Saturday, April 28, 2012

இரட்டைத் தேசியம் - வர்க்க - அரசியலுக்கு மாற்று : சாதியும் மதமும்


இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் - 5

வர்க்க - அரசியலுக்கு  மாற்று : சாதியும் மதமும். ந . இரவீந்திரன் 
முன்னதாக, இந்தத் தலைப்பு ஏற்படுத்தும் மயக்கத்தை மட்டுப்படுத்துவது அவசியம்; கட்டுரையை முழுமையாகப் படிக்காமலே முன் முடிவுகளுடன் முத்திரை
குத்துவோரிடமிருந்து தப்புவதற்காக அல்ல, எமது சமூகப் பார்வை தொடர்பில் அவசியமாய் வந்தடைய வேண்டியுள்ள தெளிவு தொடர்பில் இடர்ப்பாடுகள் களையப்பட ஏற்றது என்கிற வகையில். இரட்டைத்தேசியம் பற்றிய பேசு பொருளே இந்த 'நோக்கு' சார்ந்தது என்கிற வகையில், முடிவில் அனைவரது வாத விவாதங்கள் ஏற்படுத்தும் தெளிவுதான் அவசியம் என்றபோதிலும் இந்த முன்னெச்சரிக்கை!

மாற்றங்களை அதன் வேக மற்றும் பரிமாண விகசிப்புகளோடு உட்செரித்து, வந்தடைய வேண்டிய புதிய முடிவுகளுக்கு ஆற்றுப்படுத்தும் சிந்தனை முறையான
மார்க்சியத்தையுங்கூட வசனங்களுக்குள் சிறைப்படுத்தி, மார்க்ஸ் சொன்னார்-லெனின் சொன்னார் என்று இடர்ப்படும் எமக்கு மேலதிக சுமையாக இந்தத் தலைப்பும் இருந்துவிடக் கூடாது. வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பிய சமூகத்தில் வர்க்கம் வகித்த பங்குப்பாத்திரத்தை மருதத்திணை மேலாதிக்கத்தால் ஏனைய திணைகளை வென்றடக்கி சுரண்டலை சாத்தியப் படுத்திய எமது சாதியச் சமூகத்தில் சாதியே வகிக்கிறது; அங்கு அரசியல் புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களை இங்கு மதச் சிந்தனை மாற்றங்கள் ஏற்படுத்தின. இதனைக் கவனத்தில்கொள்ள மறுத்ததிலேயே எமது மார்க்சியப் பிரயோகத் தவறு நேர்ந்துள்ளது; எமது சமூகக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கு இயலாமலும் சிரமப்பட்டோம். மறுபக்கத்தில் சாதியவாதங்களும் (தலித்தியமும்) மத அடிப்படைவாதமும் மேற்கிளர்ந்து பல அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இருக்கட்டும்,இருக்கட்டும் திரும்ப வயிறு கடிக்கத்தானே போகிறது, அப்போது வர்க்க அரசியல் மேற்கிளம்பி எங்களைக் கூவியழைக்காமல் போய்விடுமா என்று 'மார்க்சிய-லெனினிய' பாராயணம் பாடிக்கொண்டு இருப்பவர்களும் இல்லாமல் இல்லை. அவர்களது பக்தியை மெச்சி மார்க்சோ லெனினோ வந்து கதிமோட்சம் தந்தால்தான் உண்டு.

சமூக இயங்காற்றலைப் புரிந்துகொண்டு மக்கள் விடுதலைச் செல்நெறிக்கு அமைவாக மக்களை அணிதிரட்டிக் களத்தில் இறக்கி புரட்சிகர அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தவறும்போது பிற்போக்கு சக்திகள் தமது சுரண்டல் வாழ்முறையை நீடித்துக் கொண்டுசெல்ல வாய்ப்பைப் பெறுவர். அதுசரி, வர்க்க - அரசியலுக்கு மாற்றாக சாதியையும் மதத்தையும் பேசுகிற கட்டுரையை எழுத வந்த நீர் இதென்ன வேதாளம் வேதம் ஓதிய கதையாக என்கிறீர்களா? அதன் பொருட்டாகவே இந்த ஸ்பீட் ப்றேக்கர் (இதையே எமது மரபு வழிப்பட்டுச் சொன்னால் 'அடைகட்டை'; உலகம் என்னதான் தலைதெறிக்க ஓடினாலும், மனித மனங்களைக் கட்டியுள்ள தளையாகப் பண்பாடு விளங்கி மரபுக்கான இடத்தைக் கவனங்கொள்ள வலியுறுத்தவே செய்கிறது. மரபு மீறலோடு பாய்ச்சல் அவசியம் என்றபோதிலும், மரபைப் புரிந்துகொண்டவராலேயே எவ்வகையில் மீறல் சாத்தியம் என்பதையும் நிகழ்த்திக் காட்ட இயலும்).

வர்க்க அரசியலை மறுப்பதல்ல இந்தத் தலைப்பு. வர்க்கப்பார்வை அவசியமானது. அதன் வழி, வர்க்கத்துக்குப் பதிலாக சாதியும், அரசியலின் பாத்திரத்தை மதம் வகிக்க இயலுமாயிருந்ததும் எமது வர்லாற்றுப் போக்கின் பிரத்தியேகத் தன்மை என்ற புரிதல் கொள்ளத்தவறின் வரலாற்றுப் பணியைக் கையேற்க இயலாதவர்களாவோம். ஆறுமுகநாவலர், அனகாரிகதர்மபாலர், வள்ளலார், தயானந்தசரஸ்வதி, ராஜா ராம்மோகன் ராய் போன்றோர் தொடக்கி வைத்த பண்பாட்டு தேசிய இயக்கம் விவேகானந்தரை அரசியல் தேசிய விழிப்புணர்வின் தொடக்குனர் என்ற பாத்திரமேற்க வழிப்படுத்திய வரலாற்றை அதற்குரிய குணாம்சத்தில் புரிந்து கொள்வதில் சிரமப்படுபவர்கள் எம்மில் பலர் உண்டு. இவர்கள் வர்க்கப் பார்வையில் பார்க்காமல், ஐரோப்பியக் கண்ணாடியால் பார்க்கிறார்கள் என்பது தான் பிரச்சனை. வர்க்கப் பார்வையை வரிக்காத போதிலும் எமது சொந்த வரலாற்று இயக்கப்போக்கை, ஐரோப்பிய அனுபவ ஒளியில் வைத்துப் பார்த்த விவேகானந்தர், பிராமணர் ஆட்சியும் சத்திரியர் ஆட்சியும் வைசியர் ஆட்சியும் இதுவரை வரலாறாக இருந்தன, இனிச் சூத்திரர் ஆட்சி சாத்தியமாகும் என சொல்ல இயலுமாயிருந்ததே அவரது பார்வை வீச்சுக்கு கட்டியம் கூறுவதாயமைந்த அம்சம்தான். அந்த ஆளுமையே அவரை ஒரு புதிய வரலாறு படைக்கும் பாத்திரத்துக்கு உரிமையாளராக்கியது. அவர் காலத்தில் எமது பழைய பண்பாட்டு தளைக்குள் மாட்டுப்பட்டு சிக்கெடுக்க இயலாமல் தடுமாறியவர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? ஐரோப்பியக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அதி நவீனத்துவம் பேசி மக்களைப் பிரிந்த 'புரட்சிகரச் சிந்தனையாளர்கள்' எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள்? "ஒன்று மற்றொன்றைப் பழித்து" தான் மட்டுமே சரியென்று முடக்கும் அரைவேக்காடுகள் போலன்றி, ஒவொன்றிலுமான இரு அம்சங்களையும் கவனங்கொள்ளும் இயங்கியலாளர்களாய் அமையும்போது சரியான பார்வை வந்தமையும். விவேகானந்தரிடம் மரபு வழிப்பட்டும் ஐரோப்பிய சிந்தனை வளர்ச்சி ஏற்படுத்திய வாய்ப்பினாலும் அன்றைக்கு வந்திருக்கக்கூடிய அதியுச்சச் சிந்தனைக்கு வர இயலுமாயிற்று.

அப்படி அரசியலுக்குள் மதத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்தியமையாலேயே திலகர், கோகலே போன்றோரின் பிராமணத் தேசியம் எழுச்சியுறவும் அதன் எதிர்வினைக் கேடாக முஸ்லீம் தேசியம் தோற்றம் பெற்று பாகிஸ்தான் பிரிவினை வரை வளர்ந்து இன்றுவரையான அவலங்களுக்கு கால்கோளாயிற்றே எனவும் கூறப் படலாம். ஆம், இது எமது தவிர்க்கவியலாத வரலாற்றுச்செல்நெறி. இந்த இயக்கப் போக்கிலும் வெறும் வர்க்கங்களைப் பார்ப்பதிலிருந்து யதார்த்தத்தில் நிலவிய சாதித்தேசியங்களின் அணிசேர்க்கைகளையும் மாற்றப் போக்குகளையும் கவனங்கொண்டு மார்க்சியர்கள் தமக்கான அரசியல் செயற்பாட்டு மார்க்கத்தை வகுத்து இயங்கியிருப்பின், வரலாற்றைப் புரட்சிகரமான திசைவழியில் முன்னெடுத்திருக்க இயலும்; வேண்டுமென்றே எவரதும் துரோகத்தால் ஏற்பட்ட தவறென்பதை விட, வர்க்கப் பார்வை என்பதை வர்க்கங்களை மட்டுமே பார்ப்பதான தோற்ற மயக்கத்துக்கானதாக முடக்கிப் பார்த்துவிட்ட கோளாறின் பேறானது இத்தவறு! இதனை மார்க்சியத் தேடல் இன்று கவனங்கொண்டு விவாதப் பொருளாக்கியுள்ளது என்கிற வகையில், இனி மார்க்சிய இயக்கச் செல்நெறி அவசியமான அணி சேர்க்கைகளுக்கான வாய்ப்புகளைக் கண்டடைந்து புதிய வரலாறு படைப்பது சாத்தியமாகும் என நம்பலாம்.

இதுபற்றிய அருட்டுணர்வு நீண்ட காலமாய் இருந்து வந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தினூடாக நவீன, தாராள, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பை வென்றெடுப்பதில் இருந்த சிரமம் பற்றிப் பேசும்போது தலைசிறந்த மார்க்சியச் சிந்தனையாளரான நம்பூதிரிபாட் இவ்வாறு கூறுவார்: "எனினும் இந்தப் பொதுவான யோசனையை பக்குவப்படுத்தி, வளர்ப்பது ஹிந்து சமூகத்திலுள்ள ஏராளமான சாதிகளாலும், ஹிந்துக்களல்லாதோரில் இருக்கும் பிரிவினைகளாலும் பாதிக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றும் தமக்கே உரித்தான பொது சமூக - கலாசார உணர்வைக் கொண்டிருந்தன. இது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை என்பதைப் புரிந்து கொள்வதில் பல்வேறு பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தியது."

சரி, அப்போது இவற்றைக் கடந்த வர்க்க இணைப்பை எதிர்பார்த்தமை இலவுகாத்த கிளியின் கதையாயிற்றென்றால், இப்போதாயினும் சாதிகள் - மதக் குழுக்கள் ஒவ்வொன்றும் தமக்கேயுரித்தான 'பொது சமூக - கலாசார உணர்வைக்' கொண்டுள்ள நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு அதன் தேசியக் குணாம்சத்தை விளங்கிய வகையில் கொள்கைவகுப்பதற்கு முன்வந்தாக வேண்டுமில்லையா? "இந்தச் சாதி, மத சமூகங்களின் தனிப்பட்ட உணர்வுகள்" ,"இந்தியத் தேசிய காங்கிரஸ் உருவாக்கிய தேசிய உணர்வுக்கு எதிரான" திசையில் அமையும் தன்மையை நம்பூதிரிபாட் குறிப்பிடத் தவறவில்லை; காங்கிரஸ் பிராமணத் தேசிய நலனை அதிகாரத்துக்கு கொண்டுவர முயன்ற நிலையில் ஏனைய சாதித் தேசியங்களும் மதத் தேசியங்களும் தத்தம் நலங்கள் பேணப்படுவதற்கு போராட அவசியம் இருந்தது. அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலை உடனடித் தேவை என்கிறவகையில், கொம்யூனிஸ்ற் கட்சி தாராளவாத அரைப் பிராமணத் தேசிய இயக்கத்துடன் ஐக்கியப்பட்டு இயங்கியது தவிர்க்க இயலாததே; அதேவேளை எதிர்த் தேசியமாக அமைந்த அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகளோடும் ஐக்கியமும் போராட்டமும் என்ற நடைமுறையை இணைத்திருக்க வேண்டும் என்கிற அம்சத்தை இன்று சுயவிமர்சன ரீதியில் ஏற்றாக வேண்டும்.

"காந்தி படுகொலையின் அரசியல்" என்ற தலைப்பில் நம்பூதிரிபாட் எழுதிய கட்டுரையில் மேற்படி முக்கியத்துவமிக்க கருத்து வெளிப்பாட்டைக் காணவியலும் (பக். 132-133). " மக்கள் நாட்குறிப்பில் விடுதலைப் போராட்டம்" என்ற சீத்தாராம் யெச்சூரி தொகுப்பில் இக்கட்டுரை உள்ளது. இதே நூலில் நரேஷ் நதீம்  "1857 க்குப் பிறகு பிந்திய இந்தியா, அதற்கு முன்பு இருந்ததைப்போல இல்லை" எனும் தலைப்பில் எழுதும்போது குறிப்பிடும் விடயம் கவனிப்புக்குரியது. "கிழக்கு நாடுகளின் வரலாறு முழுவதும் மதத்தின் வரலாறாகவே தோன்றுவது ஏன் என்பது பற்றி ஆய்வு செய்யவேண்டியது அவசியம் என்று ஏங்கல்ஸுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் வலியுறுத்தினார். இத்தகைய ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு வேறு வழிகள் இல்லாவிட்டால், மதம் அதற்கான வழிமுறையாகிறது என்று நன் கு தெரிந்த சமூகவியல் முடிவு, கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" என்பார் நரேஷ் நதீம் (ப.245). அந்த வெளிச்சமே தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தி, மார்க்ஸ் எதிர்பார்த்த ஆய்வு மேற்கொள்ளப்படா நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

இத்தகைய தவறான புரிதலுடனேயே எமது வரலாறு எழுதுமுறை அமைந்துள்ளது என்ற துன்பியலை ஏற்றாக வேண்டும். "மதத் தலையீடு அதன் அளவை விரிவுபடுத்திய அதேசமயம் வேளாண் எழுச்சிகளின் வர்க்க இயல்பை பலவீனப்படுத்தியது" என இர்பான் அபீப் "இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள் (ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி)" என்ற நூலில் குறிப்பிடுகையில் அந்தத் தவறு வெளிப்படக் காணலாம் (ப. 326). மார்க்சிய அணுகுமுறையிலான அற்புதமான அந்த நூலிலேயே இத்தவறு வெளிப்படுவதென்பது அடிப்படையில் எமது ஏற்றத்தாழ்வுச் சமூக உருவாக்கம் பற்றிய புரிதலின்றி மேற்கொண்டு செல்வதில் இருக்கும் இடர்ப்பாடு சார்ந்தது. தமிழகத்தில் கி. பி. ஆறாம் நூற்றாண்டு வேளாண் எழுச்சி நிலப்பிரபுத்துவ "வர்க்க அமைப்பு" மாற்றம் ஏற்பட வழிகோலியது; ஆயினும் அது வேளாண்வர்க்க எழுச்சியல்ல, வெள்ளாளச்சாதி மேலாண்மை பெற்ற மாற்றம். மற்றொரு மிகமிக முக்கியத்துவமுள்ள விடயம், இந்த அதிகார மாற்றம் சைவ-வைணவ மத எழுச்சிகள் பக்திப் பேரியக்கம் வாயிலாக சாத்தியப்படுத்திய ஒன்றாகும். ஒரு சமூக அமைப்பு மாற்றம் மத இயக்க வாயிலாக நடந்தேறியதென்பதும், அதிகாரம் ஒரு சாதியின் கையில் சென்றடைந்தபோது பிராமணச் சாதியெனும் மற்றொன்றோடு கூட்டமைத்து  ஆயிரம் ஆண்டுகளாய் இயங்கி வந்துள்ளன என்பதும் கவனிப்புக்குரியது. தொடர்ந்த வரலாற்றில் தெலுங்கு நிலப்பிரபுத்துவச் சாதிப் பிரவேசத்திலும் இவர்களது கூட்டு நீடிக்க முடிந்தது. பள்ளு இலக்கிய வடிவத் தோற்றம் பற்றிய ஆய்வுகள் அந்த ஆதிக்கச் சாதிகளிடையேயான மோதலும்-இணக்கமும் ஏற்படுத்திய சமூகத் தாக்கங்கள் பற்றி அக்கறை கொள்ளக்காணலாம்.

