Monday, August 12, 2013

அனுபவப் பகிர்வு !

மீண்டும் நீண்டகாலம் உரையாடலில் ஈடுபடாதமை குறித்த வருத்தம் தெரிவிப்போடு, பேசுவதற்கு நிறையவேயுள்ள நிலையில் இந்தப் பதிவு. ஜூலை மாதம் கனடா-அமெரிக்கா பயணம் முடித்துத் திரும்பிய அனுபவப் பகிர்வை பதிவிட எண்ணியிருந்தும் இயலவில்லை. உடன் மட்டக்களப்பு சென்று மாமாங்கத்தில் இடம்பெற்ற கூத்துகளைக் கண்டதோடு, கிழக்குப் பல்கலைக் கழக கருத்தாடல் ஒன்றிலும், நண்பர் ஜெயசங்கரின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டேன்; அதுகுறித்தும் நிறையப் பேச வேண்டும். முன்னதாக இவற்றைப் பொதுமைப்படுத்தி எனக்குள் எழும் உணர்வுபற்றி.
மட்டக்களப்பில் எமது பாரம்பரியக் கூத்துக்கலையை எவ்வாறு கையாள்வது என்ற விவாதம் வலுவடைந்து வருகிறது. பல்கலைக் கழக நாடகத்துறை ஜெயசங்கர் தலைமையில் கிராமங்கள் தோறும் சென்று, அவற்றை பாதுகாத்துக் கையேற்று மீளுருவாக்கி ஏனைய பகுதிகளுக்கு எடுத்து வர, பேராசிரியர் மௌனகுரு அவற்றை ஆய்வுகூட மயப்படுத்துகையை மேற்கொள்கிறார். பின்னதை என்னால் பார்க்க இயலவில்லை. அவர்களது விவாதம் குறித்து முழுமையாக பதிவிடுவதாயின் அந்தத் தரப்பையும் அறிவது அவசியம்; அவர் பின்னர் வருமாறு அழைத்தார்.
இப்போதும் கூத்துகள் குறித்து இங்கு பேச்சில்லை(பின்னால் விரிவாக உரையாடுவோம்-அதற்கான அவசியம் உள்ளது). இருதரப்பும் வெளியே இருந்து நிதி உதவுவது வாயிலாக கூத்தினை நவீன உலகுக்கு எடுத்துவருகின்றன. இந்த வெளி நிதி என்கிற வடிவத்தில் எமது புலம் பெயர் தமிழர்(பு.பெ.த.) எவ்வகையில் உதவலாம் என்பதே இங்கு பேசித் தீர்க்கவேண்டிய விவகாரம். அது ஒரு அமர்வில் முடிவு காணவியலாத சங்கதி எனினும் இன்று தொடங்க ஏற்றதாக அமைகின்றது. அதற்கான உடனடிக் காரணம், யூலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்புத் தொடர்பில் நண்பர் ஒருவர் கூறிய கருத்தாகும். அது அரச சார்பில் நடப்பதாக கூறியோர் கருத்தையும், நிராகரிக்கவேண்டும் என்ற குரலையும் தன்னால் ஏற்கவியலவில்லை என்றார் அவர். பிரதானமாக முப்பது வருடங்கள் பேசவியலாது இருந்த சமாச்சாரங்கள் பேசப்படவேண்டும் என்பதாலேயே தான் கலந்து கொண்டதாக கூறினார்.
இருதரப்புசார்பையும் கடந்த நிலையில் தனது அவதானம் அந்தச் சந்திப்பு அரச சார்பு நிகழ்வாக இல்லை என்பதே. ஏற்பாட்டாளர்களில் ஒருதரப்பிடம் அவ்வாறான ஒரு நிலைப்பாடு இருந்திருந்தாலும்கூட அதற்கு இடமளிக்கப்படவில்லை. சுதந்திரமாக தமிழ்த் தேசியப்பிரச்சனை உட்பட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருட்களாக அமைய இயலுமாயிற்று. குறிப்பாக குடும்ப ஆதிக்கம் என்பதற்கு இடமிருக்கவில்லை. அப்படி சில தலையீடுகள் முளைவிடும்போதே சபை அதை நிராகரித்து இயல்பான ஓட்டத்தை உத்தரவாதப்படுத்தத் தடையிருக்கவில்லை.
மிகப்பிரதான அம்சம், மலையகம்-முஸ்லிம்கள்-சிங்களத்தரப்பு என்பன சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தத்தமது காத்திரமான கருத்துகளை வெளியிட இயலுமாக இருந்தது என்பதுதான் என அந்த நண்பர் வலியுறுத்தியிருந்தார். யாழ்ப்பாண மையவாதத்தைத் தகர்த்துக்கொண்டு, அனைத்துத் தேசிய இனங்களது உரிமைகளைச் சமத்துவ நிலையில் அணுக ஏற்ற களமாக அமைந்தமை கவனிப்புக்குரியது.
இன்னொரு விடயமும் வலியுறுத்தப்பட்டது; பு.பெ.த.சமூகம் எமது விவகாரங்களில் தலையிடாதிருப்பது அவசியம் என்பதே அது. புலப்பெயர்வில் வளமான வாழ்வைப் பெறும் ஒருதரப்பு இன்னமும் இங்கே பிச்சைக்காரன் புண்போல பிரச்சனையை வைத்துக்கொள்ள முயல்வதற்கு எதிரான குரலே அது. மற்றப்படி, பிரச்சனைத் தீர்வுக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்ற தேடலோடு இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களை அவமானப்படுத்துவது அவரது நோக்கமில்லை. தலையீட்டை நிறுத்திக்கொண்டு எமது உரையாடலுக்கு இடமளிக்கப்பட்டது எனத் திருப்தி தெரிவிப்பதில் இந்த வேறுபடுத்தலைக் காண இயலும். இது முக்கியத்துவமுள்ளது.
