Saturday, December 22, 2012

முன்னோடி ஆளுமைகள் குறித்து சில ..

                                                                                     - ந இரவீந்திரன் -
சென்ற வாரம் ஞாயிறு அன்று(16.12.2012) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் லெனின் மதிவானத்தின் 'ஊற்றுக்களும் ஓட்டங்களும்(மீனாட்சி அம்மாள் முதல் மார்க்சிம் கோர்க்கி வரை)' எனும் நூல் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த நிகழ்வு குறித்து பேசுவதற்கு நிறைய உண்டு. அது குறித்து பின்னால்.
நூல்வெளியீட்டில் வௌ;வேறு நிகழ்வுகளோடு, எனது ஆய்வுரையும் இடம்பெற்றிருந்தது. அந்த எனது உரையில் ஏற்பட்ட கருத்துபேதம் தொடர்பாக இங்கு உரையாடுவது அவசியம் எனக் கருதுகிறேன். எனது கருத்து தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளமை, நண்பர்களது தப்பபிப்பிராயத்தைப் போக்குவது தொடர்பிலானது என்பதோடு எமது சமகாலப் போக்குத் தொடர்பில் அவசியப்படும் விவாதப் பொருள் என்பதினாலும் ஆகும்.
மேற்படி நூலில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் குறித்த கட்டுரைகள் இரண்டு உள்ளன் நூலின் பெரும்பகுதி அவர்களது கருத்துகளை முன்னிறுத்தி லெனின் மதிவானம் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. நூல் அச்சுக்குப் போவதற்கு முன் சிவத்தம்பி அவர்களது கருத்துகள் தொடர்பில் எனது வேறுபாட்டை மதியிடம் கூறியிருந்தேன். அவருக்கும் பேராசிரியர் மீது அடிப்படையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் நூலில் அவரை முன்னிறுத்தும் விடயங்களில் அதனளவுக்கு அவர்மேல் தனக்குள்ள மரியாதையை மதி கூறியிருந்தார். குறிப்பாக மலையகத்தை ஆளுமையுடன் எழுச்சிகொள்ளச் செய்ய அவர் ஆற்றிய பங்களிப்பில் மிகுந்த மதிப்புணர்வைக் கொண்டிருப்பது தெரிந்தது.
அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டதால், அவரது கருத்து நூலில் ஏற்படுத்தும் வேறுபட்ட பார்வை என்பதை அப்போதைக்கு அழுத்தாதிருந்தேன். இப்போது ஆய்வுரை என வந்தபோது அதனைச் சொல்லாதிருக்க இயலவில்லை. எப்படி சர்ச்சைக்காகவே ஏதும் கருத்தை முன்வைப்பதில்லையோ,அவ்வாறே விரும்பப்பட மாட்டது என்பதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாதிருந்ததில்லை என்றவகையில் அன்று அதுகுறித்துப் பேசியிருந்தேன். எனது உரையை முழுமையாக பதிவு செய்கிறபோது அதன் விபரத்தைக் காண இயலும். இங்கு சுருக்கமாக் சோசலிச யதார்த்தவாதம் சோசலிச நாடுகளில் பேசப்பட்டிருக்க வேண்டியது, நாங்கள் இங்கே முன்வைத்திருக்கக் கூடாது என்று பின்னாலே சிவத்தம்பி பேசியிருந்தபோதிலும், முன்னதாக அதுசார்ந்து அவர் வெளிப்படுத்திய கருத்து அடிப்படையில் மதி சிறுகதைகள் தொடர்பில் கூறியுள்ள கருத்தில் எனக்கு வேறுபட்ட அபிப்பிராயம் உள்ளது என்றேன். இயற்பண்புவாதம், யதார்த்தவாதம் தொடர்பான வரையறைகளோடு கைலாசபதி முன்னிறுத்திய பார்வையே சரியானது எனக் கருதுவதையும் கூறியிருந்தேன்.

