]சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக இயங்கும் வரலாறு பற்றி:--
கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் 1848 இல் எழுதிய "கம்யூனிஸ்ட் அறிக்கை" உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அதிமுக்கிய நூல். சர்வதேச உணர்வோடு சமூக மாற்றக் கொந்தளிப்பில் இருந்த ஐரோப்பிய பாட்டாளி வர்க்க அணியின் கோரிக்கையின் அடிப்படையில் அந்த வரலாற்றுச்சிறப்புமிக்க படைப்பை அவ்விருவரும் எழுதியிருந்தனர். அந்த வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அதன்மீது அவசியப்பட்ட சில திருத்தங்களைக்கூட மூலப்பிரதியிலன்றி , பின்னால் அதன் புதிய பதிப்புகளுக்குரிய முன்னுரைகளில் வேண்டிய திருத்தங்களைக் குறிப்பிட்டிருந்தனர். பிரான்சியப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலில் அதிகாரத்தைப்பெற்ற 1871 பாரிஸ் கொம்யூன் தோல்வியுற்ற பின்னர், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்பதை அத்தகைய முன்னுரையிலேயே குறிப்பிட்டனர்.
"மனித வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துவருகிறது" என்பதில், "எழுதப்பட்ட வரலாற்றில்" என்ற திருத்தம் பின்னர் சேர்க்கப்பட்டது. அவகாசம் இருந்திருப்பின் "மூலதனம்" ஆய்வின் பின்னர் "வர்க்கப்போராட்டம் மற்றும் சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக வரலாறு இயங்கி வந்தது" என்பதை சேர்த்து இருப்பர். அதற்கான அடிப்படை மூலதனம் நூலில் உண்டு. ஆசிய உற்பத்தி முறையில் இருந்த வேறுபாட்டை, இங்கு ஐரோப்பாவில்போல அமைப்பு விருத்திகளை ஏற்படுத்தும் வகையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதாக முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் எழுதிக்கொண்டிருந்த வேளை, மார்க்ஸ் அதன்மூலாதாரங்களைத் தேடிச் செல்லும் வகையில் தனது ஆய்வுப் பயணத்தை முன்னெடுத்துச் சென்றார். இங்கு வர்க்கப்பிளவு ஏற்படாமல் முன்னேறிய இனமரபுக்குழு ஏனையவற்றை ஒடுக்கிச் சுரண்டுவதன் வாயிலாக ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோன்றியது எனக்கூறிய கார்ல் மார்க்ஸ், இனமரபுக்குழுக்களின் நீடிப்பே சாதிகள் என்பதையும் கூறியிருந்தார்.
ஆரம்பத்தில் இங்குமாற்றங்கள் நடந்திருக்கவில்லை என்ற கூற்றை நம்பியதுபோலன்றி, இந்த ஆய்வு ஆழப்பட்டபோது சமூக அமைப்புமாற்றங்கள் இங்கு நடந்தேறியமையை மார்க்ஸ் புரிந்துகொண்டார். அந்தத் திசையில் தொடர்ந்து ஆய்வினை வளர்த்திருப்பின், வர்க்கப்போராட்டங்கள் மூலமாக மட்டுமின்றி, சாதிகளிடையேயான போராட்டங்கள் வாயிலாகவும் வரலாறு இயங்கியுள்ளது என்ற திருத்தத்தைச் சேர்த்திருப்பார். வர்க்கப்பிளவு தனிமனிதர்களாய் மக்களை ஆக்கியது போலன்றி சாதிகளான இனமரபுக்குழுக்கள் சமூக வர்க்கங்களாய்ச் செயற்படுகின்றன. இன்றைய முதலாளித்துவச் சமூக அமைப்பில் ஒடுக்கும் தேசம் ஆளும் சமூக வர்க்கமாக இருக்கும்போது, ஒடுக்கப்படும் தேசங்கள் சுரண்டப்படும் சமூக வர்க்கங்கள் ஆகின்றன. ருஸ்யப் புரட்சியின் பின்னர் தேச விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஸலிஷம் வெல்லப்பட்டதை மார்க்ஸ் இருந்து கண்டிருப்பாராயின், "சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் ஊடாகவும் வரலாறு முன்னேறுகிறது" எனும் திருத்தத்தை இணைத்திருப்பார்.
அவர் எழுதாதபோதிலும் அவர் இருந்தால் எப்படிச் சிந்தித்திருப்பார் என்ற பரிச்சையத்தை நாம்கொள்ளும் வகையில் எங்களைப் பயிற்றுவித்திருக்கின்றனர். லெனின் தனது காலத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கு ஏற்ப மார்க்சியச் சிந்தனைமுறையை எவ்வாறு வளர்ப்பது என வருகிறபோது, மார்க்ஸ் இந்தநிலைமையை எவ்வாறு முகங்கொண்டு சிந்திப்பாரோ அவ்வாறு சிந்திக்க வேண்டும் எனக்கூறியதன் வாயிலாக இதனை உணர்த்தியிருந்தார். அந்தவகையில், சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் அண்மைக்காலத்தில் இயங்கியவாறினை எழுதிப்பார்ப்பது சுவாரசியமான முயற்சியாய் அமையும்.
