Saturday, December 1, 2012

தமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம்


கே ஏ சுப்பிரமணியம்
?மணியம் தோழர் ஏற்படுத்திய கருத்தியல்: தமிழினத் தேசியம், சாதியம், புதிய பண்பாட்டியம்
முந்திய பதிவில் மூன்றுலகக் கோட்பாட்டு அடிப்படையில் எனக்கான கருத்தியலை வந்தடைய மணியம் தோழர் வழிப்படுத்தியிருந்தவாறினைத் தொடர்ந்து பேசுவதாகக் கூறியிருந்தேன். அந்த மூன்றுலகக் கோட்பாட்டில் இன்று எவரும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கட்சி இன்னும் மூன்றுலகக் கோட்பாட்டில் தொங்குகிறது என்ற அனாமதேயமான ஒரு குற்றச்சாட்டும், அதை எவரும் மறுக்க முன்வராமையும் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு, மாயாவாத மார்க்சியம் - லெனினியம் - மாஒ சேதுங் சிந்தனை எனப் பேசுவது பொருளற்றது.
முதலில் ஃபனான் புறக்கணிக்கப்பட்ட ஆபிரிக்காவை மூன்றாமுலகு எனக் குறிப்பிட்டார். பின்னர் மாஒ, ஒடுக்கப்படும் நாடுகள் அனைத்தையும் மூன்றாமுலக நாடுகள் என்றார். அதிகமாக வஞ்சிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளோடு கூடுதல் நெருக்கத்தைக் காட்டிய அதேவேளை ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்படும் அனைத்து மூன்றாமுலக நாடுகளோடும் நெருக்கமான உறவை அவர் முதல்நிலைக்குரியதாகக் கட்டியெழுப்பினார். சங்கானையில் நடந்த கூட்டத்தில் நான் சண்முகதாசனிடம் மூன்று கேள்விகளை எழுதிக் கொடுத்ததையும், ஒரு பொடிப்பயல் எனப் புறந்தள்ளாமல் அவர் பதில் அளித்தமையையும் பற்றி பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ளேன். அந்தக் கேள்விகளில் ஒன்று, "பிற்போக்கான சிறிமாஒ பண்டாரநாயக்க அரசுக்கு சீனா எப்படி 'பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம்' கட்டித்தரலாம்" என்பதாகும். ஏகாதிபத்தியங்களால் சூறையாடப்படுவதில் இருந்து விடுபட ஓரளவில் இந்த உதவி பங்களிக்கலாம் என்பதை சண் விளக்கினார்.
முன்னாள் ஏகாதிபத்திய நாடுகளும் மேலாதிக்க நாடுகளால் சுரண்டப்படுவதும், இவ்விரு தரப்புக்குமிடையேயான முரண்பாட்டை சரியாகக் கையாள்வது அவசியம் என்பதையும் மாஒ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அந்நாடுகளோடான உறவுகளில் அவர் வலியுறுத்திய கருத்துகள் அப்போதே "பீக்கிங் ரிவியூ" சஞ்சிகைகளில் வந்துள்ளன; இப்போது விடியல்-அலைகள் இணைந்து வெளியிட்டுள்ள "மாவோ- தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்புகளின்" ஒன்பதாவது தொகுதியில் இவ்வகையில் உலக நாடுகளை வகைப்படுத்திக் காட்டிய மாஒவின் பார்வையைக் காணலாம்.
