Saturday, October 20, 2012

இங்கிருந்து எங்கே?


இங்கிருந்து எங்கே? சமகாலம் -கடைசிப் பக்கம் ஐப்பசி -1 -2012


                                                                                                                                                         -ந இரவீந்திரன் 

இன்றைய நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும், சிலரோ பலரோ ஒன்று கூடியுள்ள குழுக்களும் அமைப்புகளும் எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமலே எதையெதையோ செய்த வண்ணமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்; எங்கே போகிறோம் என்று ஒரு எடுகோள் இருந்தாலும், எங்கிருந்து-எப்படிப் பயணிக்கிறோம் என்ற கரிசனையற்ற ஓட்டம் என்பதால், இடையிலேயே எங்குபோவது என்பதையும் மாற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடிக்கு இன்று நடந்துகொண்டிருக்கிற பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டமே தலைசிறந்த எடுத்துக்காட்டு. கனக்கப் படித்த அந்தப் பேராசியர்களும் விரிவுரையாளர்களுமே எங்கிருந்து எங்கு நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல்தான் தொடங்கி இருக்கிறார்கள். தங்களது சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடங்கியவர்கள் இன்றுதான் பொதுக் கல்வியையும் கவனம்கொண்டு, கல்விக்குத் தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறார்கள். இந்த அடிப்படைக் கோரிக்கை ஆரம்பத்திலேயே அவர்களுக்குள் இருந்திருக்க இடமுண்டாயினும் இதனையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற புரிதல் அப்போது இல்லாமல் போயிற்று. தாமுண்டு தம் படாடோபமுண்டு என்ற நினைப்பு முன்னாலே வந்து கண்ணைக் கெடுத்துவிட்டது. மக்கள் பிரச்சனையின் பகுதியாகத் தங்கள் பிரச்சனையை அப்போது காணத்தவறினர்.அதனை உணர்த்தியது அரசு சார்பாளர்கள்தான்; நானும் பல்கலைக் கழகப் பேராசிரியர், லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறேன்- இந்தக் கோரிக்கையெல்லாம் தவறு, உண்மையில் பாடசாலை ஆசிரியர்களது சம்பளமே அதிகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஊடகங்களில் ஊடாடவிடப்பட்டன. பின்னரே பொதுக்கல்விக் கோரிக்கை முன்னணிக்கு வந்தது. சரி, ஆசிரியர்கள் சம்பளக் கோரிக்கையை முன்வைத்தால் இந்தக் கனவான் குரல்கள் என்ன பேசும்? எத்தனை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போரடியபோதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? அதனை முறியடிக்க அதற்கு எதிராக எதை நிறுத்தலாம் என்று அரசுக்கு ஆலோசனை தேடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.ஒருவர்க்கு எதிராக மற்றவரை நிறுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு மட்டும் உரியதல்ல; ஆதிக்கசக்திகள் அனைத்தும் கையாளும் மலினப்பட்ட தந்திரோபாயந்தான். தற்போதைக்கு எமது அக்கறை எங்கிருந்து தொடங்குகிறோம் என்ற புரிதலின்மையால் ஏற்படும் இடர்ப்பாடு பற்றியது என்பதால் அது குறித்து அலசுவோம். இங்கிருக்கிறோம் எனும் புரிதலைத் தனி நபர் கண்டுகொள்ளாதிருப்பது ஆச்சரியப்படத் தக்கதல்ல; மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடுகிறோம் என்று செயற்படுகிற அமைப்புகளேகூட பிரச்சனையின் மையம் எங்கிருக்கிறது என்ற அக்கறையற்று எதையாவது முன்வைத்துப் போராடிக்கொண்டு இருந்தால் போதும் எனக் கருதிக் கருமமாற்றிக்கொண்டு இருப்பதாகவே இன்றைய நிதர்சனம் உள்ளது. மக்கள் விடுதலைக்காக இயங்குகிறோம் என்ற அமைப்புகளேகூட இவ்வகையில் ஏனோதானோ என்றபோக்கில் செயற்படுவது இன்றைய துயரின் உச்சம் எனலாம். அவற்றின் தலைமை சக்திகள் மாறாத நிலைப்பாடுகளுக்குள் சிக்குப்பட்டுள்ளதும் புதிய மாற்றங்களைக் கண்டறிய இயலாமற் போவதற்குக் காரணமாயாகியுள்ளது. "மக்கள் சக்தியே வரலாற்றின் உந்து சக்தி" என்பவர்களும், அதன் அடிப்படை உண்மையைக் கண்டுகொள்ளாமல் தலைவர்களான தாமே வரலாற்றைப் படைப்பவர்கள் என மயங்கிவிடுவதால் தன்முனைப்பு மிகையாகி மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறவர்களாகிறார்கள். இது சிறிய கட்சிகளில் உள்ள