Monday, September 23, 2024

வர்க்கச் சிந்தனை நீடிப்பாக விடுதலைத் தேசியச் சிந்தனை முன்னெடுப்பு

வர்க்கச் சிந்தனை நீடிப்பாக விடுதலைத் தேசியச் சிந்தனை முன்னெடுப்பு இன்றைய நிதர்சனத்தின் தேவை ‘பிற்போக்குத் தேசியத்தை நிராகரித்து முற்போக்குத் தேசியத்தைக் கையேற்க வேண்டும்’ என்ற கருத்தைச் சொன்ன தோழரிடம் அப்படியான பார்வை ‘பழைமை வாத வகைப்பட்டது’ எனச் சொல்ல வேண்டியிருந்தது. வர்க்க மோதல்களே வரலாற்றை முன்னகர்த்தும் இயக்கு விசை என்ற நிலைப்பாட்டுக்கு உரியது அந்தக் கருத்து. முழுச் சமூக சக்திகள் இடையேயான மோதல்கள் வேறொரு வரலாற்று இயக்கம் எனும் மார்க்சியத்தின் வளர்ச்சி நிலையை வந்தடைந்து, தமக்கான சிந்தனை முறையாக அதனை வரித்துக்கொள்ளத்தக்க இயங்குநிலை மார்க்சியரென ஆகும் போது, புதிய ஒளியுடன் தேசியப் பிரச்சினையை அணுக இயலும். மார்க்சியம் மீண்டும் சமூகத்தளத்தில் தீர்மானிக்கும் தலைமைச் சக்தியாக ஆவதற்கு இந்த விருத்திபெற்ற பார்வை அவசியமானது. வர்க்கச் சிந்தனைக்கு அப்பால் வேறொரு முறைமையைச் சொல்வது மார்க்சிய விரோதமாக மாட்டாதா? தனியொரு தேசத்தில் சோசலிசத்தை வென்றெடுப்பது சாத்தியம் என லெனின் சொன்ன பொழுது ட்ரொட்ஸ்கியால் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உலகப் புரட்சி பற்றியே அவரது நம்பிக்கையும் அக்கறைகளும் இருந்தன. சோவியத் சோசலிச விருத்தியை விடவும் உலகப் புரட்சிக்கான வேலையைப் பிரதானப்படுத்திய போது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியுடன் முரண்பட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளானார். அவருடைய அந்தப் பார்வை தவறென்ற போதிலும் அவரை வெளியேற்றாமல் தொடர்ந்தும் ஐக்கியமும் போராட்டமும் என்ற நடைமுறையை அவர் பொருட்டு மேற்கொண்டிருக்க வேண்டும். மார்க்சியத்தை மாறாநிலைக்கு உரிய வறட்டுவாதமாக்கும் ட்ரொட்ஸ்கியிசம் மீதான விமரிசனத்தை (உட்கட்சிப் போராட்டத்தை) நடாத்தியவாறே அவரைக் கட்சியில் இயங்க அனுமதித்திருக்க இயலும். லெனினிடம் அத்தகைய நடைமுறை இருந்தது. ட்ரொட்ஸ்கியின் கருத்தை நிராகரித்து, வென்றெடுக்கப்பட்ட சோவியத் சோசலிசத்தைத் தனித்தே விருத்தி செய்ய இயலுமென்ற கருத்தில் லெனின் உறுதியாக இருந்தார். அதேவேளை மேற்கு ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சி வெடிக்கும் என்ற நம்பிக்கயையும் லெனின் கொண்டிருந்தார்; அவ்வாறு ஏற்பட்டு மேற்கு ஐரோப்பா சோசலிச முன்னெடுப்பை மேற்கொள்ளும் பொழுது சோவியத் புரட்சியின் முக்கியத்துவம் இதே வீச்சுக்கு உரிய கவனத்தைப் பெறாமல் போகும் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆயினும் வர்க்கப் புரட்சி வாயிலாக சோசலிசம் வெற்றிகொள்ளப்படுவதற்கு மாறாக, லெனின் எதிர்வு