மாஒவின் மறைவின் பின்னர் "மூன்றுலகக் கோட்பாடு" பேசுபொருளானபோது, அதுபற்றிய தனி நூல் வெளியானது. மேலாதிக்க நாடுகளான சோவியத் யூனியன், அமரிக்கா என்பவற்றைத் தனிமைப்படுத்துவது; மூன்றாமுலக நாடுகள் சுயசார்பில் தங்கியிருக்க உதவுவதால், பாதிப்புக்குள்ளாகும் இரண்டாம் உலக நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்பட வாய்ப்பான சூழலை ஏற்படுத்துவது என்பன இக்கோட்பாடு சார்ந்து விவாதத்தில் மேற்கிளம்பின. இவ்வகையில் முரண்பாட்டைக் கையாள்வது என்பது நாட்டினுள்ளே முன்னதாக மாஒ ஐம்பதுகளின் நடுக்கூறில் கோட்பாட்டுருவாக்கம் செய்த ஒன்று; முன்னதாக முரண்பாடு எனில் எதிர் நிலைக்கு உரியதாக மட்டுமே பார்க்கப்பட்டது. பிரதானமாக ஸ்டாலினும், தொடர்ந்தும் சோவியத் யூனியன் எப்போதுமே அவ்வாறுதான் கையாண்டிருந்தது. மக்கள் மத்தியிலான முரண்பாடு எதிரியுடனான முரண்பாட்டைக் கையாள்வதிலிருந்து வேறுபட்டது என மாஒ வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியமை மார்க்சியத்துக்கான பெரும் பங்களிப்பாகும்.
இவ்வகையிலான மூன்றுலகக் கோட்பாட்டை சீன நூல் சார்ந்து மட்டுமல்லாமல் சுயமாக மணியம் தோழர் தானே தேடி நிறைய ஆதாரங்கள் வாயிலாக தனி ஆக்கம் ஒன்றையும் எழுதியிருந்தார். அது சண்ணுடனான சிறப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்டிருந்தது. மணியம் முன்னர் இருந்தே இந்தவகைக் கையாளலையே எமக்குரியதாக வடிவப்படுதித் தந்துவந்தமையால் இந்தக் கட்டம் அதிர்ச்சிக்குரியதாக இருக்கவில்லை; வடபிரதேசத்தின் மிகமிகப் பெரும்பான்மையினர் மூன்றாமுலகக் கோட்பாட்டை ஏற்றுப் புதிய கட்சியில் அணிதிரண்டமையிலேயே இதனைக் காண இயலும்.
மக்கள் மத்தியிலான வேலையில் இவ்வகையிலான மூவகைப்படுத்தல் என்பதை மணியம் தோழர் எப்படிக் கையாண்டார் எனக்காட்டுவது இங்கு அவசியமானது. சாதியப் போராட்டம் முனைப்பட்ட நிலையில் நடந்த கொம்யூனிஸ்ட் கட்சி எட்டாவது மாநாட்டில், சண் " கருப்பினப் போராளிகள் வெள்ளையரைப் பெற்றோள் ஊற்றி எரிப்பதைப் போல வெள்ளாளரைப் பெற்றோல் ஊற்றி ஒடுக்கப்பட்ட சாதிப் போராளிகள் எரிக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டதைக் கூறும் மணியம், அப்படியென்றால் முதல் பெற்றோல் இவருக்கே அல்லவா வரும் என்பார். மார்க்சிய-முற்போக்கு-ஜனநாயக உணர்வுடைய ஏராளமான வெள்ளாளர்கள் சாதியப் போராட்டத்தை ஆதரித்தனர் மற்றும் பங்கெடுத்தனர்.   சாதியப் போராட்ட அனுபவங்களில் நடுநிலைச் சக்திகளை வென்றெடுக்கக் கையாண்ட நடைமுறைத் தந்திரோபாயங்கள் குறித்து நிறையக் கூறியுள்ளார். இதுகுறித்து "இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" நூல் விரிவாகக் காட்டியுள்ளது.
