-ந. இரவீந்திரன் -
இன்று(06.12.2012) பேராசிரியர் க.கைலாசபதியின் 30வது நினைவுதினம். அவர்(05.04.1933-06.12.1982) முற்போக்கு இலக்கிய இயக்கம் எழுச்சியுறத்தொடங்கிய 1953இலிருந்து தனது முற்போக்கு சமூக-இலக்கிய-அரசியல் செயற்பாட்டில் முனைப்பாக இயங்கி, அதன் வீறுமிக்க பங்களிப்புகளில் கருத்தியல்-நடைமுறைத் திசை மார்க்கத்துக்கு உன்னத வழிகாட்டலை ஏனைய முன்னோடிகளோடு வழங்கி, மாற்றுச் செல்நெறி எழுச்சியுறத் தொடங்கியபோது தனது இதய இயக்கத்தை நிறுத்திக்கொண்டவர்; மறைவின் பின்னரும் வழிகாட்டும் வகையில் வலுவான கருத்தியல் அடித்தளத்தை இடும்வகையில் அக்களத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்யும் தலைமகனாக விளங்கியவர். வெறும் பல்கலைக்கழக பேராசிரியர் என்பதற்கு அப்பாலான அவரது சமூகமாற்றச் செல்நெறிக்கான ஆய்வுப்பங்களிப்பும், அதன் செயல்வேகத்துக்கு உந்துதல் வளங்கிய ஆளுமைகளோடு கொண்டிருந்த இரத்தமும் தசையுமான உயிர்ப்பான தொடர்பாடலினாலும் தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
அவரது மறைவை அடுத்து மேற்கிளம்பிய இனத்தேசிய இயக்காற்றல் போரியல் இலக்கியத்தை வளங்கி 2009 உடன் மாற்றுக்கட்டத்தை அடைந்தது. அடுத்துள்ள இந்த மூன்று வருடங்களில் மீளாய்வுகளும் மீட்சிக்கான தேர்வுகள் எவ்வகையில் அமையலாம் என்பதான தேடலும் வலுப்பட்டு வருகிறது. ஆக்கபூர்வமாக அது மக்கள் விடுதலைச் செல்நெறியில் முன்னேறுவதற்கு மாறாக அனைத்து பிரிவினர் மத்தியிலும் இனக்குரோதங்கள் திட்டமிட்டே வளர்க்கப்படும் இன்றைய சூழலில், அந்த மூன்று தசாப்தங்களாக இனபேதங்கடந்து ஒன்றுபட்ட போராட்டங்கள்வாயிலாக அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுக்காகப் போரடிய அனுபவங்களை கைலாசின் வாழ்வும் பங்களிப்பும் ஊடாகக் கண்டுகொள்ள இயலும்.
சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் பாசிசம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக வலுவடைந்து வந்தபோது நாடுகள் தமது தேசிய சுயநிர்ணயத்தைப் பாதுகாக்கவும் அல்லது வென்றெடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டன. தத்தமது வரலாற்று போக்கின் நிலைக்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட தேசிய வரம்புக்கு உட்பட்ட தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு ஜனநாயக அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கவும் பேணவும் ஏற்ற முற்போ க்கு இயக்கங்கள் பல்வேறு வடிவங்களில் உலக நாடுகள் பலவற்றிலும் எழுச்சியுற்றன. இந்தியா இவ்வகையில் கட்டமைத்த செயலாற்றல் தமிழகத்தில் முற்போக்கு இலக்கிய அமைப்பு தோற்றம் பெற வழிகோலியது(முற்போக்கு கலை இலக்கிய அமைப்பாக்கம் தமிழகத்தில் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது). இலங்கையில் ஐம்பதுகள் தேசிய விழிப்புணர்வு எழுச்சியை எட்டிய சூழலில் சிங்கள இலக்கியமும் முற்போக்கு கருத்தியலை உள்வாங்கி வெளிப்பட்டபோதிலும், தமிழ் மொழிமூலக் களத்திலேயே "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" உதயமானது என்பது கவனிப்புக்குரியது. பல்கலைக்கழக மாணவராக இருந்த நிலையில் மு.எ.ச. இல் இணைந்த கைலாஸ் தொடர்ந்து தீவிர பங்களிப்பை வளங்கிய வகையில் அதன் கருத்தியல் செல்நெறிமீது அதிக தாக்கம் செலுத்துகிறவராக அமைந்தார்.