இவைகுறித்து இர்பான் அபீப் மாற்றுக் கருத்துடையவரல்ல; ஆயினும் சாதி மோதல்களுடன் மத விவகாரங்களூடாயே எமது வரலாறு இயங்கியது என்பதற்கு வரும் வாய்ப்பைப் பெறாமல், வர்க்க மாற்றத் தோற்ற மயக்கத்தில் அல்லாடுவதால் அனைத்து அம்சங்களிலும் தொடர்புபடுத்தத் தவறிவிடுகிறார். இதற்கான எடுத்துக்காட்டொன்றையும் அதே "இந்திய வரலாறு" குறித்த அவரது நூலிலிருந்து காண இயலும். வட இந்திய மேலாதிக்க வரலாற்றுத் தொடக்கம் பற்றிக் கூறுகையில் இர்பான் அபீப் இவ்வாறு கூறுவார்: "ஆரியர்களுடைய வேளாண் சமூகத்தின் 'சமத்துவக் கட்டமைப்பு' உள்ளூர் எதிரிகளுடன் அவர்கள் நடத்திய போரின் பொழுது கட்டாயம் பாதிப்புக்குள்ளானது. தாசர்கள் அனைவரும் கொலை செய்யப்படவில்லை. சிலர் அடிமைப்படுத்தப்பட்டனர். அத்தகைய ஆண் (தாசர்கள்), பெண்(தாசிகள்) அடிமைகள் பரிசளிக்கக்கூடிய விருப்பமான பொருட்களாவர். ஆரிய வட்டத்துக்குள் தாசர்களை உள்வாங்கிக்கொண்டதற்கான சான்றுகளும் இருப்பதாக கோசாம்பி குறிப்பிடுகிறார். ஆயினும் அவர்கள் நகர்ப்புறவாசிகள் என ரிக் வேதத்தில் அழைக்கப்பட்டனர். மிகவும் வளர்ச்சிபெற்ற வர்க்கக் கட்டமைப்பை அவர்கள் தங்களிடையே கொண்டிருந்ததற்கான வாய்ப்புகள் உண்டு. அடிமைப்படுத்தப்பட்ட மக்களைத் தமக்குக் கீழ் இணைத்துக்கொண்டு விரிவடைந்தபோதிலும் சூத்திரர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. சூத்திரர்கள் ரிக் வேதத்தின் இறுதிப் பகுதியில் அங்கீகரிக்கப்பட்டிருந்தனர்.பழைய விஸூக்களான வைசியர்களுக்கு கீழாக நான் காவது வருணமாக (சாதி-வர்க்கம்) அவர்கள் குறிப்பிடப் பட்டிருந்தனர். வேதத்தின் ஆரம்பக்கட்டத்தில் சூத்திரர்களின் உண்மையான தகுதி குறித்த எவ்விதமான சான்றும் இல்லாத போதிலும் அவர்கள் விவசாயிகளாக அல்லாமல் இனக்குழு மக்களுக்கு அல்லது அவர்களுடைய சொந்த எஜமானர்களுக்கு அடிமைத் தொழில் புரியும் கூலியாட்களாக அல்லது வேத பிற்காலத்தில் நினைத்ததைப்போல 'அடிமைகளாக' இருந்திருப்பதற்கான
சாத்தியமுண்டு" (ப. 86).

வருணம் எவ்வாறு கருதப்பட வேண்டும்? சாதி-வர்க்கம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? 'நகர்ப்புற வாசிகள்' வர்க்கக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனரா - அல்லது அங்கும் மேலாதிக்க இன மரபுக் குழு முறையிலான ஏற்றத்தாழ்வான அமைப்பேதான் இருந்ததா? ஆரியர் பிரவேசத்துக்கு முந்திய சிந்துச் சமவெளியின் நகர்ப் பண்பாடு வர்க்க உடைவுக்கானதாக அமைந்திருப்பதைவிட, அப்போதும் இன மரபுக் குழு மேலாதிக்கத்துக்கான சுரண்டல் நிகழ்ந்திருப்பதற்கே வாய்ப்புண்டு.ஆயினும், ஆரியர் பிரவேசத்தின் பின்னர் தொடர்ந்த வரலாற்றுச் செல்நெறியில் சுரண்டல் சாத்தியப்பட்ட நிலையிலேயே சாதியம் தோற்றம் பெற்றது என்பது தெளிவு. இதுகுறித்து இர்பான் அபீப் இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். கூடவே சாதியம் தனியே பிராமணியத்துக்குரியது மட்டுமல்ல, சுரண்டல் அமைப்புக்கான கருத்தியல் என்கிற வகையில் பௌத்தத்துக்கு அதனோடிருந்த தொடர்பையும் தெளிவுபடுத்தியுள்ளார். பிரச்சனை முழுநிறைவான வர்க்க அமைப்பாக இந்திய சமூக அமைப்பைக் காண்பதிலேயே உள்ளது. முழு நிறைவான சுரண்டல் நிலவியபோதிலும் வர்க்கக் கட்டமைப்பாகவன்றி,மேலாதிக்கம்பெற்ற இனமரபுக்குழு சாதி ஒடுக்குமுறையை ஏற்படுத்திக்கொண்ட பிரத்தியேகச் செல்நெறி அது என்கிற தனித்துவம் கவனம் கொள்ளப்படாது விடப்படுவதில் உள்ளது. அந்தவகையில், "சாதி-வர்க்கம்" என்பது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும். உண்மையில் ஆதிக்கச் சாதிகள், இடைச் சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள் என்பன சாதியவர்க்கங்கள் எனும்வகையில் புதிய பண்பு ரீதியிலான வேறுபாடுகளோடு அமைவன.

இங்கு வலியுறுத்த அவசியமான விடயம் உண்டு; இந்தியச் சமூகப் பிரத்தியேகத் தன்மை வேறுபாடு குறித்து ஐரோப்பிய(முதலாளித்துவச்) சிந்தனையாளர்கள் சரியான புரிதலின்றிக் குழம்பிக்கொண்டு குழப்பியடித்தபோது தனது ஆரம்பக்காலக் குரு ஹெகல் போல மார்க்ஸும் தவறான புரிதலுக்காளானார்; பாட்டாளி வர்க்கச் சிந்தனையாளர் என்கிற வகையில் இருந்த குறைவான தகவல்கள் அடிப்படையிலேயே இந்திய ஏற்றத்தாழ்வு வாழ்முறையின் பிரத்தியேகத் தன்மை குறித்து கவனம்கொள்ளும் எச்சரிக்கைக்காளாகியிருந்தார் மார்க்ஸ். இதுகுறித்து இர்பான் அபீப்பின் இவ்வார்த்தைகள் கவனிப்புக்குரியன:" இந்தியாவைப் பற்றிய மார்க்சின் கருதுகோள் ஹெகலின் திருத்தப்பட்ட மறுகூற்றாக இல்லை. ஹெகலின் இயக்கவியல் பற்றிய கொள்கையில் செய்ததையே மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய அம்சத்திலும் செய்தார். அதாவது அதனை அவர் 'தலைகீழாக' மாற்றினார். 'கீழை நாடுகளின் வரலாறு மதங்களின் வரலாறாகத் தோன்றுவது ஏன்?' என்ற கேள்வியை ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில் ஏற்கனவே அவர் எழுப்பியிருந்தார். இந்தியப் பண்பாட்டின் சிறப்புத் தன்மைகளுக்கான கூறுகளாக மதத்தின் சிறப்புத்தன்மைகள் இருப்பதாக ஹெகல் கண்டது உண்மையில் இந்தியச் சமூக அமைப்பில், எல்லாவற்றுக்கும் மேலாக கிராமச் சமுதாயத்தில் இருந்த கூறுகளின் காரணமாகவே ஆகும். 1853ம் ஆண்டு மார்க்ஸ் கண்ட இந்தக் கடைசி அம்சம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகவும், எல்லாவற்றையும் நடைமுறையில் விளக்கு வதாகவும் அமைந்திருந்தது." (பக். 25-26).

இந்திய மதங்களின் சிறப்புப் பண்பினால் அவை சமூக மாற்றக் கருவிகளாயிருக்கவில்லை; சமூக அமைப்பில் இருந்த வேறுபட்ட பண்புக்கூறே அதன் அமைப்பு வேறுபாடுகளை மதச்சிந்தனை மாற்றங்களூடாக நிகழ்த்தியாக வேண்டிய இயக்கப் போக்கை வலியுறுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறின், சாதிய ரீதியிலான சமூக ஒடுக்குமுறையை உடைய இந்தியச் சமூக முறை, அத்தகைய சமூகக் குழுக்களின் அதிகார மாற்றியமைத்தலை அவற்றின் பண்பாட்டுத் தளத்தில் தாக்குதலை நிகழ்த்துவதன் வாயிலாகவே சாத்தியப்படுத்த வல்லதாக இருந்தது. வர்க்கப் பிளவுறாத, தேசிய ஒடுக்குமுறையை ஒத்த சமூக ஒடுக்குமுறையான சாதிச் சுரண்டலையுடைய எமது சமூக அமைப்பு மாற்றங்கள் பண்பாட்டுப் புரட்சி வடிவங்கொண்டவை என்ற புரிதலின்மையால் மார்க்சிய இயக்க வளர்ச்சியில் இடர்ப்பாடு இன்னமும் நிலவுகின்றது. எமது சமூக அமைப்பின் பிரத்தியேகத் தன்மைகுறித்த புரிதலுக்கான தொடக்கத்தை மார்க்ஸ் தொட்டுக்காட்டியபோதிலும் அன்றைய ஐரோப்பியப் புரட்சி குறித்த ஆய்வுக்கு தனது உழைப்பை செலுத்த வேண்டியிருந்ததால் அடுத்த கட்ட வளர்ச்சியை அவரால் முன்னெடுக்க இயலாது போயிற்று. மார்க்ஸ் சொல்லாத எந்தப் பாதையிலும் போகப் போவதில்லை என்பதற்கு மார்க்சியம் ஒன்றும் மதப் புனித நூலல்ல. மார்க்சியச் சிந்தனை முறை கால-தேச நிலைகளை அவற்றுக்குரிய வகையில் புரிதல் கொள்ள வழிப்படுத்தி, அதை மக்கள் விடுதலைத் திசையில் மாற்ற ஆற்றுப்படுத்துவதாகும். மாற்றங்களை அதன் திசை வழியே புரிதல்கொள்ள முயல்வோம்; எமது அர்த்தங்கொள்ளலுக்கு ஏற்றதாக புறநிலை அமைவதில்லை. அது எவ்வகையில் உள்ளது என்பதை விளக்குவதாயும், எவ்வாறு மாற்றுவது சாத்தியம் என்பதையுமே மார்க்சியம் கற்றுத்தருகிறது. மதம் வகித்த பங்குப் பாத்திரம் குறித்த மார்க்சின்
தேடல் பண்பாட்டுப் புரட்சி பற்றிய ஆய்வுக்கு எம்மை இட்டுச்செல்லும். தொடர்வோம் ...

Wednesday, April 18, 2012

சாதித் தேசங்களாய்ப் பிளவுபட்ட தேசியம்- ந இரவீந்திரன்


 சாதித் தேசங்களாய்ப் பிளவுபட்ட தேசியம்- ந இரவீந்திரன்
இரட்டைத் தேசியம் .-4

 மேலாதிக்க நாடுகளின் வேட்டைக் காடாக அகப்பட்டுத் திணறும் சிறிய நாடாக உள்ள இலங்கையினுள் தேசிய உருவாக்கத்துக்கு இருக்கும் சிரமம் காரணமாய்பின் தங்கிய நிலையே இதற்குக் காரணம் என்ற மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. மாறாக, மேலாதிக்க நாடாக வளர்ந்துவிட்ட இந்தியாவில்கூட தேசிய இன  ஒருமைப்பாட்டில் சிக்கல் நிலை உள்ளமை பற்றிச் சென்ற தடவை எமது சந்திப்பில் அளவளாவியிருந்தோம். உண்மையில் சாதித் தேசங்களாய்ப் பிளவுபட்டுஉள்ள சாதிய அமைப்பே இனத்தேசிய ஒருமைப்பாட்டுக்கு தடையாக இருக்கிறது. இதுவே இரட்டைத் தேசியம் பற்றி தேடலை மேற்கொள்ளுமாறு எம்மைநிர்ப்பந்திக்கிறது. 


எலியோடு விளையாடும் பூனையாக இந்திய அதிகார வர்க்க சேட்டையில் மாட்டுப்பட்டு அல்லற்பட்டு, இரத்தம் சிந்தி, மரணத்துள் வாழ்ந்து, வாழ்வதும் பண்பாட்டுஅழிவுகளோடு அர்த்தமற்றதாக்கப்படக் காண்போராய், உரிமைகளை மறுக்கும் பேரினவாதத்தோடு அதற்கு நிரந்தரப் பகையேற்பட்டு எமக்கேயெமக்கான ஆபத்பாந்தராக இந்திய மேலாதிக்கம் ஆகும் வகையில் சீனத் தரப்புக்கு இலங்கை அரசு போய்விடக் கூடாதா என ஏங்கும் வகையில் தமிழ் மனங்கள் இழிவடைந்த நிலையில் அவதிப்படுகிற எமக்கு தெரியும் இந்தியா எவ்வளவு பெரிய பூதாகார வளர்ச்சியை எட்டியுள்ளது என்பது. இதை ஏற்க முடியாத பலகோடிமக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நாலைந்து வருடங்களின் முன்னர் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிபெற்ற திருப்பூரில் ஒருகலந்துரையாடலில் கல்ந்து கொண்டுஉரையாற்றியிருந்தேன் ஈழத்தமிழ்த் தேசியப் பிரச்சனை பேசுபொருள். இந்திய மேலாதிக்க செயற்திட்டம் என்கிறவகையில் அது எவ்வகையில் முடித்துவைக்கதிட்டமிட்டுள்ளது என்பதில் ஈழப் பிரச்சனைத் தீர்வு உள்ளது எனப் பேசியிருந்தேன்.


