Monday, September 23, 2024
விடுதலைத் தேசியச் சோசலிச நிர்மாணமும் புதிய ஜனநாயகமும்
விடுதலைத் தேசியச்
சோசலிச நிர்மாணமும்
புதிய ஜனநாயகமும்
சோசலிச நிர்மாணக் கட்டமென வந்த போது ‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்’ என்பதைக் கடந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதனை மாஓ சேதுங்கும் கையேற்றார்; தேசிய விடுதலைப் பணியை முன்னெடுத்த சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி, சீனப் புரட்சிக்கான வடிவம் ‘புதிய ஜனநாயக’ வகைப்பட்டது எனக் கண்டு தெளிந்து சரியான வழியில் முன்னேறக் கோட்பாட்டு உருவாக்கம் செய்த மாஓ வும் சோசலிச நிர்மாணம் என வரும்போது இவ்வகைத் தவறுக்கு ஆளானார் என்று பேசி வருகிறோம்!
மாஓ சேதுங்கைப் பக்தி விசுவாசத்துடன் அணுகும் ஒரு தரப்பினருக்கு இதனை ஏற்க முடிவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ‘மாஓ சொன்ன ஒவ்வொன்றும் சரியானவை, அவர் செயற்படுத்திய வழிமுறை அப்படியே பின்பற்றப்பட வேண்டியது’!
மார்க்சிய விரோதமான இந்த நிலைப்பாடு மாஓ சேதுங்குக்கு உடன்பாடற்றது. சோசலிச நிர்மாணக் காலகட்டத்துக்கான தனது படைப்புகளை ஐந்தாவது தொகுதியாக வெளியிடுவதனை அவர் உயிருடன் இருந்தவரை அனுமதிக்கவில்லை; பரீட்சார்த்தமாக உள்ள அவை சரியானவை என நடைமுறை வாயிலாகக் கண்டறியப்படாத வரை அவற்றை வெளியிட வேண்டாம் என வலியுறுத்தி வந்தார் (இந்த விடயத்தை தோழர் சிறீமனோகரன் எடுத்துக்கூறி வந்தார்).
சமூக மாற்றத்தைப் பாட்டாளி வர்க்கம் சாதித்துச் சமத்துவம் நிலைநாட்டப்படும் என்ற எடுகோள் காரணமாகவே சோசலிச நிர்மாணக் கட்டத்தைச் சீனா எட்டிய போது பாட்டாளி வர்க்கச் சிந்தனையைக் கையேற்க வேண்டி வந்தது. விடுதலைத் தேசியத்தின் சோசலிச முன்னெடுப்பாக வரலாற்று மாற்றம் ஏற்பட்டமை இன்றளவும் பல மார்க்சியர்களால் புரிதல் கொள்ளப்படாத நிலையில் எழுபதாம் ஆண்டுகளில் மாஓ ஏன் முன்னுணரத் தவறினார் எனக் கேட்க இயலாது.
நடைமுறை நிதர்சனங்களே புதிய கோட்பாட்டு உருவாக்கத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கின்றன. சீனாவினுள் எதிர் போராட்டங்கள் வலுப்பட்டு மாஓவுக்கு எதிரான இளைஞர் அலை எழுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் வலுப்பட்ட பொழுது ‘பாட்டாளி வர்க்க நிலைப்பட்ட சோசலிச முன்னெடுப்பைக்’ கைவிட்டு ‘விடுதலைத் தேசியச் சோசலிச நிர்மாண முறைமை’ கையேற்கப்பட்ட பொழுது சந்தைச் சோசலிசம் என்ற வடிவம் மேலெழுந்து வரலாயிற்று. இந்த மாற்றம் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் சோவியத் யூனியன் போலச் சீனாவும் வீழ்ச்சி அடைந்து, சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியும் கலைக்கப்பட்டு வேறொரு வரலாற்று ஓட்டம் நேர்ந்திருக்கும்.