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி(ஐ.தே.க.) ஆட்சியில் இருந்தபோது பிரித்தானிய ஏகாதிபத்தியம் தன் சார்பான சுரண்டலைத் தொடரும் பொறுப்பை அதனிடம் கையழித்து டொமினிக்கன் அந்தஸ்த்துள்ள குடியரசாக அங்கீகரித்தது. ஐ.தே.க. சிங்கள ஆளும் சாதியான கொவியா தலைமையில் இயங்கியது. அது பிரித்தானிய ஏகாதிபதியத்துடன் கைகோர்த்து தரகுமுதலாளித்துவ உறவில்(உள்ளூரில் பிரபுத்துவ ஊடாட்டத்துடன்) திருப்தியுறுவது. அதுவும் ஒருவகைத் தேசியம்(பிரபுத்துவத் தேசியம்) தான். கொவியா சாதியினர் ஏனைய சாதிகளை அணிதிரட்டி அந்தப் பிரபுத்துவத் தேசியத்தை சிறிதுகாலம் இயக்க வல்லவர்களாய் இருந்தனர். கொவியா நமது வெள்ளாளர் போன்ற வேளாண்மை தொடர்பான நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான ஆளும் சாதி; இலங்கைத் தமிழரின் கட்சியாக அப்போது இருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் யாழ்.வெள்ளாளத் தலைமையில் தமிழ்ச் சாதிகளை அணிதிரட்டியிருந்தது. அந்தவகையில் ஐ.தே.க. அரசில் ஆளும் சாதியவர்க்க அணிசேர்க்கையாக காங்கிரஸ் இணைந்திருந்தது. அதெப்பிடி தமிழ்த் தேசியம் உரிமைகள் பற்றிய உணர்வின்றி பேரினவாதத்தோடு கூட்டமைத்தது என்று கேட்கமுடியாது. இனம் இனத்தோடு சேரும் என்றவகைப்பாடு இது. அப்போது எதிர்க் கட்சியாக அமைந்தது தொழிலாளர்களை அணிதிரட்டியிருந்த பாட்டாளி வர்க்கக் கட்சி( சம சமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி எனப் பாட்டாளி வர்க்கக் கட்சி இரண்டு பட்டிருந்தது). தொளிலாளர்களாய் மிகப் பெரும்பான்மையினராக ஒடுக்கபட்ட சாதியினரே இருப்பது யதார்த்தம் என்ற வகையில் ஒடுக்கப்பட்டோர் கட்சியாக அடையாளப்படுத்தப் பட்டதுண்டு. தமிழில் கொம்யூனிஸ்ட் கட்சி என்றால் நளவர்-பள்ளர்(தமிழகத்தில் பள்ளர்-பறையர்) கட்சி என்பது ஏதோ தற்செயலாக ஏற்பட்டுவிட்ட விடயமல்ல. இத்தகைய சாதி அடையாளத்தை மீறி சமூகமாற்றத்தை வேண்டிநிற்கும் உயர்சாதி உழைக்கும் மக்களும் முற்போக்கு சக்திகளும் பாட்டாளி வர்க்கக் கட்சிகளில் இணைந்திருந்தனர்; ஆதிக்கச் சாதிக் கட்சிகளில் உயர்வர்க்கநிலை அடைந்த ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் அணிதிரட்டப்படுவதுபோல. தவிர, ஒருவர்க்கமோ சாதியோ தனது நலன் எதையும் வென்றெடுக்க முயல்கிறபோது, அதனோடு ஒத்து தமது நலன் களை வெறெடுக்கப் போராடும் ஏனைய வர்க்கங்களின் மற்றும் சாதிகளின் அணி சேர்க்கையோடுதான் சாத்தியப் படுத்தையலும்.,
இலங்கையில் சிங்கள-தமிழ் ஆளும் சாதிகளின் ஐக்கியம் முன்னரே ஏற்பட்டிருந்தது. இலங்கையின் முதல் இனக்கலவரமாக அமைந்த முஸ்லிம்களுக்கு எதிரான 1915 ம் ஆண்டின் பேரின வாதத்தின் தாக்குதல் காரணமாக டி.எஸ்.சேனநாயக்க போன்ற கொவியாத்தலைவர்கள் சிறையிடப்பட்டனர். அவர்களை மீட்க நமது வெள்ளாளத் தலைவரான சேர்.பொன். இராமனாதன் உலகயுத்தம் நடந்துகொண்டிருந்த ஆபத்தான சூழலிலும் பிரித்தானியா சென்று வெற்றியோடு திரும்பியிருந்தார்(ஐயோ, பாதுகாப்பாக வர்க்க அடையாளத்தை அந்தத் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே, ஏன் சாதி அடையாளம் என்று அலறுகிறவர்களுக்காக, அவர்களெல்லாம் அந்த ஆளும் சாதிகளின் நலன் களைப் பாதுக்காக்கவே முயன்றனர் என்ற உண்மையை மூடிமறைத்துவிட முடியாது; தமது ஆளும் சாதியவர்க்க நலன் பேணப்படுவதை உத்தரவாதப்படுத்திய வண்ணம் 'முழு மக்களுக்காகவும்' அவர்கள் உழைத்தார்கள் என்கிறவகையில் 'தேசிய' மற்றும் 'சிங்கள' அல்லது 'தமிழ்' தலைவர்களாக அவர்கள் கொண்டாடப்படுகின்றனர்). அடுத்து நடந்த சட்ட மன்றத்துக்கான தேர்தலில் இலங்கையருக்கான ஆசனத்தை தமது சகபாடியான வெள்ளாளத் தலைவருக்கு வழங்க கொவியாத் தலைவர்கள் முன்வந்தனர். எதிர்த்து வேட்பாளராக நின்றவர் கரவா சாதித் தலைவர். கொவியா-வெள்ளாளக் கூட்டினால் அந்த கரவாத் தலைவர் தோற்கடிக்கப்பட்டார்.
