Wednesday, September 11, 2024

விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமைக்கான கருத்தியல்: ஆன்மீக நாத்திகம்

 இந்த வையகத்துக்குத் தமிழ் வாழ்வியல் வழங்கிய தனித்துவப் பங்களிப்பான திணை (முழுச் சமூக சக்தி) அரசியல் செல்நெறிக்கான ஏழாவது பதிவு மே மாதம் 8 ம் திகதி இடம்பெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் அடுத்த பதிவு இது(இடையிட்ட வேலைகள் இத் தாமதத்தை ஏற்படுத்திவிட்டன).

வீறுடன் வரலாறு படைத்து வந்ததன் பேறாக வர்க்க அரசியல் இயங்காற்றலுக்கு அப்பால் முழுச் சமூக சக்திகளான சாதி, தேசம் (திணைகள்) என்பவற்றின் இயங்கு முறைமைக்கான தெளிவைப் பெறத் தமிழக வரலாற்றுச் செல்நெறியைப் படித்தாக வேண்டும் எனப் பார்த்து வந்தோம்!
அத்தகைய வரலாறு படைக்கும் ஆற்றல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்னர் கை நழுவிப்போன காரணங்களை ஏழாவது பதிவு வெளிப்படுத்தி இருந்தது.
மேலாதிக்க ஒடுக்கு முறையில் சுகித்து மகிழ முனைந்த வாழ்வியலில் மூழ்கத் தொடங்கியதும் வரலாறு படைக்கும் ஆற்றல் இழப்புக்காளானது.
ஆங்கில மேலாதிக்கத்தின் கீழ் சுதந்திரம் இழந்த சுரண்டும் கும்பலும் அவமானங்களைச் சந்தித்த போது விடுதலைத் தேசிய வரலாறு படைக்கும் முனைப்புக்கு உத்வேகமூட்ட வேண்டிய நிர்ப்பந்தம்!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் மக்கள் எழுச்சிக்கு அறைகூவல் விடுத்துப் போராடும் சக்திகள் களமாட அவசியப்பட்ட செயல் திட்ட வடிவங்களை முன்னிறுத்தும் தேவை வலுப்பட்டு வந்தது!
அந்நிய ஆதிக்கத்தைத் தகர்த்தல், சாதி பேதங்களைக் களைந்து எறிதல், பெண் விடுதலை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவத்தை வென்றெடுத்தல் என்ற முழுமைப்பட்ட விடுதலைத் தேசியக் கருத்தியல் தமிழகத்தில் இருந்து மட்டுமே வெளிப்பட இயலுமாயிற்று!
திணை அரசியல் இயக்குவிசை ஆறு நூற்றாண்டுகள் (14 - 19 ம் நூற்றாண்டுகள்) செயல் வேகம் அற்றதாகித் தமிழகம் வீழ்ந்துபட்டுப் போயினும், முன்னரிருந்து இயங்கி வந்த சிந்தனை முறையின் வீச்சுக் காரணமாக பாரதியின் ஆன்மீக நாத்திகம் எனும் விடுதலைத் தேசியத்துக்கான கருத்தியல் மேற்கிளம்பி வர முடிந்தது!

கடவுள் இந்த உலக இன்ப, துன்பங்களின் காரணியல்ல; மனிதச் செயல்களின் (சுரண்டல் அமைப்பின்) பேறான ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்துச் சமத்துவ சமூகத்தைப் படைப்பது மனித ஆற்றலுக்கு உட்பட்ட விவகாரம். கடவுளென ஒரு சக்தி இல்லையென்ற புரிதலைப் பெற்றுக்கொண்ட செயல் வீரர் ஒருவர், கடவுளை நம்பும் மக்களைச் செயல் வேகங்கொள்ளத் தூண்டுவதற்கு முனையும் போது நாத்திக வாதத்தைத் தவிர்த்து மக்களின் ஆன்மீக மொழியில் உரையாடியாக வேண்டும். அதற்காக ஆன்மீக வாத முன்னெடுப்புகளுக்கு ஆட்பட அவசியமில்லை!
பாரதி ஆன்மீக வாதி அல்ல!
ஷெல்லிதாசன் என்று நாத்திக வாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியவர், மக்கள் கருத்தை உருவாக்க முனைந்த போது நாத்திக வாத ‘வளர்ச்சியை’ வெளிப்படுத்தும் விடலைப்பருவ மனோபாவத்தை விட்டொழித்தவர்!
ஆன்மீக நாத்திக வாதியும் அல்ல; ஆன்மீக நாத்திகச் சிந்தனை முறையை முன்னிறுத்தி இயங்கும் செயற்பாட்டாளர்!
பின்னரான வரலாற்று ஓட்டங்களைக் காணும்போது பாரதியின் ஆன்மீக நாத்திக உலக நோக்கின் அவசியம் ஏன் வலியுறுத்தப்பட வேண்டும் என்ற புரிதலைப் பெற இயலுமாக இருக்கும்!
தொடர்வோம்!!
ந.இரவீந்திரன்

No comments:

Post a Comment