Wednesday, September 11, 2024

கேணிப்பித்தன் ச. அருளானந்தம் அவர்களது “மகாவலியின் மைந்தன்” சிறுவர் நூல் படித்து முடித்தேன்


 மிக நீண்ட காலமாக கேணிப்பித்தன் அவர்களைச் சந்திக்கக் கிடைக்கவில்லை. கதிர். திருச்செல்வம் வழங்கிய வாய்ப்பினால் பத்து நாட்களுக்கு முன்னர் சந்திக்க இயலுமாக அமைந்தது. ஊரிலிருந்து 1991 இறுதியில் இடம்பெயர்ந்து வவுனியா சென்ற போது ச. அருளானந்தம் அவர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளராக இருந்தார். இடம்பெயர் நிலையில் விண்ணப்பத்துக்கு கையொப்பமிட இயலாதெனக் கல்விப் பணிப்பாளர் மறுத்த போது, ஒருவரது கல்வி விருத்திக்கு இத்தகைய தடைகள் ஏற்படக்கூடாதென்று அருளானந்தம் அவர்கள் ஒப்பமிட்ட காரணத்தாலேயே சிறீபாத கல்வியியல் கல்லூரிக்கு என்னால் விண்ணப்பிக்க முடிந்தது; கதிரிடம் அதனைக் கூறி ‘என்னை விரிவுரையாளராக்கிய அவரிடம் அழைத்துச் செல்லக்’ கேட்டிருந்தேன்.

வவுனியாவில் நண்பர் அகளங்கன் உள்ளிட்ட பலருடன் இணைந்து முத்தமிழ் மன்றம் இயக்கிய செழிப்பான அனுபவங்களை, அதே இளமைத் துடிப்புடன் கூறி மகிழ்ந்தார். வயதின் பெருக்கம் நடையைத் தளர்த்திய போதிலும் உள்ளம் இளமைத் துடிப்புடன் தான்!
அண்மையில் வெளிவந்த “மகாவலியின் மைந்தன்” நூலொன்றை எனக்கு வழங்கப் பணித்தார் கதிரிடம். சிறுவர்களது வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வதற்கு “நம்மட முற்றம்” செய்ய வேண்டிய வேலை முறைகள் பற்றியும் அளவளாவினார்.
படித்து முடித்த நூல் பற்றி நானும் எழுத வேண்டும். போத்துக்கேயர், ஒல்லாந்தர் எனும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளருடன் ஊடாடி மண்ணைக் காக்க கண்டி அரசன் முனைந்த தந்திரோபாயச் செயற்பாட்டில் கொட்டியாரக் கரையின் மாவலிப் புதல்வர்கள் புரிந்த வீர சாகசங்களை நூல்
சிறுவர் இரசனைக்கு அமைவாக எடுத்துரைத்துள்ளது.
நூல் குறித்த மதிப்புரையைப் பின்னர் விரிவாக எழுதுவேன். மூதூருக்கு இதுவரை சென்றதில்லை என்ற குறையைக் களையும் வகையில் அங்கே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என்று கதிர் சொல்லி இருந்தார்; “உயிரோடு நானாக” பற்றியும் “மகாவலியின் மைந்தன்” குறித்தும்,
அந்தப் புவிச் சூழலையும் வாழ்வியல் போக்கையும் அந்நூல்கள் வாயிலாக நான் பெற்ற அனுபவ விரிவாக்கத்தை முன்வைத்துக் கருத்துரைக்கும் ஆவல் உண்டு; இவ்வருட இறுதிக்குள் அதற்கான வாய்ப்பு மூதூரில் கிட்டலாம்!
எமது கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகச் செயற்பாட்டாளர்கள் அத்தகைய அனுபவப் பகிர்வை வெளிப்படுத்த ஏற்பாடு செய்யவும் இடமுள்ளது; அத்தகைய அக்கறை இங்குண்டு!
கதிர் சொன்னவாறு,
வடக்கின் நூல்களை அவர்கள் அங்கே
பரப்பும் கைங்கரியம் போல
கிழக்கின் படைப்புகளை
இங்கே பரப்புரை செய்து
நாடளாவிய எமது ஆக்கங்கள்
வாசிக்கப்படவும்
புதியன எழுச்சி பெறவும்
செய்யப்பட வேண்டிய அனைத்தையும்
மேற்கொள்வோம்!

No comments:

Post a Comment