இது பின்னால் இலங்கை இனப்பிரச்சனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதன்முதலில் சிங்கள வணிககுலாமாக தோன்றி வளர்ந்த பிரிவினராக கரவா சாதியினர் இருந்தனர். ஏகாதிபத்தியத்தோடு தரகு உறவில் ஆட்சியைப் பங்குபோட்டுள்ள கொவியா-வெள்ளாள ஆட்சியாளர்களிடமிருந்து தேசிய முதலாளித்துவ வளர்ச்சி பெறப் போராடும் கரவாசாதியினர் அதிகாரத்தைக் கைமாற்றியெடுக்க முயலும்போது அந்த ஆளும்சாதிகளுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. இதன் வெளிப்பாடாக சிங்கள தேசிய சக்திகள் வெள்ளாளர்களுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பேரில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இயங்கினர்(துர்ரதிஷ்டவசமாய்த் தமிழ்த் தேசியம் யாழ்.வெள்ளாளத் தேசியமாயே இயங்கி வந்தது). கரவா-வெள்ளாள எதிர்ப்பு சிங்கள-தமிழ் எதிர்ப்பாகப் பரிணமித்தமை குறித்து ச.சத்தியசீலன் "இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்" நூலில்(பக்.60-61) தெளிவுபடுத்தியுள்ளமை காரணமாய் இங்கு விரித்துரைப்பதைத் தவிர்க்கிறேன்.
பண்டாரநாயக்க தலைமையில் தேசிய முதலாளித்துவ எழுச்சி ஏற்பட்டு 1956 இல் ஆட்சியைக் கைப்பற்றியபோது சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரும் சக்தியாக அணிதிரண்டவர்கள் பிரதானமாய் கரவா சாதியினர். இந்தத் தேசிய முதலாளித்துவ எழுச்சியின் தலைவராக இருந்தவர் கொவியா சாதியினர் என்பது ஒருமுரண். இருப்பினும் அவர் கிளர்ச்சியுறுத்திய கோரிக்கைகளில் புதிய சக்திகள் ஆட்சியில் பங்கேற்றது என்பதே கவனிப்புக்குரியது. பெருமுதலாளி வர்க்கமாகப் பரிணமித்து ஐ.தே.க. இல் அணிதிரண்ட தரகுவர்க்கமும் தேசிய முதலாளித்துவமும் மாறி மாறி அதிகாரத்தில் பங்கேற்றன; ஆயினும் நாட்டின் பிரச்சனைகளை அவற்றால் வளர்க்கத்தான் முடிந்ததே அன்றித் தீர்வுகளை எட்ட இயலவில்லை. குறிப்பாக இனப்பிரச்சனை பூதாகாரமாக்கப்பட்டது. தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகளால் எழக்கூடிய எதிர்ப்பைத் திசைதிருப்பவும் இன முரண் கூர்மையாக்கப்படுவது பயனுள்ளது என ஆதிக்க சக்திகளுக்குப் படுகிறது. ஏனைய தேசிய இனங்களின்மீது ஆதிக்கம்புரியும் வாய்ப்பில் சிங்கள இனத்தினுள் உள்ள பல் வேறு சாதிகளிடையேயான முரணையும் மீறி ஆளும் இனம் எனும் பொது அடையாளம் "ஒடுக்கும் சமூக வர்க்கமாக" ஆகியுள்ளது. ஆயினும் சிங்கள மக்களுக்குள்ளும் ஆதிக்க சாதித் தேசியம்-ஒடுக்கப்படும் சாதித் தேசியம் என்பவற்றோடு இடைச் சாதிகளின் தேசியமும் இயங்கவே செய்கிறது. ஒரு புரட்சிகர அணி இந்த முரண்பாட்டை எவ்வாறு கையாள்வது என்பது பிரதான அம்சமாகும்.
