Monday, September 23, 2024

மார்க்சியம் செயலற்றுப் போயிருப்பது மார்க்சிடமிருந்த அடிப்படைத் தவறினாலேதான்

மார்க்சியம் செயலற்றுப் போயிருப்பது மார்க்சிடமிருந்த அடிப்படைத் தவறினாலேதான் அண்மையில் உலகுக்கான பெரும் நம்பிக்கை ஒளி, டில்லி விவசாயிகள் போராட்டம் ஒரு வருடத்தின் மேல் நீடித்து உறுதிமிக்க வெற்றியை ஈட்டியதுதான்! ஆயினும், அர்ப்பணிப்புமிக்க அந்தப் போராட்டம் மக்கள் விடுதலைக்கான அடித்தளமாக அமைய வாய்ப்பில்லை என்ற துயரத்தைக் கூடவே வெளிப்படுத்தும் சமிக்ஞைகளும் வெளிப்பட்டபடி! அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தோழர் ‘வர்க்கப் போராட்டத்தின் வெற்றியை விவசாயிகளின் இந்தப் போராட்ட வரலாறு மீண்டும் நிரூபித்திருக்கிறது’ என்று உறுதி கூறினார். ஆக, வர்க்கப் புரட்சி என்ற கானல் நீருக்கு அந்த உருக்கு உறுதிமிக்க போராட்ட சாதனை காவுகொடுக்கப்பட்டு வீண்டிக்கப்படும் நிலை! இன்றைய உலகின் சமூக மாற்ற விசை முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கானது என்ற எடுகோள் காரணமாகவே விவசாயிகள் போராட்டம் குறித்த இந்த - ‘வர்க்கப் போராட்ட வெற்றி’ என்ற பிரகடனம்! காப்பிரேட் மூலதனத்தின் மேலாதிக்கத்தை முறியடித்த மக்கள் போராட்டம் அது; விவசாயிகள் களமாடிய போதிலும் பரந்துபட்ட மக்கள் சக்தியின் ஆதரவுதான் அந்த வெற்றியை உறுதிப்படுத்தியது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருமே குறித்தவொரு ‘விவசாயி வர்க்கப்’ பிரிவினரல்ல - விவசாயம் சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் வேறுபட்ட வர்க்கப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்! காலனித்துவத்திலிருந்து ‘சுதந்திரம்’ பெற்ற கையுடன் எங்கள் நாடுகளில் முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டமே முதன்மை முரண்பாடு என மார்க்சியர்கள் கருத வேண்டி வந்தது ஏன்? நிதர்சனம் வலியுறுத்திய போது காலனித்துவம் முற்றாக நீங்கவில்லை, நவ காலனித்துவ நடைமுறையில் மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு ஆட்பட்டபடியே நிலைமை நீடிக்கிறது எனச் சொல்லப்பட்டதே - அப்போதும் ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றாகத் தகர்க்கும் விடுதலைத் தேசிய முன்னெடுப்புக்கு உரிய பிரதான முரண்பாடு கவனம்பெறாமல் போனது ஏன்? மார்க்சிடம் அடிப்படைத் தவறு இருந்தது! காலனி நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு ஆதி மூலதனத் திரட்சி ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டிய போதிலும் முதலாளித்துவ - பாட்டாளி வர்க்க உற்பத்தி உறவு சார்ந்த மூலதன அபகரிப்புக் குறித்த ஆய்வுக்கே அதிக அழுத்தத்தை மார்க்ஸ் கொடுத்தார். வரலாறு அவரது எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்துக்கொண்டு ஏகாதிபத்தியத்துடன் மோதும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் புரட்சிக்கான சுயநிர்ணயக் கோட்பாட்டை முன்னிறுத்திய லெனினிசத்தின் வாயிலாகவே சோசலிசத்தை வென்றெடுக்க இயலுமாக இருந்தது! ஆயினும் லெனினுங்கூட ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலையால் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிசப் புரட்சி சாத்தியம் என்ற கனவுடனேயே இருந்தார். வரலாற்றுப் போக்கின் அடியந்தமான மாற்றத்தை (வர்க்கப் புரட்சி வாயிலாக சமூக மாற்றத்துக்கான வாய்ப்பு முற்றுப்பெற்று முழுச்சமூக சக்திகளது மோதல்கள் ஊடாக வரலாற்று இயக்கம் நடந்தேறும் செல்நெறி முதன்மைக்கு உரிய இடத்தைப் பெறத் தொடங்குகிறது என்பதை) லெனினும் கண்டு காட்டத் தவறிவிட்டார். தேசிய விடுதலைப் புரட்சிக்கான முக்கியத்துவத்தை லெனின் வலியுறுத்திய வழிப்படுத்தலுடன் மேலெழுந்த மாஓ சேதுங் சிந்தனையும் வர்க்கப் போராட்டத்துக்கு அப்பாலான முழுச் சமூக சக்திகளது மோதலின் வரலாற்று இயக்கத்துக்கான கோட்பாட்டு உருவாக்கத்துக்கு முயற்சிக்கவில்லை! வர்க்கப் போராட்டத்துக்கு அப்பால் உலக வரலாற்று இயக்கத்துக்கு முழுச் சமூக சக்திகள் இடையேயான மோதல்களும் காரணம் என்பது சார்ந்த கோட்பாட்டை ஏன் முன்வைக்க இயலவில்லை? மார்க்சிடம் தவறிருந்தது! இதைச் சொன்னால் மார்க்சிய விரோதம் என எந்த வழிபாட்டாளர்கள் கிளம்பினாலும் அஞ்ச வேண்டியதில்லை. பெரியாரிய, அம்பேத்கரிய வழிபாடு போன்ற ‘மார்க்சியமதம்’ ஒன்று மேலோங்கி இருப்பதே மக்கள் விடுதலை முன்னோக்கிச் செல்ல இடந்தராத இடர்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சின் சில விடயங்களை நிராகரித்து, ஏற்பட்டு வந்துள்ள வரலாற்று மாற்றப் போக்குக்கு அமைவான வளர்ச்சி எட்டப்பட்டதன் காரணமாகவே மார்க்சிய-லெனினியம் அன்றைய உலகுக்கு வழிகாட்டும் நெறியாக வந்தமைய முடிந்தது! வர்க்கப் போராட்டப் பாராயணத்தைக் கைவிட்டு, முழுச் சமூக சக்திக்கான திணை அரசியல் மார்க்சியத்தை வந்தடைய மார்க்சின் ஆய்வு நெறி தடையல்ல; அத்தகைய மாற்றத்துக்கான முறையியலாக மார்க்சியம் அமைந்தமையாலேயே லெனினிஸம்-மாஓ சேதுங் சிந்தனை என்பன வரலாற்றுச் சாதனைகளாக இயலுமாயின! இன்றைய உலகுக்குத் தலைமை தாங்க இயலாத நெருக்கடி மார்க்சியத்துக்கானது அல்ல! மார்க்சியர்கள் பக்தி நெறிக்கு ஆட்பட்டு, வரலாற்று வரம்பு மார்க்சின் கருத்தில் ஏற்படுத்தி இருந்த எல்லையைத் தகர்க்க இயலாமல் முடங்கிப்போகிறவர்களுக்கு உரியது இத்தவறு! இயங்கியல் அணுகுமுறையுடன் வரலாற்று பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தை வழங்கும் மார்க்சியத்தைக் கையேற்று, மார்க்சிடம் ஏற்பட்ட தவறைக் களைந்து மார்க்சிய-லெனினியத்தை வளர்த்தெடுப்போம்!

No comments:

Post a Comment