பு.பெ.த.வின் இலக்கியச் சந்திப்பு மேற்கில் சுதந்திரமாக நடந்துவந்த ஒன்று. அதனை இங்கே கொண்டுவரும்போது தவிர்க்கவியலாத கேள்விகள் எழுந்தன. புலம்பெயர்ந்த எமது சந்திப்பை ஏன் புலத்திலேயே நிகழ்த்தவேண்டும்? தவிர, இங்கு இயல்பான வாழ்வு சாத்தியம் எனக் காட்டும் முயற்சியா இது? இவற்றுக்கான பதில்கள் இங்கே கிடைத்துள்ளன. இங்கே எமது உரிமைகளை வென்றெடுக்க ஒவ்வொரு தரப்பும் முயன்றவாறே இயல்பான வாழ்வில் இருந்துகொண்டுதான் உள்ளோம். புலப்பெயர்வாளர் ஏன் இங்கே சந்திக்க வேண்டும் என்பதற்கும் இதிலே பதில் உள்ளது. நாம் எமக்கான வாழ்வைக் கட்டமைப்பதற்கு குறுக்கீடு விழைக்காமல் எம்மை விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இந்தச் சந்திப்பு உதவுகிறது. எமது வாழ்க்கைப் போராட்டத்துக்கு இடையூறின்றி உதவ இயன்றதை அவர்கள் செய்ய இயலுமே அன்றி, நாம் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்த முடிவுகளையும் எம்மீது திணிக்க முயலக்கூடாது.
கனடா தென்னையில் இந்த மாட்டை ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி எழலாம். அங்கே இப்போது ஒரு சிறுபான்மைச் சமூகமாக தம்மை நிலைநிறுத்திப் பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுள்ள பு.பெ.த. சமூகம் இங்குள்ள தொப்பூழ்கொடி உறவுகளுக்கு என்ன செய்யலாம் என்ற கேள்விகளோடு உள்ளது. "தாய் வீடு" இதழுக்கு வழங்கிய செவ்வியில், உங்கள் உதவியில் 10 வீதம் மட்டுமே உங்கள் விருப்பத்தீர்வுக்கு வந்தடைகிறது, பெரும்பகுதி கனடா பெருச்சாளிகளுக்கும் இங்குள்ள பெருச்சாளிகளுக்குமே போய்ச் சேர்கிறது என்றேன். சரியான வழியில் 20 வீதத்தை இங்கு அனுப்பிக்கொண்டு, மீதத்தை அங்கே கனடாத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு விருத்திக்கு அவசியமான பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்றேன். அதுதான் கோயில் கொண்டாட்டங்களும், சினிமா நாயக-நாயகி ஆட்டங்களும் அங்கே களைகட்டுகிறதே என்கிறீர்களா; அதுதான் பிரச்சனை. எங்களை இன்னும் மோசமாக பண்பாட்டு ஆக்கிரமிப்பில் சுரண்டும் கூட்டத்தின் எடுபிடிகளாய் இருந்தவாறு இங்கு குட்டையைக் குழப்பும் கபடகாரச் சினிமா-கோயில் பண்பாட்டு மோகங்களிலிருந்து மீண்டு சரியான பண்பாட்டைக் கட்டமைக்கும் தேவைக்கு அங்கேயும் பெரும்பகுதி பொருளாதாரம் வேண்டியுள்ளது. மிகக் கடும் உழைப்பு வாயிலாகவே தமக்கான வளமான வாழ்வை அவர்கள் வென்றிருக்கிறார்கள். அதனை அவமாவதற்கு இடமளிக்காத புதிய பண்பாட்டைக் கட்டமைக்க அவர்களது உழைப்பின் ஒருபகுதி செலவிடப்பட இயலும்.
இதை அங்கே நான் சொன்னது சரிதானா என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டிருந்தது. சரிதான் என்பதை மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் உணர்த்திநின்றன. கிராமங்களில் கூத்து மக்களால் அவர்களுக்கான இயல்பான வாழ்வின் தேவையின் வெளிப்பாடு; 'வெளியே' இருந்து செல்லும் நிதிக்கு ஒரு வரையறை உள்ளது. அவ்வாறே பு.பெ.த. சமூகம் 20 வீதப் பங்களிப்பின் ஒருபகுதியாக 41வது இலக்கியச் சந்திப்பை யாழ்மண்ணில் ஆரோக்கியமாக நடத்திச் சென்றிருக்கிறார்கள்(புலப்பெயர்வில் புதுவாழ்வு கண்ட முதன்மைக் களத்துக்கு சென்றதன் காரணமாக என்னால் இதில் கலந்துகொள்ள இயலாமல் போனது வருத்தமே). இன்னும் நாலைந்து சந்திப்புகளை உங்களது தேசங்களில் நடத்தியபின் மீண்டும் இங்கே வாருங்கள். வடக்கில் சந்தித்தோம், இனி கிழக்கு-மலையகம்-தெற்கு-மேற்கு என இலங்கை மண்ணின் தமிழ் பேசும் பல்வேறு களங்களிலுமிருந்து உரையாட அவசியமுள்ளது. நானும் உங்கள் மண்ணில்(கனடாவில்) கற்றுக்கொண்டதைப் பதிவிடுவேன். தொடர்வோம்.

No comments:

Post a Comment