நீண்ட காலமாக இலங்கைத் தேசியம் என்பதைச் சிங்களத் தேசியமாகவே காண முற்போக்கு சக்திகளாயுள்ள சிங்கள மக்களும் பழகியுள்ள அவலம் இன்னமும் மாறவில்லை. இப்போது ஓரளவு பல்தேசியம் பற்றிப் பேசப்பட்டபோதிலும் அதன் உள்ளார்ந்த பொருளை முழுமையாக கவனம் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கில்லை. இனப்பிரச்சனையில் தவறு செய்துள்ளது என்பது உட்படப் பல்வேறு காரணங்களால் ஜெ.வி.பி.யிலிருந்து பிளவுற்றுப் புதிய கட்சியாக தோற்றம்பெற்றுள்ள "முற்போக்கு சோசலிசக் கட்சி" பல அம்சங்களில் ஆரோக்கியமான முன்னேற்றங்களைக் காட்டியபோதிலும் இனப் பிரச்சனையில் தெளிவான பார்வையை வெளிப்படுத்த இயலவில்லை. அதன் உருவாக்கத்தின் போது 'தினக்குரல்' பத்திரிகைக்கு 2012 ஏப்பிரல் 1 ம் திகதியன்று வளங்கிய செவ்வியில் புபுது ஜெயகொட "தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றிய ஒரு நாட்டை உருவாக்குவதில் கட்சிக் கொள்கைகள் அமையும்" என்றுதான் கூற இயலுமாயிற்று; இனவேறுபாடுகளின் தனித்துவம் பேணப்பட்டு உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படும் என்பதை அழுத்திச் சொல்ல இயலவில்லை. "தேசியப் பிரச்சனை எனும் வலைக்குள் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களுக்காகவும் போராடுவோம். தமது ஆட்சி அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கள பேரினவாதத்தை வளர்த்துள்ள எமது நாட்டில் சிறந்த ஆட்சிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்" என புபுது ஜெயகொட கூறுகின்றபோது பல்தேசிய நாடாக அங்கீகரித்து சிறுதேசிய இனங்களின் உரிமையை ஆணித்தரமாய் வலியுறுத்தக் காலம் கனியவில்லை என்பதே வெளிப்படுகிறது.
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய புரிதலின்றி 'தேசியப் பிரச்சனை எனும் வலைக்குள் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்கள்' எனக்காண்பதே தூய வர்க்க இருப்பை மட்டும் கவனங்கொள்ளும் பார்வைக் கோளாறு சார்ந்தது. ஒற்றைத் தமிழ்த்தேசியம் பற்றிப் பார்க்க விரும்பி, இப்போதெல்லாம் சாதி முரண் எதுவும் இல்லை என வாதிடும் ஆண்டபரம்பரைப் பார்வை போன்றதுதான் இந்த 'ஆளும் சமூக வர்க்கமான' சிங்களச் சமூகத்திலிருந்து தேசியப் பிரச்சனையைக் குறைமதிப்பீடு செய்தலும். உங்களது வர்க்க பேதம் மட்டுமல்ல, சமூக வர்க்கமாக தேசிய இனங்கள் ஒடுக்கப்படும்போது, அதற்கெதிரான போராட்டமும் அழுத்திக் கவனம் செலுத்தப்பட அவசியமானது; இப்போது சிங்கள மக்களை அணிதிரட்ட இதனை அடக்கி வாசிக்கலாம் எனக் கருதுவீர்களாயின் நீங்கள் அடைய விரும்பும் சோசலிசத்தை ஒருபோதும் அடைய இயலாது என்பது தெளிவு; எப்படி ஆதிக்கசாதியமுதலாளித்துவக் கட்சிகளில் ஒன்று இனத்தீர்வை முன்வைத்தால் மற்றது எதிர்த்து ஆட்சிக்கவிழ்ப்பையே செய்ய இயலுமாக இருக்கிறதோ, அவ்வாறே நீங்கள் கட்டியெழுப்ப முனையும் சோசலிசம் நியாயமான இனப்பிரச்சனைத் தீர்வை முன்வைக்கும்போது, அந்தச் சோசலிசக் கட்டுமானத்தைத் தகர்ப்பதற்கும் அதனைக் கையாள்வார்கள். ஆக, முன்னதாக இனப்பிரச்சனைத் தீர்வுக்கான தெளிவான வரையறைகளை முன்வைத்து அணிதிரட்டப்படும் சிங்களப்பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்படும் சாதிகள் எனும் புரட்சிகர சக்திகளே வென்றெடுக்கப்படும் சோசலிசத்தைப் பாதுகாக்க வல்லவர்களாவர். தவிர, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை அணி திரட்டவும் இந்தக் கோட்பாட்டு முன்வைப்பு அவசியம்; அவ்வாறு இல்லாதபோது, தமிழ்-முஸ்லிம் மக்களில்தான் சோசலிசத்தை ஏற்க முடியாத தவறு இருப்பதாகக் கருதி முன்னதாக அணிதிரட்டப்படும் சிங்கள மக்களை வைத்து 'சிங்களச் சோசலிசத்தை' வென்றெடுத்து நியாயமான ஆட்சியினால் சிறுதேசிய இனங்களை வளைத்துப்போடலாம் என்ற குறுக்கு வழிதேடுவது ஏற்படும். அந்த வேக அவதியில் ஏற்கனவே ஜெ.வி.பி. வாயிலாக போதிய அளவில் இரத்த காணிக்கை செய்யப்பட்டுள்ளதை மறக்காதிருப்பது அவசியம். வரலாற்றில் இருந்து கற்கத்தவறுவது எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது.