இங்கு தேசிய இலக்கிய எழுச்சி பாரதியை முன்னிறுத்தியதாக அமைந்தபோது, எமது மண்ணுக்குரிய பண்பாட்டுத் தேசியத்தை முன்னெடுத்த நாவலரையும், அனைத்துத் தளங்களிலும் முற்போக்கு உணர்வுகளை வெளிப்படுத்திய ஆன்மீக செயற்பாட்டாளரான விபுலாநந்தரையும் முன்னிலைப்படுத்தியிருந்தமை கவனிப்புக்குரியது. கைலாசின் ஆய்வியல் பன்மைத்தளத்தோடு தமிழர் சமூக-பண்பாட்டு-அரசியல் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளை வெளிப்படுத்த வாய்ப்புப் பெற்றமை இதன்பேறாகும். நாவலரின் கருத்தியலில் சாதியம் தாக்கம் செலுத்துவது அந்தக்கால நிதர்சனத்தைப் பொருத்த ஒன்றெனப் புரிந்துகொண்டு, அவர் அன்றைய மாற்றப்போக்குக்கு பங்களிப்பாளராக இருந்த முற்போக்கு ஆளுமை என்பதை காணத்தவறுகிறவர்கள், வரலாற்று வளர்ச்சிகளையும் விளங்கிக்கொள்ள இயலாதவர்கள்; தமது சமூக இருப்பை மக்கள் விடுத்தலைத் திசை மார்க்கத்துக்கு அமைவாக மாற்றியமைக்கவும் இயலாதவர்கள். கைலாசின் பார்வை வீச்சு வலுவோடு அமைந்தமையாலேயே தனது காலத்தேவையாக சாதியத் தகர்ப்பு அமைந்துள்ளமையைக் கண்டு அதற்கு அவசியமான ஆய்வு வெளிப்பாடுகளைத் தர ஏற்றதாக இருந்தது.
சாதித்தகர்ப்புப் போரட்டம் தேசியத்தின் பிரதான வடிவமாக அமைந்த அன்றைய சூழலில் தமிழினத் தேசியம் அந்த முற்போக்கு செல்நெறிக்கு எதிராக இயங்கியது; இலங்கைத் தேசியம் எனும் நாட்டுத்தேசிய வடிவத்தில் ஜனநாயக உணர்வுடைய ஆளும் சாதிப் பிரிவினர், முஸ்லிம்-சிங்கள மக்கள் என்ற பரந்துபட்ட ஐக்கியமுன்னணி கட்டியெழுப்பப் பட்டு, விரல்விட்டெண்ணக்கூடிய சாதிவெறியர்களைத் தனிப்படுத்திக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட முற்போக்கு இயக்கச் செல்நெறி பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. முற்போக்கு உணர்வோடு இவற்றை ஆதரிக்க வேண்டியிருந்த தமிழினத்தேசியத்தை ஏற்றவர்கள் தொடர்ந்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் பங்களிக்க இயலாதவர்களாய், அழகியல்வாதத்துள் அல்லது மார்க்சியத்தைக் கடப்பதில் முடங்க நேர்ந்தது(மு.தளையசிங்கம், மஹாகவி, வ.அ.இராசரத்தினம், கனகசெந்திநாதன் போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்).
மாற்றத்துக்காக நடந்த கொலைகளும் அழிவுகளும் நிறைந்த யுத்தங்களில் அல்லது அதன்போது மக்கள் நலன் பக்கம் நின்ற களப் பங்களிப்போடுதான் எமது முதல் இலக்கியமான சங்ககாலப் படைப்புகள் எனப்படும் வீரயுகப் பாடல்கள் படைக்கப்பட்டன என்பதனைத் தனது கலாநிதிப் பட்டப்பேற்றுக்கான ஆய்வேட்டில் கண்டு காட்டிய கைலாஸ், தொடர்ந்தும் அதுசார்ந்த பல்வேறு கட்டுரைகளில் அச்சிந்தனையை வளர்த்தெடுத்துத் தந்துள்ளார். பக்திப்பேரியக்கத்தில் வணிக சார்பு அரசை எதிர்த்துப் போராடி நிலப்பிரபுத்துவ அமைப்பு மாற்றத்தை வென்றெடுக்கும் சமூகமாற்ற இயங்காற்றல் தேவாரம்-திருவாசகம் என்ற இலக்கிய வடிவம் பெற்றமையை அவர் காட்டியுள்ளமை தமிழியலுக்கான மிகப்பெரும் பங்களிப்பாகும். இந்த இலக்கிய மாற்ற எழுச்சியில் அன்றைய மக்கள் இலக்கிய வடிவங்கள் உள்வாங்கி விருத்திசெய்யப்பட்டுள்ளமையை அவர் இதன்போது காட்டத்தவறவில்லை.
வரலாற்று வளர்ச்சிப்போக்கில் செவ்வியல் இலக்கியத்தை அப்படியே கையேற்பதாக அல்லாமல் தமதுகாலத்து மக்கள் இலக்கியத்தை உள்வாங்கி, புதிய பரிணமிப்புக்கு உள்ளாக்கும் படைப்பாளிகளே ஆற்றல்மிக்கவர்களாய் விளங்கிவந்தமையை இவ்வகையில் கைலாஸ் காட்டியுள்ளார். இருப்பை மாற்றிப் புதிய வரலாற்றுச் செல்நெறியை அவர்கள் தொடக்குவதற்கு அமைவாக பேசுபொருளையும் மாற்றுகிற வகையில் இலக்கிய வடிவத்திலும் மாற்றம் ஏற்படக் காரணமாவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறில் நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஏற்பட்ட அதிர்வும் புதிய மத்தியதர வர்க்கத் தோற்றமும் காரணமாக இலக்கியப் பேசுபொருளும் வடிவமும் மாற்றம் பெறவேண்டியதாயிருந்தது. நாவல் இவ்வகையில் தோன்றியது.
இன்றைய பன்மைத்துவப் பிரச்சனைகளை இலக்கியமயப்படுத்த நாவலே சிறப்பான வடிவம் என்பார் கைலாஸ். ஆயினும் முப்பதுகளில் சிறுகதை பிரதான வடிவம் ஆனது. தொடர்ந்து பாரம்பரியமாக ஆற்றலோடு இருந்த கவிதையும் அதிர்வுக்குள்ளாகிப் புதுக்கவிதை என்ற நவீனத்துவக் கோலம் பூண்டது. இது நெருக்கடிச் சூழலின் வெளிப்பாடு என்பார். காந்தியம், பெரியாரியம் என்பன மக்களை வீதிகளில் இறக்கி மாற்றத்துக்கான வரலாறு படைக்கும் போராட்டங்கள் வலுப்பட்டபோது, அவற்றை இலக்கியமயப்படுத்த விரும்பாத சாதிய-வர்க்க சக்திகளுக்கு பிரச்சனைகளைப் பெரிதும் பேசுபொருளாக்கவேண்டியில்லாத இந்த வடிவங்கள் புகலிடமாகின. இவர்கள் இயற்பண்புவாத ஆக்கங்களைத் தந்தபோது, மக்கள் இலக்கிய கர்த்தாக்கள் சமூகப் பிரச்சனைகளையும் மக்கள் போராட்டங்களையும் இலக்கியமாக்கினர். "பஞ்சும் பசியும்" நாவலைத் தந்த தொ.மு.சி. முதல், அந்தப்போக்கு அறுபதுகளில் ஈழத்தில் முனைப்புற்றபோது மேற்கிளம்பிய ஈழத்துப் படைப்பாளிகளான இளங்கீரன், செ.கணேசலிங்கன், டானியல் போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன்போது சிறுகதை, புதுக்கவிதை என்பனவும் யதார்த்தவாத வடிவில் புத்தாக்கம் பெற்றுப் பல்வேறு படைப்பாளிகளால் வெளிப்படுத்தப்பட்டன. ஆயினும் மக்கள் எதிர்கொள்ளும் முரண்கள், அவற்றைத் தீர்க்க முன்னெடுக்கவேண்டியுள்ள மார்க்கங்கள் என்ற பல்வகைப் பேசுபொருட்களை அலச ஏற்றது நாவல் என்கிற வடிவமே எனும் கைலாசின் கருத்துப் புறந்தள்ள இயலாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
