Sunday, September 22, 2024
தேசிய ஒடுக்குமுறைக் கருவியாக அரச
தேசிய
ஒடுக்குமுறைக்
கருவியாக அரசு
ஆதிக்கம் பெற்ற வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கங்கள் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் கருவியே அரசு என மார்க்ஸ், லெனின் ஆகியோர் முன்வைத்த கருத்து வர்க்க சமூக இயக்கம் சார்ந்த ஒன்று. அரசின் வர்க்க அதிகார வடிவம் இப்போதும் கவனிப்புக்கு உரியதாயினும் முழுச்சமூக சக்தியாக ஒடுக்குமுறையை மேற்கொண்டு சுரண்டலை மேற்கொள்ளும் ஆசிய உற்பத்தி முறைச் சமூகங்களில் இன்னொரு வடிவச் செயற்பாட்டையும் அரசு வகித்திருந்தது எனும் உண்மையைக் கவனங்கொள்ளாதிருக்க வேண்டியதில்லை.
வர்க்கப்பிளவு பூரணமடையாது இனமரபுக் குழு மேலாதிக்கத்தில் சாதிகளாகி இயங்கிய இந்திய ஆட்சியியலை ‘வர்க்கப் பணியாக அன்றி முழுச்சமூக ஒடுக்குதலை மேற்கொள்வதாகிய’ கொடுங்கோன்மை முறையாக மார்க்ஸ் கருத நேர்ந்தது. மேற்கு அரசுகளில் வர்க்கங்கள் மீதான ஒடுக்குமுறையை விடவும் அதிகமான ஒடுக்குமுறை இங்கு இருந்ததில்லை என்பதைக் காணும் ஆதாரங்களை அவரால் பெற இயலாதிருந்தது.
தவிர, முழுச்சமூக சக்தி வரலாறு படைக்கும் ஆற்றல் அவர் வாழ்ந்த 19 ம் நூற்றாண்டில் வெளிப்பட்டு இருக்கவில்லை. இன்று தேசிய விடுதலைப் பணி வரலாற்று இயக்கத்துக்கு உரியதென முற்பட்டுள்ள நிலையில் எமது வரலாற்றையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறோம் அல்லவா?
பிராமணியக் கருத்தியல் மேலாதிக்கம் வாயிலாக இடைநிலை, ஒடுக்கப்பட்ட சாதி சனங்களைச் சுரண்டும் முழுச்சமூக சக்திக்கு உரிய அரசின் இயங்குமுறை தனி வகைப்பட்டது.
சுதந்திரம் எட்டப்பட்ட பின்னர் பேரினவாதக் கருவியாக இருந்து சிறு தேசிய இனங்களை அதிகமாகச் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் நடைமுறையைக் காண்கிறோமல்லவா?
ஏகாதிபத்தியச் சுரண்டலைத் தொடரவிட்ட தரகுமுதலாளி வர்க்க ஐதேக ஆட்சி இனவொடுக்கலை வெளித்தெரியாமல் செய்தது; மட்டுமல்லாமல் எமது இனத்தேசியத் தலைமைகளின் ஏகாதிபத்திய சார்புத் தரகுமுதலாளித்துவக் குணாம்சம் காரணமாகவும் அந்த உண்மை அம்பலப்படுத்தப்படாது இருந்தது.
நாட்டு நலனைப் பேண முற்பட்ட தேசிய முதலாளித்துவக் கட்சியான சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃவ்.பி.) சிங்களத் தேசியத்தைப் பிரதானப்படுத்திய காரணத்தால் ஏனைய தேசிய இனங்களைப் புறக்கணித்த இடங்கள் வெளிப்பட வாய்ப்பாகி இருந்தது.
சிறு முதலாளி வர்க்கச் சிங்களத் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனாலேயே ஜே.வி.பி. யினால் தெளிவான சுயநிர்ணயக் கோட்பாட்டை முன்வைக்க இயலாது இருக்கிறது. இவர்களது அரசாக அதிகாரம் கைமாறும் போதும் மேலாதிக்கத் தேசிய ஒடுக்குமுறை நீடிக்கவே வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக காப்பிரேட் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து அனைத்துத் தேசிய இனங்களும் விடுதலைத் தேசியத்தை வென்றெடுக்கும் பொழுது இலங்கைக்கான அரசு பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைப் பெற இயலும் என்பது தெளிவல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment