Saturday, September 13, 2014

சாதியம் - நாத்திகம் - நவ பிராமணியம்.

       சாதியம்
       நாத்திகம்
       நவ-பிராமணியம்      




   
    மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கிய களத்தில் எவரெல்லாம் வீழ்த்தப்பட்டனர் என எண்ணியிருந்தோமோ அவரெல்லாம் மீண்டெழுந்து ஆர்ப்பரிக்கக் கண்டால் எப்படி உணர்வோம்? அப்படியொரு இரண்டக நிலை இன்று. தமிழகத்தில் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து நாத்திகவாதம் வீறுடன் செயற்பட்டிருந்தது. இன்னொரு தளத்தில் கூர்மையாக முன்னெடுக்கப்பட்ட வர்க்கப்போராட்ட அணியினர் நாத்திகவாதிகளோடு பல அம்சங்களில் முரண்பட்ட போதிலும் நாத்திகக் கோட்பாட்டை பிரசாரம் செய்பவர்களாயிருந்தனர், இந்தியத் தேசியத்தை முன்னிறுத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிர்க்கட்சியாக இருந்த கொம்யூனிஸ்ட்டுகள் அடுத்து அதிகாரத்துக்கு வந்து மதவாதப் போலிகளை வீழ்த்தி உழைப்பாளர் ஆட்சியை மலர்விப்பர் என நம்ப ஏதுக்கள் பல இருந்தன.
அவ்வாறு உழைப்பு அதிகார பீடமேற இயலாமற் போனாலும் மத ஏமாற்றுக் கும்பலை வீழ்த்தித் தள்ளிவிடுகிறோம் என்ற நாத்திகவாதத் திராவிடக் கட்சிகளே அறுபதுகளின் கடைக்கூறிலிருந்து இன்றுவரை ஆட்சியில் இருக்கின்றன. அதன் பலவீனங்களை உட்செரித்தபடி இந்துத்துவ சக்திகள் வேட்டி சால்வையுடன் மேற்கிளம்பி வருகின்றனர். நாத்திகவாதம் பெரும் முழக்கத்துடன் ஏறுதசையிலிருந்த அறுபது-எழுபதுகளிலேயே கிருபானந்தவாரியார் முதல் பித்துக்குளி முருகதாஸ் வரை மற்றொரு பக்தி இயக்கத்தை அரங்கேற்றியிருந்தனர். பெரியாரின் பின் அணிதிரண்ட பல பகுத்தறிவு ஆர்வலர்களுங்கூட அந்தப் பக்திப் பரவசத்தில் கரைந்தவாறேதான் மாற்று அரசியலுக்கு வழிசமைத்தனர். பிராமணிய ஆத்திகத்தைக் கல்வி-வேலைவாய்ப்பு-பதவி உயர்வு எனும் தளங்களில் தகர்ப்பதற்கு இந்த திராவிட அரசியல் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான், அந்த எண்ணத்துடன் பகுத்தறிவு அணியில் திரண்டவர்கள் எல்லாம் நாத்திகவாத விழிப்புணர்வில் எழுச்சி கண்டுவிட்டவர்கள் என்ற கணிப்பில்தான் தவறிருந்தது. மக்கள் தெளிவாகவே திராவிட அரசியலையும் மதத்தையும் வேறுபடுத்தியபடிதான்!
இன்றுங்கூட மதவாத சக்திகள் இந்திய மத்திய அரசில் அரங்கேறியவுடன் இந்துத்துவப் பாஸிஸவாதத்தை நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டுவர முயலுவது அவர்களது வீழ்ச்சிக்கு அடிகோலுவதாகவே அமையும். தீவிர மதவாதிகள் தலைமையில் இந்த அரசியல் மாற்றம் நடந்துவிடவில்லை, அவர்களும் பிராமண மேட்டிமைகளும் அடக்கிவாசிக்கும்போது தேனீர்க்கடை நடாத்திய இடைச்சாதி உழைப்பாளி என்ற படிமத்தோடுதான் புதிய தலைமை கட்டமைக்கப்பட்டு மாற்றத்தை சாதிக்க இயலுமாயிற்று. அதுவும் அதிகாரத்திலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இமாலயத்துத் தவறுகளும் ஊழல்களும் இழைத்துத் தூக்கியெறியப்பட்டாக வேண்டும் என்ற உச்ச எதிர்பார்ப்பின் கட்டம் ஏற்படுத்திய அவதியால் வாய்த்தது. இருப்பினும் மக்களின் மத உணர்வையும் தேசியப் பற்றையும் களமாக வைத்து மதச்சிறுபான்மையினருக்கு எதிராகப் பாசிச அரசியலை வளர்க்க இருக்கும் வாய்ப்பு முழு நாட்டையும் சர்வாதிகார ஆட்சிக்கு ஆட்படுத்த இயலும் என்பதைப் புறந்தள்ளிவிட இயலாது.
பாசிசம் என்பது பெருமுதலாளிவர்க்கம் அல்லது ஏகபோக மூலதனம் பழைய ஜனநாயகப் பாணியில் அதிகாரத்தை முன்னெடுக்கவியலாத நெருக்கடிச் சூழலின் அரசியல் வெளிப்பாடு என்று மட்டுமே வரையறுத்துவிட இயலாது, இது ஒருவகையில் மார்க்சியத்தை வர்க்கவாதப் பார்வையாக முடக்கிய கோளாறின் பேறானது. லாரன்ஸ் பிரிட் போன்ற அரசியிலறிஞர்கள் ஜெர்மனி முதல் இந்தோனேசியாவரை செயற்பட்ட பாசிசம் குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படைப் பண்புகளை வெளிப்படுத்pயிருந்தனர். லாரன்ஸ் பிரிட் பாசிசத்தின் 14 அம்சங்கள் எனக்காட்டியிருந்தமையில் வலிய தேசியவாதம், இன-மதச்சிறுபான்மையினர் எதிரிகளாகக் கட்டமைக்கப்படல், பால் நிலை (ஆண்) மேலாதிக்க, ஊடகப் பயன்பாடும் ஜனநாயக மறுப்பும், மத உணர்வைப் பயன்படுத்தல் என்ற களவாய்ப்புகளைக் காட்டியுள்ளார், மனித உரிமை மீறல், இராணுவ மேலாதிக்கம், அதிகார மேட்டுக்குடிகள் உலகமயமாதலில் ஒன்றுபட உள்ள வாய்ப்பு, தொழிலாளர் உரிமைகள் மறுப்பு, அறிவாளிகளும் கலைஞர்களும் உயிர்ப்புடன் செயலாற்ற இயலாத நிலையை ஏற்படுத்தல், ஊழல்களும் அயோக்கியத் தனங்களும் வௌ;வேறு வடிவங்களில் அரங்கேறல், மோசடித் தேர்தல்கள் வாயிலாக மக்களின் ஒப்புதலைப் பறைசாற்றுதல் என்பனவும் அந்தப் பதினான்கு அம்சங்களினுள் அடக்கம்.
ஆக, வர்க்க இயங்காற்றலுக்கு அப்பால் பால்நிலை-இனக்குழும-மத-தேசிய மேலாதிக்க உணர்வுகள் அரசியல் செல்நெறியில் தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பது கவனிப்புக்குரியது. இறுதியில் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் தகர்த்து பொதுவுடைமையைச் சாத்தியமாக்குவதன் வாயிலாக மட்டுமே இத்தகைய அவலங்களுக்கு முடிவுகட்ட இயலும், அதனைப் பாட்டாளிவர்க்க அரசியல் இயக்கமே சாத்தியமாக்கவல்லது. அந்தவகைப் பாட்டாளிவர்க்க நோக்கில் மேலாதிக்கவாத அதிகாரங்களைத் தகர்த்து புதிய பாதையை வகுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
நவீன சமூக உருவாக்கத்தில் முதலாளித்துவம் மதத்தின் இடத்தை மொழிக்கு வழங்கிவிட்டமையால் நாத்திகத்தை முன்னிறுத்தி உழைக்கும் மக்களை அணிதிரட்டிவிட இயலும் என்ற பழைய பாணியைக் கைவிட நிர்ப்பந்திக்கப்படுகிறோம். மதம் இவ்வகையில் முக்கியத்துவத்தை இழந்து வருவதாகக் கருதிய போதிலும் ஏற்றத்தாழ்வைப் பேணுவதற்கு மதம் மனஒப்புதல் ஏற்படுத்தித்தரும் காரணத்தால் நாத்திகப் பிரசாரத்துக்கு அவசியமுள்ளது என்ற கருத்தும் வலுமையோடு இருந்தது. கடவுள் மறுப்பை ஏற்புடையதாக்கி பகுத்தறிவைப் பரப்பினால் மட்டுமே மக்கள் வாழ்வு சுபீட்சம் பெறும் என்பதாக நாத்திகவாதிகள் இயங்கியது போல மார்க்சியர்களின் நாத்திகக் கோட்பாடு இருந்ததில்லை.
ஏற்றத்தாழ்வு நிதர்சனமாகிப் பலர் உழைத்து அவல வாழ்வில் உழல, அவர்களைச் சுரண்டி வாழ்ந்தோர் ஆடம்பரமான உலலாசங்களில் திழைக்க இயலுமானதாகிய குறித்த வரலாற்றுச் சூழலிலேயே மதம் தோற்றம் பெற்றது. கடவுளின் பேரால் இந்த அநீதி மறைக்கப்பட்டது. இவ்வாறு ஒர கடவுள் முன்னிறுத்தப்பட்டமை ஒரு சில மதவாதிகளின் சதி வேலையல்ல. 'வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், கடவுள் உண்டு எனும் கருத்து சில தத்துவஞானிகள் அல்லது சிந்தனையாளர்களால் வலிந்து புகுத்தப்பட்டதோ அல்லது மனித உணர்வு நிலையின் தவிர்க்க முடியாத பிற்சேர்க்கையோ அன்று, திண்ணமான பொருளாயதச் சூழல்களின் கீழ் மனித உணர்வில் தோன்றியதே அக்கருத்து, அப் பொருளாயதச் சூழல்கள் அடியோடு மாறும்போது அக்கருத்தும் பட்டுப்போகும்' என்பார் 'இந்திய நாத்திகம்' நூலாசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (ப.304)
'வர்க்கங்களாகப் பிளவுபட்ட சமூகத்தைப் பராமரிக்க முற்றிலும் புதியதோர் ஏற்பாடு அவசியப்பட்டது' என்கிறவகையில் அரசு உழைக்கும் பெரும்பான்மையினர்க்கு எதிராக சுரண்டுவோர் சார்பாக வன்முறையைப் பிரயோகிக்கும் கருவியான கதையை அவர் காட்டியிருந்தார். அந்த அரசு சமூகத்துக்கு வெளியே இருந்து திணிக்கப்பட்டதல்ல, சமூகத்தின் வளர்ச்சிக்கட்டத்தில் உள்ளிருந்தே தோன்றி வளர்ந்த ஒன்றுதான். வெறும் வன்முறையால் எப்போதும் அடக்கிவைத்திருந்துவிட இயலாது என்கிறபோது மன ஒப்புதலுடன் தமது அவல வாழ்வை ஏற்க வகை செய்யும் மதமும் அவசியப்பட்டது. மதம் தன்னளவில் இத்தகைய ஏற்பினைச் செய்யும் அதேவேளை வேண்டியபோது வன்முறையைப் பிரயோகிக்க அவசியமான கருவியாகிய அரசைப் பாதுகாக்கும் கருத்தியல்களையும் வழங்குகிறது. இவ்வகையில் மதம் 'உடல் தாண்டியது ஆன்மீகக் கருவியாக' செயற்படும் அதேவேளை, துயர்மிகு வாழ்வின் தாங்கவியலாச் சுமைகளைத் தாங்குவதற்கான 'ஆற்றல்மிகு வலியடக்கியாகவும்' திகழ்கிறது. (தேவி பிரசாத் சட்டோபாத்யாய, பக்.308-309).
இவ்வகையில் மதம்பற்றிய பார்வையை அறிவியல் பூர்வமாக அணுகியபோதிலும் இந்தியச் சூழலில் அதன் பிரயோகத்தில் பல இடர்பாடுகள் இருந்தன. குறிப்பாக மேலே பார்த்தவாறு 'வர்க்கப் பிளவுபட்ட' சமூகமான ஐரோப்பாவில் பார்ப்பதைப் போன்றதாக சாதிவாழ் முறையுடைய நமது சூழல் இல்லை. பிராமணியச்சதி இங்கே வர்க்கங்களை மறைத்து சாதிகளாக்கி இல்லாத 'இந்துசமயம்' என்பதாக ஒன்றைச் சித்திரித்து மக்களை ஏமாற்றுகிறது என்றவகையில் ஐரோப்பிய சமூகத்தில் மதம் பற்றிப் பேசப்பட்டவற்றை இந்து மதம் என்பதற்கும் பொருத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கைகளும் விடப்படுகிறது.
இந்து மதம் இல்லாத ஒன்றா? இது குறித்து ந.முத்துமோகன் 'இந்து மதம்: சில புதிர்களும் புரிதல்களும்' என்ற தலைப்பிலான கட்டுரையில் (புது விசை -41) விரிவாக அலசியுள்ளார். மதம் குறித்த அக்கறைகள் இந்திய மக்களுக்கு இருந்ததில்லை, குல வழிபாடுகள் சார்ந்து பன்மைக் கோட்பாடுகள், நம்பிக்கைகள், சடங்காசாரங்கள் நிலவிய சூழலில் ஆங்கிலேயராட்சிக்காலமே இத்தகைய முறைகளையுடைய (கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற தமக்குரிய செமட்டிக் மதங்களாயில்லாத – சிலபோது பௌத்தம், சமணத்தை விலக்கியதான-அனைவரையும்) இந்து சமயத்தவர் என வரையறுத்தனர். இது வேதம் -வேதாந்தத்தை மூல நூல்களாகக் கொண்டிருக்கும், கர்மவினை-மறுபிறப்பு-முத்தி குறித்த நம்பிக்கையுடையது, ஆன்மீகவாதப் பற்றுடையது, சாதியமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பன ஐரோப்பிய புரிதல். இவ்வகையில் ஐரோப்பியச் சிந்தனை முறையால் விளங்கிக் கொள்ளப்பட்ட வகையில் இந்தியச் சமூகமோ அதன் சமய வாழ்முறையோ அமையவில்லை என முத்துமோகன் காட்டியுள்ளார். 'இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகி வருகிறது. இந்து மதம் என்ற காலனிய ஒற்றை வடிவத்தில் மத அடிப்படைகளைவிட அரசியல் அதிகார அடிப்படைகளே அதிகமாக அமைந்துள்ளன' என்றபோதிலும், 'இன்றைய இந்து மதத்திற்கு முந்தியகால வரலாற்றோடு தொடர்புகள் இல்லாமல் இல்லை. ஆயின் அவை ஒன்றைப்படையானவை அல்ல. அவை பலதரப்பட்டவை. அது வேதங்களோடும் வேதாந்தத்தோடும் மட்டும் தொடர்புகொண்டதல்ல. அது சிந்து வெளியோடும் தொடர்புகொண்டது, அது பக்தியோடும் புராணங்களோடும் தொடர்பு கொண்டது, அது தாந்திரிகத்தோடும் தொடர்பு கொண்டது' என்பார் முத்துமோகன் (புதுவிசை -41, ப.28).
சிந்துவெளி, வேதம், வேதாந்தம், பக்திக் கோட்பாடு, புராணமரவு, தாந்திரிகம் என்ற பல மதக்கூறுகளின் ஒன்றிப்பையுடைய ஒரு மாதமாக ஆக்கப்பட்ட-ஆகிவிட்ட இந்து சமயம் என்பதை ஐயப்பாட்டுடன் ஏற்க வேண்டியிருப்பதான ஆதங்கம் அக்கட்டுரையில் உண்டு. இவற்றுக்குள் உள்ள ஊடாட்டம் போன்று 'யூத மதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகியவை கூட தமக்குள் ஏராளமான தொடர்புகளைக் கொண்ட மதங்கள் தாம், அதற்காக அவற்றை ஒரே மதம் என்றா வழங்குகிறோம் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது' என்பார் முத்துமோகன்.
இதன் காரணமாக அக்கட்டுரையை இந்த முத்தாய்ப்புடன் அவர் நிறைவு செய்வார்: 'பன்மீயம் என்பதையே இந்து மதம் குறித்த கடைசிச் சொல்லாக நாம் இங்கு முன்வைக்கவில்லை. அது ஒரு தற்காலிக நிலைப்பாடாக இருக்கலாம். ஆயின் காலனிய, நவீன இந்து மதம் குறித்த சில விவாதங்களையே இங்கு முன்வைத்துள்ளோம். இந்து மதம் குறித்து பல வேளைகளில் நாம் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வருகிறோம். அது சரியாக இருக்காது. பேசி விவாதிப்பதற்கான அழைப்பே இது.' (புதுவிசை -41, ப028).
கறாராக இதுதான் இந்துமதம் எனச் சொல்லாமல் ஏன் பல மறுப்புகளை முன்வைத்து அவற்றையெல்லாம் கடந்து இந்து மதம் பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது என்று கூறுவேண்டி இருப்பது மேற்படி கட்டுரையில் இருக்கும் பிரச்சினை அல்ல, இந்த விவகாரம் பல குழப்பங்களுடன் கூடியதாயுள்ளது என்பதே காரணம். எது இந்து சமயம் என்பது தெளிவாக்குவதற்கு சிரமம் உடைய விவகாரம் தான். 'பண்டைய கால இந்தியா' எனும் நூல் இந்து சமயம் உருவாகிய காலம் வரையான வரலாற்றைப் பேசுபொருளாக உடையது. காலனியவாதம் வரையறுத்த இந்து சமயத்தை வாய்ப்பாக்கி அதன் அடித்தளத்தை ஆதாரமாக்கிக் கொண்ட இந்தியத் தேசியவாதம் ஆரிய வர்க்கம் பற்றியும், குப்தப் பேரரசர் காலத்தில் இந்து சமயம் மறுமலர்ச்சி கண்டமை பற்றியும் புளகாங்கிதம் அடைந்தமையையும் கேள்விக்குட்படுத்தி உண்மை நிலவரத்தை விளக்குவதாக டி.என்.ஜாவின் நூல் அமைந்துள்ளது.

குப்தர் காலத்தை இந்து மதத்தின் பொற்காலம் எனக் கொண்டாடுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது முன்னதாக பிராமண மதம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பௌத்த-சமண மதங்கள் எழுச்சியடைந்தபோது காணாமல் போய்விடும் நிலை நிலவி, மீண்டெழ இயலுமாயிருந்தது குப்தர் காலத்தில் என்பதால் ஆகும். 'தத்துவக் கருத்துக்களின் வளர்ச்சியில் குப்தர்கள் காலம் ஒரு மைல் கல்லாக இருந்திருக்கலாம்' (ஜா,ப.203) எனக்கூறும் டி.என்.ஜா இந்து மறுமலர்ச்சி என்ற கருத்தை மறுப்பார். 'வைணவம் மற்றும் சைவம் ஆகியவற்றுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வந்ததற்கும் மத மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதாகப் பொருள் அல்ல. இந்த இரு மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் முந்தைய காலத்தைச் சேர்ந்தவை. இப்போது நிலப்பிரபுத்துவ நிலைமைகள் தோன்றிக் கொண்டிருந்த ஒரு சூழலில் அவை கூடுதலாக மக்களை ஈர்த்தன. இந்து என்கிற சொல்லைப் பயன்படுத்துவதும் தவறானது. குப்தர்கள் காலத்திற்குப் பின்னர் அது இந்தியாவில் வாழும் மக்களைக் குறிப்பதற்காக அராபியர்களால்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. பண்டை இந்தியர்கள் தங்களை எப்போதுமே இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டதில்லை. இந்து மறுமலர்ச்சி என்று வெகுவாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டது உண்மையில் மறுமலர்ச்சியே அல்ல, அது இந்து மறுமலர்ச்சியாகவும் இருக்க முடியாது' என்பார் ஜா (மேலது, ப.213).
'பிராமணிய மதப் பிரிவுகளிலேயே வைணவம்தான் குப்த ஆட்சியாளர்களின் ஆதரவால் மிகப் பிரபலமடைந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அது பரவியது, கடல் கடந்து தென்கிழக்கு ஆசியாவிற்கும் பயணித்தது. செல்வத்தின் தெய்வமான ஸ்ரீலட்சுமி விஷ்ணுவுடன் இணைந்ததானது புதிய மதத்திற்கு கவுரவத்தைத் தந்தது. வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் மத்தியில் ஸ்ரீலட்சுமி முன்னர் பிரபலமடைந்திருந்ததானது புதிய மதம் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களின் மத்தியில் பரவுவதற்கு உதவியது. விஷ்ணு வழிபாடு சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தது' என ஜா கூறும்போது (ப.201) வட இந்தியாவில் சைவம் முக்கியத்துவம் பெறாமையை (அதற்கான காரணங்களை முன்னதாக விளக்கியவாறு) மனங்கொள்கிறார், இதே நிலையைச் சைவம் தமிழகத்தில் ஏறத்தாழச் சமகாலத்தில் பெற்றுக் கொண்டதுபற்றி அவர் கவனங்கொள்ளத் தவறவில்லை. பிரச்சினை 'புதிய மதம்' என்ற வடிவத்தை இவ்விரு சமயங்களும் கி.பி 4ம் நூற்றாண்டைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டமையை அழுத்தியுரைக்க அவர் தவறுவதில்தானுள்ளது. அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்ட பண்பு மாற்றத்தைத் தவறவிடும் வகையில் அந்த மாற்றத்துக்கான ('மறுமலர்ச்சிக்கான') அடிப்படை முன்னரே இருந்தது என்கிறார் (அது மறுமலர்ச்சியல்ல புதிய மதத்தின் தோற்றம் எனக்கண்டு காட்டியிருக்க வேண்டும்).
முன்னர் இருந்தது பிராமண மதத்தின் பல்வேறு பிரிவுகள், கி.பி 4ம் நூற்றாண்டின் பின்னரான அனைத்து மக்களையும் ஆட்கொண்ட வைணவம், சைவம், சாக்தம் போன்றன பண்பு மாற்றம் பெற்ற புதிய மதங்கள், நிலப்பிரபுத்துவ சமூக முறைக்கு அவசியப்பட்ட மதவடிவம். முன்னர் பிராமண மதப்பிரிவுகளோ பௌத்தமோ சமணமோ அனைத்து மக்களின் ஏற்புக்கு அவாக்கொண்டதில்லை, நிலம் படைத்தவர் (கிழார்கள்-நிலப்பிரபுத்துவப் பிரிவினரல்ல), வணிகர் போன்ற ஆதிக்க சக்திகளையும் அரசையும் தம்பக்கம் ஈர்ப்பதே அன்றைக்குப் போதுமானது. நிலவுடைமைச் சமூகம் பண்ணையடிமைகள், கைத்தொழிலாளர், வணிகர்கள் என அனைத்துப் பிரிவினரையும் தமதாட்சிக்கு உட்படுத்தும் அவசியம் ஏற்பட்டபோது தோற்றம்பெறும் வைணவம், சைவம் என்பன முற்றிலும் புதிய மதங்களாகும். நிலப்பிரபுத்துவத்துக்கான முழுமுதற் கடவுளாக விஷ்ணு, சிவன் மாற்றப்படுவதற்கான முன்னோடிவடிவம் மஹாயான பௌத்தத்தின் வாயிலாக புத்தரில் ஏற்படுத்தப்பட்டது. அந்தத் தத்துவத்தையும் கடவுள் கோட்பாடுகளையும் இந்தப் புதிய சமயங்கள் கையேற்று வளர்த்தன. சாத வாழ்முறைக்கு அதிகப் பொருத்தப்பாட்டுடன் இப்புதிய மதங்கள் தோறியதன்பேறாக நிலப்பிரபுத்துவ சமயமாக பௌத்தம் இந்தியாவில் நிலைக்க முடியாதபோது, குறுகிய வடிவில் வணிகர்களால் மட்டும் பின்பற்றப்பட்ட மதமாக சமணம் நீடித்து இருக்க இயலுமாயிற்று.
சைவம்-வைணவம் போன்ற இப்புதிய மதங்கள் தம்மை  'இந்து சமயம்' எனப் பெயரிட அவசியமற்றவகையில் சனாதன தர்மம், வைதீக நெறி என்பதாக முந்திய தொடர்புகளை அடியொற்றி தம்மை அழைத்ததுண்டு. வேறெவரோ இட்டபெயர் நிலைத்தமையால் ஒரே மதமாக இணைவுகாணும் தேவையேற்படும்போது பொதுப்பெயர்கொள்ள முன்னர் முனைந்ததில்லை எனப் பொருளில்லை. பௌத்தம்-சமயத்துக்கு எதிராகப் போராடியபோதும், பின்னர் இஸ்லாம், கிறித்தவத்தை முகங்கொண்ட போதும் அவை தமக்குள் ஐக்கியப்பட்டுப் போராடத் தவறியதில்லை. அதற்கேற்ப மாமன், மச்சான் உறவுகொண்டனவாய் அக்கடவுள் திகழ்ந்தனர். அருணகிரிநாதன், குமரகுருபரர் போன்ற தமிழகத்தின் இரண்டாம் பக்திப்பேரியக்க ஆளுமைகள் சிவனையோ விஷ்ணுவையோ அல்லாமல் முருகனை பாடற்தலைவனாகக் கொண்டமைக்கு வைணவ ஆட்சியாளர்கட்கும் சைவப்பெரும்பான்மை மக்களுக்கும் இணக்கம் ஏற்படுத்தும் தேவையும் சார்ந்தது என்பதைக் காணலாம் (சிவனின் மகன் முருகன் விஷ்ணுவின் மருமகன், சைவத்தைப் பொறுத்தவரை சிவனின் மூர்த்தமாயே முருகனைக் காணும் மரபும் உண்டு).
யூத, கிறித்தவ, இஸ்லாம் மதங்களுக்குள் உள்ள தொடர்பிலிருந்து சைவம், வைணவம், சாக்தம் போன்ற வைதீக நெறிகளுக்கான தொடர்பு வேறுபட்டது. செமிட்டிக் மதங்களின் பைபிளின் பழைய ஏற்பாடு (யூத), புதிய ஏற்பாடு (கிறித்தவம்) என்பவற்றில் இறைதூதர்களான மோஸஸ், ஜேசு ஆகியோரை முந்திய நபிகளாக (மூஸா, ஈஸா) ஏற்கும் முகமது நபி வாயிலாக இறக்கப்பட்ட குர்ரான் சொல்லவரும் அம்சம் கவனிப்புக்குரியது. இறைவன் நபிகள் வாயிலாக தந்த தனது நெறிகளை மக்கள் சிதைத்து வருகிற நிலையில் புதிய நபிகள் அவசியப்பட்டனர், குர்ரான் அவ்வாறு வழங்கப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம். ஆக, மூன்;று மதங்களும் தத்தமக்கான மூல நூல்கள், இறை நேசர் அல்லது தூதர், பாதுகாத்துப் பரப்பச் சபைகள் என்பவற்றை, தனித்தனியே கொண்டிருப்பன. வைதிக நெறிகள் அனைத்துமே வேதம், வேதாந்தத்தையும் ஆறு தரிசனங்கள் எனும் தத்துவங்களையும் பொதுவாகக் கொள்கின்றன. குறித்த இறைதூதர் (நேசர்), சபை என்பதன்றி பலநூறு பக்தர்களும் கோயில்களும் பொதுவாக இருப்பது சனாதன நெறிகளுக்கு இயல்பு என்கிறவகையில் இந்து மதம் எனும் தனி வடிவமும் அதனுள் பன்மைத்துவத்துக்கான பல வடிவங்களும் இருக்க இயலுமாயுள்ளது.
இவ்வாறு இந்து சமயத்துக்கு ஒரு மத வடிவத்தை வழங்கும் சமூக சக்தியாக அதன் புனிதச் சாதியான பிராமணர் திகழ்கின்றனர். அவர்கள் மட்டுமே கற்கவும் ஓதவும் உரிமை பெற்ற வேதங்கள் பெறும் இடத்தை அவர்கள் கடவுளுக்கு கூடத் தரத் தயாராக மாட்டார்கள். அதன் பேறாக இந்து சமயத்தின் ஆறு தரிசனங்களில் நான்கு கடவுள் மறுப்பு (நாத்திக) நிலைப்பாட்டுக்குரியன, பொதுவாக இந்தியத்தத்துவங்கள் அனைத்தையும் சொல்கிறபோது தேவி பிரசாத் சட்டோபாத்யாய கூறுவார்' நமது முக்கியமான தத்துவங்களுள் வேதாந்ததும் (அதுவுங்கூட ஓரளவுக்கே எனலாம்) நியாய-வைசேசிகமும்-குறிப்பாக பிற்கால நியாய-வைசேசிகமும்-மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை, இதற்கு மாறானவை பவுத்தம், சமணம், பூர்வ-பீமாம்சம், சாங்கியம், லோகாயதம் மற்றும் ஆதி நியாய-வைசேசிகம் ஆகியன, அவையனைத்தும் தீவிர நாததிக வயமானவை. ஆக, இந்திய ஞானத்தில் நாத்திகத்திற்குள்ள ஆகப்பெரும் முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்க விரும்பினால் அதைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல்வேறு இந்தியத் தத்துவ ஆசான்களைப் புறந்தள்ளியாக வேண்டும்' என்பதாக (தேவி பிரசாத் சட்டோபாத்யாய, ப.39).
சாதி வாழ்முறையைப் பேணுவதை முதன்மையாக்கும்போது கடவுள் அப்படியொன்றும் முக்கியமில்லை என்பதன் வெளிப்பாடே இந்துமதத்தின் ஆறு தரிசனங்களில் நான்கு நாத்திகக் கோட்பாட்டுக்குரியதாக அமையக் காரணமாகிறது. வர்க்கப் பிளவுற்ற ஐரோப்பிய சமூகப் பார்வையில் இந்து சமயத்தை விளங்கிக்கொள்ள இயலாது என்பது போன்றே அங்குள்ள நாத்திகத்துக்கும் இந்திய நாத்திகத்துக்கும் இடையேயான வேறுபாடு அமைகிறது. இந்தியர்களுக்கு மத விவகாரம் முக்கியத்துவமிக்கதாக இருந்ததில்லையெனக் கட்டுரை ஆரம்பத்தில் கூறிய விடயத்தை இங்கு மீட்டுப்பார்க்க இயலும். வர்க்கப் பிளவடைந்த சமூகத்தை மதத்தின் வாயிலாகவே கட்டிறுக்கமாக்க வேண்டியிருந்தது. இங்கே சாதிவாழ் முறைக்கு நெறிப்படுத்தும் மார்க்கம் அவசியப்பட்டதேயல்லாமல் ஒரு மத வடிவத்துக்குள் கட்டமைக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை.
நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான ஒரு கடவுள் (பரம்பொருள்) அவசியப்பட்டபோது சிவன், விஷ்ணு அவசியப்பட்டது போல முந்திய பிராமண மதத்தில் பேசப்பட்ட தேவர்-தேவதைகள்-கடவுளர்கள் என்போர் மத நிலைப்பட்ட கடவுள் கோட்பாட்டுக்கு உரியன அல்ல. வேத இலக்கியத்தில் கூறப்பட்ட அத்தகைய கடவுளர் என்பன இயற்கை வடிவங்களை இவ்வுலக வாழ்வுத் தேவைகளுக்காக வசியப்படுத்த வழிபடும் முறை சார்ந்து குறியீடாக்கப்பட்டமையால் மீமாம்சம் அதையொட்டிய சடங்குகளை முன்னிறுத்தியபோது கடவுள் கோட்பாட்டை நிராகரித்து தர்க்கம் புரிய இயலுமாயிற்று. 'கடவுளையும், வேத தெய்வங்களையும் பற்றிய மீமாம்ச நாத்திகத்தின் அணுகுமுறை இதுதான்: முதலாவது-அதாவது கடவுள் என்பது-வெறும் கடடுக்கதை, வேத தெய்வங்கள் வெறும் வார்த்தைகள், அதே சமயம், வேதங்களின் பால் மீமாம்சகர் கொண்டிருந்த அதிகபட்ச ஈடுபாடே அவர்களை இத்தகைய நிலையை நோக்கித் தள்ளியது. வேறுவிதமாய்ச் சொல்வதெனில் ஒரு-கடவுள் மற்றும் பல தெய்வக் கோட்பாடுகளை அவர்கள் ஒதுக்கித் தள்ளியதற்கு வேதங்களின் பால் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடுதான்-அல்லது இன்னும் சரியாய்ச் சொல்வதெனில் அவர்கள் அவற்றைப் புரிந்துகொண்ட விதந்தான் காரணம்' என்பார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (ப.214).
இவ்வகையில் பிராமண மதமாக இருந்தகாலத்தில் நாத்திக நிலைப்பாட்டுடன் இருந்தது போன்று நிலப்பிரபுத்துவ காலத்தில் மீமாம்சத்தால் பேச இயலவில்லை. மூலவரான ஜைமினியின் கோட்பாட்டை 17ம் நூற்றாண்டில் விளக்கிய கந்த தேவர் எனும் மீமாம்சகர் 'இவ்வாறு ஜைமினியின் தத்துவசாரம் (என்னால்) விளக்கப்பட்டுள்ளது. அவற்றை (என்) வாயால் சொன்னதாலேயே என் வார்த்தைகள் தீட்டாகிவிட்டன, எனவே, இறைவனின் அருளை இறைஞ்சினால் மட்டுமே எனக்கு மீட்சிகிட்டும்' எனக் கூறவேண்டியிருந்தமையைத் தேவி பிரசாத் காட்டியுள்ளார் (பக்.214-215). ஒரு பரம்பொருட் கோட்பாட்டின் அவசியத்தை உணர்ந்த நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் பிராமணத் தத்துவநெறியில் ஏற்படும் இந்த மாற்றம் கவனிப்புக்குரியது (நியாய-வைசேசிகத்தைப் பொறுத்தவரை அணுக்கோட்பாட்டின் இயக்கம் அதன் பேறான உலகப் பன்மைத்துவ தோற்றம் வளர்ச்சி என்பதற்கான தர்க்க அடிப்படையின் காரணமாகவே கடவுள் அவசியப்பட்டிருந்தது, அதுவும் தொடக்கிவைக்கிற அளவில்-பின்னால் நிலப்பிரபுத்துவக் கட்டத்தில் அந்தக் கடவுளும் எல்லாம் வல்லவரானார் எனக் காட்டியிருந்தார் தேவி பிரசாத்).
இத்தகைய ஆய்வுமுறைக்குள் மீண்டும் மீண்டும் 'வர்க்கம்' பற்றியே பேசப்படுகிறபோது அடிப்படை வேறுபாடான சாதிவாழ்முறை ஏற்படுத்தும் தனித்துவக் குணாம்சம் அவர்களால் பார்க்கப்படாமலே போகிறது. ஏற்றத்தாழ்வுச் சமூக உருவாக்கத்துகு;கு முந்திய இயற்கை வழிபாட்டின் வசியப்படுத்தும் மந்திரசக்தி சார்ந்த நம்பிக்கை மீமாம்சகரிடம் தொடர்ந்து இருந்தமை குறித்துக் கூறும்போது தேவி பிரசாத் இவ்வாறு கூறுவார்: 'இவையனைத்தும் பூர்வ மீமாம்சகர் வர்க்கங்களுக்கு முற்பட்ட ஆதி சமூகத்தினர் என்பதற்கோ அல்லது அவர்கள் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தின் பிரசாரகர் என்பதற்கோ உரியதான சான்றுகள் இல்லை, மாறாக வேதகால மக்களின் வளர்ச்சியுடன் அவர்களின் ஆதிகால வேள்விகளும் (யாகங்களும்) சில பாதகமான அம்சங்களைத் தம்முடன் சேர்த்துக்கொண்டன. பிற்கால வர்க்க நலனுடன் இவ் வேள்விகள் பின்னிப் பிணைந்தன. மீமாம்சகரே கூட வர்க்க நலனின் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். குறிப்பாக, ஆதி மற்றும் மத்திய கால வேதியரின் வர்க்க நலனில் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். அதே சமயம் இறந்த காலத்தின் மீது அவர்களுக்கு இருந்த அளப்பரிய பற்று காரணமாகத் தமது முன்னோரின் மாய மந்திரச் சடங்குகளின் அடிப்படை அனுமானத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டதுடன் அவற்றைப் பிற்கால தத்துவத்தின் மொழியில் ஆதரிக்கவும் விரும்பினர்' (தேவி பிரசாத்., பக்.316-317). இங்கு வர்க்க நலன் என்பது சாதி நலன் என்பதோடு இணைத்துப் பார்க்க அவசியமுடையதாகும்.
நமது வரலாறு எழுது முறையிலேயே இந்தக் குறைபாடு இருந்து வருகிறது. 'பண்டைய கால இந்திய வரலாறு: ஒரு வரலாற்றுச் சித்திரம்' என்ற வரலாற்று நூலிலும் 'கிராமங்களிலும் நகரங்களிலும் புதிய பணக்கார வர்க்கத்தின் தோற்றம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது, அவை மேலும் ரத்த உறவு, சமத்துவம் ஆகிய இனக்குழுக் கொள்கைகளை ஒழித்துக்கட்டின' என்று எழுதப்பட்டுள்ளது. சமத்துவம் அற்றுப்போய் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டபோதிலும் இரத்த உறவைப் பேணும் சாதிமுறை இன்றுவரை தொடர்வதை மறுப்பவரல்ல டி.என்.ஜா. மேற்படி வசனத்துடன் தொடங்கிய பந்தி இவ்வாறு முடிந்திருந்தது: 'பல்வேறு வடிவிலான சமூக ஒதுக்கல்கள் வளர்ந்தபோதிலும், எழுத்தறிவு பெற்ற பிராமணிய சமூக அமைப்பிற்கும், எழுத்தறிவுக்கு முந்திய, எழுத்தறிவு பெறாத மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவு இந்திய வரலாறு முழுவதும் தொடர்ந்தது, அது இந்திய சமுதாயத்தின் இன்றையநிலைக்குக் காரணமாகவும் இருந்துள்ளது (டி.என்.ஜா, ப.82). இத்தகை நீடிப்பு இரத்த உறவுத் தொடர்புபேணும் சாதிவாழ்முறை தொடர்வதன் பேறானது என்பது தெளிவு.
சாதி ஏற்றத்தாழ்வு தொடங்கிய பின்னர் வந்தவர்கள் மற்றும் புதிதாக உள்வாங்கப்பட்டும் இனமரபுக் குழுவினர் சாதிகளாக்கப்பட்டமையை ஜா காட்டியுள்ளார். 'ஹூணர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து குர்ஜார்களின் வரத்து சத்திரிய சாதிகளின் எண்ணிக்கையை பெருக்கியது, இவர்கள் ராஜபுத்திரர்களாக சத்திரிய சாதியில் சேர்ந்தனர். சூத்திர சாதிகள் மற்றும் தீண்டத்தகாத சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்குப் பெரும் காரணம் வனப் பழங்குடியினர் நிலைபெற்றுவிட்ட வர்ண சமுதாயத்திற்குள் உள்வாங்கிக் கொள்ளப்பட்டதாகும். பெரும்பாலும் கைவினைஞர்களின் கில்டுகளும் சாதிகளாக மாற்றப்பட்டன. நிலம் அல்லது நில வருவாய் கைமாற்றப்பட்டதனால் காயஸ்தர்கள் (எழுதித் தரும் தொழில் புரிவோர்) என்கிற புதிய சாதி உருவாவதற்கு வழிவகுத்தது என்று கூறப்படுகின்றது, அவர்கள் எழுதித் தருவோர் என்ற முறையில் பிராமணர்களின் ஏகபோக நிலையை வலுவிழக்கச் செய்தனர். அதைத் தொடர்ந்து வந்த பிராமணிய நூல்களில் அவர்கள் அடிக்கடி இழிவாகச் சித்திரிக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும். வட இந்திய கிராமப் புறங்களில் கிராமப் பெரியவர்கள் மற்றும் தலைவர்கள் (அயாயவவயள) என்கிற புதிய வர்க்கம் தோன்றியது, நில மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர்களும் ஒரு சாதியாக இறுகிப் போனார்கள்' என்பார் எ.என்.ஜா(ப.196).
இருப்பினும் ஏற்றத்தாழ்வுத் தொடக்கம் பற்றிப் பேசும்போது இன மரபுக்குழுச் சிதைவு வர்க்கத் தோற்றம் என்பது போன்ற வர்க்கவாதப்பார்வைக் கோளாறுகளுக்கு இடமளிக்கிறார் ஜா (ப.82) மற்றும் பக்.105-106). தமிழகத்தின் விவசாய எழுச்சிக்கு முந்திய வணிகம் என்பதை (உணர்வுபூர்வமாகக் கண்டுகொள்ளாமலே) குறிப்பிடும் ஜா திணைகள் பரஸ்பரம் சார்புடன் இருந்தமையையும் மருதத்திணை மேலாதிக்கம் தொடங்குவதையும் சுட்டிக்காட்டியபோதிலும் (பக்.149-150) சாதிவாழ்முறைத் தொடக்கத்துக்கு அந்த வரலாறு வெளிச்சமூட்டுவதைக் காணத்தவறுகிறார். சமூகவியல் நோக்கில் திணைக்கோட்பாடு பற்றிப் பேசிய சிவத்தம்பியும் கூட இதனைக் கண்டு காட்டத் தவறியிருந்தார். வர்க்கவாதப் பார்வை ஏற்படுத்தும் தோற்ற மயக்கம் இதன் காரணியாய் அமைகிறது.
வர்க்க அமைப்பு மாற்றம் ஏற்படும் போது எந்தச்சாதி அதிகாரத்தை வெற்றிகொள்கிறது என்பதே கவனிப்புக்குரியது. பௌத்த-சமணர்களால் புனிதப்படுத்தப்பட்ட வைசிய சாதிகளைத் தகர்த்து நிலப்பிரபுத்துவ சாதிகள் அதிகார்தைப் பெறும்போது, பிராமணர்களால் அந்தச்சாதிகள் புதினம் கற்பிக்கப்ட்டன. இது வட இந்தியாவில் பக்திக் கோட்பாட்டுடன் தொடங்கும்போது தமிழகத்தில் பக்திப் பேரியக்கமாக முன்னெடுக்கப்பட்டதைக் கைலாசபதி காட்டியுள்ளார். இந்த வர்க்க அமைப்பு மாற்றத்தில் வெள்ளாளர் அதிகாரத்தைக் கையகப்படுத்தியிருந்தமையையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார் (கைலாசபதி, அடியும் முடியும், பக்.267-268).
நவீன வரலாற்றில் பெரியார் நாத்திகத்தை நோக்கி நகர்ந்த வரலாறும் கவனிப்புக்குரியது, ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையுடன் இருந்த அவர், கல்வி-வேலைவாய்ப்பு-சமூகத் தலைமை என்பவற்றில் இருந்த பிராமண ஆதிக்கத்தைத் தகர்க்க முனைந்தபோது இந்து சமயம் வலுமையோடு அவர்களைக் காத்து நிற்பதைக் கண்டார். அதன் பேறாகவே மதத்தகர்ப்பு முன்னெடுக்கப்படாமல் பிராமணர்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவியலாது என்று கண்டு நாத்திகவாதப் பிரசாரத்தில் முனைப்புக்காட்டினார்.
ஆயினும் பிராமண எதிர்ப்பென்பது இன்னொரு வடிவில் சாதியவாதமாகவே மாறிவிட்டுள்ளதை இன்று காண்கிறோம். மார்க்சிய நிலையில் அணுகும் தேவி பிரசாத், டி.என்.ஜா போன்றார்களும் பௌத்த-சமணத்தை முற்போக்கானது எனக் காண்பதும், பிராமணியம் என்பதை எப்போதும் பழைமைவாதம் எனப் பார்ப்பதும் என்ற தவறுகளுக்கு ஆட்பட்டிருந்தனர். உண்மையில் கி.மு 6ம் நூற்றாண்டில் முற்போக்குப் பாத்திரம் வகித்த பௌத்தமும் சமணமும் கி.பி 4ம் நூற்றாண்டில் பிற்போக்கை பிரதிநிதித்துவப்படுத்தின, புதிய சமூக மாற்றத்துக்கு புதிய சிந்தனைகளோடு பிராமணர்களின் முற்போக்கு அணியினர் தலைமையேற்று தொடக்கிவைத்த இந்து சமயம் கி.பி 4-6ம் நூற்றாண்டுகளில் முற்போக்குப் பாத்திரத்தை வகித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் பிராமணிய எதிர்ப்பில் பெரியாரிடம் முற்போக்குக் குணாம்சம் உள்ளது, வெறும் பிராமண எதிர்ப்பாகக் குறுக்கப்படும் நாத்திகவாதம் சாதியம் பேணும் பிற்போக்குப் பண்புடையது.
பழைமை பேண் பிராமணரை ஒருபுறம் ஒதுக்கியபடி சமூக மாற்றத்துக்கான புதிய சிந்தனைகளை வரித்து வளர்ந்ததிலேயே பிராமணியம் நிலைத்து வர இயலுமாகியுள்ளது. தவிர, இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் நல-பிராமணியமாக தொடர்பூடகத்துறை உலகுதழுவி முழுமை பெற்றிருக்கிறது, இதில் பிராமணர்கள் மட்டும் அடங்கவில்லை என்பதை அறிவோம். பிராமணியம் அடித்தளம்-மேற்கட்டுமானம் என இரு தரப்பிலும் இயங்கியது போலவே பண்பாட்டுத் தொழிற்சாலை இரு பண்பையும் கொண்டுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, சினிமா, தொலைக்காட்சி, இலத்திரனியல் ஊடகம் என்பதை தொழிற்துறைகளாயும் கருத்தியல் புனைவாக்கிகளாயும் இருந்து நல-பிராமணியமாகச் செயற்படுதல் குறித்து மேலும ஆய்வுகளை முன்னெடுக்க அவசியமுள்ளது. - ந.இரவீந்திரன்