முற்போக்கு இலக்கியம் தொழிலாளர், விவசாயிகள், மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோரது போராட்டங்களை மட்டும் பேசுவதாக இல்லாமல், சாதியத் தகர்ப்புப் போராட்டங்களையும் பேச முற்பட்டபோது, சாதிமுறையின் நிதர்சனங்களை வரலாற்று அடிப்படையில் ஆய்வுசெய்து வெளிப்படுத்தி எமக்கான மார்க்சியப் பிரயோக வடிவத்தை இனங்காண ஆற்றுப்படுத்தியவர் கைலாஸ். பக்திப்பேரியக்கத்துடன் வெறும் நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது எனக்கூறாமல், நிலவுடமை வர்க்க சாதியான வெள்ளாளர் ஆதிக்கம் பெற்றமையைக் கண்டுகாட்டியவர்; அந்த மேலாண்மையின் இலக்கிய வடிவமாக "பெரிய புராணம்" வெள்ளாளரான சேக்கிழாரால் தரப்பட்டமையயும், ஆதிக்க உயர் தத்துவமாக சைவ சித்தாந்தத்தை வெள்ளாளரான மெய்கண்டதேவர் தந்தமையையும் காட்டியுள்ளார். இடைக்காலத்தில் சாதிப் பிரச்சனை சமயப் பிரச்சனையாகக் காட்டப்பட்டு வரப்பட்ட போதிலும், இன்று வர்க்க-தேசியப் பிரச்சனையாகப் புரிதல் கொள்ளப்பட்டு கலை-இலக்கிய ஆக்கம் கொள்ளப்பட வேண்டும் என்பார் கைலாஸ்.
இவ்வாறு சாதித் தகர்ப்புப் போராட்டம் ஈழத்தில் அறுபதுகளில் முதன்மைப் பேசுபொருளான நிலையில் வரலாற்றுப்போக்கில் சாதியம் தோன்றி வளர்ந்து இன்றைய இருப்பை வந்தடைந்தமையை அவர் காட்டியிருந்தது போலவே, ஈழத்து வரலாற்றுச் செல்நெறியின் பிரத்தியேகப் போக்குகளையும் ஆய்வுக்குட்படுத்தி வெளிப்படுத்தியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுயந்திரப் பிரவேசம், அகராதி வெளிப்பட்டமை, விஞ்ஞானம் தமிழ் வாயிலாகப் புத்தகம் ஆனமை என்பவற்றத் தொடர்ந்து, பொதுசனத்தை நோக்கிய வசனநடை வலுப்பெற்று வந்தமை அவர் கவனிப்பில் பிரதான இடத்தை எடுத்திருந்தது. இவற்றின் பரிணமிப்பில் இருபதாம் நூற்றாண்டின் மத்திய கூறில் எழுச்சியுற்ற தேசியக் கருத்தியல் கைலாசபதியால் முன் கையெடுக்கப்பட்டமையைக் கண்டுள்ளோம்; தொடர்ந்து ஏ.ஜே.கனகரத்தினா, சிவத்தம்பி போன்றோரும் தேசிய இலக்கியக் கோட்பாடு தொடர்பில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்திருந்தனர். முற்போக்கு இலக்கிய முன்னோடியான அ.ந.கந்தசாமி இவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாடு முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டமை முக்கியத்துவமிக்க பங்களிப்பு என வலியுறுத்தியுள்ளமை கவனிப்புக்குரியது.
(இக்கட்டுரை பேராசிரியர் கைலாசபதியின் முப்பதாவது ஆண்டு நினைவு நாளை "முற்போக்கு கலை இலக்கிய மன்றம்" கொழும்பில் நீர்வைப் பொன்னையன் தலைமையில் நடாத்தியபோது சமர்ப்பிக்கப்பட்ட பேருரையின் சுருக்கமாகும். அன்றைய தினம் "முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு" எனும் ந.இரவீந்திரன் எழுதிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. முற்போக்கு கலை இலக்கிய மன்றம் வெளியிட்டுள்ள இந்நூல் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நூலின் முதல் பிரதியைத் திருமதி சர்வமங்களம் கைலாசபதி பெற்றுக்கொண்டார்).
No comments:
Post a Comment