என். சண்முகதாசன்,மாவோ 
தமிழினத் தேசியப் பிரச்சனை தொடர்பிலும் இந்த மூன்றாம் (இடைநிலைச்) சக்திகளைக் கையாள்வதுபற்றிய வழிப்படுத்தலைச் சிறப்பாகக் காட்டியுள்ளார். நான் எப்போதும் அவரைச் சந்தித்து அன்றன்று செற்பட்டவாறினை அவரோடு அளவளாவுவதுண்டு; அவ்வாறு அவற்றைக் கூறுமாறு அவர் ஆக்கியிருந்தார். எல்லாவற்றையும் கேட்டு அவற்றின் மீதான விமர்சனத்தின் ஊடாகவே மார்க்சியத்தை அவர் கற்றுத்தந்தார். தமிழீழச் செயற்பாட்டாளர்களுடன் பெரும் விவாதங்களை நடாத்தி வெற்றிபெற்றதான மிதப்போடு என் தர்க்கத்திறனைச் சொன்ன இரண்டொரு சந்தர்ப்பங்களில், கண்டன விமர்சனத்தை முகங்கொண்டேன். மார்க்சிய அணிக்கு ஆகாயத்திலிருந்தா ஆட்கள் வருவர், இப்படி தமிழீழம் என இருப்பவர்கள்தானே வருவர்; இவர்களை விவாதத்தில் வெல்வதல்ல விடயம், வென்றெடுப்பது எப்படி என்பதே முக்கியம் என்பார். அதன்பின் பெரும்பாலும் விவாதித்து எவரையாவது வீழ்த்துவது என்பதைவிடவும், சரியான கருத்தை ஒருவர் வந்தடைய எவ்வாறு உதவலாம் என்பதிலேயே என் கவனம் இருந்தது. கருத்தாடல் நடுநிலைச் சக்திகளை வென்றெடுப்பதற்கானது என்ற புரிதல் புரட்சியாளருக்கு அவசியம். இல்லையேல் வென்றெடுக்க வேண்டியவர்களையும் எதிரியின் பக்கம் தள்ளும் கைங்கரியத்தையே செய்ய நேரும்.
நான் கட்சிக்கு வரும் எழுபதுகளின் முற்பகுதி இன முரண் கூர்மையடைந்து வந்த காலகட்டம்; தரப்படுத்தலை முகங்கொண்ட இரண்டாம் வரிசை எனது. அந்தக் கடும் போட்டியை நிராகரித்து முதலில் இலக்கிய நாட்டத்திலும் தொடர்வளர்ச்சியில் மார்க்சிய அரசியலுக்கும் வந்தேன். அந்தவகையில் இனமுரண் குறித்த கேள்வி என் தலைமுறையில் கட்சியில் இணைந்த இளைஞர்களிடம் இருந்தது. அதனாலேயே இனவாதத்துக்கு எதிராக வர்க்கப் பார்வையில் அதிகம் புடமிடப்பட வேண்டியவர்களாக இருந்து அவ்வாறாக வடிவப்படுத்தப்பட்டவர்கள். அந்தப் புதிய வார்ப்பின் கவர்ச்சியில் தமிழ்த் தேசிய கருத்துடையவர்களோடு விவாதிக்கப் போய் மணியம் தோழரால் இவ்வகையில் நிதானப்படுத்தப்பட்ட நிலையில் "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?" என்ற விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன். முன்னதாக இனப்பிரச்சனை தொடர்பான நாட்டம்-எதிர்க் கருத்தாடல்-நிதானப்பட்ட கருத்தியல் நிலை என்ற பரிமாணங்களோடு லெனின், ஸ்டாலின் சிந்தனைகளையும் சீன அனுபவங்களையும் எமது வரலாற்று நிதர்சனத்தையும் கவனம் கொண்டு அது எழுதப்பட்டது. அதனை எடுத்துச்சென்று பல்வேறு தரப்பினரிடம் காட்டிக் கருத்தறிந்து பெற்ற விமர்சனங்களை என்னிடம் கூறி, வேண்டிய திருத்தங்களைச் செய்வித்திருந்தார். கட்சிப் பத்திரிகையான "செம்பதாகை"யில் மூன்று இதழ்களில் தொடராக அது வந்திருந்தது. மார்க்சிய அடிப்படையில் முதல் முயற்சியாக சுயநிர்ணயம் பற்றிப் பேசிய கட்டுரை அது.