தமிழ்த் தேசியத்தின் மிகமோசமான தோல்வியில் அதனை முன்னெடுத்த யாழ்.வெள்ளாளத் தேசியத்தின் தவறுகளைக் காணத் தவறுவதிலும் இப்பண்பைக் காணலாம். ஆதிக்க தேசியத்தைவிட தலித் மற்றும் இடைச் சாதித் தேசிய நலன் களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது அவசியம்; அதேவேளை, வெள்ளாளத் தேசியமும் பேரின வாதத்தால் ஒடுக்கப் படுகிறது என்றவகையில் மக்கள் விடுதலைக்கு அவசியமான அதன் கோரிக்கைகளையும் புரட்சிகர அணி கவனத்தில் கொள்ளவேண்டும். பிரிந்து செல்லமுடியாத சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு ஏற்கப்பட வேண்டும் என்பதைச் சிங்கள முற்போக்கு சக்திகள் ஏற்பது அவசியம் என்பதுபோலவே, தலித் தேசிய நலன் குறித்த அக்கறை தமிழ்த் தேசியத்துக்கு இருந்தாகவேண்டியது கட்டாய நிபந்தனை.
யாழ்.வெள்ளாளத் தேசியம் தலித் தேசியத்தைக் கவனங்கொள்வது போல கிழக்கு மக்களின் தேசிய உணர்வையும் மதிக்கவேண்டியுள்ளது; சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்படும் தேசம் ஒன்றினுள் இருக்கும் உள்-முரண்பாடு சார்ந்தது இது. இன்று ஆளும் தேசியமாயுள்ள சிங்களப் பேரினம் தனது இறைமையை ஏற்கனவே இந்திய மேலாதிக்கத்திடம் இழந்துள்ளது; இன்று அமரிக்க மேலாதிக்கத்திடம் மிச்சம் மீதியாக எதை அடைவு வைப்பது என்று அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆதிக்க சாதிய வர்க்க சக்தி இறைமையைத் தாரைவார்ப்பது பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை; உள்ளூரில் ஆதிக்கத்தைத் தமது கைகளில் வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களது குறி.
சின்னமீனைப் பெரியமீனும், அதைப் பென்னாம் பெரிய மீனும் விழுங்கும் விலங்கின விதி இன்னும் செயற்படும் வகையில் சுரண்டல் அமைப்பு நீடிப்பதன் பேறு இது. ஆக, "உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்" எனும் கோசத்தை முன்வைக்க அவசியமாகும் வகையில், பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்ட தேசத்தை ஐக்கியப்படுத்தும் அதேவேளை அதனுள் ஒடுக்கப்பட்ட சாதிய சக்திகளை புரட்சிகர அணிதிரட்டலில் கூடுதல் கவனங்கொள்ளல் வலியுறுத்தப்பட வேண்டியதாகிறது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட சாதிகள் குறித்து அழுத்தம் கொடுக்கும்போது ஒடுக்கப்பட்ட தேசம் ஒன்றைப் பலவீனப்படுத்துவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. இது ஆதிக்கசாதி நலன் பேணும் பாதுகாப்புணர்வில் இருந்து வெளிப்படும் அக்கறையே அல்லாமல் விடுதலை உணர்வின் பாற்பட்டதல்ல. தலித் தேசியம் என்று பேசுவதெனில் அவர்கள் தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறார்களா எனக் கேட்கப்படுகிறது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களாயினும் மத அடிப்படையில் தனித் தேசிய இனமாக விளங்கும் முஸ்லிம் மக்கள் நிலத் தொடர்பில்லாமலே தமது சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த வல்லவர்களாயுள்ளனர். அதே போன்றே தலித் மக்கள் நிலத் தொடர் பில்லாத போதிலும் அவர்களுக்கான சுயநிர்ணய வடிவத்தைக் கண்டறிய இயலும். முஸ்லிம் தனித் தேசியம் பற்றிக் கூறியது நிலத் தொடர்பின்றி இருக்கும் தேசியத்துக்கான உதாரணத்துக்கு மட்டுமே. தலித் தேசியம் என்பது தமிழ்த் தேசியத்துக்கு உட்பட்ட இரட்டைத் தேசிய வடிவத்துக்குரியது. முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் ஆகியோர் தனித் தேசிய இனங்களாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டதில்லை; இப்போது ஏற்றுக்கொள்ளப் படுவதால் விடுதலைப் போராட்டம் பலவீனப்பட்டுவிடாமல் எப்படி சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த இயலுமாகிறதோ, அவ்வாறே தலித் தேசியம் என தமிழ்த் தேசியத்தினுள் உட்பட்டிருக்கும் வடிவத்தை இனங்காண்பதை விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதாக ஆக்க இயலும். சமூகப் பிரச்சனைகளை இலகுவான சமன்பாடுகளுக்குள் வைத்து தீர்வு தேடிவிட முடியாது. இரட்டைத்தேசிய வாழ்முறை நிர்ப்பந்திக்கும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இயங்காத போது எம்மால் வரலாற்றைக் கையேற்க இயலாது; கடந்த முப்பது ஆண்டுகளாய்ப் பிறரது ஆக்கிரமிப்புக்கு கருவிகளாய் இருந்து அவலப்பட்டது போல இன்னும் நாசப்படுவதே நீடிக்கும்.