Friday, January 24, 2014

A Gun and A Ring (ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்) -(கனடா )
October 19, 2013 at 12:18pm
எ கன் அன்ட் எ ரிங் (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்) -ந-இரவீந்திரன்  







கதை,திரைக்கதை, இயக்கம் -                   லெனின் எம். சிவம் -
தயாரிப்பாளர்                                  வஷ்னு முரளி
இசையமைப்பு -                              பிரவின் மணி
ஒளிப்பதிவு                          சுரேஸ் ரோகின
 படத்தொகுப்பு                         பிராஸ் லிங்கம்                                  
நடிப்பு                                                                  ஜான் Berri  -டேவிட் பி ஜார்ஜ்- ஜி                                         
                                                                               ஆர்தர் சிமியோனின்
                                                                                சுதன் மகாலிங்கம்- சேகர்- தேனுகா
                                        கந்தசாமி

கால நேரம் -(104 நிமிடங்கள் )

                4கனடாவிலிருந்து வெளியேறும் இறுதி நாளில் மாலைப் பொழுதில் (மன்ற ஒன்று கூடலுக்கு முன்னதாக) ஒரு திரைப்படத்தை நான் பார்த்து அது குறித்த விமர்சனத்தைக் கூற வேண்டுமென நண்பர் சேகர் கேட்டுக் கொண்டார். "எ கன் அன்ட் ரிங்" என்ற அந்த சினிமாவை எழுதி இயக்கியிருந்த லெனின் எம்.சிவம் தனது இல்லத் திரையில் அதனைக் காட்சிப்படுத்தியிருந்தார். விரைவில் கனடாவில் திரையிடப்பட உள்ள அதனை முன்னதாகப் பார்க்க இயலுமானதர்க்கு நண்பர்களுக்கு நன்றி சொல்வது அவசியம். ஏற்கனவே இது சீனாவின் சங்காய் நகரில் (2013 ஆண்டு June 19 ) போட்டிக்காக காண்பிக்கப்பட்ட தமிழர்களின் முதலாவது திரைப்படம்.112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து போட்டிப் பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களிலிருந்து 12 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியுள்ளன .இது தெரிவு செய்யப் பட்டமையே இதன் தகுதிக்கான சான்றாக அமைகிறது. அவற்றுள் ருசியத் திரைப்படம் விருதைத் தட்டிச் சென்ற போதிலும் இது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. பார்க்கும் எவரும் பாராட்ட முன்வரும் படைப்பாகவே இது அமைந்துள்ளது.  . இத்திரைப்படத்தை 1999 திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி இயக்கியிருந்தார்.
         சரியான கதைத் தேர்வு உரிய வடிவப் பொருத்தத்துடன் வெளிப்பாடு எய்தியமையால் இந்தத் தகுதிப்பாட்டை எட்டியுள்ளது. எமது வழக்கமான தமிழ்ச் சினிமாவிலிருந்து வேறுபட்டு உண்மையில் சினிமா மொழி எவ்வகையில் அமைதல் அவசியமோ அவ்வகையில் இது படைப்பாக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தன்மையான சினிமாக்கள் மிக மிகக் குறைவு. அதன் காரணமாக இதனை எடுத்த எடுப்பில் எமது ரசனைக்குரியதாக்குவதில் சிரமம் இருக்கலாம். அதனோடு ஒன்றித்துப் பயணிக்கும்போது நல்ல சினிமாவை அனுபவித்த இன்பத்தைப் பெறவியலும். நேர்கோட்டுப் பாதையில் கதை சொல்வதாயில்லாமல் பார்வையாளரை சிந்தனைவயப்பட்ட உடன் பயணியாக அழைத்துச் செல்லும் வகையில் காட்சித் தொகுப்புகளைக் கட்டமைத்துச் செல்கிறது இவ் நாடக  திரைப்படம்.
 
             இந்திய மண்ணில் தளம் அமைத்துப் பல இயக்கங்கள் செயற்பட்ட எண்பதுகளின் ஒரு காட்சிப்படிமத்துடன் சினிமா தொடக்கம் பெறுகிறது. இயக்கத்திலிருந்து தப்பியோட முனைந்த நண்பர்கள் குறித்த தகவலை விசாரிப்பாளர் அறிந்திருப்பதாக நம்பி உண்மைகளைக் கக்கிய ஒரு போராளி வெளியேற அனுமதிக்கப்படுகிறான். சில ஆண்டுகளின்பின் (சமகாலத்தில்) அவன் கனடாவில் தனது மனைவி இன்னொருவனோடு வாழ சென்றது குறித்து அவர்களோடு தர்க்கப்படுவதில் அடுத்த காட்சிப்படிமம் தொடங்கும். அவள் திருமண மோதிரத்தைக் கழற்றி மூஞ்சியில் விட்டெரிந்து இனிமேல் தொந்தரவு செய்துகொண்டு வரவேண்டாம் என எச்சரிப்பதோடு அடுத்த காட்சிப்படிமம் தொடரும். பின்னரான காட்சிகளை இங்கே என்னாலும் அதே ஒழுங்கில் தர இயலாது; அது அவசியமும் இல்லை. இன்றைய கனடா மண்ணின் சில நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. ஒர்கனில் ஈடுபாடின்றி அல்லாடிக்கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனிடம் அவனது தந்தை வந்து அவனது நண்பன் பொதுத் தோட்டத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பதான செய்தியைக் கூறுவார். உணர்வற்றவகையில் கேட்டு, தொடர்ந்து ஒர்கனில் விரலை தவழவிடுகிரவனின் முகத்தில் ஒரு சோகமும் எதிர்பார்த்தது போன்ற பிரதிபலிப்பும் இருக்கும். இறுதியில் இவன் அந்த நண்பனின் தந்தையிடம் வந்து, அது தற்கொலையல்ல, தனது தந்தை மேற்கொண்ட கொலை நடவடிக்கை என்பதைக் கூறும்போது அவனது கையில் நண்பனின் தந்தை வழங்கும் துப்பாக்கி(நீயே உன் தந்தையைத் தண்டித்துக்கொள் என்பதாக). இடையில் அமைந்த காட்சிப் படிமங்களைத் தாண்டி இதை நான் இங்கே கூறுகிறேன். படம் பார்த்துமுடிக்கும்போது எமக்குள்ளே ஓடும் எமக்கேயான சினிமாவானது காட்சிகளை ஒன்றிணைத்து விசாலித்த வாழ்க்கை அனுபவங்களைக் கட்டமைத்துக்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நண்பனின் தந்தை வழங்கிய துப்பாக்கி அவரைச் சுடுவதற்காக முன்னாள்(மாற்று இயக்கப் போராளி) கொண்டுவந்திருந்ததாகும். தன்னை விட்டு விலகிய மனைவியையும் புதிய கணவனையும் கொல்வேன் என ஆரம்பத்தில் கூறிப் போனவன் பின்னால் துப்பாக்கியைத் தேடிப் போனபோது அதற்காகவே தேடுவதாக எண்ணியிருந்தோம். முடிவில்தான், இடையில் மறைக் காட்சியில் இந்த தந்தையாகியுள்ள முன்னாள் விசாரிப்பாளரை அவன் கண்டுகொண்டதை அறிவோம். அவன் தேடிய துப்பாக்கி கிடைக்காமல், ஆகாயத்திலிருந்து விழுந்த(கடவுளே தந்ததாக அவன் கருதும் துப்பாக்கி) விசாரிப்பாளனைக் கொல்வதே நியாயம் என உணர வைத்திருந்தது. பொல்லால் அடித்தே கொல்கிற அவனது தாக்குதலுக்கு உள்ளான தனது உடல்நிலை காரணமாயே தனது மனைவி தன்னை நீங்கியதாக அவன் முடிவு செய்கிறான். மேலிருந்து விழுகிற துப்பாக்கி தனியே விளையாடும் தமிழ்ச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்காலாக்கிக் கொல்லும் கயவன் ஒருவனின் கையிருந்து நழுவி விழுந்ததாகும். அந்தக் கயவனைத் துரத்திக் கொல்லும் ஆங்கில காவலன் காதல் தோல்வியில் கழற்றி வீசிய மோதிரம் யுத்த பூமியிலிருந்து போன தமிழ்ப் பெண்ணின் விரலுக்கு ஆபிரிக்க கறுப்பின அகதியால் காதல் அடையாளமாக அணிவிக்கப்படுவது தொடர்பில் இன்னொரு கதையும் அங்கங்கே காட்சிப்படிமன்களாய் அவ்வப்போது ஊடறுத்து வந்தது. இன்றைய வாழ்நிலையில் கனடாத் தமிழரின் இரண்டக மனத்தை வெளிப்படுத்துவதும், இனம் கடந்து போர்ச் சூழல் ஏற்படுத்தும் ஒத்துணர்வு அதே பாதிப்பை உணர்ந்தவரிடமே சாத்தியம் என்பதை வெளிப்படுத்துவதையும் காட்டுவதாக இது அமைந்தது.
போர்ச் சூழலில் பாதிப்புற்ற பெண்ணைத் திருமணம் செய்வதாய் அழைத்தவன் பின்னடித்த நிலையிலேயே ஆபிரிக்க யுத்த பூமியோன்றிலிருந்து வந்த இளைஞன் மீது காதல் கொள்கிறாள் தமிழ் யுவதி. மனம் மாறி ஏற்கிறேன் எனவரும் கனடாத் தமிழரிடம் அவள் கூறும் வார்த்தைகள் இத்திரைக் காவியத்தின் அதியுச்சச் செய்தியாகும். வெறும் தமிழ் உணர்வு என்பது மட்டுமே இணைவை சாத்தியமாக்கிவிடாது, யுத்த அவல உணர்வைக் கனடாத் தமிழரால் முழுதாக உணர்ந்துவிட இயலாது-வாழ்ந்து அனுபவித்தவருக்கே இயலுமானது என்பது உணர்த்தப்படுகிறது. ஆக, ஈழத் தமிழ்த் தேசியர், கனடாத் தமிழினத்தவர் என்பவரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு கொள்ள எந்த வடிவில் முயல வேண்டும் என்ற தேடலை மேற்கொள்ள இத்திரைப் பிரதி தூண்டுதலை வழங்குகிறது. இப்பேசு பொருளுக்குப் பாத்திரங்கள் வாயிலாக உயிரூட்டிய நடிகர்கள் அனைவருமே மிகைத்தன்மை அற்ற அவசியப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாத்திரத் தேர்வுக்கும், இயல்பான நடிப்பை வெளிக் கொண்டுவந்த பாங்குக்கும் இயக்குனர் தனியே பாராட்டப்பட வேண்டியராகிறார். வெறும் இனவாதத்துக்கு அப்பால் வர்க்க-தேசிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறும் மார்க்கத்தைத் தேட சினிமா ஊடகம் வாயிலாக வழிப்படுத்தும் இந்தத் திரைப்படம் கதை சொல்லல் என்பதற்கும் அப்பால் திரை மொழி வெளிப்பாட்டிலும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்ச் சினிமா இன்னொரு தளத்தில் புதிய பரிமாணத்துடன் மேற்கிளம்புவதை லெனின் எம்.சிவம் சாத்தியப்படுத்தி உள்ளமைக்காக பாராட்டப்பட வேண்டியவர்.


Friday, December 6, 2013

பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .

Photo: பேராசிரியர் கைலாசபதி  31வது நினைவு  ஆண்டு . 
(5-4-1933 -- 6-12-1982 )
 எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற  மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.
அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.
அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர்.ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.
இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.
சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!
பேராசிரியர் கைலாசபதி 31வது நினைவு ஆண்டு .
(5-4-1933 -- 6-12-1982 )

எம்மோடு இருந்து வரலாற்றுப் போக்கை முன்னுணர்ந்து கூறி ஆற்றுப்படுத்த இடமற்றுப்போய் முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன.ஆயினும் தீர்க்கதரிசனத்தோடு அவர் கண்டுகாட்டியவாறு நிகழ்வுகள் நடந்தேறி ஒரு வட்டம் நிறைவாகியுள்ளது.அப்போது,1978 இலிருந்து மறைவுவரை(1982) அன்றைய கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற மிதவாத அமைப்பு, தேர்தல் வெற்றிக்காகவும் சுரண்டல் கும்பலைப் பேணவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையில் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்பதை மாதந்தோறும் "செம்பதாகையில்" பத்தி எழுத்தில் அம்பலப்படுத்தி வந்தார் கைலாஸ்.
அந்த எழுத்துக்கள் நூலுருப்பெற்றால் இன்று மிதவாத அமைப்பான கூட்டமைப்பு மீண்டும் நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் தந்திரோபாயங்களின் தலைகீழ் கூத்தைக் காண வழி கிடைக்கும்.அன்று இவர்கள் இஸ்ற்றேலியர்போலத் தமிழர் தமக்கான ஈழத்தைப் பெறுவர் என மேடைகளில் முழங்கியதெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒரே நோக்கத்துக்காகவே;இன்று மேலதிகமாக மாகாண சபையும் கிடைத்துள்ளது.மிதவாதிகளை நிராகரித்துக்கொண்டு இளைஞர் இயக்கங்கள் மார்க்சியத்தேடலை மேற்கொண்டபோது கைலாஸ் தமிழ்த் தேசியம் ஆரோக்கியமான பாதையில் முன்னேறும் எனக் கருதினார்.
அவரது மறைவின்பின்னர்,மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தீவிரவாதம்போலத் தோற்றம் காட்டும்வகையில் ஆயுதம் ஏந்திய மிதவாதிகள் தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்றி இறுதியில் கழித்தல் பெறுபேறில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளனர். ஆயினும் மிதவாதம் பத்திரமாக மீண்டும் பாராளுமன்ற ஆசன அரசியலை முன்னெடுக்க இயலுமாகியுள்ளது.ஆயுதம் ஏந்துவதே தீவிரவாதம் ஆகிவிடாது;கூட்டணியின் மிதவாத அரசியலையே புலிகளின் ஆயுதமும் பேசியது.அவர்களால் துரோகிகளாக்கப்பட்ட மார்க்சியத் தேடல் இளைஞர்களிடம் தவறுகள் இருந்த போதிலும் தீவிர வாதத்தோடு ஒரு தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய முயன்றிருப்பார்கள்.
இப்போது அடைந்தால் ஈழம் மட்டுமே என்ற "தீவிரவாதம்"(இது உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கான வெற்றுக் கோசம் என்பதை உணராத மிதவாதத்தின் விடலைப்பருவக் கோளாறன்றி வேறேதுமில்லை).எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதே இன்றைய மிதவாதிகள் முன்னுள்ள சவால்.அதனை எமது மேலாதிக்க சக்திகளான பௌத்த-சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பதான இனவாதக் கூச்சலைப் போட்டவாறே,அவர்களோடு கள்ளக் கூட்டமைத்து(இரு தரப்பும் மக்களைப் பிரிக்க இனவாதத்தைக் கக்கியவாறே தமக்குள் உறவைப் பேணிவருகின்றனர்) ஒரு தீர்வை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதன் வாயிலாக முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றனர்..இதனை இலங்கை முழுவதையும் கபளீகரம் செய்துள்ள இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மீது கருத்தியல் ஆக்கிரமிப்பும் செய்து, மோசமாக சுரண்டியும்வருகிற தமிழக சுரண்டல் கும்பல் விளங்கிக்கொள்ளாததுபோல நடித்தவாறு, எம்மீது அக்கறை உடையவர்போல் பிரிவினைக்காக இன்னும் போராடுமாறு எம்மை உசுப்பேத்துவதுதான் உலகப் பெரும் அயோக்கியத்தனம்.
சாதி என்றால் ஆதிக்கம்புரியும் கூட்டமும்,ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சாதிகளும் என்பதுபோலவே தேசம் என்பது மூலதன வாய்ப்போடு மேலாதிக்கம்புரியும் தேசமும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்களும் என்பதே நிதர்சனமாகும்.இந்தியா(அதனுள் இருந்து தமிழகம்) மேலாதிக்க-ஒடுக்கும் தேசம்;இலங்கை முழுவதும்,தமிழ்த் தேசியமும் அவர்களால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் தேசங்கள்.அவ்வாறன்றி தேசங்கள் தமக்குள் சம உரிமையோடு ஊடாட வேண்டுமெனில் சர்வதேசவாதத்தை முன்னெடுக்கும் சோசலிச மார்க்கத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதனையே கைலாஸ் தனது "செம்பதாகை"பத்தி எழுத்தில் மேற்கொண்டு வந்தார்.அவ்வாறு அவரைத் தொடர்ந்து அரசியல் எழுத்தில் ஈடுபடுத்துவதில் தோழர் கே.ஏ.சுப்பிரமனியம் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.அவரது 24வது நினைவு நளான 27.11.2013இல் என் குறிப்பைப் பதிவிடாத காரணத்தால் கைலாசின் 31வது நினைவு நாளில் அந்த இரு சமூகப் போராளிகளுக்கும் புரட்சிகர வணக்கத்தை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் முன்னெடுத்த பாதையில் இன்னுமின்னும் பல நூறு இளைஞர்கள் இணைகிறார்கள் என்ற மகிழ்வான செய்தியை இன்றைய நினைவுகூரலின்போது தெரிவிக்க முடிவது ஓரளவு .நிறைவைத் தருகிறது. தொடர்வோம்!!

Monday, August 12, 2013

அனுபவப் பகிர்வு !