பீட்டர் கெனமன் ,சரத் முதடுவகம  ,W .A .தர்மதாச ,K A சுப்பிரமணியம் 
எந்த ஒரு முதல் முயற்சியும் சுத்த சுயம்புவாக அமைந்துவிடாமல், ஆக்கம் ஒன்றைப் பலரதும் பார்வைக்கு உள்ளாக்கி விமர்சனங்கள் அடிப்படையில் இறுதி வடிவப்படுத்துவதனை இதன்வாயிலாகக் கற்றுத்தந்தார். மாறுபட்ட கருத்தாளர்களின் கருத்துகளைக் கவனம் கொள்வது, இணைந்து வேலை செய்வது என்பவற்றையும் இதன் வாயிலாக அனுபவப்படுத்தியிருந்தார். மாஒ, 10 விழுக்காடே மார்க்சியராக உள்ளவரோடும் இணைந்து வேலை செய்யத்தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பதை அடிக்கடி கூறுவார். மூன்றுலகக் கோட்பாட்டில் இது அடிப்படையானது. பிற்போக்காளர் மிகக் குறைந்தவர்களாக உள்ளபோது, நடுநிலயாளர்களாக மிகப் பெரும்பான்மையினர் இருந்து வென்றெடுக்கப்படவேண்டியிருப்பர் என்பதை மாஒ அடிக்கடி கூறியுள்ளார். ஆயினும் நடைமுறையில் தம்மைப் பெரும் புரட்சியாளர் எனக் காட்டும் பலரும் 70 விழுக்காடு மார்க்சியராய் உள்ளவரிலும் இருக்கும் 30 விழுக்காடு பிரச்சனையைப் பெரிதாக்கி விவாதித்து எதிரியாக்கிவிடும் வேலை முறையையே முன்னெடுக்கக் காண்கிறோம்.
ஐக்கியம்-போராட்டம்-ஐக்கியம் என்ற வேலைப் பாணி பலருக்கும் பரிச்சயமற்றுள்ளது. என்வரையில் மூன்றுலகுக் கோட்பாட்டு அடிப்படையில் மார்க்சியத்தை நேசிக்கும் எவரையும் எதிரியாக்க இயலாது. அதற்காக இன்று அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாதிரிக் கொம்யூனிஸ்ட் கட்சி இருப்பதைச் சாட்டாக்கி ஒருபோதும் அரசை ஆதரிக்கும் எந்த வேலையையும் நான் செய்ததில்லை. அரசை விடவும் தமிழ் மக்களது போராட்டம் பாஸிஸ சக்தியால் தலைமை தாங்கப்பட்ட போதிலும் எதிர்க்கக் கூடாதது என்ற மணியத்தாரின் வழிமுறையைப் பின்பற்றிவந்தேன். "ஆமை பிடிப்பார் மல்லாத்துவார், நாம சொன்னால் பாவம்" என்று புலிகள் தமக்கான அழிவைத் தாமே தேடுவர் என்பதை அவர் எப்போதும் கூறியதை மனங்கொண்டு செயற்பட்டுள்ளேன்; அதேவேளை வன்முறை வழிபாட்டில் புலிகளை நியாயப்படுத்துகிறவர்களுக்கு மாறாக, அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளேன். கட்சி ஐ.தே.க. ஆட்சியிலிருந்து மாற்றம் ஏற்பட்டு சமாதான முன்னெடுப்பில் இயங்கிய போது சாகித்திய மண்டலக் குழுவுக்கு என் பெயரைக் கொடுத்திருந்தவகையில் குழுவில் பங்கேற்று, எப்போது விலகச் சொன்னதோ அப்போதே விலகினேன். அதேபோல கட்சி ஏதாயினும் அமைப்போடு தேவை அடிப்படையில் உதவிபெறும்போது, அதற்கு ஏற்ற பிரதி உபகாரங்களை என்னிடம் கேட்டபோது கட்சிக்குத் தெரியப்படுத்திக்கொண்டு ஏதாயினும் உதவியைச் செய்துள்ளேனே அல்லாமல் கட்சியை மீறி, எந்த ஒரு அமைப்புக்கும் ஆதரவாளனாக நான் இருந்ததில்லை.
கா .செந்தில்வேல் ,சோ .தேவராஜா ,இ .தம்பையா .
மணியம் தோழர் ஈழத்தேசிய நாட்டத்தோடு வந்த தமக்கு உதவியது பற்றி அசோக் குறிப்பிட்டிருக்கிறார்; முன்னர், அவர்களை எதிரியாகக் கொள்ளக்கூடாது என மணியம் தோழர் கூறிய ஒரு சந்தர்ப்பத்தில் நான் கோபத்தோடு "நீங்கள் கொம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைமை தாங்குகிறீர்களா, அல்லது இந்த ஈழக்குழுக்களுக்குத் தலைமை தாங்குகிறீர்களா" எனக் கேட்டிருகிரேன். நிதானப்பட்ட நிலையில் ஐக்கியமுன்னணி வேலைமுறையை அவரிடமிருந்து கற்கவேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டு செயற்பட்டுள்ளேன். வலதுசாரிப் பிற்போக்கு பாசிசத் தலைமையில் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும், அதற்கு எதிராக செயற்பட்டதில்லை; விமர்சனத்தை முன்னெடுத்துள்ளேன், இடதுசாரித்தமிழ்த் தேசியம் ஐக்கியப்படத்தக்கது என்ற போதிலும், மார்க்சியர் என்கிற நிலையில் இலங்கைத் தேசியத்தினுள் பிரிந்து செல்லும் உரிமை இல்லாத சியநிர்ணயத் தீர்வை அடைய வேண்டும் ஏற 1982 இல் எழுதிய கருத்தோடு தான் இன்றும் உள்ளேன்.
என்னுடைய ஆய்வில் அதே 82இல் பாரதி வந்தபோது அவரது கருத்தியல் சார்ந்து பாரதியை அணுகிய நான் புதிய முடிவை வெளிப்படுத்தினேன். அதனைத் தனி நூலாக்க வேண்டும் எனக் கைலாஸ் கூறியிருந்தார். அதையறிந்த மணியத்தார் பாரதியியலில் ஆழக்கால் பதிக்கச் சொன்னார். சாதி-தேசியம்-பாரதியம் என்பன எனது பிரதான ஆய்வுக்களமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கருத்தியலோடு இக்களங்களில் முப்பது வருடங்களாக செயற்பட்டதன்பேறே இரட்டைத் தேசியம், பண்பாட்டுப்புரட்சி வாயிலாக எமக்கான சமூக மாற்றம் என்பவற்றுக்கான கோட்பாடுகளாகும். இது எமது பிரத்தியேகக் களத்தில் அவசியப்பட்ட போராட்டங்களை கட்சி அனுசரணையோடு முன்னெடுக்க அவர் முன் கையெடுப்பதில் சக தோழர்களையும் மக்களையும் வென்றெடுத்த அவரது வேலைப் பாணியின் திரண்ட வெளிப்பாடு. இதற்கு நான் எழுத்து வடிவம் கொடுத்த போதிலும் முழுதாக கே.ஏ.சுப்பிரமணியத்தின் செயற்பாடு-சிந்தனை என்பனவே இரட்டைத் தேசியக் கோட்பாடு; பல்வேறு தோழர்கள், கோட்பாட்டு நடைமுறைத் தவறுகள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் ஆளுமைமிக்க தலைமையை வழங்கிய தோழர் சண்முகதாசன் போன்றோருக்கும் இதுசார்ந்த பங்களிப்பு உண்டு.

No comments:

Post a Comment