அந்தவகையில், சுரண்டலின் வடிவத்தை வர்க்க ரீதியில் மட்டும் பார்ப்பதிலிருந்து விடுபட்டு சாதி, தேசம் எனும் வடிவில் 'சமூக வர்க்கமாக' சுரண்டப்படுவதும் நிதர்சனம் என்ற புரிதலுடன் அணுகுவதற்கு ஏற்றதாக எமது பார்வையைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். வர்க்கப் போராட்டம் மட்டுமன்றி சமூக வர்க்கங்களான சாதி, தேசம் என்பவற்றின் இடையேயான போராட்டங்கள் வாயிலாகவும் வரலாறு இயங்கியுள்ளது என்பதையும் கவனத்தில்கொள்வோம். இந்த மாற்றுவடிவத்தில் சமூக அமைப்பு மாற்றத்துக்கான புரட்சி எவ்வாறு அமையும்? பொருளுற்பத்திமுறை இயங்காற்றல் குறித்து "மூலதனம்" ஆய்வை மேற்கொண்ட கார்ல் மார்க்ஸ் இனமரபுக்குழு மேலாண்மையால் சுரண்டல் சாத்தியப்படும் மற்றொருவடிவத்தைக் காட்டியிருந்தார்-அதன் பேறானதே ஆசிய உற்பத்திமுறை என்ற புரிதலும் அவருக்கு இருந்தது; ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில், அதெப்பிடி முகமது நபியினால் மதவடிவத்தினூடாக ஒரு சமூகமாற்றப் புரட்சியை நிகழ்த்த இயலுமாயிற்று என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து அவர் வாழ்ந்திருப்பின், சமூக வர்க்கங்களிடையேயான போராட்டத்தில் சமூக மாற்றம் பண்பாட்டுப் புரட்சி வாயிலாகவே நடந்தேறுகிறது என்பதைக் கண்டுகாட்டியிருக்க வாய்ப்பிருந்தமையை உணர்த்தும் கண்ணிகள் இவை.
முகமது நபி அரபுச் சமூகத்தில் அந்தச் சமூக மாற்றத்தை பண்பாட்டுப்புரட்சி வாயிலாக நிகழ்த்திய போது, இனமரபுக் குழுக்களாக ஒன்றோடு ஒன்று மோதிய நிலையிலிருந்து அனைவரும் சகோதரர்கள் என ஒருவர்போல ஐக்கியமுறுவது சாத்தியமானது. முன்னதாக யூத மதத்தினுள்ளும் ஓரே இரத்தம் எனும் பிணைப்பு இருந்தது; அது ஒரே இனமரபுக் குழுவின் தொடர்ச்சியின் பேறானது. இதன் காரணமாக, தாம் மட்டுமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்ற உணர்வோடு பிறரிலிருந்து ஒதுங்கும் மனப்பாங்கு அவர்களிடம் காணப்பட்டது. அந்த யூத இனத்தில் வந்த யேசுகிறிஸ்து யூதர்கள் மட்டுமன்றி மனிதர்கள் அனைவருமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே எனப் புதிய ஏற்பாட்டைச் சாத்தியமாக்கியிருந்தார். கி.பி.நாலாம் நூற்றாண்டில் அந்தக் கிறிஸ்தவ மதத்தை ரோம் பேரரசு கையேற்று ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவத்துக்கான மதமாக்கியிருந்தது. அரபு மண்ணில் பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்திய கிறிஸ்தவம் இவ்வகையில் வர்க்கப் புரட்சியை நடாத்திய ரோமினால் கையேற்று வளர்க்கப்பட்ட புதிய வடிவத்தில் மீண்டும் அரபு மண்ணில் அறிமுகமாகிய நிலையிலேயே கி.பி.ஏழாம் நூற்றாண்டில் முகமது நபி மற்றுமொரு பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்துகிறார். பழைய ஏற்பாடான யூத இறையியல், புதிய ஏற்பாடான கிறிஸ்தவ இறையியல் என்பவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இது அமைந்தபோது, இனமரபுக்குழுப் பேதங்களைத் தகர்த்துக்கொண்டு ஒரு சமூக அடையாளத்தை ஏற்படுத்த வேண்டியதாகிறது.
இந்த மாற்றம் மிகுந்த கவனிப்புக்குரியது. வர்க்கமுறை அறிமுகத்தை அரபுச் சமூகம் பெற்ற அக்காலம் வணிகத்தில் வீச்சோடு முன்னேறக் கால்பதித்து அடுத்த ஆயிரம் ஆண்டுகள் உலகை வெற்றிகொள்வதில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய காலம். பின்னாலே ஐரோப்பா மூலதனத்தைக் கண்டறிய வாய்ப்புப் பெற்றது போன்ற மற்றொரு வளர்ச்சி நிலை போல இல்லையெனிலும், இப்புதிய நிலையில் தேசியம் என்ற புதிய வடிவம் சாத்தியப்பட்டது போல முன்-தேசிய வடிவம் ஒன்றை அந்த வணிக எழுச்சிக் கட்டத்தில் முகமது நபி சாத்தியமாக்கினார். அதன்பேறானதே உலகின் எந்தமூலையில் இஸ்லாத்துடன் இணைகிறவரும் "முஸ்லிம்" எனும் ஒரே அடையாளத்தைப் பெறுவது ஆகும். எப்படி சாதியின் முன்-தேசிய வடிவம் இன்றைய தேசிய அரசியல் சாத்தியத்தில் இரட்டைத் தேசிய வடிவம் கொள்ள காரணமாயிற்றோ, அப்படியே முஸ்லிம் மக்கள் தனித் தேசிய வடிவம் கொள்வதற்கு அந்த மதத்தின் தோற்றத்தின்போதே இவ்வகையில் விதையூன்றப்பட்டிருந்தது.
அரபு மண்ணில் இனமரபுக்குழு வாழ்முறை இவ்வகையில் தகர்க்கப்பட்டு ஒரே இனத்தேசிய வடிவத்தை முஸ்லிம்கள் பெற இயலுமானது போன்று இந்து மதத்துக்கு செய்தாக வேண்டிய அவசியம் இல்லாதது மட்டுமன்றி, இனமரபுக்குழுத் தொடர்ச்சியான சாதிவாழ்முறையை நீடிப்பதே அதுபேண விரும்பிய சமூக அமைப்பாகவும் இருந்தது (முஸ்லிம் மக்கள் ஒருதேசிய இனமாக உள்ள வாய்ப்பென்பதை, அவர்க்ளுக்குள் மொழி ரீதியாக தேசிய இன வேறுபாடுகொள்ள இடமில்லை எனப் பொருள்கொள்ள வேண்டியதில்லை; இந்தியாவிலிருந்து முஸ்லிம் தேசம் எனப் பாகிஸ்தான் தனி நாடாக முடிந்தமையையும், இரு தசாப்தங்கள் கடந்தபோது பாகிஸ்தான் என்ற முஸ்லிம் தேசத்தினுள் வங்காள இனத்தேசியம் ஒடுக்கப்பட்டபோது பங்களாதேஸ் தனிநாடாகப் பிரிந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதையும் மனங்கொள்வோம்). இவ்வாறு இந்துசமயம் சாதித் தேசங்களாய் வேறுபடுத்தியிருந்த நிலையிலும் இந்தியா ஒரு தேசமாகக் கட்டமைக்கப்பட்டது எப்படி? பிராமணத் தேசியம் இந்தியா முழுமைக்கும் பொது இணைப்பை ஏற்படுத்த பெற்றிருந்த வாய்ப்பின் பேறு அது. பிராமணத்தேசிய அரசியல் இயக்கமாக கொங்கிரஸ் தோற்றம் பெற்றபோதே ஜோதிராவ் பூலே வடக்கிலும், அயோத்திதாசர் தெற்கிலும் சொல்லியிருந்தனர், இது பிராமணத்தேசத்தைக் கட்டமைக்க எடுக்கப்படும் முயற்சியென்று. பின்னாலே, அம்பேத்கர் தலித் தேசிய (ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல்) இயக்கத்தைமுன்னெடுத்தார். வடக்கில் எதிர்த் தேசியமாக தலித் இயக்கம் தோன்றிய சமகாலத்தில் தெற்கில் பெரியார் தொடக்கி வளர்த்த எதிர்த்தேசியமாக திராவிட இன அரசியல் எழுச்சி பெற்றமை தற்செயலானதல்ல; தமிழ் இனத்தேசியத்துக்கான அவசியத்தின் வெளிப்பாடு அது. இந்தத் தமிழினத் தேசியத்துக்குள் தலித் தேசிய எழுச்சி அவசியப்பட்டமையை எண்பதாம் ஆண்டுகளின் அரசியலாகக் கண்டோம். ஆக, இந்திய நாடு ஒரு தேசமாக முடிவதில் இந்துமதத்தின் பிராமண சாதித் தேசியம் வாய்ப்பளித்த போது, மொழி ரீதியிலான ஒடுக்கலுக்கு எதிராய் இனத்தேசியம் உருவாக இயலுமாகும் அதேவேளை ஒடுக்கப்பட்ட சாதியினரின் எதிர்த் தேசியம் நாட்டுத் தேசியத்தினுள்ளும் இனத் தேசியத்தினுள்ளும் இயங்க ஏற்றதாக இந்துவாழ்முறை அமையக் காண்கிறோம்.
தேசியம் என்பதே பொதுவான ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கடந்து, மத அடிப்படையில் முஸ்லிம் தேசியம் எனவும் சாதித் தேசியங்கள் எனவும் பேசுவது குழப்பமாக அமையலாம்; என்ன செய்வது ஒவ்வொரு சமூக முறையும் சாத்தியப்படுத்தும் நிதர்சனத்திலிருந்துதான் கோட்பாட்டை வகுக்க இயலுமேயன்றி கோட்பாடு சொல்கிற மாதிரித்தான் இயங்கப் போகிறேன் என்றால் ஓரடிகூட முன்னேற முடியாது இடர்ப்பட வேண்டியது தான். தேசம், தேசியம் என்பன மாற இயலாத கோட்பாட்டுப் புனிதங்களோடு இல்லை. அப்படி இல்லாமல் ஆகி தேச இறைமைகள் இன்றைய உலகமயமாதல் சூழலில் அர்த்தமிழக்கத் தொடங்கியுள்ளதால் தேசியம் என்பதே பொய்த்து விட்டது எனும் குரலையும் கேட்கிறோம். தேசங்களாய் முதன்முதலில் பிரிந்து அடையாளம் பெற்ற ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் எனத்தேச எல்லை கடந்து ஒன்றிணைவதையும், உலகமயம் அனைத்து நாடுகளையும் ஒரே கிராமமாக இணைப்பதையும் பார்க்கும்போது தேசியம் பொருளிழந்தது போலத்தான்.