இன்றைய சீனம் சோசலிச நிர்மாணம் என வரும்போது ஐரோப்பிய நிலைப்பட்ட மார்க்சிஸ-லெனினிஸத்தைப் பிரயோகிப்பது அல்ல; அவற்றின் வளர்ச்சியான மாஓ சேதுங் சிந்தனையையே விருத்தி செய்து பிரயோகிக்கும் அவசியம் ஏற்பட்டு உள்ளது என்ற தெளிவுடன் இயங்குவதனாலேயே சீன மக்களுக்கான தலைமையை இன்னமும் கொம்யூனிஸ்ட் கட்சியால் தக்க வைக்க இயலுமாகி உள்ளது!
மாறிய வரலாற்றுச் செல்நெறியைக் கவனத்தில் எடுத்து,
அதற்கமைவான விருத்தி பெற்ற கோட்பாட்டு உருவாக்கத்தைக் கண்டறிந்து இயங்காத வரை
எமது நாடுகளில் கொம்யூனிஸ்ட்டுகளால் தலைமைத்துவ வகிபாகத்தைக் கையேற்க இயலாது!
சில வருடங்களின் முன்னர் தமிழகத்தில் பிரவீன் என்ற இளந்தோழர் ஒரு கேள்வியைக் கேட்டார்: “கொம்யூனிஸ்ட் அணிகளில் மாஓயிஸ்ட்டுகள், மக்கள் விடுதலையை வென்றெடுத்து - முதலில் புதிய ஜனநாயக கட்டத்தை நிறைவேற்றிப் பின்னர் சோசலிசத்துக்கு வளர்த்து எடுத்தாக வேண்டும் என்கிறார்களே, இது எந்தவகையில் சரி?
‘மாஓ புதிய ஜனநாயகம் முதற்படி எனச் சொன்ன அன்றைய சீன நிலை இன்று எமது நாடுகளில் உள்ளதா? ஏழு தசாப்தங்களாக ஒருவகை ஜனநாயகம் நிலவும் எங்களுடைய நாடுகளில் இன்னொரு ‘புதிய’ ஜனநாயகம் என்பதை எப்படி வியாக்கியானப்படுத்துவது?”
இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சிகளில் ஏனைய இரண்டும்,
நிலவும் ஜனநாயகத்துக்கு மாற்றாக ‘பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில்
- தேசிய ஜனநாயகத்தை
- மக்கள் ஜனநாயகத்தை
பிரயோகித்த பின்னர் சோசலிசக் கட்டத்தை அடைவது’
எனும் வேலைத்திட்டங்களைக் கொண்டுள்ளன.
இவையனைத்தும் வர்க்க அரசியல் செயலொழுங்கைக் கவனங்கொள்ளும் வியாதிக்கு உரியன!
வரலாற்றுப் போக்கின் மாற்றத்தைக் கவனத்தில் எடுப்போமாயின்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு உரிய சோசலிச நிர்மாணம் சாத்தியமற்றது என்ற தெளிவைப் பெறுவோம்!
விடுதலைத் தேசியத்தின் சோசலிச நிர்மாணத்துக்கானதாக ‘புதிய ஜனநாயகம்’ (புதிதை - தேசிய/ மக்கள் என அழைக்கும் குடுமிப் பிடிச் சண்டை இனியும் அவசியமில்லை; குடுமி போய் மொட்டந்தலையாகி நிற்பதைக் கவனங்கொள்வோம்) என்ற அரசியல் வடிவம் உள்ளது எனும் புரிதல் அவசியம் (சமத்துவ விரோதிகளுக்கு எதிராக ‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்’ அவசியப்படலாம்!
மார்க்சியத்தை ஏகாதிபத்திய சகாப்தத்துக்கு உரிய வகையில் லெனின் வளர்த்தெடுத்தது போல
திணை அரசியல் செயலொழுங்குக்கு உரியதாக மாஓ சேதுங் சிந்தனையை விருத்தி செய்ய வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment