Monday, September 23, 2024

இலங்கைத் திணை அரசியல் : ஏகாதிபத்திய எதிர்ப்பு

இலங்கைத் திணை அரசியல் : 5. ஏகாதிபத்திய எதிர்ப்பு ----------------‐---------------------------- அணிதிரட்டல்! ---------------------------- இன்று எரியும் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் முன்னெடுப்பைப் பற்றிப் பேசாமல் எங்கோ உள்ள விடயங்களைப் பேச வேண்டுமா என்ற கேள்வி எழலாம். பௌத்த - சிங்களப் பேரின வாத மேலாதிக்கம் வடக்கு - கிழக்கு மண்ணைத் தொல்லியல் ஆய்வு என்ற பேரில் ஆக்கிரமித்து வருகிறது; முஸ்லிம் மக்கள்மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் வளர்ந்து வரும் அதேவேளை கொரோனா மரண உடல்களைக் கட்டாய எரிப்பு என்ற பெயரில் அவர்களது மத நம்பிக்கைக்கு விரோதமாக அரசு நடப்பது என்ற விவகாரங்கள் தடுக்கப்படுவதற்கான பேசு பொருளை விட்டு இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிதிரட்டல் பற்றி அக்கறை கொள்ள என்ன அவசியம் இருக்கு? சிறு தேசிய இனங்கள் மீது ஒடுக்கு முறையை வளர்த்து சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு புறக்கணிக்கத்தக்கது அல்ல. பௌத்த சிங்கள மக்களுக்கு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஒரேயொரு புண்ணிய பூமியில் பிற இனத்தவர்கள் வேற்று மண்ணிலிருந்து வந்து குடியேறி இருந்துகொண்டு அட்டூழியம் புரிகிறார்கள், அவர்களது கொட்டத்தை அடக்கிச் சிங்கள மக்களுக்கு அரசு சுபீட்சத்தைத் தர முற்படுகிறது என்று காட்டும் முயற்சி இருக்கவே செய்கிறது! அதேவேளை சிங்கள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வக்கற்றுள்ள இந்த அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் குரல் கொடுக்கும் நிலையும் தொடங்கி உள்ளது. அந்த நெருக்கடி வலுத்தால் மேலும் இனவாத த்தைச் சரணடையும் நிலை அரசுத்தரப்புக்கு தேவைப்படத்தான் செய்யும். சிங்கள மக்கள் தமது கவனத்தைத் திசை திருப்ப அரசு முயற்சிப்பதை உணர்ந்து ஏனைய தேசிய இனங்களது நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து எங்களோடு ஒன்றுபட்டுப் போராட முன்வராமல் இருப்பது ஏன்? இங்கேதான் தொல்லியல் இடங்களை வடக்கு - கிழக்கில் தோண்டும் அவதிக்கு அரசு அதீத முக்கியத்துவத்தை இப்போது கொடுப்பதில் உள்ள சூட்சும ம் அடங்கி உள்ளது. இன்று ஜெனீவாவில் அரசுக்கு எதிராக, குறிப்பாக சிறு தேசிய இனங்களை ஒடுக்குவது (ஏற்கனவே இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை என்ற பிரச்சினையும் இருப்பது) என்ற சுருக்குக் கயிறு நெருக்குகிற நேரத்தில் எந்த அசூசையும் இல்லாமல் இவர்கள் இப்படி வீராவேசமாக முனைப்புக்காட்டுவது முட்டாள்தனமாக அவர்களுக்குப் படவில்லையா?
தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து ஒரு நாடு அதனது வரலாற்றை வெளிக்கொணர முயற்சிப்பதை உலகம் எதிர்க்காது என்ற துணிச்சல் அவர்களுக்கு. நியாயமான வரலாற்றுத் தடங்களைக் கண்டறிவதைத் தமிழ் இனவாத அரசியல் சக்திகள் தடுக்கின்றன எனக்காட்ட இயலுமாக இருப்பதால் தமிழருக்கு எதிராக சிங்கள மக்களைத் திசை திருப்ப இயலுமென்ற வாய்ப்பு அரசுக்கு! சூலம் வழிபடப்பட்ட கோயிலை அகற்றி அங்கே புத்தரை வைத்ததுடன் தாமே புதைத்த புத்தரை எடுக்கப் போகிறார்கள், அதைக்காட்டி முன்னர் பௌத்தம் இருந்த இடம் இதுவெனக் காட்ட முயல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு குருந்தூர் மலையில். இந்த விவகாரத்தை இவ்வகையில் அரசு கையாண்டதில் பாரதூரமான தவறுகள் உள்ளன. பலகாலமாக வழிபாட்டில் இருந்த இடத்தை அகற்றித் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள முனைவது தவறானது. அதேவேளை தொல்லியல் ஆய்வில் பௌத்த அடையாளங்கள் வெளிப்படாது, அப்படி வந்தால் தாமே புதைத்து வைத்து எடுப்பதாக இருக்கும் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்காது. நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தொல்லியல் ஆய்வை அரசு மேற்கொள்ள அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. குருந்தூர் மலையிலேயோ வன்னிப் பிராந்தியத்திலோ ஆயிரம் வருடங்களுக்கு முந்திய பௌத்த அடையாளங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே வல்லிபுரம், கந்தரோடை போன்ற இடங்களில் பௌத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வன்னியில் முன்னர் வெளிப்படையாகவே தெரிந்த புராதன பௌத்த எச்சங்கள் மக்களாலேயே அழிக்கப்பட்டது பற்றிய கதைகள் உண்டு, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களது அடாவடித்தனம் நேரும் என்ற அச்சத்தில் மக்கள் அப்படி அழித்தனர். இவ்வாறு புராதன பௌத்த வழிபாடு இங்கு இருந்ததை வைத்து ஆக்கிரமிக்கப்படுவதனை எதிர்ப்பது அவசியம். அதேவேளை முன்னர் பௌத்தம் வடக்கில் இருந்ததை ஏன் மறைக்க வேண்டும்? தமிழர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பௌத்தர்களாக இருந்திருக்கிறோம் என்பது வரலாறல்லவா? தமிழரிடம் மகாயான பௌத்தம் அதிகம் இருந்ததால் சிங்களவரிடையே வெற்றி பெற்றிருந்த தேரவாத பௌத்தத்திக்குரிய மஹாவம்சம் ‘சிங்கள பௌத்தர்களுக்கு’ ஆசீர்வதிக்கப்பட்ட பூமி பற்றிப் பேச வேண்டி வந்தது. தமிழ் பௌத்தத்திக்கு “மணிமேகலை” காப்பியம் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் காப்பியத்தில் எமது மண்ணும் பேசுபொருளாக இருந்தது. இங்கு தமிழ் பௌத்தம் 13 ம் நூற்றாண்டு வரை இருந்ததனை பேராசிரியர் இந்திரபாலா காட்டியுள்ளார். ஆக, குருந்தூர் மலையில் புத்தர் முன்னர் இருந்தால் அச்சப்படத் தேவையில்லை; அவர் தமிழர் கடவுளாக இருந்தார் என்பதை மறைக்க ‘மேன்மைகொள் சைவ நீதி’ தயங்கவும் வேண்டியதில்லை. பிரச்சினை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபடுவதற்கு எதிராக உள்ள இத்தகைய விடயங்களை மக்கள் விரோத சக்திகள் ஏன் கையில் எடுக்கிறார்கள் என்பதை நாம் கவனங்கொள்ளாது விடுவதில் இருக்கிறது. அவர்கள் செய்யப்பட வேண்டிய வேலைகளை விடுத்து வேண்டாத வேலைகளைக் கையில் எடுப்பதில் அவர்களுக்கு ஆதாயம் இருக்கு. எது செய்யப்பட வேண்டும் எனக் காலமறிந்து அவற்றைக் கையிலெடுக்க வேண்டிய பொறுப்பு மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகளுக்கு உள்ளதல்லவா? தொடர்ந்து பேசுவோம்

No comments:

Post a Comment