நிலைமை மட்டுமல்ல, உலக வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த மகத்தான புரட்சிகளுக்குத் தலைமை தாங்கிய தலைவர்கள்கூட நெருக்கடியான சில சந்தர்ப்பங்களில் மக்கள் சக்திக்குமேல் தமது தலைமை ஆற்றல்மீது அதீத நம்பிக்கைகொண்டு செயற்பட்ட அனுபவங்கள் ஏற்கனவே வரலாற்றுத் தடங்களாயுள்ளன. பொதுமைப் புத்துலகம் படைப்பதில் மாபெரும் சாதனைகளை எட்டிய சோசலிச நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பல்வேறுகாரணங்களோடு தலைமையில் இருந்த இப்போக்கும் அடிப்படைக் காரணமாயிருந்தது. "படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்" என்று ஒரு சொலவடை எம்மத்தியல் உண்டு; அதனை நினைவுபடுத்துவதாகவே, மக்கள் சக்தியே வரலாற்றைப் படைக்கிறது எனச் சொல்லிக்கொண்டு தலைவர்கள் மக்களை அணிதிரட்டி வென்றெடுத்த சில சாதனைகளுக்குத் தலைமை தாங்கியதைத் தமது மாபெரும் பங்களிப்பாய் மயங்கி செயற்படுவதிலும் காண்கிறோம். கூட்டுத் தலைமை மறுக்கப்பட்டு பெரும் சாதனைகளுக்குத் தலைமை தாங்கிய தானே சரியாகச் சிந்தித்துச் செயற்படுவதாக ஒரு தலைவர் எண்ணிக் கருமமாற்றும்போது நாட்டை முன்னேற்றத் தவறி, அவரை வழிபாடு செய்தவாறு மக்கள்மீது ஆதிக்கம் புரிய எத்தனிப்பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறவராவார்.அவ்வாறு அல்லாது பல அல்லற்பாடுகளில் மக்களை ஆட்படுத்துகிற எமது தலைவர்களும் தமது 'சரியான' தலைமைப் பாத்திரம் பற்றிப் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தச் சோசலிச நாடுகளின் தலைவர்களாவது மகத்தான சாதனைகளோடு சிறிய பின்னடைவுகளுக்கும் காரணமாய்விட்டனர் என்ற விமர்சனத்துக்கு மட்டுமே ஆட்படுகின்றனர்; இவர்கள் தலைவர்கள் எனக்கொள்ளத்தக்க எந்தத் தகுதியும் அற்றவர்களாயே உள்ளனர். எங்கிருக்கிறோம் என்பதுபற்றிய புரிதல் இல்லாமல் மட்டுமல்ல, தலைமையும் சரியான அமைப்பும் இல்லாமலே எமது மக்கள் உள்ளனர். நாற்பது வருடங்களுக்கு முன்னர் பசுபதி என்ற கவிஞர் "அடிமைகளை அடிமைகளே அடிமைகொள்ளும் நாடு" என்று எமக்கான இருப்பை உணர்த்தியிருந்தார். பேரினவாதத்தால் அடிமைப்படுத்தப்பட இடமளியோம் என்கிறவர்கள் தமக்குள் அடிமைப்படும் சாதிகள், பிரதேசங்கள், இனங்கள் இருக்கவேண்டும் என அவாவுகின்றனர். ஆதிக்கம் பெற்றுள்ள பேரினவாதமும் இறைமையை பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்திடம் தாரைவார்த்து அடிமைப்பட்டேயுள்ளது.ஆக, எமது பிரச்சனை வெறும் சுற்று மதில்களுக்குள்ளேயோ பிராந்தியத்துக்குள்ளேயோ மட்டுப்பட்டதாய் இல்லை. எமது பிராந்திய மேலாதிக்கம் என்கிறவகையில் இந்தியா எம்மை அடிமைகொண்டிருப்பது வேறெதையும்விட வலிமையானது. பிரதானமாக தமிழகம் எம்மீது கொண்டிருக்கும் கருத்தியல் ஆக்கிரமிப்பு மலினப்பட்ட சினிமா-சஞ்சிகைகள் வாயிலாக மட்டுமானதாய் இல்லை; சுதந்திரம் தவறிக்கெட்டுத் தலைமையும் அற்றுள்ள எமக்கு தலைமைதாங்க முன்வரும் 'உலகத் தமிழ்த் தலைவர்கள்' அங்கிருந்து கிளம்பும் அபாயமும் மேற்கிளம்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுமதிப்பது மேலும் பன்மடங்கு நெடுக்கடிகளை எமக்கு வழங்குவதாய் அமையும். இவ்வகையில் நாம் அடிமைப்படுவது தமிழக கருத்தியல் ஆக்கிரமிப்பாளர்களால் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டதோடும் தொடர்புடையது.அந்தவகையில், எமக்கான விடுதலையின் முதல் தேவையாக பரந்துபட்ட பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பது உடனடி அவசியமாகியுள்ளது. பல்வேறு அடிமைத்தனங்களைக் கொண்டுள்ள பாரம்பரியப் பண்பாட்டைப் பேணுவதற்கானதாக அது அமையக்கூடாது; உழைப்பவர் நலனோடு ஊடாட்டம் உடைய புதிய பண்பாட்டு இயக்கமாக அது அமைய வேண்டும். அதன் தொடர் வளர்ச்சி சரியான இலக்கை வகுத்து பொருத்தமிக்க மார்க்கத்தில் ஏற்ற வேலைத்திட்டத்தோடு சரியான மூல உபாயம்-தந்திரோபாயங்களோடு முன்னேறும் போது வலிமையான தலைமையைக் கட்டமைக்க இயலும். கூட்டுத் தலைமை மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற பாணியில் அத்தகைய புதிய பண்பாட்டு இயக்கத்தை முன்னெடுப்பதற்கு அமைவாக இன்று காலம் கனிந்துள்ளது.

No comments:

Post a Comment