சபையோர் அதிர்ந்து போவர் என்பது எதிர் பார்க்கத் தக்கதுதான். இந்தியர்தான் இவ்வளவையும் வளர்த்து இரத்தச்சகதி ஆக்கிக்குளம்பிய குட்டையில் நாறிப்போனமீன் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுபற்றி கேட்கவே செய்தனர். கூடவே, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கேள்வியை ஒரு நண்பர் கேட்டார்," இவ்வளவு வறுமையில் வாட்டப் படுகிற எம்மைக் கொண்ட இந்தியத் தாய்த்திரு நாடு பிற நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகிற நிலையிலா இருக்கிறது?" எமதுபுரிதலுக்கு சிரமம் இருந்த போதிலும் இந்தியாவில் கடுமையான வாழ்க்கை போராட்டத்தில் அல்லற்படுகிற பல கோடி மக்களையும் நசுக்கியவாறே ஒருசிலலட்சம் பேரின் சுக போக வாழ்வு செழித்துவருகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதுதான். பாரம்பரியமாய் ஜெய சூரர்களாய் நீடித்தவர்களும், ஜனனாயக வாய்ப்பில் கருணாமூர்த்தம் காட்டி ஆட்சி பீடமேறி கொள்ளையடித்தவர்களும் போல பல கோடி மக்கள் அப்படியொன்றும் செழிப்பான வாழ்வைஎட்டிவிட முடியாது தானே? அதற்காக இன்னும் வறிய நாடாக இந்தியாவை அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதா? 


இந்த வறுமை அனைத்துச் சாதிப்பிரிவினரையும் தனக்குரியதாய்க் கொண்டிருக்கக் கூடிய 'சமத்துவ' குணமுடைய உயர் பண்பாளர்; அதே வேளை பல நூறுஆண்டுகளய் உரிமைகள் மறுக்கப்பட்டு உடலோடு உயிர் ஒட்டியிருக்கும் அளவில் மட்டும் உண்டுயிர்த்து வாழ அனுமதிக்கபட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களேமிகமிக அதிக அளவில் தன்னைச் சொந்தம் கொண்டாட முண்டியடிப்பதற்கு வறுமை தடை எதனையும் போடவும் முடியாது. அதிகாரச் சாதியில் உள்ளபாட்டாளி வர்க்க நண்பர்கள் சிலருக்கு இதனைப் புரிந்து கொள்வதில் சற்றுச் சிரமப்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தமது வர்க்க உணர்வையும், கடுமையாகஉழைத்தே வாழநேர்ந்த தமது வாழ்க்கைப் போராட்டங்களில் தமது சொந்தச் சாதியினரால் அவமானங்களுக்கு உள்ளாகநேர்ந்தது பற்றியும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு கருத்துரைப்பர். கூடவே ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வந்தோர் சிந்தனை ஆதிக்கம் புரிய முயல்வது குறித்து ஆதங்கம் தெரிவிப்பர்.


பாட்டாளி வர்க்கச் சிந்தனையின் பேரில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் விசேடித்த பிரச்சனைகளை நிராகரிப்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல.கல்விவாய்ப்பும், கௌரவமான தொழில்பெறும் நிலையும் முழுமையாக மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் வாயிலாக சிறியமுன்னுரிமை வழங்கப்படுவது எந்தவகையிலும் சமூகச் சீர்கேடுகளைத் தந்துவிடப் போவதில்லை. இதையே சகிக்க முடியாமல் எதிர்க்கிற மேல் சாதி அகம்பாவம் மோதித் தகர்க்கப் பட வேண்டிய ஒன்றெனப் புரிதல் கொள்ளாத ஒருவரை விடுதலை நேசிப்பாளர் என எப்படிக் கருத இயலும்?


ஆயினும், வறட்டுத்தனமாக வர்க்கத்தை மட்டுமே பார்க்கிற சிந்தனைமுறை வினோதமான காரணங்களை முன்னிறுத்தி இடஒதுக்கீட்டை நிராகரிக்க வழிப்படுத்தஇடந்தரும். இதற்கு முன்னொருபோது மார்க்சிஸ்ட் கட்சி உதாரணமாயிருந்துள்ளது. அதன் பொதுச்செயலாளராக இருந்த ஹரிகிஷன்சிங் சுர்ஜித் கூறும் இக்கருத்தில் இதன் வெளிப்பாட்டை அவதானிக்கலாம்: "குஜராத்தில் ஆரம்பித்து இதர மாநிலங்களிலும், ஆதரவு பெற்ற இட ஒதுக்கீடு - எதிர்ப்புப் போராட்டம்குறித்து கட்சி ஒரு கொள்கை வழிப்பட்ட நிலையை எடுத்தது. உழைப்பாளர்களின் இதர பிரிவினரிடையே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வுஉருவாகக்கூடிய அபாயத்தை கட்சி சுட்டிக் காட்டியது. ஒரு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசாங்கத்தினால் உறுதிகூறப்பட்ட வேலைக்கான இட ஒதுக்கீட்டினால் மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை ஏற்படப் போவதில்லை.இதர உழைக்கும் பிரிவினரை எதிர்த்துக்கொண்டு இது வெற்றிகரமாகப்போவதில்லை; மாறாக முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களையும், அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் இ.காங்கிரசையும் எதிர்த்த பொதுவானபோராட்டத்தில் அவர்களுடன் இணைந்து தான் இதைச்சாதிக்க முடியும்."  


பல்லாண்டுகால துரோகமிழைத்தலுக்கான சிறிய பரிகாரத்தையே சகிக்கமுடியாத உயர்சாதி மனப்பாங்கு 'பாட்டாளி வர்க்க' உணர்வின் எந்தவகை வடிவமாக கருதத் தக்கது? 'தமக்கு எதிரான வெறுப்புணர்வு' உயர் சாதி நயினாமாரிடம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக உரிமைக்காக குரல் எழுப்பாதிருந்தால் எப்போதுதான்அவர்கள் சக மனிதர்கள் என்ற கௌரவத்தைப் பெறவியலும்? ஆதிக்கசாதிச் சோசலிசம் எட்டப்பட்ட பின்னர், இனி அவமானப்படும் சாதி இழிவுக்குரிய மனிதக்கூட்டம் வேண்டியதில்லை என்ற பின்னர் கருணைகூர்ந்து நீங்கள் தரும் 'விடுதலைப் பிச்சையைத் தான்' அவர்கள் பெறத் தகுதியானவர்கள் என்று கருத்தா?கண்ட நிண்ட சனங்களை வைக்கிற இடத்திலை வைக்கவேணும் என்று இப்போதும் வெளிப்படையாகக் கூறும் கனவான் கூட்டம் மதிப்புக்குரியது; எழுச்சியுறும்மக்கள் சக்தியின் புரட்சிக் கொந்தளிப்பில், பிறர் உழைப்பில் தண்டச் சோறுண்ட சுரண்டல் கும்பலே இழிவுக்குரியது - வந்தனை செய்து துதிக்கத்தக்கவர் உழைப்பாளரே என்ற மாற்றம் ஏற்படும்போது தமக்கான அவமானப் பாத்திரத்துக்கான நிதர்சனத்தையும் அந்த 'மதிப்பாளர்கள்' புரிந்துகொள்வார்கள். செத்துப்போனசாதியம் பற்றி இன்னும் என்ன பேச்சு என்கிற 'ஜனநாயக' வேடதாரி ஆதிக்கசாதிப் 'புரட்சியாளர்களே' மிகுந்த ஆபத்துப் பேர்வழிகள். விடுதலை பிளவுபடாததுஎன்கிறவகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் கோரிக்கையை இணைக்காத 'ஆதிக்கசாதிச் சோசலிசமும்' சாத்தியமற்றதே; எங்கோ தெரிகிற கானல் நீரை நம்பியிருப்பதைவிட இன்று வெல்லப்பட வேண்டிய கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் போராட முன்வருவதை எவரும் தடுக்க இயலாது.


அந்தப் போராட்டம் மார்க்சியர்களால் முன்னெடுக்கப்படாத போது பிறருக்கு காட்டிக்கொடுக்கும் கும்பலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்படும் தலித்தியவாதம்மேலோங்கும் என்ற வரலாற்று நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தமிழகத்தில் மார்க்சியர்கள் விழிப்புற்றனர்; சாதியம் செத்துப் போய்விடவில்லையா என்ற கள ஆய்வை மேற்கொண்டபோது மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். சாதிய இழிவுபடுத்தலின் பல்வேறு அடையாளங்களோடு, தமது வாழ்விடத்தைசுவரெழுப்பி தலித் மக்களின் காற்றுப்படாமல் காவாந்துபண்ணிய உத்தம்புரம் என்ற ஊர் இருக்க முடிவதைக் கண்டனர். ஏற்கனவே, இத் தொடக்க நிலையில்தோழர் சங்கரையா பேசியிருந்தார், ''ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக முன்னெடுத்தாக வேண்டும்; இதனைஉயர் சாதியினர் விரும்பாமல் எமக்கு எதிராக போவார்களோ என்ற எந்தத் தயக்கங்களுக்கும் இடங்கொடுக்காமல் செயற்படுத்தியாக வேண்டும்'' என்பதாக. இன்றுமார்க்சிஸ்ட் கட்சியின் வழிகாட்டலோடு "தீண்டாமை ஒழிப்பு முன்னணி" தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவரக் காண்கிறோம். உத்தம்புரம் சுவர் இடிக்கப்பட்டது உட்பட, பல வெற்றிகள் எட்டப்பட்டதென்றால் ஒவ்வொன்றும் பல வடிவப் போராட்டங்கள் வாயிலாக சாத்தியப்பட்டதேயன்றி எந்த உயர் சாதிக் காருண்யங்களாலும் வந்தடைந்ததில்லை.


தலித்தியவாத எழுச்சியுடன் தோற்றம் பெற்ற தலித் சாதிக் கட்சிகள் கொம்யூனிஸ்ட் கட்சியொன்று முன்னெடுத்த சாதியத்துக்கு எதிரான இந்தப் போராட்டங்களைஆதரித்திருக்கும் என்றே எவரும் எதிர் பார்ப்பர். உண்மை நிலை அவ்வாறு இருக்கவில்லை. யாவும் நலமாய் இருந்ததாகவும், மார்க்சியர்கள் தேவையில்லாமல்சாதிக்கலவரங்களை மூட்டுவதாயுமே தலித் கட்சிகள் சொல்லின; சாட்சாத் பிராமணாள் போலவும், கருணாமூர்த்த - ஜெயா சூர திராவிட முன்னேற்றிகளும், ஏன்திராவிடர் கழகமும் பேசும் சாதிபேணும் அதே மொழி! பிராமணியம், திராவிடரியம், தலித்தியம் என்பன வெவ்வேறு தளங்களில் இயங்கிய போதிலும் இவைஒவ்வொன்றும் ஏதோ ஒரு வடிவில் சாதியத்தைப் பேணவே முயல்வன. விடுதலை நோக்கிய திசையில் முன்னேறுவதை விடவும் தத்தம் சாதித் தளம் பெறும்மேலாதிக்கம் சார்ந்ததாகவே இவர்களது அக்கறை!


பிராமண ஆதிக்கத்தை தகர்க்கப் போராடிய பெரியார் தலித் அமைப்பொன்றின் மாநாட்டில், நான் இடைச்சாதியினர் மீட்சிக்கான போடாட்டத்துக்கு தலைமைஏற்றுள்ளேன், ஒடுக்கப்பட்ட சாதியினரான நீங்கள் உங்களுக்கான தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று பேசியிருந்தார். திராவிடர் இயக்க ஆட்சி,பெரியார் கூற்றுக்கு இணங்க பிராமணரல்லாத ஆதிக்க சாதிகளதும் இடைச்சாதிகளதும் மேலாதிக்கத்தையே சாத்தியப் படுத்தியிருந்தது; மட்டுமன்றிப் பல்வேறுவடிவங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும் கொலைவெறித்தாண்டவத்தையும் முன்னெடுத்து வருகின்றன திராவிடக் கட்சிகள்.


இவ்வகையில் திராவிடக் கட்சிகளும் தலித் கட்சிகளும் சாதியத் தகர்ப்புக்கு கைகொடுப்பதை விடுத்து சாதியப் பேணுகையை மேற்கொள்கின்றன எனக் காண்பதனாலேயே அவற்றை எதிரிக் கட்சிகளாகக் காண வேண்டும் என்று பொருள் கிடையாது. நிச்சயமாகப் பல்வேறு போராட்டங்களில் அவற்றோடு ஐக்கியப்படுவதற்கு அவசியமுண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம் பிராமண நலன் பேணுவதில் அக்கறையுடையது எனக்கண்டு துணிச்சலுடன் எதிர்த் தேசிய அரசியலுக்கானபண்பாட்டு இயக்கத்தை முன்னெடுத்த பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே எமக்குள்ளன.


பெரியாரின் இயக்கம் உண்மையில் சாதியத்தைத் தகர்க்கப் போதுமானதல்ல என்ற விமர்சனத்துடனேயே அவரை நாம் உள்வாங்க வேண்டும். இன்று இதற்கு மாறான ஒரு ஓட்டம் தலைதெறித்து ஓடக் காண்கிறோம். இந்திய சுதந்திரப் போராட்டம் பிராமணத் தேசியத்தை ஆட்சி பீடமேற்றியது எனக்காட்டி, அதற்குஎதிரோடிய அம்பேத்கரின் தலித் அரசியலும் பெரியாரின் திராவிடரியமுமே பின்பற்றத் தக்கன என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி ஒரு தசாப்தம் கடந்துகொண்டிருக்கிறது. இதனால் தமிழியலிலும் சுவாரசியமான கூத்தொன்று அரங்கேறக் காண்கிறோம். மார்க்சிய நிலையில் முன்னர் பாரதி பார்வைகளின் புரட்சிஅம்சங்களில் மனதைப் பறிகொடுத்த ஆய்வறிஞர்கள் பலர், அவற்றில் இன்று திடீரென பிராமண அடயாளங்களைக் கண்டு, பாரதியை ஒதுக்கி வைத்துவிட்டுபெரியாரைத் தலை மேல்வைத்துக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்(மார்க்சிய நிலை நின்று பெரியார் குறித்த காய்தலுவத்தலற்ற ஆய்வு இன்று உடனடிஅவசியமுள்ளதாயினும், அதனை வேறொரு சந்தர்ப்பத்துக்கு ஒதுக்கி வைப்போம்).


இன்று விமர்சனப் பாங்கற்று பெரியாரைக் கொண்டாடுவதில் எவ்வளவு தவறுண்டோ, அதேயளவுக்கு முன்னர் பெரியாரை விடுதலைக்கு எதிராக பிரித்தானியஏகாதிபத்தியக் கைக்கூலி எனக் கண்டு காட்டியதும் தவறாகும். காந்தி தலைமையில் அரங்கேறியது பிராமணத்தேசியம்; அன்றைய வரலாற்றுச் செல்நெறிக்குஅந்த அதிகாரக் கைமாற்றம் அவசியம்; அதற்கு எதிரான போக்கை மேற்கொண்டதில் பெரியார் தவறிளைத்த போதிலும், அவர் முன்னெடுத்த எதிர்த் தேசியத்துக்கும் மக்கள் விடுதலை சார்ந்த பக்கங்கள் உண்டு என்பதை ஏற்றாக வேண்டும்; மாறாக, ஒருக்கால் பிராமணத் தேசியத்தின் பக்கத்தில் நின்று, அதிலுள்ளதவறுகள் சிலதைக் கண்டதும், ஒரே பாய்ச்சலில் எதிர்த் தேசியத்தின் பக்கம் பாயும் ஒருமுனைவாதத் தவறுகளுக்கு ஆட்படலாகாது. 


இங்கு கவனிப்புக்குரிய பிரதான அம்சம் மேலே குறித்த ஒருமுனைவாதத் தவறுகட்கு ஆட்பட்ட 'மார்க்சிய' ஆய்வறிஞர்களை விட பாரதி வளர்ச்சி பெற்ற கருத்தியலைக் கொண்டிருந்தார். அவர் பிராமணத் தேசியரல்ல; பிளவற்ற தேசிய விடுதலைக் கூறுகள் நேரடியாக சோசலிஸம் நோக்கி முன்னெடுக்கப்படும்வகையில் அவரது கருத்தியல் இருந்தது. அதனாலேயே வெள்ளைப் பறங்கியைத் துரை என்பது ஒழியும்போது, பார்ப்பானை ஐயரென்ற காலமும் போய்ஒழிந்திருக்கும் என அவரது எதிர்பார்ப்பு அமைந்தது. அந்தவகையில் பாட்டாளி வர்க்கச் சிந்தனையில் முன்னெடுக்கப்படும் புதிய பண்பாட்டு இயக்கத்துக்குரியகருத்தியலை உடையவர் பாரதி. இது முழுமையான மக்கள் விடுதலைக்கான மார்க்கத்துக்குரியது..அந்நிய ஆதிக்கத்தைத் தகர்க்கும்போதே உள்ளூர் ஆதிக்கபிடிகளையும் தகர்க்க முனைப்புக் கொண்டது.


இதற்குமாறாக, காந்தி, ராஜாஜி போன்றோர் முன்னெடுத்த அரைப் பிராமணியத் தாராளவாதத் தேசியம் பண்பாட்டியம் சார்ந்ததாக இருந்தது; இது பிராமணத் தேசியம் அதிகாரம் பெற வகைசெய்தபோது, உள்ளூர் அதிகார சக்தி மக்களை ஒடுக்க இடமளித்து விடுதலை மார்க்கத்தை முட்டுச்சந்துக்கு இட்டுச்சென்றது.பெரியார், அம்பேத்கர் போன்றோர் முன்னெடுத்த எதிர்த் தேசியம் எதிர்ப் பண்பாட்டியத்துக்கு உரியதாயமைந்து உள்ளூர் ஆதிக்க சக்திக்கு எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளருடன் கைகோர்க்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட ஆற்றுப்படுத்த வகை செய்வதாக இருப்பது. ஒரு ஆதிக்க சாதியை எதிர்க்கும்போது தமது சாதிநலனுக்கு ஏதோ ஒரு வடிவில் இடம் கொடுப்பதாகவே எதிர்ப் பண்பாட்டியம் அமைவது.


பாரதியின் புதிய பண்பாட்டியம் "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தைத்" தகர்த்து, சுரண்டலும் இழிவுபடுத்தலும் அற்ற -சாதியத் தளைகள் அறுத்துஎறியப்பட்ட- பொதுவுடைமைப் புத்துலகம் படைக்கத்தக்கதாக அமைவது. மதுரையில் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்" ஏற்பாடுசெய்திருந்த பெரியார்-125 வது ஆண்டு நினைவு ஒரு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய போது, முன்னர் போலன்றி பெரியாரை எதிர்ப் பண்பாட்டிய வாத நிலைக்குரியவர் என்கிறவகையில் ஏற்கிற போது, பாரதியின் புதிய பண்பாட்டியத்தையும் கவனம்கொண்டு, அந்த ஆளுமைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம்எனப் பேசியிருந்தேன். 


சென்னை திரும்பிய ஓரிரு நாட்களில், அங்கு ஒரு கருத்தரங்கில் அயனாவரம் ராஜேந்திரம் சந்தித்த போது கேட்டார், "பெரியாருக்கு சமனாக பாரதியை நிறுத்திமதுரையில் பேசியிருந்தீர்களாமே" என்று . "இல்லை, பாரதிக்கு சமனாக நான் பெரியாரைக் கணிக்கவில்லை; அதேவேளை முன்னர்போல பெரியாரைக்குறைத்து மதிப்பிட்டு புறக்கணிக்கவும் இயலாது என்றே பேசியிருந்தேன்" என்றேன். அவர்மீது மதிப்புக் கொண்டிருந்த நான் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும்நோக்கில் இதைக்கூறவில்லை. பெரியாரை வழிபாட்டுக்குரியவராக்க வேண்டியதில்லை எனும்போது பாரதியை வழிபாட்டுக்குரிய இடத்தில் வைத்துக் கொண்டாடுவதும் நிராகரிக்கப்படும்.


கடந்த அரைநூற்றாண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களும் அவற்றின் அனுபவத் திரட்சியான விவாதங்களும் எமக்கான கோட்பாட்டை முன்னிறுத்திஉள்ளன. பிராமணத் தேசியம், பெரியாரின் பிராமணரல்லாத ஆதிக்க சாதித் தேசியம், அம்பேத்கரின் தலித் தேசியம் என்பன வலுவான கருத்தியல்களுடன் இயங்கியுள்ளன. எண்பதாம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க. தலைமையை ஆட்படுத்திய தேவர் சாதியும் பா.மா.க.எனும் தமக்கேயான கட்சியை உருவாக்கிக்கொண்டவன்னியர் சாதியும் தத்தமக்கான தேசிய நலங்களை முன்னணிக்கு கொண்டுவந்ததன் வாயிலாக இடச்சாதிகளின் தேசியங்களையும் பேசுபொருளாக்கியுள்ளனர்.அதே எண்பதாம் ஆண்டுகளிலேயே தமிழகத்தின் தலித் கட்சிகளும் எழுச்சி கொண்டன. 


ஆக, சாதி வாழ்முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடித்த சாதிப் பண்பாட்டுத் தொடர்ச்சியை கொண்ட சமூக சக்திகளை உடையது என்கிற வகையில்ஒரே தேசமாக கட்டமைக்கப் பட்ட போதே ஒவ்வொன்றும் தமக்குள் தனித்துவமான தேசிய நலன் களுடன் இயங்கும் அரசியல் வாய்ப்புக்குரியது என்ற புரிதல்இன்று வரலாற்றால் வற்புறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் மார்க்சிய வழிகாட்டலை எவ்வகையில் இணைக்கப்போகிறோம்? பார்ப்போம்.   

Saturday, April 14, 2012

ஒரு, நல செய்தி 14-04-2012

நலம்.......நலமறிய ஆவல்

அனைத்து நண்பர்களுக்கும், மற்றுமொரு புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்களுக்குத்தான் எத்தனை புத்தாண்டுகள்; என்ன, ஒருவர் சொல்லும் புத்தாண்டு
தினத்தை மற்றொருவர் ஏற்க மறுக்கும் சமூக முரண் எங்களிடம் ஆழமாகவே உண்டு. இதிகாச - புராண பண்பாட்டுக் கட்டமைப்பாலான, ஒன்றில்
தேவர்கள் அல்லது அசுரர்கள் என்ற இரு அந்தலைகளிலேயே அனைத்தையும் முரண்படுத்தி, வைத்தால் கூந்தல் - அடித்தால் மொட்டை என்று
பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்ட தமிழ் மனங்களுக்கு இந்தச் சமூகச் சிக்கலில் யாரை எங்கே வைப்பது (தேவராகவா அசுரராகவா) என்பதில்தான்
குழம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

ஆயினும் புத்தாண்டு விடயத்தில் மக்கள் அதிகம் குழம்புவதாய்த் தெரியவில்லை; ஜனவரி 1, தை 1(பொங்கல் திரு நாள்), சித்திரை 1(இலங்கைச்
சொல்லாடலின் பிரகாரம் தமிழ்-சிங்களப் புத்தாண்டு) என எந்த ஒரு ''விடுமுறைக் கொண்டாட்ட நாளையும்'' ஒரு கை பார்த்து விடுவதில் பின்
வாங்குவதில்லை. கோட்பாட்டாளர்களுக்குத் தான் பிரச்சனை. சில கோட்பாடுகளில் முரண்படுகிறவர்களும் குறித்த பிரச்சனை ஒன்றில் தமக்கு
உடன்பாடான விடயத்தை முன்வைக்கிறபோது அந்த ஒரு விடயத்திலாவது ஒன்றுபட்டுப் போவோமே என்று இழுபட்டுப் போவதுண்டு.

இதற்கு நல்ல உதாரணமாய் அமைவது தமிழ்-சிங்களப் புத்தாண்டு. தமிழகத்தில் சிறிய அளவிலாவது எது தமிழ்ப் புத்தாண்டு என்ற சலனமுண்டு.
இலங்கையில் தைப்பொங்கல் தெளிவாக உழவர் திருநாள் மட்டுமே. புத்தாண்டாக சித்திரை முதல் நாளை விவாதத்துக்கு இடமின்றி ஈழத்தமிழ்
மனங்கள் அங்கீகரிக்கின்றன. சிங்கள மக்களின் நல்லபண்புகளைப் பார்க்க வாய்ப்பற்று, பேரினவாத முகத்தை மட்டுமே பார்த்து வெறுப்புடனுள்ள
தமிழர்களும்கூட, இந்த ஒரு விடயத்திலாவது ஒரே நாட்டில் வாழ்கிற நாம் ஒன்றுபட்டிருபோமே என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

மோசமான இரு தரப்பு இனவாத ஆதிக்க மோகங்கொண்டோரை மோதி வீழ்த்திவிட்டால் இந்நாட்டில் அற்புதமான இன ஐக்கிய முன்னுதாரணத்தைக்
கட்டியெழுப்புவது சுலபம் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டில்லையா? நான் பெரிதாக இந்தப் புதிய நாட்களைக் கொண்டாடுவதில்லை;
அதற்காக நாளை மற்றுமொரு நாளே என விரக்தி கொண்டதுமில்லை. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற தெம்புடன் உலகை மாற்றிப் புனைந்து
புத்துலகம் படைக்கும் மக்கள் சக்தியைச் சுயமுணர ஆற்றுப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன், அதற்காக இயங்கியவாறு இருப்பவன். இன்று 
புலர் பொழுதில் மூன்று நாலு கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள சிங்களக் குடும்பம் ஒட்டுமொத்தமாய் எல்லோரும் புதுவருட 'சிங்களப் பலகாரங்களுடன்'
வீட்டுக்கு வந்திருந்தார்கள்; இந்த இனிய நாளில் மகிழ்ச்சி பொங்காதிருக்குமா?

இன்னுமொரு மகிழ்வான சங்கதி. காணாமற் போய், முற்றாகத் தொலைத்துத்தான் விட்டேனோ என்று பயத்துடன் மூன்று மாதங்களாய்த் தேடிய என்
பெரும் செல்வம் மீளக் கிடைத்திருக்கிறது. அதைக் களவாடிய நோய்க் கூறுடன் நான் நடத்திய போராட்டத்தில் வெற்றியீட்டியுள்ளேன். நீங்கள் வெல்வீர்கள்,
அதற்கெனப் பிரார்த்திக்கிறோம் என நண்பர்கள் பலரும் என் போராட்டத்துக்கு தெம்பூட்டியிருந்தீர்கள். வெற்றி சாத்தியம் தானா என்ற கடும் சந்தேகத்துடனும், வீழ்ந்திட மாட் டேன் என்ற நம்பிக்கையுடனும் எனது போராட்டம் இருந்தது மெய். "மெய்வருத்தக் கூலியுண்டு, முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கமைய, நான் எனது அந்தக் ''கம்பீரமான'' பலத்தை மீட்டெடுத்தேன். !! (நன்றி: Lenin Mathivanamலெனின்,கே.எஸ்.சிவகுமாரன் Ks Sivakumaran ,எம்.கே.முருகானந்தம் Dr.Muttiah Kathiravetpillai Muruganandan, அ.மார்க்ஸ் Marx Anthonisamy ,பெ.சு மணி ,சிவசேகரம், செல்வா Selva Sfi மற்றும் என் அன்பு தோழர்கள் - இவ்வாறான அடைமொழி தந்தமைக்கும்).

ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி! 
சூழ்ந்திடும் இருளும் அகல்வது உறுதி! - (பாப்லோ நெரூடா.)

நன்றிகளோடு, அன்பு தோழன் -இரவி. 

Friday, April 13, 2012

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும் -மாற்றமுடியாதது மார்க்சியம்



இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும்
ந.இரவீந்திரன் 
                        3

மாற்றமுடியாதது மார்க்சியம் -


  இரட்டைத் தேசியம் என்பதை இறக்குமதிக் கருத்தியல் என்பது பொருளற்றது என்பதுபற்றி பார்த்திருந்தோம். எந்தவொரு விடயத்திலும் சர்வவியாபகத் தன்மையோடு ஒரு சிந்தனை முறையைக் கையேற்பதில் கேடு வந்துவிடப் போவதில்லை. சொந்த மக்களைப் பிறரிடம் அடிமைகொள்ள வழி கோலுவதையேகண்டிக்கவேண்டும். அப்படியிருந்தும், இரட்டைத் தேசியம் ஈழப் பிறப்பு என்பதை காட்ட வேண்டியிருந்தது (இந்த வெளி நாட்டுச் சரக்கு தங்களுக்கு வேண்டாம்எனப் பிறர் நிராகரிப்பது பற்றி இப்போதைக்கு எங்களுக்கு வருத்தமில்லை; வரலாற்றை மக்கள் விடுதலைத் திசையில் முன்னெடுப்பதில் எங்களுக்கே பொறுப்புஇன்றைய நிலையில் அதிகம் உள்ளது. நாம் சில்லெடுத்து விட்டால் மட்டுமே தமிழக முற்போக்கு சக்திகள் ஆதிக்க சாதித் தமிழ்த் தேசியப் பிடியிலிருந்து தமிழக வரலாற்றுசெல்நெறியை முற்போக்குத் திசையில் மீட்டெடுக்க முடியும். இது குறித்துப் பின்னாலே பார்ப்போம்).


இவ்வாறு நாம் கையேற்றுள்ள மார்க்சியம் மாற்றப்பட முடியாதது என்பதே இப்போதைய பேசுபொருள். முந்திய சந்திப்பில் வர்க்கப் போராட்டம் சோசலிசத்தைஎட்டுவது என்ற மார்க்சின் எதிர்பார்ப்பிலிருந்து தேசிய விடுதலைப் போராட்டங்களூடாக சோசலிசம் எட்டப்படுவதாக வரலாற்றுப் போக்கு மாற்றம் ஏற்பட்டதுபற்றி பேசியிருந்தோம். இந்த மாற்றத்தினூடாக மாற்றம் பெறாத ஒரு சிந்தனைமுறை இயங்கி வளர்ந்து வந்திருக்கிறது - அதன் ஒரு வடிவமே இரட்டைத் தேசியம் என்பதைப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். இதனை மறுக்கும் சபா நாவலன், இரட்டைத் தேசியப் பிளவில் ஆதிக்க சாதித் தேசியமாய் ஈழத்தமிழ்த் தேசியம் முடங்கிப் போனமையால் தோற்றுப் போய்விடவில்லை, பின் தங்கிய பொருளாதார நிலை காரணமாய் ஈழத் தமிழ்த்தேசியம் இன்னமும்வளர்ந்து வரும் நிலையில் இருப்பதாலேயே இடர்ப்பட வேண்டியிருப்பதாக கூறுவார். வளராததாலே தான் பருங்கள் கிழக்கில் கருணா கொஞ்சம் இடக்குப் பண்ணுகிறார் என்றதும் பிரபாகரனின் டாங்கிகளும் முப்படைகளும் மட்டக்களப்பை சுற்றிவளைத்து மேலாண்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஐயா, விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே வலுவான கப்பல் படையோடு நோஞ்சான் நிலையிலென்றாலும்( இப்படிச் சொன்னதற்காக வீரத் தமிழ் மறவர்கள்மன்னித்தருள்க) விமானப் படையையும் கொண்டிருந்த ஈழப் போராட்டம், எப்படி வளர்ச்சிபெறாத தேசிய இனத்திலிருந்து வந்திருக்க முடியும்? முப்பது வருடங்களுக்கு முன்னரே சண்முகதாசன் தோழர் தமிழினம் இலங்கையில் தேசிய இனமாக இன்னமும் வளர்ந்துவிடவில்லை என்றதைக் கேட்டே ரோசம்பொத்துக்கொண்டு வந்து பிரமாண்டமாய் வளர்ந்து காட்டப்போய் இப்போது பொத்தென்று விழ நேர்ந்திருக்கிறது. யுத்தமுனைப்பை வளர்த்த இந்தியாவே இந்தகப்பல் படை வளர்ச்சி வேகம் கண்டு அச்சம்கொண்டிருந்தது என்பதில் இரகசியம் ஒன்றும் இல்லை.


இதை அவர் மூன்று வருடங்களுக்கு முந்திய மே 18 க்கு முன்னர்(அல்லது, ஓடத் தொடங்குவதற்கு முன்னர்) சொல்லியிருந்தால் தமிழ்த்தேசியச் சண்டியர்களிடம்இருந்து லேசில் தப்பியிருப்பார் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை; இப்போது தோல்விக்கு உண்மைக் காரணத்தைக் கண்டறியவிடாத எத்தனிப்புக்கு இதுதேவைப் படலாம் என்பதால் விடப்பட்டிருப்பார். போராட்டம் நம்பிக்கையுடன் வளர்ந்துவந்த ஆரம்ப காலத்தில் இத்தகைய கதை எதையும் தமிழ்த் தேசியர்கள்மறந்தும் முன்வைத்திருக்க மாட்டார்கள். ஈழத்தமிழ்த் தேசியத்தால் குறைந்தபட்சம் வடக்கையும் கிழக்கையுமே இணைக்க முடியாமல் இருக்கும் என்றபோதுஅன்றைய ஈழத்தேசியர்கள் ஆக்ரோசத்தோடு அதைப் புறந்தள்ளியிருந்தார்கள் (''பிரிந்துசெல்வதை மறுக்கும் சுயநிர்ணய உரிமை'' என்ற என் கட்டுரை 'இனியொரு'வில் இதே கேள்வியை எதிர்கொண்டது-'குறைந்தது, வடக்கு கிழக்கு இணைப்பாவது சாத்தியமா?' என்ற பின்னூட்டல் அங்கே வந்ததை நினைவுபடுத்துக!).


இது தொடர்பில் ஒரு சம்பவம் ஞாபகத்தரையைத் தட்டுகிறது. நான் முப்பத்துமூன்று வருடங்களின் முன்னர் மட்டக்களப்புக்குச் சென்றபோது இது தொடர்பில்ஒரு நண்பருடன்(இந்த விவாதத்தில் தனது பெயர் தவிர்க்கப்படுவது நல்லது என அவர் கருதலாம் என்பதால் பெயரைக் குறிப்பிடாது விடுகிறேன்) விவாதித்தேன்.ஈழ வாழ்த்து மடல் ஒன்றை வாங்க மறுத்த ஒரு அம்மா தன்னிடம் இந்தச் சம்பவத்தைக் கூறியிருந்தாராம்:''பஸ்ஸில் பயணித்த ஒருநாள் என் இருக்கைக்குமுன்னாலே இரு இளைஞர்கள் விவாதித்துக்கொண்டு வந்தார்கள்; ஒருகட்டத்தில் கோபாவேசத்துடன் எழுந்த ஒருவன் மற்றவனை எச்சரிக்கை தொனியுடன் அதட்டிச் சொன்னான், இதற்கெல்லாம் ஈழம் வரட்டும் உங்களைக் கவனிக்கிற மாதிரிக் கவனிக்கிறோம் என்று; கோபவெறியுடன் எழுந்தவன் யாழ்ப்பாணத்தான்,வாயடைத்துப்போயிருந்தவன் மட்டக்களப்பான். ஈழம் வந்தால் நாங்கள் யாழ்ப்பாணத்தானுக்கு அடிமைப்பட வேண்டியிருக்கும் என்பதால் உங்கடை ஈழம் வேண்டாம் தம்பி.'' சோசலிச ஈழம் பிரதேச ஏற்றத்தாழ்வைத் தகர்த்துவிடும் என்று அந்த அம்மாவுக்குச் சொன்ன பதிலை எனக்கு மேலும் பட்டை தீட்டி அந்தநண்பர் சொல்லியிருந்தார்; தொடர்ந்து சோசலிச ஈழத்துக்காகப் போராடும் அவருக்கான உரிமையை மறுத்ததில்,தலைமயை ஆக்கிரமித்திருந்த யாழ்.வெள்ளாளதேசியத்துக்கு உள்ள பங்கு வெளிப்படையானது; அனேகமாய், அந்த நண்பர் இதனை ஏற்பார் என்றே நம்புகிறேன்.


எமது ஈழத்தேசியம் மட்டுமன்றி மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனங்கள் அனைத்தையுமே இந்தக் குறை வளர்ச்சி தேசிய இனமாக வளர இயலா நெருக்கடியை முகங்கொள்ள வைத்துள்ளது என்பது முன்வைக்கப்பட்டுள்ள தர்க்கம். இந்தியாவில் தேசியம் தோற்றுப் போவதற்கும் உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. அண்மையில் தோல்வியைத் தழுவிய மாயாவதி தான் முதலமைச்சராக இருந்தபோது உத்தரப்பிரதேச மாநிலத்தை நாலு மாநிலங்களாக பிளவுபடுத்தும் தீர்மானத்தைச் சட்டசபையில் நிறைவேற்றியிருந்தார். ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்கானா பிளவுபடுத்தலுக்கான போராட்டம் உக்கிரமாகிவருகிறது. தமிழ்நாட்டிலும் வட தமிழகத்தைப் பிரிக்கும் கோரிக்கை தேவைப்படும் போதெல்லாம் பா.ம.க.வினால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆக, இந்தியாவினுள்மொழித் தேசியங்கள் உடைந்து போகக்கூடிய பலவீனங்களுடனேயே உள்ளன. வலுவான தேசிய இனங்களாயிருந்திருப்பின் இப்படி நொய்தாகிப்போமா எனக்கேட்கமுடிவதால் வளராத் தேசியக் கருத்து செல்லுபடியானதைப் போன்றே தோன்றும்.


இங்கு இரண்டு பிரச்சனைகள் உண்டு. ஒன்று, இந்தியா இப்போது மூன்றாம் உலகுக்குரிய குறைவளர்ச்சி நாடல்ல; உலகமயமாதலுடன் கூட்டமைத்து மேலாதிக்கநாடாக பரிணமித்துவிட்ட ஒன்று. மற்றது இதனோடு தொடர்புபட்டது; தேசியம் குறை வளர்ச்சிப் பிரச்சனையை எதிர் நோக்குவதற்கன்றி, தேசியமே அற்றுப்போய்க்கொண்டிருப்பதற்கு உதாரணமாகவே இவை சொல்லப்படுகின்றன. இரண்டையும் நிராகரித்தே இரட்டைத் தேசியக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.


தேசியம் தோற்றுப்போய்விட்டன என்ற கருத்தை முன்வைக்கும் அ.மார்க்ஸ் பின் நவீனத்துவ நிலையில் நின்று தலித்தியம் பேசியவர். இன்று தலித்தியம்தோற்றுப்போயிருப்பதை வெளிப்படையாகப் பேசுவதோடு, பின் நவீனத்துவம் தீர்வுக்கு வழி காட்டத் தவறியுள்ளது என்பதையும் ஏற்பவர். மார்க்சியமே சமூகப்பிரச்சனைகளுக்கான தீர்வை எட்ட உதவவல்லது என்பதுடன், தான் ஒருபோதுமே (பின் நவீனத்துவம் பேசிய காலத்திலும்) மார்க்சியத்தை விலகியதில்லை என்றும் வலியுறுத்துகிறவர்.


இருப்பினும், தேசியப் பிரச்சனையை மார்க்சிய நிலைப்பட்டு அணுகுவதற்கு அவரால் இப்போதும் இயலவில்லை. அடையாள அரசியலின் பகுதியாகவே இதனைப்பார்க்கிறார்; தேசியம் தோற்றுப் போவதான கருத்து ஏற்கப்பட்ட பின்னர் இது தவிர்க்க முடியாததுதானே? ''நமக்கென்றொரு சொல்வெளி'' தொடர் எழுத்தில்''மாயாவதியின் தோல்வியும் அடையாள அரசியலின் எதிர் காலமும்'' என்றதலைப்பில் அ.மார்க்ஸ் எழுதும்போது குறிப்பிடும் இக்கருத்து ஒரு சோறு பதம்:''இன,மொழி உணர்வுகளின் அடிப்படையில் பிராந்திய மயப்படுத்தல் மற்றும் மாநில அளவு கட்சிகள் உருவாகுதல் என்பது முதலில் தமிழகத்தில் தான் தொடங்கியது.காங்கிரஸ், யனசங், பொதுவுடமைக் கட்சிகள் ஆகியவற்றுக்கப்பால் சோசலிஸ்ட் கட்சி முதலியன ஒருவகையில் பிராந்திய அளவிலேயே செயல்பட்ட போதும் அவை இன, மொழி உணர்வுகளின் அடிப்படையில் உருவாகவில்லை. 1990 களுக்குப் பின் அடையாள அடிப்படையில் கட்சிகள் உருவானபோது அவையும் ஒருவகையில் பிராந்தியத் தன்மையுடனேயே அமைந்தபோதிலும் இன, மொழி உணர்வுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளை விளித்து அவை உருவாகின. பகுஜன் என்கிற சற்று விரிவான அடையாளத்துடன் கான்ஷிராமால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி குர்மி, சமர் முதலான தலித் மற்றும் அதையொத்தசமூகப் பிரிவுகளை தனது ஆதரவுத் திரட்சியாகக் கொண்டு உருவாகியது. சமாஜ்வாதிக் கட்சி யாதவ்கள் மற்றும் இதர சில பிற்படுத்தப்பட்டவர்களை இலக்காக்கிஉருவாகியது. பார்ப்பனர்களும்(11%) முஸ்லிம்களும் அது நம்பியிருந்த அடுத்த நிலை ஆதரவுத் தொகுதிகளாக இருந்தன. சிரோமணி அகாலி தளம் பஞ்சாபி ஜாட்மேல் தட்டினரை மையப்படுத்தி உருவாகியது. அடையாள அரசியல் பேசும் இந்தக் கட்சிகள் தமது நிரந்தர ஆதரவுத் தொகுதிக்கு அப்பால் குறிப்பிட்ட தேர்தல்சூழலில் எந்தப் பிற ஆதரவுத் திரட்சியை தம்முடன் இணைத்துக் கொள்கின்றனவோ அதைப்பொறுத்தே வெற்றி அமைகிறது என்று பார்த்தோம். 2007 இல் வரலாறு காணாத மாபெரும் வெற்றி ஒன்றை மாயாவதி ஈட்டினார். இந்தியா முழுவதிலுமுள்ள தலித் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையும் பெருமிதமும் உருவாவதற்கு அவர் காரணமானார். இரும்புப் பெண்மணி எனத் தலித்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.''


மார்க்சிய அடிப்படையில் பேசும் போது, கொம்யூனிஸ்ட்டுகளின் முதல் வெற்றிகளைப் பேசும்போது, கேரளமும் மேற்கு வங்கமும் நினைவில் வரும். அவ்விரு மமாநிலங்களிலும் இந்தியத் தேசியத்துக்கு உட்பட்டு முறையே மலையாள மற்றும் வங்காளி இனத் தேசியங்களை சரியான வகையில் கொம்யூனிஸ்ட்டுகள் கையேற்றிருந்தனர் என்றே பேசுவோம். 'பிராந்திய மயப்பட்ட- இன,மொழி உணர்வு அரசியலாய்' அன்றி தமிழகம் தொடக்கிவைத்தது இனத் தேசிய அரசியல் என்றேதிடாவிடர் இயக்க அரசியலை மார்க்சிய மொழியில் பேசுவோம். அந்த இனத் தேசியம் இந்தியத் தேசியத்துக்கு விரோதமாக போவதாகக் கண்டு தமிழகத்தில்கொம்யூன்ஸ்ட்டுகள் இனத் தேசியத்தை சரியான அளவில் கணிக்கவியலாதவர்களாயினர் என்பது கவனிப்புக்குரியதாகிறது. நீண்ட நாட்களாக இந்திய(நாட்டுத்)தேசியத்துக்கு உட்பட்டு இனத் தேசியத்தின் சாத்தியத்தை ஏற்க முடியாமல் கொம்யூனிஸ்ட்டுகள் உள்ளமை பற்றி அறிவோம்.


