Wednesday, September 25, 2024

விடுதலைத் தேசிய அரசியலில் தலித்பிரச்சின

விடுதலைத் தேசிய அரசியலில் தலித் பிரச்சினை தலித் மக்களின் விடுதலையை முதன்மைப் பணியாக கருதும் வரலாற்றுக் கட்டம் இன்று. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இயங்கிய தலித் எழுச்சி காரணமாக இன்றைய தமிழ் பண்பாட்டின் கொடுமுடியான சினிமாவும் தலித்திய வீச்சை ஏற்று வெளிப்படக் காண்கிறோம். உலகளவில் இன்றைய சீனப்பாதை குறித்த விவாதமும் மேலெழுந்துள்ளது. மாஓவுக்குப் பின்னர் சீனா தடம்புரண்டு சென்றுவிட்டதாக கருதிய சில நண்பர்கள் கூட சீனாவின் பிரத்தியேகப் பண்பைக் கவனங்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் மார்க்சியர்களது கருத்துகள் மீது நாட்டம் செலுத்தத் தொடங்கி உள்ளனர். சீனா முதலாளித்துவத்தை உள்வாங்கியது மட்டுமன்றி அமெரிக்கா இன்று தன்னைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தொடங்குவதற்கு முன்னர் வரை அதனோடு வலுவான உறவைக் கொண்டிருந்ததே, அவ்வாறு இருக்க மாஓ சேதுங் சிந்தனையைச் சீனா இப்போதும் முன்னெடுப்பதாக எப்படிக் கூற இயலும்? இக்கேள்வியின் அடிப்படையில் மாஓவை விசுவாசிக்கும் பழைய சீன சார்புக் கொம்யூனிஸ்ட்டுகள் பலர் இன்றைய சீனாவை முதலாளித்துவ நாடு என்றே கருத்துரைத்து வருவதனையும் பார்க்கிறோம். அத்தகையவர்கள் இயங்கியல் அணுகுமுறையைக் கைவிட்ட புத்தக வாதிகள் என்பது ஏற்புடையதே. பாட்டாளி வர்க்கப் புரட்சியாலன்றி விவசாயிகளது தேசிய விடுதலைப் போராட்டத்தினூடாக வென்றெடுக்கப்பட்ட சீனாவுக்கு மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்கும் கோட்பாட்டை வகுத்து இயங்கியவர் மாஓ. ஜனநாயக மாற்றியமைத்தல் காலகட்டம் நிறைவுற்ற பின்னர் சோசலிச முன்னெடுப்புக்கு முனைந்த பொழுது, அதற்கான பாதையை சோவியத் பாணியில் பின்பற்ற முனைந்த ஏனைய தலைவர்களை ஏற்க மறுத்து விவசாயத் தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்க வேண்டுமென வலியுறுத்தியவர் மாஓ. உலகின் பிரதான எதிரியெனக் கணித்த காலத்திலேயே அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்தி வலுப்படுத்தியவரும் மாஓ சேதுங் என்பதை வரலாற்றை அறிந்தோர் மறக்கமாட்டார்கள். அமெரிக்க மக்களோடான உறவு மக்கள் சீனத்துக்கு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். இன்றுங்கூட அமெரிக்க அதிகாரத் தரப்புக்கு எதிராகச் சீனாவுடன் உறவை மீளப் புதுப்பிக்க வேண்டுமென்ற குரல் அமெரிக்க மக்களிடம் வலுவாக உள்ளது. எதிரியுடனான இந்த ஊடாட்டத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? ஏகாதிபத்தியத் திணையெனும் முழுச் சமூக