ஏகாதிபத்திய நாட்டில் விடுதலையைப் பாட்டாளி வர்க்கத்தால் வென்றெடுக்க இயலாத போதிலும், விடுதலைக்காகப் போராடும் மக்கள் இயக்கங்களுக்கு உதவும் அளவிலாவது அது இருந்தது என்பதை மறுத்துவிட முடியாது. 


ஒடுக்கப்பட்ட எமது தேசிய வரலாறு வேறு வகையில் அமைந்த போது மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மார்க்சியச் சிந்தனை முறை மாறாத போதிலும், இரட்டைத் தேசியம் என்ற புதிய கோட்பாட்டை வகுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். இங்கு பண்பாட்டுப் புரட்சியே சமூக மாற்றத்தை சாத்தியப் படுத்தியவர்லாற்றை வலியுறுத்த வேண்டியவர்களாக உள்ளோம். தொடர்ந்து உரையாட அழைப்புவிடுத்து தற்காலிகமாய் விடைபெறுகிறேன். ..தொடர்வோம் !

No comments:

Post a Comment