கூடவே, பேராசிரியர் சிவத்தம்பி எவ்வளவு பெறுமதியான பங்களிப்பை வழங்கியுள்ளாரோ, அவ்வளவுக்குக் குளறுபடிகளையும் பண்ணி வைத்துள்ளார் என்றேன். இந்தக் கருத்தே நண்பர்களிடையே அபிப்பிராயபேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படிச் சொல்லமுடியுமா, அவர் எவ்வளவு பெரிய ஆளுமை, இது அவரைக் கொச்சைப்படுத்துவது போன்றல்லவா இருக்கிறது என்பதாக விவாதிக்கப்பட்டுள்ளது. என்னோடு நேரடியாக உரையாட இயலாததால், மதியுடன் இது தொடர்பாக நண்பர்கள் வருத்தப்பட்டுள்ளனர். இந்த விமர்சனத்துக்கு அப்பால் எனக்கு சிவத்தம்பி மீது இருக்க அவசியமான மதிப்புணர்வு உள்ளமையையும், அவரோடு நான் பல சந்தர்ப்பங்களில் அளவளாவியதையும் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருவரும் ஒன்றாகச் சென்று சந்தித்துள்ளோம்) லெனின் மதிவானம் விளக்கியிருக்கிறார்.
இதனை அவர் விட்டுக்கொடுத்திருக்க இயலாது; சில நாட்களுக்கு முன்னர்தான் சிவத்தம்பியை மதிக்கத் தக்க ஒரு மார்க்சியர் என என் அபிப்பிராயத்தை மதியிடம் கூறியிருந்தேன். அது இன்னொரு எமது மகத்தான ஆளுமை தொடர்பில் வந்த விவாதத்துடன் சம்பந்தப்பட்டது. தோழர் சண்முதாசன் புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான ஒரு பெரும் தலைவர். அவர் இயங்கியல்-பொருள் முதல்வாத அடிப்படையில் இயங்கியவர் என்ற வகையில் விமர்சனங்களுக்கு அச்சப்பட அவசியமில்லாதவர்; அவ்வாறே வழிபாட்டையும் ஏற்க மறுப்பவர். அவர் வறட்டுவாத நிலைப்பாட்டிலிருந்து மூன்றுலகக் கோட்பாட்டை கையாண்டவிதமும், சுயநிர்ணய உரிமையை ஏற்க மறுத்தமையும் காரணமாக 1978 இல் கட்சியில் ஒரு பிளவு ஏற்பட்டமையை லெனின் மதிவானம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டபோது, 'அதெப்பிடி சண் பற்றி இப்படிச் சொல்லலாகும்...உமக்கு சண்ணும் மார்க்சியவாதி, சிவத்தம்பியும் மார்க்சியவாதியா' என்பது போன்ற குரலில் மறுப்புரைகள் வெளிப்பட்டன.
இந்த வழிபாட்டு அபிப்பிராயம், அடிப்படையில் தமது தவறான நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் முயற்சியே அல்லாமல், சண்ணுக்கு மதிப்புச் சேர்ப்பதல்ல. நாங்கள் சண் மீது விமர்சனத்தை முன்வைக்கும் அதேவேளை, இவர்களையும் விட அதிகமாயே சண்மீதான அபிமானங்கொண்டுள்ளோம். அவர் முன்னெடுத்த சோசலிச சமூக உருவாக்கத்துக்கான போராட்டத்தின் இன்றைய திசைமார்க்கத்தைக் கண்டறியக் கருத்தியல் தளத்தில் போராடுகிறோம் என்ற வகையில் சண்மீதான எமது மதிப்புணர்வு பொருளுள்ளது. இவர்கள் தமது வலது சாரித் தமிழ்த் தேசியத்துக்கு அனுசரணையாக சண்ணைக் குறுகத் தறிக்க முயல்வது உண்மையில் வேடிக்கையான ஒன்று. சிவத்தம்பி மார்க்சிய நோக்கில் தமிழர் பண்பாட்டுச் செல்நெறியை ஆய்வு செய்து மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்; அதேவேளை, வலதுசாரித் திரிபு வாதத்துக்கு ஆட்பட்டு இழைத்த தவறுகளை விமர்சனத்துக்குள்ளாக்குகிறோம். அவ்வாறே சாதியத் தகர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட உழைக்கும் மக்களது பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பாட்டாளி வர்க்கத் தலைவரான சண்முகதாசன், இடது திரிபுவாத நிலப்பாட்டைக் கொண்டிருந்த சந்தர்ப்பங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறோம். இருவரும் வேறுபட்ட தளங்களில் பங்களிப்பை நல்கியவர்கள். பங்களிப்பின் அளவிலும் பண்பிலும், அவ்வாறே விமர்சன அம்சங்களின் குணாம்சங்களிலும் வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தத்தம் தளங்களில் மார்க்சியத்துக்கு ஆற்றிய பணியின் காரணமாக இருவரையும் மதிக்கிறோம் என்பதால், அவர்களில் எவருக்குமோ, அல்லது எமக்கோ தீட்டு ஏதும் பட்டுவிடப் போவதில்லை.