இப்போது மேலதிகமாக சாதித் தேசியம் பற்றி பேசும்போது குழப்பம் அதிகரிக்கவே செய்யும். குழப்பங்களூடாக தொடரும் சரியான விவாதங்கள் தெளிவை ஏற்படுத்தும். மார்க்ஸிய இயக்க வளர்ச்சி என்பதே இத்தகைய பரிணமிப்புகள் வாயிலாகவே எட்டப்பட்டுவந்துள்ளது. அதுபற்றிய பேச்சுக்கு செல்லுமுன்னர் ஒருவிடயம்.அ.மார்க்ஸ் பேசும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அடையாள அரசியலைத் தானே 'மார்க்சிய மொழியில்' சாதித் தேசியம் என்று பேசுகிறீர்கள் என்றசந்தேகம் எழுப்பப்படுகிறது. அவ்வாறாயின் தலித்தியம் மற்றும் பின் நவீனத்துவம் சார்ந்த கருத்தியலாக இது ஆகவில்லை என்பது என்ன நிச்சயம் எனக் கேட்கப்படலாம். நேரடியாக இதனைக் கேட்காத போதிலும் 'தமிழக நகர்ப்புற சிந்தனையாக' இரட்டைத் தேசியத்தைக் காட்டும் முயற்சி இதன்பாட்பட்டதே. 


உள்நோக்கின்றி நேர்மையாக இந்த உரையாடலைத் தொடர்கிற எவரும் தலித்தியவாதத்திலிருந்து முற்றான முறிவை ஏற்படுத்திய மார்க்ஸிய அணுகுமுறையைசாதித் தேசியம் என்பதாகப் பேசுகிறோம் எனப் புரிந்துகொள்வர். இதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியதில் அ.மார்க்ஸ் தொடக்கிவைத்த விவாதங்கள் அமைந்தனஎனச் சொல்லும்போது தவறான முத்திரை குத்தலுக்குள்ளாகும் என்று அச்சம் கொள்ளும் அளவுக்கு இரட்டைத் தேசியக் கோட்பாடு பலவீனமான ஒன்றல்ல.அவர் ஏற்க மறுத்தபோதிலும் மார்க்சியத்திலிருந்து கொண்டவிலகல் காரணமாக அவர் பார்வையில் சில அடிப்படையான தவறுகள் வெளிப்படுவது மெய். அதில்அடிப்படையானது அடையாள அரசியல் பற்றிய பேச்சு. அதேவேளை, அவரிடமுள்ள மார்க்சியத்தின் தொடர்ச்சி காரணமாக தவறுகளின் ஊடாகவும் சிலவிடயங்களில் சரியான பார்வையை அவரால் வெளிப்படுத்த முடிகிறது. குறிப்பாக மார்க்சிய நிலைப்பட்டு எழுதுகிறோம் என்கிற எவரது கருத்துகளைவிடவும்ஈழப் பிரச்சனை பற்றிய அவரது நூல்கள் தெளிவானவையாகவும் சரியானவையாகவும் இருப்பதைக் காணலாம்.


மார்க்சியத்திலிருந்தான விலகல் காரணமாக இனப்பிரச்சனைத் தீர்வை எட்டுவதற்கான மார்க்கத்தை அ.மார்க்ஸினால் காட்ட இயலவில்லை. அவர் மார்க்சியஅணியில் பூரண ஈடுபாட்டுடன் தீவிரமாக இயங்கியவர். இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) இலிருந்து அவர் விலகக் காரணமாக அமைந்த அடிப்படைப் பிரச்சனைகளில் ஒன்றாக ஈழப்பிரச்சனை அமைந்திருந்தது. ஈழத்தமிழ்த் தேசியத்துக்கான அவரது ஆதரவு நிலைப்பாடு காரணமாக மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்துஅவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் செயற்பட்ட மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியும் அப்போது தேசிய இனப்பிரச்சனையில் தவறான நிலைப்பாட்டுடனேயே இருந்தது. அமைப்பு ரீதியில் கொம்யூனிஸ்ட் கட்சிகள் இழைத்த தவறுகள் குறித்து விரக்தியுற்ற அவர் மார்க்சிய அடிப்படையில் தேடலை மேற்கொள்வதற்கு முன்னதாக, அன்று அறிமுகப்பட்ட பின் நவீனத்துவத்தில் நாட்டம் கொண்டமை காரணமாக தேசியப் பிரச்சனைத் தீர்வில் மார்க்சிய வழிகாட்டலை வந்தடையத்தவறுகிறார்.


இனப்பிரச்சனைத் தீர்வில் மார்க்சிய அணுகுமுறையை வந்தடைய இயலாமல் மார்க்சிய அணிகளும் இடர்ப்படுகின்றன. இந்திய மா.லெ. அணிகள் வன்முறைவழிபாடு காரணமாக புலிகளின் வலதுசாரிப் பாஸிஸ அணுகுமுறையைக் கவனம்கொள்ளாமல் அவர்களை ஆதரிக்கிற அளவுக்கு சென்றார்கள். மார்க்சிஸ்ட் கட்சியும் இனத் தேசியம் பற்றிய தெளிவற்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. மேலே குறித்தவாறு, கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் அந்தந்த மாநிலங்களின் இனத்தேசிய அரசியலை நடைமுறையில் முன்னெடுத்த போதிலும் கோட்பாட்டு ரீதியில் ''வர்க்கப் போராட்டத்துக்குள்'' மட்டுமே நின்றார்களேஅல்லாமல் வர்க்கப் பார்வையில் தேசியப் பிரச்சனையை அணுகத் தவறினார்கள். அதன் காரணமாக ஏனைய மாநிலங்களில் அந்த அனுபவங்களைப் பிரயோகிக்கஇயலாமற் போயிற்று.


இனத்தேசியங்களின் சுயநிர்ணய உரிமயைப் பிரிவினை அச்சத்தால் நிராகரிக்கும் நிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி சென்றமையால் இந்தப் புரிதலின்மை மேலும்வலுத்தது. இது தொடர்பில், ''7வது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட கட்சித்திட்டத்தில் கண்ட 'அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை'என்ற அம்சத்தை நீக்கியது. இந்திய நிலைமை சோவியத் யூனியன் நிலைமையிலிருந்து மாறுபட்டது என்று 9வது காங்கிரஸ் தெளிவுபடுத்தியது'' என்பார் ஹரிகிஷன்சிங் சுர்ஜித். அவர் மேலும் குறிப்பிடும் இவ்விடயம் கவனிப்புக்குரியது: '' 1947 இல் அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, தேசியப் பிரச்சனையின் தன்மை முக்கியத்துவம் வாய்ந்த மாறுதலைக் கண்டது. பல்வேறு மொழி வழி மற்றும் உள்தேசிய நீரோட்டங்களும் அவர்களது பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டங்களும் இந்திய ஒன்றியத்துக்குள் உள்ள ஏதாவது ஒரு ஒடுக்கும் தேசத்திற்கு எதிரான போராட்டமல்ல; மாறாக, பொருளாதாரஸ் சார்புநிலை மற்றும் பின் தங்கிய நிலை ஆகியவற்றை ஒழித்துக்கட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் பொதுவான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். இந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதன் மூலம் இந்தப் பொதுவான போராட்டம் மேலும் வலுப்பெறும். மாறாக,பிரிவினை சக்திகளின் வளர்ச்சி போராடும் மக்களின் ஒற்றுமையைக் குலைத்துப் பிளவுபடுத்த ஆளும் வர்க்கத்திற்கு உதவுகிறது. இந்தியாவில், ஒருஒடுக்கும் தேசம் ஒன்று அல்லது பல ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதிக்கம் வகிக்கும் பிரச்சனை இல்லை;மாறாக, பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெரு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அந்நியமூலதனத்துடன் கூட்டாகவும், நிலப்பிரபுக்களுடன் அணி சேர்ந்தும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை கடைப்பிடிப்பதுதான் பிரச்சனையாகும்.''


பிரிவினை அபாயத்தை நீக்கியவாறு இனத்தேசிய சுயநிர்ணயத்தை எவ்வகையில் விருத்தி செய்வது என்பது பற்றிய விவாதங்களை முன்னெடுக்கும் வகையில்இன்று நடைமுறை மார்க்சிய அணிகளை வலியுறுத்துவதை அறிவோம்; இந்தியத் தேசியத்துக்கு அளவுக்கு மீறிய அழுத்தம் கொடுத்து இனத்தேசியத்தின் அவசியத்தை அதற்குரிய அளவில் கவனம் கொள்ளத்தவறியதன் பேறாக மாநிலங்களில் மார்க்சியர்கள் பின் தங்க நேர்ந்தமை போதிய படிப்பினையாக வந்துள்ளது. இனத் தேசியம் பற்றிய புரிதலின்மையிலான தவறு இந்தியாவுக்கு மட்டும் உரியதில்லை. இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இத்தவறு வெளிப்பட்டிருந்தது; தமிழ்த் தேசியம் மக்கள் விரோதத் திசையில் சென்று ஏற்படுத்திய சேதங்கள் அனைத்துக்கும் மார்க்சியர்கள் மேல் பழி போடும் கபடத்தைபுறந்தள்ளிய போதிலும், தேசிய இனப் பிரச்சனையைக் கையேற்பதில் கொம்யூனிஸ்ட்டுகள் தவறிளைத்தமையைச் சுயவிமர்சன ரீதியில் ஏற்கத் தவறுவதில்லை.தவிர, இத்தவறு இலங்கை - இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்குரியது மட்டுமல்ல; உலக அளவில் வர்க்கப் போராட்டத்தை முக்கியப்படுத்திய அளவில் தேசியப் பிரச்சனையைக் கவனம் கொள்ளத்தவறியது பற்றி இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. சோசலிசத்தை நோக்கியதாயில்லாத தேசியமும், தேசிய உணர்வைக் கவனம் கொள்ளத் தவறும் சோசலிசமும் மக்கள் விடுதலைக்கு இட்டுச் செல்லாது என்பது பற்றி இன்று பேசப்பட்டுள்ளது. சற்று மிகைப்பட்டுப்போன சோவியத் -சீன பாட்டாளி வர்க்கங்களின் தேசிய உணர்வினால் அந்தந்த நாடுகளின் சோஸலிஸ முன்னெடுப்புக்கு மட்டுமன்றி உலகப் பாட்டாளி வர்க்கஇயக்கத்துக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை பற்றியும் பேசப்பட்டுள்ளது.


மார்க்ஸ் பாட்டாளி வர்க்கப் போராட்டம் வாயிலாக சோசலிசம் வெல்லப்படுவது பற்றி பேசினார் என்றால் அன்று மேற்கு ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கங்கள்அதனை சாத்தியப்படுத்தும் வரலாற்றைப் படைத்துக்கொண்டிருந்தன. குடியேற்ற நாடுகளில் சுரண்டப்படுவது கொண்டு பாட்டாளி வர்க்க இயக்கம் பாதிக்கப்படுவதுபற்றிய புரிதல் மார்க்சுக்கு இருந்தது. பிரித்தானியப் பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் ஆற்றலை இழப்பது பற்றி இக்காரணத்தை முன்னிறுத்தி ஏங்கெல்ஸ்தனது ஆய்வினை வெளிப்படுத்தியிருந்தார். அந்தவகையில், மார்க்ஸ் பிரித்தானியப் பாட்டாளி வர்க்கம் வெற்றிபெறுவதன் வாயிலாக இந்தியா சுதந்திரம் பெறலாம், தவறின் தனது விடுதலையைச் சாத்தியப் படுத்துவதன் வாயிலாக இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டம் வாயிலாக சோசலிச இயக்கம் முன்னேற்றம் ஈட்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். மார்க்சிய எதிர்வு கூறல் இதனை முன்மொழிய மார்க்ஸை வழிப்படுத்திய போதிலும், தேசியம்குறித்து அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தும் அவசியம் இல்லாத வகையில் பாட்டாளிவர்க்க இயக்கம் சோசலிசத்தை சாத்தியப்படுத்தும் வாய்ப்பு இருந்த வகையிலும்அந்த வர்க்கப் பார்வையின் அவசியம் காரணமாயும் பாட்டாளி வர்க்க கட்சிப் பணியும் சாத்தியமும் பற்றியதாயுமே மார்க்சின் ஆய்வு வரையறைப்பட்டிருந்தது.அவர் கூறியவாறே மேற்கு ஐரோப்பியாவிலிருந்து புரட்சி எழுச்சி நகர்ந்து ருசியாவில் மையங்கொண்டு, அங்கு சோசலிசம் வென்றெடுக்கப்பட்டிருந்தது.


இதனைப் பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கத்தோடும் ஒடுக்கப்பட்ட தேசங்களோடும் ஐக்கியப்பட்டு சாதித்திருந்தது. அதற்குத் தலைமையேற்ற லெனின் மார்க்சியத்தை லெனினிசம் எனும் புதிய தளத்துக்கு வளர்த்திருந்தார். இதன் பின்னரான வரலாறு தேசிய விடுதலைப் போராட்டம் வாயிலாகவே சோசலிசம்வெல்லப்பட்டது என்ற நிதர்சனத்துக்கு அமைவாக உலகப்பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கப்பட்ட தேசங்களோடு ஐக்கியமுறுவதற்கு அறைகூவினார் லெனின்.தேசிய விடுதலை வாயிலாக முதலாளித்துவ இடைனிலை இன்றி நேரடியாக சோசலிசத்தை வென்றெடுக்க இயலும் என்ற அவரது எதிர்வுகூறலுக்கு ஏற்பசீனா, கியூபா போன்ற நாடுகள் இன்றும் சோசலிசத்தை பாதுகாத்து வளர்த்தெடுக்கப் போராடக் காண்கிறோம். ஆக, தேசியம் என்பதை ஏதோ இரண்டாம் மூன்றாம் பட்ச விடயமாக பார்த்துவிட முடியாது. முதலாளித்துவம் வரலாற்றரங்கில் தோன்றியபோது அதன் அவசியமாக சந்தைத் தேவையின் வெளிப்பாடாக தேசக்கட்டமைப்பு தோற்றம் பெற்றது; அதற்காக தேசிய உணர்வு முதலாளிவர்க்கத்துக்கு மட்டுமுரியதன்று. பாட்டாளி வர்க்கத்தின் தேசியப் பார்வையில் சர்வதேசப் பார்வை வேறெந்த வர்க்கத்திலிருந்தும் அதிகமாயிருக்குமே அல்லாமல் பாட்டாளிவர்க்கத்திடமோ அதன் முன்னணிப் படையான கொம்யூனிஸ்ட் கட்சியிடமோ தேசிய உணர்வு முனைப்புறாது என்பதற்கில்லை. இதனை லெனின் முன்னறிந்து கூறாததுடன், தேசியம் முதலாளித்துவத்துக்குரியது என்று கூறினார் எனில், அது மனித சிந்தனை ஆற்றலின் எல்லைப்பாடு தொடர்பானது. மக்கள் விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக கோட்பாடு ரீதியாக வளர்ச்சி ஏற்பட்டுவந்தபோதிலும் சிந்தனை முறையியல் என்கிற வகையில் மார்க்ஸ் தொடக்கிய அந்த வர்க்கப் பார்வையையே லெனின் தொடர்ந்தார்; தொடர்ந்து மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் சிந்தனையாளர்கள் முன்னெடுக்கின்றனர்.