கூறிய மற்றொரு மார்க்கமான விடுதலைத் தேசியங்கள் சோசலிசத்தை நிதர்சனமாக்கும் வரலாற்று இயங்கு முறையே பின்னர் முன்னிலைக்கு வந்தது! அவ்வாறு தேசியத்தின் பாத்திரத்தை ஏற்பதற்காக ‘தரகு முதலாளித்துவப் பிற்போக்குத் தேசியம்’ , தேசிய முதலாளித்துவத்தின் ‘முற்போக்குத் தேசியம்’ என்ற கணிப்புகளைக் கைவிட வேண்டுமா? இந்தக் கேள்வி தேசியம் குறித்த தவறான ஒரு எடுகோளில் இருந்து மேலெழுவது! முதலாளித்துவம் வரலாற்று அரங்குக்கு வந்த பின்னர் எழுச்சியடைந்த அரசியல்-சமூக வடிவந்தான் தேசியம்; அதற்காக முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே தேசிய நாட்டம் இருக்கும் என்றில்லை. தனியொரு தேசத்தில் சோசலிசம் சாத்தியமாகிவிட்ட பின்னர் பாட்டாளி வர்க்கத் தேசியம் கூட வரலாற்று அரங்கில் தோற்றம்பெற்று இருந்தது. சோவியத் பாட்டாளி வர்க்கத் தலைமை அணியாகிய கொம்யூனிஸ்ட் கட்சி வரலாற்று மாற்றப்போக்கைக் கவனங்கொள்ளத் தவறியமையால் மேலாதிக்கவாத நாட்டத்துக்கும் ஆட்பட்டுத் தனது வீழ்ச்சிக்கு அடிகோலி இருந்ததென்பதை மறந்துவிட இயலாது. இன்று முதலாளித்துவத்துடன் ஐக்கியப்பட்டுச் சந்தைச் சோசலிச நடைமுறையை முன்னெடுக்கும் வரலாற்று அவசியத்தைக் கையேற்றுள்ள மக்கள் சீனத்தின் கொம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் ஒருபோதும் மேலாதிக்கத்தை நாட மாட்டோம் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரக் காண்கிறோம்! மேலாதிக்க நாட்டம் உடைய தேசியங்கள், விடுதலைத் தேசியங்கள் என்பதாக வரையறுக்க ஏற்ற வகையிலேயே முழுச் சமூக சக்திகள் இடையேயான இயங்கியல் செயற்பட்டு வந்துள்ளது! மார்க்சிய நோக்கு நிலையை வர்க்க அடிப்படைக்கும் அப்பால் மற்றொரு வரலாற்று இயங்கு தளமாகிய முழுச் சமூக சக்திகளது இருப்பும் போராட்டங்களும் மாற்றங்களும் என்ற வகைமைக்கு மடைமாற்றி விரிவாக்கும் பொறுப்பு எம்முன்னால்! (படம்: கே.ஏ. சுப்பிரமணியம் நூலக நுழைவாயில் தாங்கி நிற்கிற அவரது உருவப் பதிவு. ‘தோழர் மணியத்தை ஒருவகையில் ஜோர்ஜ் தோம்சன் போன்றவர் எனக் கூறலாம்’ என்று தோழரும் நண்பருமாகிய பாலாஜி கூறியிருந்தார். பேராசிரியர் தோம்சன் பண்டைக்கால கிரேக்க இலக்கியத்தை-சமூகத்தை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்கு உள்ளாக்கியவர். அதே நோக்கு நிலையில் மரபை அணுகியது மட்டுமன்றி மாற்றத்துக்கான புதிய வீச்சுகளை வருவித்துக் கொண்டவர் தோழர் மணியம்! தமிழ் தேசியத்தின் நாலாவது கட்டப் போராட்டத்தை மார்க்சியர்கள் கையேற்க வேண்டும் என்ற தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் கருத்து நிலை விருத்தி பெற்று எழுச்சி பெற்ற வடிவமே விடுதலைத் தேசியச் சிந்தனையியல்!)

No comments:

Post a Comment