அந்தவகையில், சிவத்தம்பியை நான் கொச்சைப்படுத்துவேன் என்றிருக்க இயலாது என மதியால் அடித்துச் சொல்ல இயலுமாயிற்று. இருவரையும் மதிப்பது குற்ற விமர்சனத்துக்குரியதில்லை என்று ஓரிரு வாரங்களின் முன்னர் கூறியிருந்தேனே? இந்தக் கருத்துபேதம் ஏற்பட மற்றொரு காரணம், தமிழ்த் தேசியத்தை நான் ஏற்காமையால், சிவத்தம்பி ஏற்றமையைத் தாக்குகிறேன் என்ற நினைப்பு.
இதனையும் மறுப்பதில் சிரமம் இருக்கவில்லை. அவர் வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த்தேசியத் தலைமையை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்; அதை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதில் நண்பர்கள் உடன்பாடு கொண்டனர். தமிழ்த்தேசியம் சுயநிர்ணயத்துக்காக போராட அவசியம் உள்ளதைக் கூறும் அதேவேளை, அதைப் பலப்படுத்தும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்துவத் தேசிய அபிலாசைகளை இனங்கண்டு, அதன் கோரிக்ககளை உட்படுத்த வேண்டும் எனும் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை பற்றி லெனின் மதிவானம் கூறியபோது அந்த நண்பர்கள் அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அத்தகைய வடிவில் தமிழ்த் தேசிய ஏற்பு எமக்கு உள்ளமைய அறிந்த நிலையில் கருத்து வேறுபாடு தற்போதைக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
இங்கு பிரதான விடயம், எமது முன்னோடிகளை எப்படி உள்வாங்கப் போகிறோம் என்பதுதான். மேற்படி உரையின் தொடக்கத்திலேயே, நாம் கலை-இலக்கிய-பண்பாட்டுத் தளத்தில் அதிக உடன்பாட்டோடு தொடரும் கைலாசபதியின் விமர்சனங்களில் கருத்து மாறுபாடு கொண்டிருந்த இடத்தைச் சொல்லியிருந்தேன். அது எவருக்கும் கொச்சைப் படுத்துவதாகப்படாது; அவரை வழிபாடு செய்கிறோம் என்பவர்களுக்கு, அட அவர்மீதே விமர்சனத்தை வைக்கிறார்களே என்றுதான் படும். வேறு ஆளுமைகளில் விமர்சனத்துக்கான இடம் அதிகம் என்பதற்காக அவர்களை நிராகரிக்கிறோம் என எண்ண வேண்டியதில்லை. இப்போது பரந்த ஐக்கிய முன்னணியாக புதிய பாணி வேலை முறை ஒன்று தேவையாகியுள்ளது. அதன் புரிதலோடு, ஆளுமைகள் சார்ந்து கட்சிகட்டி மோதுவதை விடுத்து, ஒவ்வொருவரது பங்களிப்பையும் கையேற்று வளர்க்கும் அதேவேளை, விமர்சனம்-சுய விமர்சனம் என்ற கையாளுகையோடு ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம். மாஒ சொன்னவாறு பத்து வீதம் மார்க்சியத்தை முன்னெடுக்கிறவரோடும் ஐக்கியப்பட ஏற்ற வாய்ப்பைக் கண்டறிவோம் - அதற்காக விமர்சனத்தைக் கைவிட வேண்டியதில்லை. ஒன்றுபடும் நோக்கோடு விமர்சனப் போராட்டத்தை முன்னெடுத்து, முன்னிலும் வலுவான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்.
மக்கள் போராட்டங்களில் மகத்தான வெற்றிகள் சாத்தியப்பட்டன. ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவங்களை உள்வாங்கி எமக்கான கோட்பாட்டு உருவாக்கத்தைக் கட்டமைப்போம். தோல்விகளிலிருந்தும் பெறுமதிமிக்க படிப்பினைகளைப் பெறுவோம். இதன் வாயிலாக, போராட்டம் - தோல்வி - மீண்டும் போராட்டம் - தோல்வி - மீண்டும் போராட்டம், வெற்றிவரை எனும் வரலாற்றுச் செல்நெறியைத் தொடர்வோம்.

No comments:

Post a Comment