அவ்வாறெனில் பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் ஆற்றலை இழந்தது ஏன்? இங்கு தேசியம் குறித்து கவனங்கொள்ள வழிப்படுத்தப்படுவோம். ஏகாதிபத்தியநாட்டின் அதிகார வர்க்கம் ஊட்டும் தேசிய மேலாண்மை உணர்வும் எலும்புத் துண்டுகளும் பாட்டாளிவர்க்க இயக்கத்தைப் பாதிக்கும்போது, எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பண்பாட்டியக்கத்துக்கு தள்ளப் படுகின்றனர்; புதிய பண்பாட்டை படைக்கும் பாட்டாளி வர்ர்க்கத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க இயலாது ஆக்கப்படுகின்றது. வெள்ளையர் உணர்வு மேவியிருந்த ஐரோப்பியக் கொம்யூனிஸ்ட்டுகள் ஆபிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு உதவத் தவறினர் எனக் கப்ரால்,ஃபனான் போன்ற சிந்தனையாளர்கள் குற்றம் சாட்டியபோதிலும், தம்மால் முடிந்த அளவுக்கு ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைக்கு உதவியுள்ளனர். ஏகாதிபத்திய நாட்டில் விடுதலையைப் பாட்டாளி வர்க்கத்தால் வென்றெடுக்க இயலாத போதிலும், விடுதலைக்காகப் போராடும் மக்கள் இயக்கங்களுக்கு உதவும் அளவிலாவது அது இருந்தது என்பதை மறுத்துவிட முடியாது. 


ஒடுக்கப்பட்ட எமது தேசிய வரலாறு வேறு வகையில் அமைந்த போது மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மார்க்சியச் சிந்தனை முறை மாறாத போதிலும், இரட்டைத் தேசியம் என்ற புதிய கோட்பாட்டை வகுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். இங்கு பண்பாட்டுப் புரட்சியே சமூக மாற்றத்தை சாத்தியப் படுத்தியவர்லாற்றை வலியுறுத்த வேண்டியவர்களாக உள்ளோம். தொடர்ந்து உரையாட அழைப்புவிடுத்து தற்காலிகமாய் விடைபெறுகிறேன். ..தொடர்வோம் !

Friday, April 6, 2012

இரட்டைத் தேசியம்: அறிதலும் அவசியமும்


இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

                               2          


இரட்டைத் தேசியம்: அறிதலும் அவசியமும் 
ந.இரவீந்திரன்
                                                                    சில  இணைய  தளங்களில்  வந்த கருத்தாடல்கள், ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் சரியைக் கண்டறிய உதவும் என நம்புகிறேன் - நன்றி )


இந்தியாவில் ஆட்சியதிகார பீடமேறியுள்ள பிராமண மற்றும் ஆதிக்க சாதிகளின் தேசியங்களுக்கு எதிராக தலித் பிரச்சனை எதிர்ப் பண்பாட்டு இயக்கங்கள்
வாயிலாக முன்னெடுக்கப்படுகின்றது; ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட (தலித்) சாதி முரண்பாடு பிரதானமாகியுள்ள நிலை காரணமாக, அங்கு ஆதிக்க சாதிகளுக்குரியதும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குரியதுமான இரட்டைத் தேசியம் நிலவுவதாகப் பேசுவதில் பொருளுண்டு; இன முரண்பாடு கூர்மையாகியுள்ள  இலங்கைக்கு இதனை இறக்குமதி செய்யவேண்டியதில்லை என்ற குரல் கவனிப்புக்குரியது. தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அங்கே ஆதிக்கசாதிகள் பிரியும் வன் கொடுமைகளை விடவும் வலிமையாக பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழ் மக்கள் இங்கே ஒன்றிணைந்து ஒரே தேசிய இனம்
என்று ஐக்கியப்பட்டு போராடவேண்டியுள்ள போது இரட்டைத் தேசியப் பிளவாக்க கோட்பாடு பாதகங்களை ஏற்படுத்தாதா?

நிதர்சனமாகப் பிளவுபட்டிருக்கும் இருவேறுபட்ட நலங்கள் என்ற புரிதலின் பேறாக வெளிப்படும் கோட்பாடுதான் இரட்டைத் தேசியம் என்பது; மாறாக, இக்கோட்பாட்டை முன்னிறுத்தி இயங்குவதால் புதிதாக எந்தப் பிளவுபடலும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. இந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளாமல் செயற்படும்போது தமது நலங்களுக்கு தீர்வு கிட்டப்போவதில்லை அ அஎன்று ஒரு தரப்பு விலகல் கொள்வதால் உள்ளூரப் பலவீனங்கள் வலுப்பட்டு தோல்விகள் தவிர்க்கவியலாதனவாகும். மாறாக, இரட்டைத் சியத்துக்குரிய இரு தரப்பினரது நலங்களின் வேறுபாட்டை மனங்கொள்வதால் - அவை இரண்டிலும் மக்கள் விடுதலைச் செல்னெறிக்குரியவற்றை கையேற்று போராடும்போது - வலுவான ஒற்றுமை சாத்தியமாகி வெற்றியை நோக்கி முன்னேற இயலுமாயிருக்கும்.

ஈழத்தமிழ்த் தேசியப் பிரச்சனையில் இதனை எவ்வகையில் பிரயோகிப்பது என்ற தேடலின்றி ''அடைந்தால் தனி நாடு, இல்லையேல் சுடு காடு'' எனும் வறட்டு வாதம் முன்னெடுக்கப்படுகையில் மக்கள் விரோத சக்திகள் ஆதாயம் பெற்று விடுதலை தவறிக்கெட்டுச் சீரழியும் அவலமே பெருகும். சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கான அவசியமுள்ள இந்தியாவில் இரட்டைத் தேசியம் பற்றிப் பேசட்டும் எமது தேசியப் பிரச்சனையில் இதுகுறித்து பேசமாட்டோம் என்ற கதவடைப்புவாதத்தைத் தகர்த்தெறிந்து சபா நாவலன் ''இனியொரு'' இணையத் தளத்தில் இது தொடர்பில் விவாதிக்க முன்வந்திருப்பது ஆரோக்கியமான ஒரு அறிகுறி. மறுத்தோடியபோதிலும் அவரது தர்க்கங்களும் கருத்துரையாளர்களது வாதங்களும் இரட்டைத் தேசியக் கோட்பாட்டை வலுவேற்றுவனவாயே அமைந்துள்ளன; தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கூட்டு விவாதம் இதனை மேலும் செழுமைப்படுத்தும். எந்தவொரு புதிய கண்டடைதல்களும் கூட்டு முயற்சியின் பேறேயல்லாமல், தனி மனித முயற்சிகள் பெரிதாக எதனையும் சாதித்ததில்லை (தனி மனிதரின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த சரியான புரிதல் இன்மை பல ன்னடைவிகளை, அது குறித்த கோட்பாட்டுத் தெளிவை மிகச் சிறப்பாக யறைப்படுத்தியிருந்த  மார்க்சிய இயக்கத்துக்கும் ஏற்படுத்தி இருந்தது; தேசிய இனப் பிரச்சனை குறித்த தேடலும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இது குறித்து பின்னாலே பார்க்கலாம்).



இரட்டைத்தேசியம் பற்றிய தேடல் தமிழக நகர்ப்புற சிந்தனையாளர்களுக்குரியது,  என சபா நாவலன் சொல்வதில் ஒரு சிறுபகுதி உண்மையுண்டு; கடந்த இரு தசாப்தங்களாக அயோத்திதாசர் - இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது மறு கண்டுபிடிப்பும், அம்பேத்கரை முன்னிறுத்தி எழுச்சியடைந்த தலித்திய இயக்கமும் இந்தியத் தேசியம் என்பதே பிராமண ஆதிக்கத்தை மீண்டும் நிலைனிறுத்த முன்னெடுக்கப்பட்ட சதி என அம்பலப்படுத்தின. பிராமண எதிர்ப்பை முன்னிறுத்திய வெள்ளாளர் - முதலியார் - நாயக்கர் எனும் ஆதிக்க சாதிகளின் நலங்களை முன்னிறுத்திய திராவிடர் இயக்கமும், எண்பதுகளில் எழுச்சிபெற்ற தேவர் - வன்னியர் என்ற இடைச்சாதிகள் அரசதிகாரத்தில் பங்கேற்றமையும் தலித் விரோதங்களுடன் கூடியனவாகவே இருந்தன என்பதனையும் தலித்தியம் அம்பலப்படுத்தியிருந்தது. இவ்வாறு பிராமண - ஆதிக்க சாதிகள் - இடைச்சாதிகள் என்பவற்றை எதிர்த்து எழுச்சிபெற்ற தலித்தியம் இரு தசாப்தங்களாக இயங்கியபோதிலும் ஏதாயினும் இரு தலித் சாதிகளையேனும் ஐக்கியப்படுத்த வலுவற்றதாயிற்று. சாதிய நோக்கு மேலோங்கும்போது அருகிலிருக்கும் தன் போன்ற இன்னொரு சாதியையும் நிராகரிக்க வழி கோலுமேயன்றி தலித் ஐக்கியத்தை ற்படுத்தப்போவதில்லை என்பதை தலித்தியம் எழுச்சியுறத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே முன்வைக்க இயலுமாயிற்று.

மாறாக, இரட்டைத்தேசியத்தைக் கோட்பாட்டுருவாக்கம் செய்தது வர்க்கப்பார்வையில் சாதியப் பிரச்சனையை அணுகி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ''சாதிமுறை தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்'' என்ற 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் பேறாகும்; இதற்கு வழிசமைத்த வரலாறு யாழ்ப்பாணத்தில் 1925 இல் மாணவர் காங்கிரஸ் (பின்னர் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்) மாநாடு எழுச்சியுறுத்திய தேசிய விழிப்புணர்வோடு தொடர்புடையதாகும். இருபதாம்
ஆண்டுகளிலிருந்து எழுச்சியுற்ற இந்த மக்கள் நலனாட்ட வரலாற்று முன்னெடுப்பை ஆதிக்க சாதியான வெள்ளாளர் உட்பட அனைத்து சாதியினரும் சாத்தியப்படுத்தினர். இதன்பேறாக 40 களிலேயே ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ''சிறுபான்மைத் தமிழர் மகா சபை'' என்பதாக ஒன்று பட்ட அமைப்பாக்கம் கொள்வது சாத்தியமாயிற்று. ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தின் பேறான ''தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம்'' ஒடுக்கப்பட்ட  சாதியினர் மட்டுமன்றி ஆதிக்க மற்றும் இடைச்சாதியினரும் அங்கம்பெறும் அமைப்பை சாத்தியமாக்கி, சாதியத்துக்கெதிரான வலுவான போராட்டங்களை
அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக நாட்டம்மிக்கோரும் முன்னெடுக்க வாய்ப்பேற்படுத்தியிருந்தது.

இந்தச் சாதித் தகர்ப்புப் போராட்டத்தை ஈழத் தமிழ்த் தேசியம் ஆதரித்திருந்திருக்க வேண்டும். இருபதாம் ஆண்டுகளில் எழுச்சியுற்ற தமிழுணர்வாளர்கள் இலங்கைத்தேசிய அக்கறையுடன் சாதியத் தகர்ப்பையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்; இந்தியத் தேசிய விடுதலைக் கொந்தளிப்பின் பகுதியாகவும் -சர்வதேச உணர்வின் பகுதியாகவும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் விடுதலையை அவர்கள் கண்டனர். இதனை உடைத்துக்கொண்டு முப்பதுகளில் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் யாழ்.வெள்ளாளத் தேசியம் தமிழ்த் தேசியத்தின் ஒரு பிரிவை தொடக்கி வளர்க்க முற்பட்டபோதுதான் இரிட்டைத் தேசியப்
பிளவு நேர்ந்தது. எமது தேசியம், அந்நியரிடமிருந்து விடுதலை பெறுவதும் நிலவுடைமைச் சமூக முறைமைக்கான பண்ணையடிமைத்தனத்தை தகர்ப்பதும் என்ற இரு பிரதான கடமைகளைக் கொண்டிருந்தது. யாழ்.வெள்ளாளத் தேசியம் பண்ணையடிமைத்தனம் தகர்க்கப்படுவதற்கு எதிராக இருந்தவாறே பேரினவாத த்திலிருந்து விடுதலை பெறுவதுபற்றி அக்கறைகொண்டிருந்தது. பின்னாலே செல்வநாயகம் - அமிர்தலிங்கம் தலைமையிலான யாழ்.வெள்ளாளத் தேசியமும் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராகவே செயற்பட்டது. அறுபதுகளில் பண்ணையடிமைத்தனத்தைத் தகர்க்கும் தேசியப் பணியான சாதி ஒழிப்புப்
போராட்டமே பிரதான செல்னெறியாக அமைந்தபோது ஈழத் தமிழ்த் தேசியம் அதனை ஏற்பதற்கு மாறாக இவ்வகையில் யாழ்.வெள்ளாளத் தேசியமாய்த்
தன்னை அடையாளப்படுத்தியிருந்தது.

பேரினவாதக் கொலைவெறித் தாண்டவம் ஈழத்தமிழ்த் தேசிய எழுச்சியைப் பிரதான வரலாற்றுப் போக்காக ஆக்கிய பின்னர், தமிழ்த் தேசியப் பிரச்சனையே பேசுபொருளாயிற்று; சாதித்தகர்ப்பு பற்றிய அக்கறை அவசியமற்றதுபோல பாசாங்கு செய்யப்பட்டது; கொம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்த சாதித் தகர்ப்புப் போராட்டம் ''தமிழ்த் தேசிய'' விரோதம் என்பது போலக் காட்டும் எத்தனிப்புகள் வலுப்பட்டது. அப்போதைய விவாதங்களின் போதுதான் இரட்டைத் தேசியம் பற்றி புரிதல் கொள்ள இயலுமாயிற்று. வரலாற்றுத் துரோகிகளாக இருந்த ஈழத் தமிழ்த் தேசியர்கள், அன்றைக்குரியதான வரலாற்றைக் கையேற்று சாதிய முறைமையைத் தகர்ப்பதில் ஆதிக்க சாதியினருட்பட அனைத்துச் சாதியினரையும் ஐக்கியப்படுத்திய, வரலாற்று முன்னுதாரணமற்ற சாதனையைச் சாத்திய மாக்கிய கொம்யூனிஸ்ட்டுகளை எப்படித் ''தமிழ்த் துரோகிகள்'' என முத்திரை குத்த இயலும்?