மீண்டும் நீண்டகாலம் உரையாடலில் ஈடுபடாதமை குறித்த வருத்தம் தெரிவிப்போடு, பேசுவதற்கு நிறையவேயுள்ள நிலையில் இந்தப் பதிவு. ஜூலை மாதம் கனடா-அமெரிக்கா பயணம் முடித்துத் திரும்பிய அனுபவப் பகிர்வை பதிவிட எண்ணியிருந்தும் இயலவில்லை. உடன் மட்டக்களப்பு சென்று மாமாங்கத்தில் இடம்பெற்ற கூத்துகளைக் கண்டதோடு, கிழக்குப் பல்கலைக் கழக கருத்தாடல் ஒன்றிலும், நண்பர் ஜெயசங்கரின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டேன்; அதுகுறித்தும் நிறையப் பேச வேண்டும். முன்னதாக இவற்றைப் பொதுமைப்படுத்தி எனக்குள் எழும் உணர்வுபற்றி.
மட்டக்களப்பில் எமது பாரம்பரியக் கூத்துக்கலையை எவ்வாறு கையாள்வது என்ற விவாதம் வலுவடைந்து வருகிறது. பல்கலைக் கழக நாடகத்துறை ஜெயசங்கர் தலைமையில் கிராமங்கள் தோறும் சென்று, அவற்றை பாதுகாத்துக் கையேற்று மீளுருவாக்கி ஏனைய பகுதிகளுக்கு எடுத்து வர, பேராசிரியர் மௌனகுரு அவற்றை ஆய்வுகூட மயப்படுத்துகையை மேற்கொள்கிறார். பின்னதை என்னால் பார்க்க இயலவில்லை. அவர்களது விவாதம் குறித்து முழுமையாக பதிவிடுவதாயின் அந்தத் தரப்பையும் அறிவது அவசியம்; அவர் பின்னர் வருமாறு அழைத்தார்.
இப்போதும் கூத்துகள் குறித்து இங்கு பேச்சில்லை(பின்னால் விரிவாக உரையாடுவோம்-அதற்கான அவசியம் உள்ளது). இருதரப்பும் வெளியே இருந்து நிதி உதவுவது வாயிலாக கூத்தினை நவீன உலகுக்கு எடுத்துவருகின்றன. இந்த வெளி நிதி என்கிற வடிவத்தில் எமது புலம் பெயர் தமிழர்(பு.பெ.த.) எவ்வகையில் உதவலாம் என்பதே இங்கு பேசித் தீர்க்கவேண்டிய விவகாரம். அது ஒரு அமர்வில் முடிவு காணவியலாத சங்கதி எனினும் இன்று தொடங்க ஏற்றதாக அமைகின்றது. அதற்கான உடனடிக் காரணம், யூலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்புத் தொடர்பில் நண்பர் ஒருவர் கூறிய கருத்தாகும். அது அரச சார்பில் நடப்பதாக கூறியோர் கருத்தையும், நிராகரிக்கவேண்டும் என்ற குரலையும் தன்னால் ஏற்கவியலவில்லை என்றார் அவர். பிரதானமாக முப்பது வருடங்கள் பேசவியலாது இருந்த சமாச்சாரங்கள் பேசப்படவேண்டும் என்பதாலேயே தான் கலந்து கொண்டதாக கூறினார்.
இருதரப்புசார்பையும் கடந்த நிலையில் தனது அவதானம் அந்தச் சந்திப்பு அரச சார்பு நிகழ்வாக இல்லை என்பதே. ஏற்பாட்டாளர்களில் ஒருதரப்பிடம் அவ்வாறான ஒரு நிலைப்பாடு இருந்திருந்தாலும்கூட அதற்கு இடமளிக்கப்படவில்லை. சுதந்திரமாக தமிழ்த் தேசியப்பிரச்சனை உட்பட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருட்களாக அமைய இயலுமாயிற்று. குறிப்பாக குடும்ப ஆதிக்கம் என்பதற்கு இடமிருக்கவில்லை. அப்படி சில தலையீடுகள் முளைவிடும்போதே சபை அதை நிராகரித்து இயல்பான ஓட்டத்தை உத்தரவாதப்படுத்தத் தடையிருக்கவில்லை.
மிகப்பிரதான அம்சம், மலையகம்-முஸ்லிம்கள்-சிங்களத்தரப்பு என்பன சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தத்தமது காத்திரமான கருத்துகளை வெளியிட இயலுமாக இருந்தது என்பதுதான் என அந்த நண்பர் வலியுறுத்தியிருந்தார். யாழ்ப்பாண மையவாதத்தைத் தகர்த்துக்கொண்டு, அனைத்துத் தேசிய இனங்களது உரிமைகளைச் சமத்துவ நிலையில் அணுக ஏற்ற களமாக அமைந்தமை கவனிப்புக்குரியது.
இன்னொரு விடயமும் வலியுறுத்தப்பட்டது; பு.பெ.த.சமூகம் எமது விவகாரங்களில் தலையிடாதிருப்பது அவசியம் என்பதே அது. புலப்பெயர்வில் வளமான வாழ்வைப் பெறும் ஒருதரப்பு இன்னமும் இங்கே பிச்சைக்காரன் புண்போல பிரச்சனையை வைத்துக்கொள்ள முயல்வதற்கு எதிரான குரலே அது. மற்றப்படி, பிரச்சனைத் தீர்வுக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்ற தேடலோடு இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களை அவமானப்படுத்துவது அவரது நோக்கமில்லை. தலையீட்டை நிறுத்திக்கொண்டு எமது உரையாடலுக்கு இடமளிக்கப்பட்டது எனத் திருப்தி தெரிவிப்பதில் இந்த வேறுபடுத்தலைக் காண இயலும். இது முக்கியத்துவமுள்ளது.
பு.பெ.த.வின் இலக்கியச் சந்திப்பு மேற்கில் சுதந்திரமாக நடந்துவந்த ஒன்று. அதனை இங்கே கொண்டுவரும்போது தவிர்க்கவியலாத கேள்விகள் எழுந்தன. புலம்பெயர்ந்த எமது சந்திப்பை ஏன் புலத்திலேயே நிகழ்த்தவேண்டும்? தவிர, இங்கு இயல்பான வாழ்வு சாத்தியம் எனக் காட்டும் முயற்சியா இது? இவற்றுக்கான பதில்கள் இங்கே கிடைத்துள்ளன. இங்கே எமது உரிமைகளை வென்றெடுக்க ஒவ்வொரு தரப்பும் முயன்றவாறே இயல்பான வாழ்வில் இருந்துகொண்டுதான் உள்ளோம். புலப்பெயர்வாளர் ஏன் இங்கே சந்திக்க வேண்டும் என்பதற்கும் இதிலே பதில் உள்ளது. நாம் எமக்கான வாழ்வைக் கட்டமைப்பதற்கு குறுக்கீடு விழைக்காமல் எம்மை விளங்கிக்கொள்ள அவர்களுக்கு இந்தச் சந்திப்பு உதவுகிறது. எமது வாழ்க்கைப் போராட்டத்துக்கு இடையூறின்றி உதவ இயன்றதை அவர்கள் செய்ய இயலுமே அன்றி, நாம் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்த முடிவுகளையும் எம்மீது திணிக்க முயலக்கூடாது.
கனடா தென்னையில் இந்த மாட்டை ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி எழலாம். அங்கே இப்போது ஒரு சிறுபான்மைச் சமூகமாக தம்மை நிலைநிறுத்திப் பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுள்ள பு.பெ.த. சமூகம் இங்குள்ள தொப்பூழ்கொடி உறவுகளுக்கு என்ன செய்யலாம் என்ற கேள்விகளோடு உள்ளது. "தாய் வீடு" இதழுக்கு வழங்கிய செவ்வியில், உங்கள் உதவியில் 10 வீதம் மட்டுமே உங்கள் விருப்பத்தீர்வுக்கு வந்தடைகிறது, பெரும்பகுதி கனடா பெருச்சாளிகளுக்கும் இங்குள்ள பெருச்சாளிகளுக்குமே போய்ச் சேர்கிறது என்றேன். சரியான வழியில் 20 வீதத்தை இங்கு அனுப்பிக்கொண்டு, மீதத்தை அங்கே கனடாத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு விருத்திக்கு அவசியமான பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என்றேன். அதுதான் கோயில் கொண்டாட்டங்களும், சினிமா நாயக-நாயகி ஆட்டங்களும் அங்கே களைகட்டுகிறதே என்கிறீர்களா; அதுதான் பிரச்சனை. எங்களை இன்னும் மோசமாக பண்பாட்டு ஆக்கிரமிப்பில் சுரண்டும் கூட்டத்தின் எடுபிடிகளாய் இருந்தவாறு இங்கு குட்டையைக் குழப்பும் கபடகாரச் சினிமா-கோயில் பண்பாட்டு மோகங்களிலிருந்து மீண்டு சரியான பண்பாட்டைக் கட்டமைக்கும் தேவைக்கு அங்கேயும் பெரும்பகுதி பொருளாதாரம் வேண்டியுள்ளது. மிகக் கடும் உழைப்பு வாயிலாகவே தமக்கான வளமான வாழ்வை அவர்கள் வென்றிருக்கிறார்கள். அதனை அவமாவதற்கு இடமளிக்காத புதிய பண்பாட்டைக் கட்டமைக்க அவர்களது உழைப்பின் ஒருபகுதி செலவிடப்பட இயலும்.
இதை அங்கே நான் சொன்னது சரிதானா என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டிருந்தது. சரிதான் என்பதை மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் உணர்த்திநின்றன. கிராமங்களில் கூத்து மக்களால் அவர்களுக்கான இயல்பான வாழ்வின் தேவையின் வெளிப்பாடு; 'வெளியே' இருந்து செல்லும் நிதிக்கு ஒரு வரையறை உள்ளது. அவ்வாறே பு.பெ.த. சமூகம் 20 வீதப் பங்களிப்பின் ஒருபகுதியாக 41வது இலக்கியச் சந்திப்பை யாழ்மண்ணில் ஆரோக்கியமாக நடத்திச் சென்றிருக்கிறார்கள்(புலப்பெயர்வில் புதுவாழ்வு கண்ட முதன்மைக் களத்துக்கு சென்றதன் காரணமாக என்னால் இதில் கலந்துகொள்ள இயலாமல் போனது வருத்தமே). இன்னும் நாலைந்து சந்திப்புகளை உங்களது தேசங்களில் நடத்தியபின் மீண்டும் இங்கே வாருங்கள். வடக்கில் சந்தித்தோம், இனி கிழக்கு-மலையகம்-தெற்கு-மேற்கு என இலங்கை மண்ணின் தமிழ் பேசும் பல்வேறு களங்களிலுமிருந்து உரையாட அவசியமுள்ளது. நானும் உங்கள் மண்ணில்(கனடாவில்) கற்றுக்கொண்டதைப் பதிவிடுவேன். தொடர்வோம்.