ஒடுக்கப்பட்டு, எமது உரிமை குறித்த கேள்விகளோடு ஈடிணையற்ற அர்ப்பணிப்புகளைச் செய்த எமக்குத் தெரியும் தேசம், தேசியம் என்பவை அர்த்தமற்றவை அல்ல என்பது. இவை பொய்த்துப்போய்விடவில்லை என்பது எவ்வளவுக்கு உண்மையோ, அதேயளவுக்கு மாற்றம்பெறாத ஏதோ ஒரு வரைவிலக்கணத்துக்குரிய புனித வகைப்பட்டன அல்ல என்பதும் அறிவோம். முதல் தேசிய வடிவம் பெற்ற மேலாதிக்க நாடுகள் சுரண்டலில் பெற்ற வாய்ப்பு இழக்கப்படும் நிலையில் மாற்றுவடிவில் அதைத் தொடர தேசம்-இறைமை என்பதெல்லாம் பொய் எனப் பேசுவர். ஒரு தேசிய இனத்தினுள் சுரண்டல் வாய்ப்பை உச்சமாக்கிக்கொள்ள வேண்டியுள்ளவர்கள் தேசம்-தேசியம் என்பவற்றுக்கு அதீதமான புனிதத்தை வளங்க முயல்வர். வைத்தால் கூந்தல் அடித்தால் மொட்டை என்றில்லாமல் இவற்றுக்குரிய அளவில் இவற்றைப் புரிந்துகொள்வோம். பாட்டாளி வர்க்கச் சிந்தனை அடிப்படையில் சமத்துவச் சமூக உருவாக்கம் மட்டுமே பிரச்சனைகளின் தீர்வுக்கு ஒரேவழி; அதனை அடையும் மார்க்கத்துக்கு ஏற்புடைய வகையில் தேசிய வடிவத்தைக் கட்டமைத்து அவையவற்றுக்கான சுயநிர்ணயத்தை வரையறுப்போம்.
நூறாண்டின் முன்னர் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலைபெற நிர்ப்பந்திக்கப் பட்ட நிலையில் எமது நாட்டுத் தேசியங்கள் வடிவம் பெற்றன. அதிகாரம் உள்ளூர் சுரண்டல் கும்பலிடம் மாறிய நிலையில் சிறு தேசிய இனங்களைச் சமூக வர்க்கமாய் ஒடுக்கிச் சுரண்ட அவை முற்பட்டன; படவும் ஒடுக்கப்பட்ட இனத் தேசியங்கள் சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டியதாயிற்று. இவ்வகையில் சமூக வர்க்கமாக ஒடுக்கப்படுவதற்கான தீர்வை நாடும்போது இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் சமூக வர்க்கமாகச் சுரண்டப்பட்ட தலித் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கும் வழிவகை தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முதலாளித்துவத்துக்கான தேசியப் புனிதம் தேசிய இனங்களுக்குத் தான் உள்ளது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவற்றுக்கெல்லாம் கணக்குத் தீர்க்க வர வேண்டாம் என்று சொல்லப் போகிறோமா? அன்றைக்கு ஏற்பட்ட சாதியவடிவில் சமூகவர்க்கமாக சுரண்டும் முறைமையிலிருந்து அதிகம் வேறுபட்டதாய் இன்றைய தேசியவடிவில் சமூக வர்க்கமாய்ச் சுரண்டுவது இல்லை. அதற்காக எந்த வேறுபாடும் இல்லை என்பதற்குமில்லை.
இவ்வாறு சமூக-பண்பாட்டு ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட தலித் மக்கள் எதிர்த் தேசியத்தை நடைமுறையில் வெளிப்படுத்தும் நிலையிலேயே இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வகுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். அவர்களது கோரிக்கைகளுக்கான தீர்வையும் உட்படுத்திப் புரட்சி அணி தனது போராட்ட மார்க்கத்தை வகுப்பது தவிர்க்க இயலாத ஒன்று. எமது சமூக-பண்பாட்டு ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பில் சமூக மாற்றம் பண்பாட்டு புரட்சிகள் வாயிலாக நடந்தேறியமை குறித்து ஏற்கனவே கண்டுள்ளோம்; ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தேசியப்போராட்டங்களிலும் பண்பாட்டுப் பேணுகையுடன் விடுதலைக்காக இயக்கங்கள் செயற்பட்டுள்ளன. அந்தவகையில் எமது புதிய-பண்பாட்டுப் புரட்சிக்கான வடிவங்களைக் கண்டறிந்து அதன் வழி செயற்பாடுகளை முன்னெடுப்பது புரட்சிகர அணியின் முன்னால் உள்ள சவால் ஆகும்; இதுவரை அதற்கான தேடலின்றி இருந்தோம், வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய வழித் தடங்களை முன்னேற்றத்தின் பொருட்டு தேடுவோம். வர்க்க ஒடுக்குமுறையினால் மட்டுமன்றி,, சமூக வர்க்கமாயும் சுரண்டப்படுதலை ஒழித்துக்கட்ட,
"உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களே ஒன்று சேருங்கள்"
No comments:
Post a Comment