பிளவற்ற தமிழ்த் தேசியமாயின் கொம்யூனிஸ்ட்டுகளின் அந்த வரலாற்றுப் பங்களிப்பால் தமிழினம் ஒன்றுபட வாய்ப்பேற்பட்டதாக மகிழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களை பெரும்பான்மையாய் அணிதிரட்டியிருந்த கொம்யூனிஸ்ட்டுகளையும் அரவணைத்தவாறு தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். சாதித் தகர்ப்புப் போராளிகளான கொம்யூனிஸ்ட்டுகள் எவரும் பேரினவாத சக்தியுடன் ஐக்கியப்பட்டிருக்கவில்லை; சகல அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் மார்க்கம் என்கிறவகையில் சாதியத்தகர்ப்பை அங்கீகரிக்கும் தமிழ்த் தேசியத்துடன் ஒன்றுபட்டு சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடுவதில் தடை ஏதுமில்லை.

ஒன்றுபடுவதற்கு எதிரான தடை அன்றைய தமிழ்த் தேசியத்தின் பக்கமே இருந்தது. அவர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக இருந்ததோடு, ஏகாதிப த்தியப் பிடிப்புகளைத் தகர்க்கும் சிங்கள முற்போக்கு சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விரோத ஐ.தே.க.வை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். இத்தகைய பிற்போக்கான யாழ்.வெள்ளாளத் தேசிய வடிவம் கொண்ட ஈழத் தமிழ்த் தேசியம் ஐ.தே.க. உடன் கொண்ட கள்ள உறவினால் 1977 ஆட்சிபீடமேறிய ஜே.ஆர். தலைமயிலான ஐ.தே.க. அரசில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனபோதிலும் ஜே.ஆரின். கூட்டாளியாக அமிர்தலிங்கத்தை செயற்பட வழிப்படுத்தியது. அதன்பேறாக ஈழப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் தவறுகிறார் எனக்குற்றம் சாட்டி அனைத்து இளைஞ்ஞர் இயக்கங்களும் அவரிலிருந்து பிரியநேர்ந்தது; இறுதியாகப் பிரிந்த, அவரால் அன்புடன் தம்பி என அழைக்கப்பட்டு பொதுவாகவே ''தம்பி'' என அடையாளம் பெற்ற பிரபாகரன் அணியினரால் அவரது துர் மரணம் நேர்ந்தது என்பது உலகறிந்த உண்மை.

வர்க்க சமூகமொன்றில் பண்ணையடிமைத் தகர்ப்பு - அந்நிய சக்தியிடமிருந்து விடுதலை என்ற தேசியத்தின் இரு பணிகளும் பிளவுபட்ட தேசியச் செல்நெறி
களாயன்றி ஒரே தேசிய எழுச்சியின் பகுதிகளாயாகியிருக்க இயலும். சாதி ஒடுக்குமுறையை சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறையாக உடையதான எமது சாதியச் சமூகத்தில் ஆதிக்க சாதியினருக்கு அன்னியரிடமிருந்து விடுதலை பெற்று ''ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆழ நினைப்பதில்'' மட்டுமே  நாட்டம் இருக்கும். அவர்கள் பண்ணை அடிமைத்தனத்தைத் தகர்ப்பதைக் கையேற்காதது மட்டுமன்றி, அதற்கென முனையும் ஒடுக்கப்பட்ட மக்களின் அக்கறை
களுக்கு எதிராகப் போராடவும் வேண்டியிருந்தது. அவர்களுக்கு அடிபணிந்து உழைக்க வேண்டியவர்களுக்கு அடிமைதளை நீக்கம் செய்யமுனைந்தால் தமது நலன் பாதிக்கப்படும் என்பது ஆதிக்க சாதியினர் பிரச்சனை. ஏகாதிபத்தியத்தைத் தகர்க்கும் அதெவேளை பண்ணையடிமைகளின் அடிமைத் தளைகளைத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே ஆதிக்க சாதியினரின் நலனுக்கு உகந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, ஏகாதிபத்தியமோ பேரினவாதமோ அவர்களை நேரடியாக சுரண்டுவதுமில்லை ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதும் இல்லை. இவற்றை உயர் சாதியினரே நேரடியாகப் புரிவதனைக் கண்கூடாகக் காண்பதால் தம்மீது ஆதிக்கம்புரியும் சாதியத் தளைகளினின்றும் விடுதலை பெறுவதே ஒடுக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவையாகின்றது. ஏகாதிபத்தியம், பேரினவாதம் ஆகியவற்றுடன் கூட்டமைத்தேனும் பண்ணையடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் நலனோடு தொடர்புபட்ட அம்சமாகின்றது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், பிரித்தானிய ஏகாதிபத்தியம்
ஒடுக்கப்பட்ட(தலித்) மக்களுக்கு நன்மை எதனையும் செய்யாததுடன் சாதிபேதத்தைத் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டது எனக் கூறிய அம்பேத்கரும் அதைவிடவும் கொடுமையாக நடந்து கொண்ட பிராமணத்தேசியத்துக்கு எதிராக பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்க வேண்டியவராக இருந்தார்.

இலங்கையிலும் இதற்கு உதாரணம் உண்டு.சாதியத் தகர்ப்புப் போராட்டம் உக்கிரம் பெற்று வந்தபோது யாழ்.வெள்ளாளத் தேசியத்தின் சைவ மேலாதிக்கத்தைத் தகர்க்கும் எண்ணத்துடன் தமிழ்ப் பௌத்த இயக்கம் தொடங்கப்பட்டது. சிங்கள அரசின் அனுசரணையோடு பௌத்த சங்கம் வாயிலாக யாழ்ப்பாணத்தில் பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒடுக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் அதில் இணைந்து கொண்டனர். வைரமுத்து(ஐயாத்துரை) அவர்களின் தலைமையிலான அந்த இயக்கம் நூறு மாணவர்களைப் பிக்குகளாக பயிற்சிபெற தென்னிலங்கைக்கு அனுப்ப இயலுமாயிருந்தது. இந்தப் போக்கினை ஆரம்பத்தில் டானியல்கூட ஆதரித்திருந்தார். இது தொடர்பில் யோகரட்னம் எழுதியுள்ள ''தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்'' எனும் நூல் கவனிப்புக்குரியது.

சாதியத் தகர்ப்பில் சிறுபான்மைத் தமிழர் மகா சபை, தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம் ஆகியவற்றோடு சமதையாக மூன்றாவது செல்நெறியாக இதனை கணிக்க இயலாது. யோகரட்ணம் தனது நூலில் அவ்வாறு சொல்கிறார் என்றால், அவ்வாறு பிக்கு ஆகும் நோக்குடன் பயிற்சி பெறச்சென்ற நூறு மாணவர்களில் ஒருவராக அவர் இருந்து அதன் தீவிர செயற்பாட்டாளராக அவர் இருந்த தாக்கத்தின் பேறு அது. அக்காலத்தில் வலுவோடு தமிழ்ப் பௌத்தம் இயங்கியமையை நிராகரிக்க இயலாது. அந்தவகையில், இரட்டைத் தேசியத் தன்மையோடு யாழ்.வெள்ளாளத் தேசியத்துக்கு எதிர்த் தேசியமாக பௌத்த தலித் தேசியம் எழுச்சிபெற வாய்ப்பிருந்தது. அது சிங்களப் பேரினவாதத்துக்கு காட்டிக்கொடுக்கும் நோக்குடையதாயன்றி, சைவ வெள்ளாள சாதி அகம்பாவத்தை தகர்க்கும் ஒரு முயற்சி என்பதை யாழ்.வெள்ளாளத் தேசியர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம்; மக்கள் விடுதலையை நேசிக்கும் எவரும் அன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியினர் ஆதிக்க சாதித் தேசியத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதச் சதி வலையில் வீழ்ந்திருக்கக் கூடிய தலித் எதிர்த் தேசியம் சாத்தியமாகும் புற நிலை நிலவியது என்பதைக் காணத் தவறமுடியாது.

அவ்வாறு ஆகாமல் போனமை கொம்யூனிஸ்ட்டுகளின் சரியான அணுகுமுறையின் பேறு. டானியல் பௌத்த மதமாற்றத்தை ஆரம்பத்தில் ஆதரித்திருந்தது பற்றி மேலே குறிப்பிட்டிருந்தோம்; அதைவிடவும், அதிலிருந்து ஏன் பின் வாங்கினார் என்பதுதான் மிகுந்த கவனிப்புக்குரியது. கொம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய மத மாற்றத்தை வன்மையாகக் கண்டித்து நிராகரித்திருந்தது; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்பதால் அப்படி எனக் கருதலாம். அப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு ஐ.தே.க. பிற்போக்கு சக்திக்கு எதிரான முற்போக்கு அணியில் பௌத்த பிக்குகள் மிக அதிகமாய் இருந்தனர்; யோகரட்ணம் பிக்குபயிற்சியில் சந்தித்த முற்போக்கான பிக்கு குறித்து கூறியிருந்தமையையும், அவரிடம் நூலுக்கான ஆசியுரை பெற்றமையையும் அவதானிக்க இயலும். கொம்யூனிஸ்ட்டுகளாக
பல பிக்குகள் இருந்துள்ளனர். அவ்வாறிருந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தத்துக்கு மாறுவதனைக் கொம்யூனிஸ்ட்கட்சி ற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை, சொந்தச் சமூகத்தில் உரிமையை வென்றெடுக்கும் வகையில் கோயில் நுழைவுப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வகையில் உரிமை வென்றெடுக்கப்படும் சாத்தியம் லுத்துவந்தமையால் பௌத்தமாற்றம் வலுவிழந்து கொம்யூனிஸ்ட் அணிகளான சிறுபான்மைத் தமிழர் மகா சபையிலும் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து வந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னெடுதிருந்த அந்தப் போராட்டத்தைக் கொம்யூனிஸ்ட்கட்சி தலைமை தாங்கியபோது அது வர்க்க ரீதியாக அணிதிரட்டியிருந்த அனைத்து சாதிப்பிரிவினரும் அப்போராட்டத்தில் பங்கேற்க வகைசெய்திருந்தது. குறிப்பாக, புரட்சி மார்க்கத்தை ஏற்றிருந்த தீ.ஒ.வெ.இயக்கத்துக்கு தலைமயேற்றிருந்த ''சீன சார்பு'' கொம்யூனிஸ்ட்கட்சி அரசில்
ஒருபோதும் பங்கேற்றதில்லை. அந்தவகையில் பேரினவாதத்துக்கு தம்மையறியாமலே ஏதாயினும் விட்டுக்கொடுப்புக்கு உள்ளாகியதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லாமலே சாதியத்துக்கு எதிரான அறுபதுகளின் போரட்டம் இடம்பெற்றிருந்தது.

இது அன்றைய பிரதான வரலாற்றுச் செல்நெறியாக அமைந்தபோது ஒடுக்கப்பட்டோருக்கான (தலித்) எதிர்த் தேசியமாக வடிவங்கொள்ளவில்லை; விடுதலை பிளவுபடாதது என்கிறவகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை வென்றெடுக்கும்போது எந்தச் சாதிப் பிரிவினருக்கும் எதிராக அமையாது உயர் சாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கான விடுதலையின் கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறின், சாதியத்துக்கு எதிரான அந்தத் தேசியப் போராட்டம் வர்க்கப் பார்வையில் கொம்யூனிஸ்ட் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட காரணத்தால், இரட்டைத் தேசியப் பிளவுக்கு அவசியமின்றி அனைத்துத் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக அமைந்திருந்தது.

அவ்வாறாயின் தமிழ்த் தேசியத்தின் கோரிக்கைகளை ஏன் உள்ளடக்கியிருக்கவில்லை? பல தடவைகள் சுட்டியிருந்தது போல, பிரதான வரலாற்றுச் செல்நெறியாக அமைந்த சாதித் தகர்ப்புத் தேசியக் கடமைக்கு எதிராக யாழ்.வெள்ளாளத் தேசியமாய் வடிவங்கொண்ட ஈழத் தமிழ்த்தேசியம் செயற்பட்டமையால் அதன் தவறை எதிக்கும் முனைப்பில் அவசியமான தமிழ்த் தேசியத்தின் பக்கமும் கவனங்கொள்ளாத தவறு நேர்ந்தது. பேரினவாத ஒடுக்குமுறை வலுத்தபோது கொம்யூனிஸ்ட்
கட்சியினர் தேசிய இனப்பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும் குறித்த தேடல்களில் ஈடுபட்டனர்; தொடர்ந்த வலதுசாரிப் பிற்போக்கு ஆதிக்க சாதித் தேசியப் பாஸீஸம் இயங்கிய சூழலில் எதையும் செய்ய இயலாமற் போயினும் இன்றைய தத்துவார்த்த விவாதங்கள் வாயிலாக தமிழ்த் தேசியத்தை ஆதிக்க சாதிப் பிளவாக்கலுக்குள்ளாக்காமல் விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னெடுப்பதற்கு இரட்டைத் தேசிய நிதர்சனத்தை வலியுறுத்தி நிற்கிறது மார்க்சிய இயக்கம்.

இரட்டைத் தேசியம் பற்றி மார்க்சிய முன்னோடிகள் எங்கே சொல்லியிருக்கிறார்கள்? இப்படிக் கேட்கிறவர்களே இறக்குமதித் தத்துவம் வேண்டாம் என்று சொல்கிற வினோதங்களையும் பார்ப்போம். மார்க்சியம் இறக்குமதிச் சரக்கில்லைத்தான்; அது ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சுரண்டலற்ற சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்கான ஒரு சிந்தனை முறை. அதற்கான முதல் முயற்சி பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்டபோது அந்த அனுபவங்களின் தொகுப்பான
மார்க்சியம் அங்கே பிறப்பெடுத்தது. ''உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்'' என்ற முழக்கம் பிறந்தது. ருசியப் புரட்சி அதனைச் சாத்தியமாகியபோது தனது நாட்டின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்த தேசங்கள் பிரிந்து செல்ல உரிமையுடைய சுயநிர்ணயமுடையன என்ற வாக்குறுதியுடன் அவற்றை ஐக்கியப்படுத்தும் வகையில் ''உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்'' என்பதாக, பாட்டாளி வர்க்கம் மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட தேசங்களும் சமத்துவம் படைக்கும் புரட்சிக்குரிய சாத்தியக்கூறுடையதாயிருப்பதை கூறாமல் கூறியிருந்தது. அதன்பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்ட்சியால் அல்லாமல்
சீனா,கியூபா,கிழக்கைரோப்பியனாடுகள் என தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாகவே சோசலிச மாற்றியமைத்தலுக்கான சாத்தியம் ஏற்பட முடிந்தது.

இதனை எவ்வாறு புரிந்து கொள்வோம்? ஆளும் சாதிபோலவே ஏகாதிபத்தியமும் ஒடுக்கப்பட்ட தேசங்களை சுரண்டும் வகையில் தேசியத்துக்கும் சாதி முறைக்கும் தொடர்புள்ளதா? இவைகொண்டு எமது சாதிச் சமூகத்தில் சோசலிசம் சிருஷ்டிப்பதற்கான மார்க்கத்தை வகுக்க முடியுமா? தேசிய விடுதலை சோசலிசத்தை எட்டும் சாத்தியம் போல சாதியத் தகர்ப்பு போராட்டம் சோசலிசத்துக்கு இட்டுச்செல்லுமா? பார்க்கவேண்டும்!!!