சக்திக்குள் இயங்கும் வர்க்கப் போராட்டத்தைக் கவனங்கொள்ளும் மார்க்சிய நிலைப்பாடு இது. முழுச்சமூக சக்திகளிடையேயான போராட்டங்களூடாக வரலாறு இயங்குவதனை அறியப்பட்ட மார்க்சியம் சொல்லியிருக்கவில்லை. வர்க்க அரசியல் பாதைக்கு விரோதமான வழியில் இன்றைய சீனா செல்வதாக விமரிசிக்கப்படும் பொழுது ‘சீன நிலவரத்துக்கேற்ற மார்க்சியம்’ எனச் சொல்வது மாற்று இயக்க முறையை அவர்கள் புரிந்துகொள்ளாத நெருக்கடியின் பாற்பட்ட குறைபாடு என்பதை விளங்கிக்கொள்வது அவசியம். முழுச்சமூக சக்திகளிடையேயான மோதல்கள் வாயிலாக இயங்கிய வரலாற்றுச் செல்நெறியைத் தமிழகம் தெளிவுறக் காட்டி இருப்பது பற்றிப் பேசப்பட்டு வருகிற எம்மத்தியிலேயே பலராலும் இதனைப் புதிய பார்வை வீச்சோடு விளங்கவும் விளக்கவும் முடியாமல் இருக்கிற அவலம் நீடிக்கிறதே? சீனப் பிரயோகத்தைச் சரியெனச் சொல்ல முடிகிற சில தோழர்களால் அதற்கான கோட்பாடுதான் விடுதலைத் தேசிய அரசியல் எனக் கூறப்படுவதன் தனித்துவத்தையும் கனதியையும் புரிந்துகொள்ள இயலவில்லையா; இது மார்க்சியத்துக்கு அவசியப்படுகிற ஒரு கோட்பாடென வலியுறுத்துவதன் தேவையை மறுக்கின்றனரா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா? வேறு காரணம் இருக்க இயலுமாவெனக் கருத வேண்டியிருப்பது, இத்தகைய தோழர்கள் தலித்தியவாத நிலைப்பாட்டை அப்படியே ஏற்கிறவர்களாக உள்ளனர் என்பதால்! இந்து சமயத்தை ஒழித்துக் கட்டுவது, பிராமண எதிர்ப்பு எனும் தலித்தியவாத, சாதிவாத நிலைப்பாட்டை விமரிசிக்காமல் அம்பேத்கரியர்களோடும் பெரியாரியர்களோடும் ஐக்கியப்பட்டு இயங்க இயலாது. ஐக்கியமும் போராட்டமும் என்ற நிலைப்பாடு இவர்களோடும் உண்டு, ஆதிக்க சாதிகள் மத்தியிலான வர்க்கப் போராட்டத்தால் விடுதலைத் தேசிய அரசியலுடன் ஐக்கியப்பட வர உள்ள சமூக சக்திகளுடனும் உண்டு! சீனத்தன்மைக்கான மார்க்சியம் என்ற கோட்பாட்டுத்தெளிவற்ற இன்றைய சீனாவின் நிலைப்பாட்டினால் பெரியாரியம், அம்பேத்கரியம் என்பவற்றை இந்திய நிலவரத்துக்கான மார்க்சியம் என மயங்குகிற திருகுதாளங்களுக்கு இட்டுச் செல்கின்ற அவலம் ஏற்படுகிறது! சீனா திணை அரசியல் சார்ந்த விடுதலைத் தேசியச் சோசலிசக் கட்டுமானம் என்ற கோட்பாட்டை வகுத்துத் தெளிவுறுத்தத் தவறும் பட்சத்தில் முதலாளித்துவச் சறுக்கலில் சோவியத் யூனியன்போலத் தகர்ந்துவிட இடமுண்டு. மார்க்சியம் சர்வவியாபக உண்மை. கால-தேச நிலவரத்துக்கு அமைவாகப் பிரயோகிப்பதையும் அதன் அடிப்படையை திரிபுபடுத்துவதையும் வேறுபடுத்தும் தெளிவு ஒரு மார்க்சியருக்கு அவசியம்!

No comments:

Post a Comment